கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 2,395 
 
 

2200-ம் ஆண்டின் புத்தாண்டு தொடக்கத்தைக்காண சில மனிதர்கள் காட்டிற்குள் ஒன்று கூடியிருந்தனர். அனைவருமே உண்ண தேவையான உணவின்றி, சுவாசிக்க தேவையான காற்றின்றி மெலிந்து காணப்பட்டனர். 

“அடுத்த வருடம் இதே போன்ற வருடத்தின் தொடக்கத்தைக்கான இப்பூமியில் நம் மனித இனம் இருக்குமா…? எனத்தெரியவில்லை. ஏனென்றால் இருக்கும் வாடிய சில மரங்களும் மழையின்றி காய்ந்து வருகின்றன” என அங்கு கூடியிருப்பவர்களிலேயே அதிக வயதான இருபது வயதைக்கடந்த மனிதரான கீ சுத்தமான தமிழில் பேசினார்!

“சீக்கிரமாகவே அனைத்தையும் பெற வேண்டும் என நினைத்த நமது முன்னோர்கள் ஒட்டு மரங்களை உருவாக்கியதால் ஒட்டு மொத்தமாக அந்த மரங்கள் விதை கொடுக்காத பழங்களைக்காய்த்ததால் புதிய செடிகள் முளைக்க வழியில்லாமல், முன்பு இயற்கையாக முளைத்து வளர்ந்த மரங்களால் மட்டுமே நாம் உயிர் வாழ்கின்றோம். அம்மரங்களும் சரியான தண்ணீர் இல்லாததால் பூத்து காய்த்து விதைகளைத்தர இயலவில்லை. தவிர ரியல் எஸ்டேட் எனும் பெயரில் இயற்கையாக வளர்ந்திருந்த மரங்களை வெட்டி அழித்ததும் மரங்கள் இல்லாமல் போனதுக்கு காரணமாகி விட்டது. இருக்கும் சில மரங்களின் ஆயுள் முடிந்த பின் நாம் யாரும் உயிர் வாழ முடியாமல் அழிந்து விடுவோம்….” என பேசியதைக்கேட்டு அந்த இடத்தையே சோகம் தன் வசப்படுத்திக்கொண்டது.

“முற்காலத்தில் நூறு வயது வரை வாழ்ந்தவர்கள் இன்று இருபது வயதைக்கடப்பதே சாதனையாக உள்ளது. இயற்கை நமக்குத்தேவையான அனைத்தையும் படைத்து விட்டுத்தான் இப்பூமியில் உயிரனங்களைப்படைத்தது. அறிவு அதிகமுள்ள உயிரினமான மனித இனம் இயற்கை வளங்களை அழித்ததால் மொத்த உயிரினங்களுமே அழியத்தொடங்கி விட்டன. மரங்களும் விதைகளைத்தராதது போல மனிதர்களுக்கும் குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. நாம் தான் கடைசி மனித இனம் என்பது வேதனை. அதே போல இந்த மரங்களும். மரங்கள் நிறைந்து இல்லாததால் மழை பெய்து பல வருடங்கள் ஓடி விட்டன. 2024-ம் ஆண்டு வரை பழமை கொஞ்சம் இருந்தது. மழையும் ஓரளவு பெய்தது. அதன் பின் நவீனம் என சொல்லிக்கொண்டு பண வெறி பிடித்த நம் முன்னோர்கள் பேராசையால் விவசாய நிலங்களை அழித்து, காற்று தரும் வளமான மரங்களை நவீன இயந்திரங்களை வைத்து அழித்து ப்ளாட் போட்டு விற்று விட்டனர். நம் வருங்கால சந்ததிகள் வாழ முடியாது என யோசிக்காமல் செய்து விட்டனர்” என கூறி வடிக்க கண்ணீரின்றி அழுதார் கீ.

பசியைப்போக்க உணவைத்தேடி காடு மேடாக அழைவதும், நிலத்தைப்பறைத்து கிழங்குகளை எடுத்துத்தின்பதும் என உயிர்வாழவே போராட்டமாக இருந்தது. எறும்புகளைப்போல சாரை சாரையாக சென்றனர். திருடர்கள் பயமில்லை, விலங்குகள் பயமில்லை. உணவில்லாத பயமே அவர்களை முழுமையாக ஆட்கொண்டிருந்தது.

பறவைகள், விலங்கினங்கள் மரங்களும், மழை பெய்யாத நிலையும் வந்ததால் அனைத்தும் இறந்து விட்டன. பல வானுயரக்கட்டிடங்கள் மனிதர்கள் வாழாமல் பாழடைந்து விட்டன. வாகனங்களை யாரும் இயக்காததால் அவை துருப்பிடித்த நிலையில் எலும்புக்கூடுகளாக காட்சியளித்தன. மனிதன் உருவாக்கிய அனைத்தும் உபயோகமின்றிப்போயின. மர விதைகள் எங்காவது கிடைக்குமா…? எனத்தேடி அழைந்தனர். மர விதைகள் வைரத்தின் மதிப்பைப்பெற்றிருந்தன. தங்கம், வைரம் போன்ற ஆபரணங்களை யாரும் அணிவதில்லை. தொடுவது கூட இல்லை. எதற்கும் விலையில்லை. பத்திரப்பதிவுகள் இல்லை, பணம் இல்லை, பதவி இல்லை, அரசாங்கமில்லை. ராணுவம் இல்லை. சொல்லப்போனால் நாடு, நகரம் என பிரித்த நிலையில்லை. ஒட்டு மொத்த பூமியும் ஒரே நிலை கொண்டிருந்தது. கற்காலம் போல் என ஒப்பிட முடியாது. கற்காலத்தில் நாகரீகமற்ற மனிதர்கள் நிறைந்த இயற்கையோடு வாழ்ந்தனர். நவீன மனிதர்கள் இயற்கையை அழித்திருந்தனர். என்னுடையது என எதையும் யாரும் சொல்லிக்கொள்ளாமல் நாடோடிகளாகத்திரிந்தனர். பசிக்கு உணவைத்தேடி அழைவதைத்தவிர வேறு சிந்தனையில்லை. மரங்களே தெய்வமாகி விட்டன. வாழ்வதே மரத்தின் அருகில் தான். பிராணவாயு பற்றாக்குறையால் பலர் நடக்க இயலாமல் படுத்தே கிடந்தனர்.

அலாரம் ஒலிக்க திடீரென விழிப்பு வந்து கண் விழித்து காலண்டரைப்பார்த்த போது 2024 என இருந்தது. உடனே உதவியாளரை அலை பேசியில் அழைத்த நாட்டின் நெம்பர்‌ ஒன் ரியல் எஸ்டேட் அதிபரான கிம்பானி, நாடு முழுவதும் உள்ள தனது பல்லாயிரம் ஏக்கர் கொண்ட வீடு கட்டும் இடங்களில் வீடு கட்டுவதற்கு பதிலாக விதை தரும் இயற்கை மர செடிகளை நட்டு வளர்க்கும்படி உத்தரவிட்டார்.

ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *