கசு அண்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 10, 2024
பார்வையிட்டோர்: 374 
 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

லேபர் ஆபீஸ் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால், அதற்குள் சிறு சிறு கும்பலாக தொழிலாளர்கள் வந்து கொண்டிருந்தார்கள். 

குழந்தை குட்டிகளுடன் வரும் பெண்கள்… 

நடக்க முடியாத வயோதிகர்கள்… 

கசு அண்டி (முந்திரிப் பருப்பு) கறையால் கறுத்துப் போயிருந்த கரங்கள் – அந்தக் கரங்களைப் பற்றி வாழும் குடும்ப அங்கத்தினர்கள்… 

ஆபீஸ் முற்றத்திலும், ரோட்டிலும் ஆங்காங்கே பல நாள் பட்டினியால் துவண்டு போயிருந்த அந்த எலும்புக் கூடுகளை வெறித்துப் பார்த்தவாறு ஆபீஸ் வராந்தாவில் குந்தியிருந்த திவாகரனின் நெஞ்சம் மௌனமாய்க் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது. 

கையிலிருந்த பீடியை, அது நூலாபீஸ் கழிந்தும்கூட, எறிய மனமில்லாமல் அவன் தீர்க்கமாய் இழுத்துக்கொண்டிருந்தான். 

‘இண்ணைக்கு எப்படியும் தர வேண்டியதை எல்லாம் கணக்கு தீத்து தந்திடுவாங்க… இல்லையா சார்…’ 

திவாகரன் தலை தூக்கிப் பார்த்தான். ஒரு தொழிலாளி… ராகவன். 

கசு அண்டிக் கறையில் வாட்டியெடுத்ததைப்போல், பசித் தீயில் வெந்துருகிப் போயிருந்த அவன் குழிந்த விழிகளுக்குள் அங்கே கூடியிருந்த எல்லோருடைய விழிகளுக்குள்ளிலும் தெறிப்ப தைப் போன்ற ஒரு எதிர்பார்ப்பின் ஒளிப்பொறி. 

திவாகரன் பதில் எதுவும் சொல்லவில்லை. பீடித் துண்டைத் தூர எறிந்து விட்டு, மேல் உதட்டில் குறுகுறுத்த பெரிய மீசையைக் கையால் ஒதுக்கி முறுக்கிவிட்ட திவாகரன் ராகவனையே பார்த்துக் கொண்டிருந்தான். 

கடந்த ஒன்பது மாதங்களாய் பலவித ஏமாற்றங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி, இப்போது அதன் கடைசி முனையில், பசித்த வயிறுகளுடன், எரியும் மனங்களுடன் வந்து நிற்கும் இவர்களிடம், ‘கடைசி நேரத்தில் ஏதாவது தகிடுதத்தம் நடந்து விடக்கூடாது என்பதில்லை’ என்று தன் மனதில் தோன்றுவதை இப்போது வெளியிட்டால், அது இவர்களுக்கு எவ்வளவு கொடூரமான ஏமாற்றமாக இருக்கும். 

இன்னும் ஆபீஸ் திறக்கல்லையே சார்… மணி என்னாச்சு?’ என்று மறுபடியும் ராகவன் கேட்டபோது, கைக் கடிகாரத்தைப் பார்த்து விட்டு, ‘ஒம்பது ஆச்சு, இன்னும் ஒரு மணி நேரத்தில் தெரியுமே…’ என்றான் திவாகரன். 

தங்கள் எல்லோருக்கும் முந்தியே தங்கள் யூனியன் தலைவர் அங்கே வந்து குந்தியிருப்பதைக்கண்டு இன்னும் ஒரு சிலர் திவாகரன் பக்கத்தில் வந்து கூடினார்கள். சிலர் அவன் முன்னால் வந்து உட்கார்ந்தார்கள். 

‘இந்த ஒம்பது மாசமா நீங்க எல்லோரும் கட்டிக் காத்துவந்த பொறுமையை இண்ணைக்குக் கை விட்டு விடக்கூடாது’ என்று அவன் தனக்கே உரித்தான கரகரப்பான தொண்டையில் கூறும்போது, அங்கே கூடி நிற்கும் அந்த ஆயிரத்தி இருநூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்களும், அவர்கள் குடும்பமும், மேலும் மேலும் மேனேஜ்மெண்டிடமிருந்து எத்தனையோ விதமான எதிர்பாராத ஏமாற்றங்களை அனுபவிக்க நேர்ந்தும்கூட, தன் மீது எவ்வளவு முழு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கையில், அவன் உணர்ச்சி வசப்பட்டான். தன் இதயக் கூட்டினுள்ளே மனிதாபிமானக் கிளி படபடவென்று இறக்கைகளை அடித்துக்கொள்வது அவன் செவிகளுக்கு நன்றாய்க் கேட்டது. 

இப்போது அந்த ஆபீஸ் காம்பவுண்டு முழுதும் தொழிலாளர்கள் நிரம்பி வழிந்தார்கள். ரோட்டில் எதிரே தெரிந்த அடைத்துக்கிடந்த கடை நடைகளில் எல்லாம் அவர்கள் நிரம்பியிருந்தார்கள். ரோட்டில் நடந்தும், வாகனங்களிலும் சென்றுகொண்டிருந்தவர்கள் நின்று இங்கே நிரம்பி வழியும் ஜனக் கூட்டத்தை வேடிக்கை பார்த்து விட்டுச் செல்வதையும் திவாகரன் கவனித்தான். 

இந்தத் தொழிலாளர்களின் இடையில் பணியாற்றிக் கொண்டிருந்த தனக்கு எம்.எல்.ஏ. பதவிகூட, அப்போ ஒரு பாரமாகவே தோன்றியது. அதைத் தான் உதறிய செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தபோது, எல்லோரும் தன்னைக் கேலி செய்தார்கள். ஒருவேளை தன் மூளைக்குத்தான் ஏதாவது கோளாறோ என்றுகூட தனக்கு மிக வேண்டியவர்கள் ஆத்மார்த்தமாகச் சந்தேகப்பட்டார்கள். ஆனால், தன்னைப் பொறுத்தவரையில் சட்டசபையிலோ, இல்லை வேறு ஆட்சிக் கூடங்களிலோபோய் இருக்கும் பொழுதைக்கூட இந்தத் தொழிலாளர்களோடு செலவழிக்க வேண்டுமென்பதில்தான் ஒரு நம்பிக்கை இருந்தது. 

மணி ஒன்பதரை ஆகிக்கொண்டிருந்தது. ஆபீஸ் இன்னும் திறக்கவில்லை. திறக்கும்போது, என்ன செய்தி இந்தப் பட்டினிக் கோலங்களுக்காகக் காத்திருக்கிறதோ என்று அவன் மனம் அச்சமடைந்தது. 

இந்த எஸ்.பி.பி.எம். பாக்டரி இதற்கு முன்பும் எல்லா வருஷமும் இப்படித்தானே பத்துப் பனிரண்டு மாதங்கள் வரை அடைத்துப் போட்டு, தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்காமல், ஊதியம் கொடுக்காமல் கஷ்டப்படுத்தியிருக்கிறது. ஏனைய முந்திரிப் பருப்பு பாக்டரிகள் ஓணத்தின்போது அளிக்கும் நியாயமான உரிமைகளை இந்தத் தொழிலாளர்களும் கேட்டபோதுதான் குழப்பமும் ஆரம்பமானது. அந்த ஒரே காரணத்திற்காக ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஒரு ஆகஸ்ட் மாதத்தில் இந்த பாக்டரியை அடைத்துப் போட்டார்கள். பிறகு இன்றுவரை இந்தப் பாக்டரி திறக்கப்பட்டு இயங்கவில்லை. இந்தத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க ஸி.ஸி.ஐ. அளித்து வந்திருந்த தோடுள்ள அண்டியை மட்டும் பெற்று, அதைக் கள்ளக் களவில் கொல்லத்துக்குக் கொண்டுசென்று குடில் வறுப்பு நடத்துவதையும், கறுப்பு மார்க்கட்டில் விற்பனை நடத்துவதையும், தான் அறிந்தபோது எவ்வளவு உணர்ச்சி வசப்பட்டோம்! யூனியன் லெவலில் முழு மூச்சாய் இவன் இதை அதிகாரிகளின் கண்களுக்குக் கொண்டுவந்தபோது கோட்டா ரத்து செய்யப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு கதவடைப்பு செய்யப்பட்டிருந்த பாக்டரிக்குள்ளிருந்து உடைத்த கசு அண்டிப் பருப்பைக் கள்ள வழியில் கடத்திக்கொண்டு போக முயற்சிப்பதை அறிந்தபோது, அவன் வெகுண்டெழுந்தான். தொழிலாளர்கள் சமர் தொடங்கினார்கள். வேலை நிறுத்தம் நடந்துகொண்டிருக்கையில் அண்டிப் பருப்பைக் கடத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததால், ஹை கோர்ட்டில் மானேஜ்மென்ட் ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்தது. தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய கூலி பாக்கியின் ஒரு பாகமாய் ஒரு லட்சம் ரூபாய் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்ய மாவட்ட லேபர் ஆபீசரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று தீர்ப்பு வந்தது. அந்தப் பணத்தை விநியோகம் செய்யாதிருக்க முதலாளி யாரிடமெல்லாமோ சிபாரிசுக்குப்போய், பாக்டரி க்ளோஷரில் உள்ளது என்று தீர்ப்புக் கூற ஹை கோர்ட்டுக்கு உரிமையில்லை என்றும், அதுக்கு இண்டஸ்டிரியல் ட்ரைபூனலுக்கு மட்டுமே முடியுமென்று காட்டி, ஹை கோர்ட்டில் மீண்டும் பெட்டிஷன் தாக்கல் செய்தார். இரு பக்க வாதங்களையும் செவிமடுத்த கோர்ட்டார் தொழிலாளர் களுக்குச் சேர வேண்டிய பணத்தை லேபர் ஆபீசர் வழி உடனடியாக விநியோகம் செய்ய வேண்டுமென்றும், மீதியை இண்டஸ்டிரியல் ட்ரைபூனலின் முடிவுக்கு விட வேண்டமென்றும் தீர்ப்பு வழங்கினார். அப்படி லேபர் ஆபீசர் பணம் விநியோகம் செய்யப் போவதாய் அறிவித்த தேதிதான் இன்று. 

இன்று எப்படி முடியுமோ…? 

எத்தனையோ கணக்குக் கூட்டல்களுடன், கழித்தல்களுடன் நிற்கும் தொழிலாளர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கும் திவாகரனின் மனம் இப்போது தாறுமாறாய் இயங்கிக் கொண்டிருந்தது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கோடிக் கணக்கில் அந்நிய நாட்டு செலாவணியைச் சம்பாதித்துத் தரும் தொழிலாளர்கள். இவர்களுக்கு இந்தக் கதியா? 

ஆபீஸ் திறக்கப்படுவதைக் கண்டபோது, தொழிலாளர்களின் இடையில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. எல்லோரிடமும் ‘அமைதியாக இருங்கள்’ என்று கூறிவிட்டு திவாகரன் எழுந்தான். இப்போது ரோட்டில் வந்துநின்ற காரிலிருந்து இறங்கிய லேபர் ஆபீசர், தொழிலாளர்களின் இடை வழி, ஆபீஸ் வராந்தாவில் ஏறினார். அவர் முக பாவத்திலிருந்து ஒன்றையுமே புரிந்துகொள்ள முடியவில்லை. அந்தப் பெரிய கூட்டத்தில் இப்போது ஊசி விழுந்தால்கூடக் கேட்கும் நிசப்தம் – பயங்கரமான ஒரு நிசப்தம் நிலவியது. 

அவர் காரியாலயத்தினுள் சென்ற, சற்று நேரத்தில் பியூன் வந்து ஆபீசர் கூப்பிடுவதாக திவாகரனிடம் சொல்கிறான். 

ஒரு தடவை, அந்தப் பட்டினிக் கோலங்களின் எத்தனையோ எதிர்பார்ப்புக்களை உள்ளடக்கி நிற்கும் விழிகளைத் திரும்பிப் பார்த்துவிட்டு திவாகரன் உள்ளே செல்கிறான். ஆபீசரின் அறையில் நுழைந்து அவர் எதிரில் கிடந்த நாற்காலியில் அவன் உட்கார்ந்தான். 

இப்போது அவர் முக பாவத்திலிருந்த சிலதையெல்லாம் அவனால் யூகிக்க முடிகிறது. அவர் மௌனமாய் அவன் கையில் ஒரு கடிதத்தைக் கொடுக்கிறார். 

அதைக் கையில் வாங்கிப் பார்த்தான். ஹை கோர்ட்டிலிருந்து இப்போது முதலாளி வாங்கியிருக்கும் ஸ்டே ஆர்டர். 

அவன் தலையில் ரத்தம் நிரம்பிப் பாய்ந்தது. அவனைப் பேச விடாமல், ‘பாவம்… தொழிலாளர்களைப் பார்க்கக் கஷ்டமாகத்தான் இருக்குது… நீங்கதான் அவுங்களிடம் எப்படியாவது இதைச் சொல்லி இங்கிருந்து சமாதானமா கலைஞ்சு போகும்படிச் செய்யனும்…’ என்று பரிதாபமாய் வேண்டிய அவரை நோக்கியவாறு ஓரிரு நிமிஷ நேரம் என்னவோ நினைத்துக்கொண்டு அவன் அப்படியே உட்கார்ந்திருந்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய் நாற்காலியை கிரீச்சி… பின்னால் தள்ளி விட்டு வேகமாய் எழுந்தான். துடித்துக் கொண்டு நின்ற மீசையை முறுக்கி விட்டவாறு, ஒரு உறுமலுடன், ஆபீஸ் முற்றத்தில் அவனை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கும் தொழிலாளர்களை நோக்கி விரைந்து நடந்தான். 

– 10.06.1973

– தாமரை 8.1973.

– இரண்டாவது முகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2012, கிழக்கு பதிப்பகம், சென்னை.

நீல பத்மநாபன் (பிறப்பு: சூன் 24, 1938, கன்னியாக்குமரி மாவட்டம்), தமிழகத்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது விருது பெற்றுள்ள நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *