கடன் கேட்போர் நெஞ்சம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 14, 2022
பார்வையிட்டோர்: 4,215 
 

கதை கேட்க: https://www.youtube.com/watch?v=F1v392URqXk

அந்த தெருவின் வீட்டில் இருந்த நாய் என்னைப்பார்த்து நின்றது ! இப்பொழுது என்னை விரோதியாய் பார்த்துக்கொண்டுள்ளதா? இல்லை நட்பாய் பார்க்கிறதா? என்னால் அறிய முடியவில்லை. இப்பொழுது நான் அந்த நாயை தாண்டி போக வேண்டும். அது என் மீது பாயுமா? அல்லது நட்புடன் பழக வருமா? என்பது என் மனதில் வந்த கேள்வி. முக்கியமான விஷயம் என்னவென்றால் அதன் எண்ணம் என்ன? என்று தெரியாமல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. என் கால் அவ்வளவு பலகீனமானவை. என்னுடைய தடுமாற்றம் அந்த நாயிற்கு புரிந்தது போல் தெரியவில்லை. அதுவும் அந்த வீட்டை விட்டு விலகாமல் என்னையும் அங்கும் இங்கும் நகர விடாமல் நின்று கொண்டிருந்தது.

இப்பொழுது அந்த வீட்டிலிருந்து யாராவது வெளியே வரவேண்டும். நாயை கட்டி வைத்திருப்பது போலவும் தெரியவில்லை. என்ன செய்வது? அடுத்த வீட்டின் கதவு திறந்து ஒரு பெண் வெளியே வந்தவள் ஒரு நிமிடம் நான் அவள் வீட்டு எதிரில் ஓட்டபந்தயத்துக்கு தயாராய் நிற்பதை போல் நின்றதை பார்த்தவள் என் பார்வை சென்ற திக்கை நோக்கினாள்.அங்க்கே அந்த நாய் நின்று கொண்டிருப்பதை பார்த்து முகத்தில் ஒரு புன்முறுவலை காட்டி ஒண்ணும் பண்ணாது நீங்க போங்க

என்று சொன்னாள். நான் அவள் மீது நம்பிக்கையில்லாமல் இருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்று கொண்டிருந்தேன். ஐந்து நிமிடம் பார்த்தவள் அந்த நாய் நிற்குமிடம் சென்று ஜானி கம்முனு நில்லு என்று சொல்லி அதன் கழுத்து பட்டையை பிடித்துக்கொண்டாள். என் கால் அதன் பின்னரே முன்னே நகர ஆரம்பித்தது.அப்பொழுதும் ‘இந்த பெண் பட்டையை விட்டு விட்டால்’ என் நிலைமை என்ன ஆவது? நினைக்கும்போதே உடல் நடுங்கியது.

எப்பொழுதும் சுற்றி செல்பவன் இன்று என்ன நினைத்தேனோ தெரியவில்லை. இந்த தெரு தாண்டி நண்பன் முருகேசனை பார்க்க வேண்டும். அவன் சொல்லி விட்டான், இந்த தெரு வழியே வந்தால் எனது வீடு அடுத்த தெருதான் என்று. ஆனால் இப்படி எல்லாம் ஜீவன்கள் இருக்கும் என்று சொல்லி இருந்தால் நான் இந்த வழியை நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டேன்.

நான் வழியைத்தான் நினைத்து பார்க்க மாட்டேன் என்று சொன்னேனே தவிர முருகேசன் வீட்டுக்கு போவதில் இருந்து பின் வாங்க முடியாது. காரணம் பணம் கொஞ்சம் கடனாக அவனிடம் வாங்க வேண்டும். நேற்றே அலுவலகத்தில் வைத்து கேட்டதற்கு நாளை காலையில் வீட்டிற்கு வந்து வாங்கிக்கொள் என்று சொல்லி விட்டான். மெல்ல தலையை சொறிந்து வீட்டுக்கு வர அடையாளம் சொல் என்று கேட்டேன். விசித்திரமாய் என்னை பார்த்து இத்தனை நாள் இந்த ஏரியாவில் இருக்கற? என் வீடு தெரியலையா? இவன் என்ன மந்திரியா? இல்லைஇந்த வட்டாரத்துல பெரும் புள்ளியா? மனதுக்குள் நினைத்துக்கொண்டு இல்லை நம்ம ஏரியாவுல இருந்து வர்றே அப்படீங்கறது தெரியும், ஆனா எந்த தெரு அப்படீங்கறதுதான் தெரியலை? பரிதாபமாய் முகத்தை வைத்து கொண்டு சொன்னேன். பையனின் கடைசி பள்ளிக்கட்டணம் என்னை அப்படி பேச வைத்தது. உன் வீட்டுல இருந்து அடுத்த தெருவுல இருக்கற சந்து வழியா வந்தியின்னா பின்னாடி தெரு வரும், அங்க நின்னு வலது புறம் பார்த்தியின்னா பச்சை கேட்டு போட்ட வீடுதான் நம்மளது. இதை விலா வாரியாக சொல்கிறவன்,நாளைக்கு நானே கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று சொல்வானா,எதிர்பார்த்தேன். கடன் வாங்க ஒருவர் வீட்டுக்கு போவது என்பது மனதுக்கு மிகுந்த உளைச்சலை கொடுத்த்து. ஆனால் வழி சொல்லி விட்டு அவன் வேலையை பார்க்க போய் விட்டான்.

இரவு உணவு கூட இறங்க மறுத்தது. காலை இவன் வீட்டுக்கு போக வேண்டும், அங்கு போய் அவன் முன்னால் பணத்துக்காக வந்தேன் என்று சொல்லாமல் அந்த விசயமாக வந்திருப்பதாக அவனுக்கு உணர்த்த வேண்டுமே.

ஒரே குழப்பமாக இருந்தது. இந்த முறை எப்படி ஏமாந்தது? எப்பொழுதும் பையனின் பள்ளிக்கட்டணம் வருமுன் எடுத்து வைப்பது வழக்கம். இந்த முறை ஏதோ செலவு இழுத்து விட்டது, என்ன செலவு என்று மண்டையை உடைத்துக்கொள்ள இப்பொழுது நான் தயாராகவில்லை.

ஒரு வழியாக பச்சை கேட் போட்ட வீட்டை கண்டு பிடித்து விட்டேன். இவன் வீட்டிலும் நாய் இருக்குமோ? மெல்ல கேட்டை தொட்டேன். நாய் இருந்தால் எப்படியும் குலைக்கும்.

சத்தம் ஒன்றும் வரவில்லை. ஒரு வேளை வீட்டுக்குள் வைத்து நாயை வளர்த்துவார்களோ? கதவை திறந்தவுடன் பாய்ந்து வெளியே வந்தால் என்ன செய்வது? கொஞ்சம் எச்சரிக்கையுடன் “கேட்” தாழ்ப்பாள் போட்டுள்ளதா என பார்த்துக்கொண்டு “முருகேசு” ரொம்பவும் உரிமையுள்ளவன் போல் சத்தமிட்டேன். இரண்டு நிமிடம் எந்த சத்தமும் வரவில்லை. அதன் பின் வீட்டுக்கதவு திறந்து ஒரு பெண் வெளியே எட்டிப்பார்த்தாள். உங்களுக்கு யார் வேண்டும்? முருகேசு என்று சத்தம் கேட்டு வெளியே வந்தவள் மீண்டும் யார் வேண்டும் என்று கேட்கிறாள்? மனதுக்குள் நினைத்துக்கொண்டு முருகேசு இல்லைங்களா?

அவர் “வாக்கிங்” போயிருக்காரு, அடுத்த பதிலை என்னிடம் எதிர்பார்க்காதவள் போல் உள்ளே போக முற்பட்டாள். நான் அவர் கூட வேலை செய்யறவன், காலையில வரச்சொல்லியிருந்தார், சொல்லும்போதே குரல் உள்ளே போனது. அப்படியா எங்கிட்ட ஒண்ணும் சொல்லைலை. உள்ளே வாங்க இப்ப வந்திடுவாரு, சொல்லிக்கொண்டே உள்ளே போனாள். நாய் இருக்குங்களா? ஒரு வார்த்தை கேட்டுவிட்டே கேட்டை திறந்தேன்.

பதினைந்து நிமிடங்களாயிற்று, உட்கார சொல்லிவிட்டு அவன் மனைவி உள்ளே சென்றவள்தான், வெளியே வரவில்லை. வீட்டிற்குள் வேறு யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவன் கூட வேலை செய்பவன் என்று சொன்னதால் உள்ளேயாவது உட்கார விட்டாளே, என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். அதன் பின் பத்து நிமிடங்கள் ஓடிய பின்தான் உள்ளே வந்தான். மனைவியின் பேரை சொல்லிக்கொண்டே செருப்பை கழட்டி போட்டு விட்டு உள்ளே வந்தவன் நான் உட்கார்ந்திருப்பதை பார்த்து திகைத்து நின்றான். அப்புறம் ஞாபகம் வந்தவனாக அடடா உன்னை வர்ச்சொல்லியிருந்தேனுல்லே, மறந்தே போச்சு, என்று சொல்லிக்கொண்டு மீண்டும் மனைவி பேரை சொல்லிக்கொண்டு உள்ளே போனான்.

அவனும் உள்ளே போய் பத்து நிமிடங்கள் ஆயிற்று. இடையில் இருவரும் பேசிக்கொள்வது காதில் விழுந்த்து. பிறகு அமைதி. எனக்கு சோர்வு வர ஆரம்பித்து விட்டது. சே..என்ன வாழ்க்கை, கடன் வாங்க ஆரம்பித்து விட்டால் எதை எல்லாம் சகித்து கொள்ள வேண்டியிருக்கிறது. இவனும் ஒரு வார்த்தை காப்பி சாப்பிட்டாயா? என்று கேட்கவில்லை. அலுவலகத்தில் என் காசில் “டீ குடிக்க” கூப்பிடும் போதெல்லாம் ஓடி வருவான். இன்று இந்த காலை நேரத்தில் இவன் வீட்டுக்கு வந்திருக்கிறேன், காப்பி சாப்பிட்டாயா? என்று அவனும் கேட்கவில்லை, அவன் மனைவியும் கேட்கவில்லை.

வெளியே வந்தவன் லுங்கி பனியனுக்கு மாறியிருந்தான். கை கால்களை துடைத்துக்கொண்டு வந்தான். சாரி நண்பா, உங்கிட்ட சொன்னது மறந்தே போச்சு, இல்லையின்னா வீட்டுல இருந்திருப்பேன். நான் அவன் கையையே பார்த்துக் கொண்டிருந்தேன். கொடுப்பதற்கு பணம் வைதிருக்கிறானா? என்று. அவனோ மேலும் பேச்சை வளர்த்துக்கொண்டு போவதை விரும்பினான். நான் மெல்ல கனைத்து சாரி…உன்னை காலையிலேயே “டிஸ்ட்ரப்” பண்றேன், மெல்ல எழுவது போல பாவ்லா காட்டினேன். அசரவே இல்லை, அவனும் எனக்கு எதிரில் ஒரு சேரை போட்டுக் கொண்டு உட்கார்ந்தான்.

அப்புறம் “மூணாவது டேபிள் பொன்னப்பனை” பத்தி கேள்விப்பட்டியா? என்று ஆரம்பித்தான். எனக்கு பொன்னப்பன் யார் என்றே ஞாபகம் வரவில்லை. யோசிப்பது போல அவன் முகத்தை (மனதுக்குள் எப்பொழுது பணம் கொடுப்பான்) பார்த்தேன்.

அதாம்ப்பா நாம் இரண்டு பேரும் பேசிகிட்டிருக்கும் போது எப்ப பார்த்தாலும் குறுக்க பேசுவானே,..ஓ..நான் ஞாபகம் வந்தது போல் முகத்தை காட்டி இழுத்தேன். இப்பொழுது அவன் முகம் பிரகாசமாயிற்று. அவன் தான் என்று அவன் கதையை எல்லோருக்கும் தெரிந்த கதையை அவசியமில்லாமல் சொன்னான். அப்படியா? ஆச்சர்யத்தை முகத்தில் காட்டி அல்லது நடித்து கேட்டுக்கொண்டிருந்தேன்.

இப்படியாக இவன் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் கடனுக்காக என்னுடன் பணி செய்பவர்களின் பல்வேறு சொந்த விசயங்களை பற்றி சொல்லி என்னை வதைத்து திடீரென்று ஞாபகம் வந்தவனாக “நீ பணம் கேட்டியிருந்தியில்லை” என்றவன் மெல்ல எழுந்து உள்ளே சென்றான். எனக்கு மறுபடி பயம் பிடித்துக்கொண்டது மீண்டும் திரும்பி வர எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வானோ?

வீட்டிற்குள் மீண்டும் இருவர் பேசிக்கொள்வது கேட்டது, ஒரு சில வார்த்தைகளும் காதில் விழுந்தன. எடுத்து எடுத்து கொடுத்துகிட்டேயிருந்தா..அவன் மனைவியின் குரல் கேட்டது.

கோபம் வந்தது எத்தனை முறை இவனை கேட்டிருக்கிறேன் இரண்டு முறை “ஒரு ஹண்ரட் ருபீஸ் கொடு” என்று ஆங்கிலத்தில் கேட்டுவிட்டு இதுவரை திருப்பி தராமல் போக்கு காட்டிக்கொண்டிருக்கிறான். என் போதாத வேலை இவனிடம் கேட்டு தொலைத்து இப்படி பேச்செல்லாம் கேட்க வேண்டியுள்ளது. பத்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டவன் கையில் பணத்தை எண்ணிக்கொண்டு வந்ததை பார்த்தவுடன் என் கோபம் காணாமல் போயிருந்தது. மெல்ல புன்னகைப்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு மீண்டும் சம்பிரதாயமான வார்த்தை சொன்னேன். “காலையில உன்னை தொந்தரவு பண்ணறேன்” என்று சொல்லிவிட்டு அவன் எண்ணிக்கொண்டு வந்த பணத்தயே பார்த்தேன். அவன் எதற்கும் மறு மொழி சொல்லாமல் பணத்தையே மீண்டும் மீண்டும் எண்ணி அடுத்த மாசம் கண்டிப்பா கொடுத்துடு.

கையில் கொடுக்க வந்ததை “மனம் மாறிவிடுவானோ” என்பது போல் பிடுங்கிக்கொண்டேன். ஆனால் நான் பிடுங்குவதாக அவனுக்கு தெரியாத வகையில் பிடுங்கிக்கொண்டேன்.

சரி நண்பா ஆபிஸ்ல பார்க்கலாம் என்று சொல்லி வெளியே வந்து செருப்பை போட்டுக்கொண்டு அந்த பச்சை கேட்டை திறந்து பாதையில் காலை வைத்தவனின் மனம் “அப்பாடி” என்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *