(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அடுப்பங்கரையண்டை போய் உட்காரும் வழக்கம் எனக்கு இல்லை. அதெல்லாம் பெண்களின் தலையெழுத்து என்று ஆண்மையின் அகங்காரத்தில் ஒதுங்கி விடுவேன்.
அன்று ஒதுங்க முடியவில்லை. மனிதனை வியப்பில் ஆழ்த்தும் பல பொருள்களுள் ஒன்றில் லயித்து விட்டேன். மனிதன் கண்டுபிடித்த பொருள்களுள் நெருப்பைப் போன்ற ஆச்சரியமானது வேறு ஏதானும் உண்டா? அதற்கு ஏதேனும் தகுந்த உவமைதான் உண்டா? என்ன வண்ண விசித்திரம்! விறகை ஒட்டி-பிறப்பிடத்தை ஒட்டி-தீ இரவைப் போல் கறுத்திருக்கிறது அடுத்தாற்போல் சூரியனைப் போல் வெளுத்திருக்கிறது. அதற்கு மேல் தங்கத்தை உருக்கி ஓட விட்டது போல் விரிகிறது. அப்பால் ஆரஞ்சுப் பழத்தின் தோலைப் போல் வண்ணம் கொள்கிறது. எல்வாவற்றிற்கும் மேலாகக் கந்தகத்தால் திருவாசி ஒன்றை எழுதியது போல் எழில் மிகுந்த நீலம் தோன்றுகிறது. தீயைப் பார்க்க அதனுள் இயங்கும் சக்தி திகைக்க வைக்கிறது. அதனுள் தோன்றும் மாயா சித்திரங்கள் நம்மைப் பித்தாக்குகின்றன. நானும் இந்தப் பித்துத்தான் பிடித்து அடுப்பண்டை உட்கார்ந்திருந்தேன்.
“நீ யார்?” என்று ஒரு குரல் கேட்டது.
”என்னையா?” என்று சுற்று முற்றும் பார்த்தேன். யாரையும் காணவில்லை. ஒரு பெரிய ரயில் கரிக் கட்டியும் அடுப்புக் கரித் துண்டும் ஒன்றை ஒன்று ஒட்டிக் கிடந்தன. நான் நெருப்பையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு, என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை. யாரோ நெருப்பின் வெளிவாசலைத் திறந்து உள்ளே அழைத்துச் சென்று விட்டார்.
“நீ யார்’ என்ற குரல் மறுமுறை எழுந்தது. அப் பொழுது தான் கரித்துண்டு பேசுகிறதென்று விளங்கிற்று. அதற்குப் பதில் சொல்ல வேண்டியது ரயில் கரி என்பதும் விளங்கிற்று.
“என்னையா கேட்கிறாய்?’ என்றது ரயில் கரி. “ஆமாம், உன்னைத்தான்.”
“என் பேர் நிலக்கரி.”
“இங்கே எப்படி வந்தாய்?”
“இந்த வீட்டுப் பிள்னை ரயிலிலிருந்து தூக்கிக் கொண்டு வந்தான்.”
“நிலக்கரி என்று பெயரா? வேடிக்கையாய் இருக்கிறதே! நிறத்தைப் பார்த்தால் எங்கள் மாதிரி இருக்கிறது; பெயரைப் பார்த்தால் மரத்திலிருந்து பிறக்கவில்லை, மண்ணிலிருந்து பிறந்ததாகத் தோன்றுகிறது, நீ எங்கள் சாதியா, வேறு சாதியா?
“சாதியா? அதென்ன? எனக்குத் தெரியாதே. நாங்கள் மண்ணிலேயிருந்து தான் வருகிறோம்.”
“அப்படி என்றால் நீ எங்களை விடத் தாழ்த்தி தான். நாங்கள் மேலே மரத்திலேயிருந்து வருகிறோம். நீ கீழே மண்ணிலேயிருந்து வருகிறாய்.’
‘“மேலே கீழே என்று இருக்கிறதா என்ன? ஒருவருக்கு மேலாய் இருக்கிறது மற்றொருவருக்குக் கீழாய் இருக்கலாம். உயர்வு தாழ்வெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஒயாமல் குந்தாலியும் கையுமாக எங்களைப் பிளந்து எடுக்கிற உழைப் பாளிகளைத் தான் தெரியும்.”
“இங்கேயும் அப்படித்தான் மரத்தை வெட்டி அறுத்து அடுக்கிக் கரி செய்வதென்றால் லேசான பாடா?”
“பின் ஏன் உயர்வு தாழ்வு என்கிறாய்? பார்க்கப் போனால் உங்களால் என்ன முடியும்? ஒரு ரயிலை ஓட்ட முடியுமா? வேணும் என்றால் சோறு சமைப்பீர்கள். சமைக்காமலே நாய் கூட சோறு தின்று விடுகிறதே! பீற்றிக் கொள்ள உங்களுக்கு என்ன இருக்கிறது?’’
குரல் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது பட்டென்று எங்கோ சத்தம் கேட்டது. கொஞ்சம் திடுக்கிட்டுப் போனேன். மறுபடியும் கவனித்த பொழுது குரலே கேட்க வில்லை.
யாரோ ஒரு பெண் அடுப்பை நோக்கி வந்தாள். பச்சைப் பாவாடையும் சிவப்பு ஜம்பரும் போட்டுக் கொண்டிருந்தாள். அவள் காதில் நீல மத்தாப் பூவும், பச்சை மத்தாப் பூவும், சிவப்பு மத்தாப் பூவும், எரிவது போலத் தோன்றும் தோடும் லோலாக்கும் அணிந்திருந்தாள். பணக்கார வீட்டுப் பெண்ணென்றாலும் விளையாட்டு புத்தி போய் விடுமா என்ன? அடுப்பண்டை உட்கார்ந்து ஒவ்வொரு சுள்ளியாக எடுத்துப் போட்டாள்.
அதற்குள் வேறொரு குரல் அதட்டிற்று. ”அடுப்பண் டையா உட்கார்ந்து குறும்பு பண்ணிக் கொண்டிருக்கிறாய்? அப்புறம் லோலாக்கு கரியாகிவிடும். போ, எட்டி: கழுதை!” என்றது.
பழைய கரித்துண்டு இப்பொழுது சிரித்தது. அதட்டிய குரல் வந்த திக்கைப் பார்த்து அழகு காட்டிற்று, பிறகு நிலக்கரியின் பக்கம் திரும்பிற்று.
“அண்ணே,இந்த முட்டாளைப் பாரேன், சூரியன் மாதிரி மின்னுகிற லோலாக்கு நம்முடன் சேர்ந்தால் கரியாகி விடுமாமே! நம் கறுப்பு எங்கே, அந்த வெளுப்பு எங்கே? நம் குலம் எங்கே, அதன் குலம் எங்கே? எப்படி எல்லாம் ஒன்றாகும்? முழு முட்டாள்!”
நிலக்கரி விழுந்து விழுந்து சிரித்தது. “அதட்டியவளை விட நீதான் பெரிய முட்டாள்! அந்த லோலாக்குக் கல் இருக்கிறதே, அது நம் சாதி, குலம் கோத்திரந்தான்.”
“ஆ!”
“ஆமாம், ஆனால் அது நம்மைத் தள்ளி வைத்திருக்கிற தாம். பிறப்பைப் பற்றி ஒரு விநாடி நினைத்திருந்தால் இப்படியெல்லாம் அது செய்ய முடியாது. எல்லார் பிறப்பும் ஒரே மாதிரி தானே? அதற்கு நெஞ்சில் ஈரமில்லாமல் போய்ப் பல ஆயிரம் வருஷமாகி விட்டது. நல்ல ரத்தம் இருந்தா லல்லவா உடம்பு வெளுக்காமல் இருக்கும்? அல்லது நம்மைப் போல் வெளியில் வந்து கலந்து கொண்டாலாவது நோயும், அச்சமும் இல்லாமல் இருக்கும். மண்ணுக்குள்ளேயே தனி யாகத் தூங்கித் தூங்கி வெளுத்துப் போச்சு. அதையே ஒரு கௌரவமாகப் பாராட்டுகிறது. நம்மை இளப்பம் செய்கிறது.”
“அப்படியானால் நாமும் அதைத் தள்ளித்தான் வைக்க வேண்டும்.”
“ஒரு விதத்தில் அப்படித்தான் செய்ய வேண்டும். ஏனென்றால், உன்னை அரைத்துப் பொடி பண்ணி உபயோகிக் கிறார்கள்: அதை அந்த மாதிரி செய்ய மூடியும் என்கிறாயா? முடியாது, செய்தால் சாவு உண்டாகும். நம்மால் பிறப்பும் வளர்ச்சியும் உண்டு. அதனாலே சாவும் வீட்டுச் சண்டை யுந்தான் மிச்சம்.”
“அப்பொழுது ஒதுக்கித் தான் வைக்கவேண்டும்.”
“இருந்தாலும் அப்படி நாம் செய்வதில்லை. வந்தால் வாவென்று அழைத்து அதன் வேஷத்தைக் கலைத்து விடு வோம். எல்லாம் ஒன்று என்பதை ருசுச் செய்து விடுவோம். அதற்கு பயந்து அதை அடுப்பண்டை வரக் கூடாது என்ற கட்டுப்பாட்டை விதித்து அதன் பொய்க் கௌரவத்தைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள். வேஷம் கலைந்தால் அந்த அம்மாளுக்குக் கஷ்டம். அதட்டின அம்மாளா முட்டாள்?
“பூ! அதுவும் கரிக்கட்டித் தானா?பின் இவ்வளவு கர்வம் பிடித்து மினுக்கித் திரிய வேண்டியதில்லையே!”
“அந்த ரகசியந்தான் எனக்கும் புரியவில்லை. எல்லோ ருமே ஒன்று தான். வெவ்வேறு வேலை செய்வதால், வெவ் வேறு இடத்தில் இருப்பதால், வெவ்வேறு குணத்தைப் பெற்றதால் வேறாகி விடுவார்களா என்ன? இந்த உண்மையை மறந்து… “
“அடுப்பண்டை என்ன அதிசயமாக உட்கார்ந்திருக்கிறீர்கள்?” என்று யாரோ என் முதுகில் தொட்டார்கள். திரும்பினேன்.
– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.