கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 4,684 
 

இது தான் முதல் தடவை அவன் ஒரு திரைப்பட ‘ஸ்டுடியோ’வுக்குள் நுழைவது. அவன் நாவலை படமாக்கிக் கொண்டிருந்தார்கள். இயக்குநரின் வற்புறுத்தல் பேரில் அவன் வந்தான். வந்த அரை மணிக்குள் அவனுக்கு ‘போர’ டிக்கத் தொடங்கியது.

சமைக்கும்போது சமையலறைக்குள் எட்டிப் பார்ப்பது போன்ற ஓரனுபவம், இரண்டு வாக்கியங்கள் பேசுவதற்குள் மூன்று ரீடேக் அவன் சலிப்படைந்தான்.

அவன் ‘செட்’டை விட்டு வெளியே வந்தான். ஜூன் மாதத்து வெயில், மழைக்காக ஏங்கிக் கிடந்தது வானம்.

எத்தனை பள்ளிக்கூடச் சிறுவர்கள்! தோளில் புத்தக மூட்டை யைச் சுமந்து கொண்டு அவர்களுடைய ‘கனவு தேவதைகளின்’ தரிசனத்துக்காகவும் சிற்சில சமயங்களில் ‘ஷூட்டிங்’கில் பங்கேற்கக் கிடைக்கக் கூடிய வாய்ப்புகளுக்காகவும் வந்திருக்கிறார்கள்

“உங்க கதையா சார்?”

அவன் திரும்பிப் பார்த்தான். பன்னிரண்டு வயதுக்குள்தான் இருக்கும் அச்சிறுவனுக்கு. கேள்வி கேட்ட குரல் ‘கணீ’ரென்றிருந்தது.

“உனக்குப் பள்ளிக்கூடம் கிடையாதா?”

“உண்டு சார்…. ‘போர்’…. பள்ளிக்கூடப் பசங்களுக்கு ‘சான்ஸ்’ இருக்கா சார் படத்திலே?”

“நீ ‘ஆக்ட்’ பண்ணுவியா?”

“அஞ்சாறு படத்திலே பண்ணியிருக்கிறேன் சார்” இதற்குள் இன்னொரு சிறுவன் குறுக்கிட்டான்.

“சும்மா ‘ரீல்’ விடறான் சார்.. ஒரு படத்திலே கூட்டத்திலே கைதட்ற ‘சீன்’லேருந்தான்; அதையும் ‘எடிட்’ பண்றப்போ ‘கட்’ பண்ணிட்டாங்க சார்.”

“இதிலே ‘சான்ஸ்’ருக்கா சார்?” அவன் தன் நம்பிக்கையை இன்னும் இழக்கவில்லையென்று தெரிந்தது.

“இது என் கதையான்னு கேட்டியே யார் சொன்னாங்க?”

“சும்மா ஊகந்தான் சார்… உங்களைப் பார்த்தாகதை எழுதறவர் மாதிரி எனக்குத் தோணிச்சு..”

“இதுவும் பொய்… சீனுவாசன் சார் சொன்னார்சார்….” என்றான் மற்றொரு சிறுவன்.

சீனிவாசன் ‘ப்ரொடக்ஷன் மானேஜராக இருந்தார் இப்படத்துக்கு.

பொய்க்கு மேல் பொய்யாகச் சொல்லும் இப்பையன் தமிழ்நாட்டின் வருங்கால நட்சத்திரமாக அவனுக்குத் தெரிந்தான். அவன் ஒன்றும் பேசாமல் மேலே நடந்தான். வெயில் ‘சுளீ ரென்று உறைத்தது.

அப்பொழுதுதான் அவன் அவளைப் பார்த்தான்.

அறுபத்தைந்திலிருந்து எழுபது வயதுக்குள் இருக்கலாம். மரத்தடி நிழலில் உட்கார்ந்திருந்தாள். தனக்குத் தானே பேசிக் கொண்டு, தரையில் கோடு கிழித்தவாறு இருந்தாள்.

இவளும் நடிப்பு வாய்ப்பு தேடி வந்திருக்கிறாளா பிராமணப் பெண் ‘மடிசார்’ கட்டு நெற்றியில் வட்டமான மிகப்பெரிய குங்குமப்பொட்டு.

அருகில் சென்ற பிறகுதான் தெரிந்தது தனக்குத் தானே பேசவில்லை, பாடிக் கொண்டிருந்தாள்.

அவன் பக்கத்தில் நின்றும் அவள் கவனிக்கவில்லை, குனிந்த படி இருந்தாள்.

அவன் நிற்பது அவளுக்குத் தெரியாமலிருக்காது. பொதுவிடத்தில் அருகில் ஒருவர் நிற்பது அவளுக்குத் தொடர்ந்து ஏற்பட்டு வரும் அனுபவமாக இருக்கக் கூடும்.

எதேச்சையாக நிமிர்ந்தாள்.

அவன் அவளைப் பார்ப்பதைக் கண்டதும், அவள் எழுந்து நின்றாள்.

“என்ன வேணும்?” என்றாள் அவள்.

“நீங்களும்…. நடிக்க வந்திருக்கேளா?…”

“ஆமாம்… நீங்க…?”

“அதோ.., அந்த வீட்டு ‘செட்’லே ‘ஷூட்டிங்’ நடக்கிறதே, அது என் கதைதான்.”

“உங்க கதையா, நீங்க எழுதின கதையா?”

“எழுதின கதை…”

“அதிலே நான் நடிக்க வந்திருக்கேன்.”

அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த கிழவிக்கு என்ன “ரோல்’?

“அப்படியா?”

“ஆமாம். சமையல்காரி வேஷம்… ரெண்டு நா முன்னாலேந்து வந்துண்டிருக்கேன்… இன்னும் என்னைக் கூப்பிடலே …. எப்பொ கூப்பிடுவாளோ, அவா இஷ்டம். உங்களுக்குத் தெரிஞ்சுருக்குமே, கதை எழுதினவராச்சே நீங்க, நான் எத்தனை ஸீன்லே வரேன்…?”

அவன் யோசித்தான். தில்லியிலிருந்து ஊருக்குத் திரும்பும் கதாநாயகன் வீட்டில், அம்மாவுக்கு உதவி செய்ய ஒரு வயதான பெண்மணி இருக்கிறாள். ஒரே ஒரு இடத்தில் தான் பேசுகிறாள்… ‘தில்லியிலே சப்பாத்தி சாப்பிடறவர். அவருக்கு நம்மூர், அதுவும் நான் பண்ற ரசம் பிடிக்குமோ என்னமோ…. இவ்வளவு தான். பிடித்துதான் ஆகவேண்டு மென்ற தன்னம்பிக்கை, சொல்லும் விதத்தில் தெரிய வேண்டும்.

பாவம், இந்தக் கிழவியிடம், ‘ஒரேயொரு டயலாக் தான் என்று எப்படிச் சொல்வது?’ எத்தனை ஸீன்லே வரேன் என்று நம்பிக்கையுடன் கேட்கிறாள்.

“பெரிய ரோல் இல்லே …” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்தாள்.

“தெரியும் ரெண்டு மூணு ஸீன்லியாவது தலை காட்ட மாட்டேனான்னு ஒரு நப்பாசை, அவ்வளவு தான் .. ‘டயலாக்’ உண்டா ?”

“ஒரு டயலாக்..”

“படம் காட்றச்சே அதையும் வெட்டி எறிஞ்சுடுவான், தெரியாதா எனக்கு? எத்தனை படத்துலே நடிச்சிருக்கேன் …!”

“எத்தனை படத்திலே நடிச்சிருக்கேள்?”

“நூறாவது படம் இது.. ஏன் விழா கொண்டாடப் போறேளா?” என்று அவள் சிரித்தாள்.

சிரிக்கும்பொழுதுதான் அவள் சின்ன வயதில் எவ்வளவு அழகாக இருந்திருப்பாளென்று அவனுக்குப் பட்டது. கண்கள் இதை உறுதிப்படுத்தின.

“எத்தனை நாளா நடிச்சிண்டிருக்கேள்?”

“அம்பது வருஷமா. எனக்கு இப்பொவயசு அறுபத்தெட்டு”…

“அம்பது வருஷமாவா?” அவன் திடுக்கிட்டான்.

“பதினெட்டு வயசிலே கும்மோணத்திலேந்து பட்ணத்துக்கு ஓடிவந்தேன்… தியாகராஜ பாகவதரோட நடிக்கணும்னு ஆசை., கூட்டிண்டு வந்த தடியன் ஓடிப் போயிட்டான். ஒரு நாயுடு, அவனும் படம் எடுக்கிறவந்தான், எனக்குக் ‘கதாநாயகி ரோல் தரேன்’னு சொல்லி என்னை வச்சிண்டிருந்தான். அப்பொல்லாம் ராஜ குமாரிக்குத் தோழி வேஷம், இப்பொ … சமையல்காரக் கிழவி…” என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தாள் அவள்.

அவளால் எப்படி இவ்வளவு சுலபமாகத் தன்னைப் பற்றி ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிக் கொள்ள முடிகிறது? இதுதான் அவனை வியப்பிலாழ்த்தியது..

“குமரிப் பொண்ணா வந்து கிழவியானது சினிமா ஸ்டூடியோ வாசல்லேதான். அம்பது வருஷம் போன சுவடு தெரியலே… கதாநாயகியாக நடிக்கக் காத்திருந்து கிழவியாயிட்டேன்..”

மறுபடியும் உரக்கச் சிரித்தாள். “எனக்கும் கும்பகோணந்தான்” என்றான் அவன். “அப்படியா? எந்தத் தெரு?” ”சாரங்கபாணி சன்னதித் தெரு…”

“எனக்கு அய்யங்கார் தெரு, ஒரிஜனல் அய்யங்கார். இந்த மடிசார் வேஷமில்லே. நான் எப்பொவும் கட்ற கட்டு. அதோ நடிக்கிறாளே உங்க கதாநாயகி, அவ மடிசார் கட்டி விடறதுக்குன்னே ஒருத்தியைக் கூட்டிண்டு வரா. அவ, அவளுடைய சிநேகிதி… பெரிய்ய அய்யங்கார் குடும்பந்தான். சினிமாக்காரிக்கு மடிசார் கட்டி விடறதிலே அவளுக்கு அலாதி பெருமை…! அவ போட்டோ வார பத்திரிகையிலே வருமே! அவளையும் எவனாவது ஒரு மடையன் பேட்டி கண்டு அசட்டு பிசட்டுன்னு எழுதமாட்டானா? இதை படிக்கன்னு காத்திண்டிருக்கே ஒரு கூட்டம்…”

“நீங்களே நீங்க நினைச்சபடி ஒரு கதாநாயகியா ஆகியிருந்தேள்னா இப்படியெல்லாம் பேசுவாளா?” என்றான் அவன் புன்னகையுடன்.

“நிச்சயமா பேசியிருக்க மாட்டேன். ஆகவே, இப்பொ பேசறேன். இதிலே என்ன தப்பு..? இது மனுஷ சுபாவந்தானே? நீங்க கதை எழுதவறவர், இதுகூடவா உங்களுக்குத் தெரியாது?”

அவன் மண்டையிலடிப்பது போலிருந்தது. இவ்வளவு அழகாகப் பேசுகிறாள். அழகாகவும் இருந்திருக்க வேண்டும். இவளுக்கு சினமாவில் எப்படி வாய்ப்பில்லாமல் போய்விட்டது?

“நீங்க தனியாகவாயிருக்கேள்?” பேச்சின் திசையை அவன் மாற்றினான்.

“தனியென்ன தனி! எல்லாரும் ஒரு வகையிலே பார்க்கப் போனா தனிதான். என் வலியை, உங்களாலே பொறுத்துக்க முடியுமா? எனக்கு ‘கான்ஸர்’ ஆபரேஷன் ஆச்சு… வலி பொறுக்க முடியாமெதுடிச்சுப் போயிட்டேன். ஆம்படையானோ பிள்ளையோ இருந்திருந்தா, என் வலியை நீங்க பொறுத்துக்குங்கோன்னு அவாகிட்டே கொடுத்திருக்க முடியுமா? நான்தானே பொறுத்துக்கும் படியா ஆச்சு…?”

“கான்சரா!”

“ஆமாம் இடது முலையைத் திருகி எறிஞ்சாச்சு… ஆனா எந்தப் பட்டணமும் பத்தி எரியலே… கொஞ்ச நஞ்சம் சேத்து வச்சிண்டிருந்த பணமும் ஆபரேஷன்லே போனது தான் மிச்சம். இப்பொ நடிச்சாதான் சோறு… பிச்சை எடுக்கலாம், ஆனா மனசு வல்லே …”

“இதிலே உங்களுக்கு எத்தனை வரும்?”

“என்ன வரும்? ஒரு நாளைக்கு நூறு ரூபா வந்தா பெரிசு.. அதுவும் தினோம் வராது… ரெண்டு நாளா அலையறேன், பஸ் சார்ஜ் எத்தனை ஆறது தெரியுமா? வல்லேன்னா அன்னிக்குன்னு பார்த்துக் கூப்பிடுவான். நூறு ரூபா நஷ்டம் இந்த நூறு ரூபாய்லே அந்தக் கடன்காரன் ஏஜெண்டுக்கு ஒரு பங்கு .. நீங்கதானே கதாசிரியர், எனக்கு ஒரு உபகாரம் பண்ணுவேளா?”

“என்ன?”

“இன்னிக்காவது என் ‘ஷாட்டை எடுக்கச் சொல்லுங்கோ..”

இதில் குறுக்கிடுவது சரியா என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. இயக்குநர் மறுத்து விட்டால், அவர் அவனிடம் காட்டும் மரியாதை பற்றி அவனுக்குச் சந்தேகம் ஏற்படலாம். ஆனால் இக்கிழவியின் கோரிக்கை நியாயமானது தான். சொன்னால் என்ன?

“இன்னொரு ஆசை..”

“சொல்லுங்கோ..”

“நான் சாகறத்துக்குள்ளே ஒரு பத்து நிமிஷமாவது சினிமாவிலே ‘டயலாக் பேசிட்டுச்சாகணும்னு ஆசை.. இந்த ‘கான்ஸர்’ வியாதி ஒரு காளான் மாதிரி.. இந்த இடத்திலே போச்சு. இன்னொரு இடத்திலே வரும் அப்படித் தான் எல்லாரும் சொல்றா…”. கிழவியின் இந்த ஆசையை அவனால் பூர்த்தி செய்ய முடியுமா? ஒரு வரி டயலாக் கை அவள் பத்து நிமிஷங்கள் பேசும்படியாக எப்படி மாற்றி எழுதுவது? இந்த ஒரு வரியே படத்தில் இருக்குமா இல்லையா என்பது நிச்சயமில்லை.

சின்ன வயசிலேயே நிழல் வேட்டையில் இறங்கிய இப்பெண்மணிக்கு இதுதான் உயர்ந்த பட்ச குறிக்கோளாக இருக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை .

கதையில் சமையல்காரியை சற்று முக்கியமான ஒரு பாத்திரமாக மாற்றினால்தான் அவள் இரண்டு மூன்று ‘ஸீன்’களில் வருவதும் பத்து நிமிஷங்கள் ‘டயலாக்’ பேசுவதும் சாத்தியம்.

ஆனால் இதற்கு இயக்குநர் சம்மதிப்பாரா?

எப்படி மாற்றுவது ? அதுவும் ஒரு பிரச்சினை.

“உங்களுக்கு உறவு கிறவுன்னு யாரும் இல்லையா?”

“இருந்தான் ஒரு பையன்… தூரத்து உறவு. அவனும் சினிமாவிலே சேரணும்னு துடிச்சிண்டிருந்தான்… நானும் எல்லார் கிட்டேயும் சொல்லிப் பாத்தேன்.. எனக்கு கான்ஸர்ன்னதும் ஆள் அட்ரஸ் தெரியலே, அப்பொ போனவந்தான் இன்னும் வறாப்லே… எப்படி எதிர்பார்க்க முடியும்?”

என் இடது முலையைத் திருகி எறிஞ்சாச்சுன்னு எந்த ராஜாவாவது எனக்கும் கோயில் கட்டப்போறானா? அது கிடக்கிறது விடுங்கோ.. நான் ரெண்டு மூணு ஸீன்லியாவது வரும்படியா வழி பண்ண முடியுமா? ஒரேயடியா சிவாஜி மாதிரி பத்து நிமிஷம் ‘டயலாக்’ பேச வேணாம், ரெண்டு மூணு ‘ஸீன்’லே மொத்தம் பத்து நிமிஷம் டயலாக், என்ன முடியுமா?

“எப்படிச் செய்யறதுன்னு தெரியலே, அதான் யோசிக்கிறேன். இன்னொண்ணு இது டைரக்டர் இஷ்டம். நான் குறுக்கிடறது சரியா இருக்குமான்னு எனக்குத் தெரியலே.”

“என்ன குறுக்கிடறது, இது உங்க கதை. கதை நன்னாயிருக்கணும்னா கொஞ்சம் மாத்தறேள், அவ்வளவுதானே…? எனக்கு நின்னு நின்னு கால் வலிக்கிறது. கொஞ்சம் உட்காரட்டுமா?”

“தாராளமா” அவள் உட்கார்ந்தாள்.

“நீங்க பாடுவேளா?”

“பாகவதர் பாட்டு அத்தனையும் அத்துப்படி. இந்த எழவுதான் என்னை இப்பொ நடுச் சந்தியிலே கொண்டு வந்து நிறுத்தியிருக்கு”

“ஏன் ஏழவுங்கிறேள்? பாட்டிலே ஈடுபாடு இருந்தா எழவா?”

“ஈடுபாட்டோட நின்னுருந்தா தேவலையே. சினிமாவிலே பாகவதரோட ‘டூயட்’ பாடணுங்கிற ஆசை… பாகவதர் எப்படியிருப்பார்னு தெரியுமா உங்களுக்கு? இப்பொ இருக்கிறவா எல்லாரையும் அவர்கால்லே கட்டி வச்சு அடிக்கணும். சும்மா செக்கச் செவேல்னு தங்கத்தாம்பாளம் மாதிரி இருப்பார். பாடினார்னா குரல், வெங்கல மணியை ஒரு பயில்வான் அடிக்கிற மாதிரி.”

அவள் பார்வை எங்கோ வெட்ட வெளியில் லயித்திருந்தது. பாகவதர் குரல் அவள் இதயத்தில் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று தோன்றியது. ஐம்பது வருஷங்களுக்கு முந்திய ஒளி அவள் கண்களில் குடி புகுந்தது.

“சீனுவாசன் சாரைக் கேட்டோம் சார். நீங்கதான் கதாசிரியர், ஒரு பள்ளிக்கூட ‘ஸீனை’ நீங்க கதையிலே கொண்டு வந்தா, ‘சான்ஸ்’ தரேங்கிறாரு சார்.. தயவு செய்து ஒரேயொரு ஸீன்…சார் சார்”. வருங்கால நட்சத்திரம் அவன் அருகில் நின்று மன்றாடிக் கொண்டிருந்தான். இவன் எந்த மாதிரியான ‘வருங்கால நட்சத்திரமாய் இருக்கப் போகிறான்..?

“சும்மா மறுபடியும் ‘ரீல்’ விடறான் சார்.. சீனுவாசன் சார் ஒண்ணும் சொல்லலே…” என்றான் அந்த மற்றொரு நட்சத்திரம். அந்தக் கிழவி ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.

இடது பக்க முலையை மட்டும் அல்ல, கடந்த ஐம்பது வருஷத்திய வாழ்க்கையை உதறிய நிலையில் மீண்டும் ஒரு கன்னிப் பெண் போல அவள் அவனுக்குக் காட்சி தந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *