கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 7,667 
 
 

முத்துக்குமார், தேனுக்குள் விழுந்து, இறக்கை நனைந்து தவிக்கும் வண்டு போலவே கிடந்தான்.

சுருட்டி வைக்கப்பட்ட போர்வைத் துணி போல், உடம்பு முழுவதையும் சுற்றிக்கொண்டு உருளை வடிவமாக கட்டிலில் கிடந்தான். இவ்வளவுக்கும் கொட்டும் பனிக்காலத்தில் கூட, மின் வி சிறியின் சுழற்சிக்கு கீழே, முடிச்சவிழ்ந்த லுங்கியோடு திறந்தவெளி மார்போடு, கைகால்களை விரித்துப் போட்டு மல்லாக்க கிடப்பவன். மின்காற்று வீச்சில், நாற்றங்கால் போன்ற தலைமுடிக் கற்றைகளும், மார்பில் பதியமான மென்முடிகளும் பனித்திவலைகளோடு அசைந்தாடுவதில் சுகம் காண்பவன். சொந்த அம்மாவை விட, அந்த மின்னம்மா, தலையைக் கோதிவிட்டு, கன்னத்தை வருடிவிட்டு, கழுத்தை நீவி விட்டு, மார்பை தடவி விடுவது போன்ற அனுமான சுகவாசி…

இப்போதோ, முட்டிக்கால்களை வயிற்றுக்குள் வைத்துக் கொண்டு அந்தப் போர்வையில் நடுப்பகுதியை மத்தளம் போல் காட்ட வைத்து சர்வம் மாயா மயமாக படுத்திருந்தான்.

அப்படியும், எண்ண அலைகளை, உடம்பை போல் முடக்க முடியவில்லை. அவை சுருண்டு போவதற்கு பதிலாக சுழன்றன. நினைவுகள் வரிசைப்படி வராமல், முன்னும் பின்னுமாய் தாறுமாறாய் ஆட்டிப் படைத்தன. அத்தனையும் மாயா நினைவுகளே. பெற்றெடுத்த அம்மாவோ, பிறப்பித்த தந்தையோ, உடன் பிறந்த தங்கையோ, அவன் மனதிற்குள் மூச்சுக்கூட விடவில்லை. மாயா… மாயா… மாயா மட்டுமே. அவள், அவன் உருவத்திற்குள் உச்சி முதல் பாதம் வரை அருவமாக படருகிறாள். பின்னர், இவனை அருவமாக்கி, அவன் உடல் முழுவதும் உருவமாகி, அவனை உட்கொள்கிறாள். இப்படி ஒட்டு மொத்தமாக வந்தவள், துண்டு துண்டாகவும், துக்கடாகவும் வந்து, அவனைத் துண்டாடுகிறாள். அவன் முகத்திற்கு மூடியாகிறாள். பின்னர் எதிர் முகம் போட்டு, அவன் முகத்தை செல்லமாக முட்டுகிறாள். நெற்றிப் பொட்டில் கிச் சிக் சுகம். உதடுகளில் ஈரம். அப்புறம், இவன் அவளோடு மானசீகமாகப் பேசப்போகிறான். அதற்குள் அவள் முந்திக் கொள்கிறாள். என்னவெல்லாமோ பேசுகிறாள். முன்பு சுகப்படுத்திய அவளது பேச்சு இப்போதோ சோகப் படுத்துகிறது.

அந்தப் போர்வை, தானாகவே, அவனை உருட்டி விட்டதுபோல் கட்டிலின் விளிம்பு வரை அவனை கொண்டுவந்து போட்டுவிட்டு, கிழே அவனைப் போலவே சுருண்டு விழுந்தது. அப்படியும், அவன் பிரக்ஞை அற்றவனாய் அசைவற்றுக் கிடந்தான். அந்தப் போர்வையை உருவித் தள்ளிய கரங்கள், அவனை, கழுத்தை பிடித்து தூக்கி கட்டில் சட்டத்தில் உட்கார வைக்கிறது. குப்புற சாயப் போனவனை, உச்சி முடியை விடாப்பிடியாய் பிடித்து, நிமிர்த்திய நிலையில் வைக்கிறது. ஆனாலும், அவன் கண்களோ, அருகே நிற்பவரை உள்வாங்காமல் திறந்தவெளியாகிறது. அதே சமயம் சிறிது நேரத்தில் உச்சி முடி வலியில், கண்களில் சித்தப்பா பதிவாகிறார். இடுப்பில் கை வைத்தபடியே, அவனை ஏகத்தாளமாக பார்க்கிறார். முழங்கால் வரை நீண்ட கால் சட்டையோடும், தொளதொளப்பான பனியன் ஜிப்பாவுடனும் நிற்கிறார். எதனையும் என்ன என்று கேட்பது போன்ற மேலெழுந்த பார்வை. ஆசையில் பாதி நரைத்துப் போனதுபோன்ற மீசை கையில் ஒரு டென்னிஸ் மட்டையை கொடுக்கலாம் போன்ற உடல்வாகு.

‘எப்போ வந்திங்க சித்தப்பா என்று தட்டுத்தடுமாறி கேட்கப்போன முத்துக்குமார், கடைசி வார்த்தையான சித்தப்பாவை, மாயாவாக்குகிறான். ஆனாலும், அவர் அதை பொருட்படுத்தாமல், அண்ணன் மகனை ஆய்வாகப் பார்க்கிறார். ஊருக்குத்தான் அவன் அண்ணன் மகன். அவரை பொறுத்த அளவில் அண்ணி மகன்தான். அண்ணனோடு வந்த உறவானாலும், அந்த அண்ணியோடு ஒப்பிடும்போது, இவருக்குகூடப்பிறந்த அண்ணன் துரத்து உறவு மாதிரி. கர்ணண் மாதிரி, அந்த அண்ணியின் வயிற்றில் அவள் திருமணத்திற்கு முன்பே வயிற்றுக்குள்தான் கருப்பட்டது போன்ற பாசப்பிணைப்பு. இதனால்தான், அண்ணி, நேற்று மாலை டெலிபோனில் பேசிய உடனேயே பணத்தைப் பற்றி, பொருட்படுத்தாமல், டில்லியில் இருந்து பறந்து வந்து விட்டார்.

‘என்னடா இதெல்லாம்.? சித்தியும் பசங்களும் எப்படி இருக்காங்கன்னு கூட உனக்கு விசாரிக்க தோணல. ஒருவேள யாரோ மாயாவோ, கியாவோ… அவள் எப்படி இருக்கான்னு, நான் உன்கிட்ட கேக்கலைன்னு கோபமா?

முத்துக்குமார், மவுனமாய் தலைதாழ்த்தியபோது, சித்தப்பா அதிர்ச்சி வைத்தியரானார்.

சரி… எப்போ… அவள் உன் மனசில இருந்து இந்த சித்தப்பாவ துரத்திட்டாளோ… அப்போ… எனக்கு உன்கிட்ட வேல இல்ல. வாரேன்

சித்தப்பா, ஒரு காலை தரையில் அழுத்தி, மறுகாலை தூக்கி வைத்து ஆடலரசனாய் நின்றார். அவருக்கும் கலக்கந்தான். போனால் போகட்டும் என்று பயல் கண்டுக்காமல் இருப்பானோ என்ற கவலை. கூடவே காலும் வலித்தது. வலித்த காலை ஒரடி முன் வைத்து, அவனை ஒரக்கன்னால் உள்வாங்கியபோது

முத்துக்குமார் தள்ளாடி தள்ளாடி, எழுந்து தத்தித் தத்தி நடந்து, அவர் மார்பில் கால்கள் குடைசாய சாய்ந்தான். சித்தப்பாவின் முதுகின் இருபக்கமும் கைகளை போட்டுக் கொண்டு கேவிக் கேவி அழுதான். சோகத்தின் முளைகள் போலான குறுந்தாடி, அவர் கழுத்தை ஊசி முனைகளாய் குத்தின. முன்பெல்லாம் காற்றடைத்த டயர் போல், விம்மி புடைத்த, அவன் தோள்கள், இப்போது பஞ்சராகிக் கிடந்தன. சித்தப்பா, அவனைத் தட்டிக் கொடுத்தார். உடனே அவன் புலம்பினான். தாயிடம் சொல்லாத புலம்பல். தனக்குதானே வெளிப்படுத்திய சமிக்ஞைகளின் வார்த்தை வடிவங்கள்.

‘என்னை அறியாமலே இப்படி ஆயிட்டினே சித்தப்பா… ஆக்கிட்டாள்ே சித்தப்பா… எல்லார் கண்ணுக்கும் கேவலமா போயிட்டேனே…’

சித்தப்பா, அவனை தூக்கி நிறுத்தி, சொந்தக் காலில் நிற்க வைத்தார். பிறகு அவனை பழைய பதினைந்து வயது சிறுவனாக்கி, தன்னை இருபதைந்து வயது இளைஞனாக்கி அதே பழைய குரலில் அதட்டலும், அன்பும் கலக்க பேசினார்.

இந்தா பாருடா முத்து.! நீ கேவலமா ஆகிடவும் இல்ல. காதலும் கேவலம் இல்ல… அது நம்ம சங்கப் பாடல் சொல்வது மாதிரி வானை விட பெரியது. கொடுக்கத் தெரிந்தது. எடுக்க தெரியாதது. நடப்பதை நம்பாமல், நம்புவதை நடப்பதாக நினைத்து முட்டாளின் சொர்க்கத்தில் அல்லது நரகத்தில் ஒருவரை கொண்டுபோய் போடுவது இந்தக் காதல். அதனால இப்படி ஆனதுக்கு, நீ இப்போதைக்கு வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. புறப்படுடா! காலாற நடந்துட்டு வருவோம். நடக்கும்போதே உன் காதல் கதையை சொல்லு… யார் கண்டா? அந்த கதைக்குள்ளேயே ஒரு தீர்வு இருக்கலாம்.’

‘நான் நடக்கிற நிலையில இல்லையே சித்தப்பா. ”

‘உன்னை நான் நடக்க வைக்கிறேன்.’

என்றாலும், முத்துக்குமார் சித்தப்பாவின் பேச்சை பொருட்படுத்தாதது போல் நின்ற இடத்திலேயே நெடுமரமாய் நின்றபோது,சித்தப்பா அவன் தோளில் கை போட்டபடியே அறிவுரையாய் பேசினார்.

நீ இப்படி முடங்கியாதலேயே நம்ம குடும்பமும் முடங்கிக் கிடக்கிறது தெரியுமாடா? அம்மா துடிக்கிற துடிப்பு, உன் துடிப்பு ஆகாட்டால்… அப்பாவோட தவிப்பு, உன் தவிப்பு ஆகாட்டால்… அண்ணன் பழைய நிலைக்கு வந்த பிறகுதான் தனக்கு கல்யாணம் நடக்கணுமுன்னு நிச்சயித்த திருமண தேதியை தள்ளி வைக்கச் சொல்லும் உன் தங்கை திலகாவின் பாசம், உன் மனசுல தைக்காட்டால், நீ என்னடா மனுஷன்? சரி… நானாவது வாக்கிங் போயிட்டு வரேன்.’

‘நானும் வாரேன் சித்தப்பா

சித்தப்பாவும் முத்துக்குமாரும் அந்த மேல்தள ஒற்றை அறையிலிருந்து விடுபட்டு, கிழ்த்தள வீட்டிற்கு வந்தார்கள். காலடிச் சத்தம் கேட்டு அதற்கென்றே காத்திருந்தது போல் கதவை திறந்த அண்ணி, விளக்கைப் போட்டுவிட்டு, கைகளை நெறித்தாள். கோதி முடியாத கொண்டையோடு, தாறுமாறாக தலையை கவிழ்த்த படி நின்றாள். கண்கள் நீர் மேகங்களாயின. இதை தாள முடியாத மகள் திலகா, அம்மாவை தன் மார்போடு சாத்திக் கொண்டாள். பின்னர், அம்மாவை விட்டுவிட்டு, சித்தப்பாவின் முன்னால் வந்து அவர் கைகளை பிடித்துக் கொண்டு கேவினாள்.

சித்தப்பா, ஆறுதலாக பேசுவதற்கு முன்பே, முத்துக்குமாரின் அம்மா, மைத்துனரிடம் தொலைபேசியில் சொன்னதையே சொன்னாள்.

மூணு மாசமா இப்படியே கிடக்கான். ஒவ்வொரு மாத கடைசிலேயும் எப்படியோ பாதி அளவுக்கு தேறி, முதல் தேதி ஆபீசு போறான். ஆனா மத்தியானமே லீவு போட்டுட்டு திரும்பிடுறான். பேசாம அந்த வேலையிலிருந்து அவனை நின்னுடச் சொல்லுப்பா. இவனை எங்களால காப்பாத்த முடியும்.’

அம்மாக்காரி, வெறுமையாக தன்னையும் மகனையும் மாறிமாறி பார்த்துவிட்டு, மைத்துனரை, தான் கட்டிய புடவை போல் கசிந்து நின்று பார்த்தாள். திலகா பின்னோக்கி நடந்து அம்மாவோடு ஒட்டிக் கொண்டாள். இரட்டைத்தலைகளைக் கொண்ட ஒற்றை உடம்பான தோற்றம்.

சித்தப்பா, தன்னம்பிக்கை எதிரொலிக்கும் குரலில், நன்னம்பிக்கையை காட்டும் முகபாவத்தோடு பேசினார்.

அதான் நான் வந்துட்டேனே. என் பொறுப்புல விடுங்க. டேய் முத்து! உள்ளே போய் ஜாக்கிங்கா வா. அதாண்டா… உன் குழாய் டவுசர போட்டு கேன்வாஸ் பூட்ஸோட வாடா.’

‘நான் கெட்ட கேட்டுக்கு இதுவே போதும் சித்தப்பா.’

“இப்படி வந்தியானால், இந்த இருட்டுல போலீஸ்காரன் உன்னோடு என்னையும் சேர்த்து கூட்டிட்டுப் போயிடுவான். சரி… வேட்டிய கட்டிக்கிட்டு ஒரு சட்டையை போட்டுக்கிட்டாவது வா.”

சிறிது நேரத்தில், சித்தப்பா, முத்துக்குமாரை அந்த வீடு உள்ள குறுக்குத் தெருவிற்கு கொண்டு வந்தார். இருள், மேகமாய் கவிழ்ந்திருந்தது. விட்டு விட்டு எரிந்த ஒரு தெருவிளக்கு மின்வீச்சுக்களாய் தோற்றங்காட்டின. பேச்சு மூச்சில்லாத மவுனம், அந்த இருளுக்கு அழுத்தம் சேர்த்தது. நடக்க நடக்க முத்துக்குமார் சித்தப்பாவிடம் தானாய், முதல் தகவல் அறிக்கையை வாசிப்பது போல் ஒப்பித்தான்.

“ஆபிசுல என்ன விட மேலானவங்க எத்தனையோ பேரு இருக்காங்க சித்தப்பா. அவள் மேல… அதான் அந்த மாயா மேல… பைத்தியமா இருந்தவங்களும் உண்டு. என்னை வி ட அழகானவங்க. உயர்ந்த பதவில இருக்கிறவங்க. ஆனா அவள், ஒதுங்கிக் கிடந்த என்னை தேடிப் பிடித்து காதலித்தாள். ஒருநாள் ‘நீ யார் கிட்டயும் பல்லைக் காட்டாதனால உன்கிட்ட பல்லைக் காட்டறேன்னு சிரித்துச் சொன்னாள். ஆபீசுல தாழ்வு மனப்பான்மையில தவித்த எனக்கு, அவள் ஒரு ஆறுதலானாள். முதல்ல, என்ன கடற்கரைக்கு இழுத்துட்டுப் போனது அவள்தான். அப்புறந்தான், நான் அவள சினிமா தியேட்டருக்கு இழுத்துதுட்டுப் போனேன். இப்ப என்னடான்னா, என்னை இழுபறில விட்டுட்டாள் சித்தப்பா.”

விக்கியும், திக்கியும், தட்டுத்தடுமாறியும் பள்ளிக்கூட மாணவன்போல ஒப்பித்த முத்துக்குமார், சிறிய நடைபயண நேரத்தில் சரளமாக பேசப்போனபோது, ஏழெட்டு மிருக உருவங்கள் கண்களில் தட்டுப்பட்டன. இருளின் அடர்த்திகளாக காணப்பட்டன. நிழலும் நிசமும் ஒன்றித்த நாய் வடிவங்கள். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் இருட்டில் வருகிறவர் தெரிந்தவராக இருந்தாலும், புரபஷனலாக குரைக்கும் இந்த நாய்கள், இப்போது பிஸியாய் இயங்கின. இவற்றை உற்றுப்பார்த்த சித்தப்பா, முத்துக்குமார் முகத்தை அந்த, நாய்க்கூட்டத்தின் பக்கமாக திருப்பி வர்ணித்தார்.

‘இதுல மொத்தம் எட்டு நாயுங்க இருக்குது. இதுல அதோ ஒடுது பாரு அதுதான் பெண்நாய். மீதி எல்லாம் ஆண்நாயுங்க. நல்லா பாருடா… அந்த பெண் நாய் அந்த ஏழு நாய்களில், சிறுத்தை நிறத்துல இருக்குது பாரு அந்த நாய்… அது நிற்கும்போது மட்டுமே நிக்குது. ஒடும்போது மட்டுமே ஒடுது. ஏன்னா, இது காதலிக்கிற ஒரே ஆண்நாய் அதுதான். ஆனால், எல்லா ஆண் நாய்களும் தங்களைதான், அது காதலிக்கிறதா நினைச்சுட்டு ஓடுது பாரு! எந்தப் பெண்நாயும், காதலிக்கிற நாய் மற்ற நாய்களோட போட்டிப்போட முடியாம பின்தங்கினா, ஒரு கட்டம் வரைக்கும் காதல் நாய்க்கு’சலுகைக் கொடுக்கும். பிறகு, கிடைக்கிற நாய்களுல ஒரு நாய தேர்ந்தெடுக்கும். இதுதான் மிருக விதி.’

சித்தப்பா, தான் சொன்னதை நிரூபிப்பது போல் கிழே குனிந்து ஒரு மண் கட்டியை எடுத்து நாயக நாய் மீது பட்டும் படாமலும் எறிந்தார். உடனே அந்த நாய், காதலியை துறந்து, குழுவிடமிருந்து விலகி எதிர்ப்பக்கமாய் ஊளையிட்டபடியே ஒடியது. உடனே அந்த பெட்டைநாயும் தன்னைச் சூழ்ந்த இதர நாய்களை குரைத்தும் கடித்தும் அபிமன்யு போல் ஊடுருவியபடியே தனித்தோடிய தனது நாய்க் காதலனை நோக்கி செல்லச் சிணுங்கலாய் சிணுங்கியபடியே ஒடியது.

சித்தப்பாவே, இப்போது ஒரு காதலனாய் மாறிப் பேசினார்.

‘எல்லா உயிர்களையும் இரண்டு அடிப்படை அம்சங்களே ஆட்டிப் படைக்குதுடா. ஒன்று, உணவு தேடல்-உண்ணல். இரண்டாவது காதல்-உறவாடல். உணவோ அல்லது அதன் தேடலோ குறிப்பிட்ட நேரத்தில் முடிந்து விடும். ஆனால், இந்த காதல் மட்டும்தான் உடல் முழுவதிலும் உள்ளத்தின் பரப்பிலும் ஊடுருவி நிற்கக் கூடியது.’

‘இப்போதாவது என் பிரச்சனைய புரிஞ்சிட்டிங்களே சித்தப்பா.’

‘புரிஞ்சிக்கிட்டேன். அதோட உனக்குப் புரியவைக்கிறேன். நீ மட்டுந்தான் காதலில் சிக்கியதாய் நினைக்காதே. காதல் நாய்க்கும் உண்டு, ஈக்கும் உண்டு, என்பதை சொல்றதுக்குதான் இதைச் சொன்னேன்.”

சித்தப்பா பேச்சின் தாத்பரியம் புரியாமல், முத்துக்குமார், பிடரியில் கைகளை கோர்த்தபோது, சித்தப்பா அவற்றை விலக்கி அவன் கோணல்மாணல்களை நேராக்கி மேற்கொண்டு வழி நடத்தினார்.

சிறிது தூரம் நடந்திருப்பார்கள். திடீரென்று முத்துக்குமார் ஒருகாலை துக்கி பெருவிரலை பிடித்துக் கொண்டு அங்குமிங்குமாய் ஆடி, எந்த சைக்கிள் அவன் மீது மோதியதோ, அந்த சைக்கிளின் இருக்கையை ஆதாரமாக பிடித்துக் கொண்டு குனிந்து நின்றான். வலியில் பல்லைக் கடித்தான். சித்தப்பா அவனை தன்மீது சாய்த்துக் கொண்டு, கோணல் மாணலாக நின்ற சைக்கிள் பையனை உற்றுப் பார்த்தார். அவன் சைக்கிள் இருக்கை வரை தலையை குனிந்து கொண்டு லேசாய் நிமிர்வதும், மீண்டும் குனிவதுமாக இயங்கினான். அந்த சைக்கிளின் பின்பக்கம் பிளாஸ்டிக் பெட்டி. அதன் பச்சை பரப்பை மறைத்தபடி தலையற்ற கொக்குகள் போல் ஆவின் பால் உறைகள்… அந்த பெட்டி முழுக்கும் தேன் கலக்காத பாலோட்டம். முத்துக்குமார் அந்த பையனை எதிரியாக பார்த்து, அடக்கி வைத்த உணர்வுகளுக்கு வார்த்தைகளால் வடிவம் கொடுத்தான்.

ஒனக்கு மூள இருக்காடா? லெப்டல போக வேண்டியவன் ரைட்டுல வந்தா என்னடா அர்த்தம்..? வலிய வந்து மோதுறியே. உனக்கு அறிவிருக்கா?

‘மன்னிச்சிடுங்க அண்ணே. பால் லாரி வர லேட்டாயிட்டுது. முப்பது வீடுகளுக்கு பால் குடுக்கணும். அதனால அவசரத்துல…’

‘உன் அவரசத்துக்கு நாங்கதானா கிடைச்சோம்?

அப்புறமா திட்டுங்கண்ணே. நீங்க வீட்டுக்கு வரும்போது, அம்மா காபியோட வாசலுக்கு வரவேண்டாமா? உங்க வீட்டுக்கும் நான்தாண்ணே பால் கொடுக்கேன்… போகட்டுமா…’

‘நான் மட்டும் உஷாரா இல்லாட்டா, நீயே எனக்கு பால் ஊத்தியிருப்பே’

அந்தச் சிறுவன் மழுப்பலாக சிரித்து மழுங்கலானான். முத்துக்குமார் ஒரு உருமல் உருமி விட்டு, சித்தப்பாவின் கையைப் பிடித்து, அவரை, இவனே வழிநடத்துவது போல், தனது காதல் கதையின் அடுத்த எபிசோடை அவிழ்த்தான்.

நானும் மாயாவும், உடலளவுல இடைவெளி கொடுத்தாலும், மனதுக்கு இடைவெளி கொடுக்காமால் நெருக்கமா பழகினோம். ஒருநாள், வழக்கம்போல கடற்கரைக்கு ஸ்கூட்டர்ல ஒண்ணாத்தான் போனோம். என் இடுப்பச் சுத்தி கையை வளைத்து வழக்கம்போல பிடித்திருந்தாள். ஆனால், கடற்கரைக்கு போனதும் ஆளே மாறிட்டாள். முத்து! நான் உனக்கு ஒரு அதிர்ச்சியான செய்திய சொல்லப்போறேன். நான்தான் உன்னை வலிய காதலிச்சேன். இப்பவும் உயிருக்கு உயிரா நேசிக்கிறேன். இல்லங்கல. ஆனால், என்னை படிக்க வைத்து ஆளாக்குன என் அன்ணன், அவரோட நண்பனை நான் கட்டிக்கணுமுன்னு பாசமா சொல்லிட்டார். என்னால மீற முடியல. பாசமுன்னு சொன்ன உடனே எனக்கு ஐந்து பேர் நினைவுக்கு வருது. அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, காதலன் நீ… கடைசில நீ வந்தாலும், உன் உறவு கடை நிலை உறவல்ல. ஆனாலும் நாலுநாலுதான்… ஒண்ணு ஒண்ணுதான். நாம் கால் பதித்த இந்த கடற்கரை மண், நம் காதலுக்கு புதைமண் என்பது, இப்பத்தான் புரியுது. என் ஒருத்திக்காக என்னை மீட்க நினைக்கிற குடும்பத்தையும் கீழே பிடித்து இழுத்து இந்த மண்ணுக்குள்ள மூழ்க வைக்க விரும்பலன்னு. பொறிஞ்சிட்டாள்.’

‘சிரியஸா பேசினாளா… சிரியலா பேசுனாளா…’

‘சிரியஸாத்தான் சித்தப்பா. பேசி முடித்ததும் திரும்பி பாராம போயிட்டாள். இப்படியும் ஒரு பெண் இருப்பாளா சித்தப்பா.’

‘இருப்பாள்கள், இருப்பான்கள் என்பது மாதிரி சித்தப்பா அவனை அதிர்ச்சியாக பார்க்காமல், சராசரித் தனமாகவே பார்த்தார். பிறகு அவன் முதுகை தள்ளித் தள்ளி நடக்க வைத்தார். இருவரும் அந்தத் தெருவின் திருப்பு முனைக்கு வந்தார்கள். அந்த குறுக்குத்தெருவை வழிமறித்த பிரதான தெரு அவர்களுக்கு வலிய வந்ததுபோல் தோன்றியது. பச்சை இரவாய் தோற்றங்காட்டிய வாகை மரம், இருள் குடமாய் கவிழ்ந்திருந்தது. திடீரென்று பத்து பதினைந்து காகங்கள் அதன் உச்சியில் இருந்து மேலே எம்புகின்றன. அதே சமயத்தில் அந்த மரக்கிளைகளின் முச்சந்தியில் இருந்து, கலர் பல்பு கண்களோடு ஒரு வெள்ளைப் பூனை கிழ்நோக்கி இறங்குகிறது. எம்பிப் பறந்த காகங்கள் தாழப் பறந்து, இடுக்கி வைத்த நகக்கால்களை நீட்டி, அந்தப் பூனையின் பிடறியில் லாகவமாய் அடிக்கப் போகின்றன. எதிரே ஒரு அசோக மரம் இந்தக் காட்சியை முக்காடு போட்டு பார்க்கிறது. அந்தப் பூனை அந்த மரத்துாரில் இருந்து ஒரு புதருக்குள் குதிக்கிறது. சித்தப்பா மீண்டும் வருணனையாளனாய் ஆகிறார்.

‘பூனைக்கு மணிகட்ட முடியுமோ முடியாதோ. ஆனால் அதுக்காக காத்திருக்காமல் அதை துரத்த முடியுமுன்னு இந்த காகங்கள் காட்டுது பார்.’

முத்துக்குமார் ஒன்றும் புரியாமல் சித்தப்பாவையே பார்க்கிறான். சித்தப்பாவின் ரசனையை மனதிற்குள் சபிக்கிறான். சிறிது நடந்தால், எதிர்ப்பக்கம் ஒரு பங்களா வீட்டு வளாகத்தில் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருத்தி, கைப்பம்பை பிடித்து வேகவேகமாய் அடிக்கிறாள். அந்தச் சத்தத்திற்கு அவளது மூச்சே பின்னணி இசையாகிறது. அந்த பம்போடு கிழே குனிகிறாள். மேலே எழும்புகிறாள். வீட்டின் வெளி வெளிச்சத்தில் அவள் துருப்பிடித்த முகம் யந்திரமயமாக மேலும் கீழுமாய் ஆடுகிறது. சத்தம் கேட்டு அங்கே பார்த்த முத்துக்குமார், சித்தப்பாவிடம் மீண்டும் புலம்புகிறான்.

‘வீட்ல இருக்கும் போதாவது பரவாயில்ல சித்தப்பா. ஆபி சுல போயி அவளப் பார்த்த உடனே ஷாக்காயிடுது. அவளுக்கு ஒரு சின்ன இறக்கமாவுது இருக்கட்டுமே. எப்படி எதுவுமே நடக்காதது மாதிரி எல்லார்கிட்டயும் அரட்டை அடிக்கிறாள் தெரியுமா? ஆனாலும் காதல் நீங்க சொன்னது மாதிரி வானைவிட பெரியதுதான். அவளை என்னால மறக்க முடியலையே சித்தப்பா.’

“வானம் என்றால் சூன்யம் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. அப்படி அவள் சூன்யமாக ஆகியிருக்கலாம். அடிமன சோகத்தை வெளிமன ஆரவாரங்களாக காட்டலாம். ஒருவேளை நீ அவளை வெறுக்க வேண்டும் என்பதற்காக அப்படி நடந்து கொள்ளலாம்.’

முத்துக்குமாருக்கு மாயா மீது லேசாய் கழிவிரக்கம் ஏற்பட்டது. அப்போதுதான் குறுக்குத்தெருவையும், பிரதான தெருவையும் தாண்டி மெயின் ரோட்டுக்கு வந்துவிட்டது முத்துக்குமாருக்கு புரிந்தது. கூடவே, பொழுது புலர்வதற்கு அடையாளமாக அரசு பேருந்துகள் யந்திர சேவல்களாய் கூவுகின்றன. அதன் சக்கரங்கள் இறக்கைகளாய் தரையை அடித்தபடியே பறக்கின்றன. அதிக தூரம் நடந்து விட்டார்கள். அவ்வப்போது வீட்டுக்குப் போகலாம் என்று முரண்டு செய்த முத்துக்குமாரை, சித்தப்பா, உடும்பு பிடியாக பிடித்துக் கொண்டார். பிறகு அவனை நிறுத்தி அங்கே பார் என்று எதிர் திசையை ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார்.

ஆண்களும் பெண்களும் இடையிடையே சிறுவர்களுமாய் வி ரவிக் கலந்த ஒரு அழுக்குக் கூட்டம் எதிர்ப்படுகிறது. ஒவ்வொருவர் கையிலும் ஒரு இரும்பு கம்பி செங்குத்தாய் நிமிர்ந்து நிற்கிறது. தோளில் மண்வெட்டி கவ்விக் கொண்டிருக்கிறது. பெண்கள் கைகளில் ஒப்புக்கு கூட, ஒரு கண்ணாடி வளையல் இல்லை. செம்மண் துகள்களே குங்குமமாகின்றன. காது, மூக்குத் துவாரங்கள், சதைத் துளைகளாய் தோன்றுகின்றன. எங்கேயோ ஒரு இடத்தில் குழிபறித்து தங்களைத் தாங்களே புதைத்துக் கொள்ளப் போகிற மாதிரியான புழுதிக் கூட்டம். அல்லது புதை குழிகளில் மரித்தெழுந்தது போன்ற செம்மண் துகள்கள் அப்பிய மனித மந்தை, படையெடுப்பு வீச்சில் நடைபோடுகிறது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லை. ஆனாலும், அந்த மூன்று அடுக்கு வரிசை கலையவில்லை. வேகவேகமாய் நடக்கிறார்கள். சித்தப்பா, அவன் கேளா காதுக்கு சத்தம் போட்டே பேசுகிறார்.

‘இவர்கள் சாலைத் தொழிலாளர்கள். கொதிக்கும் தாரில் கோணிப்பை செருப்புகளோடு, எக்கிய வயிறுகளோடு நிற்பவர்கள். இதோ நீயும் நானும் நடக்கோமே… இதே மாதிரி ஒரு தார்ச்சாலையை எங்கேயோ போடுவதற்காக இங்கயே ஆயத்தமாகிறவர்கள். இவர்கள் அந்தச் சமயத்தில் தவிர எந்த சமயத்திலும் தாங்களை ஆண், பெண் என்று அடையாளப் படுத்தாத மானுடக் கூறுகள்.’

சித்தப்பா! பழையபடியும் கவிஞனாகிட்டிங்க. போலிருக்கே. அவங்க கிடக்காங்க. என் சப்ஜெட்டுக்கு வாங்க சித்தப்பா

சித்தப்பா, அவனை புருவச் சுழிப்பாய் பார்க்கிறார். ஆனாலும், அவன் தோளில் கைபோட்டு நடக்கிறார். ஒருகிலோ மீட்டர் நடந்து, ஒரு சாலை மேட்டுக்கு வந்து விட்டார்கள். எதிரே இன்னொரு கூட்டம். இதில் பெண்கள் கண்ணாடி வளையல்கள் போட்டிருந்தார்கள். குங்குமம், நெற்றிப் பொட்டுகளை மறைத்திருந்தது. வலது கை விரல்கள் மடங்கி தூக்குப் பைகளை பிடித்திருந்தன. ஒரு சிலரின் தலைகளில் பாண்டு கூடைகள், அந்தக் கால போலீஸ் தொப்பிகள் போல் கவிழ்ந்து கிடந்தன. காய்ந்த தலைகளும் உண்டு. பூக்களை வேய்ந்த தலைகளும் உண்டு. வரிசைக் குலையாமல் நடந்தாலும் இதில் அணிவகுப்பு நடையில்லை. சக்திக்கேற்ற நடை. இதனால் ஜோடிகள் மாறுகின்றன. பேச்சுகள் திசை திரும்புகின்றன. சித்தப்பா அந்தக் கூட்டத்தை இவனுக்கு அடையாளப் படுத்துகிறார்.

இவர்கள் சாலை தொழிலாளர்களை விட, ஒரே ஒரு படி மேலான கட்டிடத் தொழிலாளர்கள். இவர்களிலும் மனைவிகளை மேஸ்திரிகளுக்கு பறிகொடுத்த பெரியாட்கள் உண்டு. மேனா மினுக்கிகளிடம், கணவன்களை திருடுகொடுத்த சித்தாள் பெண்களும் உண்டு. இந்த காதல் மாறாட்டத்தில் அனாதைகளான சிறுவர் சிறுமிகளும் உண்டு. ஆனாலும் இவர்கள் உள்ளத்தை உழைப்பில் கரைப்பவர்கள். துக்கங்களை, சுண்ணாம்பு கலவைகளாய் ஆக்குகிறவர்கள். சாரப்படிகளில் ஏறி ஏறி, மனப்பாரங்களை இறக்குகிறவர்கள். இவர்களுக்கு சாரங்களில் ஏறுவது நரகமென்றால், சமதளத்திற்கு வருவது சொர்க்கம். உழைப்பையே சொர்க்கமாகவும், நரகமாகவும் ஆக்கிக் கொண்ட கூட்டம்.’

முத்துக்குமாருக்கு நகச்சூடாக இருந்த எரிச்சல் அனலானது. சித்தப்பா, தனது பிரச்சனைக்கு திர்வு காட்டுவார், என்றால் அவரோ திர்த்துக் கட்டுவது மாதிரி பேசுகிறாரே. பழையபடியும் அவரை மாயாவிற்குள் கொண்டுவர வேண்டும். எப்படி…

அதோ பாருங்க சித்தப்பா! உயரமா செஞ்சிவப்பா ஒரு இளம்பெண் போறாள் பாருங்க. ஒரு சித்தாள் சிறுவன் தோளுல கையப் போட்டுட்டு, அவன் காதளவுக்கு குனிந்து கிசுகிசுப்பா பேசறதும், தலையை நிமிர்த்தி மற்றவர்கள பார்க்கிறதுமா நடக்காளே… அதான் சித்தப்பா… சடை போட்ட கொண்டையோட, பிறைநிலா மாதிரி கிளிப்ப மாட்டிக்கிட்டு போறாள் பாருங்க…. அவளுக்கு சல்வார் கம்மீஸ் மாட்டினால், அது அசல் மாயாதான்.”

சித்தப்பா அவனை திடுக்கிட்டுப் பார்த்தார். தலையை மேலும், கீழுமாய் ஆட்டிப் பார்த்தார். அவன், தன் பேச்சை விரயமாக்கியதுபோல, அவனை விரயமாக பார்த்தார். பின்னர், அவனை விட்டு சிறிது விலகி தனித்து நடந்தார். வேகவேமாய் நடந்தார். இதனால் அவன்தான், அவர் நடைக்கு ஈடுகொடுக்கும் வகையில் எக்கி எக்கி நடந்தான்.

இருவரும், ஒரு சாலைச் சந்திப்பு வட்டத்தை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, திரும்பி நடந்தபோது ஒரு மணிநேரம் ஒடி இருக்கும்.

காய்கறிகள் ஆங்காங்கே கடைவிரித்திருந்தன. நடமாடும் பழக்கடைகளான தள்ளுவண்டிகள் நடைபோட்டன. ஒய்யாரக் கொண்டையோடும், ஒய்ந்துபோன தலையோடும் இளம்பெண்களும், கிழவிகளுமாய் குறுக்குநெடுக்குமாக போய்க் கொண்டிருந்தார்கள். வீட்டுக்காரிகளை விமர்சிக்கும் உரையாடல்கள். எச்சிச் சோறை சாப்பிடாதடி என்ற உபசேதங்கள். அவள் கிடக்காள் பிஸ்தா’ என்ற சவால் மொழிகள். அத்தனைபேரும் வீட்டுவேலை செய்கிறவர்கள். சங்கம் அமைக்காத குறையாக சங்கமித்தவர்கள். இவர்கள் கடந்துபோன பேருந்து நிலையங்களில் எதிர் திசையை நோக்கியபடி காய்கறிகள் வாங்கவும், பூக்கள் வாங்கவும் புறப்பட்ட ஆண்பெண் கூட்டம்… “என்னைப் பார்க்காமல் என் மனசை பார்” என்பதுபோல் பலாத்தோல் பாதி பிளந்து நிற்க அதன் உள்ளும் வெளியேயும் வெள்ளை கத்தாழைகள் போல் சுளைகள்… இரத்தச் சதைகள் போன்ற தர்கிஸ் பழக் குவியல்கள். அருகிலேயே அரிவாளை சுமக்கும் தேங்காய் குவியல்கள். ‘சூடு வைப்பியா என்று கிண்டலும், கேலியுமாய் கேட்கும் ஒரு குடும்பத்தை பின்னிருக்கையில் அமர வைத்து ஆட்டோவை முழங்க வைக்கும் டிரைவர்… எங்கு நோக்கினும் இயக்க நிலை….

அத்தனை பேரையும், அத்தனையையும் கடந்து, சித்தப்பாவும், முத்துக்குமாரும் வீடு இருக்கும் குறுக்குத் தெருவிற்கு மீண்டும் வருகிறார்கள். சித்தப்பாவின் புருவங்கள் ஆச்சரியமாய் உயர்ந்து, விழிகளை மேலிழுக்கின்றன. முன்பு பார்த்த அந்த பெட்டைநாய் இப்போது இன்னொரு தடிநாயோடு இணைந்திருக்கிறது. உடலால் பிரிக்க முடியாத இணைப்பு. இந்த நாய் காதலித்த சிறுத்தை நிற நாயோ, வேறொரு பக்கம் ஒரு நாய்க்குட்டியோடு விளையாடி கொண்டிருக்கிறது. நாய்க்குட்டி நான்கு கால்களையும் மேலே தூக்கி கழுத்தை வளைக்கிறது. சிறுத்தைநாய், குட்டியை பொய்கடியாய் கடிக்கிறது.

சித்தப்பா முத்துக்குமாரை பார்க்காமலே சலிப்போடு பேசுகிறார்.

‘இந்த நாய்களுக்கு இருக்கிற அணுகுமுறைகூட மனுசனுக்கு

முத்துக்குமார், சித்தப்பாவை திகைத்துப் பார்க்கிறான். அவர் ஏன் அப்படி தன்னிடம் பாராமுகமாய் ஆனார் என்பதை அறிந்து கொள்ள பார்க்கிறான். இணைந்த அந்த நாய்களையும், இணையாமல் போன நாயக நாயையும் அழுத்தமாய் பார்க்கிறான். ஏதோ ஒன்று தட்டுப்படுகிறது. கூடவே, மாயாவின் நினைப்பும் வந்ததால், அந்த தட்டுப்படல், தட்டுப்பாடாகிறது.

இந்தச் சமயத்தில், இருவரும், வீட்டை நெருங்க போகிறார்கள். அவர்களை வழிமறிப்பது போல் ஒரு பையன் இடைச்செறுகலாய் சைக்கிளோடு வந்து நிற்கிறான். அந்த சைக்கிளின் கேரியரில் அடுக்கடுக்காய் வைக்கப்பட்ட நாளிதழ்களில் ஒன்றையும், முன்னால் தொங்கிய தூக்குப் பையிலிருந்து ஒரு வார இதழையும் எடுக்கிறான். வழக்கம் போல் நாளுக்குள் வாரத்தைப் புதைத்து காலமாற்றம் செய்யப்போனவன், அவற்றை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி முத்துக்குமாரிடம் அதை நீட்டுகிறான். வர்ணிப்போடு கொடுக்கிறான்.

‘உங்களுக்குத் தான்னே இந்த பேப்பர். வாங்கிக்கங்க அண்ணே. எனக்கு ஒரு கைவீச்சு மிச்சம்.’

முத்துக்குமார் வாங்காமல் நின்றபோது, சித்தப்பா வாங்கிக் கொள்கிறார். ஒற்றை எலும்பால் ஆனது போன்ற அந்தச் சிறுவன், அவரை நன்றியோடு பார்க்கிறான். சித்தப்பா, அவனிடம் தனது சந்தேகத்தை கேட்கிறார்.

‘தம்பி… நீ அப்போ இவன சைக்கிள்ல மோதினியே அவன்தானே.”

ஆமாம் சார். அப்ப பால் பையன், இப்போ பேப்பர் பையன், இன்னும் இரண்டு மணி நேரத்துல ஸ்கூல் பையன். சாயங்காலமா சின்ன பிள்ளைங்களுக்கு டியூசன் வாத்தியார்

அப்போ நீ பள்ளிக்கூடத்துல படிக்கிறியா?

‘ஏன் இப்படி நம்பாதது மாதிரி கேட்கறீங்க. நான் படிக்கக்கூடாதா?

அப்படிச் சொல்வேனா? படிக்கிற பையன் இப்படி உடம்ப வருத்தணுமா? அப்பா, அம்மா உன்னை தெருவுல விட்டுட்டு என்ன செய்றாங்க?

‘என்னசார் செய்யுறது? அப்பன் குடிகாரன். அம்மா நோயாளி. எங்க அக்காவ கூட்டிக்கிட்டு ஓடிப்போன புறம்போக்கு ஒரு வருசத்துக்கு முன்னாடியே அவள, கை விட்டுட்டான். காதல் கசந்துட்டாம். எப்படியோ எங்க அக்காவ வேற கல்யாணம் செய்றதுக்கு சம்மதிக்க வச்சுட்டேன். அதற்கு கொஞ்சம் பைசா தேவப்படுது.’

‘அப்போ அக்கா கல்யாணத்துக்கு பிறகு இப்படி உடம்ப வருத்திக்கிறத நிறுத்திடுவியா’

‘எதுக்கு சார் நிறுத்தணும்? மேல மேல போய்கிட்டே இருக்கணும் சார். எங்கேயும் இடறிடப்படாது. உழைக்காத உடம்புல மனசு படியாது. மன்னிச்சிடுங்க சார். உங்ககிட்ட பேசிக்கிட்டே இருக்கலாம் போல தோணுது. ஆனாலும் நேரமில்ல சார். அதோ அந்த மூலை வீட்டுல ஒருத்தர் இருக்கார். இந்த தெருவுக்குகூட ஒரு பைசா பிரயோசனம் இல்லாதவரு. ஆனாலும், பேப்பர் போகாட்டா வாள் வாளுன்னு கத்துவார். அந்த கத்தலக்கூட, நான் வாழு, வாழுன்னு சொல்றதா நினைச்சிக்கிறேன்.’

அந்தப் பையன் சிரித்தபடியே, சைக்கிளை வேகவேகமாய் உருட்டி, பெடலில் கால் மிதியாமல் அதன் இருக்கையில் ஒரே துள்ளலாய் துள்ளி உட்கார்ந்த படியே ஒடுகிறான். சித்தப்பாவின் பிரமிப்பு அடங்கவில்லை. இந்தப் பையன் எப்படி தர்க்கரீதியாக பேசுகிறான். தெளிவான சிந்தனை இருப்பதால் இப்படி இயங்குகிறானா? அல்லது இப்படி இயங்குவதால் தெளிவாக சிந்திருக்கிறானா?

சித்தப்பாவின் மனமேடை பட்டிமண்டபத்தை முத்துக்குமார் கலைத்தான்.

‘வழிப்போக்கர்கள பற்றித்தான் நினைக்கிறீங்களே தவிர எனக்கு ஒரு வழி பண்ணலியே சித்தப்பா.’

சித்தப்பா, முத்துக்குமாரை கனிவோடும்,காயோடும் பார்க்கிறார். இறுதியாக சொல்வதுபோல் சொல்கிறார். காய் கனியுமா அல்லது கனி அழுகுமா என்பது புரியாமல், ஏதோ ஒரு வேகத்தோடு மேடைப் பேச்சாளி போல் பேசுகிறார்.

‘வழி போக்கர்களை வைத்து உனக்கு வழிகாட்ட நினைத்தேன். நீ புரிஞ்சுக்கல. இப்போ, நாம் சந்தித்த அத்தனை பேரும், நமது சங்க காலத்திலேயே காதல் இலக்கணத்துக்கு தகுதியற்றவர்களாய் கருதப்பட்ட கடைசியர்கள். ஆனால், இந்த கடைசியர்கள்தான் சமூகத்தின் முன்னணி வீரர்கள். இவர்களோடு நீ கரைந்துவிட்டால், கரைய மறுப்பது கரைந்துவிடும். மனம் சூன்யத்தில் நிற்காது. எதையாவது ஒன்றை பற்றிக்கொண்டுதான் நிற்கும். இந்த கடைசியர்களோடு கலந்து அவர்களிடம் கடமையை வாங்கி உரிமையை கொடுக்க போராடினால் அல்லது குறைந்தபட்சம் இவர்களைப் பற்றி மனதில் நினைத்தால், உன் நினைவை ஆக்கிரமிக்கும் மாயாவை, நீ, நீக்க வேண்டிய அவசியமில்லை. அவளே விலகிக் கொள்வாள்.’

முத்துக்குமார், உடற்பயிற்சியாக நடக்கவில்லை என்றாலும் அந்த நடையே, அந்த உடலுக்குள் நீக்கமற நிறைந்த உள்ளத்தை ஒரளவிற்கு இடிதாங்கியாய் ஆக்கி இருக்க வேண்டும்.

சித்தப்பா பேசும்போது பயபக்தியோடு அதை கேட்டுக் கொண்டிருந்தான். அவர்மேலும் பேசவேண்டும் என்பதுபோல் அவரை அண்ணாந்து பார்த்தான்.

– ஆனந்த விகடன் முத்திரைக் காழ் – 2001 – சமுத்திரக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர், 2001, ஏகலைவன் பதிப்பகம், சென்னை – 600 041

சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *