கனவுகள் வாழ்கின்றன

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 15, 2022
பார்வையிட்டோர்: 4,115 
 
 

வாழ்க்கை – 1

தென்றல்காற்று முகத்தில் பட்டுத்தெறித்தது. கண்ணில் பட்ட இடமெங்கும் வெட்டவெளியாக வயல்வெளி பரவிக்கிடந்தது.

தென்றலின் இனிய வாசத்தை அள்ளிச் சுவைத்தபடி மூக்கின்வழியே இழுத்து ஆசைதீர வாய்வழியே விட்டு வெளியனுப்பி அனுபவித்தேன்.

இதமான காலைப்பொழுதில் குளக்கட்டின் வழியே பொங்கிப் பிரவாகிக்கும் வயற்காற்று மருதமர இலைகளை அசைத்து நடனம் பயிற்றிக்கொண்டிருந்தது.

நிறைமாதமாய் தளதளத்து முட்டிமோதியது குளத்துநீர். வான் பாய்ந்து அடங்கியதற்கான ஆதாரங்கள் அங்குமிங்குமாக உருக்குலைந்திருந்தன.

மூன்றாண்டுகளின்பின் என் சொந்த மண்ணில்… நான் பிறந்து ஓடியுலாவிய என் சொர்க்கபூமியில் காலடி வைத்த ஆனந்தத்தில் வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் நின்று பெரு நடனமாடியது இதயம்.

மூன்றாண்டுகள் நான் எப்பிடி இருந்தேன்… எங்கிருந்தேன்… என்பதெல்லாம் இப்போது எனக்குத் தேவையற்றதாகிப் போயிருந்தது.

எந்த ஊர் என்றாலும் சொந்த ஊருக்கு நிகராக வராது என்ற உண்மையை இங்கு காலடியெடுத்து வைத்த இந்தக் கணத்தில் நான் உணரத் தலைப்பட்டேன்.

இப்போது என் உயிர்… மூச்சு… சுவாசம் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘செம்புலப் பெயல்நீராய்’ உருமாறக் கண்டேன். என் கைஇ கால் நரம்புகள் அனைத்திலும் மின்சார வேகம் பாய்ந்ததாய்ப் புத்துணர்வு பெற்று மீண்டுகொண்டிருக்கிறேன்.

செம்மண் கிரவல் வீதியில் ஆங்காங்கே புற்கள் முளைவிட்டிருந்தன. சேறும் சகதியுமாக பள்ளங்கள் நிரம்பியிருந்தன.

பல பழைய மனிதர்களை ஊரில் காணமுடியவில்லை. ஒருவேளை முதுமையின் சீற்றத்தில் அவர்கள் மாண்டிருக்கலாமோ என்னவோ…

ஊரில் புதிதாக யாரும் வேலிகள் போட்டதற்கான சுவடுகள் தென்படவில்லை. எல்லாரும் சகிப்புத்தன்மை பெற்றவர்களாகி புதுப்பிறப்பெடுத்திருப்பதாக என்னால் உணரமுடிந்தது

வாழ்க்கை – 2

எனக்குச் சின்ன வயதிலிருந்து புத்தகங்கள் என்றால் உயிர். ஒரு நல்ல புத்தகம் பத்து நண்பர்களுக்கு நிகரானது என்ற சீரிய கொள்கையுடையவன் நான்.

சிறு வயதிலிருந்து சேர்த்து வைத்த புத்தகங்கள் அனைத்தையும் பார்க்கும் ஆவலுடன் கதவை மெதுவாகத் தள்ளித் திறந்தேன்…

சிலந்திவலைகள் முகட்டுக்கும் – யன்னலுக்கும்: கதவுக்கும் – அலுமாரிக்கும் இடையில் கோலங்கள் போட்டிருந்தன. கூரைத் தகடுகளினூடாக உள்விழும் சூரியஒளி அமாவாசை இருளின் நட்சத்திரப் புள்ளிகள் போல் நிலத்தில் விழுந்து பிரகாசித்தன.

கரப்பான், தட்டான் பூச்சிகள் அங்குமிங்குமாக ஓடி விளையாடிக்கொண்டிருந்தன. இரண்டொரு சுண்டெலிகள் தாத்தாவின் பாழடைந்துபோன படத்தின் மேல் பாய்ந்தோடி விளையாடுவதைக் கண்டேன்.

வீட்டுக்குள் காலடியெடுத்து வைப்பதற்கே பயமாக இருந்தது. சிறுவயதில் ஒளித்துப்பிடித்து விளையாடிய எங்கள் வீடு…

இன்று மரண பயத்தைத் தந்தது எனக்கு.

இன்னும் என்னவெல்லாம் இருக்குமோ என்ற பீதியுடன் உள்ளே மெதுவாக காலடியெடுத்து வைக்கிறேன். என் கால்வழியே ஏறி தலைவரை சென்று உச்சிமோந்து தடவிப்பார்த்தது ஒரு கரப்பான்பூச்சி.

சாமிப்படத் தட்டில் பல்லிகளும்இ ஓரிரு பூரன்களும் உலாவரக் கண்டேன்.

“சிலவேளை பாம்புகள் இருந்தால்க்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை”

என்ற எச்சரிக்கையுடன் நிதானமாகச் செயற்படத்தொடங்கினேன்.

வாழ்க்கை – 3

இப்போது விழித்திருக்கும்போதுகூட என்னால் கனவு காண முடிகின்றது. கனவுகள் அற்புதமானவை… அழகானவை…

என்னால் காணப்பட்ட கனவுகளை நான் மட்டுமே அனுபவிக்கக்கூடிய அந்தரங்கமானவை. நிராசைகள்இ வலிகள்இ வேதனைகள், நிறைவேறாத ஆசைகள் என்பன கனவுகளாக உருமாற்றம் பெறுகின்றன.

அண்மைக்காலமாக நிறைவேறாத ஆசைகள் பலவற்றை என் ஆழ்மனதில் பூட்டிவைத்துவிட்டு தனிமையில் மௌனியாகி இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு.

என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. தூக்கத்தில்… அரைத்தூக்கத்தில்… விழித்திருக்கும்போதுகூட கனவுகள் வந்துதொலைக்கின்றன.

அண்மைய நாட்களில் அடிக்கடி என் கனவில் என் ஊர்… என் வீடு… இன்னும் எனக்கேயுரிய எல்லாம் வருகின்றன.

இப்போது நான் என் சொந்த ஊரில்… என் வீட்டில் இருக்கிறேன். கரப்பான்பூச்சிகள், தட்டான்கள், சிலந்திகள், பல்லிகள், தேழ்கள்,பூரான்கள் , கொடுக்கான்கள்… இன்னும் பாம்புகள்… எதுவாயினும் என் இருப்பிடத்தில் குடியிருக்கக்கூடும்.

“கடவுளே இந்தக் கனவு முடிவதற்குள் நான் அவைகளை விரட்டியாக வேண்டும். அதன்பின் சிறிது நேரம் என் வீட்டுத் திண்ணையில் படுத்து ஒரு நல்ல கனவு காணவேண்டும்”.

– ஆகஸ்ட் 24, 2009

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள்…அன்புடன், தியா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *