“விழா அழிந்த களம்” என்று கலித்தொகை ஆசிரியர்களுள் ஒருவர் கூறியதாக எனக்கு ஞாபகம். அந்த இடமும் அன்று விழா அழிந்த களம் போலவேதான் கிடந்தது. அது ஒரு கோயில். வீதியிலே வாடிய மலர்கள், பெண்களின் கொண்டைகளிலும் அவை போந்து வாடிய மலர்கள்…
பெண்களின் முகங்கள் தாமரை மலர்கள்! ஆனால் தாமரை மலர்களும் இடத்தை விட்டு எடுத்துவிட்டால் வாடி வதங்கி விடுவனவே!
பலர் – அவர்களைப் பலசாலிகள் என்று சொல்லி விடலாம் போலும் – பகல் முழுவதும் வந்த இயந்திரப் படகுகளிலும், வள்ளங்களிலும், ஏன் கட்டுமரங்களிலும் தங்கள் வீடுகளுக்குச் சென்று விட்டார்கள்.
எஞ்சி நின்ற ஆண்கள் ஆண்மை இழந்து வாடி நின்றார்கள். பெண்கள் முகங்களிலே செந்தாமரையின் சிவப்பு எல்லாம் இழந்து, சோபை இழந்து வாடி நின்றார்கள்.
அது விழா அழிந்த களம்!
இவர்கள் அந்த ஏழு மைல் கடலைத் தாண்டுவதற்கு ஒரு படகு அல்லது ஒரு வள்ளம் அல்லது ஒரு கட்டுமரமாவது வருமா வரமாட்டாதா என ஏங்கி மனம் உடைந்து காத்துக் கிடந்தார்கள்.
அது விழாவின் அடுத்தநாள்.
அன்றே இரவு அங்குதானோ என்று நினைத்துப் பாய்கள் உள்ளவர்கள் பாய்களை விரித்துக்கொண்டு படுத்தார்கள். பாய்கள் இல்லாதவர்கள் தங்கள் சால்வைகளையும் முந்தானைகளையும் அந்த வெள்ளை மணலிலே விரித்துப் படுக்க ஆயத்தமானார்கள்.
இரவு பத்துமணியிருக்கும். திடீரென ஒரு படகு வந்தது. அத்தனை பேரும் ஒரே ஓட்டம். பாய்களை இழந்தவர்கள் பலர்; சால்வைகளை மறந்தவர்கள் சிலர். முந்தானைகளை மறந்தவர் களும்… ஆ! இவைகளை எல்லாம் நான் கணக்குப் பார்த்துக் கொண்டா இருந்தேன்! ஓடினார்கள்…. ஓடினார்கள்… துறை முகத்தை நோக்கி…
அந்த இயந்திரப்படகு ஓட்டிக்கு ஓர் எண்ணம் உதித்தது. கொஞ்சம் கள்ளுக் குடிக்கலாம் என்று அவன் படகைத் துறைமுகத்திலே கட்டிவிட்டுப் போய்விட்டான்; போயே விட்டான்.
இனி, அந்தப் பிரயாணச் சீட்டு விற்பவனின் ஆட்சி.
அவன் ஆட்சியே புரிந்தான்.
அந்தப் படகு கொண்டு போகக்கூடிய மக்களின் தொகை அறுபது. ஆனால், அந்தப் பிரயாணச் சீட்டு விற்பவனுக்குத் திருப்தியே வரவில்லை. அவன் தன்னளவிற்குப் பணம் தேட முனைந்தான். அல்லது தன் முதலாளிக்குப் பணம் தேடிக் கொடுக்க நினைத்தானோ நான் அறியேன்.
அந்தப் படகில் மனிதர்கள் நிறைந்துவிட்டார்கள். பெண்களும், ஆண்களும், குழந்தைகளுமாக ஒரே கும்பல். அந்தப் படகு கொள்ளக்கூடிய தொகைக்கு மேல் வந்துவிட்டது.
அப்பொழுதுதான் அந்தப் படகு ஓட்டி கள்ளைக் குடித்து வயிற்றை நிரப்பிக்கொண்டு வந்தான். அவன் உள்ளம் வேதனைப்பட்டது, ‘ஏன் இத்தனை மக்கள்? சில சமயம் இந்தப் படகு கடலில் ஓடும் சுறாமீன் அல்லது திமிங்கிலம்போலத் திடீரென்று தண்ணீருக்கு அடியில் ஆழ்ந்துவிடுமோ’ என்று!
ஆனால், அந்தப் பிரயாணச் சீட்டு விற்பவனா விடுபவன்? அவனுக்குத் தன் முதலாளிக்குப் பயணம் தேடிக் கொடுக்க வேண்டுமென்று ஆசை.
அவன் மனிதர்களை மிருகங்களாக நினைத்தான்.
அவனுமொரு மிருகம்தானே!
அவனுக்கு வேண்டும் பணம்.
ஏற்றினான், ஏற்றினான், அந்தப் படகே ஆழ்ந்து போகும்படியாக ஏற்றினான்.
வெள்ளை வேஷ்டிகளும் தேசியச் சட்டைகளும் அணிந்த இரு ஆண்களும், அவர்களுடைய இரு கொழுத்த மனைவிமார் களும் வந்து, அந்த லாஞ்சிலே முன்னரே இடம் பிடித்துக் கொண்டார்கள். இருந்துவிட்டார்கள் – அசையாத சித்திரங்கள் போல, பேசாத பதுமைகள் போல, அந்தப் படகின் அடி வாங்கிலே.
அவர்களுக்குத் தாங்கள் பெரிய மனிதர்கள் என்று ஒரு எண்ணம் போலும். அவர்களுடைய மனைவிமாரோ சதைப் பிடிப்பு மிக்கவர்கள். தொடைகளுக்கு மேலிருந்து பட்டுச் சேலை களை அடிக்கடி இழுத்துத் தொடைகளை மூடிக்கொண்டனர்.
ஆம். சொல்ல மறந்துவிட்டேன். அவர்களில் ஒருவருடன் ஒரு பெண் குழந்தை வந்தாள். அவளுக்கு வயது பத்து இருக்கும். கண்ணுள் கருமணி என்று கதைகளிலே சொல்வார்கள்; அது போல அவருக்கு அவள், அந்த மகள்.
அதற்கிடையில் அந்தப் பிரயாணச் சீட்டு விற்பவனுக்குக் கோபம் வந்துவிட்டது. தான், தனக்கோ அல்லது தன் முதலாளிக்கோ சம்பாதிக்கக் கூடிய பணம் வீணாகப் போகிறதே என்று அவனுடைய கவலை.
அந்தப் படகிலே போகும் மக்களைப் பற்றி அவனுக்குக் கொஞ்சங்கூடக் கவலையில்லை. அவர்கள் இருந்தாலும் ஒன்று தான் இறந்தாலும் ஒன்றுதான் என்பது அவனுடைய எண்ணம்.
அவன் சிறிய மனிதன்… ற்றினான், ஏற்றினான் இன்னும் பல பேர்களை.
அறுபதுபேரைச் சுமக்க வேண்டிய அந்த இயந்திரப் படகு, அன்று நூற்றுநாற்பது பேர் வரையிலே சுமந்தது. களைத்துப்போன குழந்தைகள் படகின் வாங்குகளுக்கு இடையிற் படுத்து விட்டார்கள். இது அந்தப் படகோட்டிக்குப் பொறுக்க முடிய வில்லையோ என்னவோ, உடனே அந்தப் படகின் இயந்திரத்தை முடுக்க ஆரம்பித்து விட்டான். அவன் மீது எனக்குச் சிறிய அன்பு பிறந்தது. ஆனால் அந்தப் பிரயாணச் சீட்டு எழுதுபவனுக்குத் திருப்தி என்பதே இல்லை. மக்கள் வந்துகொண்டே இருந் தார்கள். இவனும் பணம் சேர்த்துக்கொண்டே இருந்தான்.
அந்தப் பிரயாணச்சீட்டு எழுதுபவன் எண்ணினான், ‘இவ்வளவு மக்களையும் இந்தப் படகில் எப்படி அடைக்கலாம்’ என்று! ஒரு ஏழைக்குச் செல்வம் வந்ததுபோல அவன் மனத் திலும் ஒரு எண்ணம் உதயமாயிற்று. கணவன் மனைவியை ஏன் தாங்கக்கூடாது என அவன் நினைத்தான். மறுகணம் கட்டளை! “பெண்சாதிமாரெல்லாரும் புரியமாரின் மடியிலை இருக்க வேணும். பெண்சாதி பாரங் கூட எண்டால் புரிசனை மடியிலை வைச்சிருக்க வேணும்!”
எனக்கு இவனை உதைக்க வேண்டும் என்றுதான் தோன்றியது. ஆனால் தைரியந்தான் இல்லை. நான் உடனை நினைத் தேன், ‘இதனாற்றான் எங்கள் நாடு சீரழிந்து கிடக்கிறதோ’ என்று.
‘தாயும் தந்தையுமற்ற குழந்தைகள் போல நாங்கள் இதை நோக்கித்தானா சீரழிகின்றோம்’ என்று என் மனதிலே பட்டது.
அவன் ஒரு அற்பன். நான் ஒரு பயந்தாங்கொள்ளி.
திடீரென்று அந்த வெள்ளை வேட்டி உடுத்த ஒருவனுடைய மகளின் கையைப் பிடித்து இந்த அற்பன் இழுத்தான். சொன் னான்: “ஏன் தங்கச்சி, கொப்புவின்ரை மடியிலை அல்லது கோச்சியின்ரை மடியிலை இரென். உனக்கும் ஒரு தனி இடம் வேணுமோ இஞ்சை?”
அந்தக் கணத்தில், அவ்வளவு காலமும் அமைதியாக இருந்த அந்த வெள்ளை வேட்டிக்காரன், ருத்திரமூர்த்தியானான். அறை விழுந்தது. பிரயாணச்சீட்டு விற்பவன் படகு வாங்குகளுக் கிடையிற் கிடந்து மண் கவ்வினான். வெள்ளை வேட்டிக் காரனுக்குச் சினம் தணியவில்லை.
அதை அறிந்து உடனே கள்ளு மண்டிய படகு ஓட்டி அப்படகின் இயந்திரத்தை முடுக்கிவிட்டான். அது “சக்கு சக்கு” என்று ஆரம்பித்தது.
வெளியே மழைத்தூறல்.
அந்த இரண்டு வெள்ளை வேட்டிக்காரர்களின் மனைவிமார் தங்கள் பட்டுச்சேலைகளை இழுத்துச் செருகிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
விழா அழிந்த களம்.
– வெள்ளிப் பாதசரம், முதற் பதிப்பு: ஜனவரி 2008, மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ், சென்னை.