எனது மகள் கயல்விழி கடற்கரை மணலில் மணல்வீடு கட்டிக் கொண்டிருந்தாள். மூன்று வயதுதானாகிறது, நானும் அவளுக்குத் துணையாக அவளோடு மணலில் உட்கார்ந்து மணல்வீடு கட்டுவதற்கு உதவி செய்தேன். கணவரும் மகனும் ஏற்கனவே தண்ணீரில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தார்கள்.
போத்துக்கல் நாட்டின் தென்பகுதியில் உள்ள அல்காரவ் பகுதிக்குச் சுற்றுலாப் பயணம் வந்தபோது, லாகோஸ் நகரத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தோம். ஹோட்டலில் விசாரித்த போது, ஹோட்டலுக்கு அருகே அழகிய கடற்கரை ஒன்று இருப்பதாக வரவேற்பு மேசையில் இருந்த பெண்மணி குறிப்பிட்டு அதன் முகவரியையும் தந்தார். ஒருநாள் நேரத்தை ஒதுக்கி, அங்கேயிருந்த அழகிய கடற்கரையான ‘பொன்ரா டா பிடாடி’ யில் உள்ள செங்குத்துப் பாறைகளைப் பார்த்துவிட்டு அதற்கு அருகே உள்ள ‘பிறயா டோனா அனா பீச்’ கடற்கரைக்கு வந்திருந்தோம்.

ஓவ்வொரு நாட்டுக் கடற்கரைகளும் பொதுவாக ஏதாவது சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக இருக்கும். இங்கே கடலலைகளால் அரிக்கப்பட்ட அழகிய வடிவங்களில் உள்ள சில கற்பாறைகள் தண்ணீருக்கு நடுவே தவம் செய்வதுபோல, வெளியே துருத்திக் கொண்டிருந்தன. மஞ்சள் கலந்த செங்கட்டி நிறத்தில் இருந்த அந்தப் பாறைகள் வெய்யில் பட்டுத் தங்கப் பாறைகள் போலக் காட்சி தந்தன.
குன்றுகள் நிறைந்த கடற்கரையோரம் என்பதால், சிகப்பு நிறக் கலங்கரை விளக்கம் ஒன்று அங்குள்ள குன்றின் மேல் தெரிந்தது. உயரே இருந்த வீதியில் இருந்து கடல் தண்ணீர் மட்டத்திற்கு இறங்கிச் செல்வதற்கு மரப்பலகைகளால் ஏணிப்படிகள் அமைத்திருந்தனர். ஏணிப்படிகள் வழியாகக் கீழே இறங்கிச் சென்ற போது, வித்தியாசமான அழகிய தங்கநிற மணற்பரப்பைக் காணமுடிந்தது.
‘இது என்னம்மா?’என்றாள் மழலை மொழியில் கயல்.
‘இதுவா, இது தான் மதில், கடலலை வந்தடித்தால் இந்த மதில், நீ கட்டிய இந்த மணல் வீட்டைப் பாதுகாத்து விடும், அதற்காகத்தான் வீட்டைச் சுற்றி மணலில் சுற்றுமதில் கட்டினேன்’ என்றேன்.
அவளுக்குப் புரிந்திருக்கலாம், ஒரு வீட்டிற்கு வேலியோ, மதிலோ எப்போதும் பாதுகாப்பானவை என்பதை நாங்கள் எப்படி அனுபவத்தில் புரிந்து கொண்டோமோ, அNதுபோல அவளும் புரிந்து கொண்டதற்கு அடையாளமாய்த் தலையசைத்தாள். அந்தந்தப் பருவம் வரும்போது, அவளும் ஓரளவு இயற்கைச் சூழலைப் புரிந்து கொள்வாள், புரிந்து கொள்ள வேண்டும்.
அவளுக்குத் துணையாக அவளோடு சேர்ந்து மணலில் விளையாடும் போது, பழைய ஞாபகங்கள் நெஞ்சில் முட்டிமோதின. கங்கேசந்துறை கடற்கரையின் வெண்மணற்பரப்பில், நாங்கள் சிறுமிகளாக இருந்த போது பெற்றோருடன் வந்து மணல்வீடு கட்டி விளையாடியது நினைவில் வந்தது. இருட்டப் போவதற்கு அறிகுறியாகக் காங்கேசந்துறைக் கலங்கரை விளக்கு எரியத் தொடங்கும். சற்று நேரத்தால், அருகே இருந்த தொடர்வண்டி நிலையத்தில் இருந்து தபால்வண்டி புறப்பட்டுச் செல்லும் போது, நாங்களும் வீடு செல்லக் கிளம்பிவிடுவோம்.
காலத்தின் கோலத்தால், ‘அதியுயர் பாதுகாப்பு வலயம்’ என்ற பெயரில் நாங்கள் வாழ்ந்த பரம்பரை மண்ணை இராணுவம் ஆக்கிரமித்ததால், இன்று சொந்தம், பந்தம் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு நிர்க்கதியாய்ப் புலம் பெயரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம்.
பந்து ஒன்று மணலில் உருண்டு வேகமாக அருகே வரவே, நாங்கள் கட்டிய மணல்வீட்டைப் பாதுகாக்க அதைத் தடுத்துக் கையில் எடுத்தேன். அதற்கிடையில் அருகே ஓடிவந்த இளம் பெண் ஒருத்தி மூச்சிரைத்தபடியே குனிந்து கையை நீட்டினாள். அவள் கையில் அந்தப் பந்தைத் கொடுத்துவிட்டு, நிமிர்ந்து பார்த்த எனது கண்கள் ஒரு கணம் தடுமாறிப் போயின.
நம்பமுடியாமல் கண் இமைகள் மூடித்திறந்தன. காரணம் நீச்சலுடையில் அவள் இருந்தாள், ஆனால் மேலாடை இல்லாமல் ‘ரொப்லெஸ்ஸாக’ மார்பகங்கள் தெரிய அவள் காட்சியளித்தாள். அவள் மட்டுமல்ல இன்னும் நாலைந்து இளம் பெண்கள் பதுமவயது தானிருக்கும், மேலாடை இல்லாமல் முன்னால் இருந்த மணற்பரப்பில் ‘பீச்வொலிபோல்’ விளையாடிக் கொண்டிருந்தார்கள். வெய்யிலுக்குத் தாக்குப் பிடிக்கவோ, அல்லது நாகரிகம் கருதியோ கறுப்புக்கண்ணாடியும், தொப்பியும் அணிந்திருந்தார்கள்.
சுற்றவரப் பார்த்தேன், நூற்றுக் கணக்கானவர்கள் ஆண்களும் பெண்களுமாக நீச்சலுடையோடு மணற்தரையில் துவாய் துண்டை விரித்து வெய்யில் காய்ந்து கொண்டிருந்தார்கள். சிலர் வண்ணக்குடைகளின் நிழலில் படுத்திருந்தனர். அவர்களில் யாருமே மேலாடையின்றி விளையாடிக் கொண்டிருந்த இந்தப் பெண்களைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை, அவர்களுக்கு இந்தக் காட்சி பழகிப்போனதொன்றாக இருக்கலாம்.
புலம்பெயர்ந்த வாழ்க்கையில் விட்டகுறை தொட்டகுறை என்று இவர்கள் அனுபவிக்கிறார்களா? மனசிலே அடக்கி வைத்திருந்த தங்கள் ஆசைகளை, கட்டுப்பாடுகளை இப்படி உடைத்தெறிவதில் திருப்திப்படுகிறார்களா? பண்பாடு, கலாச்சாரம் என்று ஊரிலே பொத்திக் காத்ததெல்லாம் கண்முன்னால் காற்றிலே பறக்கவிட்டது போன்ற அதிர்ச்சியில் கயலைத் திரும்பிப் பார்த்தேன்.
கயல் மணல்வீடு கட்டுவதை நிறுத்திவிட்டு, எதிரே மணற்பரப்பில் நின்று அவர்கள் பந்து விளையாடுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
எனக்கு அந்தக் காட்சி புதுமையாக இருந்தது. என்னைக் கவர்ந்தது பந்தல்ல, பந்து விளையாடியவர்கள்தான். பந்து விளையாடிவிட்டு சற்று நேரத்தால் அந்த நால்வரும் மணற்தரையில் கால்களை நீட்டி, கைகளைப் பின்னால் ஊன்றிச் சாய்ந்தபடி உட்கார்ந்து வெய்யில் காய்ந்ததைப் பார்த்தபோது, ஓவியர்கள் கற்பனையில் வரையும் கடற்கன்னிகளின் ஞாபகம் வந்தது. ஓவியம் கற்பனையாக இருக்கலாம், ஆனால் இது நிஜமாகக் கண்முன்னால் தெரிந்தது.
சில நாடுகளில் தனியாருக்குச் சொந்தமான கடற்கரைகளில் மேலாடை இல்லாமல் பெண்கள் நடமாடுவதாகக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் இன்று எனக்கே பொது இடத்தில் நேரடியாகப் பார்க்கும் இந்த அனுபவம் கிடைத்திருந்தது. அதன் பிறகுதான் தண்ணீருக்குள்ளும் ஒரு சில பெண்கள் மேலாடை இல்லாமல் நீந்துவதையும், ஒருசிலர் மேலாடை இல்லாமல் மணற்பரப்பில் வெய்யில் காய்வதையும் அவதானித்தேன்.
ஊரிலே பள்ளியில் படிக்கும் காலத்தில் மார்கழி மாதத்தில் திருவெண்பா பாடல் படிக்கும் போது பையன்கள் ‘கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப் பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு’ என்று அந்த வரிகளை மட்டும் உரக்கக் கத்திச் சொன்னதால்தான், அந்தச் சொல் பெண்களின் மார்பைக் குறிக்கிறது என்பது பின்னால் எனக்குத் தெரியவந்தது. அந்த வயதில் பையன்களுக்கு அது வேடிக்கையாகவும், எங்களுக்கு அதைக்கேட்கக் கூச்சமாகவும் இருந்தது.
சுற்றிவரத் திரும்பிப் பார்த்தேன், அருகே மஞ்சள் கொடி பறக்கவிட்டபடி சற்று உயர்ந்த மேடையில் ‘லைவ்காட்’ உட்கார்ந்திருந்தாள். அவளிடம் கதை கொடுத்துப் பார்த்தேன்.
அவளும் ஒரு இளம் பெண்மணியாக இருந்ததால் ‘மேலாடையின்றிப் பெண்கள் நடமாடுவதை இங்கே அனுமதிக்கிறீர்களா?’ என்று கேட்டேன்.
‘ஆமாம், இந்த நாட்டில் சில கடற்கரைகளில் அனுமதித்து இருக்கிறார்கள், அதில் இதுவும் ஒன்று. உங்களுக்கு இது புதிதாகத் தெரிகிறது, தினமும் கடமை நேரத்தில் நான் இந்தக் கோலத்தில்தானே பல நாட்டுப் பெண்களை இங்கே பார்க்கின்றேன், எனக்கு இதெல்லாம் பழகிப்போச்சு’ என்றாள்.
‘சட்டப்படி மேலாடை இல்லாமல் பொது இடத்தில் பெண்கள் குளிப்பது இந்த நாட்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறதா?’ என்று கேட்டேன்.
‘சட்டத்தை விடுங்கள், ஆண்கள் அப்படிக் குளிக்கலாம் என்றால், எங்களைப் போன்ற பெண்களுக்கும் சமஉரிமை உண்டுதானே?’ என்றாள்.
‘அதுவும் சரிதான்’ மனசு தயங்கினாலும் வார்த்தைகள் தானாக வெளிவந்தன.
‘முன்பு இப்படியெல்லாம் இல்லை. இப்போது பெண்களின் உரிமை என்று சொல்லி அவர்களே போராடி இந்தச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். சமத்துவம், சுயமரியாதை, சமூகநீதி என்று பெண்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். இது சமூக வளர்ச்சிக்கு நல்லதுதானே?’ என்று அவர் சொன்னதில் இருந்து அவரும் இதை ஆதரிப்பவராகத் தெரிந்தார்.
‘சமூகவளர்ச்சி’ என்று அவர் குறிப்பிட்டதும் நான் யோசித்துப் பார்த்தேன்.
‘பொது இடத்தில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதற்கான அனுமதி என்றுதான் இந்த வழக்கம் ஆரம்பமானது. இப்பொழுது வெய்யில் காய்வதற்கு, குளிப்பதற்கு என்றும் பொது இடங்களே வந்துவிட்டன’ என்றேன்.
‘ஆண்கள்தான் பாவம், இதனால் கஸ்டப்படப் போவது அவர்கள்தானே?’ என்றாள்.
‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’ என்று கேட்டேன்.
‘இதுவரை காலமும் ஆண்கள்தான் தங்கள் பரந்த மார்பைப் பொதுஇடங்களில் காட்டிப் பாலியல் ரீதியாக எத்தனையோ பெண்களை இம்சைப் படுத்திக் கொண்டிருந்தார்கள், அதைமட்டும் சமூகம் அனுமதிக்கவில்லையா?’ என்றாள்.
அவள் இதற்கெல்லாம் சமத்துவம் பேசியதைக் கேட்க எனக்கு வியப்பாக இருந்தது. ஒவ்வொரு பெண்கள் மனதிலும் எத்தனை கேள்விகள் இதுபோலப் புதைந்து கிடக்கின்றனவோ?
‘இப்போ பதிலடியாகப் பீச்சிலே பெண்களும் ஆண்களைப் போலவே உடையணிய ஆரம்பித்து விட்டார்கள்.
இதையெல்லாம் பார்த்திட்டு இரவிலே தூங்கமுடியாமல் தவிக்கப் போவது ஆண்கள்தானே?’ அவள் வேடிக்கையாகச் சொல்லிவிட்டு; சிரித்தாள்.
‘ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்றேன்.
‘உண்மையைச் சொன்னால், பருவவயதில் நானும் ஆண்களின் திறந்த பரந்த மார்பைப்பார்த்துப் பலதடவை குழம்பிப் போயிருக்கிறேன், அந்த வயதிலே அது எங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம், இல்லையா?’ என்றாள் அந்த லைவ்காட்.
அவளோடு உரையாடும்போது, அவள் மனம் திறந்து பேசியது மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் அவள் ஒரு சாதகமான பதிலும் வைத்திருந்தாள்.
குளிக்கும்போது, அல்லது உடைமாற்றும்போது இதுபோன்ற படங்களை ரகசியமாக எடுத்துத்தானே சிலர் எம்மினத்து எத்தனையோ இளம் பெண்களை மிரட்டித் தற்கொலை செய்யப்பண்ணினார்கள். இது போன்ற செய்கைகளுக்காக மேலைநாட்டில் யாரும் தற்கொலை செய்வதில்லையே.
இங்கே என்னவென்றால், ‘படமா, இந்தா விரும்பிய மாதிரி எடுத்துகோ’ என்று எந்தவித கூச்சமும் இன்றி இவர்கள் போஸ்கொடுப்பதில் இருந்து ‘இதற்காக யாராவது பெண்கள் தற்கொலை செய்வாங்களா?’ என்று எமது பெண்களைப் பார்த்து அறைகூவுவது போல இருந்தது.
காலம், இடம், சூழ்நிலை எமது பாரம்பரியங்கள் எல்லாவற்றையும் புலம்பெயர்ந்த மண் மாற்றி அமைத்து விட்டது என்பது இந்தக் காட்சிகளைப் பார்த்த போது புரிந்தது.
‘பெண்களுக்கான இந்தச் சமத்துவ சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை, போராடித்தான் பெற்றுக் கொண்டார்கள்’ என்றாள்.
‘இங்கே போராடினார்களா, எப்போது நடந்தது?’ ஆர்வத்தோடு வினாவினேன்.
‘இங்கே இல்லை, ஜெர்மனியில்தான் முதலில் ‘கொட்டிங்ரன்’ நகரத்தில் நடந்தது. தொடர்ந்து பின்லாந்திலும் இதற்காகப் போராடினார்கள். அதன்பின் சில நாடுகளில் சட்டப்படி அனுமதித்திருக்கிறார்கள். சில நாடுகள் சட்டப்படி அனுமதிக்காவிட்டாலும், சுற்றுலாப் பயணிகளுக்காக வருமானம் கருதி இதைக் கண்டும் காணாதமாதிரி அனுமதிக்கிறார்கள்.’
‘மதம், கலாச்சாரம் என்று சொல்லிச் சில நாடுகள் அரைகுறை ஆடையோடு பெண்கள் பொது இடங்களில் நிற்பதை முற்றாகவே தடுத்திருக்கிறார்களே.’ என்றேன்.
‘தெரியும், அப்படியும் இருக்கிறார்கள், அது வேறொன்றுமில்லை, அது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு, அங்கிருக்கும் பெண்களும் இந்த ஆணாதிக்கத்தை எல்லாம் ஒருநாளைக்கு உடைத்தெறிவார்கள்’ என்றாள்.
‘ஒரு காலத்தில் அடிமைப் பெண்கள் மேலாடை அணியவேகூடாது என்று அதிகாரத்தைப் பாவித்ததும் இவர்கள்தானே, ஆனால் இன்று அவர்களே…, எல்லாமே இங்கு தலைகீழாக மாறியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது’ என்றேன்.
‘மனசிலே உள்ள தங்கள் ஆசைகளைத் தங்குதடையின்றி வெளிப்படுத்தத்தானே இத்தனை ஆயிரம் இளம் பெண்களும் இங்கே வருகிறார்கள். அம்மணமாக எங்கெல்லாம், குளிக்கலாம், எங்கெல்லாம் வெய்யில் காயலாம் என்று கடந்த ஆறு மாதத்தில் பதினொரு மில்லியன் மக்கள் கூகுளில் தேடிப் பார்த்திருக்கிறார்கள் என்றால் பாருங்களேன், எவ்வளவு வேகமாக ‘ரொப்லெஸ்’ எல்லா இடமும் பரவிக்கொண்டிருக்கிறது என்று!’
‘பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கூடத்தான் தேடிப் பார்த்திருப்பார்கள்’ என்றேன்.
அந்தப் பெண்ணுக்கு நான் சொன்னதைக் கேட்டுச் சிரிப்பு வந்தாலும், அவரது கடமை காரணமாக உதட்டுக்குள் சிரித்துக் கொண்டு, அவரது பார்வை தண்ணீரில் நீந்திக் கொண்டிருப்பவர்கள் மேலேயே கவனமாக இருந்தது. ‘நீங்கள் அமெரிக்கவா?’ என்று கேட்டார்.
‘இல்லை, கனடா’ என்று நான் பதில் சொன்னேன்.
‘இதைப் பற்றி, எங்கெல்லாம் மேலாடையின்றிக் குளிக்கலாம் என்பதைக் கூகுளில் விசாரித்தவர்களில் அதிகமானவர்கள் அமெரிக்கா, ஜப்பான், பிரேஸில் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான்.’ என்றார் அந்த லைவ்காட்.
எங்கள் இளமைக் காலத்தில் மேலாடை இல்லாமல் நிற்பதை எதிரே உள்ள ‘கண்ணாடி பார்க்கிறதே’ என்றதற்கெல்லாம் நாங்கள் அச்சம், மடம், நாணம் என்று கூச்சப்பட்டதுண்டு. பாடசாலையில் உடற்பயிற்சி ஆசிரியை ‘பிறா’ போட்டுக் கொண்டு வரும்படி சொன்னதாக, அம்மாவிடம் வாங்கித் தரும்படி தயக்கத்தோடு கேட்டதும் நினைவில் வந்தது. காலம் கடந்து போகும் என்பது போல, இங்கே இது போன்ற பலவற்றைக் கடந்துதான் நாங்கள் செல்லவேண்டும், தெரிந்துதானே புலம் பெயர்ந்து வந்தோம். ‘லைவ்காட்’ சொன்னது போல, காலப் போக்கில் புலம்பெயர்ந்த எங்களுக்கும் இதெல்லாம் சாதாரண நிகழ்வாக மாறிவிடலாம்.
மேலாடை இல்லாமல் ‘பீச்வொலிபோல்’ விளையாடிக் கொண்டிருந்த அந்தப் பதுமவயதுப் பெண்கள் போல நாளை எனது மகளோ அல்லது எம்மினத்தவர்களோ வளர்ந்து மேலாடை இல்லாமல் எங்கேயாவது கடற்கரையில் பீச்போல் விளையாடினாலும், இதுபோன்ற காட்சிகள் எமக்கும் சாதாரண நிகழ்வாக மாறிவிடலாம்.
காலம், இடம், சூழ்நிலை, எங்கள் நடையுடை பாவனை எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்பதை நடைமுறையில் நாங்கள் அனுபவித்தாகி விட்டது. காரணம் எங்களுக்கு மேலைத்தேசம் புகுந்த வீடு என்பதால், சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி எங்களால் ஓரளவாவது சமாளித்துக் கொண்டு நடக்க முடிந்தது.
ஆனால், அடுத்த தலைமுறையான கயல்விழி போன்றவர்களுக்கு இது பிறந்தவீடல்லவா! எனவே வெவ்வேறு கலாச்சாரம் கொண்ட சினேகிதங்களும் வருங்காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்டு அதனால் அவர்கள் வாழ்க்கையில் கலாச்சார மாற்றங்களோ அல்லது கலாச்சார சீரழிவுகளோ ஏற்படவும் வாய்ப்புண்டு.
பண்பாடு கருதி எங்களுக்குத் தயக்கமாகவும், கூச்சமாகவும் இருந்த சில விடயங்கள் அவர்கள் வாழும் இந்தச் சூழலில் அவர்களுக்கு இருக்கப் போவதில்லை. அதை அவர்கள் தங்குதடையின்றி அனுபவிக்கத் தயங்கப் போவதுமில்லை, எது எப்படியோ அடுத்ததலைமுறையினர் அவர்கள் விரும்பியபடிதான் வாழப்போகிறார்கள், யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அவரவர் வாழ்கை அவர்களுக்குத்தானே சொந்தம்!.
அடுத்ததலைமுறையினர் அவர்கள் விரும்பியபடிதான் வாழப்போகிறார்கள், அதனால் அவர்கள் வாழ்க்கையில் கலாச்சார மாற்றங்களோ அல்லது கலாச்சார சீரழிவுகளோ ஏற்படவும் வாய்ப்புண்டு, அவரவர் வாழ்கையில் யாரையும் தலையிட அவர்கள் அனுமதிக்கப் போவதில்லை..