யல்லாம் யேசுவே – யெணக்கல்லாம் யேசுவே
தொல்லேய் மீகூம் யிவ்வூலாகில் தூஊணை யேசுவே
மின் வண்டி திரிசூலத்தைத் தாண்டியிருக்கும். கிழிந்துபோன கட்டம்போட்ட கம்பளிப் போர்வையும், மடக்கக் கூடிய அலுமினிய ஊன்று கோலும், இடுங்கிப் போய் பாதாளமானதும், திறந்திருக்கும் சின்ன இமை இடுக்கு வழியே தெரியும் ரத்த நரம்போடும் வெள்ளை விழிக்கோடு மட்டுமாகவும் பிச்சைக்காரன் பெரிய குரலில் பாடினான். பிச்சை நாணயங்கள் விழுந்திருந்த குவளையின் வாயைக் கையால் மூடிக்கொண்டு தாளத்திற்காக அதைக் குலுக்கிக் கொண்டிருந்தான். ஏழெட்டு நாணயங்கள் இருந்திருக்க வேண்டும். கட்டுத் தவறாமல் இருந்தாலும் அத்தனை நாணயங்கள் குலுங்குவதால் ஒரே சீராக இல்லாமல் பிசிறு பிசிறாகத் தாளம் விழுந்து கொண்டிருந்தது. கூடப் பாடிய என் குரல் சற்றே எல்லை மீறி, அதன் குளியலறைப் பருமனைத் தாண்டி, கூட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கெளரவமான முனகல் தொனியைக் கடந்திருக்க வேண்டும். பக்கத்தில் இருந்த இரண்டு மூன்று பேர் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். புருவத்தை உயர்த்தி, விழியைப் பெரிதாக்கி, உதட்டைக் குவித்து மனைவி வியப்பையும், திகைப்பையும், எச்சரிக்கையையும் ஒன்றாக வெளிப்படுத்தினாள். நான் அவனைக் கேலி செய்து பாடுவதாக எண்ணினாளோ என்னவோ. எனக்குள்ளே மணி வாத்தியார் கம்பீரமாகப் பாடிக்கொண்டிருப்பதை அவள் கேட்டிருக்க முடியாது.
எப்போது அவரிடம் படித்தது… ம்… எட்டாவது ஏ அவருடைய சொத்து. கிளாஸ் வாத்தியார். அறுவத்தி நாலு அறுவத்தஞ்சா? ம்… அப்படித்தான் இருக்கும். கெல்லட் உயர்நிலைப் பள்ளி. திருவல்லிக்கேணியின் பரபரப்பு அதன் காம்பவுண்டு சுவரைத் தாண்டி வரமுடியாது. பள்ளிக்கு உள்ளே நுழைந்து விட்டால் சின்னதாய் கிராம வாசனை வீசும். வாசலில் மாமரங்கள். ஒரு பலாமரங்கூட இருந்ததாக நினைவு. ஆறாம் வகுப்பு படிக்கும் போது, உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து கையை எட்டினால் மாங்காய் பறிக்கலாம். டீச்சருக்கும் பிரம்புக்கும் பயம். இயல்பாகவே தன்னுடையதில்லாததைத் தொட அஞ்சும் சுபாவம். வாயில் கடித்தவுடன் கன்னத்திலும் நாக்குக்கடியிலும் குறுகுறுவென ஊறும் புளிப்புச் சுவையைக் கற்பனை செய்வதோடு சரி. கடப்பைக் கல் பாவப்பட்ட சில்லென்ற தரைகள். சிவப்பு வண்ணம் பூசப்பட்ட ஆர்ச் (கொதிக் ஆர்ச்?) நிறைந்த கட்டிடம். உள்ளே நுழைந்து வலது பக்கம் திரும்பினால் குட்டி ப்ளேகிரவுண்ட். (அதைத் தவிர பெரிதும் இன்னும் பெரிதுமாக இரண்டு திடல்கள் உண்டு.) மணல் கொட்டியிருக்கும். பிவியென் தெருவில் (பண்டி வெங்கடேச நாயகன் தெரு) பள்ளியின் வாசலுக்குப் பக்கத்தில் முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் சர்ச்சின் உள்பகுதிச் சுவர்தான் அந்த கிரவுண்டின் எல்லை. இந்த எல்லையில் பள்ளியின் உள் வராந்தா. வராந்தா கடப்பைக் கற்களிலெல்லாம் மணல் துகள் படிந்திருக்கும். ஒரு பத்துப் பதினைந்தடி கடந்தால், வராந்தாவின் வலதுபக்கத்தில் பள்ளிக் கட்டிடத்திற்கும் சர்ச்சுக்கும் இடையில் எட்டாவது ஏ.
வகுப்புக்குப் பின்பக்கம் எட்டாவது பி. அது மையக் கட்டிடத்தின் வயிற்றுக்குள் இருக்கும். எட்டாவது ஏ மட்டும் துருத்திக் கொண்டு தனியாக நிற்கும். சீமை ஓடு வேயப்பட்ட பச்சைக் கலர் உத்திரக் கட்டைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் பழைய காலக் கட்டுமானம். விக்டோரியா பாணி அமைப்புக்குள் இந்த வகுப்பு மட்டும் கொஞ்சம் இந்திய வடிவம் காட்டும். கலாச்சார சங்கமமாக. மணி வாத்தியாரைப் போல்.
மணி வாத்தியார் கொஞ்சம் உயர் ரகம். எப்போதும் பச்சைக் கலர் காட்டன் சட்டைதான். முழங்கைக்குச் சற்றுக் கீழே நீண்டிருக்கும் சட்டைக் கை. அடிக்கடி சலவை செய்யப்பட்டு அங்கங்கே வெள்ளை வெள்ளைத் திட்டுகளாய் கஞ்சி முடப்பு தெரியும். தங்கப் பித்தான். கனத்த பிளாஸ்டிக் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி. பெரிய தொப்பை. நல்ல சிவப்பு. பெரிய மூக்கு. சற்றே முன் துருத்திய கீழ் உதடு. எப்போதும் பிரிந்தே இருக்கும் வாயில் மாறாத புன்னகை. கட்டை கட்டையாக, தடிமனான விரல்கள். பட்டையாய்க் கரைபோட்ட வேட்டி. அந்தக் கால விகடனில் வாணி வரைவதில் கொஞ்சமும் ஸ்ரீதர் வரைவதில் கொஞ்சமுமாகச் சேர்த்தால் மணி வாத்தியார். எப்போதும் சலவை மடிப்புக் கலையாத துண்டு ஒன்று தோளில் இருக்கும். கையில் வாத்தியார் லட்சணம் இருக்காது. மணிப்பிரம்பைத்தான் சொல்கிறேன். பதிலுக்கு, பள்ளியின் ஹிம் புக் (ஹேன்ட் புக், டைரி எல்லாமும் அதுதான்) இருக்கும். மஞ்சள் அட்டையும் சிவப்பு காலிக்கோ முதுகுமாக அவருடைய உள்ளங்கைக்குள் அடங்கிவிடும்.
தேவாலயத்து மணியைப் போல ஒரு மணி மாடியில் லீத் ஹாலுக்கு முன்னால் தொங்கிக் கொண்டிருக்கும். இன்னொரு மணி தண்டவாளத் துண்டு. வாசலுக்கு அருகில் இருக்கும். இரண்டு மணிகளையும் ஒரே நேரத்தில் அடிப்பார்கள். அது என்னவோ மாடியில் இருக்கும் மணியை எப்போதும் மாரிதான் அடிப்பான். மடித்துக் கட்டின அழுக்கு வேட்டிக்கு அடியில் மூன்றங்குல நீளத்துக்குக் காக்கி நிஜார் தெரியும். பீடி பிடித்த எச்சிலை அவ்வப்போது நாக்கை மடித்து அம்பு போல கீழே திடலை நோக்கித் துப்பிக் கொண்டே மணியடிப்பான். ஒரே சீராக – இரண்டிரண்டாக – மணி ஒலிக்கும். கண்டபடி அடிக்க மாட்டார்கள். அந்த மணியின் நாதமும் வாசலில் இருக்கும் தண்டவாளத் துண்டில் அடிக்கும் ஒலியும் ஒன்றாகச் சேர்ந்து தாளம் தவறாமல் ஒரே மாதிரி ஒலிக்கும். பத்து நிமிடங்களில் காலைப் பிரார்த்தனைக் கூட்டம் ஆரம்பமாகிவிடும்.
ஆறாவது முதல் எட்டாவது வகுப்பு வரை கீழே இருக்கும் திடலில். ஒன்பது முதல் பதினொன்று வரை மேலே லீத் மண்டபத்தில். கீழே பாடும் குழுவுக்கு எப்போதும் மணி வாத்தியார்தான் வழி நடத்துவார். வெண்கலக் குரல். சில சமயம் குழலூதுவார். சில சமயம் கஞ்சிரா வாசிப்பார். எப்போதும் அவர்தான் பாடுவார். பெரிய குரலில் அவர் பாடுவதும் கீச்சுமூச்சாக, உடைந்துகொண்டிருக்கும் குரல்களில் நாங்கள் தொடர்வதும், குழலோசையும், கஞ்சிரா ஒலியும் இன்னும் வாசலில் பூத்திருக்கும் மல்லிகைக் கொடியைப் போல நினைத்து நினைத்து மணம்பரப்பிக் கொண்டிருக்கிறது.
எல்லாம் ஏஸ¤வே எனாக்கெல்லாம் ஏஸ்ஸுவே
தொல்லாய்மீகு மிவ்வூ லாகில் தூணையேஸுவே
அந்த எனாக்கெல்லாமுக்கு முன்னால் சின்னதாக ஒரு ஹ் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஹேனக்கெல்லாம் என்பது போல. அத்தனை கனமாகவும் ஒலிக்கக் கூடாது. ‘தொல்லாய்மீகும்’ பாடும்போது லேசாக இங்லீஷ்காரன் பாடுவது மாதிரியிருக்கும். மணி வாத்தியாருடைய ஸ்டைல் அது.
ஆஅயனும் சகாஅயனும் நேஏயனும் உபாயனூம்…
அந்த நேர்த்தியும், அந்தப் பிசிறில்லாத குரலும், ரசித்து அவர் பாடும் விதமும் எனக்குள்ளே நிரந்தரமாகப் படிந்திருக்கும் பிம்பம். பிரார்த்தனை முடிந்ததும் செய்தி வாசிப்பு. அப்போது ஏதோ ராக்கெட் ஏவியிருந்தார்கள். ராக்கெட் கிளம்பி இத்தனை வினாடிகளுக்குப் பிறகு அதன் ஒரு பகுதி கழன்று விழுந்தது என்று ஒரு பையன் அன்றைய தலைப்புச் செய்தி படிக்க, மூக்குப் பொடியை அப்போதுதான் தலையைத் திருப்பிக் கொண்டு உறிஞ்சியிருந்த ஆல்பர்ட் வாத்தியார், வரும் தும்மலை அடக்கிக் கொண்டு அவசரமாக மைக்கில் குறுக்கிட்டார். “அக்…ஹாஆஆஅக்…ஹக்… டேய்! அது அப்புடித்தான் உளுகும். மேல போவச் சொல்ல அதுனோட பாரத்தையும் சொமப்பானேன்னு தான் அப்புடிப் பண்ணியிரிக்கானுவ.” விளக்கம் கொடுத்துவிட்ட திருப்தியில் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டு தும்மித் தீர்த்தார்.
மணி வாத்தியாரிடம் படிப்பதே ஒரு சொகம். இங்லீஷ் நடத்துவார். சயின்ஸ் நடத்துவார். அநேகமாகக் கணக்கையும் தமிழையும் தவிர மற்ற எல்லாப் பாடங்களும் அவர்தான். தமிழுக்கு வேறொரு வாத்தியார். அவர் பேர் யாருக்கு ஞாபகமிருக்கிறது. அவரைப் பெற்றவர்கள் என்ன பெயர் வைத்தார்களோ தெரியாது. அவரிடம் கல்வி பெற்றவர்கள் வைத்த பெயர்தான் எங்களுக்குத் தெரியும். (அது இங்கே வேண்டாம்.) எப்போது வகுப்புக்குள் நுழைந்தாலும் வாயில் ஒரு ஸ்ட்ராங் பப்பரமுட்டு. பேசும்போதெல்லாம் வெள்ளையாய்ப் புரளும். இடைக்கிடையே சப்சப்சப் என்று சப்தம் வரும். கையில் அருமையான பிரம்பு. உள்ளே நுழைந்தவுடன் எவனையாவது எதற்காகவாவது பெஞ்சுமேல் ஏற்றிவிட்டுதான் மறுகாரியம். பெஞ்சுமேல் நிற்கும் போது ஆசைதீர முழங்காலில் பிரம்பால் அடிப்பார். தினமும். தினத்தினமும். கணக்குக்கு ஒரு முசுடு. எனக்கு இரண்டு பாடங்கள் மீதும் தீராப்பகை. கணக்கு ஜென்மப் பகை. நான்காம் வகுப்பில் சுஜாதா (கொஞ்சம் மலையாள வாசனையோடு ‘தா’வை உச்சரிக்க வேண்டும்) டீச்சர் மற்ற பையன்களைப் படுத்திய பாட்டிலேயே என்னை விட்டுக் கணக்கு எங்கோ போய்விட்டது. அந்த வருடத்திற்குத் தமிழும் சேர்ந்து கொண்டது. அவர் நடத்தி ‘நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே’ திருப்புகழ் மட்டும்தான் நினைவிருக்கிறது.
மணி வாத்தியாருக்கு அப்படியெல்லாம் பேர் இருந்ததில்லை. ம்… இருந்ததோ? ஆமாம். இருந்தது. ஆனைக்குட்டி என்று. அசைந்து அசைந்து பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் யானையைப் போல வருவார். டிங்ங்ங்ங் க… டிடிடிங்ங்ங் க… என்று மணிதான் சப்திக்காது. அவரேதான் மணி ஆயிற்றே! அவர் நடக்கும்போது சில சமயம் எந்தப் பயலாவது அவருக்கு ஒரு முப்பதடி தொலைவில் நின்று கொண்டு தொண்டைக்குள்ளே மணி சப்தம் எழுப்பி சந்தோஷப்பட்டுக் கொள்வான்.
ஒரு நாள் அவர் வராந்தாவில் வந்து கொண்டிருந்தார். சின்னப் பையன் ஒருத்தன். ஆறாங்கிளாஸ் போலிருந்தது. ‘ஆனஉட்டீ!’ என்று கத்திவிட்டு, சட்டென்று தூணுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டான். மெதுவாக உடலைத் திருப்பிப் பார்த்தாலும் (கழுத்தை மட்டும் திருப்புவது என்பதை ஏனோ அவரிடம் கண்டதில்லை) பையன் ஒளிந்து கொள்வதைப் பார்த்து விட்டார். “டேய்! இங்க வாடா” என்றார். உடலை ஒளித்துக் கொண்டு தலையை மட்டும் குறுகுறுப்பாக நீட்டிப் பார்த்த பயலுக்கு அதிர்ச்சி. பயம். தூணோடு தூணாக ஒட்டிக் கொண்டான்.
வாத்தியார் கூப்பிடதாச்சே! ரெண்டு எட்டாவது ஏ பசங்க அந்தப் பயலை ரெண்டு தோளையும் பிடித்துச் செந்தூக்காகத் தூக்கி வந்து நிறுத்தினார்கள். முகத்தில் புன்னகை மாறாமல் கையை நீட்டி அந்தப் பையனின் காதைப் பற்றினார். சும்மா. வலிக்கவே வலிக்காது. பாவ்லா காட்டுவார். அவ்வளவுதான். பையனுடைய இதயத் துடிப்பின் வேகம் அவன் முகத்திலேயே தெரிந்தது. ஒண்ணுக்குப் போய்த் தொலைக்கவில்லை. அது மட்டும்தான் குறை. “இன்னூரு தடவ சொல்றா” என்றார். பையனுக்குத் திகில் அதிகமாகிவிட்டது. “சொல்றா. படுவா. சொல்லப் போறியா இல்லியா இப்போ? சொன்னாத்தான் விடுவேன். சொல்றா” என்று சிரித்துக் கொண்டே அவர் காதைத் திருகுவது போலச் செய்ய, ஜோக்கு புரிந்ததைப் போல கொஞ்சமே கொஞ்சம் தெளிந்து கண்களைத் தழைத்துக் கொண்டு “ஆனட்டி” என்று முனகினான். “ஆமாம். நான் ஆனை மாதிரிதான் இருக்கேன். அப்படி தாராளமா சொல்லலாம். ஒட்ரக்குச்சி அப்படின்னுதான் சொல்லக் கூடாது. தெரிஞ்சுதா?” என்று விளையாட்டாக அதட்டிக் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு, அந்தப் பையனை ஓஓஓஓஓடிப் போக விட்டுவிட்டு, திரும்பி ‘ஏஸ்ஸ¤வே’ என்று சொல்லிக்கொண்டு நடந்தார்.
பாடம் நடக்கும் போது திடீரென்று அவருடைய நினைவுகள் எங்கெங்கோ புரளும். அவருடைய அப்பாவை நினைத்துக் கொள்வார். பிரெசிடென்சி கல்லூரியில் படிக்கும் போது பீச்சில் தம்மடித்துக் கொண்டிருப்பதை அப்பா பார்த்துவிட்ட கதையைச் சொல்வார். அப்போது விட்டுவிட்டு வீட்டில் வந்து மடக்கியதைச் சொல்வார். திடீரெனப் பெருமூச்சு கிளம்பும். “கிறிஸ்துவனானேன். மாமிசம் உண்டேன். புகை பிடித்தேன். என் தந்தைக்கு சொல்ல முடியாத மனக்கஷ்டத்தைக் கொடுத்தேன்” என்று சொல்லிக் கொள்வார். மணி வாத்தியாருக்குக் காதல் கல்யாணம் என்று கேள்வி. நான் படித்த காலத்திலேயே அவருடைய மனைவி உயிருடன் இல்லை. அப்போது ஐம்பதைத் தாண்டியிருந்திருப்பார். அதாவது நான் அவரிடத்தில் படித்தபோது.
அன்றைக்கு என் அப்பா மணி வாத்தியாரைப் பார்க்க வந்திருந்தார். என்னிடம் ஒரு டைரி இருந்தது. தினமும் எழுதும் பழக்கம் கிடையாது. தோன்றிய போதெல்லாம் கிறுக்குவேன். ராமச்சந்திரனோடு பங்குத் அட்டாக் போட்டுக் கொண்டது எப்போது, கணேஷோடு எலுமி விட்டுக் கொண்டது என்று, ரங்கராஜன் என்னைத் தாண்டி இங்லீஷில் வகுப்பில் முதல் ரேங்க் எடுத்தது எப்போது போன்ற அதிமுக்கியமான குறிப்புகள் மட்டும் இருக்கும்.
அன்றைக்கு அந்தக் குலசேகர மகாபாவி என் டைரியில் ஏதோ கிறுக்கித் தொலைத்திருந்தான். ‘நான் இன்றைக்கு ஒரு பொண்ணை’ என்று ஆரம்பித்துக் கெட்ட வார்த்தையெல்லாம் எழுதி வைத்திருந்தான். நானே அதைப் பார்க்கவில்லை. என்னுடைய போதாத வேளை. வீட்டுக்கு வந்தவுடன் என் பையை (அன்றைக்கென்று பார்த்து) அப்பா பறிமுதல் செய்தார். டைரியைப் புரட்டினார். எனக்கும் அம்மாவுக்கும் பிடிக்கவே பிடிக்காத காரியம். அடுத்தவர்களுக்கு வந்த கடிதத்தையும், அடுத்தவர்களின் டைரியையும் தீண்டவே கூடாது என்பது அம்மாவின் அசைக்க முடியாத கொள்கை. அம்மா எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருந்தாள். என் டைரியையோ, எனக்கு (அந்த வயதிலேயே!) வரும் கடிதங்களையோ தொடவே மாட்டாள். அப்பாவும்தான். ஆனால் அவருடைய எல்லை கொஞ்சம் விஸ்தாரமானது. என் டைரி போன்ற ‘பர்சனல்’ சமாச்சாரங் களுக்குள்ளெல்லாம் நுழையும்.
மேற்படி குலசேகர மகாவாக்கியத்தில் அப்பாவின் பார்வை படிந்தது. எனக்கு அப்போது அந்தச் சமாச்சாரம் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. தகுந்த குரு அதுவரை வாய்க்காத காரணத்தால் அந்த ஞானம் எனக்குக் கைவரப் பெற்றிருக்கவில்லை. “ஏய் இங்க பாரு!” என்று அம்மாவை விளித்தார். அம்மாவின் முகம் சிவந்து, அவள் கையில் எடுத்த கிரிக்கெட் பேட்டால் என் முதுகு, தோள், தொடை எல்லாம் பட்டை பட்டையாகச் சிவந்தது.
அதைப் பற்றி விசாரிக்கத்தான் அப்பா வந்திருந்தார். வகுப்பு நடந்து கொண்டிருந்த சமயமானதால் உள்ளே நுழைந்து வாத்தியார் அருகில் சென்று, வலது உள்ளங்கையின் மேற்புறத்தை இடது கட்டைவிரலாலும், கீழ்ப்புறத்தை மற்ற விரல்களாலும் பற்றியபடி அப்பா வாத்தியாரின் காதுக்கருகே முணுமுணுத்தார். “இங்க வேணாம். வெளில வந்துருங்க” என்றபடி மணி வாத்தியார் என்னையும் அழைத்துக் கொண்டு வகுப்புக்கு வெளியே வந்தார். கடப்பைக் கல் பாவிய வராந்தாவில் நின்றபடி ஒரு பத்து நிமிஷம் பேசினார்கள்.
“ஒண்ணும் கவலப் படாதீங்க சார். பையன் ரொம்ப நல்ல பையன். பயந்தாங்குள்ளி. அப்படியெல்லாம் செய்யமாட்டான். நான் விசாரிக்கிறேன். இங்லீஷெல்லாம் கற்பூரம் மாதிரி பிடிச்சுக்கறான். என்ன, இந்த கணக்குலயும் தமிழுலயும் மட்டும் கொஞ்சம் கவனிக்கணும். அவ்வளவுதான். ரொம்ப நல்லா வருவான் சார்’ என்று சொல்லி அப்பாவைத் தைரியப் படுத்தி அனுப்பி வைத்தார். நான் வெறுங்காலில் கடப்பைக் கல் மீது நின்று கொண்டிருந்ததால் வகுப்பில் நுழைய காலை எடுத்த போது, பாதத்தின் வேர்வை கல்லின் மீது ஈரச் சுவடாய்ப் படிந்திருந்தது. கண்ணைத் திருப்பும் முன்னால் காற்றில் கரைந்தும் போனது.
எனக்குத் தெரிந்து ‘நல்லா வரமாட்டான்’ என்று ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் மட்டும்தான் நன்றாக வந்திருக்கிறார்கள். நான் விதி விலக்கல்ல. வாழ்க்கை ராக்கெட் பறக்க ஆரம்பித்த போது தேவைப் படாதவற்றோடு தேவைப்படுவதையும் சேர்த்துத் தொலைத்தவன் நான்.
“இன்னும் எத்தனை நாழிக்குத் தரைய வெறிக்கறதா உத்தேசம்? தாம்பரம் வந்தாச்சு. எறங்குங்கோப்பா” என்று மனைவி உசுப்பினாள். இறங்கினோம்.
பிச்சைக்காரன் பிளாட்பாரத்தில் நடந்து கொண்டிருந்தான் –
தேவபிதா என்றன் மேய்ப்பனல்லோ
சிறுமைத் தாழ்ச்சி அடைகேனே
ஆயுள் முழுவதும் என்பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும்
என்று பாடியபடி, அவன் ‘பாத்ரத்தை’ பயணிகளிடம் ஏந்தியபடி.
– செப்டம்பர் 2003