கடைநிலை ஊழியன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 344 
 
 

எங்கே கதை தொடங்குகிறதோ அங்கே இருந்து ஆரம்பிப்பது நல்ல பழக்கம். நைரோபியில் வானளாவிய கட்டிடங்களில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இயங்கின. எந்த ஒரு பெரிய நிறுவனத்திலும் கடை நிலை ஊழியன் என ஒருவன் இருப்பான். கட்டிடத்துக்கு கட்டிடம், நிறுவனத்துக்கு நிறுவனம், அவன் செயல்பாடு ஒரே மாதிரித்தான். ஒரு கதை இருக்கிறது.

மிகப் பெரிய நிறுவனம் ஒன்றுக்குள் ஒரு புலி ரகஸ்யமாக புகுந்து விடுகிறது. அடுத்தநாள் செயலாளரை காணவில்லை. நிறுவனம் அமைதியாக ஓடியது. அதற்கு அடுத்தநாள் கணக்காளரைக் காணவில்லை. ஒரு சலனமும் இல்லை. மூன்றாவது நாள் ஆக உயர்ந்த பதவி வகிக்கும் மண்டல மேலாளரை காணவில்லை. அப்போதும் ஒரு பேச்சு கிடையாது. மறு நாள் கடை நிலை ஊழியனைக் காணவில்லை. முழு அலுவலகமும் பதறிப்போய் அவனை தேடியது. அப்படிப்பட்ட கடைநிலை ஊழியன்தான் அப்துலாட்டி.

ஒரு நாளைக்கு சராசரியாக அவன் ‘ஆமாம், ஐயா’ என்று 20 தடவையாவது சொல்வான். சிலசமயம் யாராவது ஒன்றுமே சொல்லாமல் அவனைக் கடந்துபோனால் அப்போதும் ‘ஆமாம், ஐயா’ என்று சொல்லிவைப்பான், எதற்கும் இருக்கட்டும் என்று. அன்று காலையிலிருந்து 40 தடவை ‘ஆமாம், ஐயா’ சொல்லிவிட்டான். நாலு வருடம் அந்த நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்த ஜேர்மன்காரர் ஓலவ் வால்டன் அன்று ஓய்வுபெறுகிறார். அவருக்கு பிரியாவிடை விருந்து ஏற்பாடு நடந்துகொண்டிருக்கிறது. அப்துலாட்டி பல இடங்களில் ஒரே சமயத்தில் தென்பட்டான். அது வெள்ளிக்கிழமை. புதிய தலைவர் திங்கட்கிழமை பதவியேற்பார் என்று பேசிக்கொண்டார்கள்.

பிரியாவிடை ஏற்பாடுகளைக் கவனித்தவர் ம்வாண்டோ; நிர்வாகப் பிரிவு மேலாளர். அவர் வாய் திறந்தால் புகை வரும் அல்லது பொய் வரும். சுருள்கம்பி போல தலை மயிர். தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை விற்று புதிய கார் வாங்கினார் என்ற கதை உலவுகிறது. உண்மை தெரியாது. நடக்கும்போது அவர் வயிற்றில் தண்ணீர் குலுங்கும் சத்தம் கேட்கும். அவருக்கு கீழே வேலை செய்யும் யாரும் அவரைப் பார்த்து சிரித்தால் பாதி சிரிப்பைத்தான் திருப்பி தருவார். சிரிப்பிலேயே லாபம் சம்பாதித்து விடுவார். அவர்தான் முதல் பேச்சாளர். விடைபெறும் தலைவரை தூக்கி வைத்து புகழ்ந்தார். தலைவருக்கே ஏதோ மாதிரியாகி மேடையிலே நெளிந்தார்.

அடுத்து, தலைவருடைய அந்தரங்க காரியதரிசி அயன்னாவின் முறை. நூல் வேலைசெய்த அலங்காரமான ஆடை. தறுமாறாக எறிந்ததுபோல அதை அணிந்திருந்தாள். துள்ளலான நடையுடன் மேடைக்குப் போனாள். போனதடவை பழைய தலைவருக்கு பேசிய அதே பேச்சை கம்புயூட்டரிலிருந்து இறக்கி பெயரையும் தேதியையும் மாற்றி பேசியதை அப்துலாட்டி கண்டுபிடித்து மனதுக்குள் சிரித்தான். அவன் 20 வருடங்களாக அங்கே வேலை செய்கிறான். நாலு தலைவர்களைப் பார்த்துவிட்டான். அவனுக்கு தெரியாத ரகஸ்யம் இல்லை.

இன்னும் சிலர் பேசினார்கள். இறுதியில் அப்துலாட்டி பேச மேடைக்கு வந்தான். அதை ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. கடைநிலை ஊழியனான அவன் இதற்கு முன்னர் பேசியதே கிடையாது.. கீழே அவர்கள் தோட்டத்தில் கிடைத்த ஜகரண்டா பூக்களில் செய்த பூங்கொத்து மேசையில் வாடிப்போய் கிடந்தது. தலைவர் அதைப் பார்த்தபடி முகத்தில் சலிப்போடு உட்கார்ந்திருந்தார்.

‘நாலு வருடம் முன்பு புதிய தலைவர் வந்தபோது ’காலையில் 8 மணிக்கு எல்லோரும் வரவேண்டியது முக்கியம். எந்த நேரமும் திரும்பி வீட்டுக்கு போகலாம். ஆனால் வேலை முடியவேண்டும்’ என்று சொன்னார். அப்போதுதான் இந்த அலுவலகத்தின் கதை தொடங்கியது. முன்னெப்போதும் இல்லாத மாதிரி வெற்றி கண்டு லாபம் ஈட்டியது. நான் பல தலைவர்களைக் கண்டிருக்கிறேன். அதிக திட்டு வாங்கியது இவரிடம்தான். கண்டிப்பானவர் ஆனால் கனிவானவர். ஊழியர்கள்தான் நிறுவனத்தின் சொந்தக்காரர் என்று கூறி அவர்களுக்கு லாபத்தில் ஒரு பங்கு வழங்கினார். இவர் எங்களை விட்டுப் போனாலும் இவர் சொன்ன வாசகம் என்னுடனேயே இருக்கும்.

’நல்லதை நீ தேடிப் போகவேண்டும். கெட்டது அதுவாகவே உன்னைத் தேடி வரும்.’

கொழுத்த பன்றி இறைச்சியை நெருப்பிலே வாட்டும் இனிய மணம் எழுந்தது. விருந்துக்காக அனைவரும் காத்திருந்தனர். தலைவருடைய பேச்சு ஒரு கதையுடன் ஆரம்பித்தது. ‘ஒருத்தன் ஒக்டபஸ் ஒன்றை விலைகொடுத்து வாங்கி வேலைக்கு வைத்துக்கொண்டான். அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. என்ன வேலை கொடுத்தாலும் எட்டு மடங்கு வேகத்தில் அது செய்து முடித்தது. விசுவாசமானது. திருப்பி பேசுவதில்லை. ஒரு நிமிடம்கூட உட்கார்ந்திருக்காது. ஒருநாள் எசமானனுக்கு சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற அவசரம். ஒக்டபஸிடம் கடைக்கு போய் சிகரெட் வாங்கிவரச் சொன்னார். அரை மணியாகியும் ஒக்டபஸ் திரும்பவில்லை. வாசலுக்கு வந்து பார்த்தவர் திடுக்கிட்டுப் போனார். ஒக்டபஸ் இன்னும் புறப்படவில்லை.

‘என்ன செய்கிறாய்?’

‘சூ போடுகிறேன், ஐயா’ என்றது.

‘சிரிப்பதற்காக இந்தக் கதையை சொல்லவில்லை. உலகத்திலே பூரணமான மனிதன் கிடையாது. சிலரிடம் குணம் இருக்கும்; ஒரு குறையும் இருக்கும். ஒரு குழுவாக நாம் வேலை செய்யும்போது ஒருவர் குறையை இன்னொருவர் நிரப்பிவிடுகிறோம். இதுவே வெற்றியின் ரகசியம்.’

* * *

அப்துலாட்டி 19ம் மாடியில் தன்னுடைய முக்காலியில் உட்கார்ந்திருந்தான். தலைவர் உள்ளே அறையில் ஏதோ கோப்புகளை இழுப்பதும் வைப்பதுமாக வேலையில் இருந்தார். விருந்து முடிந்ததும் அவர் வீட்டுக்கு போகாமல் அலுவலகத்துக்கு வந்துவிட்டார். ’நீ வீட்டுக்கு போகலாம். எனக்கு உதவி தேவையில்லை’ என்று தலைவர் இருதடவை கூறினார். அப்துலாட்டி சொன்னான் ’ஐயா, இந்த நாலு வருடத்தில் உங்களுக்கு முன்னர் நான் வீட்டுக்கு எப்பவாவது போயிருக்கிறேனா? இது உங்கள் கடைசி நாள். நான் என் கடமையை செய்வேன் ‘ என்று கூறிவிட்டான்

சூரியன் கீழே இறங்கினான். சுவரிலே ஒரு சின்ன வட்டமாக ஒளி விழுந்தது. அப்துலாட்டி தகப்பனைப் பற்றி யோசித்தான். இன்று எப்படி அவருடைய நாள் கழிந்ததோ தெரியாது. கதவிலே அவன் திறப்பை செருகும் சத்தம் கேட்டதும் அப்துலாட்டி என்று கத்தத் தொடங்குவார். அவனைக் கண்டவுடன் அவர் முகம் மலர்ந்துவிடும். அவன்தான் சூப் பருக்க வேண்டும். அம்மாவின் கடிதத்தை படிக்கச் சொல்லி கேட்பார். அவர் இறந்து பத்து வருடங்கள் என்றாலும் அவன் படிப்பான்; பின்னர் சமைக்க ஆரம்பிப்பான்.

ஒளிவட்டம் மேலே போய்விட்டது. திடீரென்று இடி மின்னலுடன் பயங்கரமான மழை கொட்டத் தொடங்கியது. ங்கோங் மலை இடி முழக்கத்தை இரட்டிப்பாக்கியது. யன்னல்கள் படவென்று அதிர்ந்தன. அப்துலாட்டி பயந்தது நடந்தது. மின்சாரம் துண்டித்தது. மின்சாரம் போனால் அந்தக் கட்டிடத்தில் டெலிபோனும் வேலை செய்யாது. 19 மாடிகளையும் இறங்கிக் கடக்கவேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்த போது உள்ளே படார் என்று பெரும் சப்தம் எழுந்தது. கதவை உதைத்து திறந்து நுழைந்தான். இரும்பு அலமாரி சரிந்து கிடந்தது. தலைவர் அதன் கீழே அலங்கோலமாகக் காணப்பட்டார். அவருடைய இடது கால் அலமாரியின் கீழே மாட்டுப்பட்டு விட்டது. அவர் ஏதோ மொழியில் அலறினார். அலமாரியை நகர்த்த முடியவில்லை. தலைவருடைய முகம் பயத்தினாலும் வேதனையினாலும் கிலி பிடித்துப்போய் கிடந்தது மின்னல் வெளிச்சத்தில் தெரிந்தது.

எப்படி நடந்தது என்று ஊகித்தான். நாலு இழுப்பறைகளையும் ஒரே சமயத்தில் இழுக்கக் கூடாது. ஒவ்வொன்றாக இழுத்து மற்றதை மூடவேண்டும். பாரம் ஒரு பக்கம் கூடியதால் விழுந்துவிட்டது. நல்ல காலமாக தலைவரிடம் லைட்டர் இருந்ததால் அந்த வெளிச்சத்தில் கொஞ்சம் ஊகிக்க முடிந்தது. இரும்பு அலமாரியை இரண்டு கைகளாலும் தன் பலத்தை எல்லாம் திரட்டி தூக்கப் பார்த்தான். முடியவில்லை. தலைவர் வலியில் துடித்துக்கொண்டிருந்தார். அவன்தான் முடிவு எடுக்கவேண்டும். ஒவ்வொரு தட்டாக கோப்புகளை உருவி வெளியே எறிந்தான். அலுமாரி பாரம் குறையக் குறைய காலை இழுக்கக்கூடியதாக இருந்தது. விலை உயர்ந்த வெள்ளை கார்ப்பெட் ரத்தத்தை உறிஞ்சியது. சீக்கிரத்தில் ஏதாவது செய்யவேண்டும். விருந்துக்கு பயன்படுத்திய மேசை விரிப்புகள் கிடந்தன. அவற்றை கீலம் கீலமாக கிழித்து கட்டுப்போட்டான். ஐஸ்பெட்டியில் ஐஸ் எடுத்து துணியில் சுற்றி காலில் கட்டினான். குடிக்க தண்ணீர் கொடுத்தான். அவர் முகத்தில் கொஞ்சம் ஆசுவாசம் தெரிந்தது. என்ன செய்யலாம் என்று அவருடன்தான் கலந்தாலோசிக்க வேண்டும்.

19 மாடிகள் கீழே போய் உதவி கேட்கலாம் என்றால் தலைவர் மறுத்து ஒரு குழந்தையைப்போல அவன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். அவருடைய தலை தானாக ஆடியது. கீழே போவது ஒன்றுதான் வழி ஆனால் அவர் சம்மதம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. மழை வலுத்துக்கொண்டே வந்தது. ரத்த ஓட்டம் சற்று நின்று முகம் வெளித்தது. ’இந்த நிறுவனத்தில் என்னுடைய கடைசி நாள் என்று நினைத்தேன். ஒருவேளை பூமியில் கடைசி நாளாகுமோ தெரியாது’ என்று சொல்லிவிட்டு சிரித்தார். பின்னர் ’நீ தைரியமாக இரு’ என்றார். உள்ளுக்கு அவனுக்கு சிரிப்பு வந்தது.

அப்துலாட்டியின் முகத்தைப் பார்க்க அவருக்கு குற்ற உணர்வாக இருந்தது. அன்று மாத்திரம் அவன் இல்லாமல் போனல் அவர் கதி என்னவாகியிருக்கும். நிச்சயமாக செத்திருப்பார். அவனை வேலையிலிருந்து நீக்குவதற்குகூட ஒரு முறை ஆணையிட்டிருந்தார். எத்தனை விசுவாசமானவன். கடைநிலை ஊழியன் பேசியதுபோல ஒருவரும் உள்ளத்தில் இருந்து பேசவில்லை. ’நான் உனக்கு நல்லவராக நடக்கவில்லை. உனக்கு என்மீது கோபமே இல்லையா?’ என்றார்.

‘உங்களுக்கு கடமை முக்கியம். எனக்கு நன்மை செய்வதாக நினைத்தீர்கள். ஒரு கிக்கியூ கதை ஞாபகம் வருகிறது.’

‘சொல்,சொல். கதையையாவது கேட்கலாம்.’

‘குளத்தில் ஒருவன் வலைவீசி நூறு மீன்கள் பிடித்தான். அவற்றை தரையில் விட்டவுடன் அவை மகிழ்ச்சியில் துள்ளின. ‘நான் உங்களை தண்ணீரில் மூழ்காமல் காப்பாற்றினேன்’ என்றான். ஆனால் அவை இறந்துவிட்டன. வீணாக்கக் கூடாது என்று அவற்றை சந்தையில் விற்று அந்தப் பணத்துக்கு மேலும் வலைகள் வாங்கினான். அப்படியென்றால்தான் இன்னும் பல மீன்களை அவனால் காப்பாற்ற முடியும்.’

‘நல்ல கதை, அப்துலாட்டி. இதைத்தான் நான் பல வருடங்களாகச் செய்துகொண்டிருக்கிறேன்.’

அவர் உடல் மறுபடியும் நடுங்கத் தொடங்கியது. அப்துலாட்டி மேசை விரிப்புகளை உருவி எடுத்து அவர் உடலை மேலும் சுற்றிக் கட்டினான். கொஞ்சம் சமநிலையானதும் மறுபடியும் பேசத்தொடங்கினார்.

’அது சரி, இத்தனை விவரமாகப் பேசுகிறாயே, நீ என்ன படித்திருக்கிறாய்?’

’சீனியர் சேர்டிப்பிக்கட் முதல் வகுப்பு.’

’அப்படியா, உன்னிலும் குறையப் படித்தவர்கள் உள்ளே மேசையில் வேலை செய்கிறார்கள். நீ இன்னும் முக்காலியில் உட்கார்ந்திருக்கிறாயே?’

”மேசையில் உட்காரும் வேலை தரமாட்டார்கள், ஐயா. நான் கிக்கியூ இனத்தை சேர்ந்தவன். முக்காலிதான் எனக்கு ஆக உயர்ந்த இடம். அதை மீறி உயர முடியாது.’

அவன் சொல்லி முடிக்கவும் மின்சாரம் பெரும் சத்தத்துடன் வந்தது. அப்துலாட்டி அவர் கையை உதறிவிட்டு வெளியே ஒடினான்.

***

ஆஸ்பத்திரியில் ஓலவ் கண் விழித்தபோது அதிகாலை ஐந்து மணி இருக்கும். அப்துலாட்டி முன்னே ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.

’ஐயா ஒருசின்ன எலும்பு முறிவுதான். ரத்தம் கொடுத்திருக்கு. சிகிச்சை முடிந்து இன்றே உங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். நாளை விமானம் பிடிக்கலாம். சூப் இருக்கிறது குடியுங்கள்’ என்றான்.

’நீ வீட்டுக்கு போகவில்லையா?’

’போனேன். போய் குளித்து உடை மாற்றி வந்திருக்கிறேன்.’

’உனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. உன்னை நிறைய திட்டியிருக்கிறேன்.’

’ஐயா, எனக்கு அம்மா இல்லை. அப்பா கடும் நோயாளி. படுத்த படுக்கைதான். அவரை நான்தான் பார்க்கிறேன். காலையில் அவரை எழுப்பி சுத்தம் செய்து உடை மாற்றி உணவு கொடுத்து படுக்க வைத்த பின்னர்தான் அலுவலகத்துக்கு வருவேன். அப்போது கொஞ்சம் லேட்டாகிவிடும். பக்கத்து வீட்டு அம்மா அவ்வப்போது ஏதாவது அவருக்கு குடிக்கக் கொடுப்பார். மாலை நான் போய் மறுபடியும் அவரை சுத்தம் செய்து உடை மாற்ற வேண்டும்.’

’உன் பிரச்சினையை சொல்லியிருக்கலாமே?’

’எல்லோரும் எனக்கு தண்டனை கொடுத்தார்கள். சம்பளத்தை வெட்டினார்கள். ஒருவரும் ஏன் லேட்டாக வருகிறாய் என்று கேட்கவில்லையே.’

’உனக்கு மனைவி இல்லையா?’ ’இருக்கிறார். நல்ல பெண். அவரால் அப்பாவை பார்க்க முடியவில்லை. ஒருமுறை தேதி முடிந்த மருந்தை அப்பாவுக்கு கொடுத்துவிட்டார். அப்பா கூசவைக்கும் சொற்களால் அவளை திட்டினார். சோப் போடும்போது அப்பாவுக்கு எழுத்துப்பக்கம் அழியக் கூடாது. ஒருநாள் என் மனைவியை வெளியே போ என்று துரத்திவிட்டார். என் மனைவிக்கு சுப்பர்மார்க்கெட்டில் நல்ல வேலை. அங்கே நடந்த திருட்டில் ஓர் அயோக்கியன் அவளை மாட்டிவிட்டு தப்பிவிட்டான். அவளை ஜெயிலில் போட்டுவிட்டார்கள்.’ ’ இங்கே நீதியே கிடையாதா?’ ‘அவளும் என்னைப்போல கிக்கியூ இனத்தைச் சேர்ந்தவள், ஐயா.’

’நீ முக்காலியை விட்டு உயர முடியாது என்று சொன்னாயே, அது ஏன்?’

’ஐயா, இங்கே ஸ்வாகிலிகளிடம்தான் ஆட்சியிருக்கிறது. என்ன முயன்றாலும் எனக்கு மேசை கிடைக்காது. ஸ்வாகிலி அரபு எழுத்துக்கள் கொண்டது; வலமிருந்து இடமாக எழுதவேண்டும். கிக்கியூ இடமிருந்து வலமாக எழுதும் மொழி. நான் எழுதும்போது என்னைக் கேலி செய்வார்கள்.’

’நீ என்னுடன் ஒருநாள் பேசியிருக்கலாமே?’

‘எப்படி பேசுவது? அணுக விடமாட்டார்களே. லாபத்தில் உழைப்பாளிகளுக்கு பங்கு இருக்கிறது என்று நீங்கள் இன்று பேசினீர்கள். அந்த உழைப்பாளிகளை எப்படி வேலைக்கு தேர்வு செய்கிறார்கள் என்பதை யாரும் ஆராய்வதே இல்லை.

’உண்மைதான். நான் மிகப் பெரிய குற்றம் செய்துவிட்டேன்.’

’உலகம் இரண்டு விதமாக பிரிந்திருக்கிறது, ஐயா. ஆளுபவர்கள், ஆளப்படுகிறவர்கள். ஆரம்பத்தில் இருந்து அப்படியேதான் இயங்குகிறது. இதை ஒருவராலும் மாற்ற முடியது.’

***

விமான அறிவிப்பு ஒருமுறை ஒலித்தது. ஓலவ் கம்பை ஊன்றியபடி விமானக் கூடத்துக்குள் நிழையத் தயாரானார். அவருடைய இரண்டு பயணப் பெட்டிகளும் உள்ளே போய்விட்டன. அப்துலாட்டி அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றான். ஓலவ்வின் சாம்பல் நிறக் கண்கள் தளும்பின. குரல் தழுதழுக்க ’ஒரு கால் உடைந்துதான் உன்னை தெரிய வேண்டும் என்று இருக்கிறது. நீ நல்லவன். மீன்களை ஒருபோதும் இனிமேல் காப்பாற்ற மாட்டேன். என்னை மன்னித்துக்கொள்.’ ‘பெரிய வார்த்தை ஐயா. என் கடமையை செய்தேன். என் சேவைக்காக டானியல் அராப் மொய் 21 பீரங்கிகளை முழங்கப் போவதில்லை. சேமமாக போய்ச் சேருங்கள்.’ ‘அப்பாவை பார்த்துக்கொள். உன் மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழமுடியாதா?’ ‘அது எப்படி? நல்ல பெண் அவள். ஆனால் என் அப்பா அவளை துரத்திவிடுவார்.’ ’ உனக்கு ஏதாவது நான் செய்யவேண்டும்.’ அவர் குரல் இரண்டாகப் பிளந்தது. ’ஒன்றுமே வேண்டாம், ஐயா. உங்கள் அன்பு போதும். என் மகனை ஒரேயொரு முறை பார்த்தால் இந்த வாழ்க்கை எனக்கு நிறைவாகிவிடும்.

’மகனா? யார் மகன்?’

‘உங்களுக்கு தெரியுமே. என் மகன்தான்.’

’நீ சொல்லவில்லையே.’

’அவன் பிறந்தபோது ஒரு நாள் விடுப்பு கேட்டேன். மறுத்துவிட்டார்கள்.’

’அப்படியா?’

’பிறந்து ஆறு மாதம் ஆகிறது.’

’எங்கே இருக்கிறான்?’

’சிறையில்தான், அவன் அம்மாவுடன்.’

திகைத்துப் போனார் ஓலவ். தடியை எறிந்துவிட்டு முழுப்பாரத்தையும் அவன் மேல் சாய்த்து அணைத்தார்.

இரண்டாவது விமான அறிவிப்பு ஒலித்தது.

– July 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *