கடைவாய் பல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 2, 2021
பார்வையிட்டோர்: 3,308 
 
 

குளிரூட்டப்பட்ட அந்த அரங்கத்தில் உள் புறத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் அமைதியாக திரையை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.திரையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த மேடையில் “மைக்” அருகில் நின்று கொண்டு ஒரு இளைஞன்

அந்த திரையில் நடமாடிக்கொண்டிருந்த “என்னை” பற்றி விளக்கி கொண்டிருந்தான்.

இந்த திரையில் காண்பிக்கப்படும் நபர் நடுத்தர மக்களை சேர்ந்த ஒருவர்

இவரின் முகத்தை மட்டும் மறைத்துள்ளேன்.

இதுவரை ஒரு “மைக்ரோ போனை” வெளியில் எங்கு வைத்தாலும், அவைகள் நமக்கு “ஒலியிலோ”, அல்லது “ஒளி வடிவத்திலோ” வேறொரு இடத்திலிருந்து பார்க்க முடியும். இந்த முறையில்தான் இதுவரை நமது விஞ்ஞானத்தில் முயற்சி செய்திருக்கிறோம்.உளவு சம்பந்த பட்ட வேலைகளிலும் பயன்படுத்தி இருக்கிறோம்.

என்னுடைய கண்டுபிடிப்பு என்பது உடலின் எந்த இடத்திலும் மைக்ரோ போன் பொருத்தி விட்டாலும் அதற்கு அளிக்கப்பட்டிருக்கும் அதீத சக்தியால் பொருத்தப்பட்ட நபர் எங்கு இருக்கிறார்?என்ன செய்கிறார்? அவருடன் யார் யார் இருக்கிறார்கள் என்பதை ஒளி ஒலி வடிவங்களில் துல்லியமாக காண்பித்து விடும். அப்படி முயற்சி செய்து உருவாக்கப்பட்டதுதான் இப்பொழுது இந்த திரையில் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது. இந்த கண்டு பிடிப்பு நமது உளவு துறைக்கு கண்டிப்பாய் பயன் படும் என்று நம்புகிறேன்.

மூன்று நாட்களாய் தாடையின் வலது புறம் தாங்க முடியாத பல் வலி, பல பேர் பலவித வைத்தியங்கள் சொல்லி அதன்படி என்ன என்னமோ மாத்திரைகள், மருந்துகள் போட்டு பார்த்து விட்டேன், ஒன்றும் கேட்கிற மாதிரி தெரியவில்லை. கடைசியாக சரி நம் நடுத்தர மக்களின் வழக்கப்படி (அதாவது நாமே எல்லா வைத்தியமும் பார்த்து விட்டு வேறு வழியில்லாமல் கடைசியாகத்தான் மருத்துவரை பார்ப்பது) மருத்துவரை பார்த்து விடுவது என்று முடிவு செய்து விட்டேன். மருத்துவரை பார்த்து விடுவது என்று நினைத்தாலும் வரப்போகும் செலவுகளையும் மனதுக்குள் போட்டு பார்த்து, இழுபறியாக ஒரு தொகையை மனதுக்குள் போட்டு பார்த்துக்கொண்டு, அந்த ஊரில் இவர் பிரபல மருத்துவர், நன்றாக பார்ப்பார் என்று நண்பரின் யோசனையின்படி மருத்துவரை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி விட்டேன்.

மாலை ஆறு மணிக்கு மேல் இருக்கலாம், டாக்டரை பார்க்க உள்ளே வந்த பொழுது வரவேற்பறையில் இருந்த பெண் வரவேற்றாள். அந்த பெண்ணின் அழகு தோற்றத்தை பார்த்த எனக்கு பல் வலி என்று சொல்ல கூச்சமாக இருந்தது. ஆனால் பல் டாக்டரை எதற்கு பார்க்க வந்திருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. அந்த பெண் வேறு எதுவும் கேட்காமல் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டீங்களா? கேட்டாள்.

வாங்கிட்டேன், 6.30க்கு வர் சொல்லியிருக்காரு.

பேரை கேட்டுக்கொண்டு உள்ளே சென்றவள் பத்து நிமிடம் கழித்தே வந்தாள். உள்ளே பேஷ்ண்ட் இருக்காங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

அதுதான் சாக்கு என்று எந்த பெண்ணின் எதிரில் போட்டிருந்த நாற்காலியை ஆக்ரமித்துக்கொண்டேன்.

அரை மணி நேரமாயிற்று. டாக்டரின் அறையில் பெல் சத்தம் சத்தம் கேட்டு இந்த பெண் உள்ளே சென்றவள் ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து சார்..உங்களை கூப்பிடறாங்க.

“பல்” தான் என்றாலும் டாக்டரை பார்க்க போவது என்றால் ஒரு பயம் தானே. டாக்டர் இளமையாக இருந்தார். முப்பது வயது மதிக்கலாம்.

உக்காருங்க..

அங்கிருந்த பல் சிகிச்சைக்கென்றே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன்.இல்லை சாய்ந்தேன்.

எந்த பக்கம் வலிக்குது? கையால் வலது தாடையை தொட்டு காட்டினேன்.

வாயை திறக்கச்சொன்னார். திறந்தேன்.இன்னும் கொஞ்சம்.. அதற்கு மேல் திறப்பதற்கு பிராயசைப்பட்டேன். இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்..என்று சொல்லிக்கொண்டே இருந்த டாகடர், சற்று சலித்துப்போய் அவரே வாய்க்குள் குனிந்து பார்த்து டார்ச்சை அடித்தார்.

கடைவாயில் எதுவோ சுரண்டுவது போலவும் அழுத்துவது போலவும் இருந்தது.

பத்து நிமிடங்கள் இந்த நிலை நீடித்தது.தலையை வெளியே எடுக்கும்போது வேர்த்து விறு விறுத்திருந்தார்.

உள்ளே கடவாய் பல்லோட வேர் டேமேஜாயிடுச்சு, மூணு நாளைக்கு மாத்திரை தர்றேன், சப்பிட்டுட்டு வாங்க. பல்லை எடுத்திடலாம்.

பத்து நிமிடங்களாக திறந்திருந்ததால் மீண்டும் வாயை மூட சிரமப்பட்டு மூடுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தவன் டாக்டர் சொன்னவுடன் தலையாட்டினேன்.

பீஸ் சொன்னவுடன் முன்னாடி சொல்வாங்க..அத்துடன் அடுத்தவரை கூப்பிட பெல்லை அழுத்தி விட்டார். அப்படி என்றால் கிளம்பு என்கிறார், முடிவு செய்து கொண்டவன் வெளியே வந்தேன். உள்ளே வந்த அழகு பெண் என் மீது மோதாமல் இருக்க சற்று தள்ளி வந்து டாக்டரை பார்த்தாள்.

நான் வெளியே போய் நின்று கொண்டேன்.சற்று நேரத்தில் வெளியே வந்த பெண் டாக்டர் பீஸ் என்று ஒரு தொகையை சொன்னாள். சட்டைப்பையில் வைத்திருந்த பணத்தை எடுத்து கொடுத்த பின்னால்தான் டாக்டர் எழுதி கொடுத்த மருந்து சீட்டை கொடுத்தாள்.

மூணு நாளைக்கு எழுதி இருக்காரு. மறக்காம சாப்பிட்டுட்டு நாலாவது நாள் வந்திடுங்க.. சொல்லிவிட்டு அவள் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

பல்லை பிடுங்க எவ்வளவு ஆகும் என்று அந்த பெண்ணிடம் கேட்க மீண்டும் கூச்சம், எப்படியும் ஆயிரத்துக்கு மேல் ஆகலாம் என்று முடிவு செய்தவன் பக்கத்தில் இருந்த மருந்துக்கடைக்கு சென்றேன்.

மூன்று நாட்கள் கழித்து மீண்டும் மருத்துவரை பார்த்தேன். அவர் என்னுடைய பல்லை பிடுங்கி விட்டு என்ன்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது, சொல்ல்விட்டு அடுத்த ஆளை பார்க்க தயாராகி விட்டார்.

நான் வழக்கம்போல் அந்த வரவேற்பறை பெண்ணிடம் பீசை கொடுத்து விட்டு கிளம்பும்போது அந்த பெண் சார் என்றாள். என்னம்மா? இல்லை இந்த வயசுலயே பல்லை பிடுங்கிட்டீங்கன்னா அது அசிங்கமா இருக்கும்.

எனக்கு ஆச்சர்யம், என்னடா இந்த பெண் திடீரென்று என் மீது இவ்வளவு அக்கறைப்படுகிறாள்? வேற பல்லு வக்கணும்மா, சொன்னவன்,அந்த பெண்ணின் முகத்தை பார்த்தேன். சார் அதைத்தான் சொல்ல வந்தேன். எனக்கு தெரிஞ்ச இடம் ஒண்ணு இருக்கு, அங்க போனீங்கண்ணா “ப்ரீயாவே” வச்சு தருவாங்க..

அவள் :ப்ரீயாவே” என்று சொன்னதுதான் என்னை கவர்ந்து விட்டது. இருந்தாலும், வேற ஏதாவது எதிர் பார்ப்பாங்களா? சே..சே.. இந்தாங்க இந்த அட்ரஸ்ல போய் பாருங்க, நான் போன் பண்ணி சொல்லிடறேன்.

அவள் கொடுத்த விசிட்டிங்க் கார்டை வாங்கிக்கொண்டவன் சரிம்மா, நான் போய் பார்க்கிறேன். விடை பெற்றுக்கொண்டேன்.

ஒரு வாரம் ஓடி விட்டது. என் கைபேசியில் அழைப்பு ஒன்று வந்தது. எடுத்தவனிடம் ஹலோ சார் நான் “டெண்டல் ஹாஸ்பிடலில்” இருந்து பேசுறேன்

என்னை ஞாபகம் இருக்கா? பெண் குரல்.

எனக்கு ஞாபகம் வந்து விட்டது. எதற்கு இந்த பெண் போன் பண்ணுகிறாள், யோசிக்குமுன் சார்..அன்னைக்கு போய் பாக்க சொன்ன இடத்துக்கு போய் பார்த்தீங்களா?

இந்த பெண்ணுக்குத்தான் என் மீது என்ன அக்கறை? முடிவு செய்தவன், போய் பாக்கறேன்

அந்த இடத்தில் ஒரு இளைஞன் மட்டும் இருந்தான். சார் வாங்க உங்களுக்குத்தான் பல் வைக்கணுமா? கேட்டவன் என்னை அந்த நாற்காலியில் உட்கார வைத்து வாயை திறக்க சொல்லி ஏதேதோ அளவுகள் எடுத்தவன் சார் நாளைக்கு சாயங்காலம் வாங்க சார் மாட்டிடலாம்.

இதுக்கு பீஸ் தயங்கவும், சார் நாங்க இலவசமாகவே செய்யறோம், சார், கவலைப்படாம நாளைக்கு வாங்க.

பல் கச்சிதமாய் பொருத்தியபின் தம்பி நாம் சாப்பிடும்போது ஏதாவது?, அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, தைரியமாய் சாப்பிடலாம். நன்றி சொல்லி விடை பெற்றேன்.

இரண்டு நாட்கள் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.என்றாலும் என்னை யாரோ வேவு பார்ப்பது போல் உணர்ச்சி இருந்து கொண்டே இருந்தது. எங்கு சென்றாலும் யாரோ பின் தொடர்வது போலவே இருந்தது.

எதற்கு இப்படி ஒரு உணர்ச்சி தோன்றியது, மண்டையை பிடித்து கொண்டேன். ஒரு வாரம் ஓடியது, இந்த உணர்ச்சிகள் அடிக்கடி இம்சை படுத்தியதால்

நண்பனிடம் வாய் விட்டு புலம்பினேன். அவன் கொஞ்சம் நிதானமாக யோசிக்ககூடியவன், எப்ப இருந்து உனக்கு இந்த பிராப்ளம்?

யோசித்தேன், ஒரு வாரமாத்தான் இந்த மாதிரி.

இந்த ஒரு வாரமா என்ன என்னவெல்லாம் செஞ்சுகிட்டு இருந்தேன்னு? யோசிச்சு பாரு.

என்ன பல் வலின்னு பல்லை பிடுங்கினேன், அப்புறம். அப்புறம்..ம்….அந்த ஹாஸ்பிடல் பொண்ணு ஒரு அட்ரஸ் கொடுத்து, இங்க போனீங்கன்னா எடுத்த பல்லுக்கு பதிலா வேற பல்லு மாட்டி தருவாங்கன்னு சொல்லுச்சு. போய் மாட்டிட்டு வந்தேன். பீஸ் எதுவும் வாங்காமத்தான் செஞ்சு கொடுத்தாங்க.

நில்லு..நில்லு..எந்த பீசுமே வாங்கலையா?

இல்லையே, அப்ப அங்கதான் ஏதோ பிராப்ளம் இருக்கு. நீ வேற பல் டாக்டரை பார்த்து அந்த பல்லை செக் பண்ணி பாரு.

நண்பன் சொன்ன யோசனைப்படி வேறொரு பல் டாக்டரை பார்த்தேன். அவர் வாயை திறக்க சொல்லி அந்த பல்லை பார்த்து விட்டு நல்லாத்தானே இருக்கு.என்றவர், கொஞ்சம் இருங்க, மெல்ல அந்த பல்லை எடுத்து ஆராய்ச்சி செய்தார். இது வேற ஏதோ மெட்டீரியல்ல செஞ்ச மாதிரி இருக்கு. என்ன பண்ணலாம்?

வேண்டாம் டாக்டர், அதை மறுபடி வெக்காதீங்க, சொல்லி விட்டு அந்த பல்லை வாங்கி ஒரு பேப்பரில் சுருட்டி வீட்டில் கொண்டு வந்து பெட்டியில் வைத்து விட்டேன். அடிக்கடி தோன்றும் யாரோ கண்காணிக்கிறார்கள் என்ற உணர்ச்சி இப்பொழுது குறைந்த மாதிரி இருந்தது.

ஒரு வாரம் ஓடியிருந்தது. என் செல்போனில் அழைப்பு. ஹலோ..யார் பேசறது?

சார் உங்களுக்கு அன்னைக்கு பல் மாட்டி கொடுத்தமில்லையா, அங்க இருந்து பேசறோம்.

சொல்லுங்க என்ன விசயம்?

சார் அந்த பல்லை கழட்டீட்டிங்களா? ஆமா, அது ஒரே உறுத்தலா இருந்துச்சு, அதான் கழட்டிட்டேன்.

அப்படீன்னா அந்த பல்லை தயவு செய்து எங்க கிட்டேயே கொண்டு வந்து கொடுத்துடுங்க.

ஒரு நிமிசம் தயங்கியவன், அது எதுக்கு உங்களுக்கு..இழுத்தேன்.

சார் உங்களுக்கு இலவசமாத்தானே கொடுத்தோம், உங்களுக்கு தேவையில்லையின்னா திருப்பி கொடுக்கறதுதானே முறை.

சரி..சரி கொடுத்துடறேன். போனை துண்டித்தேன்.

அதிசயமா இருக்கு, கழட்டுன பல்லை கேக்கறாங்க, சிரித்தவனுக்கு மின்னலாய்

ஒரு அதிர்ச்சி..நான் பல்லை கழட்டி வைத்தது இவர்களுக்கு எப்படி தெரிந்தது?

அப்படியானால் !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *