கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 21, 2021
பார்வையிட்டோர்: 19,711 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஸிலிக்காடப் பூச்சிகள் இரைந்து கொண்டிருந்தன.

ஆலிவ் மரங்களின் அடர்ந்த இலைக் கூட்டங்களிடையே ஆயிரமாயிரம் உலோகக் கம்பிகளை முறுக்கேற்றி வைத்திருப்பது போலவும், தடித்த இலைகளைக் காற்று அசைக்கவே அவை ஆடித் துடிப்பது போலவும், இந்த இடையறா மென் ஸ்பரிசத்தினாலேயே கிறுகிறுக்கச் செய்யும் இசை எழுவது போலவுமிருந்தது அது. உண்மையில் அது இசையே யல்ல. எனினும் மாயக் கரங்கள் எவையோ அருவமான வீணைகள் பலவற்றைச் சுருதி கூட்டிக் கொண்டிருப்பது போன்ற பிரமையை விளைவித்தது அது; சுருதி கூட்டும் வேலை முடிந்ததும் மகத்தான தந்தி வாத்தியங்களி லிருந்து வெற்றிப் பேரொலி ஞாயிறு, வானம், கடல் அனைத்திற்கு முரிய இசையாய்ப் பிரவகிக்கும் என்று எண்ணி எதிர்நோக்கி நிற்கவும் தூண்டியது..

மரங்களின் முடிகளை யெல்லாம் மலைகளிலிருந்து கடல் ரோக்கி நகரும் அலைமுகடுகள் போல் காட்சி தரும்படி ஆட்டி அசைத்துச் சுழன்றது காற்று. கருங்கல் கரை மீது தாளந் தவறாது மந்த கதியிலே மோதிக் கொண்டிருந்தன அலைகள் . உயிருற்ற குவியல்களாய், வாரி யிறைத்த நுரைப் பூச்சுகளாய் விளங்கியது நீலப் பெரும் பரப்பில் தங்கிட வந்த மந்தை மந்தையான பறவைகள் போல் தோற்றமளித்த நெடுங்கடல். ஒரு திக்கு நோக்கியே பாய்கின்றன அவை; பின் ஆழத்திலே பம்மி விடுகின்றன, மீண்டும் மெல்லொலி இசைத்து எவ்விப் பாய்வதற்காக, விழிப்புறும் அவற்றை ஏய்ப்புக் காட்டித் தடம் மாறச் செய்ய முயல்வன போல, மூன்று பாய்கள் விரித்த படகுகள் இரண்டு தொடுவானத் தருகே உயர்ந்தும் தாழ்ந்தும் மிதந்தன. அவைகூட சாம்பல் வர்ணப் பறவைகளின் ஜோடி போலவே காட்சி தந்தன அரைகுறையாக மறந்துபோன பழங் கனவு போலப் பொய்த் தோற்றம் பெற்றிருந்தது அந்தக் காட்சி முழுவதும்.

சிறுசிறு கூழாங் கற்கள் படிந்த கடற்கரையிலே, பாறைகளின் நிழலில் அமர்ந்திருந்த கிழட்டுச் செம்படவன் ஒருவன் சொன்னான், ‘இன்று சூரியன் அஸ்தமிப்பதற்குள் கடும் புயல் வரும்’ என்று .

மணம் நிறைந்த கடற் பாசிகள், துருவேறிய நிறமும் பொன் வண்ணமும் பசிய நிறமும் பெற்றவை, அலைகளினால் கரை சேர்க்கப்பட்டு சிறுகற்கள் மீது பரந்து கிடந்தன. எரிக்கும் வெயிலில் தீய்க்கும் கற்களில் கிடந்து கடற்பாசிகள் கருகி உப்புக் காற்றிலே நெடி மிகுந்த அயடின் நாற்றத்தையும் கலக்க விட்டன. சுருளும் சிற்றலைகள் கடலோரத்திலே தொட்டுப் பிடித்து ஓடியாடின.

உலர்ந்து வாடிய சிறிய முகம், வளைந்த மூக்கு, தோலின் இருண்ட மடிப்புகளினுள் மறைந்து கிடக்கும் மிகக் கூரிய உருண்டைக் கண்கள், இவற்றா லெல்லாம் அந்தக் கிழச் செம்படவன் ஒரு பறவையை ஒத்திருந்தான், நொடு முரடாய் வதங்கிப்போன அவன் கைவிரல்கள் முழங்கால் மேல் அசைவற்றுக் கிடந்தன.

“ஐம்பது வருஷங்களுக்கு முந்தி, ஸின்யார்’ என்று ஆரம்பித்தான் அக்கிழவன். அலைகளின் முணமுணப்பு, ஸிக்காடப் பூச்சிகளின் ஓயாத முனகல் இவற்றுடன் ஒன்றி யிசையும் தொனியிலே பேசினான் அவன். “இதைப் போலவே பிரகாசமாய் பிரமாதமாகயிருந்த ஒரு நாள் என் நினைவுக்கு வருகிறது. அன்றும் எல்லாம் சிரித்துப் பாடிக் கும்மாளியிடுவதாகவே தோன்றியது. அப்பொழுது எங்க அப்பாவுக்கு நாற்பது வயசிருக்கும். எனக்குப் பதினாறு வயது, காதல் புரியும் பருவம். கருணை நிறைந்த சூரியன் ஆட்சியில் வாழக் கொடுத்து வைத்த பதினாறு வயது இளைஞ னுக்கு து இயல்பு தானே.

‘கிடோனி, இங்கே வா’ என்று அழைத்தார் என் தந்தை, கொஞ்சம் பெஸ் லோனி பிடித்து வரப் போவோம் என்றார். பெஸ்ஸோனி என்பது, ஸின்யார், மிக மிருதுவான ருசி மிகுந்த ஒரு வகை மீன் இளஞ் சிவப்பு நிறச் செதில்கள் இருக்கும் அதற்கு, அடியிலே வெகு ஆழத்திலே பவளக் கொடிகளிடையே வசிப்பதனால் அதைப் பவள மீன் என்றும் சொல்வார்கள் . நங்கூர மிட்டுப் படகை நிறுத்திக் கொண்டு, ரொம்பப் பாரமான தூண்டில் போட்டுத் தான் அதைப் பிடிக்க வேண்டும். அழகான மீன் அது.

ஆகவே, வெற்றிகரமான மீன் பிடிப்பு நிச்சயம் என்று எதிர்பார்த்துக் கொண்டே நாங்கள் கிளம்பினோம். என் தந்தை பலசாலி. அனுபவம் நிறைந்த மீனவர். ஆனால் இந்தப் பயணம் கிளம்புவதற்குக் கொஞ்சநாள் முந்தித் தான் சீக்கிலே கிடந்தார். நெஞ்சிலே வலி ; வாத நோயினால் விரல்கள் திருகி முறுகிப் போயின. செம்படவர்களுக்கு வரக்கூடிய வியாதிதான் இது.

இப்போ கரையிலே யிருந்து தாலாட்டுகிற மாதிரி நம்ம மேலே வீசுகிறதே, லேசாக நம்மைக் கடலை நோக்கி முன்னுக்குத் தள்ளிக் கொண்டு பாய்கிறதே, இந்தக் காற்று ரொம்பக் கபடு நிறைந்த கெட்டபய காற்று, நீர் எதிர் பாரத தேசத்திலே குபீர்னு கிளம்பிப் பாயும் அங்கே. நீர் அதுக்கு எதோ தீங்கு செய்து விட்டது போல, அது வாரிச் சுருட்டிக் கொண்டு உம்ம மேலே பாயும். உமது படகைப் பறக்கடிக்கும் ; சில சமயம் நீர் தண்ணீரிலே யிருக்கும்படி தோணியைத் தலை குப்புறச் சுழற்றியடிக்கும். கண் சிமிட்டு கிறதுக்குள்ளே நடக்கிற காரியம் இது. சபிக்கவோ, கடவுள் பெயரைச் சொல்லவோ உமக்கு நேரம் கிடைக்கிறதுக்கு முன்னாடி செயலற்று அந்தரடிக்கும்படியாக நீர் ரொம்பத் தொலைவிலே எறியப்பட்டு விடுவீர். இந்தக் காற்றைவிட ஒரு கொள்ளைக்காரன் யோக்கியமானவன். என்னவானாலும் இந்த இயற்கைச் சக்திகளைவிட மனிதர்கள் எப்பொழுதுமே யோக்கியமானவர்கள் தான்.

ஆமாம். அன்றைக்கும் இதேமாதிரிக் காற்று தான் கரையிலிருந்து நாலு கிலோமீட்டருக்கு அப்பாலே எங்களைத் தாக்கியது. மிகவும் சமீபத்தில் தான். நாங்கள் எதிர்பாராத வேளையிலே கோழை மாதிரி, கயவாணிப் பயல் போல அது எங்களை அமுக்கி விட்டது.

‘கிடோ’! என்று கத்தினார் என் அப்பா. முடிச்சு முடிச்சாகயிருந்த தன் கைகளால் துடுப்பை அழுத்திப் பிடித்துக் கொண்டே கத்தினார்: ‘கிடோ, அழுந்தப் பிடித்துக் கொள். சீக்கிரம் , நங்கூரம் பாய்ச்சு!”

ஆனால் நங்கூரத்திற்காக நான் தட்டித் தடுமாறிக் கொண்டிருக்கையில் காற்று என் தந்தையின் கையிலிருந்த துடுப்பைப் பிடுங்கி எறிந்து, அவர் மார்பிலே பலத்த அறை ஒன்று கொடுத்து விட்டது ; அவரை அப்படியே பிரக்ஞை தப்பி படகின் அடியிலே சுருண்டு விழும்படி செய்தது. எனக்கோ அவரைக் கவனிக்கக்கூட நேரமில்லை. ஒவ்வொரு விநாடியும் எங்களைத் தூக்கிக் கடலிலே போட்டு விடுவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஆரம்பத்திலே எல்லாம் ரொம்பவும் துரிதமாக நடைபெற்றன. நான் துடுப்புகளைப் பற்றி வலிப்பதற்குள் நாங்கள் இழுப்புண்டு அலைந்தோம். எங்களைச் சுற்றிலும் வெண் துளிகள் பரவி நின்றன. அவை முடிகளிலிருந்து காற்று நுரைத் துணிகளை அள்ளித் தெளித்தது, பாதிரியார் செய்கிற மாதிரி. ஆனால் மிகவும் அதிகப் படியான வலுவுடன் செய்தது இது ; எங்கள் பாபங்களைக் கழுவுவதற்காகச் செய்யப்படவுமில்லை!

என் தந்தை மயக்கம் தெளிந்து எழுந்ததும் ‘நிலைமை ரொம்ப மோசமாகயிருக்கிறது. மகனே’ என்றார். கரைப் பக்கமாகப் பார்வை எறிந்தார். ‘இது இப்படியே வெகு நேரம் நீடித்திருக்கும்’ என்று சொன்னார்.

வாலிபப் பிராயத்தில் இருக்கிறபோது, ஆபத்து என்கிற உணர்ச்சியிலே உமக்கு லேசில் நம்பிக்கை விழுவதில்லை. ஆகவே, கடலிலே நாசகாரச் சைத்தான்களின் மூச்சு போலக் காற்று சுழன்று நமக்காக ஆயிரம் சவக்குழிகள் பறித்துக் கொண்டிருக்கும் போது, காசு பெறாமலே நமக்காக அதுவே சரமகவியையும் பாடிக் கொண்டிருக்கும் நெருக்கடியான வேளையிலே, உண்மையான கடலோடி ஒருவன் என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நானும் செய்து படகைத் தள்ள முயன்றேன்.

‘அமைதியாக பிரு, கிடோ’ என்றார் என் தந்தை. தண்ணீர் தெறிக்கும்படி தலையை ஆட்டிக் கொண்டு சிரித்த வண்ணம் அவர் சென்னார். ‘நெருப்புக் குச்சிகளை வைத்துக் கடலை தோண்டிக் கொண்டிருப்பதனாலே என்ன பிரயோசனம்? உன் சக்தியை சேமித்து வையப்பா. இல்லையோ, வீட்டிலேயிருப்பவர்கள் உன்னை விருதாவாகத்தான் எதிர் பார்க்க நேரிடும்”.

எங்கள் சிறு படகை பச்சை நிற அலைகள் தூக்கி எறிந் கன, பயல்கள் ஒரு பந்தை உந்துவது போலே. படகின் பக்கங்களில் எகிறிக் குதித்தன ; எங்கள் தலைக்கும் மேலே எவ்வின அவை. உறுமி, வெறித்தனமாய் எங்களை உலுக்கி எடுத்தன. அங்காந்த ஆழக் குழிகளுள் ஆழ்ந்தோம் ஒரு கணம். நெடிய வெண்ணலை முடிகள் மீதுயர்ந்தோம் மறு கணம். தூரத் தூரத் தொலைவிலே விரைவாய்ச் செல்லும் கரை கூட அலைபடும் எங்கள் படகுடன் ஆடி நடமிடுவது போலவே தோன்றும்.

தந்தை என்னிடம் சொன்னார் ; ‘நீ திரும்பி விடலாம். ஆனால் நான் மீளப்போவதில்லை. கவனமாய் கேள். மீன் பிடிப்பதைப் பற்றியும், உழைப்பு பற்றியும் நீ தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைச் சொல்லித் தருகிறேன் ….’

தனித்தனி வகை மீன்களைப் பற்றி, எங்கே எப்பொழுது எப்படி அவற்றைப் பிடிக்கலாம் என்பது பற்றியெல்லாம் தான் அறிந்திருந்தவை அனைத்தையும் எனக்குச் சொல்ல ஆரம்பித்தார் அவர்.

எங்கள் நிலைமை எவ்வளவு படுமோசமாக இருந்தது என்பதைக் கவனித்ததும் ‘இதைவிட நாம் பிரார்த்தனை செய்வது நல்லதில்லையா அப்பா’ என்றேன். சதையிலே பதித்துக் குதறிடத் துடித்த பற்களோடு நாலா திக்கிலிருந்தும் பாய்ந்து வரும் வெண்ணிற வேட்டை நாய்களிடையே சிக்கித் தவிக்கிற ஒரு ஜோடி முயல் குட்டிகள் போலிருந்தோம் நாங்கள்.

‘கடவுள் தான் எல்லாவற்றையும் பார்க்கிறாரே!’ என்றார் அவர். ‘தரையிலே வாழ்வதற்காகத் தாம் சிருஷ்டித்து விட்ட மனிதர்கள் இப்போது கடலிலே தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களிலே ஒருவன், பிழைக்கும் நம்பிக்கையை இழந்து விட்டதனால், தான் அறிந்து தேர்ந்த அனுபவ ஞானத்தை யெல்லாம் தன் மகனுக்கு உணர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது என்பதையும் அவர் அறிவார். மண்ணுக்கும் மனிதருக்கும் முக்கியமானது உழைப்பு. இது கடவுளுக்குத் தெரியும்….’

தனது தொழில் முறை பற்றித் தான் அறிந்தது அனைத்தையும் எனக்கு அறிவித்து முடிந்ததும், ஒரு மனிதன் தன் சகோதர மனிதர்களுடன் சமாதானமாக வாழ்வதற்காகக் கற்றுக்கொள்ள வேண்டியவற்றைப் பற்றியும் அவர் சொன்னார்.

‘இதுதானா எனக்குக் கற்றுத்தர வேண்டிய நேரம்? தரையிலிருக்கையில் நீங்கள் இதைச் செய்யவில்லையே” என்றேன்.

‘நிலைத்திலே சாவு இவ்வளவு சமயத்தில் ஒருபோதும் நின்றதில்லையே!’ என்றார்.

வெறி மிருகம் போல் ஊளையிட்டது காற்று. அலைகள் உறுமிக் கர்ஜித்தன. அதனால் தான் சொல்வது என் காதில் விழுவதற்காக அவர் கத்திப் பேச வேண்டியிருந்தது.

‘உனது அண்டை அயலில் உள்ளவர்களை விட உன்னை மட்டமாகவோ உயர்வாகவோ கருதாமல் எப்பொழுதும் சகஜமாகப் பழகு. அப்புறம் எல்லாம் சரியாகவேயிருக் கும். சிமானும் செம்படவனும், பாதிரியும் படை வீரனும் ஒரே கட்டுக் கோப்பின் அங்கங்கள் தான். அந்த அமைப்பிற்கு மற்ற எல்லோரும் எவ்வளவு அவசியமோ அவ்வளவுக்கு நீயும் அவசியமே. அவனிடம் நல்லதை விடத் தீய பண்பே அதிகமிருக்கிறது என்று எண்ணிக் கொண்டே எந்த மனிதனையும் நெருங்க வேண்டாம். அவனிடம் நல்ல தனமே அமையக் காண்பாய் – பிறர் எப்படி எதிர் பார்க்கிறார் களோ அந்த வகையில் தான் மனிதர்கள் நடந்து கொள்கிறார்கள்.

உண்மை . இவ்வளவையும் அவர் ஒரேயடியாகச் சொல்லிவிடவில்லை. அலையிலிருந்து அலைக்கென, இதோ ஆழத்திலே சரிந்து தாழ்ந்திட, மறுபடி உயரே உயரே எவ்விட நாங்கள் அம்மானை ஆடப்பெற்ற போது, தெறித்த நீர்த் துளிகளிடையே பொங்கிய நுரைகளூடே மிதந்து வந் தன அவர் சொற்கள். அவர் உதிர்த்த சொற்களில் பல என் காதை வந்து அடைவதற்கு முன்பே காற்றில் அடிபட்டுப் போயின. பெரும் பகுதியை நான் புரிந்து கொள்ளவேயில்லை. பின்னே, சாவு மூஞ்சிக்கு நேரே முழித்துக் கொண்டு நிற்கையில் ஒருவன் புதிய பாடங்களை எப்படி ஐயா கற்றுக் கொள்ள முடியும்? நான் பயந்து போனேன். கடல் அவ்வளவு ஆங்காரமுற்றதை அதற்கு முன் நான் என்றுமே கண்டதில்லை; அதன் மடியிலே அவ்வித அபலையாய் நான் என்றைக்கும் இருந்ததுமில்லை. அனுபவித்த அந்நேரத்தில் தானா, அல்லது அனுபவித்த அந்தக் காலத்தைப் பற்றிப் பின்னர் எண்ணிப் பார்த்தபோதுதானோ – என் வாழ்நாளில் ஒரு பொழுது கூட மறந்துவிட முடியாத ஒற்றைத் தனி உணர்ச்சியை நான் எப்போது அனுபவித்தேன்; அதை என்னால் சொல்ல முடியவில்லை.

நேற்று நடந்தது போல் தெளிவாகத் தோன்றுகிறது : இதோ என் தந்தை படகின் பக்கங்களைப் பற்றிக் கொண்டு அவரிருந்த நிலையிலே, நீண்டு கிடந்த வலுவற்ற கைகளைக் காண்கிறேன். அவரது தொப்பி அலையோடு போய்விட்டது. அலைகள் இதோ வலப்புறமிருந்து, அதோ இடது பக்கத்திலிருந்து, முன்னும் பின்னுமிருந்து கிளம்பி அவர் தலையிலும் தோள்கள் மீதும் மோதின. ஒவ்வொரு முறையும் அவர் தன் தலையை ஆட்டுவார் ; பலமாகத் தும்முவார் ; என்னை நோக்கிக் கத்துவார். உடல் முழுதும் நனைந்து உட்கார்ந்திருந்த அவர் அளவிலே குறுகிப் போனது போல் காட்சி தந்தார். பயத்தினால் பெரிதாகியிருந்தன அவர் கண்கள். ஒரு வேளை, வேதனை காரணமாகவும் இருக்கலாம். வேதனையால் தானிருக்கும். நான் அப்படித்தான் நினைக்கிறேன்.

‘கவனி. நான் பேசுவது கேட்கிறதா?’ என்று கத்துவார் அவர்.

சிலசமயம் நான் பதிலளிப்பேன்.

‘நான் கேட்டுக் கொண்டு தானிருக்கிறேன்.’

‘நினைவில் நிறுத்து, நன்மைகள் எல்லாம் மனிதனிடமிருந்தே பிறக்கின்றன.’

‘நான் ஞாபகம் வைத்துக் கொள்வேன்’ என்பேன்,’

நிலத்திலிருந்த போது ஒருநாள் கூட அவர் அப்படிப் பேசியதில்லை. சதா அவர் சந்தோஷமாகவும் அன்பாகவும் நடந்து வந்தார். வேடிக்கை நினைவுடனும் நம்பிக்கை யின் மையோடும், என்றுமே நான் சின்னப் பிள்ளை என்ற எண்ணத்தோடுமே என்னை அவர் கவனித்து வந்தார், என்ற அரிப்பு எனக்கு உண்டு. சிலவேளை இந்தப் போக்கு எனக்கு மனவேதனை அளிக்கும். வாலிபம் எளிதில் புண்பட்டு விடும் தன்மை யுள்ளது தானே!’

அவருடைய பேச்சுகள் என் பயத்தைப் போக்கடித்தன. அதனால் தானோ என்னவோ நான் ஒவ்வொன்றையும் இவ்வளவு தெளிவாக நினைவுபடுத்த முடிகிறது.”

அந்தக் கிழச் செம்படவன் மௌனமானான். நுரை பூத்த கடலிலே நிலைத்து நின்றன அவன் கண்கள். பிறகு அவன் லேசாகச் சிரித்து, கண்னைச் சிமிட்டி விட்டுச் சொன்னான் :

“பல வருஷங்களாக நான் மனிதர்களைக் கவனித்து வருகிறேன , ஸின்யார். அதனால் எனக்கு ஒரு விஷயம் புரிகிறது. ஞாபகப்படுத்திக் கொள்வது என்பது ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்வதேதான். நீர் எவ்வளவுக்கு நன்றாக உணர்கிறீரோ அவ்வளவுக்கு அதிகமாக நல்லனவற்றைக் காணமுடியும். இதுதான் உண்மை . நீர் என்னை நம்பலாம்.

இதோ அவருடைய அன்பு முகத்தை ‘நான் நினைவு படுத்த முடிகிறது. ஈரம் படிந்த முகம். விழித்து நிற்கும் பெரிய கண்கள் அன்பு கலந்த ஆழ்ந்த நோக்கை என் முகத்தில் பதித்துள்ளன, அந்தத் தினத்திலே நான் சாகப் போவதில்லை என்று நான் உணர்ந்து கொள்ளக் கூடிய தனி வகையிலே. நான் அஞ்சினேன்; ஆயினும் நான் அறிந்தேன் அன்று நான் அழிந்து படப் போவதில்லை என்று.

தெரிந்தது தானே, முடிவில் நாங்கள் கவிழ்ந்து விட் டோம். சீறுகின்ற தண்ணீரில் கிடந்தோம் நாங்கள், பொங்கும் அரை எங்களைக் குருடாக்கும்படி; அலைகள் எங்கள் உடல்களைப் பந்தாடும்படி; அவை எங்களைப் படகோடு மோதியடிக்கும் வகையிலே! கட்டி வைக்க முடிந்தவற்றையெல்லாம் நாங்கள் படகின் இருப்புச் சட்டங்களிலே பிணைத்து, கயிறுகளை எங்கள் கைகளில் பிடித்திருந்தோம். ஆகவே பிடித்திருக்க வலு உள்ள வரை நாங்கள் படகிலிருந்து விலக்கி எறியப்பட மாட்டோம். ஆனால் தண்ணீருக்கு மேலே தலை தூக்கி மிதப்பது கஷ்டமாக இருந்தது. பலமுறைகள் அவரும் நானும் படகின் புறங்களிலே சாடி எறியப்பட்டோம்; அப்புறம் அலசித் தள்ளுண்டோம், எல்லாவற்றையும் விட மிக மோசமான நிலைமை தலைச் சுற்றல் ஏற்பட்டது தான். செவிடானோம் ; குருடுற்றோம். காதுகளில் நீர் நிறைந்தது. வாயோ நிறைய நிறையத் தண்ணீரை விழுங்கிக் கொண்டிருந்தது.

இந்த நிலைமை வெகு நேரம் நீடித்தது. சுமார் ஏழு மணி நேரம். பிறகு சட்டெனத் திசை மாறிய காற்று கரை நோக்கி படித்தது. நாங்கள் கரைக்கு இழுத்துச் செல்லப்பட்டோம் வேகமாக.

‘பிடித்துக் கொள்ளுங்கள் !” என்று உற்சாகமாகக் கத்தினேன் நான்.

தந்தை பதிலுக்கு என்னவோ கத்தினார். ஒரே ஒரு வார்த்தையைத்தான் நான் கேட்டேன்.

‘…மோதி ….’

பாறைகளை நினைத்துச் சொல்லியிருப்பார்; அவை இன்னும் தொலை தூரத்திற்கு அப்பால்தானே உள்ளன என்று நான் அவர் பேச்சில் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால் என்னைவிட அவருக்கு அதிகம் தெரியும். ஈவு இரக்கமற்ற தன்மையிலே மோதி அலைக்கழிக்கும் படகோடு படகாய் நத்தைகளைப் போல் ஒட்டிக் கொண்டிருந்த நாங்கள் விறைத்துப்போன நிலையில் செய்வற்றவர்களாய் ஜலமலைகளினூ டெல்லாம் இழுபட்டுச் சென்றோம். இதுவும் ரொம்ப நேரம் நடைபெற்றது. எனினும் இறுதியில் கரையின் இருண்ட பார்வையில் படலாயின். அதற்குப் பிறகு எல்லாம் மிகச் சடுதியில் நிகழ்ந்து முடிந்தன. அசைந்து ஆடி அவை எங்களை நோக்கி முன்னேறின. நீர்ப் பரப்பின் மீது குனிந்து, எங்கள் மீது இடிந்து விழுந்து நசுக்கத் தயாராக நின்றன. வெள்ளிய அலைகள் எங்கள் உடல்களை முன்னே எற்றித் தள்ளின ஒருதரம் ; இரண்டாவது தடவையும் ; நீண்டிருந்த பாறை ஒன்றின் அடியிலே எங்கள் தோணி கடலைக் கொட்டை போல் நசுங்கியது; நான் தனியனாய்ப் பிய்த்தெறியப்பட்டேன்; பாறைகளின் கன்னங்கரிய விலா விளிம்புகள் கூரிய கத்திகள் போல் என்முன் அச்சுறுத்தி நிற்பதைக் கண்டேன் ; என் தலைக்கும் மேலாக உயர்ந்த தந்தையின் தலையைக் கண்டேன் : அது இப்போதே பேய்த்தன வளைவுகளை நோக்கி உயர்த்தப்படுதலையும் கண்டேன்.

அப்புறம் ஒன்றிரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, முதுகு முறிந்து மண்டை சிதைந்த நிலையிலே அவரைக் கண்டெடுத்தார்கள். மூளையில் ஒரு பகுதி வெளியே அரித்துச் செல்லப்படுவதற்கு வகை செய்த அளவு பெரியதாகயிருந்தது அவர் மண்டையில் பட்டிருந்த காயம் , அந்த இடத்தில் சாம்பல் நிறக் கட்டிகளாய் தோன்றிய பொருளை, அதணுடு ஓடிய சிவந்த ரத்த நாளங்களுடன் சேர்ந்து பளிங்குக் கல் அல்லது வெண்ணுரை ரத்தத்துடன் கலந்தது போல் தோன்றியதை , இப்பொழுது கூட நினைவில் காண முடிகிறது. பயங்கரமாய் சிதைவுற்றிருந்தது அவர் உடல்; எனினும் அவர் முகம் களங்கமற்று , அமைதியுடன் திகழ்ந்தது. அவர் கண்கள் இறுக மூடியிருந்தன.

நானா? ஆமாம். நானும் மோசமாக மோதப்பட்டிருந்தேன். என்னை அவர்கள் கரையிலே இழுத்துப் போட்ட பொழுது நான் பிரக்ஞையற்றுக் கிடந்தேன். அமால்பித் தீவுக்கு மப்பாலுள்ள நிலத்திற்கே – எங்கள் வீட்டுற்கு வெகு தூரத்திற் கப்பால் – எங்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். மக்களும் மீனவர்கள்தான்.

ஆகவே இவ்வித விஷயங்கள் அவர்களுக்குத் திகைப்பூட்டுவன அல்ல. ஆனால் அவர்களை இரக்கமும் இனிமையும் நிறைந்தவர்களாக ஆக்கிவிடுகின்றன. அபாயகரமான வாழ்க்கை நடத்தும் மனிதர்கள் எப்போதும் அன்பானவர்களாகவே இருக்கிறார்கள்.

என் தந்தையைப் பற்றி உண்மையில் நான் என்ன உணர்வுகள் கொண்டிருக்கிறேன், சென்ற ஐம்பத்தோரு வருடங்களாக எனது நெஞ்சிலே நான் சுமந்து நிற்பது தான் என்ன என்பவைகளைப் பற்றி உமக்கு நன்றாகப் புரியும்படி என்னால் தெளிவுபடுத்த இயலவில்லையோ என்று தான் அஞ்சுகிறேன். அதற்கு விசேஷமான வார்த்தைகள் வேண்டும் போலும். வார்த்தைகள் போதாது, இசையே தேவையோ என்னவோ. ஆனால் நாங்கள், எளிய ஜனங்கள் மீன்களைப் போல்தான். நாங்கள் விரும்புகிற விதத்தில் எங்களால் பேச முடியாது தான். எவரும் சொல்லால் வெளியிட இயல்வதைவிட சதா உணர்ந்து அதிகமாக அறிந்து கொள்ள முடிகிறது.

முக்கிய விஷயம் இது தான். அவர், என் தந்தை, தனது மரண வேளையிலே கூட, தான் தப்பிப் பிழைக்க முடியாது என அறிந்து அஞ்சாமலிருந்தார்; என்னை – தன் மகனை – அவர் மறக்கவில்லை; நான் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என அவர் கருதிய விஷயம் அனைத்தையும் எனக்கு அறிவிக்க வலிமை பெற்றதுடன், அதற்குரிய காலத்தையும் கணித்து விட்டார். நான் அறுபத்தேழு வருடங்கள் வாழ்ந்து விட்டேன். அன்று அவர் சொன்ன ஒவ்வொன்றும் இன்று கூட உண்மைதான் என்று நான் கூறமுடியும்.”

அந்தக் கிழமனிதன், முன்பு செந்நிறம் பெற்றிருந்து பின் பழுப்பாகி விட்ட பின்னல் குல்லாயைத் தலையிலிருந்து நீக்கி, புகைக் குழாயையும் எடுத்து விட்டு, வழுவழுப்பான வெண்கலத் தலையைத் தாழ்த்தியபடி, உறுதியாகச் சொன்னான்:

“ஆமாமய்யா, அதெல்லாம் உண்மைதான். நீங்கள் காண விரும்புகிறபடிதான் மனிதர்கள் காட்சியளிக்கிறார்கள். அவர்களை தயையுடன் நோக்குங்கள். அப்பொழுது அவர்களுக்கும் உங்களுக்கும் நன்மை செய்தவர்களாவீர்கள். அவர்கள் மிக நல்லவர்களாக ஆகிவிடுவர்; நீங்களும் கூடத்தான். இது ரொம்பச் சுலபமானது; இல்லையா?”

காற்று மேலும் மேலும் கனத்துச் சாடியது: அலைகள் உயர்ந்து துள்ளின; பளபளப்பும் வெண்மையும் பெற்றுத் திகழ்ந்தன. கடல் மீது கண்ட பறவைகள் பெரிதினும் பெரிதாய் வளர்ந்து, வேகமாய் வெகு தொலைவினும் தொலைவாய் எற்றுண்டு போயின. மூன்று வரிசைப் பாய்களுடன் தெரிந்த இரண்டு படகுகளும் எப்போதோ அடிவானத்தின் சில விளிம்பினுள் மறைந்து போயின.

தீவின் சரிந்த கரைகள் வெண்ணுரைப் போர்வை பெற்றன ; நீல நீர்த் தொகுதி பேரோசையுடன் மோதிச் சிதறியது; ஓய்வற்ற, உணர்ச்சி நிறைந்த இரைச்சலை விடாது முழங்கிக்கொண்டிருந்தன ஸிக்காடப் பூச்சிகள்.

– கடலில் நடந்தது (கதைகள்), முதல் பதிப்பு: நவம்பர் 1951, எழுதியவர்: மாக்ஸிம் கார்க்கி, தமிழில்: வல்லிக்கண்ணன், வெண்புறா வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *