ஓலைச்சிலுவை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 11,728 
 

கதை ஆசிரியர்: ஜெயமோகன்

[ 1 ]

என் அப்பா மரணப்படுக்கையில் கிடந்தபோதுதான் நான் நெய்யூர் ஆஸ்பத்திரிக்கு முதன்முதலாகச் சென்றேன். எனக்கு அந்த ஆஸ்பத்திரி அப்போது ஒரு மாபெரும் ஆச்சரியம். வெள்ளைவெளேரென்று இரட்டைப்பனைகளைப்போல எழுந்த தூண்கள் கொண்ட உயரமான கட்டிடத்தை பிரமித்துப்போய் அண்ணாந்து பார்த்துக்கொண்டு நின்றேன். அதன் உயரமான ஓட்டுக்கூரையின் இரண்டு விளிம்புகளிலும் இரு சிலுவைகள் நின்றன. கட்டிடத்தைசுற்றி நின்ற பெரிய வேப்பமரங்களின் பொன்னிறமான சருகுகள் கூரை முழுக்க விழுந்து கிடந்தன. ஆனால் ஆஸ்பத்திரிமுற்றம் சுத்தமாக கூட்டப்பட்டிருந்தது. வாரியல் கோடுகள் அலையலையாக படிந்த மண்ணில் விதவிதமான காலடித்தடங்கள் கிடந்தன.

தலையில் வெண்ணிற குல்லா வைத்து நீளமான காலுறைகளும் கவுன்களும் அணிந்த நர்ஸம்மாக்கள் கைகளில் வெவ்வேறு பொருட்களுடன் விரைவாக நடந்து சென்றார்கள். வெள்ளைநிறமான கால்சட்டை அணிந்த உயரமான மனிதர் ஒருவர் இரண்டு காக்கி ஆடை பெண்கள் பின்னால் வேகமாக என்னைக்கடந்து சென்றார். அப்பகுதியே குளிர்ந்து கிடந்தது.நாசியை எரிக்கச்செய்யும் வினோதமான வாசனை அங்கே எழுந்தது. அதை நான் முழுக் கவனத்துடன் உள்ளே இழுத்து எனக்குள் நிரப்பிக்கொண்டேன். ஆஸ்பத்திரி வராண்டாவில் கருப்பு விளிம்புகொண்ட மிகப்பெரிய வெள்ளைநிற வட்டிகை ஒன்று கம்பிமுக்காலிமேல் அமர்ந்திருந்தது. உள்ளிருந்து வந்த ஒரு நர்சம்மா அதில் கைகழுவினாள். கைகழுவுவதற்குச் சாப்பிடுவதைவிட பெரிய தட்டு. அவள் சென்றதும் நான் அந்த தட்டை மெல்ல தொட்டுப் பார்த்தேன். அந்த வெண்மை நிறம் முட்டை ஓடு போலிருந்தது. அந்தவளைவில் இருந்த மென்மை என்னைப் பரவசப்படுத்தியது. அதில் கையை வைத்து மீண்டும் மீண்டும் வருடினேன்.

என்னைக்கடந்துசென்ற ஒருவர் என்னிடம் உரக்க ‘தொடப்பிடாது’ என்று அதட்டினார். நான் கையை எடுத்துக்கொண்டேன். ‘தொட்டா உன்னை நான் அடிப்பேன்’ என்று சொல்லி உற்றுப்பார்த்துவிட்டு திரும்பிச் சென்றார். வாயில் வெற்றிலையை அதக்கியபடி பேசுவது போலிருந்தது. விசித்திரமான மனிதராக இருந்தார். அவர் முகம் தீயால் வெந்தது போல இருந்தது. காக்கி நிறத்தில் போலீஸ்காரர்களைப்போல கால்சட்டை அணிந்து மேலே வெண்ணிறமான சட்டை போட்டிருந்தார். மீசை இல்லாத வாய் கத்தியால் கீறிய சிவந்த புண்போல இருந்தது. நெற்றியைச் சந்திக்கும் இடத்தில் வளைவே இல்லாமல் நேராக இருந்த மூக்கு இருபக்கமும் பிடித்து சப்பியதுபோல தோன்றியது. வரிவரியாக பிளவுகள் ஓடிய நெற்றி. அதை விட அவரது கண்கள்தான் என்னை ஆச்சரியப்படச்செய்தன. காட்டுபூனைபோன்ற கண்கள். பூனைமனிதன்!

அம்மா ஒரு அறையிலிருந்து வெளிப்பட்டு என்னிடம் ‘என்ன அங்க எடுக்கே? கைய வச்சுகிட்டு இருக்கமாட்டியா…வாலே’ என்று சொல்லி என்னை இழுத்துக்கொண்டு சென்றாள். நான் ஒவ்வொரு அறையாக பார்த்துக்கொண்டே சென்றேன். அறைகளுக்குள் கம்பியாலான கட்டில்களில் நீலநிறப்போர்வை போர்த்தியபடி ஆட்கள் படுத்திருந்தார்கள். சில அறைகளில் மேஜைகளில் சிறிய கண்ணாடி புட்டிகள் பரப்பப்பட்டிருந்தன. ஒரு சன்னலுக்கு வெளியே நிறையபேர் கையில் குப்பிகளுடன் காத்து நின்றார்கள். அவர்களுக்கு ஒரு வெள்ளையாடை மனிதர் பாட்டில்களில் மருந்துகளை ஊற்றி கொடுத்துக்கொண்டிருந்தார். ‘சத்தம் போடப்படாது…ஏய் அந்தால போ.. இஞ்ச , கெளவீ’ என்றெல்லாம் கத்திக்கொண்டிருந்தார்.

ஆஸ்பத்திரிக்குப்பின்னால் ஒரு நீளமான கட்டிடத்தில் அப்பா கிடந்தார். அந்த கட்டிடம் முழுக்க சிறிய கட்டில்கள்தான். ஒவ்வொன்றிலும் ஒருவர் படுத்திருந்தார்.வெள்ளை நிறம்பூசப்பட்ட பெரிய இரும்புக் கம்பிகள் கொண்ட ஜன்னல்களுக்கு அப்பால் செம்பருத்திசெடிகள் தெரிந்தன. மண்ணாலான தரையோடு வேயப்பட்டிந்தது. சுவர்களில் எல்லாம் தமிழில் ஏதோ எழுதி வைக்கப்பட்டிருந்தது. நேர் எதிரில் இருந்த படம் ஏசுவுடையது. மார்பில் முள்சுற்றி சிவப்பாக எரிந்த இதயத்துடன் ஆசீர்வாதம்போல கையை காட்டும் படம். நல்ல சுருள் முடி. பெண்களுக்குரிய கண்கள். அந்த படத்தை நான் முன்னர் பார்த்திருந்தேன்.

அப்பா தூங்கிக்கொண்டிருந்தார். அவரது இடுப்பைச்சுற்றி கனமாக துணியால் சுற்றிக்கட்டப்பட்டிருந்தது. கழுத்தைச்சுற்றியும் கட்டு இருந்தது. இரு கைகளும் ஆமை போல வீங்கி இருந்தன. முகம் கன்றி வீங்கி இமைகள் கனத்து அவர் வேறு யாரோ போல இருந்தார். இருபக்கமும் இருந்த படுக்கைகளில் படுத்திருந்த ஒரு கிழவரும் இளைஞனும் எங்களை ஆர்வத்துடன் பார்த்தார்கள். நான்காம் படுக்கையில் ஒருவர் ஆ ஆ ஆ என்று முனகிக்கொண்டே இருந்தார். கொஞ்ச நேரம் முனகலைக் கேட்டால் அவர் பாடுவது போல தோன்றிவிடும்.

கிழவர் அம்மாவிடம் ‘என்னட்டீ, உனக்க கெட்டினவனா?’ என்றார். அம்மா ’ஓ’ என்றாள். ‘அவனுக்க காரியம் இனி செல்லாண்டா, இந்நேற்று லாக்கிட்டரு சொன்னாரு. அவன் இன்னி பிளைச்சுக்கிட மாட்டான் கேட்டியா?’ அம்மா ‘அய்யோ!’ என்றாள். ‘அந்நா பாத்தியா, அவனுக்க மூத்திரமாக்கும் போறது. பச்ச ரெத்தம். கட்டிகட்டியாட்டு ரெத்தமாக்கும் நவதுவாரங்களிலேருந்தும் போறது… நீ இனி அவன கணக்கு வைக்காண்டாம் கேட்டியா?’ என்றார். அந்த இளைஞன் எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருவரையும் சும்மா மாறி மாறி பார்த்தான்.

அம்மா ‘அய்யோ எனக்க சாத்தாவே…எனக்க தேவரே’ என்று மார்பிலறைந்து அழ ஆரம்பித்தாள். ஒரு நர்ஸம்மா எட்டிப்ப்பார்த்து ‘ ஏ அங்க ஆரு சத்தம் போடுயது? போ வெளிய போ’ என்றாள். ‘தாயே எனக்க பிள்ளியளுக்கு ஆருமில்லே அம்மா’ என்று அம்மா மார்பில் அறைந்து மேலும் அழுதாள். ‘வெளியெ போறியா இல்லியா?’ என்றாள் நர்ஸ். ‘இந்த பஞ்சபாவி இந்த மாதிரி சொல்லுகானே…எனக்க ராஜாவுக்கு அந்தி அடுத்தாச்சுன்னு சொல்லுகானே பேதீல போற நாயீ’ என்று அம்மா அழுதாள். அந்த நர்ஸம்மா கறுப்பாக திடமாக இருந்தாள் . நேராக வந்து அம்மாவை புஜத்தில் பற்றி இழுத்துக்கொண்டு வெளியே விட்டு ‘அங்க நில்லு…உள்ள வரப்பிடாது. உள்ள வேறயும் நோயாளிகள் உண்டு’ என்றாள்.

அம்மாவும் நானும் வராந்தாவில் நின்றோம். பொன்னிறமாக உருண்டுகிடந்த வேப்பம்பழங்களை பொறுக்கி நான் தூணோரமாக வைத்தேன். அம்மா தூணில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள். ஒப்பாரி பாடுவது போல மெல்லியகுரலில் நீளமாக ஏதேதோ சொல்லி அழுதாள். திடீர் திடீரென்று மார்பில் ஓங்கி அறைந்துகொண்டு கதறினாள். அப்போது நர்ஸம்மா ‘தே…அங்க என்ன சத்தம்?’ என்று அதட்டல் போட்டபோது மீண்டும் குரலை தாழ்த்தினாள். நான் அம்மா மேல் சாய்ந்துகொண்டேன். அம்மாவின் மார்பில் போட்டிருந்த அழுக்கு துணிநனைந்து ஈரமாக இருந்தது. அந்த துணிக்கு அப்பால் அம்மாவின் மார்பு துடிப்பதை உடலால் கேட்டேன்.

திடீரென்று அம்மா என்னை உசுப்பி ‘லே உறங்குதியா? வேகம்போ….இந்தா இந்த கால்சக்கறத்த கொண்டு போயி சந்தமுக்கு சாத்தாவுக்கு போட்டுட்டு வா…’ என்றாள்.நான் அவள் தன் வேட்டிமடியில் இருந்து எடுத்த செம்புதுட்டை வாங்கிக்கொண்டேன். ‘லே, என்னன்னு சொல்லி போடுவே?’ நான் பேசாமல் நின்றேன் ‘அப்பனுக்கு செரியாகணும் சாத்தாவே. அனாதைகளாக்கும் சாத்தாவே. கெதியில்லாத்தவங்களாக்கும் சாத்தாவே. எட்டுகுட்டிகளோட தெருவிலே நிக்கேன் சாத்தாவேண்ணு சொல்லி போடணும்…என்னலே?’ சொல்லும்போதே மீண்டும் அழ ஆரம்பித்தாள். நான் தலையசைத்தேன்.

ஆஸ்பத்திரி முற்றம் வழியாக ஓடி தெருவுக்கு வந்தபோது என் மனம் முழுக்க அந்த ஒற்றைச்சக்கரம்தான் இருந்தது. அதைக்கொண்டு எட்டு தோசை தின்று ஒரு கருப்பட்டிக்காப்பி குடிக்க முடியும். பொரிகடலை வாங்கினால் நான்குபேர் வயிறு முழுக்க தின்னமுடியும். இல்லை உண்ணியப்பம் வாங்குவதா? பத்து உண்ணியப்பம். என் வாய் நிறைந்து வெற்று மார்பில் வழிந்து விட்டது. இடுப்பில் கட்டியிருந்த கிழிந்த துண்டை அவிழ்த்து மேலேற்றி மார்பை துடைத்துக்கொண்டு மீண்டும் இறுக்கிக் கட்டிக்கொண்டேன்.

சந்தையடி கண்டன் சாஸ்தா கோயில் வரை வந்துவிட்டேன். என்னையறியாமலே வந்ததுதான். மர அழியிடப்பட்ட கோயிலுக்குள் களபமும் சந்தனமும் பூசிய சாஸ்தாவின் கருங்கல் சிலை தெரிந்தது. உண்டியல் இரும்பால் செய்யப்பட்டு முகப்பிலேயே இருந்தது. போடுவதா என்று எண்ணினேன். போட்டால் அதன் பின்னர் இந்த பணம் என்னுடையது இல்லை. ஆனால் அந்தக் கணம் அப்பா விழுந்து கிடந்த காட்சி என் கண்ணில் வந்தது.

அப்பா அதிகாலையில் எழுந்து பனையேறப்போவார். வீட்டில் நாங்கள் எட்டு குழந்தைகள். எனக்கு மூத்தவர்களாக மூன்று அக்காக்கள். கீழே இரண்டு தம்பிகள் இரண்டு தங்கைகள். தங்கைகள் காட்டுக்குச் சென்று சருகும் விறகும் அள்ளிவருவார்கள். அக்காக்களும் அம்மாக்களும் பதனீர் காய்ச்சுவார்கள். வெள்ளிதோறும் நானும் அம்மாவுமாக கருப்பட்டிகளை பனைச்சிப்பங்களாக கட்டி தலைச்சுமையாக எட்டுமைல் நடந்து கருங்கல் சந்தைக்குக் கொண்டுசெல்வோம். அப்பா கொரட்டிமேட்டிலும் ஆனைக்கயத்திலும் எல்லாம் இறக்கி வைக்கும் அக்கானியை சுமந்துகொண்டு வந்து வீடுசேர்ப்பது எனக்கும் சின்ன அக்காவுக்கும் தங்கைக்குமான வேலை.

மூன்றுநாட்களுக்கு முன்னால் அதிகாலையில் நாலாம்நடைக்கு நான் சுருட்டுபொற்றை மேல் ஏறி பத்துகூட்டம் பனையருகே சென்றபோது தரையில் ஏதோ நெளிவதை பார்த்தேன். திரும்பி வந்தவழியே ஓடிவிடவேண்டும் என்றுதான் முதலில் தோன்றியது. கொஞ்சதூரம் ஓடியபிறகுதான் அது அப்பா என்றே எனக்கு தெரிந்தது. திரும்பி ஓடிச்சென்றேன். இப்போது இன்னும் நல்ல வெளிச்சம் வந்திருதது. அப்பாதான் தரையில் இஞ்சிப்புல் மேல் விழுந்து கிடந்தார். அவரது கைகளும் கால்களுமெல்லாம் விசித்திரமாக வளைந்து ஒடிந்திருந்தன. தீப்பிடித்து எரியும் சுள்ளி போல மெல்ல நெளிந்துகொண்டிருந்தார். ரத்தத்தின் உப்புநாற்றம் எழுந்தது

நான் திரும்பி ஓடி வீட்டுக்கு போய் அம்மாவிடம் சொன்னேன். அக்கானியடுப்பை ஏற்றிக்கொண்டிருந்தவள் அப்படியே என்னை பார்த்தாள். கண்கள் விழித்திருக்க தலை ஓணான் போல ஆடியது. திடீரென்று வீரிட்டு அலறி, மார்பில் அறைந்து கதறியபடி மயானக்கொள்ளைக்கு போகும் பூசாரி போல இடைவழியில் இறங்கி ஓடினாள். நான் பின்னால் ஓடினேன். எனக்கு பின்னால் தங்கைகள் ஓடிவந்தார்கள். அவளுடைய ஓலத்தைக்கேட்டு ஆங்காங்கே பனைகளில் இருந்தவர்கள் இறங்கி ஓடிவந்தார்கள்

அருகே இருந்த ஒரு வீட்டின் கதவை கழற்றி அதில் அப்பாவை உருட்டி ஏற்றி நான்குபேர் நேராக நெய்யூர் ஆஸ்பத்திரிக்கு சென்றார்கள். இடைவழிகள் வரப்புகள் வழியாக அவர்கள் செல்ல பின்னால் அவிழ்ந்த கூந்தலுடன் கதறியபடி அம்மா போனாள். ‘லே மக்கா வீட்டிலே இருலே…வீட்டிலே நீதான்லே ஆண்தொணை..’ என்று அவள் சொன்னதனால் நான் வீட்டில் இருந்தேன். அக்காக்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அக்கானி பானையில் புளித்து விளிம்பு கவிந்து நுரை வழிந்துகொண்டிருந்தது. நான் கொஞ்ச நேரம் ஆட்டுக்கூட்டில் இருந்தேன். பசி தாளாமல் நானும் தங்கைகளும் அந்த கள்ளையே அள்ளி குடித்தோம். நால்வருமே படுத்து தூங்கிவிட்டோம்.

அப்பாவை பனை இசக்கி அடித்து போட்டுவிட்டது என்று கறுத்தான் மாமா சொன்னார். அவ்வப்போது பனையேறிகளை அந்த இசக்கி அடித்து தூக்கி வீசும். பனையேறிகள் பிடித்து ஏறும் பனைமட்டையை இளக்கி வைத்திருக்கும். உச்சிமட்டையில் மிதிக்கும்போது வழுக்கி விடும்.தேளாக வந்து அக்கானிச்சட்டிக்குள் பதுங்கி இருந்து கொட்டும். மழை முடிந்து முதல் ஊற்றுமாதங்களில் எப்படியும் நாலைந்துபேர் விழுவார்கள். விழுந்தவர்களில் எனக்கு தெரிந்து குணமணி மாமன் மட்டும்தான் உயிருடன் இருக்கிறார். அவரும் எந்நேரமும் திண்ணையில் தான் படுத்திருப்பார். எழுந்து ஒன்றுக்கடிக்கக் கூட முடியாது. அவர் மனைவி கொச்சம்மை சந்தையில் மூட்டை தூக்க போகிறாள். பிள்ளைகள் எல்லாரும் வேலைக்கு போவார்கள். குணமணி மாமன் பாயில் ஒன்றுக்கிருப்பது திண்ணையில் இருந்து முற்றத்துக்கு வழிந்திருக்கும். தன்னதனிமையில் கெட்டவார்த்தைகளையே பாட்டுகளாக பாடிக்கொண்டிருப்பார்.

கால்சக்கரத்தை போடாவிட்டால் பனை இசக்கி என்னை அடித்துவிடும் என்று நினைத்தேன். எங்கோ ஒளிந்துகொண்டு அவள் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறாள். நான் சக்கரத்தை உண்டியலில் போட்டுவிட்டு சம்புடத்தில் இருந்த செந்தூரத்தை ஒரு பூவரச இலையில் அள்ளிக்கொண்டு திரும்பி ஓடினேன். அப்பாவின் உயிரைக் காப்பாற்றும் ஒன்றை நானே சொந்தமாகச் செய்வது எனக்கு மனநிறைவை அளித்தது.

அம்மா அந்த செந்தூரத்தை எடுத்து ‘தேவரே’ என்று நெற்றியில் போட்டுக்கொண்டாள். எனக்கும் போட்டுவிட்டாள். பிறகு மெல்ல அறைக்குள் எட்டிப்பார்த்தாள். அந்த நர்சம்மா இல்லை. மெல்ல உள்ளே சென்று சற்றுமுற்றும் பார்த்துவிட்டு அப்பாவின் நெற்றியில் அதை போட்டுவிட்டாள். ‘சாமி பிரசாதமா போடுகே? இங்கிண அதெல்லாம் போடப்பிடாது பாத்துக்க’ என்றார் கிழவர். ’சும்மா கெட சவமே. சாவமாட்டாமெ’ என்று சொல்லிக்கொண்டு அம்மா திரும்பி வந்தாள். கிழவர் ‘அவ்வோ ஒரு சட்டம் வச்சிருக்காவள்லா?’ என்றார். அம்மா ‘சாவுலே நாயே’ என்று அவரைப்பார்த்து சொல்லிக்கொண்டு வெளியே வந்தாள். அந்த இளைஞன் கண்கள் பளபளக்க சும்மா பார்த்துக்கொண்டிருந்தான்.

எனக்கு பசிக்க ஆரம்பித்தது. ஆனால் எங்கள் வீட்டில் எப்போதுமே பசியைப்பற்றி எவரும் எதுவும் சொல்லும் வழக்கம் இல்லை. காலையில் பெரும்பாலும் பனம்பழம் சுட்டு தின்பதுதான். நான் அக்கானி கொண்டு வரும் வழியிலேயே கொஞ்சம் குடிப்பேன். மதியம் பெரும்பாலும் மரச்சீனி மயக்கியதும் கூடவே குடிப்பதற்கு தண்ணீர் நிறைந்த கஞ்சியும் இருக்கும். இன்னும் கொஞ்சம் கஞ்சி என்று கேட்டாலே அம்மா அகப்பையால் அடிப்பாள். நான் வராந்தாவில் கொஞ்சதூரம் நடந்து பார்த்தேன். ஒரு பெரிய மண்பானையில் தண்ணீர் இருந்தது. அதை குடித்துவிட்டு திரும்பி வந்து அமர்ந்தேன்.

சாயங்காலம் ஆவதை அங்கே புரிந்துகொள்ள முடியவில்லை. ஆஸ்பத்திரி வராந்தாவில் எப்போதுமே நிழலும் இருட்டுமாகத்தான் இருந்தது. ஆனால் நிழல்கள் விலகி மறுபக்கம் பெரிய கட்டிடத்தின் அருகே சென்று கிடந்தன. பெரியகட்டிடத்தில் இருந்து நான்குபேர் நடந்து வந்தார்கள். அவர்களில் முன்னால் வந்தவர் நான் ஏற்கனவே பார்த்த பூனைக்கண்ணர். ஓட்டு கம்பெனியில் வேலைபார்க்கிறவர்களைப்போல செம்மண் நிறத்தில் இருந்தார். கைகளில் வெள்ளை நிறமான மயிர் முளைத்திருந்தது. செம்மண்ணில் புல் தளிர்விட்டதுபோல. அதே காக்கி நிக்கரும் வெள்ளை சட்டையும் போட்டிருந்தார்.

அம்மா அவரைப்பார்த்ததும் எழுந்து கையைகூப்பியபடி ‘சாயிப்பே, பாவங்களுக்க தெய்வமே…சாயிப்பே…கைவிடப்பிடாது சாயிப்பே’ என்று அலறினாள். அவர் அவளுடைய அழுகையை பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. நர்ஸ் மட்டும் ‘த சத்தம் போட்டா சாயிப்பு தோக்காலே வெடிவச்சுபோட்டுவாரு…சும்ம கெட’ என்றாள். அம்மா ‘சாயிப்பே சாயிப்பே…பாவங்களுக்கு வேற ஒரு தெய்வமும் இல்ல சாயிப்பே’ என்று அழுதாள். அவர் எங்களை தாண்டிச் செல்லும்போது அவரது கண்கள் என்னை வந்து தொட்டுச்சென்றன. அவர்கள் ஓர் அறைக்குள் சென்று மறைந்தார்கள்

அந்த அறையில் இருந்து ஒரு நர்ஸம்மா வந்து ‘லே இந்நாலே…சாயிப்பு குடுத்தாரு’ என்று ஒரு ரொட்டியை எனக்கு கொடுத்துச் சென்றாள். நான் நான்குபக்கமும் பார்த்துவிட்டு அதை வாங்கிக்கொண்டு ஓரமாகச் சென்று சுவர் நோக்கி அமர்ந்து வேகமாக தின்ன ஆரம்பித்தேன். பாதி ரொட்டி முடிந்தபிறகுதான் அதன் ருசியே எனக்கு தெரிய ஆரம்பித்தது. தரையில் உதிர்ந்து கிடந்த துணுக்குகளையும் பொறுக்கி வாயில் போட்டேன். அவற்றில் ஒன்றிரண்டு துணுக்குகள் எறும்புகள் என வாயில் போட்ட பிறகே தெரிந்தது.

மீண்டும் அம்மா பக்கத்தில் வந்து அமர்ந்தேன். அறைகளுக்குள் சுரைக்காய் வடிவில் கண்ணாடிபோட்ட சிமினி விளக்குகளை ஏற்றி வைத்தார்கள். சிவந்த வேட்டி போல வாசல்கள் வழியாக விளக்கொளிகள் வராந்தாவில் விழுந்து கிடந்தன. அம்மா தனக்குள் மெல்ல அரற்றியபடி தூண் சாய்ந்து அமர்ந்திருந்தாள். வாசல் வெளிச்சங்களில் சட் சட்டென்று ஒளிவிட்டு இருண்டு மீண்டும் ஒளிவிட்டபடி ஒரு நர்ஸம்மா வந்து ஏதோ தேடுவது தெரிந்தது. அவள் எங்களைத்தான் தேடுகிறாள் என்று எனக்கு கொஞ்ச நேரம் கழிந்துதான் புரிந்தது. ’அம்மா..’ என்று அவளை உசுப்பினேன். அவள் எழுந்த அசைவை நர்ஸம்மா கண்டு ‘ஏட்டீ, வா..உன்னைய சாயிப்பு தேடுறார்’ என்றாள்

சாகிப்பின் அறைக்குள் நானும் அம்மாவும் உள்ளே நுழைந்தோம். அம்மா கைகூப்பி நடுங்கியபடி கதவைச்சாய்ந்து நின்றாள். சாகிப் என்னை ஒருகணம் பார்த்து ‘வாயிலே கை வைக்கப்படாது. நான் அடிப்பேன்’ என்றார். நான் எடுத்துக்கொண்டென். சாகிப் அறைக்குள் கைகழுவும் பாத்திரம் இருந்தது. சுவரில் ஏசு படம். இந்தபக்கம் மூன்று பெரிய குவியல்களாக உப்பு கொட்டி வைத்தது போன்ற ஒரு படம். மேஜை பெரிதாக இருந்தது. அதன்மேல் நிறைய பெரிய புத்தகங்கள். டப்பாக்கள். ஒரு கடிகாரம் டிக் டிக் டிக் என்று ஓடியது.

சாகிப் அம்மாவிடம் ‘உனக்கு எத்தனை குழந்தைகள்?’ என்றார். அவர் ஒவ்வொரு சொல்லாக நிறுத்தி நிறுத்தி பேசினார். அம்மா ‘எட்டு சாயிப்பே. இவன் நாலாமத்தவன். இவனுக்கு கீள இன்னும் நாலு குட்டிக கெடக்கு’ என்றார் ‘இவன் என்ன படிக்கிறான்?’ ‘எங்க படிக்கதுக்கு? இண்ணைக்கு வரை இவனுக்கு ஒரு நேரம் வயறு நெறைய கஞ்சி குடுத்தது இல்ல. பின்ன என்ன படிப்பு? அப்பன் கூட சேந்து அக்கானி சொமக்கான்’ சாகிப் ‘மத்த பிள்ளைகள் என்னா செய்றாங்க?’ என்றார். ‘எல்லாம் இந்த கருப்பட்டிவேலைதான் சாயிப்பே…பனை கேறுத மனுசன் இந்நா விளுந்து கெடக்கான்…இனி நான் என்னண்ணு ஜீவிப்பேன்…சாமிகளுக்கு கருணை இல்லாம போச்சே..’

சாகிப் என்னையும் அம்மாவையும் மாறி மாறி பார்த்தார். பின்பு ‘உனக்க கிட்டே ஒரு காரியம் சொல்லணும். உன் கெட்டினவன் இனிமே வாழ மாட்டான். அவனுக்கு லிவர் கிழிஞ்சிருக்கு. ரத்தம் கட்டியாயிட்டுது. இன்னைக்கு இல்லாட்டி நாளைக்கு செத்துப்போயிடுவான்’ என்றார். அம்மா பிரமித்தவள் போல அப்படியே பார்த்துக்கொண்டு நின்றாள். ‘என்னாலே ஒண்ணும் பண்ண முடியாது’ என்றார் சாகிப் மீண்டும்.

அம்மா உரக்க மூச்சுவிட்டுக்கொண்டு அப்படியே குந்தி அமர்ந்து விட்டாள். அவள் முகத்தை பார்த்தால் அவளும் அப்போதே செத்துவிடுவாள் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. நான் அவளோடு ஒட்டிக்கொண்டேன். அம்மா மெல்ல கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தாள். ‘செரி, அதாக்கும் விதிண்ணா அப்பிடி நடக்கட்டு. செத்தா இங்க வல்ல எடத்திலயும் குழிச்சு போடுங்க சாயிப்பே. வல்ல தெங்குக்கோ வாழைக்கோ உரமா போவட்டும். சீவிச்சநாளு முழுக்க மனசறிஞ்சு ஒரு வாயி கஞ்சி குடிச்சாத மனுஷனாக்குமே…கிட்டினதெல்லாம் பிள்ளைகளுக்கு பிள்ளைகளுக்குண்ணு கொண்டு வந்து குடுத்தவனாக்குமே… இனி அவனுக்க ரெத்தமும் சதையும் எல்லாம் வேரு உறிஞ்சி தின்னட்டு….’ அவள் தொண்டை அடைத்தது ‘அவனை தின்னு வளாந்துவாற மரமெல்லாம் நல்லா காய்க்கும் சாயிப்பே’ உதடுகளை கடித்துக்கொண்டு தன்னை அடக்கியபடி கையெடுத்து கும்பிட்டு அம்மா கிளம்பினாள்.

சுமையெடுப்வர்களின் ஓட்டம் போல அம்மா முற்றத்தில் ஓட நான் பின்னால் சென்றேன். பின்பக்கம் யாரோ ஓடி வருவது தெரிந்தது. நிக்கர் அணிந்த ஒரு ஆஸ்பத்திரி வேலையாள். ‘ஏட்டி சாயிப்பு விளிக்காரு…’ என்றான். அம்மா நின்று ‘நான் அடுத்த சென்மத்திலே வந்து சாபிப்புக்க காலிலே விளுந்து ஆயிரம் கும்பிடு போடுகேன்னு சொல்லும்வே’ என்றபின் மேலும் நடந்தாள். அவன் உரக்க ‘ஏட்டி சாயிப்பு விளிச்சா போவணும்…அதாக்கும் இங்க சட்டம், கேட்டியா?” என்றான்.

இம்முறை அம்மா அழாமல் திடமாக உள்ளே சென்று நின்றாள். சாகிப் என்னை கொஞ்ச நேரம் பார்த்தார். பின்பு ‘நீங்க பிணத்தை விட்டுட்டு போனா அதை கிறிஸ்தவமா மாத்தித்தான் அடக்கம் பண்ணுவோம்’ என்றார். ‘பண்ணுங்க சாயிப்பே. கும்பி காய்ஞ்சவனுக்கு எல்லா சாமியும் கல்லாக்கும்’ சாகிப் மீண்டும் என்னை பார்த்தார். ‘அப்ப நீங்க எல்லாரும் மதம் மாறலாமே? மதம் மாறினா உங்க வாழ்க்கைக்கு ஒரு வழி தெரியும். இந்த பையனுக்கு லண்டன்மிஷனிலே சொல்லுறேன். இங்கே வேலை போட்டு குடுக்க சொல்லுறேன்’

அம்மாவுக்கு அவர் சொன்னது புரியவில்லை. அவர் நிறுத்தி நிறுத்தி குழறிய குரலில் பேசினார். நர்ஸம்மா உரக்க ‘இந்நா பாரு, சாயிப்பு என்ன சொல்லுகாருண்ணா நீ மதம் மாறி வேதத்துக்கு வந்தேண்ணா சாயிப்பு இந்த பயல இங்க சேத்து படிக்க வைப்பாரு. உனக்கும் வல்ல வளியும் செய்வாரு. நீயும் உனக்க பிள்ளியளும் கஞ்சி குடிச்சு கெடக்கிலாம்…என்ன சொல்லுகே?’

அம்மா அந்த பிரச்சினையை அப்போதுதான் உள்வாங்கினவள் போல அனிச்சையாக அறையை விட்டு வெளியே போகப்போனாள். பின்னர் கதவை பிடித்துக்கொண்டாள். கதவு ர்ரீ என்று ஒலி எழுப்பியது. ‘என்ன சொல்றே?’ என்றார் சாகிப். அம்மா ஏதோ சொல்ல வந்தாள். என்னை பார்த்தாள். பிறகு ‘சாயிப்பே, எனக்க அப்பன் இண்டேரி சங்கரன் நாடாராக்கும். எட்டு தலமொறையா எங்க கரையிலே பேரு கேட்ட பூசாரிக்குடும்பம். ஏளுஅம்மையும் பத்ரகாளியும் இருந்து அனுக்ரகிக்குத பிரயிடமும் குடிலும் இப்பமும் எனக்கு இண்டேரியிலே இருக்கு. அப்பனையும் அம்மையையும் காட்டிலும் சாமிகள கண்டு வளந்தவளாக்கும். வேண்டாம் சாயிப்பே. சாயிப்பு என் மேலே எரக்கப்பட்டு கேட்டதுக்குண்டான கடனை நான் அடுத்த சென்மத்திலே அடைக்குதேன். நானும் என் பிள்ளையளும் கஞ்சியில்லாம சாகணுமிண்ணு அந்த தெய்வங்க நினைச்சா அப்பிடி நடக்கட்டு’

‘நீ போறதை கண்டு நான் பயந்தேன். நீ சாவுகதுக்கு போனே’ என்றார் சாகிப் . அதைக்கேட்டு அம்மா அனிச்சையாகத் திறந்த வாயில் கையை வைத்துக்கொண்டு பேசாமல் நின்றாள். ‘செரி நீ பூசாரிக்குடும்பம். இந்த குழந்தை என்ன தப்பு செய்தான்? அவனெ ஏன் கொல்லுறே?’ அம்மா என்னை பார்த்துவிட்டு ‘செரிதான்.’ என்றாள் ‘லே கொச்சப்பி, உனக்கு பிடிச்சிருந்தா நீ வேதத்துக்கு போ…சாயிப்பு உனக்கு சட்டையும் ரொட்டியும் தருவாரு’ என்றாள். நான் சாகிப்பை பார்த்துவிட்டு அம்மாவின் வேட்டியை பிடித்துக்கொண்டு ‘வேண்டாம்’ என்றேன். ‘லே’ என்றாள் அம்மா. ‘வேண்டாம் எக்கு வேண்டாம்’ என்று நான் அம்மாவை உலுக்கினேன். எனக்கு அழுகை வந்தது. கண்ணிருடன் முகத்தை அம்மாவின் மடியில் புதைத்துக்கொண்டேன்

சாகிப் ‘செரி…நல்லா யோசிச்சு பாரு…உனக்கு ஒரு வழி இங்க திறந்திருக்கு’ என்றார். ‘இப்ப உனக்கு அஞ்சோ பத்தோ ரூபா நான் நினைச்சா குடுத்திருவேன். ஆனா நான் இல்லேன்னாலும் உனக்கு எப்பமும் சகாயம் வேணுமானா வேதத்திலே சேந்தாத்தான் முடியும்’ என்றார். அம்மா ‘வாறேன் சாயிப்பே’என்றபின் திரும்பி வெளியே ஓடினாள். நானும் பின்னால் சென்றேன்

இருட்டுக்குள் இரு பேய்கள் போல நடந்தோம். வானம் முழுக்க நட்சத்திரங்கள். வயல்களில் இருந்து சீவிடுகளின் ஒலியும் தவளைக்கூக்குரல்களும் கேட்டுக்கொண்டிருந்தன. வரப்பு ஓரங்களில் இருந்து மின்மினிகள் எழுந்து, இளநீலம் இளமஞ்சள் என நிறங்கள் மாறி மாறி தெரிய, மின்னி மின்னி சுழன்று பறந்தன. வரப்புகளில் சேற்றில் மிதித்து, நண்டுக்குழிகளில் தடுமாறி, இடைவழிகளில் கூழாங்கற்களில் காலிடறி வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வீடு இருட்டுக்குள் கிடந்தது. ஆனால் எல்லாரும் தூங்காமல் விழித்திருந்தார்கள்.

அம்மா சென்றதுமே படுத்துக்கொண்டாள். நான் அக்காவிடம் ‘நீ என்ன சாப்பிட்டே?’ என்றேன். ‘காலம்ப்ற பனம்பழம் நாலஞ்சு கிட்டிச்சு. சுட்டு பிள்ளையளுக்கு குடுத்தேன்…’ நான் ரொட்டி தின்றதை நினைத்துக்கொண்டேன். என் பாயை இழுத்து போட்டு படுத்தேன். மூன்றுநாட்களாக வெறும் பனம்பழம் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். வீடு முழுக்க அழுகிய பனம்பழ வாசனை அடிப்பது போல் இருந்தது. பனம்பழ வாசனை அதிகமாகி கொண்டு வருவது போல. நான் எழுந்து ‘பனம்பழம் அழுகியிருக்கு’ என்றேன். ‘சின்னவனுக்கு வயத்தால போகுது’ என்று அக்கா சொன்னாள்.

திரும்ப படுத்துக்கொண்டேன். வீட்டுக்குள் வந்த ஒரு மின்மினி இருளுக்குள் சுற்றிச்சுற்றி பறந்தது. அது வீட்டை எரித்துவிடும் என்றும் பனையோலைக் கூரையும் பனையோலைச்சுவர்களும் பற்றி எரிந்து நாங்களெல்லாம் சாம்பலாகிவிடுவோம் என்றும் தோன்றியது. நான் கொஞ்சம் தூக்க மயக்கத்தில் ஆழ்ந்தபோது கடைக்குட்டி தங்கம்மை எழுந்து என்னவோசொன்னாள். நான் எழுந்து பார்த்தேன். அவள் தூக்கத்தில்தான் இருந்தாள். ஆனால் சிணுங்கிக்கொண்டு மழுங்கலாக ஏதொ சொன்னபடி கையால் எதையோ செய்வது தெரிந்தது.

கண்கள் சிலகணங்களில் தெளிந்தபோது அவள் என்ன செய்கிறாள் என்று கண்டேன். அவள் எதையோ அள்ளி அள்ளி தின்றுகொண்டிருந்தாள். சப்புக்கொட்டியபடி மென்றாள். கையை நக்கினாள். திடீரென்று விழித்துக்கொண்டவள் போல என்னை பார்த்து வாயை மட்டும் அசைத்தாள். ‘அண்ணா’ என்றாள். ‘உறங்குடீ’ என்றேன் அதட்டலாக. புன்னகையுடன் ‘கஞ்சி இருக்கு’என்றாள். அம்மா ’ஏட்டி உறங்குடீ சனியனே’ என்றாள். தங்கம்மை விழித்துக்கொள்ளாமலேயே திரும்பி படுத்துவிட்டாள்.

நான் ‘அம்மா’ என்றேன். ‘ஏம்ல?’ என்றாள். ‘நான் நாளைக்கு நெய்யூருக்கு போறேன்’ என்றேன். அம்மா ‘ஏம்ல?’ என்றாள். ‘நான் வேதக்காரனா ஆகப்போறேன்’அம்மா ஏதாவது சொல்லுவாள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவள் பெருமூச்சு மட்டும்தான் விட்டாள்

மறுநாள் நான் தனியாகக் கிளம்பிச் சென்றேன். நெய்யூர் ஆஸ்பத்திரிக்கு போனபோது அது எனக்கு நன்றாக பழகிய இடமாக தெரிந்தது. நான் நேராக அப்பா இருந்த கட்டிடத்துக்குச் சென்றேன். அங்கே அப்பாவின் கட்டிலில் வேறு ஒரு கிழவர் கிடந்தார். வெளியே வந்தேன். அந்த நர்ஸம்மா என்னிடம் ‘ஏலே உனக்க அம்மை எங்கலே?’ என்றாள். ‘அம்மை வரேல்ல’ என்றேன் ‘எனக்க அப்பன் எங்க?’ ‘அவரு ராத்திரி செத்தாச்சு. நீ அந்தால கொல்லமாவுத்தோட்டம் வளியாட்டு போனா சர்ச்சு தெரியும். அதுக்கு பொறத்தாலே கல்லறத்தோட்டம் இருக்கு. உனக்க அப்பன அங்க கொண்டு போயிருக்காவ’

நான் முந்திரிமரங்கள் நடுவே புகுந்து ஓடினேன். இருமுறை விழுந்தபோது என் இடுப்புத்துண்டு அவிழ்ந்தது. அதை சுருட்டி இடுப்போடு பிடித்துக்கொண்டு சர்ச் மேட்டை அடைந்து சர்ச்சை சுற்றிக்கொண்டு பின்பக்கம் சென்றேன். கல்லறை மேட்டில் நாலைந்து பேர் நின்றார்கள். ஒருவர் அங்கி போட்ட போதகர். இருவர் வேலைக்காரகள். நான் அருகே சென்று நின்றேன்.

ஆழமான சிவப்பு குழி. அது ஒரு பெரிய வாய் போல திறந்திருந்தது. அப்பாவின் உடல் கருப்பட்டிச் சிப்பம் போல ஒரு பனம்பாயில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து கசிந்த ரத்தம் கருப்பட்டிக்கசிவு போல பாயின் விளிம்புகளில் கருமையாக உறைந்திருக்க ஈக்கள் மொய்த்துக்கொண்டு பறந்தன. குழி அருகே நின்ற ஆள் ‘வச்சிருவோமே, என்னத்துக்கு நிண்ணு பாக்குதது?’ என்றார்.போதகர் ’சாயிப்பு வரட்டும். அனாதைப்பிரேதம்னா அவரு எப்பிடியும் வருவாரு’ என்றார். என்னை அவர்கள் கவனிக்கவில்லை.

கொஞ்சநேரத்தில் ஒரு பெட்டியை தூக்கியபடி ஒருவன் முன்னால் வந்தான். அவனுக்குப்பின்னால் ஜிப்பாவும் கணுக்கால் வரை காவிவேட்டியுமாக சாகிப் வந்தார். ஆஸ்பத்திரியில் மருந்துகள் வைக்கக்கூடிய இரு கள்ளிப்பெட்டிகளை இணைத்து ஆணி அடித்து அதைசெய்திருந்தார்கள். அதில் என்னென்னவோ மருந்து பெயர்கள் எழுதி காகிதங்கள் ஒட்டியிருந்தது. பெட்டியை கீழே வைத்ததும் இருவர் அதற்குள் அப்பாவை பனம்பாயுடன் அப்படியே தூக்கி வைத்தார்கள். அதை மூடி கயிற்றை குறுக்காக போட்டு மெல்ல குழிக்குள் இறக்கினார்கள். கயிற்றை உருவி எடுத்ததும் சாகிப் திரும்பி என்னிடம் ‘இங்க வா’ என்றார்.

அவர் என்னை கவனித்திருந்தார் என்பதை ஆச்சரியத்துடன் உணர்ந்தேன். ’ஃபாதர், இவன் செத்துப்போன ஜோசப்பு மகன்’ என்றார் சாகிப். ஃபாதர் தலையசைத்தார். ஃபாதர் அப்பாவைப்பற்றி சொன்னார். கர்த்தருக்குள் வந்த பிறகே அப்பா மரணமடைந்ததை அறிந்துகொண்டேன். சுருக்கமான ஜெபம் முடிந்ததும் ஃபாதர் என்னிடம் ஒரு கைப்பிடி மண் அள்ளி குழியில் போடச்சொன்னார். நான் மண்ணை போட்டேன். ஃபாதரும் சாகிப்யும் மண்ணை அள்ளி போட்டபின் வேலைக்காரர்கள் சரசரவென்று குழியை மூடினார்கள்.

திரும்பும்போது நான் சாகிப் பின்னாலேயே நடந்தேன். ஃபாதரும் பிறரும் நேர்வழியே செல்ல அவர்மட்டும் முந்திரிக் காடு வழியாக புகுந்து குனிந்தும் பாய்ந்தும் சென்றார். ஒரு கிளையை குனிந்து கடந்த பின் திரும்பி சாகிப் என்னிடம் ‘உன் அம்மா வரலையா?’ என்றார். ‘இல்லே.நான்தான் வந்தேன்’ என்றேன். அவர் ‘ஓ..ஐ சீ’ என்றார் தனக்குள். நான் திடீரென்று தழுதழுத்த குரலில் ‘நான் வேதக்காரனா ஆயிடுதேன். ரொட்டி குடுங்க சாயிப்பே…’ என்றேன். ‘ரொட்டி மட்டும் போருமா?’ என்று அவர் சிரித்துக்கொண்டே கேட்டார்.’ ’நெறைய ரொட்டி வேணும்…எனக்க வீட்டுக்கு குடுக்கணும் சாயிப்பே. எனக்க தங்கச்சிக்கு ரொட்டி வேணும் சாயிப்பே’

சாகிப் என்னை மெல்ல இழுத்து அணைத்துக்கொண்டார். அவரது வாசனை என்னை சூழ கண்ணீஇர் விட்டுக்கொண்டு அவர் உடையில் என் முகத்தை புதைத்தேன். என் மூச்சு உள்ளிருந்து விம்மல் விம்மலாக வெடித்து வந்தது.என் அப்பாவின் வியர்வை நெடி ஊறிப்போன பனைமட்டையும் குளத்துப் பாசியும் உப்பும் கலந்தது. சாகிப்பின் வியர்வை நெடியில் ஒரு மெல்லிய வெடிமருந்து வீச்சம் இருந்தது. அன்று முதல் அதன்மேல் எனக்கு ஒரு மோகம் உருவாகியது. கடைசிவரை அவரது உடைகள் கையில் கிடைத்தால் நான் முகர்ந்து பார்க்காமல் இருப்பதில்லை.

சாகிப் அவரது அறைக்குச் சென்றதும் ஒரு காக்கி நிக்கரை எடுத்து எனக்கு தந்து ’இதே போட்டுக்கோ..’ என்றார். நான் அதை வாங்கி மெல்ல முகர்ந்தேன். மனம் மயக்கும் ஒரு வாசனை. புதுத்துணியின் வாசனை. நான் அணியும் முதல் புதுத்துணி அது. ‘ஏசுவே கர்த்தரேண்ணு சொல்லி போட்டுக்கோ’ நான் ‘ஏசுவே கர்த்தரே’ என்றேன். எனக்கு மிகப்பெரிய கால்சட்டை அது. இடுப்பருகே பலமுறை சுருட்டிக்கொண்டேன். சாகிப் சிரித்தார், நானும் சிரித்தேன். துரை ‘சோறு தின்னுட்டா சரியாயிடும்’ என்றார்

சாகிப் பைபிளை எடுத்து பிரித்தார். ‘இங்கே வா’ என்றார். நான் அருகே சென்றதும் என் தலைமேல் கை வைத்து பைபிள் வாசகங்களை உரக்க வாசிக்க ஆரம்பித்தார். அவ்வாறு நான் கிறிஸ்தவனாக ஆனேன்.என் பெயர் ஜேம்ஸ் டேனியேல்.

2

என்னை மதம் மாற்றியவர் நெய்யூரின் புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் தியோடர் ஹோவர்ட் சாமர்வெல். [Dr.Theodore Howard Somervell] ஊரில் அவரை சாமுவல் என்று சொன்னார்கள். நான் அவரது வரலாற்றை தெரிந்துகொண்டது மேலும் நான்கு வருடங்கள் கழித்துதான். அவர் தன்னைப்பற்றிச் சொல்லக்கூடியவரல்ல. செயலே உருவான மனிதர். மிகக்குறைவாகப் பேசக்கூடியவர். எப்போதும் வாசித்துக்கொண்டிருப்பார். பைபிள் தவிர வேறொன்றும் வாசிக்காத வெள்ளைகாரர்கள் போல அல்ல. அவருக்கு ஷேக்ஸ்பியர் மேல் தணியாத மோகம் இருந்தது. அவரது மேஜைமேல் எப்போதும் ஷேக்ஸ்பியரின் தோல் அட்டை போட்ட பெரிய தொகைநூல் இருக்கும். பேச்சில் ஷேக்ஸ்பியர் வரிகள் சாதாரணமாக வரும்.

சென்னையில் இருந்து நேரடியாக புத்தகங்களை வரவழைத்து வாசிப்பார். வெள்ளிதோறும் நாகர்கோயில் சென்று அதை பெற்றுவருவார். அவரது சொந்த நூலகம் மிகவும் பெரியது. அதில் டிக்கன்ஸ், தாக்கரே, ஜார்ஜ் எலியட் என ஒருவரிசை. டபிள்யூ டபிள்யூ ஜேக்கப்ஸ், மேரி கெரெல்லி என இன்னொரு வரிசை. அவற்றில் கணிசமானவற்றை நான் பின்னர் வாசித்திருக்கிறேன். அந்த நூல்கள் அனைத்தும் அவருக்குப் பின்னர் ஸ்காட் கிறித்தவக்கல்லூரி நூலகத்துக்குச் சென்றன.

சாமர்வெல்லுக்கு இசை ஆர்வம் உண்டு. என்ன காரணத்தாலோ இந்திய இசை அவர் காதுக்குள் நுழையவே இல்லை. ஆனால் மேலையிசையிலும் காஸ்பல் இசையிலும் பெரும் பித்து உண்டு. அவரிடம் கன்னங்கரிய ஊமத்தை மலர்போன்ற கிராமபோன் கருவி ஒன்றிருந்தது. அவருக்கு இசைத்தோழராக நாகர்கோயில் ஸ்காட் கல்லூரி முதல்வர் ராபின்ஸன்துரை இருந்தார். இசைத்தட்டுக்களுடன் அவர் ஞாயிறு மதியம் வருவார். இரவாவது வரை அவற்றை மீண்டும் மீண்டும் போட்டுக் கேட்டுக்கொண்டு கையில் ஒரு பிராந்திக் கோப்பையுடன் கனவில் போல அமர்ந்திருப்பார்ர்கள். சாமர்வெல் பியானோவும் ஓபோவும் வாசிப்பார்.

சாமர்வெல் இங்கிலாந்தில் வெஸ்ட்மோர்லேண்டில் கெண்டால் என்ற ஊரில் பிறந்தார். அதை அவரது ஃபைலில் பார்த்தேன். அவருடைய பெற்றோர் செருப்புத் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருந்தார்கள். அதை ஒருமுறை அவரே சொன்னார். நாகர்கோயிலைச்சேர்ந்த நாகராஜ அய்யர் என்பவர் விரைவீக்க அறுவைசிகிழ்ச்சைக்காக வந்து படுத்திருந்தார். அவனருகே செருப்பு தைக்கும் செம்மான் ஒருவனை படுக்கவைத்துவிட்டார்கள் என்று புகார் சொன்னபோது ‘நான் ஒரு செருப்பு தைக்கிறவன் தெரியுமா அய்ரே’ என்றார். ‘பொய் சொல்லாதீங்க சாயிப்பே’ என்றார் அய்யர். ‘இல்லே..எங்க குடும்பம் செருப்பு தைச்சு விக்கிற ஆலை வச்சிருந்தாங்க’ என்றார். அய்யர் ‘ஆலைதானே?’ என்று சொல்லி உடனே கண்ணை மூடிக்கொண்டார்

சாமர்வெல் அபாரமான விளையாட்டு வீரராக இருந்திருக்கிறார். தினமும் ஆஸ்பத்திரிக்கும் சர்ச்சுக்கும் நடுவே உள்ள மைதானத்தில் அவர் பேட்மிண்டன் விளையாடுவார். அவருடன் விளையாடுவதற்காக வேறு வெள்ளைக்காரர்கள் நாகர்கோயிலில் இருந்து வருவார்கள். நான் பார்க்கும்போதே அவருக்கு ஐம்பதுவயது தாண்டிவிட்டிருந்தது. ஆனால் அவருடன் எவராலும் விளையாடி வெல்ல முடியாது. அவருக்கு எதிராக விளையாடுபவர்கள் ஒவ்வொருவராக களைத்து அமர்ந்துவிட மேலும் மேலும் புதியவர்களுடன் அவர் ஆடுவார். இருட்டில் பந்து தெரியாமலாகும்போது சட்டை வியர்வையில் ஒட்டியிருக்க வந்து இரும்பு நாற்காலியில் அமர்ந்துகொள்வார். நான் அவருக்கு வெல்லம் சேர்த்த சூடான பருத்திக்கொட்டைப்பாலை எனாமல் கோப்பையில் கொடுப்பேன்.

சாமர்வெல் மேல் எனக்கு அடங்காத கவனம் இருந்துகொண்டிருந்தது. அவரை புரிந்துகொள்ள அவருடன் இருந்த பத்து வருடமும் ஒவ்வொரு கணமும் முயன்று வந்தேன். அவரது ஃபைல்களை ஒருமுறை லண்டன்மிஷன் தலைமையகத்துக்குச் சென்றபோது ஒருவரிடம் கேட்டு ரகசியமாக வாசித்தேன். அவர் கேம்பிரிட்ஜின் கான்வில்- காயஸ் கல்லூரியில் மருத்துவம் பயின்றாவர். அதன்பின் ராணுவத்தில் சேர்ந்து முதல் உலகப்போரில் ஈடுபட்டார்.1915 முதல் 1918 வரை சாமர்வெல் பிரான்சில் பிரிட்டிஷ் இராணுவ வீரராகப் பணியாற்றினார். காப்டன் பதவியை அடைந்தபின் விருப்பப் பணி ஓய்வுபெற்றார். அப்போது அவருக்கு இருபத்தெட்டு வயது.

தனது ராணுவ வாழ்க்கை பற்றி சாமர்வெல் ஒருபோதும் பேசியதில்லை, ஒரே ஒருமுறை மட்டும் அவர் ஓர் அனுபவத்தைச் சொன்னார். வார்டுக்குள் அவர் நுழைந்தபோது ஒரு கிழவர் ‘சாயிப்பே நான் சாவுறேன் சாகிப்பே…எனக்கு வலிதாங்கமுடியல்ல சாகிப்பே…வாங்க சாகிப்பே…இங்க வாங்க சாகிப்பே’ என்று கத்தினார். சாமர்வெல் ’இரு’ என்று கை காட்டினார். இன்னொரு மலையாள பள்ளிக்கூட வாத்தியாரின் கட்டை அவிழ்த்து பார்த்துக்கொண்டிருந்தார். கிழவர் மீண்டும் மீண்டும் ‘சாய்ப்பே ஓடி வாங்க சாயிப்பே’ உரக்கக் கத்தியபோது சாமர்வெல் சட்டென்று அருகே சென்று படீரென்று கன்னத்தில் ஓர் அறை வைத்தார். அவர் ஒரு மூத்த பிள்ளைவாள். அடிபட்டதும் அவர் அரண்டுபோய் இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கண்களில் கண்ணீருடன் அமைதியானார். சாமர்வெல் எந்த கோபமும் தெரியாத முகத்துடன் புண்ணைப் பார்க்க ஆரம்பித்தார்.

தன் அறைக்கு திரும்பும் வழியில் சாமர்வெல் ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார். முதல் உலகப்போரில் நடந்த சம்பவம். பிரான்ஸில் சோம்மே என்ற ஊரில் ஒரு போர்முனை. எழுநூறுபேருக்குமேல் படுகாயம் அடைந்து ஒரு பெரிய கொட்டகைக்குள் கொண்டு வந்து போடப்பட்டிருந்தார்கள். அங்கே இருந்தது சாமர்வெல் உட்பட நான்கே நான்கு மருத்துவர்கள். இரவெல்லாம் வெறிபிடித்தது போல சாமர்வெல் வேலைசெய்துகொண்டிருந்தார். பின்னிரவில் களைத்து சோர்ந்து ஒரு வீரனின் படுக்கையில் கொஞ்சநேரம் அமர்ந்துவிட்டார். அடுத்த படுக்கையில் இருகால்களும் சிதைந்த ஒருவன் கிடந்தான். அவனுடைய கண்கள் தன்னையே பார்ப்பதை உணர்ந்து எழுந்தார். அவன் கையை அசைத்து ‘பரவாயில்லை, ஓய்வெடுத்தபின் வாருங்கள்’ என்று சைகை செய்தான்.

சாமர்வெல் அங்கேயே மனம் பொங்கி கண்ணீர் மல்கிவிட்டார்.அந்த மாபெரும் ஆஸ்பத்திரி வார்டில் கிடந்தவர்களில் பாதிப்பேர் ஒருமணி நேரத்தில் மருத்துவ உதவிகிடைக்காவிட்டால் சாகக்கூடியவர்கள். கட்டில்களில் இருந்து வழிந்த குருதி உண்மையிலேயே ஓரமாக ஓடைபோல வழிந்துகொண்டிருந்தது. ஆனால் ஒருவர் கூட தன்னை வரிசையை மீறி வந்து கவனிக்கவேண்டும் என்று கோரவில்லை. ஒருவர் கூட கெஞ்சவில்லை. ‘எத்தனை மகத்தானவன் மனிதன்! கடவுளின் படைப்பில் இந்த ஓர் உயிருக்கு மட்டும் எவ்வளவு ஆன்ம வல்லமை சாத்தியமாகிறது! அவன் போக்க்கூடிய தூரம் எவ்வளவு அதிகம். அவனால் கொஞ்சம் கைநீட்டினால் மனிதகுமாரனின் கால்களை தொட்டு விடமுடியுமே… இங்கே சிதைந்து கிடக்கும் அத்தனைபேருமே அதற்கான வாய்ப்புள்ளவர்கள் அல்லவா? அவர்களை வெறும் சதைப்பிண்டங்கள் போல சிதைத்து எறிந்து எந்த அரசை வெல்லப்போகிறார்கள்? எந்த வெற்றியை கொண்டாடப்போகிறார்கள் ’ ஒருபோதும் இனிமேல் போரில் ஈடுபடுவதில்லை என்று சாமர்வெல் முடிவுசெய்தது அன்றுதான்.

அன்று மாலை கையில் தன் ஓபோ புல்லாங்குழலுடன் அந்த பிள்ளைவாளுக்கு அருகே சென்று அமர்ந்துகொண்டார் சாமர்வெல். அவரைக்கண்டதும் பிள்ளைவாள் பதறி எழுந்தமர்ந்து நடுங்கக் கைகூப்பினார். சாமர்வெல் அந்த ஓபோவை மெல்ல வாசிக்க ஆரம்பித்தார். நான் சென்று வாசலில் நின்று கேட்டேன். எதையோ மன்றாடுவது போலவோ எதற்கோ நன்றி சொல்வது போலவோ நெளிந்து வளைந்து வழிந்தோடும் மேல்நாட்டு இசை. கைகூப்பியபடி கண்களில் கண்ணீர் கொட்ட பிள்ளைவாள் அமர்ந்திருந்தார். அந்த அறைமுழுக்க கண்ணுக்குத்தெரியாமல் நிறைந்திருந்த வலி சன்னல்கள் வழியாக வெளியே சென்றது. இனம்புரியாத மகத்துவம் ஒன்று அங்கே நிறைந்து நின்றது .அழியாதது, என்றும் எங்கும் மனிதனால் உடனடியாக அடையாளம் காணத்தக்கது. . இசை அங்கிருந்த அத்தனை வலிகளையும் ஒன்றாக்கி ஒரே மானுடவலியாக்கி அதை சாதித்ததா என்ன? அந்த அப்பால் மலையாளிப்பள்ளி ஆசிரியர் தலையணையில் முகம் புதைத்து அழுவதைக் கண்டேன்.

நான் முதன்முதலாக சாமர்வெல் அறைக்குள் நுழைந்தபோது அவரது அறைச்சுவரில் கண்ட புகைப்படம் இமயமலைமுகடுகளுடையது என பின்னர் அறிந்தேன். அதில் நடுவில் இருந்த சிகரத்தின் பெயர் எவெரெஸ்ட். அதில் ஏறச்சென்ற முன்னோடியான மலையேற்ற வீரர்களில் ஒருவர் சாமர்வெல். 1922ல் அவரும் அவரது நண்பர் ஜார்ஜ் மல்லோரியும் எவரெஸ்ட் சிகரத்தை வடக்குமூலை வழியாக ஏற முயன்றார்கள். 8000 மீட்டர் உயரம் வரை கடும் பனிப்பொழிவில் ஏறிச்சென்றார்கள். அன்றுவரை இமயத்தில் மனிதர்கள் ஏறியயதிலேயே அதிக உயரம் அதுதான். அதற்குமேல் செல்லமுடியாமல் காற்றழுத்த தாழ்வு அவர்களை தடுத்தது.

முதலில் அவர்கள் ஆக்ஸிஜன் இல்லாமல் பயணம்செய்தார்கள். ஆகவே ஆக்ஸிஜனுடன் அதே வருடம் இன்னொரு முறை எவரெஸ்டில் ஏற முயன்றார்கள். இடுப்பளவு பனியில் பனிக்கோடரியால் வெட்டிய தடங்களில் மிதித்து ஏறிச்சென்றார்கள். தலைக்குமேலே ஓரு பிரம்மாண்டமான உறுமல் ஒலியை சாமர்வெல் கேட்டார். அப்போது அவரை அறியாமலேயே ’ஆமென்’ என்று சொன்னாராம். அவரது தலைக்குமேல் இருந்த ஒரு பனிமலை அபப்டியே பெயர்ந்து ராட்சத அருவிபோல கீழே வந்தது. அவருக்கு மேலே இருந்த ஒரு பனிபாறை நீட்டல் அந்த பனிவெள்ளத்தை இரண்டாக பிளந்தது. அந்த பிளவில் சாமர்வெல் நிற்க இருபக்கமும் இருந்தவர்களை அந்த பனிவீழ்ச்சி அள்ளிக்கொண்டு அதலபாதாளத்தில் இறங்கிச் சென்று மறைந்தது. சிலநிமிடங்களுக்குள் அந்த நிலமே அடையாளம் காணமுடியாத இன்னொன்றாக ஆகியது.

அந்த பேரொலி அடங்கியதும் சாமர்வெல் தனிமையில் வெண்பனியில் நின்று நடுநடுங்கினார். அதற்குமேல் ஓர் அடி எடுத்து வைக்க முடியவில்லை. அங்கேயே நெடுநேரம் அமர்ந்திருந்தார். அந்த வழியை தேர்ந்தெடுத்ததே அவர்தான். நண்பர்களுக்குச் செய்யவேண்டிய கடமை என்பது அவரும் கூடவே குதிப்பதுதான். குதிக்க முடிவெடுத்து எழுந்தவர் திரும்பும்போது மேலே தெரிந்த அந்த பனிப்பாறை நீட்டலை கண்டார். கால்வரை நீண்ட வெண்ணிறமான அங்கிக்குள் இருந்து ஒரு கை ஆசியுடன் எழுந்தது போல அவர் தலைக்குமேல் அது நின்றது. ‘ஏசுவே, என் மீட்பரே!’ என என்று மார்பில் கைவைத்து விம்மினார்

மலையிறங்கி டெராடூன் வந்த சாமர்வெல் இந்தியா முழுக்க அலைந்து திரிந்தார். ஒவ்வொரு நாளும் இரவில் தன் அறையை சாத்திவிட்டு முழந்தாளிட்டு கண்ணீருடன் மணிக்கணக்காக ஜெபம் செய்தார். ‘என் தேவனே நீர் உத்தேசித்தது என்ன? உமது ஆக்கினை என்ன தேவனே?’ என்று மன்றாடினார். எதன்பொருட்டோ தான் உயிர்வாழ அனுமதிக்கப்பட்டிருப்பதாகவே அவர் நினைத்தார். ஒவ்வொரு ஊரிலும் நின்று ‘என்னுடைய மண்ணை எனக்கு காட்டியருளும் தேவனே’ என்று கண்ணீர் விட்டார்.

1925ல் ஒருநாள் அவர் கல்கத்தாவில் விடுதி அறை ஒன்றில் ஜெபம்செய்துகொண்டிருந்தபோது வேலையாள் ஒரு கடிதத்தை கொண்டுவந்து கொடுத்தான். அவருடன் ராணுவத்தில் பணிபுரிந்த ஒருவர் லண்டன் மிஷன் பணியாளராக நாகர்கோயிலில் இருந்தார். அவர் எழுதிய கடிதம் அது. அதை ஓர் அழைப்பாக எடுத்துக்கொண்டு சாமர்வெல் அவரைப்பார்ப்பதற்காக திருவிதாங்கூருக்கு வந்தார். நெய்யூரில் சர்ச்சுக்குச்செல்லும் வழியில் முந்தையநாள் மழையில் ஒரு பள்ளம் உருவாகியிருந்தமையால் குறுக்கு வழியில் ஏறிச் சென்றனர். அங்கே மிகச்சிறிய மிஷன் ஆஸ்பத்திரி ஒன்று அன்று இருந்தது .சாமர்வெல் அங்கே திருவிழா போல கூட்டம் கூடியிருப்பதைக் கண்டார். என்ன என்று விசாரித்தபோது அது மருந்து வாங்க வந்த நோயாளிகளின் கூட்டம் என்று சொன்னார்கள். அங்கே அன்று ஒரே ஒரு மருத்துவரும் ஒரே ஒரு கம்பவுண்டரும் மட்டுமே இருந்தார்கள். ஒவ்வொருநாளும் மூவாயிரம்பேர் அங்கே மருத்துவத்துக்கு வந்தார்கள். பெரும்பாலானவர்களுக்கு கார்பனேட் மிக்சர் மட்டுமே மருந்தாக கொடுக்கப்பட்டது.

விளக்கமுடியாத ஒரு வசீகரத்தால் இழுக்கப்பட்டு சாமர்வெல் அந்த ஆஸ்பத்திரி நோக்கிச் சென்றார். அப்போது ஒரு மூன்று வயதான, இடுப்பில் ஒரு கந்தல் மட்டும் அணிந்த கரிய பெண்குழந்தை ஓடிவந்து அவரிடம் ஒரு சிறிய சிலுவையைக் கொடுத்துவிட்டுச்சென்றது ‘என் தேவனே!’ என்று வீரிட்டபடி அங்கேயே அமர்ந்துகொண்டார் சாமர்வெல். இரு பனையோலைகளை இணைத்து உருவாக்கப்பட்ட அந்த எளிய சிலுவையை நெற்றிமேல் அணைத்துக்கொண்டு ‘உங்கள் ஆக்கினை என் தேவனே…உங்கள் சித்தப்படி என் ஆவியை இங்கே வைக்கிறேன் ஏசுவே’ என்று நெஞ்சுக்குள் வீரிட்டார்

அன்று விடியும்வரை அங்கிருந்து மருந்துகொடுத்தார். மறுவாரம் லண்டனுக்குக் கிளம்பிச்சென்றார். அவருக்கு அன்று அங்கே மிகப்பெரிய தொழிற்சாலைகளும் வீடுகளும் பண்ணைகளும் இருந்தன. அனைத்தையும் விற்று மொத்தப்பணத்துடன் இந்தியா திரும்பினார்.அன்று லண்டனிலேயே பரபரப்பான பேச்சாக இருந்தது. பிரிட்டிஷ் அரசின் மகத்தான மருத்துவர்களில் ஒருவர் பேரரசின் வரைபடத்தில் எதிலும் இல்லாத ஒர் ஊருக்குச் செல்கிறார். அவரிடம் மனிதகுமாரன் வந்து சொன்ன புனித ஆணையை ஏற்று கிளம்புகிறார் !

சாமர்வெல் நான்காண்டுகளில் நெய்யூரில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை உருவாக்கினார். 1838 ல் திருவிதாங்கூர் மகாராஜா மூலம்திருநாளின் நன்கொடையுடன் ஆர்ச்பால்ட் ராம்ஸே நிறுவிய மருத்துவமனை அது. அடுத்துவந்த சார்ல்ஸ் கால்டர் லேய்ச் வீடுகள் தோறும் சென்று அரிசியும் தேங்காயும் நன்கொடையாகப்பெற்று அதன் கட்டிடங்களை எழுப்பினார்.சாமர்வெல்லின் காலத்தில் பேராலமரமாக அந்த மருத்துவமனை எழுந்தது. சூரியன் அணையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இருந்த லண்டன்மிஷன் ஆஸ்பத்திரிகளில் அதுவே மிகப்பெரியது.

சாதாரணமான இளைஞர்களிலிருந்து மிகச்சிறந்த மருத்துவப்பணியாளர்களை உருவாக்கி எடுத்தார் சாமர்வெல் . உள்ளூரின் எளிய பொருட்ளை எப்படி மிகச்சிறந்த மருந்துகளாக ஆக்க முடியும் என்று கண்டுகொண்டார். சிவகாசிப்பக்கமிருந்து கொண்டுவந்த கந்தக மண்ணை காய்ச்சி நீரெடுத்து அதில் இருந்து உருவாக்கிய கலவையால் சொறிசிரங்குகளை குணப்படுத்தினார். சீனாக்காரத்தைக்கொண்டு எளிய புண்களுக்கு முறிமருந்தை உருவாக்கினார்.

சாமர்வெல் அவரது சொந்த முயற்சியால் உருவாக்கிய அறுவைசிகிழ்ச்சைமுறைகளை கண்டு கற்க உலகமெங்கும் இருந்து நிபுணர்கள் வந்துகொண்டிருந்தார்கள். இளநீரை நேரடியாக குருதியில் செலுத்தமுடியும் என்றும், மாவுக்கட்டு போடுவதற்கு கரையான்புற்று உடைத்து எடுத்த மண்ணே சிறந்தது என்றும் அவர்கள் கற்றார்கள். எருமைவால்முடியால் காயங்களுக்குத் தையல் போடவும், அசையும் தசைகளுக்கு தசையோட்டத்தின் பாணியை கண்டு தையல்போடவும் கற்றுக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் கற்றுச்செல்லாத ஒன்று அவரிடம் இருந்தது. மருத்துவனை தெய்வமாக ஆக்கும் ஒன்று, சிறுகுழந்தைகளின் நினைவில்கூட முக்கால்நூற்றாண்டுக்கும் மேலாக அவரை நிலைநாட்டிய ஒன்று.

[ 3 ]

அத்தகைய மாமனிதனால் தீண்டப்பட்டும்கூட என் ஆன்மா விழித்தெழாமலேயே இருந்தது. என் எட்டாவது வயதில் அவரிடமிருந்து நான் ஏசுவின் சொல்லைப் பெற்றேன். ஆனால் அது என் பெயரை மட்டுமே மாற்றியது. உள்ளுக்குள் நான் புரளவேயில்லை. மண்ணில் சாமர்வெல்லின் கால்கள் பட்டுச்செல்லும் ஒவ்வொரு தடத்தையும் ஓராயிரம்முறை சென்று முத்தமிடும் நாய்போல இருந்தது என் மனம். அனால் அவர் எனக்கு கொடுத்த பைபிள் வெறும் சொற்களாகவே இருந்தது.

என்னை மிஷன்பள்ளியில் நேரடியாக ஐந்தாம் வகுப்பில் கொண்டுசென்று சேர்த்தார் சாமர்வெல். அதற்குமுன்னால் நான்கு மாதம் அவரே எனக்கு ஒவ்வொருநாளும் கணக்கும் தமிழும் ஆங்கிலமும் சொல்லிக்கொடுத்தார். நான் வகுப்பில் முதல் மாணவனானேன். எப்போதும் எந்த வகுப்பிலும் நான் முதலிடத்தில் இருந்தேன். கூடவே ஆஸ்பத்திரி ஊழியனாகவும் இருந்தேன். காலை ஏழுமணிமுதல் ஒன்பதுவரை நான் சாமர்வெல்லின் தனிப்பட்ட பணிவிடைகளைச் செய்தேன். மாலை நான்கு மணிமுதல் நள்ளிரவு வரை ஆஸ்பத்திரியில் பணியாற்றினேன். என் அக்காக்கள் இருவரும் மதம் மாறி லண்டன்மிஷன் ஆஸ்பத்திரிகளில் வேலைக்குச் சென்றார்கள். ஒருவருடம் கழித்து என் அம்மாவும் மதம் மாறினாள்.

எங்கள் சிறு வீட்டைப் பிரித்து கொஞ்சம் வசதியாகக் கட்டிக்கொண்டோம். அம்மா சிறிய தையல் இயந்திரம் ஒன்றை வாங்கி கையாலேயே உருட்டி தைக்க ஆரம்பித்திருந்தாள். தங்கைகள் அருகே பள்ளியில் படித்தார்கள். ஒருமுறை இரவில் புன்னைக்காய் எண்ணை விளக்கு ஒளியில் எனக்குச் சூடான சோறு பரிமாறும்போது அம்மா பேச்சுநடுவே ‘சாயிப்பு குடுத்த சீவனாக்கும் மக்கா இது’ என்றாள். அன்று குழந்தைகளுடன் சாகத்தான் அவள் போகிறாள் என்று சாகிப் ஊகித்திருக்காவிட்டால் இன்று அத்தனைபேரும் மண்ணாகிவிட்டிருப்பார்கள் அல்லவா? ‘கர்த்தரின் பேரல்லோ இப்ப சோறாட்டும் மீனாட்டும் நம்ம தட்டிலே இருக்கு’ என்று சொன்னாள். நான் அம்மாவை ஏறிட்டுப்பார்க்காமல் ‘அப்ப சோறுக்காக மட்டும்தானா?’ என்று கேட்டேன். அம்மா கண்களில் கண்ணீர் தீபோல எரிய ‘ஆமலே, சோறுக்காகத்தான். கர்த்தர் எனக்கு சோறும் கறியும்தான்லே. அதை எங்க போயிச் சொல்லவும் எனக்கு வெக்கம் இல்ல’என்றாள்.

அந்த வரியை நான் பிடித்துக்கொண்டேன். எந்த ஒரு விவாதத்திலும் அந்த வரியைச் சொல்வேன். அது எல்லா தர்க்கங்களையும் இல்லாமலாக்கிவிடும். ’ஆம் சோறுக்காகவேதான். கர்த்தர் எனக்கும் என் குலத்துக்கும் சோறுதான். பசித்தவனுக்கு அவர் சோறுதான்’ ஆனால் என்னை அது உள்ளூர அவமதித்தது. என்னுடைய அறை மாடிப்படிக்கு அடியில் இருந்தது. அந்த சிறிய கட்டிலில் தனியாக நான் படுத்திருக்கும்போது தலைக்குமேல் மாட்டப்பட்ட ஏசுவின் படத்தையே பார்த்துக்கொண்டிருப்பேன் ‘கர்த்தரே உமது சிலுவையை எனக்கு தாரும். உமது ரத்தத்தில் ஒரு துளியை எனக்கு தாரும்’ என்று கேட்டுக்கொள்வேன். ஆனால் அந்த படம் என்னை பார்க்காமல் காலியான கண்களுடன் இருக்கும்.

எனக்குள் இருந்த எவரும் அறியாத அந்த ஆழத்தை கண்டுகொண்டவர் சாமர்வெல் மட்டும்தான். ஒருமுறை என் அறைக்குள் எதற்காகவோ எட்டிப்பார்த்தவர் அந்த படத்தைப் பார்த்துவிட்டு சட்டென்று திரும்பிச் சென்றுவிட்டார்.நாலைந்து நாட்களுக்குப் பின்னர் ஒரு அனாதைப்பிணத்தை நாங்களிருவரும் அடக்கம் செய்துவிட்டு அதே முந்திரித்தோப்பு வழியாக வந்தோம். ஒரு மரக்கிளையில் அமர்ந்துகொண்டு என்னிடம் ‘நீ ஜெபிக்கிறாயா?’ என்று கேட்டார். நான் அவரிடம் பொய் சொல்லமுடியாதென்பதனால் தலைகுனிந்து நின்றேன். ‘நீ உன் விசுவாசத்தை காத்துக்கொள்கிறாயா?’ என்று அவர் மேலும் கேட்டார். நான் ஒன்றுமே சொல்லவில்லை

சாமர்வெல் கொஞ்சம் கோபம் கொண்டார். ‘ உன் ரூமிலே கர்த்தர் படம் தூசி படிஞ்சு இருக்கு… உன் நரகத்திலே இருந்து கர்த்தர் உன்னை கைநீட்டி தூக்கியிருக்காரே. நீ உண்ணும் சோறும் நீ இருக்கும் கூரையுமா அவருக்க கிருபை வந்து சூழ்ந்திருக்கே. இன்னும் என்ன வேணும் உனக்கு?’ என்று கேட்டார். நான் தலைகுனிந்து நின்று கண்ணீர் விட்டேன். ‘கண்ணீர் எதுக்கு…சொல்லு’என்றார். நான் பேசாமல் நின்றிருந்தேன். அவர் கொஞ்சநேரம் எதிர்பார்த்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

நான் மறுநாள் அவருக்குச் சேவைசெய்ய சென்றபோது அங்கே ஞானதாஸ் இருந்தான். ‘இண்ணைக்கு முதல் நீ வாண்ணு சாயிப்பு விளிச்சாரு…நீ இனிமே ஆஸ்பத்திரியிலே சோலிசெய்தா மதியாம்’ என்றார். நான் உடம்பு பதற அங்கேயே நின்றேன். கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. ஆனால் நின்ற இடத்தில் இருந்து நான் அசையவில்லை. கொஞ்சநேரம் கழித்து ஆஸ்பத்திரியில் அறுவை சிகிழ்ச்சை முடிந்து வேகமாக வந்த சாமர்வெல் என்னைப்பாத்தார்.பேசாமல் உள்ளே சென்றார். அவர் மீண்டும் வெளியே கிளம்பும்போதும் நான் அங்கேயே நின்றேன்.

மீண்டும் மதியம் சாப்பிட வரும்போது அங்கேயே வெயிலில் நின்றுகொண்டிருந்தேன். தூரத்திலேயே நான் வெயிலில் நிற்பதை அவர் கண்டார். அங்கிருந்தே ‘மேலே ஏறு, மேலே ஏறு’ என்று கூவிக்கொண்டே வந்தார். என்னருகே வந்ததும் அனிச்சையாக அவரது கைக்குட்டையை என் தலையிலே போட்டு என்னை அணைத்துக்கொண்டு மேலே வராந்தாவில் கொண்டு சென்றார். பெருத்த கேவல்களுடன் நான் கதறி அழ ஆரம்பித்தேன். ‘சரி சரி…நாளைக்கு நீ வா’ என்று சொன்னார். அதன் பின்னரும் நான் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தேன். சாமர்வெல் எனக்கு ஒரு பெரிய எனாமல் கோப்பை நிறைய பருத்திப்பாலுடன் வந்து ‘குடிச்சுக்கோ’ என்றார்.

அடுத்த ஞாயிறன்று நாங்கள் இருவரும் சர்ச்சில் இருந்து சேர்ந்து திரும்பினோம். சாமர்வெல் என்னிடம் ஏதும் கேட்பார் என நான் நினைக்கவில்லை. கேட்கக்கூடாதென அவர் நினைத்துவிட்டால் கேட்க மாட்டார்.நான் அவர் கையை பிடித்து இழுத்ததும் நின்றார். சடசடவென்று நானே பேச ஆரம்பித்தேன். ‘டாக்டர் கிறிஸ்து எனக்கு சோறும் துணியும் வீடும் தந்திருக்காரு. ஆனா இதுக்காக நான் அவருக்கு நன்றிதான் சொல்லமுடியுது. என்னால விசுவாசிக்க முடியல்லை…சோறு எனக்க வயித்துக்குத்தான் போவுது டாக்டர். எனக்க ஆன்மாவுக்கு போகேல்ல’ நான் என்ன சொல்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. ‘நீங்கதான் எனக்க கிறிஸ்து. நான் கிறிஸ்துவ விசுவாசிக்கேல்ல. நான் உங்கள விசுவாசிக்கிறேன். உங்களுக்கு எனக்க ஆன்மாவ குடுத்திடறேன்’

அதன்பின் என்னால் பேசமுடியவில்லை. அழுதபடியே ஓடிச்சென்றேன். சாமர்வெல் அங்கேயே சில நிமிடங்கள் நின்றுவிட்டார். மறுநாள் எனக்கு அவர் ஒரு கடிதம் கொடுத்தனுப்பியிருந்தார். ஆங்கிலத்தில் ‘நீ சொன்னதை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன். உனக்கு வேண்டிய கிறிஸ்து இன்னும் பெரியவர். கிறிஸ்து நாம் அறியும் அளவுக்கு சிறியவர் அல்ல. அவர் முடிவில்லாதவர். அவரை நான் உனக்கு சரியாக அறிமுகம் செய்யவில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை அதற்கான தகுதி எனக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் கிறிஸ்து உன்னருகே வரவேண்டும் என்று நான் தினமும் ஜெபிப்பேன்’என்று எழுதியிருந்தார்.

அந்த குறிப்பை கைநடுங்க நெடுநேரம் வைத்திருந்தேன். எழுந்து ஓடிப்போய் அவர் கால்களில் விழுந்து ‘நான் விசுவாசிக்கிறேன்..முழுமனசோட விசுவாசிக்கிறேன்’ என்று கூக்குரலிடவேண்டும் என்று மனம் பொங்கியது. ஆனால் அவரிடம் என்னால் பொய் சொல்லமுடியாது. அவரிடம் யாருமே பொய்சொல்லமுடியாது. அவரது கண்களின் நேர்மையைப்போல அன்று நெய்யூரில் அஞ்சப்பட்ட பிறிதொன்று இருக்கவில்லை.

அதன்பின் ஆறு வருடங்கள் நான் அவரிடம் வேலைபார்த்தேன். என் அக்காக்கள் திருமணமாகிச் சென்றார்கள். நான் பதினொன்றாம் வகுப்பு முடித்து ஸ்காட் கிறித்தவக்கல்லூரியில் சேர்ந்தேன். அப்போதும் நான் சாமர்வெல்டாக்டரின் உதவியாளராகத்தான் வேலைபார்த்தேன். நானே ஒரு நல்ல டாக்டர் என்று ஊரில் பேச்சிருந்தது. எங்குசென்றாலும் என்னிடம் மருந்து கேட்க ஆரம்பித்தார்கள். ஆகவே நான் கையில் எப்போதும் அவசியமான அடிப்படைமருந்துகளை வைத்திருந்தேன். சில இடங்களில் என்னிடம் நோயாளிகளுக்காக ஜெபம் செய்யும்படிக் கேட்பார்கள். நான் திறமையாக அதை நிகழ்த்துவேன். அந்த சொற்றொடர்களின் ஓசைநயமும் செயற்கையான உருக்கமும் எனக்கு நன்றாகவே பழகிவிட்டிருந்தன. ஆனால் ஒருபோதும் சாமர்வெல் முன்னால் அதைச்செய்வதில்லை

சாமர்வெல் மேலும் மேலும் நெய்யூர்க்காரராக ஆனார். அவரை பிறரிடமிருந்து வேறுபடுத்திய எல்லா அடையாளங்களும் இல்லாமலாகிக்கொண்டே இருந்தன. அவர் விளையாடுவதை விட்டார். அரைக்கால்சட்டை போடுவதை விட்டு காவிவேட்டியும் ஜிப்பாவும் போட ஆரம்பித்தார். கால்களில் சப்பாத்துகளுக்கு பதில் சாதாரண டயர்செருப்பு போட்டுக்கொண்டார். இலையில் மீன்குழம்பு விட்ட சோற்றை பிசைந்து கைகளால் உண்டார். தரையில் சப்பணமிட்டு சாதாரணமாக அமர்ந்து புத்தகங்கள் வாசித்தார். ஒவ்வொருநாளும் சாயங்காலங்களில் கையில் பைபிளும் பெரிய காக்கித்துணிப்பையுமாக கிராமங்கள் தோறும் ’ஊழிய’த்திற்காகச் சென்றார்.

அவரை இடைவழிகளில் பார்த்தால் நான்குபக்கமிருந்தும் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் முஸ்லீம்களும் ஓடிக்கூடுவார்கள். அவர் ஒரு ஆளில்லாத இடத்தின் பாலத்தின் மேல் கொஞ்சநேரம் அமர்ந்தால்கூட வெல்லகக்ட்டியை மொய்க்கும் ஈக்கள் போல மக்கள் அவரைச்சுற்றி கூடிவிடுவார்கள். சாலையில் செல்பவர்களுக்கு அவர் நடுவே இருப்பதே தெரியாது. அத்தனை வருடம் அவர் தமிழ்பேசியும்கூட அவர் பேசுவது மக்களுக்கு கொஞ்சம்தான் புரியும். ஆனால் ஏசுவையே வழியில் கண்டதுபோல கைகளைக்கூப்பி கண்ணீர் விட்டுக்கொண்டு அவர் முன் அமர்ந்திருப்பார்கள். அவரது உடைகளையும் கால்களையும் தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்வார்கள். அவர் நடந்துபோன இடத்தில் அவரது செருப்புத்தடத்தில் இருந்து மண்ணை எடுத்து முந்தியில் முடிந்துகொள்வார்கள்.

திரும்பும்போது அவர் சாலையிலிருந்து பக்கவாட்டில் நுழைந்து ஏதேனும் இருண்ட புதர்க்காட்டுக்குள் செல்வார். அவருக்கு பூச்சிகள் பாம்புகள் எதையும் பயமில்லை. ஏதோ ஒரு வயதில் அவர் அச்சம் என்பதையே முழுமையாகக் கடந்துவிட்டிருந்தார். இருள்நிறைந்த தோட்டத்திற்குள் இலையடர்வுக்குள் பாறையிலோ மரக்கிளையிலோ அமர்ந்து ஓபோவை இசைப்பார். அதை அப்போது ஏசுவன்றி எவருமே கேட்கமாட்டார்கள்.கரைந்து கரைந்து காலியானபின் எப்போதோ திரும்ப வந்து தன் அறையில் அவர் படுத்துக்கொள்வார்.

ஒருநாள் நான் ஆற்றருகே இடைவழி வழியாக ஒரு நோயாளியைப் பார்த்துவிட்டு வரும்போது வழியோரத்தில் கரியன் என்ற கிராமத்துக்கிழவர் கைகளைக்கூப்பிக்கொண்டு குந்தி அமர்ந்திருப்பதை என் கைவிளக்கு ஒளியில் பார்த்தேன். மலம்கழிக்கிறார் என்றால் அவர் தோட்டத்தை பார்த்து திரும்பி இருகக்வேண்டியதில்லை. அரைக்கணம் கழித்தே தொலைவில் சாமர்வெல்லின் ஓபோவின் இன்னிசை காற்றில் கரைந்துகொண்டிருப்பது கேட்டது. நான் என் விளக்கை அணைத்துக்கொண்டு அப்படியே அவருக்கு அருகே அமர்ந்துகொண்டேன். இருளுக்குள் இருந்து பாடலாகவோ சொல்லாகவோ ஆகாத இசை வந்துகொண்டிருந்தது. இசை சிலசமயம்தான் தூய உணர்ச்சி மட்டுமாக ஆகும். வெறும் ஆன்மா மட்டுமாக காற்றில் நிற்கும். அந்த கல்வியறிவற்ற அரைநிர்வாணக்கிழவரும் நானும் எங்களையும் இந்த மானுடத்தையும் ஒட்டுமொத்தமாக பிணைத்திருக்கும் தூய்மையான ஒன்றால் கட்டுண்டு உடல்நீரெல்லாம் கண்ணீராக வழிய அங்கே அமர்ந்திருந்தோம்.

அது 1949. குமரிமாவட்டத்தை காலரா தாக்கியது. மழைமிகுந்த இந்த மாவட்டத்தில் காலரா எப்போதும் ஏதோ வடிவத்தில் இருந்துகொண்டிருந்தது. அதை இங்கே நீக்கம்பு என்பார்கள். நீர்க்கம்பம் என்ற சொல்லின் மரூஉ அது. கம்பம் என்றால் அதிகப்படியானது என்று பொருள். எப்போதும் முதலில் அது கொல்லங்கோடு கடற்கரையைத்தான் முதலில் தாக்கும். கடற்கரையில் இருந்து மீன் வழியாக உள்நாடுகளுக்கு பரவும். உள்நாட்டில் சாம்பவர், புலையர்களின் சேரிகளில் பரவிய இரண்டாம் நாளே பல உயிர்களை வாங்கிவிடும்.

அப்போது அதற்கு மருந்து ஏதுமில்லை. மாங்கொட்டை, எட்டிக்காய் உட்பட பலவகையான கடும்கசப்பு பொருட்களை ஒன்றாகப்போட்டு காய்ச்சி ஒரு கஷாயம் செய்து குடிப்பார்கள். ஆனால் பயனேதுமிருக்காது. ஒட்டுமொத்தமாக ஊர்களே அழியாமலிருந்தமைக்குக் காரணம் ஊர்களின் அமைப்புதான். கல்குளம் விளவங்கோடு பகுதிகளில் ஊர்கள் என்றால் ஏழெட்டு கரைகளின் தொகுப்பு என்று பொருள். பள்ளமான இடங்களில் ஓடைகளும் நீர்நிலைகளும் வயல்களும் இருக்கும். அவற்றின் நடுவே உயரமான மேட்டுநிலத்தீவுகளில் குடியிருப்புகள். அவற்றையே கரைகள் என்பார்கள். இருப்பதிலேயே மேடான கரையில் கோயிலும் உயர்சாதியினரின் வீடுகளும் இருக்கும். இன்னொரு கரையில் நாடார்கள். இன்னொன்றில் ஆசாரிகளும் கொல்லர்களும் வண்ணார்களும். இன்னொன்றில் புலையர்,சாம்பவர் சேரிகள். ஒரு கரையில் காலரா வந்தால் அந்தக்கரையை முழுமையாகச் சூறையாடிவிட்டுச் செல்லும். அடுத்தகரைக்கு அது போவதற்கு நடுவே எப்படியும் ஒரு கிலோமீட்டர் தூரம் கடக்க வேண்டியிருக்கும் என்பதனால் மட்டுமே காலரா மட்டுப்பட்டது.

சேரிகள்தான் மிகநெரிசலானவை. ஒருவீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் இடைவெளியே இருக்காது. ஒரு கௌரவமான கோழிக்கூடைவிட சிறிய ஓலைக்குடில்கள். ஒருவர் வீட்டு தண்ணீர் இன்னொருவர் வீட்டுக்குச் செல்லும். மீன்செள்ளுகளும் குப்பைகளும் எங்கும் குவிந்துகிடக்கும். கோழிகளும் ஆடுகளும் எருமைகளும் மனிதர்களுடன் சேர்ந்து அங்கே வாழ்வார்கள். அத்தனைபேருடைய மலமும் அந்த இடைவெளிகள் முழுக்க மழை ஈரத்தில் கலங்கி மண்ணுடன் சேர்ந்து ஊறிக்கிடக்கும். மலப்புழுக்களின் வாழ்க்கை. அங்கே காலரா வந்தால் பத்தே நாளில் அங்குவாழும் கிட்டத்தட்ட அத்தனைபேரும் செத்துக்கிடப்பார்கள்.

காலரா பரவுவதற்கான முக்கியமான காரணம் கிளாத்தி [Triacanthus Strigilifer] என்ற மீன்தான் என்று சாமர்வெல் கண்டுபிடித்தார். வைகாசி, ஆனி மாத முதல்மழைக்காலம் முடிந்து ஆடி தொடங்கியதும் இது கடலில் பெருமளவுக்கு கிடைக்க ஆரம்பிக்கும். ஆறுகள் கடலில் கொண்டு சென்று கொட்டும் சேற்றுப்பரப்பில் முட்டைபோடுவதற்காக இவை மிகப்பெரிய தேசங்கள் போல பெருகிவருகின்றன. அடர்த்தியான சேற்றில் திளைத்து அதிலுள்ள கழிவுகளை உண்கின்றன. அவற்றில் தோல்கிளாத்தி என்ற வகை பெருமளவில் கிடைக்கும். கருமையாக கிராஃபைட் பளபளப்புடன் அரசிலை வடிவில் பெரிய சிறகுகளுடன் இருக்கும்.

எழுபதுகளில் ரப்பர் வருவது வரைஆடிமாதம் குமரிமாவட்டத்தின் பஞ்சமாதம். வைகாசியில் நடவு வேலை முடிந்துவிடும். ஆனியில் முதல் களையெடுப்பும் முடிந்துவிட்டால் அதன்பின் ஆவணி பாதிவரை எந்தவேலையும் இருக்காது. வாழைகள் அப்போதுதான் இலைவிரித்திருக்கும். வைகாசியில் நட்ட மரச்சீனி வேரோடியிருக்காது. சித்திரையில் காய்ந்து கரிந்த காட்டுக்கிழங்குகள் மெல்ல இலைவிரிக்க ஆரம்பித்திருக்கும். எந்நேரமும் சிறுசாரல் இருந்துகொண்டிருப்பதனால் எந்த வயலுக்கும் நீர்பாய்ச்சும் வேலை இல்லை. எந்த காயும் காய்க்கும் பருவம் அல்ல. பனைகளில் ஊற்றே இருக்காது. ஆகவே எங்கும் பெரும் பட்டினி பரவியிருக்கும்.

அப்போது மலிவாகக் கிடைக்கும் கிளாத்தியை மக்கள் கூட்டம்கூட்டமாகச் சென்று வாங்குவார்கள். அரைக்கால் சக்கரத்துக்கு இருபது முப்பது கிளாத்தி கிடைக்கும். அதை வாங்கிவந்து கைக்குக்கிடைத்த காயுடனோ கிழங்குடனோ சேர்த்து வேகவைத்து உண்பார்கள். கிளாத்தியின் குடலிலும் இரைப்பையிலும்தான் காலரா கிருமிகள் இருக்கின்றன என்று சாமர்வெல் சொன்னார். ஆடிமாசத்தில் கட்டுக்கடங்காமல் பெருகும் ஈக்களால் அவை பரவுகின்றன. கிளாத்தியை உண்ணக்கூடாது என்று கிராமம் கிராமமாக சொல்ல லண்டன் மிஷன் சர்ச்சுகளுக்கு செய்தி போயிற்று. கிறிஸ்தவர்களுக்கு கிளாத்தி தடைசெய்யப்பட்ட உணவு என்று சர்ச்சில் சொன்னார்கள்.

ஆனால் கிளாத்தியை உண்ணுவதிலிருந்து எவரையும் தடுக்க முடியவில்லை. அதி தீவிர கிறிஸ்தவர்களைத் தவிர பிறர் ரகசியமாகச் சாப்பிட்டார்கள். கிளாத்தியின் தோலையும் குடலையும் குழிதோண்டி புதையுங்கள் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தோம். சாமர்வெல் அதற்காக சர்ச்சுகள் தோறும் சென்று ஒவ்வொரு ஊரிலும் ஒரு குழுவை உருவாக்கினார். சர்ச்சுகளுக்கு வராத இந்துக்களும் முஸ்லீம்களும் வாழும் இடங்களுக்கு வீடு வீடாகச் சென்று அதை மக்களுக்கு எடுத்து சொன்னோம்.

அப்போதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. மிகப்பெரும்பாலான சாமானிய மக்கள் எதையும் கவனித்து உள்வாங்கிக்கொள்ளும் பழக்கத்தையே இழந்து விட்டிருந்தார்கள். நாங்கள் எங்கள் பிரச்சாரத்தைச் சொல்லச்சொல்ல அவர்களின் கண்கள் முற்றிலும் காலியாக இருக்கும். அந்தக் கண்களுக்கு அப்பால் ஒரு ஆன்மா இருப்பதே தெரியாது. அவர்கள் அறிந்தவை முழுக்க இளமையில் அவர்களுக்குள் சென்றவை மட்டுமே. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் பசித்து பசித்து உணவு உணவென்று அலைந்து வேறு எண்ணங்களே இல்லாமலாகிவிட்ட மனங்கள். அவற்றுக்கு சொற்களை அர்த்தமாக்கிக்கொள்ளவே பயிற்சி இல்லை.

பத்துநாட்களில் அத்தனைபேரும் நம்பிக்கை இழந்துவிட்டோம். ஆனால் சாமர்வெல் ஒருபோதும் சோர்வு கொள்வதில்லை. அவரது நம்பிக்கை என்பது முழுக்க முழுக்க அவரது ஆன்மா மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம். அவர் ஒவ்வொரு நாளும் இரவில் கையில் ஒரு மணியுடனும் பைபிளுடனும் கிளம்பி கிராமங்கள் தோறும் சென்றார். அவருக்கு முன்னால் ஒரு பையன் சுரைக்காய் கண்ணாடி போட்ட பானீஸ்விளக்கை எடுத்துச்செல்வான். வழியெங்கும் மணியை அடித்துக்கொண்டிருப்பார். ஆட்கள் எட்டிப்பார்க்கும்போது அவர் ’கிளாத்தி பாவத்திலே செஞ்ச மீனு. கிளாத்தி சாப்பிடாதீங்கோ. தெரியாமக் கிளாத்தி சாப்பிட்டா அந்த கொடலை ஆழமா புதைச்சிருங்கோ…’ என்று கூவுவார். நான் பின்னால் சென்றபடி அதை மேலும் உரக்க சொல்லுவேன்.

குடில்களின் முற்றங்களிலும் வீட்டு வாசல்களிலும் நின்று சாமர்வெல் ‘அய்யாமாரே அம்மாமாரே வெள்ளேக்காரசாமி கிறிஸ்துபேராலே சொல்லுது, கிளாத்தி சாப்பிடாதீங்கோ. வெந்நி குடியுங்கோ. ஆராவது சாப்பிட்டா கிளாத்தி தோலே புதைச்சிருங்கோ… அய்யாமாரே அம்மாமாரே வெள்ளேக்காரசாமி உங்களே கையெடுத்து கும்புடுது…கிளாத்தி சாப்பிடாதீங்கோ ’ என்று மன்றாடுவார். அவரை கண்டதுமே கிராமத்து பெண்கள் வந்து அவர்முன் மண்டியிடுவார்கள். இந்துக்கள் கூட அவரை கும்பிட்டபடி அவர் கடந்துசெல்வது வரை நிற்பார்கள். ஆனால் அவர் சொல்வதை எவருமே கேட்கவில்லை.

ஆடிமாதம் பாதியில் மரண எண்ணிக்கை பிரம்மாண்டமாக ஆகியது. எங்கள் ஆஸ்பத்திரி முன்பு வைக்க இடமில்லாமல் பிணங்கள். வார்டுகளிலெல்லாம் தரையிலும் வராந்தாக்களிலும் கட்டில்களுக்கு இடையிலும் எங்கும் நோயாளிகள். சாமர்வெல் ஊரில் உள்ள அத்தனை பெருவட்டர்களுக்கும் கரைநாயர்களுக்கும் செய்தியனுப்பி குலைகுலையாக இளநீர்களை கொண்டு வந்து குவித்திருந்தார். இளநீரை குருதியில் செலுத்துவது மட்டுமே ஒரே சிகிழ்ச்சையாக இருந்தது. கையில் இருந்த ஏதாவது பாக்டீரியக்கொல்லியை கொடுப்போம்.

ஆனால் வந்தவர்களில் கொஞ்சமேனும் ஆரோக்கியம் உடையவர்கள் சிலரே. பஞ்சமாசத்தில் கண்டதையும் தின்று ஏற்கனவே பலமுறை வயிற்றோட்டமாகி மெலிந்து உலர்ந்தவர்கள்தான் அதிகம். குழந்தைகளும் முதியவர்களும் ஒரேநாளில் இறந்தார்கள். அதைவிட பரிதாபமாக இருந்தவர்கள் அன்னையர். கைக்கு கிடைத்தவற்றை எல்லாம் குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு பட்டினிகிடந்து பேயுருவம் கொண்டவர்கள். ஆனால் அவர்கள்தான் கடைசியாக செத்தார்கள். அழுதுகொண்டு நிற்கும் பிள்ளைளைப்பார்க்கையில் அவர்களின் உயிர் பலமடங்கு ஆவேசத்துடன் உடற்கூட்டை பிடித்துக்கொண்டது என்று தோன்றியது.

அதிகாலைமுதல் மாலை வரை சாமர்வெல் ஆஸ்பத்திரியில்தான் இருப்பார். அங்கேயே சாப்பிடுவார். இருட்டியதும் அவர் விளக்குடனும் மணியுடனும் கிராமங்களுக்குச் செல்வார். மரணம் குளிர்ந்து விரைத்துக்கிடந்த சந்துகள், இருண்ட குடிசை வீடுகள் தோறும் அலைவார். மரணங்கள் அதிகரித்ததும் புதிய பொறுப்பு வந்து சேர்ந்தது. பெரும்பாலான இடங்களில் நோயாளிகளையும் சடலங்களையும் அப்படியே விட்டுவிட்டு மக்கள் கிளம்பிச் சென்றுவிட்டிருந்தார்கள். பல இடங்களில் குடிசைகளுக்குள் சடலங்கள் கிடந்து அழுகின. அவற்றை நாய்நரிகள் தின்று நீர்நிலைகளில் போட்டுவிட்டால் மரணம் பலமடங்காகிவிடும் என்று சாமர்வெல் சொன்னார். ஒவ்வொரு சடலத்தையும் கண்டுபிடித்து அடக்கம்செய்தாகவேண்டும் என்றார்.

மரணங்கள் அதிகரித்தபோது நான் நடக்கும் என்று எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை. எங்கள் ஆஸ்பத்திரி ஊழியர்களிலேயே இரண்டுபேர் காலரா வந்து இறந்தார்கள். மறுநாள் ஆஸ்பத்திரியை கூட்டவோ பெருக்கவோகூட ஆளிருக்காது என்றே நான் நினைத்தேன். ஆனால் ஒவ்வொருநாளும் ஆட்கள் வந்து சேர்ந்து கொண்டே இருந்தார்கள். ஒருகட்டத்தில் ஆஸ்பத்திரி வேலையாட்களுக்காக சமைப்பதற்கு சர்ச்சுக்கு முன்னால் முற்றத்தில் பெரிய கொட்டகையே போடவேண்டியிருந்தது. அந்த நெருக்கடி நேரத்தில் விசுவாசம் மட்டுமே காவல் என்றானபோது கண்ணெதிரே மனிதகுமாரன் வந்ததுபோல் தோன்றினார் சாமர்வெல். அவரது சொல் தேவ வசனமாகவே பார்க்கப்பட்டது. அவருடன் இருப்பதற்கென்றே தேடிவந்தார்கள்.

இரவில் சாமர்வெல் கையில் மணியுடனும் பைபிளுடனும் சடலங்களைத் தேடிச் செல்லும்போது அவருடன் நூற்றுக்கணக்கானவர்கள் கூடவே சென்றார்கள். இருபக்கமும் புதர்களிலும் ஓடைகளிலும் எல்லாம் மரணம் ஒளிந்திருந்து குளிர்ந்த கண்களால் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற பிரமை எழுந்தது. எப்போதோ ஒருகட்டத்தில் அவர்கள் பாட ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு கற்பிக்கப்பட்ட கிறிஸ்தவ பாடல்கள்தான். இருகைகளையும் கூப்பியபடி கைகளை காற்றில் வீசியபடி உரத்த குரலில் சேர்ந்து பாடிக்கொண்டு செல்லும் அவர்களின் குரல்களும் நிழல்களும் கிராமத்தை கடந்து செல்வதை தூரத்தில் இருந்து கண்டவர்களும் கைகூப்பினார்கள்.

‘என் ஏசுவே, நேசனே, இதய வாசனே
என் தேவனே, வாருமே, எந்த நாளுமே’

எளிமையான மெட்டுக்களில் அமைந்த நாலைந்து பாடல்கள்தான். கிராமத்துக்குள் சென்றதும் பாடியபடியே ஒவ்வொரு வீடாகச் சென்று நிற்பார்கள். வீட்டில் ஆளிருந்தால் அவர்கள் தங்கள் வீட்டுமுன் ஒரு விளக்கை கொளுத்தி வைத்துக்கொண்டு நிற்கவேண்டும். சாமர்வெல்லின் பஜனைக்குழுவைக்காண வீட்டில் இருக்கும் அத்தனைபேரும் வந்து முற்றத்தில் நிற்பார்கள்.சாமர்வெல் தன் கையில் வைத்திருக்கும் சிறிய மரச்சிலுவையால் அவர்களின் தலையை தொட்டு ஆசீர்வாதம் செய்வார். காலரா பற்றிய அவரது உபதேசத்தைச் செய்வார்.

விளக்கில்லா வீடுகளுக்குள் நாங்கள் கைவிளக்குடன் உள்ளே சென்று பார்ப்போம். உள்ளே பிணமிருந்தால் முன்னரே தெரியுமளவுக்கு தேறிவிட்டிருந்தோம். எலிகளின் ஒலி கேட்கும். அசாதாரணமான ஒரு நாற்றம் இருக்கும். அழுக ஆரம்பிக்காத பிணமேகூட வாய்திறந்து அந்த நாற்றத்தை அனுப்ப ஆரம்பித்திருக்கும். இரைப்பையில் இருந்து கிளம்பும் மீத்தேன் நாற்றம் அது என சாமர்வெல் சொன்னார். கெட்டித்துணியை இரு மூங்கில்களில் கட்டி உருவாக்கிய தூளி ஸ்டிரெச்சரில் பிணத்தை ஒரு குச்சியால் நெம்பி உருட்டி ஏற்றுவோம். அதைச்சுமந்தபடி இருவர் கிளம்பிச்செல்ல இருவர் அவர்களுக்கு விளக்குடனும் கம்புடனும் கூடச்செல்வார்கள்.

கடைசியில் சிலசமயம் சாமர்வெல்லும் அவரது துணையாக நானும் மட்டுமே இருப்போம். அதேபோல மணியை அடித்துப்பாடியபடி சாமர்வெல் சென்றுகொண்டிருப்பார். இத்தனை மக்களும் கூடவே வராமல் போனாலும் அவர் செல்வார். அவர் எப்போதுமே தனியாகத்தான் இருந்தார். அவருடன் அவர் கண்ணுக்கு படும் துணையாக மனிதகுமாரன் இருந்திருக்கலாம்.

கடைசியாக கிருஷ்ணன் கோயிலுக்கு முன்னால் உள்ள வீடுகளுக்குச் சென்றோம். பெரிய ஓட்டு வீடுகள். வழக்கத்தைவிட அதிகமாகவே அங்கே பலிகள். வீடுகளுக்கு முன்னால் குத்துவிளக்கு ஏற்றி வைத்து குடும்பத்தினர் காத்திருந்தார்கள். சாமர்வெல் ஒவ்வொருவீட்டு முன்னாலும் நின்று உரக்க ஜெபம் செய்து ஒவ்வொருவரையும் சிலுவையால் ஆசீர்வாதம் செய்தபின் காலரா பற்றி சொன்னார். ஆஸ்பத்திரிக்கு அரிசியும் தேங்காயும் இளநீரும் கொண்டுவந்து கொடுக்கும்படி வேண்டிக்கொண்டார்.

கடைசி வீட்டையும் தாண்டினோம். நான் நிற்கமுடியாதபடி களைத்திருந்தேன். இரவு இரண்டுமணி தாண்டியிருக்கும். இருபதுமைலாவது நடந்திருப்போம். உணவோ தண்ணீரோ உள்ளே சென்று ஏழு மணிநேரம் ஆகியிருந்தது. இனிமேல் மூன்றரை மணிக்குத்தான் ஆஸ்பத்திரிக்குச் செல்ல முடியும். திண்னைகளில் கிடைத்த இடத்தில் அப்படியே விழுந்து நான் தூங்குவேன். சிலசமயம் ஓலைப்பொட்டலங்களில் கட்டப்பட்டு பிணங்கள் அருகே வரிசையாக இருக்கும். பிணம் நடுவே விழித்தெழுவேன். ஆனால் நான் காலை ஆறுமணிக்கு எழுந்து ஈரச்சாக்கு போல கனக்கும் உடலையும் சுழலும் தலையையும் சுமந்தபடி வார்டுக்குச் சென்றால் அங்கே சாமர்வெல் நோயாளிகளை பார்த்துக்கொண்டிருப்பார்.

சாமர்வெல் நின்று ’ஒரு வீடு விட்டுப்போச்சு’ என்றார். நான் சலிப்புடன் ‘இல்லே…எல்லா வீடும் பாத்தாச்சு’ என்றேன். ‘எனக்கு எல்லா வீடும் தெரியும்… ஒரு வீடு விட்டுப்போச்சு’ என்று அவர் திரும்பி நடந்தார். வாழ்க்கையில் முதல்முறையாக நான் அவரை வெறுத்தேன். இந்த வெள்ளைக்கார கிறுக்கனுடன் வாழ்ந்தால் என் வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் அழியும் என்று எண்ணினேன். திரும்பிச் செல்ல நினைத்து அதே இடத்தில் நின்றேன். ஆனால் சாமர்வெல் ஒருமுறை கூட திரும்பி பார்க்கவில்லை. யார் வருவதும் வராததும் அவருக்கு ஒன்றே.

நான் வேறுவழியில்லாமல் அவரைத் தொடர்ந்து சென்றேன். ஆம் நான்கு நாட்களுக்கு முன்னால் அந்த வீட்டுக்கு வந்திருந்தோம். அங்கே வாசலில் விளக்கு எரியவில்லை. தென்னை மரங்களுக்கு கீழே இருண்டு நின்றது சிறிய ஓட்டு வீடு. நான் பீதியடைந்தேன். அங்கே பிணம் இருக்குமென்றால் என்ன செய்வது? மீண்டும் அத்தனை தொலைவையும் நடந்து ஆட்களை அழைத்து வருவதா? அந்த பகுதியில் உள்ள நாயர்களை அழைப்பதா?

சாமர்வெல் வீட்டுமுற்றத்தில் நின்று மணியை அடித்து உரக்க பாட ஆரம்பித்தார். ‘என் ஏசுவுக்கு ஜெயமிருக்கே! தினமே- என் ஏசுவுக்கு ஜெயமிருக்கே.. ’ உள்ளே அசைவுகள் கேட்டன. யாரோ பேசுவது போல. யாரோ அழுவது போல. கதவு திறந்தது. ஒரு நடுவயது நாயர் பெண் எட்டிப்ப்பார்த்தாள். கலைந்த நரைத்த தலையுடன் வெள்ளை வேட்டி மேல்சட்டையுடன் அவள் ஒரு ஆவி போல தோற்றமளித்தாள்

‘பயமில்லை எனக்கே! இனிமேல் பயமில்லை எனக்கே’ சாமர்வெல் உரக்க பாடினார். பெண் ஒரு சிறு புன்னைக்காயெண்ணை விளக்குடன் வெளியே வந்தாள். அதை படிகளில் வைத்துக்கொண்டு கைகூப்பி நின்றாள். சாமர்வெல் அவளிடம் ‘வெள்ளம் சூடாக்கி குடி. மீன் தின்னாதே. கர்த்தர் துணயுண்டு. பயப்படாதே’ என்றார். அவள் ‘ஒந்நும் வேண்ட சாயிப்புசாமியே…நீக்கம்பு வந்நு என்னெயும் அவளெயும் கொண்டு போயால் மதி சாயிப்புசாமியே’ என்றாள். சொல்வதற்குள் அழுகை வந்து அவளை உலுக்கியது. குரல் உயர்ந்தது. அப்படியே படிகளில் அமர்ந்து தலையில் மடேர் மடேரென்று அறைந்துகொண்டு கதறி அலறி அழ ஆரம்பித்தாள். அவளையும் தங்கையையும் காலரா அவ்ந்து கொண்டுசெல்லும்படி ஆசீர்வதிக்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொன்னாள்.

அந்த வீட்டில் இரண்டு சகோதரிகள் மட்டும்தான். ஆண்கள் இல்லை. மூத்தவளுக்கு பிள்ளைகள் இல்லை. இளையவளுக்கு மூன்று குழந்தைகள். மூன்றுநாள் இடைவெளியில் மூன்று குழந்தைகளுமே வரிசையாக காலராவால் செத்துப்போயிருந்தன. அவள் குழறி குமுறி சொல்லி முடிப்பது வரை சாமர்வெல் பொறுமையாக அவளை சமாதானம் செய்து கேட்டார். ‘சாமி வீட்டுக்குள்ளே வர்லாமா? என்றார். ‘அவள்க்கு எழுந்நேல்க்கான் வய்ய சாயிப்புசாமியே’ என்றாள் மூத்தவள்.

உள்ளே சென்றோம். அறைகள் எல்லாம் இருண்டு கிடந்தன. உள்ளறையில் தரையில் அந்தப்பெண் விழுந்து கிடந்தாள். காலடி ஓசை கேட்டு கண் திறந்து பார்த்தாள். கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லை. முகம் பைத்தியக்களையுடன் இருந்தது. சாமர்வெல் அவளையே பார்த்தார். அவள் அவரை கண்டுகொண்டது போல தோன்றவில்லை. நான் ’வெள்ளக்காரசாமியாக்கும் வந்திருக்கது‘ என்றேன்.அவள் ‘ஆ?’ என்றாள். ‘சாமி…சாயிப்புசாமி’. அவள் கண்களில் சட்டென்று அடையாளம் தெரிந்தது. ‘என்றே பொன்னு சாமியே’ என்று அலறியபடி அவள் அப்படியே வெறி கொண்டு பாய்ந்து சாமர்வெல் காலில் குப்புற விழுந்தாள். அவளுடைய நெற்றி தரையில் மடேரென அறைந்த ஒலி என் முதுகெலும்பை சொடுக்க வைத்தது.

சாமர்வெல் குனிந்து அவளை தூக்கி சுவரோடு சாய்த்து வைத்தார். அவள் உடல் ஜன்னி வந்தது போல நடுங்கிக்கொண்டிருந்தது. கைகள் கூப்பியபடி அதிர்ந்துகொண்டிருந்தன. தரையில் ஒருசிறிய மரத்தாலான பூஜையறை. சுவர்களில் சட்டமிட்ட கரிய புகைப்படங்களில் அவளுடைய மூதாதையர் உறைந்த பார்வையுடன் பார்த்து நின்றார்கள். புன்னைக்காயெண்ணையின் சிவந்த ஒளியில் அந்த அறையே ஒரு திரைச்சீலை ஓவியம் போல விரைத்தது. ’என்றே குட்டிகள் போயே சாமீ..எனிக்கு இனி ஜீவிதம் வேண்ட சாயிப்பு சாமீ’ என்று அவள் கதறினாள்

‘பிள்ளைகள் எங்கயும் போகல்லை’ என்று திடமாகச் சொன்னார் சாமர்வெல். சட்டென்று எழுந்து அந்த சுவரில் இருந்த வெண்ணையள்ளிய குழந்தை தோற்றம் கொண்ட குருவாயூரப்பனின் படத்தை எடுத்து அவள் கையில் கொடுத்தார். ’இந்தா இருக்கு உன் குழந்தை. இனி இதாக்கும் உன் குழந்தை…’ மலையாளத்தில் ‘நின்றே குட்டி…இனி இது நின்றே குட்டி’ என்றார்

அவள் அவரை புரியாதவள் போல பார்த்தாள். பின் அந்தப்படத்தைப் பார்த்தாள். திடீர் ஆவேச வெறியுடன் அந்த படத்தை தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். அந்த கண்னாடிச்சட்டமே உடைந்து தெறிக்கும் என்பது போல இறுக்கிக் கொண்டாள். சாமர்வெல் அவள் தலைமேல் கையை வைத்து விட்டு இறங்கி வெளியே சென்றார். என்னால் அவரை தொடர முடியவில்லை. என் கால்கள் தளர்ந்திருந்தன. படிகளிலும் வெளிவாசலிலும் நான் தடுக்கினேன்.

மணியை அடித்தபடி நிமிர்ந்த தலையுடன், திடமான கால்வைப்புகளுடன் சாமர்வெல் சென்று கொண்டிருந்தார். நான் தள்ளாடியும் தடுமாறியும் பின்னால் சென்றேன். கனத்த அடிபட்ட மெல்லிய சருமம் போல என் மனம் தாளமுடியாத வலியால் விம்மித்தெறித்தது. இருட்டு கனமாக ஆகி என்னை நடக்கமுடியாதபடி தடுத்தது. அப்போது என் எதிரே நான் அவரை கண்டேன். நீளமான வெண்ணிற அங்கி இருளில் மெல்ல அலைபாய்ந்தது. உலக துக்கம் முழுக்க நிறைந்த பேரழகுடன் விழிகள் என்னை பார்த்தன. நான் குளிர்ந்து உறைந்து ஒரு கற்பாறை போல நின்று விட்டேன்.

அவர் ஒரு ஓலைச்சிலுவையை என்னை நோக்கி நீட்டினார். காய்ந்த ஓலைச்சிலுவை. பிள்ளைகள் விளையாடுவதற்காகச் செய்து வீசியது. அவரது புன்னகையைக் கண்டு பரவசத்துடன் நான் செயலிழந்து நின்றென். ‘இது உனக்காக’ என்று அவர் சொன்னார். தேவாலய வாத்தியத்தின் இசையே குரலானது போல. நான் அதை வாங்குவதற்காக கைநீட்டி சென்றதும் கால்தள்ளாடி முன்னால் விழுந்தேன். அந்த ஓலைச்சிலுவையும் கீழே விழுந்தது. மண்ணில் இருந்து அதை பொறுக்கிக்கொண்டு நிமிர்ந்தேன். என் முன் அவர் இல்லை, ஆனால் அவர் இருந்ததன் மெல்லிய ஒளி மிச்சமிருந்தது

அப்போதுதான் நான் கண்டதென்ன என்று உணர்ந்தேன். அந்த ஓலைச்சிலுவையை என் நெற்றிமேல் சேர்த்து மாறிமாறி முட்டிக்கொண்டு,கண்ணீர் மர்பில் கொட்ட, உடம்பின் அத்தனை மயிர்க்கால்களும் சிலிர்த்து எழுந்து நிற்க, தரையில் மண்டியிட்டு என் உடலே வெடிக்கும் வேகத்துடன் எனக்குள் கூவினேன். ‘என் தேவனே! என் ஏசுவே ! என் மீட்பனே! என் ஐயா, இதோ உனக்கு நான்! உனக்கு நான் என் தேவனே’

தூரத்தில் சாமர்வெல் சென்றுகொண்டிருந்தார், எனக்கு வெகுதூரம் முன்னால்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *