கடைசியாய் வாங்கியவன்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 6,760 
 
 

”நீங்க இந்தக் கல்யாணப் பத்திரிகையைக் கொடுக்க வந்தீங்களா? அல்லது இதைச் சொல்ல வந்தீங்களா?” – மனதுக்குள் கனன்று கொண்டிருந்த கோபத்தை அடக்க முடியாமல் கேட்டே விட்டான் சுந்தரம். எப்போ எதைப் பேசுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா?

ராஜேந்திரனின் முகம் போன போக்கு இவனுக்கு திருப்தியாக இருந்தது. உன்னால் இந்நேரத்தில் சொல்லக் கூடாததைச் சொல்ல முடியுமென்றால், என்னாலும் பேசக் கூடாததைப் பேச முடியும்.

முகத்துக்கு நேரான மோதிரக் குத்து. விரல்களை மடித்து மோதிரத்தைக் குறியாய்வைத்து, நேரடியான, பலமான தாக்கு. பொறி கலங்கிப் போயிற்று எதிராளிக்கு.

வெகு காலமாய் மனதில் அமிழ்ந்து கிடக்கும் கனல். இன்று ஊதிவிட்டது அவர். கணகணவென்று நெருப்பு மேலேறி வந்து தானே அனலை வீசியது. தாங்க முடியாது பறந்த நெருப்புப் பொறிகள். இது தனக்குத் தேவைதான் என்று தோன்ற வேண்டும் அவனுக்கு. என் மீது குற்றம் சொல்பவனுக்கும் ஒரு தகுதி வேண்டாமா? நானே வெந்து கொண்டிருக்கிறேன். அதை இவன்வேறு சொல்வதா? கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே…!

எப்பொழுதடா கேட்க வாய்ப்புக் கிடைக்கும், சொல்லப் பொழுது வாய்க்கும் என்று காத்திருந்ததுபோல் வந்திருக்கிறார். இன்ன காரியத்திற்காக வருகிறோம், இப்போது இதைச் சொல்வது சரியில்லை என்கிற இங்கிதம் கூட இல்லை.அப்படிச் சொல்லித்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயமுமில்லை. ஆனால் பலருக்கும் சொல்லத் துடிக்கிறது மனசு. அதுதான் துரதிருஷ்டம். எப்படியும் முகத்திற்கு நேரே சொல்லிவிட வேண்டும் என்கிற துடிப்பு. இந்தக் கல்யாண சந்தர்ப்பம் வசமாய் வாய்த்திருக்கிறது. நான் செய்ததை, தனக்குத் தெரியும் என்று காண்பித்துக் கொள்வது. அத முகத்துக்கு நேரே சொல்லி, அந்த மூஞ்சி எப்டிப் போகுதுன்னு பார்க்கணும்….

வேலையே பார்க்காமச் சம்பளம் வாங்கினவர் நீங்க…சொல்லப் போனா எதையுமே பேச உங்களுக்குத் தகுதியில்லே… …யார் எதைச் சொல்றதுன்னு ஒரு விவஸ்தை வேண்டாமா? ஒருத்தர் மேலே குத்தம் சொல்றதுக்குக் கூடஒருத்தன் தன்னைத் தகுதிப்படுத்திக்கணும். அதுதான் சரி…அதிலயும் குற்றம் சொல்லப்படுற ஆள் யார்ங்கிற கேள்வி இருக்கு. ஞாபகம் இருக்கட்டும்…

அடப்பாவி…செய்றதையும் செய்துப்பிட்டு, என்னா பேச்சுப் பேசுறான்யா…?

இருக்கிற வேலைகளையெல்லாம் எடுத்துப் போட்டு மாங்கு மாங்குன்னு செய்தவன் நான்….எனக்கு ஒரு தப்புப் பண்ண உரிமை கிடையாதா? அப்டியே செய்திட்டாத்தான் என்ன? குடியா முழுகிப் போச்சு? என்ன சொல்ல வர்றீங்க நீங்க…?

அது சரி சார்…நான் வேலை தெரியாதவன்தான்…மத்தவங்க கிட்டே கேட்டுக் கேட்டுச் செய்றதுல தப்பு ஒண்ணுமில்லையே…? வேறே தவறுன்னு ஒண்ணும் செய்யலியே?

ஒண்ணுமே தெரியாதவன் மண்ணு மாதிரி இருக்கிறதுக்கும், எல்லாந் தெரிஞ்சவன் ஒரு தப்புப் பண்றதுக்கும் வித்தியாசமிருக்கில்ல….வேலை செய்றவனுக்குத்தான் தப்பு வரும்….நான் செய்தது தவறிச் செய்த தப்பு.

கேட்டுக் கேட்டு நீங்களே செய்தீங்களா…அல்லது அவங்களே செய்தாங்களா? மனசாட்சியத் தொட்டுச் சொல்லுங்க பார்ப்போம்….நானே எத்தனை செய்து கொடுத்திருக்கேன் உங்களுக்கு…..? அதெல்லாம் விட்டுட்டு என்னவோ பேசுறீங்க…? உங்க சர்வீசுல நீங்க சொந்தமா வேலை செய்தீங்கன்னு உண்டா? ஒண்ணு சொல்லுங்க பார்ப்போம்….எவனாவது ஒருத்தனச் சங்கடப்படுத்தி, சங்கடப்படுத்தித்தானே சாதிச்சிருக்கீங்க…? அண்டி அண்டிப் பிழைச்சிருக்கீங்க…அதானே? அதுக்குப் பேரு சாதனையா, வேதனையா? அடுத்தவன் முதுகுல குதிரை ஏறியே மொத்த சர்வீசும் போட்டாச்சு…நீங்க வாய் திறக்கிறதுக்கு என்ன யோக்யதை இருக்கு? ஆயிரம் நல்லது செய்தவனுக்கு, ஒரு தப்பு செய்ய உரிமையில்லையா? போங்கய்யா….சோலியப்பார்த்துக்கிட்டு….என்னை விரல் நீட்டிக் குத்தம் சொல்றதுக்கு எவனுக்குத் தகுதியிருக்கு?

அப்பல்லாம் நல்லாத்தான சார் இருந்தீங்க…? உங்களப்பத்தி நான் எதுவும் கேள்விப்படலையே…?

எப்போ….? அப்புறமா கேள்விப்பட்டீங்களா? நான் ஆபீஸ் மாறினதுக்கப்புறம்? நீங்க வெளியூர் போனதுக்கப்புறம்? அப்டித்தானே? எதாச்சும் போற போக்குல கேள்விப்பட்டீங்கன்னா அப்டியே நம்பிடுவீங்களா? உண்மையா, பொய்யான்னு ஆராய மாட்டீங்களா?

அது எப்படி சார்…உங்கள மாதிரி ஆளு மேலே புகார் வருதுன்னா, அதுவும் நாக்கு மேலே பல்லுப்போட்டுச் சொல்றாங்கன்னா…..? நிறைய விசாரிச்சுட்டேன் சார்…

எவன்யா சொன்னான்…? இல்ல எவன் சொன்னான்னு கேட்குறேன்….? சொல்றவன் யோக்கியனா? அதப் பார்க்கணும்ல? எந்த நாய் வாய்லேர்ந்து அந்த வார்த்தை வருதுன்னு பார்க்கணும்யா…சொல்றவனுக்கு அப்படி ஒருத்தரைப்பத்தி ஒரு தரமான ஆளப்பத்திச் சொல்றதுக்குத் தகுதியிருக்கான்னு பார்க்கணும்யா…! யாரு எதைச் சொன்னாலும் அப்டியே நம்பிடுறதா? எவனுக்கும் நான் விளக்கம் சொல்லணும்ங்கிற அவசியமில்லே….என் மனசாட்சியப் பத்தி எனக்குத் தெரியும்….அதுக்குப் பதில் சொன்னாப் போதும்….கேட்க வந்துட்டாரு….எதோ வந்தமா, கல்யாணப் பத்திரிகையைக் கொடுத்தமான்னு போகாம, என்னென்னவோ பேசிட்டிருக்கீங்களே…கிளம்புங்க……!

ரொம்ப நாளைக்கப்புறம் உங்களைச் சந்திக்கிறமே, கேட்டுப்புடணும்னு மனசு அடிச்சிக்கிட்டது சார்….நாம மதிச்ச சாரு இப்டி ஆயிட்டாரேன்னு….இப்போ எம்பேர்ல எவனையாவது ஒரு வார்த்தை சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்…..அஞ்சு பைசா வாங்கினேன்னு……அங்கயே நாண்டுக்கிட்டு செத்துடறேன்….வேலை தெரியாதவன்தான்…உங்களையெல்லாம் அண்டிப் பிழைச்சவன்தான்…எப்டியோ கதையை ஓட்டி, நானும் இன்னிக்கு ரிடையர்ட் ஆயிட்டேன்….ஆனாலும் ஒரு கெட்ட பேர் இல்லேல்ல….! அதை நினைச்சேன்…..சார்லாம் இப்டி ஆகலாமான்னு தோணிச்சு…அதான்….

சரி…கிளம்புங்க….ரொம்ப சந்தோஷம்…….-பாவி, என்ன போடு போடுகிறான்?

கட்டாயம் கல்யாணத்துக்கு வந்திடுங்க சார்…..இத மனசுல வச்சுக்கிட்டு வராமே இருந்திடாதீங்க….நம்ப சாராச்சேன்னுதான்….உரிமையோட கேட்டேன்….

ஏன்யா, ஒரு கல்யாணப் பத்திரிகையைக் கொடுக்கிறபோதா இதைக் கேட்பாங்க….உனக்கு மூளையே இல்லங்கிறதுக்கு இதவிட வேறே என்ன உதாரணம் வேணும்? மரம் மாதிரி வளர்ந்தா மட்டும் போதுமா? ம்…ம்….. –

போய்க் கொண்டிருந்தார் ராஜேந்திரன். அவரையே பார்த்துக்

கொண்டிருந்தேன். இருந்திருந்தும் இவன் வாயாலயா இதைக் கேட்கணும்? மடப்பய…!

ச்சே…..! கடைசி கடைசியா என்ன ஒரு பழி இது? ரிடையர்ட் ஆகுறதுக்கு ஒரு வருஷம் வரைக்கும் ஒழுங்கா இருந்திட்டு கட்டக் கடைசில இப்டியா பெயர் கெடணும்? அங்கயிருந்து வந்தாலும் வந்தோம்….நம்ப உழைப்பும், திறமையும் நிக்கலயே…! …எல்லாரும் இதப்பத்திதானா பேசுவாங்க….? எம்பேரைக் கெடுக்கிறதுல இவனுங்களுக்கு அப்படியென்ன உற்சாகம்? நல்லவன், போனாப் போகட்டும்னு கடைசியா ஒரு தப்பு செய்தா, அதுதான் நிக்குமா?

எவனெவன் யாரப்பத்தி என்ன பேசுறதுன்னு ஒரு கணக்கில்லியா? வாயே திறக்காதவனெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டான்…? எம் முன்னாடி பத்தடி தள்ளி நிக்கிறவனெல்லாம், விட்டுப் பார்க்கிறான்?

அதெப்படி? சாக்கடைல இறங்கியாச்சுன்னா, சாக்கடைல நிக்கிறதாத்தானே சொல்ல முடியும்?….இப்பத்தான இறங்கினாரு, ஒட்டிக்கவா போகுதுன்னா பேசுவாங்க…..? அப்டியே பேசினாலும் ஒட்டுனது ஒட்டினதுதானே?

அதுவா ஒட்டுதோ ஒட்டலியோ, ஒட்ட வச்சிருவாங்க போலிருக்கே….கங்கணம் கட்டிட்டுல்ல கிளம்பியிருக்காங்க…காத்துக் கிடக்குறாங்க….எதுடா சாக்குன்னு? எம்பேரைக் கெடுக்கிறதுல இவனுங்களுக்கென்னய்யா அத்தனை இன்ட்ரஸ்ட்டு…,? சொல்ற எவனாவது யோக்கியனா? இல்ல யோக்கியனான்னு கேட்குறேன்…இவங்ஞளே தேவடியாப் பயலுங்க….என்னைப் பத்தி வாயைத் திறக்க என்ன யோக்யதை? நான் என்ன பண்ணினேன்னு யாருக்காச்சும் தெரியுமா? என்னமோ எல்லாம் அறிஞ்ச மாதிரிப் பேசுறீங்களே? – எதிரே ஆள் இருப்பது போல் புலம்பினான் சுந்தரம்.

என்ன பண்ணினா என்ன சார்…? கை நீட்டி வாங்கினது வாங்கினதுதான…? இல்லன்னு ஆயிடுமா?

வாங்கிட்டா….அதைத் தனக்குத்தான் உபயோகப்படுத்திக்கிட்டான்னு அர்த்தமா? காம்பவுன்ட் வாசல்ல இருக்கே….பிள்ளையார் கோயில்….அந்த உண்டியல்ல அப்பப்போ எல்லாத்தையும் போட்டாச்சு…..ஒரு பைசா நான் தொடலை…

யார் சார் நம்புறது? இது உங்களுக்கே தமாஷா இல்லே?

நீங்கள்லாம் நம்பணும்னுட்டு நான் இதைச் சொல்லலே…! என் மனசாட்சிக்குத் தோணிச்சு செய்தேன். ….அவ்வளவுதான்…

அப்போ ஏன் இப்போ வாய்விட்டுச் சொன்னீங்களாம்?

பேச்சு வந்திடுச்சில்லே….அந்த வாயை சாணியை வச்சு அடைக்கத்தான்…..-அடேயப்பா, எனக்குத்தான் எவ்வளவு கோபம்…எரிச்சல். பாழாய்ப் போன அந்தத் தவறைச் செய்து விட்டோமே என்ற குமைச்சல்…அதன் வெளிப்பாடுதானே இது…?

பேச்சு வராம இருக்கணும்னா, வாங்காம இருக்கணும்….கடைசிவரைக்கும் கல்தூணா நிக்கணும்….

தெரியும்யா….கல்தூணப் பத்தி எனக்குச் சொல்றியாக்கும்? அதுலதான் இப்போ சாணி அப்பிடுச்சு….யாருக்கும் நான் விளக்கம் கொடுக்கணும்ங்கிற… அவசியமில்லே….நீங்கள்லாம் யாரும் என்னைப்பத்தி ஒரு வார்த்தை சொல்றதுக்கும் தகுதியில்லே…

அப்டித்தான் இருந்தோம்…..கட்டக் கடைசியா நீங்க மாறிட்டதுனாலதான இந்தப் பேச்சே வந்திச்சு….எங்களமாதிரி சாதாரணர்களும் பேசும்படி ஆயிடுச்சே…!

உங்க எல்லாரோட யோக்யதையைப் பத்தித் தெரியாதாக்கும் எனக்கு…? என் பங்குத் துட்டையும் வாங்கி அத்தனை நாள், வருஷக்கணக்கா, வாக்கட்டை போட்டுட்டிருந்தீங்க.. ….நக்கித் தின்னீங்க….அதைக் கடைசியாக் கொஞ்சம் நான் பிடுங்கினவுடனே உங்களுக்குப் பொறாமை…தூத்த ஆரம்பிச்சிட்டீங்க…..இதையும் நீங்களே வச்சிட்டுப் போங்கடா பிக்காலிப் பசங்களான்னு சொச்ச நாளைக்கும் நான் விட்டிருந்தேன்னா…இளிச்சிக்கிட்டுச் சும்மா இருந்திருப்பீங்க….என்னவோ ஒரு யோசனை தோணிச்சேன்னு வாங்கி, கோயில் உண்டியல்ல போட்டேன்…..அது பொறுக்காமே இப்போ என்னைத் தூத்த ஆரம்பிச்சிட்டீங்க….என்னவோ பண்ணிட்டுப் போங்க….நானோ ரிடையர்ட் ஆயாச்சு….இனி என்ன பேசினா எனக்கென்ன….? – எங்கோ நின்ற ஒரு கூட்டம் கை கொட்டிச் சிரித்தது காதில் நாராசமாய்ப் பாய்ந்தது.

போய்க் கொண்டிருந்தேன். ராஜேந்திரன் பஸ் ஏறிப் போவது தெரிந்தது. நான் சற்றும் எதிர்பாராமல் அன்று ஒரு நாள் எனக்கு நேர்ந்து போன அந்த விபத்தையும், அதற்குண்டான எதிர்பாராச் செலவினத்தையும் யாரேனும் மனதில் கொண்டார்களா? எவராவது இரக்கப்பட்டார்களா? என் டூ வீலரை அப்பளமாய் நொறுக்கிவிட்டு ரூபாய் பத்தாயிரத்திற்குச் செலவும் இழுத்துவிட்டு விட்டு, என் கண் முன்னாலேயே கத்தை நோட்டைக் கை நீட்டி வாங்கிக் கொண்டு அந்த அம்பாசிடர் கார்காரனை விட்டு விட்டானே அந்தப் போலீஸ்…அது எத்தனை அபாண்டம்? அந்தக் காசை எனக்கு அந்தக் கார்க்காரன் கொடுத்திருந்தால் என் வண்டியை முழுமையாய் ரிப்பேர் செய்து கொண்டிருப்பேனே…அதை நினைத்தானா அவன்? இப்படி நொறுக்கிவிட்டு தப்பிக்க வேறு பார்க்கிறானே, இவனை விடுவதா என்று சமரசம் செய்து அந்தப் போலீசாவது எனக்கு அந்தப் பணத்தை வாங்கிக் கொடுத்திருக்கலாமே, செய்தானா? வெறுமே வந்து நின்று, கொத்தாய் பணத்தை வாங்கிப் பேன்ட் பாக்கெட்டுக்குள் செருகிக் கொண்டு, எனக்குக் கேஸ் வேறு போட்டு அலைக்கழித்தானே? அந்தக் கேவலம் என் நெஞ்சை விட்டு மறையுமா? இந்தக் கொடுமையை எங்கு போய்ச் சொல்வது? உலகத்தில் நல்லதிற்கே காலமில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

உழைத்துக் குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்திருந்த சிறு சேமிப்புக்காசு, மொத்தமாய் ரிப்பேர் செலவு என்று அள்ளிக் கொண்டு போனதே, யார் கேட்டார்கள்? அதை ஈடு கட்ட எனக்குக் கிடைத்த கடைசியான அந்த ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டேனே. அது தவறா? என்னைப் போன்ற நேர்மையான, அப்பாவி ஒருவன் , கட்டக் கடைசியாய் மனது துவண்டு தன் எதிர்பாராச் செலவினத்தை இப்படி ஈடுகட்டிக் கொண்டது தவறா? சொல்லுங்கள் நண்பர்களே…சொல்லுங்கள்…..எதையும் நியாயப்படுத்தவில்லை நான்….எல்லா மனிதர்களும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இப்படி இடறத்தான் செய்வார்கள். நானும் இடறினேன். இல்லையென்று சொல்லவில்லை. இதுவும் என் மனசாட்சிதான்….வாழ்க்கை முழுவதும் நேர்மையாய் இரு என்று சொன்ன அதே மனசாட்சிதான் இதையும் சொல்லியது.

இப்போதும் கூட ஒரு தவறு செய்திருக்கிறேன்தான். உண்டியலில் போட்டதாய்ச் சொன்னேனே…அந்தப் பொய் தவறில்லாமல் வேறு என்ன?

தவறுகள் செய்தவன் துடிக்கிறான், அழுகிறான்…..!!! – ஆம், நம்புங்கள். நான் அழுது கொண்டிருக்கிறேன்….!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *