குள்ள உருவம். நெற்றியில் திருமண். பஞ்சகச்சம் மாதிரி கட்டப்பெற்ற காவிநிற வேட்டி. கழுத்தில் துளசிமாலை. மார்பில் பூணூல். அவரே ஆழ்வார். அவர் பெயரே ஆழ்வாரா? அல்லது வேறு பெயரா? அதுவும் தெரியாது. திருமணம் நடந்ததா? அதுவும் தெரியாது. கேட்டால் சிரித்தபடி போய் விடுவார்.
ஆழ்வாருக்கு கால்காணி நிலம் உண்டு. அது மானம் பார்த்த பூமி. அதை யாரோ பயிரிட்டு கொடுத்து வந்தான். அதன் வருவாயை விற்று ஸ்ரீபெரும்பூதூர், திருப்பதி, ஸ்ரீரங்கம் போய் வருவார். ரயிலில் டிக்கட் பரிசோதகர் முதல் கார்டு வரை அனைவருமே பழக்கம். கோயிலுக்குப் போயி வந்ததும் அவருக்கு பரிச்சயமான வீடுகளுக்கெல்லாம் பிரசாதம் கொடுப்பார். பதிலுக்கு அவர்கள் கொடுக்கும் பால். மோரை வாங்கி சாப்பிடுவார். குடித்துவிட்டு அமிர்தமாக இருக்கிறது என்று சொல்வார்.
தென்பெண்ணையாற்றங்கரை ஓரம் தோப்பு. அதைத் தாண்டினால் ஈசுவரன் கோயில். எதிரில் பள்ளிக்கூடம். கோயில் ஓரமாகவே ஆழ்வாரின் கூரை வீடு. மண் சுவர்தான். பெருமாளின் பழைய மர விக்கிரகம் ஒன்றை வைத்து வழிபடுவார். வீட்டினுள் யாரையும் உள்ளே விடமாட்டார். அவரே சமைத்துக்கொள்வார்.
மார்கழி மாதங்களில் திருப்பாவை, திருவெம்பாவை, சங்கு சேகண்டியுடன் பாடுவார். அவரைச் சுற்றி சிறுவர், சிறுமியர் நின்று கேட்பார்கள். பாட்டு கேட்க அல்ல. அவர் தரும் சூடான சுண்டலை வாங்கி சாப்பிட.
அவருடைய முக்கிய வேலை. வீடுகளுக்கு ஓலை விசிறிகள் செய்து வீடு தேடி கொண்டு வந்து கொடுப்பார். பனை மரங்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று குருத்து பனை ஓலைகளை வெட்டி எடுத்துக்கொண்டு வருவார். அவற்றை படிய வைக்க கற்களைத் தூக்கி வைப்பார். மறுநாள் அவகைள் ஓலை விசிறிகளாக மாறிவிடும். அந்த ஓலை விசிறிகளை காசுக்கு விற்கமாட்டார். அவ்வூரில் அவருக்கு பிடித்த இருபது முப்பது வீடுகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கொடுப்பார். அதற்கு அரிசியோ, கம்போ, கேழ்வரகோ, புளியோ, கொடுப்பதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வார். ஒன்றும் கொடுக்கவில்லை என்றாலும் கேட்க மாட்டார். சிறுவர் சிறுமியர்களைக் கண்டால் ஆசையுடன் பேசுவார். அவர் தோற்றத்தை கேலி செய்தாலும் கோபித்துக் கொள்ள மாட்டார். அதனால் ஆழ்வாரை எல்லோருக்கும் பிடிக்கும்.
ஒருநாள் நடுப்பகல் – உச்சிப் பொழுது திருவரங்கம் போய்விட்டு பள்ளிக் கூடத்தைத் தாண்டி ஓலைகளைத் தலையில் சுமந்தபடி வந்து கொண்டிருந்தார்.
அவரின் நிழல் அவருக்குள்ளேயே ஒளிந்து கொண்டது.
“டேய் யார் வர்றது தெரியுதா?”
“நம்ம ஆழ்வார்டா”
“இவரு ஏண்டா ஓலை விசிறி விக்கறாரு…. மிட்டாய் வித்தால் கூட காசு கிடைக்குமே.. இல்லைன்னா ஐஸ் கூட விக்கலாமே”.
“ஆமாண்டா எல்லோர் வீட்டிலும் பேன் வந்துவிட்டது. யார்றா இன்னும் ஓலை விசிறியை விசுருறாங்க. எங்க வீட்டில் இருந்த ஓலை விசிறிகளைத் தூக்கி பரண்மேல எறிஞ்சிட்டோம்டா”.
“இந்த கிழத்துக்கு வேலையே இல்லை. அப்பப்ப வீட்டுக்கு வந்து ஓலை விசிறிகளைக் கொடுத்துவிட்டு ஏதாவது கொடுப்பாங்களான்னு நிக்கும்டா இந்த கிழம்”.
“டேய் பாவன்டா. பெரியவங்களை அப்படி பேசக்கூடாது. அவருக்கென்று யாருமே இல்லை. அதாண்டா அவராலே முடிஞ்சதை செய்யிராறுடா”.
பாரியும் மதியும் பேசிக் கொண்டு வந்ததைக் கேட்டு ஆழ்வார் சிரித்தபடியே தன் வீட்டிற்குச் சென்றார். வெட்டி வந்த பனை ஓலையை படிய வைத்தார். அடுப்பு மூட்டினார். சோறு பொங்கினார். மிளகு சீரக நீர் கொதிக்க வைத்தார். இருவாட்சி இலைத் துவையல் அறைத்தார். சாப்பிட்டார். சிறிதுநேரம் உறங்கினார்.
மாலை நேரம் எழுந்தார். சுக்கு, பனைவெல்லம் போட்ட தூளைக் கொதிக்கவைத்து அதில் ஏலக்காய் தூள் போட்டு இறக்கி வடிகட்டி பத்து விசிறிகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
முதலில் தலைவர் வீட்டுக்குச் சென்றார். வீட்டுக்கார அம்மாவை பெயரிட்டு கூப்பிட்டார். “ஆழ்வார் வந்திருக்கிறேன்”. என்று குரல் கொடுக்க, தலைவர் மனைவி வெளியே வந்து தம்ளர் நிறைய அரிசியுடன் வந்து அவர் வைத்திருந்த பையில் கொட்டினார். இரண்டு விசிறிகளை ஆழ்வார் கொடுத்தார்.
“முன்னாடி கொடுத்த ரெண்டு விசிறிகள் அப்படியே இருக்குதுங்க ஆழ்வார்”.
“இருக்கட்டும்மா… ஒதவும்… பாப்பா வந்தால் ஊருக்குக் கொடுத்து அனுப்பும்மா…”.
கிளம்பிவிட்டார் ஆழ்வார்.
போஸ்ட் மாஸ்டர் வீட்டிற்குள் போனார். பெயரிட்டு கூப்பிட்டார்.
“விசிறி வாணாம்னு அம்மா சொன்னாங்க தாத்தா”.
“அம்மாவை கூப்பிடும்மா”
“அம்மா வேலையா இருக்காங்க”
“நான் வந்திருக்கேன்னு சொல்லும்மா”
வீட்டுக்கார அம்மாவே வெளியே வந்தார்கள். “நெல் அறைக்க மிஷினுக்குப் போயிருக்காங்க… அதான்”
“அதுக்கென்ன மகராசி… இந்தாங்க…” என்று இரண்டு விசிறிகளைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.
“இந்த கிழத்துக்கு வேற வேலை இல்லை. எப்பப்பாரு ஓலை விசிறி. ஓலை விசிறின்னு உயிரை எடுக்குது” என்று சொல்லியபடி விசிறிகளை பரண்மேல் தூக்கிப்போட்டுவிட்டு மின் விசிறியை சுழலவிட்டாள் போஸ்ட் மாஸ்டர் மகள் சகுந்தலை.
ஆழ்வார் விசிறியை எடுத்துக்கொண்டு வருவதைப் பார்த்த மெத்தை வீட்டு அம்மாள் கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு உள்ளே போய்விட்டார்கள். ஆழ்வார் அந்த அம்மாள் பெயரை உரக்கக் கூப்பிட்டுப் பார்த்துவிட்டு தெருவே போனார்.
யாரோ வெளியூர்க்காரன் தெருவே போனவன்
“விசிறி விக்கிறதா”
“இல்லை”
“ஆறு விசிறி இருக்குதே”
“விற்பதற்கு இல்லை”
கேட்டவன் முணுமுணுத்துக்கொண்டே சென்றான்.
ஆசிரியர் வீட்டுக்குச் சென்றார் ஆழ்வார். அந்த வீட்டு மருமகள் வந்தாள். அரிசி கொண்டு வந்து கொடுத்தாள். இரண்டு விசிறிகள் கொடுத்தார். ஆசிரியர் மனைவி காபி கொண்டு வந்து கொடுத்தார். வாங்கி சுவைத்து குடித்தார்.
விடைபெற்றுக் கிளம்பினார் ஆழ்வார்.
“எங்கே சாமிபோறீங்க… மழை இருட்டிகிட்டு வருது”.
“யாரு பொன்னியா… எங்கடியம்மா போறே!”
“தலைவர் வீட்டுக்குத்தான்… கம்பு இடிக்கணும்”.
“சரி இந்தா விசிறி… நாளைக்கு வந்து கேழ்வரகை மிஷினில் அறைச்சுக் கொடுக்கிறீயா?”
“வரேன்…வரேன்… எனக்கு எதுக்கு இந்த ஓலை விசிறி. எம்மாமன் பெங்களூர்ல இருந்து “டேபிள்பேன்” வாங்கி வந்திருக்கிறார். போங்க சாமி காலம் மாறிப்போச்சி… இன்னும் இந்த ஓலை விசிறியை வைத்துக்கொண்டு அழறீங்க…”
“என்ன ஒரே குஷியா இருக்கிறே… உன் மாமன் வந்துட்டானா?”
“வரத்தையில கண்ணாலம் சாமி”
“கண்ணாலமா…ஒரு வேளை வடை பாயச சாப்பாடு இருக்குது… பொன்னி… நாளைக்கு வந்து நோம்பி அரைச்சுக் குடுத்திடு”.
“வரேன் சாமி…”
சிரித்துக்கொண்டே தனக்குள் பொல்லாத பொண்ணு…. மணியக்காரர் வீட்டில் வந்து திண்ணையில் உட்கார்ந்தார்.
பெயரிட்டுக் கூப்பிட்டார்.
ஒரு பெண் எட்டிப்பார்த்தாள்.. தலை மட்டுமே தெரிந்தது.
என்னடியம்மா எட்டிப்பார்த்துட்டு ஓடறே! உம்.
“அப்பா, அம்மா… திருக்கோவிலூர் போயிருக்காங்க”.
“போனால் போகட்டும் இங்கே வா…”
“விசிறி வேணாம் தாத்தா… இருக்குது”.
“அம்மா போன தடவை கேட்டாங்க வந்தால் கொடு…”
“வேணாம் தாத்தா…”
“ஆழ்வார் கொடுத்தார்னு கொடு…” என்று சொல்லிக்கொண்டே இரண்டு விசிறிகளை அவளிடம் கொடுத்துவிட்டு படி இறங்கி தெருவில் நடந்தார். கையில் இரண்டு விசிறிகளே இருந்தது.
பிரியாவும், தமிழிசையும் அவர் எதிரில் வந்தார்கள். ஏண்டியம்மா… பள்ளிக்கூடம் விட்டு இப்பதான் வர்றீங்களா
“ஆமாம் தாத்தா”
“விசிறி வேணுமா”
“வேணாம். எங்க வீட்டே அஞ்சு பேன் இருக்குது”.
“சரிடீயம்மா. போய் வாங்க”.
கடைசி வீடு குருக்கள் ஐயா வீடு. வீட்டுப் படியில் ஏறினதும்.
“எங்கே ஆழ்வார்… ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணோம்… ஸ்ரீரங்கம் போனியா…” என்றார் பாகீரதி அம்மாள். குருக்களின் தாயார்.
“இல்லைங்கம்மா… போன வாரம் வந்தேன். மாட்டுப் பொண்ணு மடியா இருந்தாங்க… போயிட்டேன்… இந்தாங்க விசிறி..”
“வேண்டாம் ஆழ்வார்… வீட்டில் யாருமில்லை. எல்லாம் திருப்பதி போயிருக்கா… நேக்குத்தான் கொடுத்து வைக்கலே… நின்னா உட்கார முடியலே… உட்கார்ந்தா எழுந்திருக்க முடியலே… அதான் நான்போகலே…” என்றாள்.
“சரி… விசிறியை கொண்டுபோய் உள்ளே வையுங்க”
“ஓலை விசிறியா… வேண்டாம் ஆழ்வார். என் பேராண்டி என் ரூமுக்கு பேன் பிட் பண்ணிட்டான்… தோ பார்த்தியா…. திண்ணையில் கூட பேன் பிட் பண்ணிட்டான். இனிமே இந்த ஓலை விசிறி எதுக்கு?.. சித்தே இரு.. வரேன்” என்று கூறிவிட்டு பாகீரதி அம்மாள் உள்ளே சென்றாள்
கையில் இரண்டு பொரிவிளங்காய் உருண்டையுடன் வந்தார்… இந்தாங்க ஆழ்வார்…”
“எனக்கு இதைக் கடிக்க பல் இல்லையே… வேண்டாம்”.
“சரி…உட்காரு… நுணுக்கித் தாரேன்…. ஆழ்வார்… பஜகோவிந்தம் பாடுவியே… அதைப்பாடேன்… நீ பாடினா பகவான் நேரிலே வந்த மாதிரி நேக்குத் தோணுது. பாடு…”
மண்ணிலிருந்து
புறப்பட்டது புழு
புழுவைப்
பூச்சித்தின்ன
பூச்சியை
புறாத்தின்ன
புறாவை
பூனை தின்ன
பூனையை
மனிதன் தின்ன
மனிதனை
மண் தின்றது
மண்ணிலிருந்து
மீண்டும் புறப்பட்டது புழு
புனரபி ஜனனம்
புனரபி ஜனனம்
பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம்
நிஜ கோவிந்தம் தான்
“நன்னா பாடினே, ஆழ்வார் நோக்கு என்ன வயசிருக்கும்”.
“எனக்கா வர ஆனி வந்தா எண்பத்தி மூணு”
“அடேயப்பா என்னைவிட மூணு வயசு மூத்தவன் நீ… இந்தா பொரி விளங்காய் தூளாக்கிட்டேன்… முடிஞ்சுக்க… ஆழ்வார் வானம் இருண்டுண்டு வர்றது… நேரத்தோடு ஆத்துக்குப் போ… ஒரு விசிறி மட்டும் குடு. போதும்”.
மீதி ஒரு விசிறியை கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டார் ஆழ்வார். லேசான தூரல். தலைமேல் விசிறியை வைத்துக்கொண்டு கிளம்பிப்போனார். நடையில் சோர்வு தென்பட்டது.
“ஓலை விசிறி”
திரும்பிப் பார்த்தார்… யாரையும் காணோம்.
“ஓலை விசிறி” – மீண்டும் குரல் கேட்டது. சிரித்துக்கொண்டே போனார். வீட்டினுள் போனவுடன் மழை பிடித்துக்கொண்டது. கிழக்குப் புறச்சாரல் வீட்டினுள் அடித்தது. கதவை சாத்தினார். விளக்கை ஏற்றினார். வர.. வர.. காற்று பலமாக வீசியது. வீட்டிற்குப் பின்னால் இருந்த முருங்கை மரம் பலமாக ஆடியது. அரிசி, புளியை அதன் அதன் பாத்திரங்களில் கொட்டினார்.
காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. தகரப் பெட்டியைத் திறந்து பழைய கம்பளியை வெளியே எடுத்து உதறினார். அதில் இருந்து துணி பை விழுந்தது. அதில் சில்லறைகள் இருந்தன. எடுத்து பெட்டியில் போட்டார். காற்று பலமாக வீசியது. எங்கோ மரம் முறிந்து விழும் ஒலி கேட்டது. மின்சாரம் நின்றது. கூரைகள் தூக்கித் தூக்கிப் போட்டது.
விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது. வீட்டில் சில இடங்களில் ஒழுகின. அங்கெல்லாம் தகர டப்பிகளை எடுத்து வைத்தார். ஒழுகாத இடமாகப் பார்த்து சுவர் ஓரம் ஈச்சம்பாயை விரித்து அதில் உட்கார்ந்தார். கம்பளியை போர்த்திக் கொண்டார்.
பயங்கர இடி இடித்தது. மின்னல் கண்ணைப் பறிக்கும் அளவுக்கு மின்னியது. காற்று மிகவும் வேகமாக வீசியது. மரம் முறிந்து விழுந்த ஒலி கேட்டது. மண்ணெண்ணெய் விளக்கும் அணைந்தது. பேய்க்காற்றாய் அடித்தது. கோடை மழை என்பதை நிரூபிப்பதுபோல் பெய்தது.
ஓட்டு வீடுகளின் ஓடுகள் காற்றில் பறந்தன. கூரை வீடுகள் பிய்த்தெறியப்பட்டன. ஆழ்வார் வீட்டைச்சுற்றி வெள்ளம். வீடு அல்லாடியது. காற்று பிரளியமாக வீசியது. தென்னை மரங்கள் பேய் போல ஆடின.
ஊரின் வடக்கே தென்பெண்ணை ஆற்றில் நொப்பும், நுரையும் மிதந்து வெள்ளம் பெருகியது. வெண்ணெய் உருகுவது முன்பாக பெண்ணையாற்றில் வெள்ளம் வரும் என்பது உண்மையாயிற்று. எங்கோ சுவர் விழுந்த ஒலி கேட்டது. உடன் மனித முனகலும் ஒலித்தது. மழை இடைவிடாமல் பெய்த வண்ணம் இருந்தன. எங்கும் மனித ஓலங்கள்.
விடியற்காலை மழை நின்றிருந்தது. இரவு அடித்த காற்றால் தெருவெங்கும் போர்க்களம் போல் இருந்தன. கோயில் கம்பம் சாய்ந்து கிடந்தது. மின் கம்பங்கள் சாய்ந்துபோய், மின் கம்பிகள் தாறுமாறாக தெருவில் விழுந்து கிடந்தன. ஆற்றோரம் நேற்றுவரை நிழல் கொடுத்து வந்த மரங்களில் சிலவற்றைக் காணமுடியவில்லை. வெள்ளம் அடித்துப்போயிருக்க வேண்டும்.
காலையில் வானம் தெளிவாக இருந்தது. காலை வெயில் சுள்ளென்று அடித்தது. மக்கள் நடமாட்டம் தொடங்கியது.
ஆழ்வாரின் வீடு தரைமட்டமாகக் கிடந்தது. திடுக்கிட்டு எல்லோரும் அங்கு சென்று பார்த்தனர். வீட்டுப்பொருட்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தது. ஆழ்வாரைக் காணோமே என்று தேடிய போது மண் சுவருக்குக் கீழே இருப்பது கண்டு திடுக்கிட்டு சுவற்றை அப்புறப்படுத்தினர். ஆழ்வாரின் உயிர் பிரிந்திருந்தது. அவர் அருகில் ஒற்றை விசிறி ஒன்று கிடந்தது.
தலைவர் வீட்டிலிருந்து பெஞ்ச் வரவழைக்கப்பட்டது. ஆழ்வாரை அதன்மேல் கிடத்தினார்கள். வீட்டின் மூலையில் அரிசி, கம்பு, கேழ்வரகு, எல்லாம் கலந்து கிடந்தன. வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் தகரப் பெட்டியைத் தூக்கிப் பார்த்தபோது அதில் துணிப்பை ஒன்று கனமாக இருந்தது. அந்தப் பையில் சில்லறை காசுகள் இருந்தன. தர்மகர்த்தா எண்ணிப்பார்த்தார். நானூற்றி ஐம்பது மூன்று ரூபாய் இருந்தது.
ஆழ்வார் வீட்டருகே கூட்டம் அலை மோதியது. அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஓலைகள் தண்ணீரில் மிதந்தன. ஒரு ஓலை விசிறி அநாதையாகக் கிடந்தது. அதை எடுத்து அவர் உடல் மேல் ஒருவர் வைத்தார்.
அன்று மாலையே ஆழ்வார் சாம்பலானார்.
எவருக்கும் எந்த தொல்லையும் தராமல் வாழ்நாள் முழுவதும் தன் கையே தனக்கு உதவி என்று வாழ்ந்து மறைந்தார். அவரது சேமிப்பு அவரது இறுதிச் சடங்குக்கு உதவியது. இவ்வளவு மழை பெய்தும், கோடை வெயில் மக்களை வாட்டியது. மின் இணைப்பு பதினைந்து நாட்களாகியும் கொடுக்கவில்லை. பெண்ணையாற்றில் இருகரைகளையும் தொட்டுக் கொண்டு வெள்ளம் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. ஆனால் கோடை புழுக்கம்.. பரண்மேலும், வீட்டின் கூரையிலும் சொருகி இருந்த ஓலை விசிறிகளைத் தேடி எடுத்தனர். விசிறி வேண்டாம் போ என்றவர்கள் ஆழ்வார் கொடுத்துச் சென்ற ஓலை விசிறியை தேடித்தேடி எடுத்து விசிறிக் கொண்டார்கள்.
எல்லோர் கையிலும் ஓலை விசிறி அணி செய்தது. நிழலின் அருமை வெயிலில் தெரிவது போல… மின்சாரம் இல்லாதபோது ஓலை விசிறிகளின் அருமை அனைவருக்கும் விளங்கியது.
நன்றி: உப்புநீர்ப் புன்னகை