கனகரத்தினம் மாஸ்டர்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 15, 2019
பார்வையிட்டோர்: 6,909 
 
 

“Bloody Indians…!”

கத்திக்கொண்டே அவன் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று ட்ரில்லரால் துளைக்க, கனகரத்தினம் மாஸ்டர் அவமானத்தில் கூனிக்குறுகிப்போனார். அவசர அவசரமாக தபால் பெட்டியில் போட்டிருந்த விளம்பர பத்திரிகைகளை எடுத்து சுருட்டிக்கொண்டு வேகமாக அந்த இடத்தைவிட்டு நடக்கத்தொடங்கினார். கால்கள் நடுங்கின. அவன் அழைத்த தோரணையே மிரட்டலாக இருந்தது.

“Hey Mister, Come here ..”

ச்சே சனியனுக்கு நாற்பத்தைந்து தாண்டியிருக்குமா? நான்கு நாட்கள் ஷேவ் செய்யாத பிரவுன் தாடி. பியரும் சிகரட்டும் இன்னமும் நாசியில் அடித்தது. அவனும் அவனின்ட கலிசானும். நீலமும் பிரவுனுமாய் பெயிண்ட், மேலுக்கு பனியன் மட்டும். அதுவும் கிழிந்திருந்தது. பிச்சைக்காரன். கையில் டிரில்லர் மெசினை வைச்சுக்கொண்டு படம் காட்டிறானா? மாஸ்டருக்கு மீண்டும் மீண்டும் மண்டைக்குள் நடந்தது ஓடிக்கொண்டிருந்தது.

“Yes Sir….”

“How long you been doing this?”

“Five Years Sir”

“Five years! You know English? Read this?”

மாஸ்டர் அவன் வீட்டு தபால் பெட்டியில் ஒட்டியிருந்ததை வாசிக்கிறார். குரல் நடுங்குகிறது.

“’No Junk Mail’ Sir …. Sorry Sir I did not notice it”

“Get outta here, ever you put your rubbish again, I will complain next time…”

“Really Sorry Sir, I will not put again.”

“Get lost …”

இதே மெல்போர்ன் தாமஸ் டவுனில் இருக்கும் அலெக்ஸாண்டர் அவெனியுவில் தான் ஐந்து ஆண்டுகளாக மாஸ்டர் பேப்பர் போடுகிறார். இவ்வளவு காலமும் இந்த இத்தாலிக்காரன் தபால் பெட்டியில் “No Junk Mail” என்ற ஸ்டிக்கர் இருக்கவில்லை. இந்த வாரம் தான் ஒட்டியிருக்கிறான், ஏனோ மாஸ்டரும் கவனிக்கவில்லை.

வாரம் ஒரு முறை விளம்பர பத்திரிகைகளை வீடு வீடாக சென்று போடவேண்டும். பத்திரிகைகள் பலவிதம், பல சைஸ்கள். கோல்ஸ் சூப்பர்மார்க்கட்டில் ஆப்பிள் ஒரு கிலோ இரண்டு டாலர். பெண்களுக்கு மட்டும் நெயில் பாலிஷ் செய்து விட இருபது டாலர். வெள்ளைத்தாளில் பத்து வெள்ளைக்காரிகள் வித விதமான பிராக்களில் ஒய்யாரமாய், பத்து டாலரில் இருந்து நூறு டாலர் வரை மலிவு விலை. வாலண்டைன்ஸ்டேக்கு மூன்று மோதிரம் ஒன்றாக வாங்கினால் டிஸ்கவுன்ட். லேலூரில் புதிதாக தொடங்கிய இந்தியன் ரெஸ்டாரண்டில் சில்லி பாராட்டா ஆறு டாலர். இப்படி வாரத்துக்கு சுமார் பத்து விளம்பர பத்திரிகைகள். இருநூற்றைம்பது வீடுகள். போட்டால் நாற்பது டாலர் வரை. கையில் காசு வாங்கினால் டாக்ஸ் ஏய்க்கலாம். விடுமுறை சீசன் என்றால் பத்து இருபது டாலர்கள் அதிகமாகலாம். மாதத்துக்கு 200 டாலர்கள். வருடத்துக்கு 2400 டாலர்கள். மாஸ்டர் ஐந்து வருடத்தில் 10,000 டாலர் வரை சேர்த்துவிட்டார். இலங்கை காசுக்கு பன்னிரெண்டு லட்சம் ரூபாய்கள். அவரின் இருபது வருட இலங்கை சம்பளம்.

மாஸ்டரின் எண்ணம் சிந்தனை எல்லாம், சொந்த ஊரான வட்டக்கச்சிக்கு திரும்பிச்சென்று அங்கே சின்னதாக முருகன் கோயில் ஒன்று கட்டவேண்டும். கும்பாபிஷேகத்துக்கு பஞ்சமூர்த்தி எந்த நாட்டில் இருந்தாலும் அழைத்து நாதஸ்வர கச்சேரி நடத்தவேண்டும். ஹட்சன் ரோட்டில் காணியும் பார்த்துவிட்டார். புண்ணியமூர்த்தி தான் கோவியருக்கு தரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறான். இயக்கமும் இப்போது இல்லை. எப்பிடியாவது தாடிக்காரரை பிடித்து காணியை ஒப்பேற்றி விடவேண்டும். இன்னமும் ஐந்து வருடங்கள் ப்ளடி இந்தியனாக பல்லைக்கடிக்கவேண்டும்.

தலை குனிந்து கொண்டே அடுத்த வீட்டுக்கு நகர்ந்தார். வீட்டுக்காரன் சீக்கியன். லாரி வைத்திருக்கிறான். கூரியர் சர்வீஸ் செய்வான். வீட்டில் ஏழு பேர்கள். பெரிய குடும்பம். வெயில் நேரம் பேப்பர் போட போகும் நேரங்களில் சிலவேளை கோக் கொடுப்பான்.

“Don’t worry Kana, he is an Idiot”

“No .. it’s ok, it was my mistake anyway”

“That bastard is also a refugee from Italy. Credit card forger! Retard ..”

கனகரத்தினம் மாஸ்டருக்கு சுருக்கென்றது. சீக்கியன் தன்னையும் அகதி என்று குத்தாமல் குத்துகிறான் என்று புரிந்தது. சிரித்தபடியே அப்பாலே நகருகிறார்.

மாஸ்டரின் ஊர் வட்டக்கச்சி. ஏழு மணிக்கு சைக்கிள் எடுத்தால், கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் எட்டு மணிக்கு நிற்பார். இங்கிலீஷ் மாஸ்டர். இங்கிலீஷை இங்கிலீஷிலேயே படிப்பிப்பார். வீட்டில் Chapman grammar புத்தகத்துக்கென்று தனி டியூஷன் சொல்லிக்கொடுப்பார். செவ்வாய்கிழமைகளில் மாலை ஆறு மணிக்கு வகுப்பு. மாதத்துக்கு பீஸ் பத்து ரூபாய். எட்டு மாணவர்களுக்கு நான்கு மாணவிகள். மகள் தாரிணிக்கு, ஆங்கில இலக்கியம் தனியாக பார்த்து பார்த்து படிப்பித்தார்.

“…But in your perishing you will shine brightly, fired by the strength of the God who brought you to this land and for some special purpose gave you dominion over this land and over the red man”

ஏனப்பா கடவுள் இவங்கள அம்போ எண்டு விட்டிட்டு அவங்களுக்கு மட்டும் அதிகாரத்தையும் ஆதரவையும் குடுத்தவர்? பாவம்பா!

Only English!

Why god give power and support to them and …

What …?

..தெரியலைப்பா … எப்பிடி இங்க்லீஷ்ல கேட்கிறதெண்டு…!

Why did god give the power and support only to them and let us down? — மாஸ்டர் திருத்தினார்

..Why did… — தாரணி திருப்பிச்சொல்ல மாஸ்டர் பதில் சொல்லாமல் தொடர்ந்து சொன்னார்..

“That destiny is a mystery to us, for we do not understand when the buffalos are all slaughtered, the wild horses are tamed, the secret corners of the forest heavy with the scent of many men, and the view of the ripe hills blotted by talking wires. Where is the thicket? Gone. Where is the eagle ? Gone. The end of living and beginning of survival”

மகள் ”மிஸ்டரி” என்று வாசிக்கும் போது “மிஸ்ட்ரி” என்று உச்சரிப்பு திருத்துவார். தாரணி படிப்பில் படு சுட்டி. ஒஎல் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்திலேயே தனியொருத்தியாக ஆங்கில இலக்கியத்தில் அதிவிசேட சித்தி எடுத்தாள். ஆனால் ரிசல்ட் வருவதற்கு முதலேயே அவள் இயக்கத்தில். முன்னேறிப்பாய்ச்சல் அடிபாட்டில் செத்துப்போய் ஒரு கை இல்லாத தாரணியின் பிரேதத்தை பார்த்த மாஸ்டர் ரொம்பவே ஆடிப்போனார். அடுத்தவாரமே ஆறு ஏக்கர் வயல் காணியை விற்று மகன் ரமேஷை ஆஸ்திரேலியா அனுப்பிவிட்டார். கையோடு பென்ஷன் பேப்பரை குடுத்துவிட்டு சைவபழமானார். கூற்றாயினவாறு விலக்ககளீர் என்று வெள்ளிக்கிழமையானால் வட்டக்கச்சி முருகன் கோயிலில் அழுதார்.

இது நடந்து ஏழு எட்டு வருஷங்கள் கடந்திருக்கும். ஒருநாள் திருவெம்பாவை பஜனை முடிந்து கோயில் கழுவிக்கொண்டு இருக்கும்போது தான் ரமேஷின் கடிதம் வந்தது.

அன்புள்ள அப்பாவுக்கு,

நான் நல்ல சுகம். நீங்கள் எப்படி இருக்கிறீங்க?

நிற்க, எனக்கு சிட்டிசன் கிடைத்துவிட்டது. இனி உங்களுக்கு விசா ஈசியாக எடுக்கலாம். உடனடியாக கொழும்பு வந்து பாஸ்போர்ட் அப்ளை பண்ணுங்கள். இங்கு வந்தவுடன் ஒரு லாயரை பிடித்து அகதி விசா குத்தி விடலாம். நீங்கள் உழைப்பதை விட ஐந்து மடங்கு காசு சும்மா இருப்பதற்கு வெள்ளைக்காரன் தருவான். உங்களை விட்டு என்னாலும் இனி பிரிந்து இருக்க முடியாது.

ஆ, மறந்துவிட்டேன். மேகலா மூண்டு மாசமா சுகமில்லாமல் இருக்கிறாள். புதிதாக வீடு ஒன்றும் வாங்கி இருக்கிறோம். நீங்கள் வந்தால் வசதியாக தங்கலாம்.

உங்கள் நலம் நாடும்,

அன்பு மகன்,

ரமேஷ்

பேரப்பிள்ளை பிறக்கப்போவது தெரிந்தது முதல் முத்துநாயகிக்கு இருப்பு கொள்ளவில்லை. ஆஸ்திரேலியா போவதென்றால் வீட்டை யாரிடம் பொறுப்பு கொடுப்பது? பள்ளன் சண்முகத்திடம் கொடுப்பதில் மாஸ்டருக்கு துளியும் இஷ்டமில்லை. அப்படியே விட்டுவிட்டுப் போனால் இயக்கம் வேறு குடும்பங்களை இருத்திவிடும். சாதியில் வேறு ஆட்களையும் பிடிக்கமுடியவில்லை. இறுதியில் சண்முகத்துக்கே கொடுக்க அக்ரீமன்ட் போட்டார். ஆறுமாசத்துக்கு ஒரு முறை வேலி அடைக்கவேண்டும். ஐந்து கள்ளுத்தென்னைக்கும் தோப்பு தேங்காய்க்கும், வாடகைக்குமாய் சேர்த்து எண்ணூறு ரூபா பாங்க் அக்கவுண்ட்டில் போட வேண்டும். பாஸ் எடுத்து கொழும்பு புறப்பட்டாச்சு.

ஆறு மாசத்தில் பிடிக்காவிட்டால் திரும்பலாம் என்று தான் மாஸ்டர் முதலில நினைத்தார். ஆஸ்திரேலியா வந்து பார்த்தால், நாற்பது நாட்களுக்குள் கேஸ் போட்டால் தான் அகதி அந்தஸ்து கிடைக்குமாம், வந்த இரண்டாம் மாசத்திலேயே மாஸ்டரும் மனைவியும் அந்தஸ்துள்ள அகதிகளானார்கள். சென்டர்லிங்க் காசும் கொஞ்ச நாட்களிலேயே கிடைக்க, பேத்தி வானதியும் பிறக்க, முத்துநாயகிக்கும் ஆஸி பிடித்துபோயிற்று. ரமேஷும் மேகலாவும் வேறு மாய்ந்து மாய்ந்து கவனித்தார்கள். ஆஸி காட்டினார்கள். மாஸ்டரும் வந்தது தான் வந்தோம், ஒரு ஐந்து வருடம் இருந்து கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு நிம்மதியாக கடைசிக்காலத்தை வட்டக்கச்சிக்கு போய் கழிக்கலாம் என்று கணக்குப்போட்டார்.

எல்லாமே இரண்டு வருஷங்கள் தான். ஒரு நாள் பின்னேரம் தேத்தண்ணி குடிக்கும் போது ரமேஷ்.

அப்பா உங்களிட்ட ஒண்டு …

சொல்லு?

வானதிய டே கெயாரில விடப்போறம்

ஏண்டா? நானும் அம்மாவும் பார்க்க மாட்டமா?

அதான் அப்பா! வானதிக்கு ஆஸ்ஸி ஸ்லாங் வருகுதில்ல, நீங்களும் அம்மாவும் வீட்டில, அவளும் யாழ்ப்பாண தமிழ் கதைச்சுக்கொண்டு இருக்கிறாள்,

அவள் தமிழ் கதைக்கிறது நல்லம் தானே!

மற்ற பிள்ளையள் இங்க்லீஷ் கதைக்குதுகள். உங்கட இங்க்ளிஷும் ஸ்ரீலங்கன் இங்க்லீஷ்! அதான் டே கேயாரில விட்டிட்டு வேலை முடியும் போது நானோ மேகலாவோ கூட்டி வரப்போறோம்

நாங்க தனியா இருக்கிறதா?

கஷ்டம் அப்பா, நீங்களும் அம்மாவும் ஏன் இங்க தனிய இருந்து குளிருக்க கஷ்டபடுறியள்? பேசாம வட்டக்கச்சிக்கே திரும்ப போயிடுங்களேன்?

மேகலாண்ட ஐடியாவா இது?

அவளை ஏன் இதுக்க இழுக்கிறீங்க? நான் தான் … உங்கட நல்லதுக்கு தான் சொல்றன்

நீ வா எண்ட போது வரோணும், போ எண்ட போது போணுமா?

பிழையா நினைக்கிறீங்க அப்பா..

தெரியும்டா, நீ சுயநலம் பிடிச்சவன்! வரேக்கையே தெரியும். இப்ப காரியம் ஆனோன காய் வெட்டுறாய், உன்னை நம்பி வந்தம் பார், செருப்பால அடிக்கணும்

சும்மா என்னையே சொல்லாதீங்க, ரண்டு பேருக்கும் கவர்மன்ட் இவ்வளவு காசு தருதே, எனக்கு கொஞ்சமாவது தந்தீங்களா? பொத்தி பொத்தி எல்லாம் வட்டக்கச்சிக்கு போறது எனக்கு தெரியாதா?

நீ தான் வேண்டாம் எண்டு சொன்னியேடா?

சொன்னா? உங்களுக்கு எங்க மதி போச்சு?

இது நீ பேசற பேச்சா தெரியேல்ல? மேகலா தான் ஓதி இருக்கிறாள். கைக்குளர் பெட்டைய சொல்வழி கேளாம கட்டேக்கைய சொன்னனான். நாய் தன்ர குணத்த காட்டீட்டுது.

மாஸ்டர் கோபத்தில் பேசிக்கொண்டிருக்க ரமேஷ் ஆத்திரத்தில் திருப்பிக்கத்தினான்.

You Bloody ..… ? இதுக்கு மேல ஒரு வார்த்தை அவளை பத்தி தப்பா பேசினா, அப்பன் எண்ட மரியாதை கிடைக்காது சொல்லிட்டன்

மகன் சொன்னபோது கனகரத்தினம் மாஸ்டர் அவமானத்தில் கூனிக்குறுகிப்போனார். உடனடியாகவே வாடகைக்கு ஒரு வீடு பார்த்தார். வாரம் முன்னூறு டாலர்கள் என்றார்கள். மனுஷன் அசரவில்லை. ரூம் ஒன்றை வாரம் நூறு டாலர்களுக்கு வாடகைக்கு விட்டார். ரூமில் இருப்பவனுக்கு மூன்று நேர சாப்பாடு. அதில் அறுபது டாலர்கள். வாடகையை சமாளித்தாகிவிட்டது. நண்பர் ஒருவரை பிடித்து மொழிபெயர்ப்பாளர் வேலை எடுத்தார். அலெக்ஸாண்டர் அவேனியுவில் பேப்பர் போட்டார். ரமேஷின் பேச்சை கேட்டு திரும்பிப்போவதில் அவருக்கு ஆர்வம் இல்லை. என்ன ஆனாலும் வட்டக்கச்சியில் தன் பெயரில் முருகன் கோயில் கட்டாமல் திரும்பி ஊரில் காலடி வைப்பதில்லை. ஐந்தே ஐந்து வருடங்கள் தான். கட்டிவிடலாம்.

கடைசி வீட்டிற்கும் பேப்பர் போட்டுவிட்டு கனகரத்தினம் காருக்கு வந்தார். கார் லாக் செய்யப்படாமலேயே இருந்தது. உள்ளே ஏறி ஸ்டார்ட் செய்தார். கார் கர்ரேன்று உறுமியபடியே புறப்பட்டது. ஏன் என்று புரியாமலேயே மெயின் ரோட்டுக்கு காரை திருப்பினார். தாமஸ் டவுன் தாண்டிய பின்பும் கர்கர் சத்தம் நின்றபாடில்லை. என்னடா இது என்று டாஷ் போர்டை சுற்றும் முற்றும் பார்த்தார். ம்ஹூம். கொஞ்சம் கீழே பார்த்தபோது தான் ஹாண்ட் ப்ரேக் ரிலீஸ் பண்ணப்படவில்லை. மாஸ்டர் அவசர அவசரமாக பிரேக்கை ரிலீஸ் பண்ணும்போது, கார் லேன் மாறி இடது பக்க லேனுக்குள் நுழைந்ததை கவனிக்கவில்லை. திடீரென்று பின்னால் இருந்த கார் மிகப் பயங்கரமாக ஹாரன் அடித்தது. அதிர்ச்சியில் மீண்டும் கவனிக்காமல் லேன் மாற்றினார்.

“You Bloody Indian …. watch out your !@#$ing dick .. you Idiot!”

ஹாரன் அடித்த காரில் இருந்து ஒருவன் இவரை பார்த்து திட்ட, மாஸ்டர் அவமானத்தில் கூனிக்குறுகிப்போனார். அவசர அவசரமாக கார் கண்ணாடிகளை ஏற்றினார். அவமானம் தாங்கமுடியவில்லை. நான் இந்தியன் இல்லை என்று கத்தவேண்டும் போன்று இருந்தது. அவன் So What? என்று கேட்பான். என்ன பதில் சொல்வது? இது இன்றைக்கு மட்டும் இரண்டாம் தடவை. முதலில் இத்தாலிக்காரன். இப்போது இவன். ஏன் இந்த நாட்டில் இப்படி முகம் தெரியாதவனிடம் கூட ஏச்சு வாங்க வேண்டி இருக்கிறது? வட்டக்கச்சியில் இவர் சைக்கிள் தூரத்தில் வந்தாலே போதும். மாணவர்கள் எல்லோரும் தங்கள் சைக்கிள்களில் இருந்து இறங்கி வணக்கம் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் அடுத்தநாள் பாடசாலையில் அவர்களுக்கெல்லாம் முள்ளங்கால் தான். இப்போது பெற்ற மகனுக்கே ப்ளடி ஆகியாயிற்று. வெள்ளைக்காரனுக்கென்ன?

கனகரத்தினத்தின் கார் கராஜில் நுழைந்த போது முத்துநாயகி வாசலிலேயே காத்திருந்தாள்.

இஞ்சருங்க, பின்னேரம் வானதியை பார்க்க போகோணும்

இண்டைக்கு ஏலாது

அவளுக்கு ரெண்டு நாளா உடம்பு சரியில்லையாம், மேகலா தான் கால் பண்ணி சொன்னவள்

அவையளுக்கு தேவை எண்டா வாறதுக்கும் தேவையில்லை எண்டா போறதுக்கும் நாங்க என்ன …

மாஸ்டர் சொல்ல வந்ததை நிறுத்தினார்.

காலம தானே போவம் எண்டு சொன்னீங்களே, ஏன் நேரத்துக்கு ஒரு கதை கதைக்கிறீங்க?

என்ன நீ வர வர கனக்க கதைக்கிற .. You bloody bitch..…

மாஸ்டர் ஆவேசமாக திட்டும்போது முத்துநாயகி அவமானத்தில் கூனிக்குறுகிப்போனாள்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *