கன்னிகையின் எலும்பு

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 10, 2024
பார்வையிட்டோர்: 866 
 
 

ஆகாயத்தைத் தலையிலும், சூர்யனைக் கிழக்குத் தோளிலும் சுமக்கும் கிழட்டுப் பாதையோர மாமரம். இலைகளிலும், நரைத்துப் போன கிளைகளிலும் ஊர்ந்து இறங்கி இற்று விழும் ஒளிக்கதிர்கள், குறுந்தெருவின் சரளைக்கல் முத்துக்களில் கட்டி நின்ற இடவப்பாதியின் சிறுகடல்களில் நீண்ட குண்டூசிகளைக் குத்தி நிறுத்தின.

கிராமத்தின் கண்களை, அயல் வீட்டு அம்புகளை அவன் பயந்தான். கன்னிகையிருந்த வீட்டின் படியில் கால் இடறியது. அடுக்களை முற்றங்களிலும், கோழிகள் மேலும், வாழைகள் மேலும், சூர்ய வெளிச்சம். மனிதர்கள் மேலும். கண்கள் இந்தப் பக்கம் திரும்பாத முகங்களாக இருந்ததினால் அவனுக்கு அவர்கள் மேல் நட்புத் தோன்றியது.

குதிகால்களில் வேகத்தின் விதைகள் முளைத்தன. முற்றத்திலி சரசரக்கக் காத்துக்கிடக்கும் மணற்புரப்புக்கள். அடைத்த வாசல்களுடன் முகப்பு காது மடல்களைப் பொத்திப் பிடித்துக்கொண்டு நடந்தான். அவளுடைய படிப்பறை. கதவின் ஒரு பாதிமட்டும் நல் வரவு கூறுகிறது. அடுக்களையிலிருந்து எழும் ஒலிகளுக்காகக் காதுகளை அங்கே பதித்து அவன் உள்ளே கால் வைத்தான். சுவற்றில் காலேஜ் க்ரூப் ஃபோட்டோவின் ஒரு மூலையில் நின்று அவள் புன்சிரித்தாள்.

வாடி நிறம் மங்கிய பிச்சிப்பூ மொசட்டுகள். கிராமத்துப் படிப்பகத்தின் புத்தகங்களுக்கு மேலே திறந்து வைத்த கண் மைக்கூண்டு. சாந்தின் உலர்ந்த சிவந்த துளிகள் அவளுடைய சாம்ராஜ்யம். கொடியில் ஸில்க் ஜார்ஜெட் ஸாரிகள். அவளுடைய இனிமையான மூச்சுக்களும், மணமிக்க கனவுகளும் மயங்கும் அந்த அந்தரங்க உலகத்தில், அவளில்லாத போது அவளுடைய உடல். அதனுடைய பல்வண்ண சுகந்தம் வாயுவில் பூக்கிறது.

அவன் கதவுகள் வெளியே சாய்ந்திருந்த ஜன்னலுக்கு எதிராக நடந்தான். சட்டென்று அற்புதப்பறவை அவன் கண்ணில் கொத்திற்று. திறந்த கண்களில் அவள். ஜன்னல் கம்பிக்கு அந்தப்புறம் வெறும் தரையில், வராந்தாவில். பிரித்துப் போட்ட மயிர். அதைச் சீவாத சீப்பு கையில்.வெளிறிய முகம். சோகத்தின் வித்துக்களும் வெறிச்சிட்ட பார்வையும் கொண்ட கண்கள். காலேஜ் ஃபோட்டோவின் லோ வெயிஸ்ட் ஸாரியுடுத்த பெண்ணைக் காணவில்லை. முண்டு உடுத்து, மேல்முண்டு இல்லாமல், பிளவுஸ் மட்டுமணிந்த வெறும்பெண் சிமின்ட் தரையில் அமர்ந்திருக்கிறாள்.

சீப்பை மடியில் வைத்தாள். நீளம் குறைந்த சுருண்ட மயிரை இரு கைகளாலும் அள்ளி ஒரு சிறு வாழைக் கூம்பாக்கினாள். துக்கத்தின் பெரியதோர் கட்டையைக் கரைத்து விழுங்கியதைப் போல உதடுகளில் நாவை ஒட்டினாள். எழுந்து நின்று வேஷ்டியைத் தட்டியுதறி கீழுதட்டைக் கடித்துக்கொண்டாள். முகத்தைத் திருப்பிய அவள் பட்டென்று அலமர்ந்து அக் காட்சியைக் கண்டாள்.

கதவோடு சேர்ந்து முகம் மட்டும் நீண்டு வந்தது. கண்களின் வேதனை வித்துக்கள், நாணத்தின் விதைகளாக உதிர்ந்து விழுகின்றன.

“நான் பயந்துபோனேன்! எப்படி இதுக்கு உள்ள வந்தீங்க?”

அவளுடைய முகம் மட்டுமல்ல, உடம்பும் வந்தது, சிரிப்பும் வந்தது.

“ஏன் வாசலைச் சாத்தி வெளியே நிற்கிறே?”

அவன் கேட்டான்.

உடம்பிலிருந்து அவளுடைய முகம் போயிற்று. வார்த்தைகள் ஜன்னல் கம்பிகளில் தங்கின. ” எனக்கு உடம்பு சரியில்லை.”

“என்ன உடம்பு?”

மீதி உடம்பும் மறைவிற்குள் போயிற்று. வார்த்தைகளென்ற பதிலுமில்லை. வராந்தாவின் திறந்தவெளிக்குப் பின்னால் முற்றத்தின் ஓரத்தில் சிவந்த வாழைகளின் கூட்டம். குலைதள்ளத் தொடங்கியிருந்த ஒரு வாழை வராந்தாவுக்கு நேரே இலைகளைச் சாய்த்து நின்றது. கீழே நிலத்தில் செம்பருத்தி. கிளைகளில் சிவப்பு பூத்த அரளிமரம். கிளைகளில் சிவப்பு தூக்கிய, காய்த்த சாம்ப மரம். அந்த இளம் சிவப்பின் பிரளயப் பிரதேசத்தைப் பார்த்து நின்ற அவன் கேட்டான்: “அம்மா எங்கே?”

முதலில் விரல்கள் நீண்டு வந்து ஜன்னல் கம்பிகளைப் பிடித்தன. ஒரு கை. பாதித்தலைமயிர். ஒரு கண். அரை மூக்கு. பாதியுதடு. ஒரு சிறிய மார்பு. அப்படி அவள். சிவப்பின் விளிம்புள்ள சிரிப்பும்.

“அம்மா, அக்கா வீட்டுக்குப் போனாள்.” அவள் சொன்னாள்.

அவன் பேசவில்லை. அவள் காத்திருந்தாள்: பிறகு அரளிக் கொப்பினுடைய ஒரு பூங்குலையாக முகத்தை மாற்றி வைத்துக்கொண்டு ஜன்னல் கம்பிகளில் பதித்தாள். உதட்டுச் சிரிப்புக்கு இணையாக கண்களிலிருந்த சிரிப்பிழைகள் பாவு வேய்ந்துவருகின்றன.

“சொல்லு, தாஸண்ணா.”

“என்ன?”

“விசேஷங்க‌ள்.”

மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் என்கிற‌ வால் கொண்ட‌ நாற்காலி கிடைத்து ந‌க‌ர‌த்திற்குப் போகிற‌ கிராம‌த்துப் பெண். ஃபைல்க‌ளின் ச‌வ‌ப்பெட்டியிலிருந்து த‌லையைத் தூக்கி வர‌‌ண்ட‌ உத‌டுக‌ளோடு அன்பைத் தெரிவிக்‌க‌த் தெருவோர‌த்தில் காத்து நிற்கும் உனது அந்தி நேர‌ம். வ‌னிதா ச‌த‌ன‌த்தின் வாச‌ல்வ‌ரை புள‌காங்கித‌ம் சும‌க்கும் ந‌ம‌து ச‌ந்தியா கால‌ம். வாட‌கைய‌றையில் க‌ன‌வின் எலும்பைப் பொறுக்கி இர‌வைப் புகைக்கும் என‌து வேளைக‌ள்.

பிற‌கு ஒரு முகூர்த்த‌ம்.

ந‌க‌ர‌ எல்லையில் இடுங்கிய‌ இரு அறைக‌ளைக் கொண்ட‌ அசுத்த‌மான‌ வாச‌ஸ்த‌ல‌ம். இருட்டில், வெப்ப‌மெனும் பித்த‌ளைப் பாத்திர‌த்தில் வ‌றுத்து, பாட்டுப் பாடும், வாட்க‌ளால் வெட்டிக்கொல்லும் கொசுக்க‌ள். ஆனாலும், விய‌ர்வையொழுகும் மார்பின் இனிய‌ நிர்வாண‌த்தில். உத‌டுக‌ளில் இனிக்கும் தீயில், சுவாச‌த்தின் இனிய‌ நாத‌த்தில், ஒரு க‌ட்டிலின் நீள‌ அக‌ல‌த்தில் நாம் நிர்மாணிக்கும் புள‌க‌ங்க‌ளின், முத்த‌ப் பூக்க‌ளின் ல‌ஹ‌ரிப் பிர‌ப‌ஞ்ச‌த்தில்-

“க‌ன‌வுக‌ளும் விசேஷ‌ங்க‌ளும் சொன்னால் தீருமா?” அவ‌ன் கேட்டான்.

“ம்ஹும்!” அவ‌ள‌து மூக்கிற்குக் கீழே அற்புத‌ப்ப‌ற‌வை வ‌ந்த‌ம‌ர்ந்து உத‌ட்டை வ‌ளைத்த‌து. “என‌க்கு எழுதியிருக்க‌லாமில்லையா?”

ஒரு வாடிய‌ பூவாக‌ அவ‌ள் ச‌ற்றுச் சிரித்தாள்.

“ச‌த்ய‌ம். வீட்டிலிருந்து போர் அடிச்சு‌து. அன்றைக்குச் சொன்ன‌ வேலை கிடைக்குமா? கொஞ்ச‌ம் சொல்லேன்.”

சிறு குழ‌ந்தையின் முக‌மும் நாவில் வார்த்தைக‌ளுமாக‌ அவ‌ள் உற்று நோக்குகிறாள்.

“உன‌க்கொரு நாற்காலி கிடைக்கும் பெண்ணே.”

அவ‌ள் சிறு குழ‌ந்தை போல‌ முக‌ம் ம‌ல‌ர‌வில்லை. அவ‌ளுக்குத் துக்க‌ம‌டையும் ப‌ருவ‌மாயிற்று.

சாம்ப‌ ம‌ர‌த்திலிருந்து சிவ‌ந்த‌ வாழையிலைமேல் ஒரு அணில் தாவிய‌து. குலை தள்ளவிருந்த‌ வாழையின் மொட்டில் அது வ‌ந்து அ‌ம‌ர்ந்த‌து. தானே உருவாக்கின‌ கூட்டிலிருக்கும் ம‌கிழ்ச்சியோடு அணில் குந்தியிருந்து வாலை விறைத்த‌து. அவ‌ன் சொன்னான்: “இதோ பாரு, ஒரு அணில் வாழைமேல் அம‌ர்ந்து க‌ன‌வு காண்கிற‌து.”

அணிலைப் பார்க்காம‌லே அவ‌ள் சொன்னாள்: “பார்த்தேன். அதுக்கு என்கிட்டே ப‌ய‌மில்லை. என்மேல‌ தாவியேறும்.”

“உன் இத‌ய‌ம் நிறைய‌ அன்பாயிருக்கும். அதுதான் அணிலுக்கு அத்த‌னை சிநேக‌ம்.”

வாழைமேலிருந்து அணில் முற்ற‌த்தில் குதித்த‌து. அடுத்த‌ தாவ‌லுக்கு சிமென்ட் த‌ரையை அடைந்த‌து. முழ‌ங்கை தாங்கி அம‌ர்ந்திருக்கும் அவளது மடிவழியாகக் குதித்துத் தாவித் தூரச் சென்ற‌மர்ந்தது. முதுகில் மூன்று கோடுகள் கொண்ட சிறு ஜீவன். பளபளக்கும் கண்களால் அவளைப் பார்த்து, ச்சில்.. ச்சில்…என்று பாடியது. அவள் சிரித்தாள். அவன் சிரித்தான். அவர்கள் சிரித்தார்கள்.

“என் இத‌ய‌ம் இந்த‌ அணில்.”

அவன் சிரிப்பை மாய்த்தான்.

உயர்த்தி வைத்த கால் முட்டுகளில் மேவாயைத் தாங்கி விழிகளைத் தாழ்த்தி அவளும் அதை மாய்த்தாள்.

அணில் முற்றத்தில் குதித்துத்தாவி சிவப்பு வாழையில் ஏறி மறைந்தது.

“எனக்கு வேதனை உண்டாகிற‌து” அவள் சொன்னாள்.

“எதுக்கு வருத்தப்படறே?”

“தாஸண்ணனுக்கு ஒரு டீ போட்டுத் தர முடியல்லியே”

“நான் வேட்கை மிக்க விருந்தாளி. எனக்கு டீ வேணும். உன்னுடைய டீயை தினமும் குடிப்பது பொன்னான ஒரு கனவல்லவா?”

அவள் தலை குனிந்தாள்.

அவன் வார்த்தைகளின் கொடியை அறுத்துவிடாமல் படர்த்தி ஏற்றி அவளைத் திக்குமுக்காடச் செய்தான்.

“அம்மா இல்லை, யாருமில்லை. ஆளற்று மயங்கிக்கிடக்கும் வீடு. நீ மனைவி, நான் க‌ண‌வ‌ன். அம்மா வ‌ர்ற‌து வ‌ரை நாம‌ இங்கே வ‌சிக்க‌லாம்.”

அவ‌ள் க‌ண்ணிமைக‌ள் விரிந்த‌ன‌. அவ‌ன் நிறுத்தாம‌ல் சொன்னான்: “கொஞ்ச‌ நேர‌மாவ‌து ஒரு வீட்டில் பொண்டாட்டியும் புருஷ‌னுமாக‌ வாழ்ந்து, வாழ்க்கையின் ஒரு துணுக்கையாவ‌து அடைய‌லாம்.”

ஒரு நீண்ட‌ பெருமூச்சை விட்ட‌ போதிலும் அவ‌ள் சிரித்தாள்.

“ஏய் பெண்டாட்டிப் பெண்ணே, என‌க்கு உன‌து தித்திக்கும் டீ”

“டீயில்லை புருஷ‌னே, என‌க்கு உட‌ம்பு ச‌ரியில்லை.”

“இப்ப‌ என்ன‌ செய்யிற‌து?”

“புருஷ‌ன் சொல்ல‌னும்.”

அனுச‌ர‌ணையான் க‌ண‌வ‌ன் அடுக்க‌ளையை அடைந்தான். முற்ற‌த்தைச் சுற்றிக்கொண்டு ம‌னைவியும் வ‌ந்தாள்.

தீ செத்துக்கிட‌க்கும் அடுப்பிற்குள் விற‌கை வாரித் திணித்துக்கொண்டு க‌ண‌வ‌ன் ஆராய்ந்தான்: “ஆர‌ம்பிக்க‌ட்டுமா?”

மேவாயை ஆட்டி ம‌னைவி அனும‌தி த‌ந்தாள்.

தீப்பெட்டி விற‌கிற்க‌ளித்த‌ ஜ்வாலைக்குக் கீரிட‌ம் உண்டான‌தும் க‌ண‌வ‌ன் சிறிய‌ செம்பைக் கையிலெடுத்துக்கொண்டு கேட்டான்.”எங்கே த‌ண்ணீர்?”

மூடியிருந்த‌ ஒரு பெரிய‌ பாத்திர‌த்தை ம‌னைவி சுட்டிக் காட்டினாள். பாத்திர‌த்தின் மூடியைத் திற‌ந்து பார்த்து புருஷ‌ன் ஏமாற்ற‌ ம‌‌டைந்தான்.

“தண்ணியில்லை.”

“ச்சோ! அம்மா தண்ணியெடுத்து வைக்கலை. இப்பொ என்ன செய்யிறது?” பெண்டாட்டி ப‌ரிதவித்தாள். “நான் கிணற்றிலிருந்து இறைக்கவும் கூடாது.”

“நானும் நீயும் இநதக் காலி வீடும்! நான் உன்டாக்கிற டீயைக் குடிக்க உனக்கு தாகமெடுக்கிறது இல்லையா?”

கிண‌ற்றைப் பார்த்து ந‌க‌ர்ந்த‌ க‌ண‌வ‌னின் கால‌டிக‌ள் ப‌தியும் சேற்றிலேயே ம‌னைவி கால் வைத்து அதை அழித்து ந‌ட‌ந்தாள். வாளியைக் கீழே அவிழ்த்து விட்ட‌போது ம‌னைவி ப‌ர‌ப‌ர‌ப்ப‌டைந்தாள்.

“ச‌த்த‌ம் போடாதீங்க‌! ப‌க்க‌த்து வீட்டுக்கார‌ங்க‌…”

க‌ண‌வ‌ன், ராட்டின‌ம் ச‌த்த‌ம் போடாம‌ல் ஒரு வாளி நீரை மெல்ல இழுத்தான்.

அடுப்பில் நீரும் ப‌ற்றியெரியும் தீயுமான‌போது புருஷ‌ன் திரும்பி வாச‌லுக்கு வெளியே நிற்கும் ம‌னைவியைப் பார்த்து:

“எங்கே தேயிலைத் தூள்?”

“அதோ அது!”

“எது?”

“சிவ‌ப்பு டின்”

“இதுவா?”

“அந்த‌ச் சிவ‌ப்பில்லை.”

“பின்னே?”

“ம‌ஞ்ச‌ளுக்குப் ப‌க்கத்திலிருக்கிற‌ சிவ‌ப்பு–“

ம‌னைவிக்குக் கோப‌ம் வ‌ந்த‌து.

முற்ற‌த்திலிருந்து நீள‌மான‌ ஒரு சுள்ளிக் க‌ம்‌பைக் கையிலெடுத்து உள்ளே நீட்டினாள்.

“நான் தொட்டுக் காட்ட‌றேன்.”

தேயிலைப் பொடியில் இர‌ண்டாவ‌து முறையும் ஸ்பூனை விட்ட‌போது பின்னாலிருந்து க‌ண‌வ‌னின் முதுகில் ம‌னைவி த‌ட்டினாள்.

“ஸ்…ஸ் போதும்-“

ச‌ர்க்க‌ரை போடும்போது க‌ண‌வ‌ன் ம‌னைவியைப் பார்த்தான்.

“எம் புருஷ‌னுக்கு விய‌ர்த்துப் போச்சு.”

ம‌னைவி அனுதாப‌ம் தெரிவித்தாள்.

க‌டைசியில் தேயிலை.

ஒரு விழுங்கு குடித்துக்கொண்டு ம‌னைவி முணுமுணுத்தாள்: “தாங்ஸ். ந‌ல்ல‌ டீ.”

“ஒன் நாக்குக்கு ந‌ன்றி.”

தேயிலை குடித்து முடியும் முன்பே ம‌னைவி முன்ன‌றிவிப்புச் செய்தாள்: “ரெண்டு ட‌ம்ள‌ரையும் நான் க‌ழுவித்த‌ரேன்.”

பால் காலியான பாத்திரத்தைப் பத்திரமாக அடைத்து வைத்து, அடுப்பில் தீயை அணைத்து, அடுக்களையைப் பழைய போலாக்கி, கணவனும் மனைவியும் வெவ்வேறு பக்கமாக நடந்தார்கள்.

ப‌டிப்பறை. ஜன்னல். கம்பிகளுக்குளே. வெளியே, அவன், அவள்.

பழுத்த சாம்பக்காயைக் கொத்தி வயிறு புடைத்த குருவிகள் சல சலத்தன. அரளி வேரின் அருகில் நிர்மாணித்த புதிய அரண்மனையை நோக்கிப் பயணம் செய்யும் சிதலெறும்புகள் பாடின. மரக்கிளையில் சிறகை ஒடுக்கியிருந்த குயிலும் வயனப் பூமணம் சுமக்கும் காற்றும் பாடின.

மரச் சட்டங்களிலிருந்து நீக்கிப் பதித்த ஒரு வலது கை, அவனுடைய உள்ளங்கையில் நீளக் கிடந்தது. உருண்டு நீண்ட எலும்புகளில், சிவப்பானதும் வெண்மையானதுமான தோல் மூடி உண்டாக்கிய விரல்கள் அவனுக்கு இதழ்களாயின. ஐந்து இதழ்களுள்ள பூவை அவன் வருடினான். அதைப் பிடித்தெடுத்து ஷர்ட்டினுள்ளே நெஞ்சில் வைத்து அவன் மூச்சையடக்கிப் பிடித்தான்.

சிவ‌ப்புப் ப‌ட்டில் பொதிந்த‌ வ‌ளைவான‌ வாட்க‌ளின் வெள்ளிக் கூர்மைக‌ளை மினுக்கிக்கொண்டு அவ‌ள் நாணினாள்.

“த்சு! என்னைத் தொட‌க்கூடாது.”

அப்புற‌மும் வில‌க்கிக் கொள்ளாத‌ கையும் ஜ‌ன்ன‌ல் நிலையில் அழுத்திய உட‌ம்புமாக‌ அவ‌ள் வ‌ராந்தாவில்.

அவ‌ளுடைய‌ க‌ன்ன‌ங்க‌ளில் சிவ‌ப்பு மை ப‌ட‌ர்ந்த‌து. நாசித் துவார‌ங்க‌ள் வட்ட‌மாக‌ விரிந்த‌ன‌. மேலுத‌ட்டில் ரோம‌ங்க‌ளுக்குக் க‌ருப்பு வ‌ள‌ர்ந்த‌து.

வாயுவின் நீள‌ம் குறைந்த பால‌ம் க‌ட்டி நிறுத்திய‌ உத‌டுக‌ள். இருந்த‌ போதிலும் அவ‌னுக்கு ஒரு வாழ்க்கையின் முத்துக் கிடைத்த‌து. ஒரு ஆத்மாவின் த‌ங்க‌ம் கிடைத்த‌து. ஒரு பெண்ணின் ர‌‌த்தின‌ம்‌ கிடைத்த‌து….

நிமிட‌ங்க‌ளின் ப‌ற்ச‌க்க‌ர‌ங்க‌ளும் ந‌க‌ர்ந்து போயின‌. அவ‌ள் க‌ண் நிறைந்த‌து. அவ‌னுடைய‌ க‌ண்ணீர் க‌ன்ன‌த்தில் வ‌ழிந்த‌து. அவ‌ள் அறைக்கு உள்ளேயா, வெளியிலா?

தோட்ட‌தில் இருளின் மூலையிலெங்கோ ப‌துங்கியிருந்த ஆந்தை மூளிய‌து. திரும்ப‌வும் நீள‌மாக‌க் குர‌ல் கொடுத்த‌போது அவ‌னுடைய‌ செவிக‌ள் அம்புக‌ளைத் தேடின‌. அவ‌ளுடைய‌ க‌ண்க‌ள் பீதியைத் தின்ற‌ன‌.

முன்ப‌க்க‌த்திற்கு ஓடிய‌ வேக‌ம் ம‌ற‌க்காம‌ல் அவ‌ள் திரும்பி வ‌ந்தாள். “அம்மாவும், அக்காவும், அக்காவோட‌ புருஷ‌னும், இன்னும் யாரெல்லாமோ வ‌ராங்க‌.”

நுனி ம‌ழுங்கிய வார்த்தைகளை ஜன்னல் கம்பியில் கோர்த்துப் போட்டு விட்டு அவள் மறைந்தாள்.

தப்புவதற்கு ஒரு ஒளியுமிடத்தை அவனும் தேடினான். மேஜைப் பக்கம் கிடந்த புத்தகத்தையெடுத்துப் பிரித்து அதில் கண்களைப் புதைத்து ஒரு சிறு புகலிடம் உண்டாக்கினான். ஆனாலும் வாசலிலிருந்து நேரே இழைந்து வருகிற காலடிகளின் சரர‌ப்புக்களும் வார்த்தைகளின் எல்லைகளும் அவனை அச்சுறுத்தின.

இரண்டு முகங்களில் முகமூடி யணிந்துகொள்ளத் தாமதமாகிப் போயிற்று. சிரித்தாள் – அவளுடைய தாய்.

“எங்கே காணவேயில்லை. என்ன விசேஷ‌ம்?”

“ஓ,விசேஷம் சொல்ல இதுதான் நேரம்! நீ காப்பி போடற வழியைப் பாரம்மா!”

முகமூடிக்குச் சமமான கருணையின்மையை அவளது அக்கா வார்த்தைகளில் தோய்த்தாள்.

அம்மா அடுக்களைக்குத் திரும்பிப் போனபின் அவளது தமக்கை கேள்விக் கணைகளால் குத்தினாள்.

“இந்த அறையில்தானா உட்காரணும்? இது மரியாதையில்லை. அந்தப் பக்கம் வந்திருக்கிறவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க?”

திரும்பவும் அவளது தாயின் நிழல், குரல்: “மூடி வச்சிருந்த பாலைக் காணோம். பாத்திரம் மூடியிருக்கு!”

“யாரு குடிச்சது?” அவளது அக்கா கேட்டாள்.

வாசல் பக்கத்தில் துக்க ஸ்வரத்தில் அழுதவாறு கண்ணை மூடிப் பதுங்கி வரும் பூனையைப் பார்த்து அவளுடைய அம்மா சொன்னாள்: “நம்ம பூனை பாலைத் திருடிக் குடிக்காது. பூனையை விசாரிச்சுக்கிட்டிருக் காம நீ போய்ப் பசுவைக் கறம்மா. அவளெங்கே?”

“அடுக்களைக்கு வெளியே. அவளுக்கு உடம்பு சரியில்லை.யாருக்கும் காப்பி கொடுக்க முடியாதாம்.”

“சுகமில்லைன்னு நெற்றியிலே எழுதி ஒட்டியிருக்காக்கும். நான் ஸாரி உடுத்தி விடறேன்.” அவளுடைய அக்கா தரையை உதைத்து நடந்தாள்.

அடுக்களையிலும் முன்புறத்திலும் வீடு முழுவதும் எழும் வார்த்தைகள், சப்தம் சுவர்த்துவாரங்கள் வழியாக நுழைந்து வந்தன.

சம்பளம் ரூ.600. அடுக்களையில் பாத்திரங்கள் இடித்தன. க்வார்ட்டர்ஸ்…ப்ரமோஷன்….பெண் கிராஜுவேட்டானால் முப்பது நாட்களுக்குள் வேலைகிடைக்கிற ஊர்…கிணற்றில் ராட்டினம் அழுதது. அவளைக் கடிந்துகொள்ளும் தமக்கையின் தணிந்த தொனி.

சிவப்பு வாழையில் ஒளிந்திருந்த அணில் தாவி வராந்தாவில் அவள் இருந்த இடத்தையடைந்தது. வாலை விறைத்தது. வட்டக் கண்களை உயர்த்தி சுற்றும் பார்த்தது. ஜன்னலோடு ஒட்டி நின்ற அவனுடைய கண்கள் பளபளத்தன. சுவரில் ஆணியில் மாட்டியிருந்த அவளுடைய குடையை இழுத்தெடுத்து ஜன்னல் வழியாகத் தரையில் பலமாக அடித்தான். அணில் நகரவில்லை. கொஞ்சம் தலையையுயர்த்திக் கண்ணைச் சுழற்றிப் பார்த்தது. திரும்பவும் அவன் குடையை உயர்த்தினான். அணிலின் தலை நசுங்கியது. வால் துடித்தது. தரையில் இரத்தம் பரவியது. உயிர் காற்றினுடைய கையை ஓடிச்சென்று பிடித்துக் கொண்டது.

“என் அணிலைக் கொன்னுட்டீங்களா?”

சாம்ப மரத்தினடியில் கண்ணீரால் நிர்மாணித்த அம்புகளுடன் அவள். “கொன்னுட்டீங்களா?”

விம்மல்களின் அலைகளை அங்கேவிட்டு விட்டு அவள் மின்னலானாள்.

ஜன்னல் கம்பிகள் வழியாகத் தோட்டத்தில் மரங்களுக்கும் அப் புறத்தில் அவன் நோக்கினான். இருட்டின் சதுரப்பெட்டிகளை ஒளித்து வைத்த மூங்கில் புதர் எதிலேயோ பதுங்கியிருந்த ஆந்தை அலறுகிறது…..

உனது மருவின் இனிமையும் தொப்புளைச்சுற்றி வியர்வை முத்துக்களும் உதட்டின் மின்சாரமும் கன்னத்தின் சிந்தூரமும் புதிய உடமையாளனுக்குச் சொந்தமாகும். ஆனால் யாருக்கும் வேண்டாத வெளுத்த எலும்புகள். இதயத்திற்கும் தோலுக்கும் அடியில் பற்றி நிற்கும் உன் எலும்புகள்…..

மூங்கில் புதிர் ஆந்தையிடம் அவன் கேட்டான்:

எலுமிச்சையும், ஜவந்தியும், பிச்சிப்பூவும் கட்டிய மாலையால் கொஞ்சம் சுற்றி வைக்க, மரணத்தின் சிறகொளி படபடப்பை நெஞ்சிலமர்த்தி இதயத்திற்கு வெம்மை கொடுக்க ஒரு எலும்பு எனக்குக் கிடைக்குமா?

இருள் பெட்டியிலிருந்து ஆந்தை மரணவொலி முழங்கிற்று.

ஙும்…. உம்…..ங்ஙும்…உம்.

அப்போது அவளது அக்கா அறைக்குள் வந்தாள். கொடியில் மடித்துத் தொங்கவிட்டிருந்த ஸாரிகளைத் தொட்டுப் பார்த்து, கட்டிவிட ஒன்றைத் தேடினாள். கொடியை விட்டுவிட்டுத் தரையிலமர்ந்து பெண்களின் கனவுகள் உறங்கும் முண்டுப் பெட்டியைத் திறந்தாள்.

நிமிடங்களில் பற்சக்கரங்கள் நகர்ந்து போன இறந்த காலத்தில், அவள் அறைக்குள் வந்தபோது முண்டுப்பெட்டியும் திறந்திருந்ததோ? அவள் உடுத்தியிருந்த உடை, அதில் அரளிப்பூ மொட்டுக்களின் நிறமும் கசக்கியிடப்பட்டிருக்கிறது. பெட்டிக்கு மேலே அது உயர்ந்தபோது சிவப்பு வாயுவில் சிதறியது.

அவளுடைய அக்கா பதறி நடுங்கினாள். அப்போது கையிலிருந்து நழுவி அது தரையிலும் விழுந்தது.

– துளஸி

– சமீபத்திய மலையாளச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1980, தொகுப்பு: எம்.முகுந்தன், மொழிபெயர்ப்பு: ம.இராஜாராம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

நன்றி: https://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *