கணக்கில் தர்மமும், தர்மத்தில் கணக்கும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 19, 2024
பார்வையிட்டோர்: 592 
 
 

“சேகர், ஹலோ சேகர் ஒன் மினிட்.”

“இன்னிக்கும் கோட்டை விட்டாச்சா?” கேட்டுக் கொண்டே வந்தாள் சரஸ்வதி. 

சரஸ்வதி ராமநாதனின் மனைவி. ராமநாதன் சென்னையில் புறநகரில் உள்ள லட்சக்கணக்கான சராசரிக் குடும்பஸ்தரில் ஒருவர்.  இவருக்கு தியானம், தோட்டத்தை சீர்படுத்துதல், மனைவி பாடுவதை ரசித்துக் கேட்டல் தவிர வேறு எதுவும் கிடையாது.   

சேகர் அந்நத ஏரியாவில் பால் போடுபவர். வயது 40. அவர் சுமார் 10 வருஷமாக பால் போட்டு வருகிறார். அனாவசிய பேச்சு  கிடையாது. தீபாவளி, பொங்கல் எந்த பண்டிகைக்கும் இனாம் கேட்டு நிற்பது கிடையாது. அவரது வாடிக்கைக்காரர்களுக்கு பால் கார்டு வாங்குகிறாரா? எப்போது வாங்குகிறார்? எப்படி வாங்குகிறார்?  தெரியாது. 10-ஆம் தேதி பணம் வாங்க வருவார். அவ்வளவுதான். மற்றபடி பால் கவர் அவரவர்கள் வீட்டு வாசலில் மாட்டியிருக்கும் பைகளில் எந்தவித பிரச்சினையும் இன்றி கிடக்கும். மழை, வெயில் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை. 

“என்ன சொன்னே”- ராமநாதன் கேட்டார். 

“இன்னிக்கும் தவற விட்டுட்டீங்களான்னு கேட்டேன்”. 

“சே நான் தவறவிடவில்லை”. 

“நான் கரெக்டா தான் கொடுத்து வந்தேன். ஒரே தடவை நீ கொடுத்தே, சிக்கலாயிடுத்து”. 

“நான் கவனிக்கல்லே. அவன்தான் காலில் கஞ்சி கொட்டிகிட்ட மாதிரி பறந்துட்டே வர்றான். பணத்தை வாங்கிண்டு பறந்து போய் விட்டான். நான் கூட பாக்கி ஐந்து ரூபாய் தரணும்னு கத்திண்டே இருந்தேன். காதில் வாங்கிக் கொண்டால் தானே.” சரஸ்வதி தன் பாட்டுக்கு புலம்பினார். 

கல்யாணம்- விசேஷ நாட்கள் பண்டிகைகள்  நாட்கள் ஓடி இதோ அடுத்த மாதம் பணம் கொடுக்கும் நேரம் வந்து விட்டது. சேகர் பணம் வாங்க வரவில்லை.  

அவரது தம்பி சொந்தக்காரர் ஒருவருக்கு விபத்து ஆகி  உடனே பெங்களூர் போக வேண்டிதாகி விட்டது. 

பெங்களூர் வந்தவுடன் தான்  பணம் கொடுக்காதது பற்றியும்,  பால் போடவேண்டாம் என்று சொல்ல மறந்ததும் ஞாபகத்திற்கு வந்தது. 

“அவனுக்கு போன் பண்ணி சொல்லி விடுங்கள்”  

“நானும் போன் பண்ணிக்கொண்டு இருக்கேன். எடுத்தால் தானே?.”  

“சார். நான் போய் வருகிறேன்.உதவி தேவைப்பட்டால் எப்போ வேணாலும் சென்னை  வரலாம்”  நான் வர்றேன். 

“என்ன 6.30 மணி ஆகிவிட்டது. இன்னும் பால் வர்லே ” சரஸ்வதி மாமி. ராமநாதனிடம் மெதுவாக ஆரம்பித்தார். 

“நேற்று நைட் தானே வந்திருக்கோம். நான் போய் பால் வாங்கிண்டு வர்றேன்.” 

அடுத்த நாளும் பால் வரவில்லை. 

ராமநாதன் பால் வாங்கி வந்தார். 

அடுத்த நாள்  காலை சேகர் அடுத்த வீட்டுக்கு பால் போடும் போது பிடித்து விட்டார். 

“என்ன சேகர். பணமும் வாங்கிக்கவில்லை. பால் என்ன ஆச்சு” கேட்டார். 

“உங்களுக்கும் எனக்கும் சரிப்படாது சார். நான் பால் போடறதா இல்லை.”  பறந்து விட்டான். 

“சரி. நீ இதை முன்பே சொல்லியிருக்கலாம். பரவாயில்லை. நான் வேறு  ஏற்பாடு பண்ணிக்கிறேன்”. 

“சரஸ்வதி – சேகர் நம் வீட்டிற்கு பால் போட மாட்டானாம்”. 

“எத்தனை வருஷமா போட்டுக் கொண்டு இருந்தான்.  கணக்கு கேட்டது தப்பா?” 

“அதை விடு. எதிர் வீட்டிற்கு ராமு பால் போடறான். நான் அவர்கிட்டே சொல்லிட்டேன். நாளைலேருந்து ராமு போடுவான்.” 

அடுத்த நாள் ராமு பால் போட்டான். சார் தினமும் காசு கொடுத்துடுங்க சார். கார்டு வாங்கற டயம் போயிடுத்து. அடுத்த மாதம் கார்டு வாங்கிடலாம்.” 

ஆனால், இது இரண்டு நாளுக்கு மேல் ஓடவில்லை. 

ராமு “சார் மன்னிச்சிடுங்க. என்னாலே பால் போட முடியாது. நீங்க வேறு ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ளுங்க” சொல்லிவிட்டான். 

ராமநாதனுக்கு விஷயம் ஒருவாறு புரிந்து விட்டது. 

சேகர் பால் போடறவங்க எல்லாருக்கிட்டேயும் சொல்லி விட்டான். சேகரிடம் திரும்பப் போய் கெஞ்சி பால் போடச் சொல்வதை தவிர வேறு வழியில்லை. 

அதற்கு அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. 

அடுத்த நாள் காலையில் சேகரைப் பிடித்து சேகர் “நீ பால் போடலைன்னா பரவாயில்லை. என் பேரிலே கார்டு இருக்கு. அதை நீ வைத்துக்கொண்டு இருக்கே. அதைக் கொடுத்து விடு”. 

“அதெல்லாம் ஒண்ணும் கொடுக்கிறதுக்கு இல்லே.” 

ராமநாதன் விடுவதாக இல்லை. நேரே போலீஸ் ஸ்டேஷன் போனார். 

“வாங்க சார். நான் என்ன செய்யணும்?” இன்ஸ்பெக்டர் விசாரித்தார். 

“எனக்கு வழக்கமாக பால் போடற பையனுடன் கணக்கில் சிறு தகராறு. பாலும் போட மாட்டேன்கிறான். கார்டும் தர மாட்டேன்கிறான்.” 

“நான் அவனை பால் போடச் சொல்லவா?”  

“வேணாம், கார்டு வாங்கிக் கொடுத்தால் போதும்” ராமநாதன் சொன்னார். 

“சரி சார். நீங்க போங்க நான் ஏற்பாடு பண்ணறேன்” 

சேகர் ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தான். 

“ஐயா வணக்கம்”. அப்போது வந்த இன்ஸ்பெக்டரை வணங்கினான். 

“நீ யாருப்பா? என்ன விஷயம்?” 

“சார். என் பெயர் சேகர்.பால் போடறவன்”. 

“ஓ. நீயா. அந்த பெரியவரிடம் என்னப்பா தகராறு? 

“கணக்கில் ரூ.5/- கூட வாங்கிட்டேனாம். மல்லுக்கு நிற்கிறார்”. 

“எத்தனை வருஷமா பால் போடறே?” 

“10 வருஷமா”. 

“10 வருஷமா பிரச்சினை வரவில்லையா?” 

“வரவில்லை. வராது. அவர் சுத்தமாக எண்ணி வைத்து விடுவார்.” 

“இப்போ எப்படி வந்தது?” 

“அம்மா கொடுத்தாங்க.  நான் பேலன்ஸ் ரூ.5/- தரணும்னு சொல்றார். ஞாபகமில்லை.” 

“சரி கார்டு அவர் பேர்ல இருக்கா?” 

“இருக்கு.” 

“ஏன் தரமாட்டேன்னு சொல்றே. நீ என்ன பெரிய பிஸ்தாவோ? கவர்ன்மெண்ட் கொடுத்த கார்டை நீ யாரு வைச்சுக்கிறது.” 

“கொடுத்திடறேன்”. 

“இன்னிக்கு சாயந்திரம் கொடுத்திட்டு அவர்கிட்டே போன் பண்ணச் சொல்லு.” 

“சரி சார்.” 

மாலை 5.30 மணிக்கு காலிங் பெல் கேட்டு ராமநாதன் வந்து கதவைத் திறந்தார். 

“நீ யாருப்பா?”புதிதாய் நின்று கொண்டிருந்த பையனைப் பார்த்துக் கேட்டார். 

“சார். நான் ரஜினி, பால் போடற சேகர் பையன்”. 

“என்ன வேணும்?” 

“அப்பா இந்த கார்டை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னார். நீங்க இன்ஸ்பெக்டருக்கு போன் பண்ணுவீங்களாம்”. 

“சரி. தாங்க்ஸ்னு அப்பா கிட்ட சொல்லிடு.”  

ராமநாதன் தினமும் காலை பால் பூத்துக்கு சென்று பால் வாங்கி வந்து கொண்டிருந்தார். 

“சரஸ்வதி! மார்னிங் வாக்கிங் ரொம்ப நல்லா இருக்கு.” 

“சரி. உங்களுக்கு திருப்தின்னா எனக்கும் திருப்தி தான். பால் வந்தா சரி.” 

ரஜினி நீ 10-வது பரீட்சையில் பள்ளியில் இரண்டாம்  இடமாக வந்திருக்கே. வெரிகுட். நாம் வழக்கம் போல ஆண்டு விழா நிகழ்ச்சியில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு தருவோம். நீயும் அப்பாவை கூட்டி வா. 

பள்ளி ஆண்டு விழா வழக்கமான கோலகலத்துடன் நடந்து கொண்டிருந்தது. 

ஹெட்மாஸ்டர் சிறப்பு விருந்தினர் மந்திரியை வரவேற்றார். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற முடிந்தன. 

ஹெட்மாஸ்டர் பின்பு பேசும்போது, “நமது பள்ளியில் 10-வது, +2 வகுப்பில் முதல் இரண்டு மாணவர்களுக்கு கடந்த 4 வருஷமாக நமது ஏரியாவைச் சேர்ந்த திரு. ராமநாதன் அவர்கள் ரூ.5,000/- 3000 பரிசு அளித்து வந்திருக்கிறார். விழாவிலேயும் கலந்து கொள்ளமாட்டார். அவர் பெயரையும் சொல்லக்கூடாது என்பார்.  இந்த வருஷம் அவருக்கு  75 வயது பூர்த்தியானதை ஒட்டி நான் அவரை மிகவும் வற்புறுத்தி அவரையும் அவரது துணைவியாரையும் அழைத்து வந்திருக்கிறேன்”என்று முடித்தார். 

மாணவர்கள் கரகோஷம் செய்து வரவேற்றார்கள்.  

ராமநாதன் அவர் மனைவியுடன் மேடைக்கு வந்தார். மந்திரி அவரைப் பாராட்டினார். சிறிய உதவிக்கு பெரும் விளம்பரம் மிகுந்த உலகத்தில் பெரிய உதவிக்கு விளம்பரத்தை விரும்பாதவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு திரு. ராமநாதன் ஒரு உதாரணம். அவர் ஒன்றும் பெரிய பணக்காரர் அல்ல. உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும்.  

ரஜினி பரிசைப் பெற்றான். ஆசி வாங்கினான். 

“ஏன் அப்பா இவர் கிட்டதான் நான் பால் கார்டு கொடுத்தேன்.  ஒரு கஞ்சன் அப்படி இப்படின்னு சொன்னே. வருஷத்துக்கு ரூ.16,000/- தருகிறார். அப்படி ஒன்றும் பெரிய பணக்காரர் மாதிரி தெரியவில்லை. வீட்டிலே ஒரு சைக்கிள் மட்டும் தான் நான் பார்த்தேன்.” 

“சரிதாண்டா ரஜினி. நீ சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை. நான் கூட அவரைத் தப்பா புரிந்து கொண்டேன்”. 

மறுநாள் காலை 8.00 மணிக்கு ராமநாதன் காலிங்பெல் கேட்டு கதவை திறந்தார். 

எதிரில் சேகர் தன் பையன் ரஜினியுடன் நின்று கொண்டிருந்தான். 

“சார் என்னை மன்னிச்சுக்கங்க. நான் தவறாக நடந்து கொண்டு விட்டேன்”. 

“என்னப்பா. என்ன சொல்றே” நிதானமாய் கேட்டார். 

“என்ன சார். நான் உங்களுக்கு பால் போட்டு கொண்டிருந்தவன். நாளையிலிருந்து நான் பால் போடறேன் சார்.” 

“வேணாம் சேகர்.  காந்தி தினமும் கணக்கு எழுதுவார். சரியாகவில்லை என்றால்  தூங்கமாட்டார்.  அது கணக்கில் தர்மம். 

ஆனால், தர்மத்தில் கணக்கு பார்க்கக் கூடாது தர்மம் செய்யும் போது என்ன கிடைக்கிறது என்று கணக்குப் பார்க்கக் கூடாது.  எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது. அதனால் வருவதையும் எடுக்கக் கூடாது. நான் அதனால் என் பெயர் வராமல் பார்த்துக் கொண்டேன்.  ஆனால், இந்த சமயம் ஏனோ இது மாதிரி ஏற்பட்டு விட்டது. 

கணக்கில் தர்மம் –   ஒரு பைசா விடக்கூடாது. 

தர்மத்தில் கணக்கு –  ஒரு பைசா பெறக்கூடாது. 

வாழ்க நலமுடன்” – வழி அனுப்பினார். 

பெரிய மனிதர் பெரிய மனிதர்தான். சேகர் வாய் முணுமுணுத்தது. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *