(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்த பிளாக்கின் ஒன்பதாவது மாடியில் மின்தூக்கிகளுக்கு வலப்புரம் அந்த சிறிய வளைவில் சுவற்றில் பதிந்து நின்ற குப்பைத் தொட்டியின் சதுர வாயிக்கருகில் குற்றுயிரும் குலையுயிருமாய் அலங்கோலமாய் கிடக்கிறது அக்கட்டில்! அதன் உடல் உறுப்புகள் அக்கக்காய் கழற்றப்பட்டு அங்கே குவிக்கப்பட்டிருக்கிறது. மனிதன் உறங்குவதற்கும்… இளைப்பாறுவதற்கும் உதவும் கட்டிலை அதே மனிதன் அதை உணர்ச்சியற்ற மரக்கட்டை’ என்றும்… ‘ஐடப்பொருள்’ என்றும்… எவ்வளவு ஏளனமாக கூறுகிறான். அவனது பாரத்தை நாற்றத்தை பொறுமையோடு அது தாங்கிக் கொள்வதனால்தானே அதுக்கு இந்த இழிச்சொல்! கட்டிலை படைப்பவன் மனிதன்! அந்த மனிதனிடம் போய் கட்டில் தன் வேதனையையும் வெறுப்பையும் காட்ட முடியுமா? நன்றியுணர்வால் கட்டில் பொறுமையோடு இருப்பதால்தானே அதை அவன் ‘உணர்ச்சியற்ற மரக் கட்டை’ என்று நா கூசாமல் கூறுகிறான். கட்டில் , உணர்ச்சியற்ற மரக்கட்டைதான்! ஆனால் மனிதனைப்போல் சூதுவாது நிறைந்ததல்ல; நன்றி மறந்ததுமல்ல!
அதோ! குப்பைத் தொட்டிக்கருகில் உருக்குலைந்துக் கிடக்கும் அந்தக் கட்டில் தன் எஜமானனுக்கும் எஜமானிக்கும் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து தேய்ந்திருக்கிற்து. அதன் மடியில் சாய்ந்தவுடன் ‘நித்திரா தேவி’ ஓடி வந்து அணைத்துக் கொள்வதாகக் கூறி அதனை பெருமைப்படுத்தி வந்த அதே மனிதன்தான்… எஜமான்தான் இன்று அதை அலங்கோலப்படுத்தி குப்பைத் தொட்டிக்கருகில் தூக்கியெறிந்துவிட்டு போயிருக்கான்! நன்றி மறந்தவனின் செயலைக் கண்டுதான் கட்டில் ஆராத் துயரத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. தனக்கு இப்படிப்பட்ட ஓர் இழிநிலை ஏற்படும் என்று அந்த கட்டில் சிறிதும் எதிர்பார்க்கவில்லை! இரு மாதங்களுக்கொரு முறை ‘டெட்டால்’ கலந்த வெந்நீரில் அதனை குளிப்பாட்டி வெய்யிலில் அதன் உடலை உலரவைத்து… வார்னீஸ் பூசி அதன் உடலை பளபளக்க வைத்து வந்த எஜமான்தான் இன்று தன் மனைவியின் சொல்லுக்கு செவி சாய்த்து…. இங்கே கொண்டு வந்து போட்டுவிட்டான்; இங்கு கொண்டு வந்து போடும் அளவுக்கு அதுக்கென்னா… எய்ட்ஸ் நோயா. இல்லையே…! பிறகு? அது மிகமிக சிறிய விஷயம்தான்! முன்னங்கால் வலக்கால் கொஞ்சம் ஆட்டங்கண்டு விட்டதாம்! முன்னங்கால் ஆட்டம் கண்டால் கட்டில் உபயோகமற்றதாய் ஆகிவிடுமா? நாலு அங்குல ஆணியை எடுத்து ஆடும் இடத்தில் பதித்து ஆணியின் தலையில் சுத்தியால் நங்…! நங்! என்று சாத்தினால் ஆடிய கால் உறுதியாக நிற்குமே! அதை விடுத்து இப்படியா அலங் கோலப்படுத்தி குப்பைத் தொட்டிப்பக்கம் வீசுவது? பாவம் கட்டில்…. அவமானத்தால் கொதித்து போய் நிற்கிறது.
“நங்!” எனும் ஒலி! தொடர்ந்து சல… சல ‘வென ஏதோ உதிரும் ஒலி! அவமானத்தால் கொதித்துப்போய் புலம்பிக் கொண்டிருந்த கட்டில்… விளித்துக் கொள்கிறது. அதன் வலப்புறம் அந்த குப்பைத் தொட்டியின் அகல வாயிக்கருகே ஒருவன் ஓர் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை அலட்சியமாக தூக்கியெறிந்துவிட்டுப் போகிறான். அவனது பொறுப்பற்ற செயலைக் கண்டு கட்டிலின் முகம் கருக்கிறது. சிதறிக்கிடக்கும் கண்ணாடித் துண்டுகளை அது வெறித்து நோக்குகிறது. ‘அடப்பாவி! எவ்வளவு பெரிய ஆபத்தை அவன் தூவிட்டுச் செல்கிறான். சிதறிக்கிடக்கும் கண்ணாடித்துண்டுகள் அங்கு குப்பைக் கொட்ட வருவோரின் பாதங்களை பதம் பார்த்துவிடுமே…! தம் குடும்ப உறுப்பினர்களும் இங்குதான் குப்பைக்கொட்ட வருவார்கள் என்பதை ஏன் அந்த மூடன் அறியவில்லை! பகுத்தறிவுள்ள மனிதன் சில சமயங்களில் பகுத்தறிவை பயன்படுத்த மறந்துவிடுகிறானே!’ என்று எண்ணி முகம் சுளிக்கும் கட்டில்.. உருக்குலைந்து கிடக்கும் அந்த முகம் பார்க்கும் கண்ணாடியை அனுதாபத்தோடு நோக்குகிறது; மறுகணம் அதிர்ச்சியால் அது தாக்கப்படுகிறது. அந்தக் கண்ணாடியில் பிரதிபலிக்கும் தன் உருவத்தை அது விரக்தியோடு நோக்குகிறது. “கடவுளே! இது நானா? நானா…நானா இந்தக் கோலத்தில்? அந்த மனிதனது வீட்டுப்படுக்கை அறையில் எவ்வளவு கம்பீரமாக அமர்ந் திருந்தேன். எனக்கு வலப்புரம் நின்றிருந்த அந்த பெரிய நிலக்கண்ணாடியில் என் கம்பீர தோற்றத்தைக் கண்டு மனம் பூரித்து நின்றேனே…! ஓர் கால் ஆடுகிறது என்பதற்காக கொஞ்சங்கூட நன்றி விசுவமில்லாது என் அழகாக உடலை அக்கக்காய் கழற்றி எடுத்து வந்து இங்கே போட்டு விட்டானே பாவி மனிதன்!’ தன் வயிற்றெரிச்சலை அது கொட்டுகிறது.
‘டக்…! டக்! டக்…!’ மனிதனது காலடியோசை, மின் தூக்கியை நோக்கிதான் ஓசை வருகிறது . யாரோ மின் தூக்கியை பயன்படுத்தப் போகிறார்கள் போலிருக்கு! கட்டிலின் விழிகள் மின்தூக்கியின் பக்கம் சாய்கின்றன. ஓர் கிழிந்த ‘தோல் பையை’ தோளில் மாட்டிக்கொண்டு ஒரு பரட்டைத் தலையன் உறும்பிக் கொண்டும் இரும்பிக் கொண்டும் மின் தூக்கியின் பக்கம் வருகிறான். காலைக் குளியல் அவனிடம் கிடையாது என்பதை அவனது முகத்தோற்றம் தெளிவுப்படுத்துகிறது. தலையை சொறிந்துகொண்டு வரும் அந்த பரட்டைத் தலையனின் சிவந்த விழிகள் கட்டிலை நோக்குகின்றன; விழிகளால் அவன் கட்டிலை ‘எடை’ போடுகிறான். கழன்றுக்கிடக்கும் கட்டிலின் ஒவ்வொரு பகுதியையும் அவனது விழிகள் பிதுக்கிப் பார்க்கின்றன.
‘இவன் ஏன் என்னை இப்படிப் பார்க்கிறான்? ஒரு வேளை இவன் எங்களை உருவாக்கும் தச்சனாக இருப்பானோ? அப்படிதான் இருக்க வேண்டும்! இவன் என்னை பார்ப்பதைப் பார்த்தால்… என்னை அள்ளிக் கொண்டுபோய் என் அவயங்கைள ஒன்றிணைத்து எனக்கு புது வாழ்வு கொடுக்க நினைக்கிறானோ? அவன் விழிகளால் ஆராய்வதைப் பார்த்து கட்டிலின் மனதில் சபலம்! “ஹிங்…! ஹிங்…! கெக்…கெக்…கெல்ப்…ப்!கெல்ப்ப்! ஹாக்!! ஜலக்! ஜலக்….! ஜலக்! அந்த பரட்டைத் தலையனின் தொண்டைக் குழிக்குள்ளிருந்து பலவித இசைக்கூறுகள் அலைமோத கட்டில் வியப்போடு அவனை நோக்குகிறது. தொண்டைக் குழிக்குள் பலவித இசைக்கூறுகளை அலைமோத விட்டுக் கொண்டிருந்த அந்த பரட்டைத் தலையனின் முகம் இஞ்சித் திண்ண குரங்குப்போல் கோணல் மாணலாக… கட்டில் சுதாரித்துக் கொள்கிறது. அவனது விழிகள் சுற்றும் முற்றும் நோக்குகின்றன அவனது கள்ளப்பார்வையை கட்டில் திகிலோடு நோக்குகிறது. இவன் அபிநயம் பிடிப்பதைப் பார்த்தால்… நம்மீது காறி உமிழப் போகிறானா? கட்டிலின் இதயத்தில் கேள்வி எழுந்து அடங்கும் முன்… ‘ப்பூ! என்று ஓர் கனகடூரமான ஓசை… ஒலி… பரட்டைத் தலையனிடமிருந்து எழுந்து வர ‘சப்!’பென்று… ஏதோ ஈரமான ஒன்று அதனது நெற்றியில் பதிந்து ஒழுகுகிறது. இனம் புரியா வாடை… நாற்றம் வயிற்றை குமட்ட, வெருப்போடு அவனை நோக்குகிறது கட்டில்!
‘கண்ட இடங்களில் எச்சிலை துப்பாதீர்கள்’ என்று நமது அரசாங்கம் அறைகூவல் விடுத்தும் இவனைப் போன்ற சில சமுதாய தொற்றுநோய்கள் நினைத்த இடங்களிலெல்லாம் துப்பி தொலைக்கத்தானே செய்கின்றனர். இவன் துப்பி தொலைப்பதற்கு நான்தானா கிடைத்தேன்; இவன் நாசமாய் போக!’ வெறுப்போடு அவனை சபிக்கிறது கட்டில்!
அவனோ எதையும் கண்டுகொள்ளாத மின் தூக்கியின் நெற்றியில் தன் பார்வையை பதித்து நிற்கிறான். மின் தூக்கியின் நெற்றியில் வரிசைப்பிடித்து நிற்கும் எண்களில் ஒளிக்கீற்றுகள் தலைக்காட்டுகின்றன. இஸ்… ஸ்… டங்!… கீர்ர்… ர்ர்றீச்…! மின் தூக்கியின் கதவுகள் திறக்க அவனது விழிகள் மீண்டும் பரபரப்போடு கட்டிலை நோக்குகின்றன. அவனது ‘தூங்கு மூஞ்சி முகம்’ மீண்டும் கோணலாகுகிறது. ‘கொக்… ! கொக்!கொர்க்…! கொர்ர்… க்!… ப்பூ!!’ பலமாக உறும்பி… இரும்பி கட்டிலை குறிவைத்து அவன் துப்புகிறான். ‘சப்!’ என்று ‘சளி ‘ அதன் முகத்தில் பதிய கட்டில் ஆடிப்போகிறது! அதன் மீது ஓர் அலட்சிய பார்வையை வீசிவிட்டு … மின்தூக்கியில் பரட்டைத்தலை நுழைய… மின் தூக்கி கட்டிலின் பார்வையிலிருந்து அவனை மறைத்துக் கொள்கிறது. பொது இடங்களில் விருப்பம் போல் எச்சில் துப்பும் இவனைப் போன்றோர் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் சட்டத்தின் கரங்களில் குட்டுப்படுவது உறுதி! கட்டில்தான் முணு முணுத்துக் கொள்கிறது.
கிறீச்…! புறுச்…! கித்ச்… புறுச்! ஆம்! மூன்று சக்கர சைக்கிள் வண்டியின் ஓசை! அந்த சைக்கிள் வண்டியின், கிறீச்… புறுச்! ஓசைக்கு மேலும் மெருகூட்டுவது போல் ‘ஹாய்! ஊய்…! ஏய். ஹா… !ஹா! ‘ என்று குழந்தைகளின் கூச்சல். சிரிப்பு! அதோ! மூன்று குழந்தைகள்…. மூவருக்கும் நாலைந்து வயதுதானிருக்கும்! ஓர் மூன்று சக்கர சைக்கிளை தள்ளிக் கொண்டும் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டும் வருகின்றனர். சிகப்பு நிற ‘டி’ சட்டை அணிந்திருந்த குழந்தையின் குண்டு விழிகள்….கட்டிலை உற்று நோக்குகின்றன; அக்குழந்தையின் கண் இமைகள் வண்ணாத்துப் பூச்சியின் சிறகுகளைப்போல படபடக்கின்றன. ஏதோ… காணாததை கண்டுவிட்ட மகிழ்ச்சியில் அக்குழந்தை துள்ளிக் குதிக்கிறது.
“ஹாய்!! அங்கே பாரு ! கட்டிலு !” மற்ற இரு குழந்தைகளுக்கும் கட்டிலை அது சுட்டிக் காட்டுகிறது. மற்ற இரு குழந்தைகளின் விழிகளும் கட்டிலை ஆர்வத்தோடு நோக்குகின்றன.
“ஆமா…! கட்டிலு! ‘சிஸோ’ மாதிரி…யில்லே! அதிலே ஏறி விளையாடலாமா?” மஞ்சள் நிற சட்டையணிந்த குழந்தை வினா கொடுக்க… சைக்கிளை ‘அம்போன்னு’ போட்டுவிட்டு மூன்று குழந்தைகளும் கட்டிலை நோக்கி ஓடுகின்றனர். கட்டில் அதிர்ச்சியோடு அவர்களை நோக்குகிறது; இந்தக் குழந்தைகள் என்னை நோக்கி ஓடிவருவதைப் பார்த்தால் என் மீது ஏறி விளையாடப் போகிறார்கள் போலல்லவா இருக்கிறது; நான் நல்ல நிலையில் முழுத் தோற்றத்தில் இருந்தால்… இவர்களின் சின்னஞ்சிறு கால்கள் என்மீது படப்போவதைக் கண்டு மகிழ்ந்திருப்பேன். ஆனால் நான் இப்போது இருக்கின்ற நிலையில் எப்படி இக்குழந்தைகளை என் மீது ஏறி விளையாட அனுமதிப்பேன்? ஆனால்… உணர்ச்சியற்ற மரக் கட்டையான என்னால் எப்படி இக்குழந்தைகளை தடுத்து நிறுத்த முடியும்? கடவுளே! நான் என்னா செய்வேன்? என் அங்கங்கள் அக்கக்காய் கழன்று உடைப்பட்டுக் கிடக்கும் இந்நிலையில் இக்குழந்தைகள் என் மீது ஏறி விளையாட நினைக்கிறார்களே! ‘இதோ….! கழன்றுக்கிடக்கும் என் கால்களில் நீட்டிக் கொண்டிருக்கும் இந்த கூர்மையான ஆணிகள்… அக்குழந்தைகளின் பிஞ்சு பாதங்களை பதம் பார்த்துவிடுமே! ஆணிகளின் பார்வையில் நின்று குழந்தைகளின் பாதங்கள் தப்பினாலும் எமனின் பார்வையில் நின்று அவர்கள் தப்பிக்க முடியாதே! இந்த நாலடி உயரமுள்ள மதிச்சுவரில், இரண்டடி உயரத்தை நான் பிடித்துக் கொண்டு நிற்கிறேன்; மீதமுள்ள இரண்டடி உயரம்… என் மீதேறி… குதித்து விளையாட என்னும் குழந்தைகளுக்கு “பாதுகாப்பு அரணாக அமையுமா? ஒன்பதாவது மாடியிலிருந்து குழந்தைகள்… கீழே விழுந்தால்… குழந்தைகளின் கதி? பொறுப்பில்லா மனிதனின் செய்கை குழந்தைகளின் உயிருக்கு எமனாக அமைந்துவிட்டதே! கடவுளே! நீதான் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற வேண்டும்! கட்டில்தான் பிள்ளைகள் எதிர்நோக்கும் ஆபத்தைக் கண்டு மனம் களங்குகிறது; ஓடிவந்த குழந்தைகள் சுவற்றில் சாய்ந்து கிடக்கும் கட்டிலின் முதுகிலேறி சறுக்கி விளையாட தயாராகுகின்றனர்; கட்டில் கலங்கிப்போய் நிற்கிறது.
சிகப்பு வண்ண ‘டி’ சட்டை அணிந்திருந்த குழந்தையின் விழிகள் கீழே குப்பைத் தொட்டிக்கருகில் எதையோ உற்று நோக்குகின்றன. அங்கே ஓர் தகர டப்பா! அந்த தகர டப்பாவைதான் குழந்தைகளின் விழிகள் விழுங்குகின்றன. தன் கீழ் உதட்டை பற்களால் அழுத்தியபடி அக்குழந்தை தன் தலையை மேலும் கீழும் ஆட்டுகிறது. அதன் விழிகளிலே குறும்புத்தனம் கொப்பளிக்கிறது; ஆம்! அதுகுறும்புத்தனம் செய்ய ஆயத்தமாகிவிட்டது. கட்டிலின் முதுகிலிருந்து ‘சர்’ரென்று சறுக்கி இறங்கிய குழந்தை கண் இமைக்கும் நேரத்தில் தகர டப்பாவை எடுத்துக் கொண்டு மீண்டும் கட்டிலின் முதுகிலேறி நிற்கிறது. ‘இந்தக் குழந்தை தகர டப்பாவை என்னா செய்யப் போகிறது? கட்டில்தான் அச்சத்தோடு அக்குழந்தையை நோக்குகிறது. தகர டப்பாவை வலக்கையில் ஏந்தியபடி அக்குழந்தை கீழே எட்டிப்பார்க்கிறது.
“கலா! இந்த டப்பாவை கீழே போடட்டா? “ கீழே குறிபார்த்தபடி அந்தக் குழந்தை வினா தொடுக்க, கட்டில் ஆடிப்போகிறது ‘ஐயோ! வேண்டாம்! டப்பாவை கீழே போட்டுடாதே!” கட்டில்தான் அக்குழந்தையின் செயலை தடுத்து நிறுத்த கூச்சல் போடுகிறது. ஆனால் கட்டிலின் கூச்சல்… குழந்தையின் செயலை தடுத்து நிறுத்திடவா போகிறது; ; கட்டிலுக்குத்தான்…. குரல் இல்லையே!
“வேணாம் மீனா! யாரு தலையிலேயாவது பட்டால்… தலை உடைஞ்சிடும்! ரத்தம் வரும்…! ஆம்புலன்ஸ் வரும்! அப்புறம் போலீஸ்…காரங்க வந்து உன்னை பிடிச்சிட்டு போயிடுவாங்க…! ஜெயிலிலே போட்டுடுவாங்க!” மற்றொரு குழந்தை அந்தக் குழந்தையை எச்சரிக்க அந்த தகர டப்பாவை அக்குழந்தை மீண்டும் குப்பைத் தொட்டிப் பக்கமே வீசுகிறது; கட்டிலின் முகம் மலர்கிறது.
“ஹாய்! நல்லாயிருக்கு….! ஹாய் நல்லாயிருக்கு!” என்று மகிழிச்சியோடு கூச்சலிட்டுபடி குழந்தைகள் கட்டிலின் முதுகிலேறி சறுக்கி விளையாட ஆரம்பிக்கின்றன.
‘டிக்…! டிக்… !கிறிச்…! கிறிச்! காலணிகளின் இன்னிசை! மின்தூக்கியை உபயோகிக்க யாரோ வருகிறார்கள் எண்பதை சொல்லாமல் சொல்லுகின்றன. குழந்தைகளின் மீது பதிந்திருந்த கட்டிலின் விழிகள் மெல்ல மின்தூக்கியின் பக்கம் நகருகின்றன. ஆங்கிலப் பட கதாநாயகனைப்போல் வாட்டசாட்டமாக கோட்டும் சூட்டுமாய் ஒரு இளைஞன் அவனை ஒட்டி உரசிக் கொண்டு ஒரு நவநாகரீக நங்கை! இருவருக்கும் நல்ல பொருத்தம்! நிச்சயம் இவர்கள் காதலர்களாக இருக்க முடியாது! கணவன் மனைவியாகத்தான் இருக்க வேண்டும்! மை தீட்டிய அந்நங்கையின் ‘கயல்விழிகள்’ கட்டிலின் முதுகை படம் பிடிக்கின்றன.
“டார்லீங்! அங்கே பாருங்க! எவனோ உடைந்துப்போன கட்டிலை சுவரோரமாய் போட்டுட்டு போயிருக்கான்! அந்த சின்னப் பிள்ளைங்க…. அதுலே ஏறி விளையாடிக்கிட்டிருக்காங்க! கீழே விழுந்தால் என்னா ஆகும்? ‘இளங்கன்று பயமறியாது’ என்று பெரியவங்க சும்மாவா… சொல்லியிருக்காங்க்! அங்கே பாருங்க! டார்லிங்!” அந்த நவநாகரீக நங்கைதான் தன் கணவனிடம் கட்டிலில் ஏறி விளையாடும் குழந்தைகளை சுட்டிக்காட்டுகிறாள். அந்த இளைஞனின் விழிகள் கட்டில் பக்கம் சாய்கின்றன. சுவற்றில் சாய்ந்துக் கிடக்கும் கட்டிலையும் அதில் ஏறி சறுக்கி விளையாடும் குழந்தைகளையும் கண்டு அவனது சிரித்த முகம் கருக்கிறது; நெற்றி சுருங்க அவனது விழிகள் குழந்தைகளை பற்றுகின்றன.
“ஹலோ! அங்கே என்னா செய்யுறீங்க…? விளையாடினது போதும்! போங்க வீட்டுக்கு! என்னா… பார்க்கிறீங்க? அங்கிள் சொல்லுறது காதுலே விழலே? உம்! போங்க வீட்டுக்கு! சீக்கரம், போங்க!’ ‘ அந்த இளைஞனிடமிருந்து கனிவான அதட்டல் பிறக்கிறது. தங்களை மறந்து குஷியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் சிறுவிழிகள் அந்த இளைஞனின் முகத்தை வட்டமிடுகின்றன.
“என்னா பார்க்கிறீங்க? சீக்கிரம் போங்க!” இம்முறை அந்த இளைஞனிடமிருந்து அதட்டல் பிறக்கிறது. குழந்தைகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொனள்கின்றனர்; விழிகளால் பேசிக் கொள்கின்றனர்.
“ஏய்! அந்த ஆளு நம்மை… ஏசுராரு! வாங்க ஓடிடலாம்!” என்று சுருட்டை முடி குழந்தை கூவ… மூன்று குழந்தைகளும் ‘சர்’ ரென்று கட்டிலின் முதுகிலிருந்து இறங்கி சைக்கிளைக் கூட எடுத்துக் கொள்ளாது விழுந்தடித்துக் கொண்டு ஓடுகின்றனர்.
“பாவம்! குழந்தைங்க உண்மையிலேயே பயந்துடுச்சிங்க! பாவம்! விழுந்தடித்துக் கொண்டோடும் குழந்தைகளைக் கண்டு, அந்நங்கை அனுதாப வார்த்தைகளை கொட்டுகிறாள்.”
“எவனோ வாழைப்பழ சோம்பேறி ; உடைஞ்ச கட்டிலை கீழே கொண்டு போய் போடாமே… இங்கே போட்டுட்டு “போயிருக்கான்! முன்பின் யோசிக்காத அவன் படிக்காத முட்டாளாகத்தான் இருக்க வேண்டும்….! இடியட்!” வெறுப்பு கலந்த கோபம் அந்த இளைஞனின் முகத்திலே தலைக்காட்டுகிறது. கட்டிலின் பக்கம் சாய்ந்திருந்த அவனது விழிகள் மின்தூக்கியின் பக்கம் நகருகின்றன.
“இந்தக் கட்டில் இங்கே இப்படி கிடக்கிறது ஆபத்துங்க! ஏதோ நாம பார்த்ததாலே… மிரட்டியதாலே குழந்தைங்க பயந்து ஓடிட்டாங்க! இப்போ நாம போனப்பிறகு… அந்த குழந்கைளோ வேறு குழந்தைகளோ இந்தக் கட்டிலிலே ஏறி விளையாட மாட்டாங்கங்கிறது என்னாங்க நிச்சயம்? அப்படி இந்த கட்டில் மேலேறி அவங்க விளையாட ஆரம்பிச்சால்? ஐயோ! நினைச்சுப் பார்க்கவே பயமாயிருக்குங்க!” தன் மனதுள் எழுந்த அச்சத்தை தன் கணவனிடம் விவரிக்கிறாள் அந்நங்கை; அந்த இளைஞனின் உதடுகள் புன்னகை பூக்கின்றன.
“நீ கவலைப்படாதே மேரி! இந்தக் கட்டிலை இங்கிருந்து அகற்ற நா ஏற்பாடு செய்கிறேன்!” தன் மனைவிக்கு ஆறுதல்… வார்த்தைகளை கூறிய அவ்விளைஞன் தன் கைப்பையிலிருந்து கையடக்க தொலைபேசியை எடுத்து தன் காதில் பதித்துக் கொள்கிறான்.
“ஓகே… மேரி! சொல்லிட்டேன்! இன்னும் அரைமணி நேரத்துலே இந்தக் கட்டிலை இங்கிருந்து அகற்றிடுவாங்க! இப்போ உனக்கு திருப்திதானே?” அவளது வலக் கன்னத்தை அவன் செல்லமாக தட்ட அவளது கன்னம் சிவக்கிறது. ‘டர்ர்ர்க்!’மின் தூக்கியின் கதவு திறந்து அவர்களை அழைக்கிறது, அந்த நல்ல தம்பதியினர் மின் தூக்கிக்குள் நுளைந்து மறைகின்றனர். பொறுப்பற்றவர்கள்… சுயநலவாதிகள் இவர்களுக்கிடையில் பொறுப்புள்ளவர்களும்.. பிறர்நலம் பேணுபவர்களும் இருக்கத்தானே செய்கின்றனர். இன்னும் சற்றுநேரம் அந்த கட்டில் அங்கே இருக்குமானால் அதன் தலையிலேயே குப்பைகளை கொட்டிவிட்டுப் போய் விடுவார்கள் சில கிறுக்கு மனிதர்கள்! நல்ல வேலையாக அந்த நல்ல மனிதர்கள் கட்டிலை அங்கிருந்து அகற்றுவதற்கு ஏற்பாடு செய்துவிட்டான். இன்னும் அரைமணி நேரத்தில் கட்டில் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிடும்’ என்று..அந்த படித்த மனிதன் தன் மனைவியிடம் கூறியதை கட்டிரும் செவிமெடுத்துவி ட்டது. அதன் முகத்தில் மகிழ்ச்சி தான்டவமாடுகிறது. ஓடும் மீன் ஓட உரு மீன் வரும்வரை காத்து நிற்கும் கொக்கைப் போல அந்த குப்பைத் தொட்டிக்கருகிலிருந்து தன்னை தூக்கிச்செல்லப் போகும் ஆட்களை கட்டில் ஆவலோடு எதிர்பார்த்து நிற்கிறது.
இஸ்க்!… இஸ்க்!… காலடியோசை! காலணியணியாத கால்களின் நடையோசை! .. அந்த மின் தூக்கிக்கு அருகில் இரண்டாம் மூன்றாம் வீட்டுப்பக்கமிருந்துதான் காலடியோசை எழுந்து வருதிறது. யாரோ குப்பைக் கொட்ட வருகிறார்கள் போல் தெரிகிறது. ஆம்! நடைப்பாதை பளிச்சென்று சுத்தமாக இருப்பதால் அருகில் வசிப்போர் குப்பைத்தொட்டியை நாடிவரும்போது, பெரும்பாலும் காலணிகள் அணிவதில்லை ஆரஞ்சு வண்ணத்தில் காலர் இல்லாத பனியனும் கருப்பு வண்ண அரைக்கால் சிலுவாருடன் எளிய தோற்றம்… அழகிய முகத்தோடு ஏர் பிலிப்பினோ பணிப்பெண்… இளம் வயது பெண்தான்… காலணி இல்லாமல் ஒய்யாரமாக நடந்து வந்துக் கொண்டிருக்கிறாள்! அவளுடைய வலக்கையில் ஓர் சிறிய குப்பைக் கூடை! இடக்கையில் இரு காலி பிளாஸ்டிக் எண்ணெய் பாட்டில்கள்; அவற்றை குப்பைத் தொட்டிக்குள் போடத்தான் அவள்.. வந்து கொண்டிருக்கிறாள். குப்பைத் தொட்டியை நோக்கி ‘அன்னநடை பயின்று வந்த அந்தப் பெண்ணின் விழிகள் சுவற்றில் சாய்ந்துக் கிடக்கும் கட்டிலின் முதுகை ஆர்வத்தோடு நோக்குகின்றன. அவளது இமைகள் படபடக்கின்றன. தன் வலக்கரத்தில் பிடித்திருந்த குப்பைக் கூடையை தரையில் வைத்துவிட்டு கட்டிலின் முதுகை மெல்ல அவள் தட்டித்தடவி பார்க்கிறாள். பருவப் பெண்ணின் கைப்பட்டதும் கட்டிலுக்கு ஒரே பரவசம். கழன்றுக்கிடக்கும் தனது உருண்டு திரண்ட கால்களை அவள் ஆர்வத்தோடு பார்ப்பதைப் பார்த்து கட்டிலுக்கு ஒரே மகிழ்ச்சி! அந்த பிலிப்பினோ பணிப்பெண் தன்னை தூக்கிக் கொண்டுப் போய் பயன்படுத்திக் கொள்ளப் போகிறாள் எனும் நம்பிக்கை அதனுள் தலைதூக்க அந்தப் பெண்ணை அது ஏக்கத்தோடு நோக்குகிறது. இந்த இளம் பெண்ணை சுமக்கும் பாக்கியம் மட்டும் எனக்கு கிடைத்தால்? அதனது உள்ளம் முணுமுணுக்க ஏக்கப் பெருமூச்சு அதனிடமிருந்து வெளிப்படுகிறது. கழன்றுக்கிடக்கும் கட்டிலின் பாகங்களை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அந்த பிலிப்பினோ பணிப்பெண், ‘ஈ….ஈ… நீ….!” என்று சிணுங்கியபடி ஏதோ அருவருக்கத்தக்க காட்சியை கண்டுவிட்ட தோரணையில் ஈரடி பின் வாங்குகிறாள். அந்த பெண்ணின் செய்கை கட்டிலுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. ஆசையோடு தன்னை நெருங்கி வந்தவள்… ஏன் இப்போது வெறுப்போடு நோக்குகிறாள்? எனும் கேள்வி அதன் உள்ளத்தை குடைய… அது விரக்தியோடு அந்த பணிப்பெண்ணை நோக்குகிறது. வெறுப்பை விழிகளில் ஏந்தி நின்ற அந்தப் பணிப்பெண் சுற்றும் முற்றும் ஓர் முறை தன் பார்வையை சுழலவிடுகிறாள். மறுகணம் குப்பைக் கூடையை தூக்கி அதிலுள்ள குப்பைகளை கட்டிலின் தலையில் கொட்டிவிட்டு வேகமாக அங்கிருந்து நகருகிறாள். அவளது செய்கை கட்டிலை வெட்கி தலைகுனிய வைக்கிறது. குப்பைத் தொட்டி அருகில் இருக்கும்போது ஏன் அந்தப் பணிப்பெண் தன் தலையில் குப்பைகளைக் கொட்டிச் சென்றாள்? என்பதை கட்டிலால் அறிந்து கொள்ளமுடியவில்லை! சற்று நேரத்துக்கு முன்பு பரட்டைத் தலையன் சிந்தி வீசிய சளியும் காறியுமிழ்ந்த எச்சிலும் கட்டிலின் நெற்றியில் காட்சியளித்ததைக் கண்டுதான் அப்பணிப்பெண் அருவருப்போடு குப்பைகளை அதன் மேல் கொட்டிவிட்டுச் சென்றாள். பாவம்… கட்டில்! இந்த மனித ஜென்மங்களால் இன்னும் என்னென்ன அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்குமோ? என்று எண்ணி அஞ்சி கண்களை இறுக மூடிக் கொள்கிறது. ஆனால் செவிகளை மட்டும் அது கூர்மையாக்கிக் கொள்கிறது.
அதோ! நாலைந்து இளைஞர்கள்… தள்ளுவண்டியுடன் மின்தூக்கியிலிருந்து வெளிப்படுகின்றனர். “இந்த பிளாக்தான்! ஒன்பதாவது மாடிதான்! எங்கே…? கட்டில்! ஹீம்! ஆ…! அதோ! அந்த ‘டஸ்பின் கிட்டே கிடக்குது!’ ஓர் முரட்டு மீசைக்காரன்தான் கட்டில் கிடக்கும் இடத்தை சுட்டிக்காட்டுகிறான். மறுகணம் மற்ற மூன்று இளைஞர்களும் அதன் மீது பாய்ந்து குண்டுக்கட்டாக கட்டி அந்த தள்ளுவண்டிக்குள் கொண்டுபோய் போடுகின்றனர். தள்ளுவண்டிக்குள் தள்ளப்பட்டக் கட்டில் மெல்ல கண்களை திறக்கிறது. தன்னைச் சுற்றி நிற்கும் இளைஞர்களை அது கலக்கத்தோடு நோக்குகிறது. ‘யார் இவர்கள்? என்னை எங்கே கொண்டு செல்ல போகிறார்கள்? ஒருவேளை… என்னை சிறு துண்டுகளாக்கி அடுப்பெரிக்க பயன்படுத்திக் கொள்ளப்போகிறார்களா? அப்படித்தான் இருக்கும்!’ கட்டில்… தனக்குள் தானே பேசிக் கொள்கிறது. ‘டிஸ்…!’ அந்த முரட்டு… மீசைக்காரன்தான் கட்டிலின் முதுகில் பலமாக குத்துகிறான். கட்டில் விழி பிதுங்கி நிற்கிறது; முரட்டு மீசைக்காரனின் முகம் மலர்கிறது.
“ஜான்! வெரிகுட்! நல்ல உறுதியான பலகை! தேக்கு மர பலகைப்போல் இருக்கிறது. இந்தக் கட்டில் நல்ல விலைக்கு போகும்! அந்த முரட்டு மீசை ஆசாமிதான்… கட்டிலுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறான். கட்டிலின் முகத்தில் பிரகாசம்! ‘அப்படியானால் நான்…. நெருப்பில் வெந்து சாம்பலாகப் போவதில்லையா? எனக்கு மீண்டும் ஓர் வாழ்வா?’ இன்ப பெருமூச்சு அதனிடமிருந்து வெளிப்படுகிறது. ஆனால் அதனையும் அறியாது அதன் இதயத்தில் சஞ்சலம் புகுந்து கொள்கிறது. மனிதன் பொல்ல்தவன்! நன்றி மறப்பவன்! சுயநலவாதி! நினைத்ததை சாதிக்க எதையும் செய்யக்கூடியவன். அதன் மனம் முணுமுணுக்கிறது. விரக்தி சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு; எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்று எண்ணியபடி தன் விழிகளை இறுக மூடிக் கொள்கிறது.
‘கடபுட…கடபுட….! கிறீச்….! கிறீச்! கடபுட… கடபுட’ தள்ளுவண்டி சக்கரங்களின் முக்கள் முனங்கள் கட்டிலின் செவிகளை குத்த தான் எங்கோ கொண்டு செல்லப்படுவதை அது உணர்ந்து கொள்கிறது. ‘கிறீச்…! கி. .றீச்..கி…றீ…ச் தள்ளுவண்டியின் வேகம் மெல்ல மெல்ல குறைகிறது; வண்டி நிற்கிறது லொ….டக்! ….டக்! கிர்ர்ரிரிச் கதவு திறக்கப்படும் ஓசை!
“டேய்! அதோ! அந்த மூலையிலே வைக்கணும்! தூக்குங்கடா…! பார்த்து ஆணி குத்திடப் போகுது!” முரட்டு மீசைதான் எச்சரிக்கை செய்கிறது. நாலைந்து கரங்கள் ஒன்றிணைந்து கட்டிலை தூக்கி ஓர் மூலையில் வைக்கின்றனர். ‘என்னா நடக்கப் போகிறதோ?’ எனும் கலக்கத்தில் கட்டில் ஒன்றரைக் கண்ணால்… ரகசியமாக அவர்களை கவனிக்கிறது.
“சரி! வாங்கடா! போகலாம்! மறந்துடாமே… கதவை நல்லா பூட்டுங்கடா! அன்னைக்கு மாதிரி எவனாவது வந்து நம்ப ஜாமான்களை… தூக்கிட்டு போயிடப் போறானுங்க! முரட்டு மீசை அறிவுரை வழங்க கிர்ர்ர்ச்! லொடக்! கதவு பூட்டப்படுகிறது; காலடியோசைகள் மெல்ல மறைகின்றன; கட்டிலும் தைரியமாக அந்த இடத்தை நோட்டமிடுகிறது. பெரிய கூடாரம் போல் காணப்பட்ட அந்த இடத்தை அது வியப்போடு நோக்குகிறது. காலில்லா கட்டில்கள்…. கையில்லா நாற்காலிகள் முதுகு உடைந்த அலமாரிகள்…. கிழிந்த மெத்தைகள் காதில்லா பானைகள் சக்கரமில்லா சைக்கிள்கள் முகமில்லா… தொலைக்காட்சிப் பெட்டிகள்… இன்னும் எத்தனையோ ஊனமுற்ற பொருட்கள் அங்கு சோகத்தோடு அமர்ந்திருக்கின்றன.
“அண்ணே ! நீங்க புதுசா?” இன்னைக்குதான் வந்தீங்களா? ஓர் காலில்லா நாற்காலிதான் கட்டிலை அன்போடு விசாரிக்கிறது. விழிகளில் பூத்த புன்னகை பூக்களை நட்புக்கடையாளமாக அதன் மீது வீசுகிறது கட்டில்!
“ஆமாம்….! நண்பா ! பதினைந்து வருஷமாய் என் முதுகிலே சொகுசாக படுத்துறங்கிய பாவிதான்… எனது வலக்கால் ஆடுகிறது என்பதற்காக கொஞ்சங்கூட நன்றியில்லாமே என்னை அலங்கோலப்படுத்தி குப்பைத் தொட்டிப் பக்கம் தூக்கி எறிஞ்சிட்டான்!” தன் வயிற்றெரிச்சலை அந்த நாற்காலியிடம் கொட்டுகிறது கட்டில். அந்த காலில்லா நாற்காலி விரக்தியோடு.. சிரித்துக் கொள்கிறது.
“இங்கே கிடக்கிறவங்க எல்லாம், தூக்கியெறியப்பட்டவங்க தாண்ணே! கையோ… காலோ கொஞ்சம் ஆடினால் போதும் உடனே தூக்கியெறிஞ்சிடுவாங்க இந்த நன்றி கெட்ட மனுஷனுங்க! ஓர் காலில்லா நாற்காலியும் விரக்தியோடு வார்த்தைகளை கொட்டுகிறது. கட்டிலின் விழிகள் காலில்லா நாற்காலிகளையும் கட்டில்களையும் அனுதாபத்தோடு நோக்குகிறது.
“கையோ காலோ ஆடினால் நாலு இஞ்சு ஆணியை எடுத்து ஆடுகிற இடத்துலே வைச்சு சுத்தியாலே அதன் தலையிலே நங்கு…! நங்கு!ன்னு நாலு வாங்கு வாங்கினால்… எல்லாம் சரியாகிவிடும்! அதை விட்டுட்டு சோம்பேறித் தனத்தால் நம்மை தூக்கி எறிஞ்சுடுறாங்களே பாவிங்க! மீண்டும் கட்டில், புலம்புகிறது; தன் எஜமான் செய்த அக்கிர மத்தை அதனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை! மனம் வெதும்பி நிற்கும் கட்டிலை அர்த்தத்தோடு நோக்குகிறது காலில்லா நாற்காலி.
“என்னாண்ணே நீங்க! இந்த உலகத்தைப் பத்தி புரிஞ்சுக்காமே இருக்கீங்க! இது அவசரகால உலகம் அண்ணே ! இந்த அவசர கால உலகத்துலே அவங்களை கவனிச்சுக்கவே… அவங்களுக்கு நேரமில்லை! இந்த லட்சணத்திலே… ஆடுகிற நம்ப கை… கால்களை கவனிச்சு சரி செய்ய அவங்களுக்கு எங்கெண்ணே … நேரமிருக்கு? நம்ப உறுப்புகளில் ஒண்ணு கொஞ்சம் மக்கர் செஞ்சாலே போதும். உடனே வெளியிலே தூக்கி போட்டுட்டு, புதுசா ஒன்னை வாங்கிப் போட்டுடுறாங்க! நம்ப முன்னோருங்க இருபது முப்பது வருஷம் உழைச்சாங்க! நீண்ட ஆயிலோடு வாழ்ந்தாங்க! ஆனா இன்னைக்கு, இந்த நவநாகரிக மனுஷனுங்க நம்ப ஆயுசையே குறைச்சிட்டாங்க! நவநாகரிக மனிதர்களின் செய்கையை நாற்காலி சாடுகிறது! கட்டிலின் விழிகள் மீண்டும் ஓர்முறை அந்த கூடாரத்தை வலம் வருகின்றன. அதன் விழிகளிலே கேள்விக்குறி; அது என்ன இடம்? என்பதை அதனால் அறிந்து கொள்ள முடியவில்லை! திருவிழாவில் காணாமல் போன குழந்தையைப் போல் கட்டில் விழித்துக் கொண்டு நிற்பதைக் கண்டு நாற்காலி தனக்குள் சிரித்துக் கொள்கிறது.
“என்னாண்ணே ! ஏதாவது… டவுட்டா?” நாற்காலிதான் வினா தொடுக்கிறது.
“ஆமாம் தம்பீ! நம்ப மாதிரி உடல் உருப்பு ஊனமானவர்களை இங்கே கொண்டு வந்து போட்டு வச்சுருக்காங்களே… இது என்ன… மரச்சாமான்கள் மருத்துவமனையா?” அது என்ன இடம்? என்பதை அறிந்துக்கொள்ள, கட்டில் ஆவலோடு கேட்கிறது. கட்டிலின் கேள்வி நாற்காலியை கிச்சிகிச்சி மூட்டுகிறது. அது கட்டிலை ஏற இறங்கப் பார்க்கிறது.
“இதை மருத்துவமனைன்னு சொல்ல முடியாது…ண்ணே! ‘புனர்வாழ்வு நிலையமுன்னு’ வேணுமுன்னா சொல்லலாம்” நாற்காலியின் கூற்று கட்டிலுக்கு வியப்பை அளிக்கிறது.
“புனர்வாழ்வு நிலையமா? என்னா? தம்பீ சொல்லுறே?”
“ஆமாம்…ண்ணே! உண்மையிலேயே பார்க்கப் போனால் இதை புனர்வாழ்வு நிலைய முன்னுதான் சொல்லணும்! ஏன்…னா… ஊனமுற்று நிக்கிற நமக்கு… புது வாழ்வு அளிக்கிற இடமாய் இது விளங்குது. நாற்காலி புதிர் போடுது; கட்டிலின் விழிகள் மீண்டும் வண்ணாத்தி பூச்சியின் இறகுகளாகி படபடக்கின்றன.
“புது வாழ்வுங்கறே! புனர் வாழ்வுங்கறே!…எனக்கு ஒண்ணுமே புரியலே தம்பீ! கொஞ்சம் விளக்கமாய் சொல்லு!” மீண்டும் அது வினவுகிறது.
“அண்ணே ! மரச்சாமானுங்க செஞ்சி விக்கிற கடைங்களிலேயிருந்து ஆளுங்க அடிக்கடி… இங்கே வருவாங்க…ண்ணே!”
“மரச்சாமானுங்க செஞ்சி விக்கிற கடைங்களிலிருந்தா?” ஏன்? வியப்பு மேலிட கட்டில் நாற்காலியை நோக்குகிறது.
“எல்லாம் விஷயமாகத்தான்…ணே! மனுஷனுங்களைப் பத்திதான் உங்களுக்கு தெரியுமே! சுயநலவாதிங்க! பணத்துக்காக எதையும் செய்வாங்கன்னு! அர்த்தப் புன்னகையோடு கட்டிலை நோக்குகிறது… நாற்காலி; கட்டிலின் முகத்துலே கலக்கம்! அதை புரிந்து கொள்கிறது நாற்காலி!
“நீங்க பயப்படாதீங்க…ண்ணே! நா சொல்ல வந்த விஷயமே வேறே…! புதுசா மரத்தை வாங்கி அதுலே கட்டிலோ மேசையோ நாற்காலியோ செஞ்சி வித்தால்… அதுலே கிடைக்கிற லாபம் கொஞ்சம்தாணே! ஆனா ஊனமுற்றுக் கிடக்கிற நம்பளை வாங்கிட்டுப்போயி… நம்ப ஊனத்தை அகற்றி வார்னீஸ் அடிச்சு… நம்ப மேனியை பளபளப்பாக்கி புத்தம் புது தோற்றத்தில் நம்மை விற்பனைக்கு வைச்சால்… அதுலே கிடைக்கிற லாபம் அதிகம்ண்ணே !” நாற்காலி சொல்லி முடிக்க கட்டில், சிதறிய சலங்கை ஒலியை போல கலகலவென்று சிரிக்கிறது. அந்த சிரிப்பின் அர்த்தத்தை அறிந்து கொள்ள
முடியாது நாற்காலி தவிக்கிறது; அதன் தவிப்பைக் கண்டு மனதுக்குள் சிரித்துக் கொள்கிறது கட்டில்!
“லாபம் கிடக்கட்டும் தம்பீ! மனுஷனை மனுஷனே ஏமாத்துற விந்தையை பார்த்தால்… சிரிப்புதான் வருது! உயர் பிறவி என்றும் பகுத்தறிவாளன் என்றும் தன்னைத்தானே போற்றிக் கொள்ளும் மனிதன் தனக்குத்தானே குழியையும் வெட்டிக் கொள்வது வினோதமாக இல்லே?’ கட்டிலின் கூற்றை ஆமோதிப்பதுபோல முகபாவனைக் காட்டிவிட்டு ஓர் நமட்டுச் சிரிப்பை அள்ளி வீசுகிறது நாற்காலி.
“எப்படியோ…ண்ணே! நாம மீண்டும் வாழறதுக்கு ஓர் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிற அந்தக் கடைகாரங்களுக்கு நாமே நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம்” என்று நாற்காலி கூற அதன் கூற்றை புன்னகையோடு ஏற்றுக்கொள்கிறது கட்டில்!
“உண்மைதான் தம்பீ! பதினைந்து வருஷமாய் நா உழைச்சதைப் பற்றி கொஞ்சங்கூட நினைச்சுப் பார்க்காமே… கால் ஆடுதுங்கிற காரணத்துக்காக அநியாயமாய் என்னை குப்பைத் தொட்டிப்பக்கம் தூக்கியெறிஞ்சான் என் எஜமான். அப்போது நான் பட்டப்பாடு அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்! ‘இதோடு நம்ப அத்தியாயம் முடிஞ்சிருச்சி! நம்மை எரித்து சாம்பலாக்கிவிடுவாங்க என நினைச்சு நடுங்கிக்கிட்டிருந்தேன்; நல்லவேளை கடவுள் காப்பாத்திட்டாரு! தம்பி… நீ சொல்லறது நிஜம்தானே? நாமே மீண்டும் வாழுறதுக்கு வாய்ப்பிருக்கில்லே? அச்சம் கலந்த தோணியில் தயக்கத்தோடு கேட்கிற கட்டில்! கட்டிலின் உள்ளத்தில் கலக்கம் தேங்கி நிற்பதை அறிந்து அதன் மீது அனுதாப பார்வையை வீசுகிறது… நாற்காலி.
“கவலைப்படாதீங்க…ண்ணே! இங்கே வந்தவர்களுக் கெல்லாம் மறுவாழ்வு கிடைச்சுருக்கு! உங்களுக்கும் நிச்சயம் மறுவாழ்வு கிடைக்கும் ஆனா… கொஞ்சம் பொறுமையாய் இருக்கணும்; அதோ! அந்த அலமாரி அண்ணனை பாருங்க! பார்க்க எவ்வளவு அழகாய் இருக்காரு! அவரு இங்கே வந்து நாலு மாதங்களுக்கு மேல் ஆகுதாம்! இன்னும் மறுவாழ்வு கிடைக்கலே! அதுக்காக அது சோர்ந்துடலே … ண்ணே! நம்பிக்கையோடு காத்துருக்கு! வெற்றிக்கு நம்பிக்கைதானே முக்கியம்; அதோ! அந்த மேசை… அந்த சாய்வு நாற்காலி… அந்த அலமாரி எல்லாமே இங்கு வந்து மூணு மாதங்களுக்கு மேல் ஆகுது; எல்லாமே நம்பிக்கையோடு காத்திருக்குங்க! ஏன்….. என்னையே… எடுத்துக்குங்க! வந்து ஆறு மாதங்கள் ஆகப்போவுது! இன்னும் நம்பிக்கையோடு காத்திருக்கேன்! ஆனா நேற்று காலையிலே உங்க மாதிரி ஓர் கட்டில் ஓர் காலில்லாமல் வந்துச்சு. அதுக்கு வந்த அதிர்ஷ்டம்… அன்னைக்கு மாலையிலேயே அதை வாங்கிட்டு போயிட்டாங்க! நம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது, அதிர்ஷ்டமும் துணை நிக்கணும் அண்ணே !” நாற்காலியின் கூற்றை ஜீரணித்துக் கொள்கிறது கட்டில். கட்டிலிடம் சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்த நாற்காலி சட்டென்று தன் பேச்சை முறித்துக் கொண்டு தனது பார்வையை அந்த பெரிய இரும்புக் கதவின் பக்கம் நழுவவிடுகிறது. தனது செவி களை அது கூர்மையாக்கிக் கொள்கிறது. கிறீச்ச்…. டூர்… டூர்ர்… டூர்’ ஓர் லாரி உரும்பும் ஒலி அந்த இரும்புக் கதவு களுக்கு பின்னால் வெளிப்புறம்! நாற்காலியின் விழிகள்… அந்த இரும்புக் கதவுகளை துளையிட முயலுகின்றன.
லாரியின் உறுமல் மெல்ல தனிய… ‘டிக்… டக்… டக்டாக்’ என்று காலடியோசைகள்… லாரியிலிருந்து இறங்கி வாசலை முற்றுகையிடுகின்றன.
“அண்ணே! கட்டில் அண்ணே! நான் சொன்னது போல அதிர்ஷ்ட தேவதை வாசலிலே வந்து நிற்கிறா…ண்ணே! இன்னிக்கு யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறதோ? நாற்காலி தான் துள்ளி குதித்தபடி கூவுகிறது. அதன் கூவல், கட்டிலின் பார்வையை வாசலுக்கு இழுக்கிறது. ‘லடக்!’ பூட்டு திறக்கப்படும் ஓசை! டிர்ர்ர்க்! வாசற்கதவு வாயை திறக்கிறது. நாலைந்து தலைகள் உள்ளே அக்கூடாரத்தின் உள்ளே நுழைய, நாற்காலியின் முகமெல்லாம பல்லாகிறது. இரு சீன முதியவர்களோடு அந்த முரட்டு மீசை ஆசாமி தன் சகாக்களோடு உள்ளே நுழைகிறான்.
“அண்ணே ! அங்கே பாருங்க…ண்ணே! அதோ! அவங்கதான் அந்த சீன முதியவர்கள்தான், ஊனமுற்று நிக்கிற நமக்கு புனர் வாழ்வு கொடுக்கிற புண்ணியவானுங்க! இது நாள் வரை எத்தனையோ பேருக்கு புனர்வாழ்வு கொடுத்திருக்காங்க! இன்னைக்கு யாருக்கு புது வாழ்வு கிடைக்கப் போகுதோ? ஏக்கப் பெருமூச்சு விட்டப்படி கட்டிலின் காதில் ஓதுகிறது நாற்காலி! கட்டிலின் விழிகள் அந்த சீன முதியவர்களை ஆரத்தழுவிக் கொள்கின்றன. கடவுளே! என் எஜமான்தான் என்னை கைவிட்டுட்டான்! நீயும் என்னை கைவிட்டுடாதே! தனக்கு புது வாழ்வு கிடைக்க அருள் புரி! இறைவனிடம் கட்டில் சரணடைகிறது.
அதோ! அந்த முரட்டு மீசை ஆசாமி அங்குள்ள பொருட்களை அந்த சீன முதியவர்களுக்கு சுட்டிக்காட்டிக் கொண்டு வருகிறான். ஒவ்வொன்றையும் அச்சீன முதியவர்கள் தட்டித்தடவி தரத்தை ஆராய்ந்து பார்க்கின்றனர். மரச் சாமான்களைப் பற்றிய நுணுக்கத்தில் அவ்விருவரும் கைதேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்! அந்த முகமில்லா அலமாரியை அவர்களுக்கு பிடித்து விட்டது. அந்த முரட்டு மீசையோடு ஒரு வழியாக… பேரம் பேசி முடிக்க… அந்த அலமாரியை தூக்கிட்டு போயி தவுக்கேயோட லாரியிலே வையுங்க!’ என்ற முரட்டு மீசை ஆணையிட வேலையாட்கள் அந்த அலமாரியை அங்கிருந்து நகர்த்துகின்றனர். அதைக்கண்டு நாற்காலி வாயிலும் வைத்திலும் அடித்துக் கொள்கிறது.
“அவனுக்கு வந்த வாழ்வை பார்த்திங்களா? நேத்துதான் வந்தான். இன்னைக்கு புது வாழ்வை தேடி கிளம்பிட்டான்! எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேணும். அண்ணே!” நாற்காலி புலம்புகிறது. அதன் புலம்பலை கேட்கும் நிலையிலா கட்டில் இருக்கிறது; பாவம் கட்டில்! அது கதிகலங்கிபோய் நிற்கிறது; அந்த சீன முதியவர்களுக்கு தன் மீது கருணை பிறக்காதா…ன்னு ஏங்கி நிற்கிறது. அந்த முரட்டு மீசை ஆசாமி கட்டிலை சுட்டிக்காட்டி அவர்களிடம் ஏதோ விவாதம் செய்கிறான். கட்டில் அதை கவனிக்க தவறவில்லை ; அதன் உள்ளத்தில் ஒரே படபடப்பு! ஏதோ சிரித்து பேசியபடி கட்டில் பக்கம் அந்த சீன முதியவர்களை… முரட்டு மீசை அழைத்து வர கட்டிலுக்கு இன்ப அதிர்ச்சி; கட்டிலை தட்டித் தடவி பார்த்த முதியவர்களின் முகத்திலே திருப்தி புன்னகை; முகமலர்ச்சியோ அந்த சீன முதியவர்கள் ‘கட்டை விரலை’ உயர்த்திக் காட்ட… கட்டிலின் முகத்திலே… வெற்றி புன்னகை!
அதோ! கட்டில், முகமில்லா அலமாரியோடு புது வாழ்வை நோக்கி அந்த லாரியில் பயணம் செய்கிறது.
– புது அப்பா!, முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்