“என்ன சுமா, என்ன நேத்திக்கி ஷாப்பிங் போன பில்ல கீழேயிருந்தும் மேலிருந்தும் கணக்கு பாக்கற? எப்படி கூட்டினாலும் ஒண்ணாத்தான் வரபோகுது. அப்படி வச்சிட்டு வா காண்டீன் போயிட்டு வரலாம்” என்று சுமாவை அழைத்துச் சென்றள் வர்ஷா.
‘300 ரூபா இடிக்குது’ என்ற சுமாவை பார்த்து
“என்ன இன்னும் கணக்குல இருந்து வெளியவரலையா?’ என்றாள் வர்ஷா.
“இல்லடி நேத்திக்கு தள்ளுபடில தானே வாங்கினோம், ஆனா மொத்தம் அமௌன்ட் ஜாஸ்தியா இருந்துது. இப்போதான் தெரிஞ்சிது ஒரு ட்ரெஸ் ரேட்டை குறைக்காம போட்டிருக்கான். இன்னிக்கி சாயங்காலம் போய் எக்ஸ்சேஞ்ச் பண்ணனும்.” என்றாள் சுமா.
“ஏண்டி இப்படி கணக்கு பாக்கற”
“ஆமா உன்ன மாதிரி செலவு பண்ண சொல்லறியா. அப்புறம் கேக்க மறந்துட்டேன், நீ நம்ப காஷியர் சந்திரன் சார் கல்யாணத்துக்கு என்ன டிரஸ் எடுத்த?’ என்று கேட்ட சுமாவை பார்த்து
“அவர் கல்யாணத்துக்கு நான் எதுக்கு டிரஸ் எடுக்கணும். ஏற்கனவே வாங்கியிருக்கற புடவைய கட்டவே நேரமில்லை. ஆபீஸ்க்கு எப்பவும் சுடிதார், எப்பயோ வர விசேஷங்களுக்குதான் புடவை கட்டறதே. அதுனால இருக்கறதுல நல்லதா கட்டினா போச்சு. அதுவுமில்லாம யாரு நம்ப கட்டற புடவைய பாக்கபோறாங்க?” என்ற வர்ஷவை ஒரு ஜந்துவைப்போல் பார்த்தாள்.
வர்ஷவிற்கு தெரியும் எதையாவது சாக்கு வைத்து சுமா புடவைகள் மற்றும் அதற்கு தோதானதாக மற்ற அலங்கார பொருட்களை வாங்கிவிடுவாள். அனால் எல்லாவற்றிலும் கணக்கு பார்ப்பாள்.
சுமா வர்ஷவை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு சென்று முன்தினம் வாங்கிய புடவையுடன், பில்லையும் எடுத்துக்கொண்டு டீ.நகர் சென்றாள். பெயர்பெற்ற கடையினுள் சென்று முன்தினம் வாங்கிய புடவையை காண்பித்து அது தள்ளுபடி விலையில் இல்லாததை கூறி வாதிட்டு, எப்படியோ பணமாக தரமாட்டார்கள், அதனால் வேறு புடவையை எடுக்கலாம் என்று கூறியதால் வேறு நல்ல மனதுக்கு பிடித்த புடவையை தேடி கண்டுபிடித்து கூடுதலான 500 ரூபாயை தந்து கடையிலிருந்து வெற்றிகரமாக வெளியேறினாள். வர்ஷவிர்க்கு கூடுதலாக செலவு செய்த சுமாவை என்ன சொல்வது என்று தெரியவில்லை.
சந்தோஷமாக பேசிக்கொண்டே நடந்து வரும்போது கல் தடுக்கி சுமாவின் காலில் இருந்த செருப்பு அறுந்துவிட்டது. “ச்சே…போன மாசம்தான் வாங்கினது..அதுக்குல இப்படியாயிடுச்சே..” என்று சுற்றும்முற்றும் பார்த்தாள்.
சிறிது தூரத்தில் நீல வண்ண இரும்பு பெட்டிபோல் ஒரு செருப்பு தைக்கும் கடை கண்ணில் பட்டது. அதை நோக்கி காலை இழுத்துக்கொண்டே நடந்தாள். ரோட்டரி சங்கம் தன் தானதர்மத்தை பறைசாற்றும் விதத்தில் “உடல் ஊனமுற்றோருக்கான” உதவியாக அமைத்து தந்ததை காணமுடிந்தது. அங்கு ஒரு மதியவயது பெண் உட்கார்திருந்தாள். அவளருகில் ஒரு சிறுபெண் அடுத்த கடையில் இருந்தும், தெருவிளக்கிலிருந்தும் வரும் வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருந்தாள்.
எப்படியும் இன்னும் அரைமணிநேரம் கழித்து கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று சமைக்க வேண்டும். கடைக்கு விளக்கு கிடையாது, அதனால் இருட்டும்வரை இருந்துவிட்டு கடையை அடைக்க நினைத்தாள். கடைசி நேரம் வரை யாரவது வரமாட்டார்களா என்ற நப்பாசை!
அப்பொழுது அவ்வழியே ஒரு வயதான பெண்மணி கையில் ஏதோவொரு மூட்டையை தூக்கியபடி நடக்க முடியாமல் நடந்து வந்துக்கொண்டே இருந்தார். அடுத்து வரும்போது அந்த வயதானவர் பிஞ்சிபோன செருப்புடன் நடப்பது தெரிந்தது.
“மல்லி, போய் அந்த கிழவிய இட்டா..” என்று தன் மகளை ஏவினாள்.
மகள் அந்த முதியவருடன் ஏதோ பேசி கடையை நோக்கி அழைத்துவருவது தெரிந்தது. “தா நா பிஞ்சிபோனதை தெச்சி தரேன்.” என்று கூறிய பெண்ணை கண்டு “இல்ல வேண்டாம்…என்று தாங்கியபடி கூறியவரை பார்த்தபோதே தெரிந்தது… பொருளாதாரத்தில் சமம் என்று.
அங்கிருந்த ஆடிக்கொண்டிருந்த ஒற்றை ஸ்டூல்லில் அமருமாறு கூறி “நீ ஒன்னும் பைசா தர வேண்டாம்”
அந்த செருப்பை எவ்விதத்திலும் தைக்கவே முடியாது, பலமுறை அறுவைசிகிச்சை நடந்ததன் அடையாளம் தெரிந்தது. உடனே கடையின் உட்புறம் இருந்த பையை எடுத்து தருமாறு தன் மகளிடம் கூறினாள்.
அப்பையில் பழைய செருப்புகள் ஜோடிஜோடியாக இருந்தது. பழையது என்றாலும்கூட அணிந்துக்கொண்டு நடக்க முடியும், நீண்டகாலம் உழைக்கும். அதில் இருந்து ஒரு ஜோடி செருப்பை எடுத்து “இந்தா இத போட்டு காட்டு” என்று கூறினாள்.
அம்முதியவர் அணிந்து காட்ட அது சரியாக இருந்தது “என்னாண்ட ரூபா இல்லை…வேண்டாம்” என்று மறுத்தவரிடம்
“பரவாயில்லை போட்டுக்க.. சும்மா இருக்கறது தரேன்…என்னோட அம்மான்னா தரமாட்டேனா?’ என்று கேட்ட பெண் உண்மையாகவே தன் மகளைப்போல அம்முதியவரின் கண்ணீர் நிறைந்திருந்த கண்களுக்கு தோன்றியது.
“நல்லா இருக்கணும்…இந்தா” என்று தன் மூட்டையில் இருந்த பொறிஉருண்டையை எடுத்து மல்லியிடம் தந்து விடைபெற்றார்.
இதுவரையில் நடந்தவற்றைப் பார்த்துக்கொண்டே இருந்தனர் சுமாவும் வர்ஷாவும். அதன்பின் சுமா
“இந்தாமா, இத தெச்சிக்குடு.. எவ்வளவு ஆகும்” என்று கேட்ட சுமாவிடம்
“அஞ்சி ரூபா தாங்க” என்ற பெண்ணை பார்த்து
“என்னது இத்துனூண்டு தெக்கரதுக்கு இவ்வளவா? மூணு ரூபா தரேன்” என்ற சுமாவை பார்த்தாள்.
இப்பொழுது விற்கும் விலைவாசிக்கு தான் கேட்பதே மிகவும் குறைவு.. இந்த வருமானத்தில் தான் குடும்பம் போற்றவேண்டும். கணவன் என்ற தறுதலை ஏதாவது டாஸ்மாக் கடை வாசலில் மிதந்தபடி இருப்பான். என்ன செய்ய..
“சரி தாங்க” என்று செருப்பை சரிசெய்ய துவங்கினாள். சுமாவிற்கு தன் பேரத்தின் மீது பெருமை.
வர்ஷவோ சுமாவை ஏதோவொரு அற்பப்புழுவை போல் பார்த்தாள். அவளின் பார்வை சுமாவை ஏதாவது செய்தா விடும்?
சுமா வர்ஷவை அழைத்துச்சென்றவுடன் அவள் தந்து சென்ற மூன்று ரூபாய் அப்பெண்ணை பார்த்து சிரித்தது.
அவர்கள் அந்தப்பக்கம் போனவுடன் தன் மகளின் உதவியுடன் கடையை அடைத்து, அங்கிருந்த கைச்சக்கரவண்டியின் பின்னால் தன் மகளின் புத்தக மூட்டையை வைத்ததும் அங்கிருந்த உதவிபுரிந்த தலைவரின் மங்கி, உதிர்ந்துபோயிருந்த படம் மறைந்தது, மகளுடன் பேசிக்கொண்டே கையால் வண்டியை மிதித்துக்கொண்டு தங்கள் வீடு நோக்கி சென்றனர், நாளைய விடியலை எதிர்நோக்கி !!!