அப்பறவையானது உயர்ந்த விஷங்கள், உணவு இதில் மட்டும் கவனம் செலுத்தும். உணவாக கிடைப்பதற்கு அரிதான கனிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணும். குடிக்க மூங்கில் உள்ளே தேங்கி
நிற்கும் மழை நீரை மட்டுமே பருகும். வசிப்பதும் அவ்வாறே. தான் வசிக்கும் இடத்தில், தொடர்ந்து வாழமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அந்த இடத்தில் தன் கூட்டிற்கு மேலே தேன் தினமும்
சொட்டும்படியான ஒரு அமைப்பு இருந்தாலும் அங்கே வசிக்காது. உடனே, இடத்தைக் காலி செய்துவிடும். தனக்குப் பிடித்தமான ஒரு இடத்தில் மட்டுமே வாழும்.
அப்போது வானில் அந்தப் பறவையானது மிதமான வேகத்துடன் பறந்து சென்று கொண்டிருந்தது.
கீழே, செத்த எலி ஒன்றைக் கொத்திக் கொண்டிருந்த காக்கை வானில் அப்பறவையைக் கண்டவுடன் சொன்னது, ” சூ, போ, போ வராதே இந்தப் பக்கம்” என்று சொன்னபடி செத்த எலியை சட்டென
மறைத்துக் கொண்டது
இதைப் பார்த்த மீனுக்கு ஒரே ஆச்சரியம். அது காக்கையை கேட்டது, “ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?, “. காக்கை சொன்னது, “அது காக்கை அல்ல, அதனால் தான் இப்படி. உனக்கு இது புரியாது”.
மீன் சொன்னது, “உங்கள் பறவை இனத்தை இணைப்பது பறத்தலும், ரத்த சம்பந்தமான தொடர்பும் அல்ல. சக ஜீவனை மதிப்பதும், ஒவ்வொருவரின் வாழ்விலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வழிகளையும்,
சூழ்நிலைகளையும் உருவாக்குவதில் தான் உள்ளது என்பது உனக்குத் தெரியாதா ? என்று கேட்டது.
அதற்குக் காக்கை சொன்னது, “உனக்கு கடல் என்றால் என்ன என்று தெரியுமா ? “பெரிதாகப் பேச வந்துவிட்டாய் என்று கோபத்துடன் சொன்னது.
மீனுக்கு கடல் என்றால் என்ன என்று தெரியவில்லை. அதற்கு ஆசை வந்துவிட்டது. கேள்வியையும், தேடலையும் எங்கேயிருந்து துவங்கலாம் என்று யோசித்தது.
ஒரே கூரையின் கீழே வாழும் தன் இனத்திடம் கேட்டால் தக்க பதில் கிடைக்கும் என்று நம்பியது. சிறியது, பெரியது, வயதானது எனப் பலவிதமான மீன்களையும் தேடிப்போய்ப் பேசியது. அதற்கு பதில்
கிடைக்கவில்லை. அறிவுரைதான் கிடைத்தது.
மீன் கூட்டத்தில் உள்ள ஒரு மீன் சொன்னது, “நமக்கு இங்கே பாறை இடுக்குகளில் தண்ணீரின் வேகமான ஓட்டத்திற்கு எதிராக இங்கேயே நின்று வாழவே நம் சக்தியனைத்தும் செலவாகிறது. இதில்
கடல் என்றால் என்ன? என்ற கேள்வி எனக்குச் சிரிப்புதான் வருகிறது.” என்று சொல்லிக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது.
தண்ணிரின் ஓட்டத்திற்கு எதிராக வாழ்வதில் உள்ள சவால் உனக்குப் பிடிக்கவில்லையா ? இச்சவாலை எதிர்க்கொள்ளும் வழிகளை விளக்கி ந்ம முன்னோர்கள் சொன்ன அறிவுரைகளும் எழுதிய
புத்தகங்களும் உனக்குக் கண்ணில் படவில்லையா ? உன் அறிவும் முயற்சியும் இந்த வழியில் சென்றால் நம் இனத்திற்கு பெருமை மற்றும் பயனுள்ளதும் கூட என்று மற்றொரு மீன் சொன்னது.
இந்தப் பேச்சுக்களின் போக்கு பிடிக்காத பாதையில் செல்வதை உணர்ந்த மீன் “என் மனதை மாற்றிக் கொள்ளும் உரிமை எனக்கு மட்டுமே உண்டு. என்னால் அதன் மூலம் ஒரு மாறுபட்ட
எதிர்காலத்தையோ, வேறுபட்ட இறந்த காலத்தையோ தேர்தெடுக்க முடியும்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டது.
தனக்குத் தெரியாமலே குறிப்பிட்ட திசையில், வேகத்தில் செல்லும் மேகம் போல, அந்த மீன் தனக்கான ஒரு வழியைத் தேர்ந்தெடுக்க முயன்றது.
அது தேர்ந்தெடுத்த வழி, “தண்ணீரின் ஓட்டத்திற்கு எதிராக இருக்க முயற்சிக்காமல், அந்த ஓட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சென்று விடுவது.”
ஒரு நாள் தண்ணீரின் ஓட்டத்தில் வேகம் மிக அதிகமாக இருந்தது. இது தான் தருணம் என்று மீன் அந்த நீரோட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டது. அந்த வேகமும், சீற்றமும் மீனுக்குத் தாங்க
முடியாமல் இருந்தது. அந்த வேகத்தில் பல இடங்களில் முட்டி மோதி, ஒரு தருணத்தில் கடல் நீர் பரப்பிற்கு மேலே அம்மீன் தூக்கியெறிப்பட்டது.
கடலுக்கு மேலே பறந்த அம்மீன் கடலின் விரிந்த பரப்பைக் கண்டது.
சிலிர்த்தது.
தன் தரிசன அனுபவத்தை இவ்விதமாக வரிசைப் படுத்திச் சொல்லிக் கொண்டது.
1. எனக்குத் தெரியாது என்று ஒப்புக் கொள்ளப் பழகிக்கொண்டேன்
2.எனக்குக் குழப்பம் வரவில்லை என்றால் நான் சரியாகச் சிந்திக்கவில்லை என்று பொருள்.
3. பிறப்பு என்பது ஒரு செயல் அல்ல, அது தொடர்விளைவு.
இவ்விதமாக தரிசன அனுபம் அடைந்த அம்மீன் மறுபடியும் சாதாரண மீன்கள் நடுவே வாழ கடலுக்குள் சென்றுவிட்டது.
இப்போது அந்த மீனுக்கும் மற்ற மீன்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
——————————————–
www.thinnai.com