ஓர் உளவியலும் இரு செல்போன்களும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 6,812 
 
 

‘டீச்சர் உங்களை அதிபர் உடனே வரட்டாம்’

‘சரி! இந்தா வாறேண்டு சொல்லு’

ஆய்வுகூடத்தில் பரிசோதனை ஒன்றைச் செய்து காட்டிக் கொண்டிருந்த ஸரீனா டீச்சர் வாஷ்பேசினில் கழுவிய கைகளை அவசரத்தில் சேலைத் தலைப்பிலே துடைத்துக்கொண்டு காரியாலயத்தை நோக்கி நடந்தாள்.

அது ஒரு சிறிய கலவன் பாடசாலை. முதலாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரைக்கும் இருந்தாலும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.

வெகுஅண்மையில்தான் அந்தப் பாடசாலையில் இருந்து அதன் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பலர் இடமாற்றம் கிடைத்துச் செல்ல அவர்களுக்குப் பதிலாக புதிய ஆசிரியர்கள் சிலர் வந்திருந்தனர். அவ்வாறு புதிதாக வந்த ஆசிரியைகளில் ஒருத்திதான் ஸரீனா டீச்சர்.

‘ இங்க வாங்க டீச்சர்! நாந்தான் வரச்சொன்னேன்’ என்று அழைத்தார் மரியம் ஆசிரியை. ஆசிரியர்கள் புதிதாய் நியமிக்கப்பட்டிருந்தாலும் அதிபரின் வெற்றிடம் மட்டும் இன்னும் நிரப்பப்படாமலே இருந்தது. அதனால் புதிய அதிபர் ஒருவர் வரும்வரை முன்பிருந்த அதிபருக்கு மிகவும் ஒத்தாசையாக இருந்து வந்தவரான மரியம் ஆசிரியையே இன்னும் கடமை அதிபராக இயங்கிக் கொண்டிருந்தார்.

‘என்ன டீச்சர், ஏதும் அவசரமா?’

‘அது.. ஒண்ணுமில்ல, நீங்கதானே பத்தாம் வகுப்புக்கு க்ளாஸ் டீச்சர்? உங்கட க்ளாஸ்ல யாரோ ஒராள் செல்போன் கொண்டு வந்திருக்காங்களாம்.. அது இப்ப வகுப்புலதான் இருக்குதாம்..’ என்று விட்டு நிறுத்தினார், மரியம்.

‘அப்படியா? புதினமாயிருக்கு.. அதுகள்.. அப்படி..’

‘இப்ப உள்ள பிரச்சினைகள் தெரியுந்தானே..? முந்தி அவர் எங்கட அதிபர்இருந்த காலத்தில என்டா இப்பிடியான விசயத்துக்கு என்ன நடந்திருக்குந் தெரியுமா?’

‘………..’

‘நானும் அவருக்குக் கீழே இருந்து வேலை செய்தவதான்…இப்ப கூட நிர்வாகத்துல ஏதாவது சிக்கல் என்டா தனபால் சேர்கிட்ட போன்ல கேட்டுத்தான் நடத்துறேன் தெரியுமா?’

‘அப்ப இதையும் அவருக்கிட்டயே கேட்டிருக்கலாமே…’ என்று வாய்வரை வந்த கேள்வியை வெளியே கூறாமல், ‘சரி, இப்ப என்ன செய்யலாம்..?’ என்று கேட்டாள் ஸரீனா.

‘அது வந்து நேரடியாகப் போய்க் கேட்டால் செல்போனை ஒளிச்சிருங்கள் தெரியுந்தானே? வேற ஏதாவது காரணத்தைச் சொல்லித் தந்திரமாகத்தான் சாமானை வெளியே எடுக்க வேணும். கொஞ்சம் வாறீங்களா போய்ப் புடிப்போம் ஆக்களை?’

‘ஓ! செய்யலாமே. ஆனா உங்களுக்கு ஷுவராத் தெரியுமா டீச்சர்… அங்க போன் இருக்குதென்டு..? யார் வந்து உங்களுக்குச் சொன்னது?’

‘ம்ஹும்!’ மரியம் டீச்சரிடமிருந்து பெருமூச்சொன்று வெளிப்பட்டது. தன்முன்னே அமர்ந்திருந்த ஸரீனாவைத் தீர்க்கமாகப் பார்த்தார் அவர்.

‘இங்க பாருங்க ஸரீனா! நான் ஒரு நாளைக்கென்றாலும் தனபால் சேருகிட்ட இருந்து வேலையும் பிள்ளைகள கண்டுபிடிக்கிற சைக்கோலொஜியும் பழகினவ சரியா? நீங்க அந்த வகுப்புக்குக் க்ளாஸ் டீச்சர். இருந்தும் ஒங்களால அந்தப் பிள்ளைகள்ற நடவடிக்கைகள கண்டுபிடிக்க முடியல்ல. ஆனா நான் இஞ்ச ஒபிசுக்குள்ள இருந்து எழும்பாமலே புடிச்சிட்டன் பார்த்தீங்களா?’ அவவின் முகத்தில் பெருமிதம் தாளவில்லை.

டீச்சர் ஸரீனாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

பழைய அதிபர் தனபாலின் கதையை இந்தப் பாடசாலைக்கு மாற்றலாகி வருமுன்பே நன்கு அறிந்திருந்தாள் ஸரீனா. மரியம் டீச்சர் சொல்வதுபோல் அதிபர் தனபால் திறமையும் கண்டிப்புமுள்ள நிர்வாகிதான். ஆரம்பகாலத்திலிருந்தே மிகவும் பின்தங்கிய நிலையில் கவனிப்பாரற்றுக் கிடந்த இந்தப் பாடசாலையை இன்றுள்ள சிறந்த நிலைக்கு உயர்த்தியவர் அவர்தான்.

அதேவேளை அதிபர் தனபால் எவ்வளவு சிறந்த நிர்வாகியோ அவ்வளவு முசுட்டுப் பேர்வழியும் கூட. பாடசாலை நிருவாக விடயங்களில் சிறு சமரசம்தானும் செய்யாமல் ஒர் இராட்சசன் போன்று நடந்து கொள்பவர். தனக்குக் கீழே பணிபுரிந்த ஆசிரியர்களை அரசாங்க ஊழியர்களாக அல்லாமல் தனது அடிமைச் சேவகர்களாகவே நடாத்தி வந்தவர்தான் அவர். அதிலும் தன்னைத் சுற்றி ஒரு துதிபாடும் சிறுவட்டத்தை அமைத்துக் கொண்டு பாடசாலையை நடாத்தியவர். தன்னைச் சந்திக்கவரும்
பெற்றோர்களைக்கூட அதிகார தொனியில்தான் அணுகுபவர்.
ஆசிரியர்களும் மனிதர்கள்தானே அவர்களுக்கும் உணர்வுகள், வாழ்க்கைத் தேவைகள், அபிலாசைகள் இருக்கும் என்பதெல்லாம் அவருடைய அகராதியில் கிடையாது. அவருக்கு வேண்டியதெல்லாம் தான் நினைப்பதை தனக்குக் கீழே இருப்பவர்கள் இயந்திர மனிதர்கள் போன்று நிறைவேற்ற வேண்டும் என்பது மட்டுமே.

பொதுவாக ஒரு பாடசாலையைத் தரிசிக்க வருகின்ற கல்வி அதிகாரிகள் குழவை நினைத்து அதிபரும் ஆசிரியர்களும்தான், ‘என்னென்ன குறைகளைக் கண்டுபிடிக்கப் போகிறார்களோ’ என்று பயப்படுவது வழமை. ஆனால் தனபால் அதிபரின் பாடசாலையில் மட்டும் வருகின்ற அதிகாரிகளுக்குத்தான் அந்தப்பயம் இருக்குமென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்தளவுக்கு ஆசிரியர்களையெல்லாம் வருத்திச் சாறுபிழிந்து எல்லாவற்றையும் மிகவும் சரியாக வைத்திருப்பார்.

ஆனால் இவ்வளவும் சரியாகச் செய்து வந்தவரான அதிபர் தனபாலுக்கு அவரது இறுதிக் காலத்தில் கிடைத்த பரிசு எது தெரியுமா? இந்தப் பகுதியிலிருக்கும் பெற்றோர்களும் பொதுமக்களும் இணைந்து நடாத்திய ஆர்ப்பாட்டமொன்றின் இறுதியில் அடித்துத் துரத்தப்படாத குறையாக பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்டதுதான் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா சொல்லுங்கள்?

‘என்ன கவனிக்கிறிங்களா ஸரீனா?’

‘ ம்ம்! சரி, சந்தோசம் மரியம் டீச்சர். ஆனா நான் ஸயன்ஸ் லேபுக்குள்ள பிள்ளைகளை ஆபத்தான கெமிக்கல்களோட தனிய விட்டுட்டு இங்க வந்திருக்கிறதை நீங்க இங்கிருந்தே அறிஞ்சிருக்க மாட்டீங்க என்டு நெனைக்கிறேன். கொஞ்சமிருங்க, நான் போய் பரிசோதனையை முடிச்சு வச்சுட்டே வாறேன்.’ என்று எழுந்து செல்லும் ஸரீனாவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் மரியம் டீச்சர்.

***

இடைவேளை முடிவதற்கு இன்னும் சிறிது நேரமே இருந்தது.

சிறிய வகுப்பு மாணவர்கள் பாடசாலை வளாக முற்றத்திலே ஓடித்துரத்தி விளையாடிக் கொண்டிருக்கும் இரைச்சல் காதைப்பிளந்தது. ஆசிரியர்கள் சிலர் ஓய்வெடுக்கும் அறையிலே ஒன்றாக அமர்ந்திருந்தார்கள்.

‘சே! இதுகள் என்ன சத்தத்தையப்பா போடுதுகள்? காது வச்சு இருக்கேலாமாக் கிடக்கு?’ என்று வடையைச் சாப்பிட்டுக் கொண்டே பேச்சை ஆரம்பித்தாள் பாலர் வகுப்புக்குப் படிப்பிக்கும் மத்பா டீச்சர்.

‘இப்ப இடைவேளைதானே? இந்த நேரத்துல இப்பிடி அதுகள் சத்தம் போட்டு கத்தி விளையாடினாத்தான் டீச்சர் வகுப்புல பாடம் நடக்கும்போது கொஞ்சம் அமைதியா இருக்குங்கள்.’ என்றார் நெவில்டன் மாஸ்டர் புன்சிரிப்போடு.

‘நீங்க இப்பிடிச் சொல்றீங்க நெவி? இதுகள் எப்ப பார்த்தாலும் கதைச்சுக் கொண்டுதானே இருக்குதுகள்..

அண்டைக்குப் பார்த்தீங்கதானே நம்ம மீலாத் விழா பங்சன்ல! அதுவரைக்கும் பேசாம இருந்திட்டு சரியா சீஃப் கெஸ்ட்டும் வந்து மேடைக்கு ஏற எப்படிக் கதைச்சுச் சத்தம் போட்டு நம்ம மானத்தை வாங்கிச்சுகளென்டு…’

‘அது சரி டீச்சர், ஆனா அதுக்கு நாங்களும் ஒரு காரணம் தெரியுமா?’ என்று இடைமறித்தார் நெவில்டன். அவர் ஒரு வர்த்தகப் பட்டதாரி ஆசிரியர். ஆனால் தனது சேவைக்காலம் முழுவதுமே கிராமப்புறங்களிலேயே கற்பித்து வருபவர்.

‘பங்ஷன் ஆரம்பிக்க வேண்டியது காலைல 9 மணிக்கு. நாங்க எட்டு மணிக்கே கொண்டுபோய் ஸ்கூல் பிள்ளைகளை ஹோலில இருத்தாட்டி வைச்சிட்டம். அதுவும் வாயே திறக்கக்கூடாதெண்டு அமத்தி வேற வைச்சிருந்தோம். சீப் கெஸ்ட் வந்தது 9.40க்கு. கிட்டத்தட்ட ஒண்டரை மணித்தியாலம் ஒரே இடத்தில குந்த வச்சு பக்கத்துல இருக்கிற அவன்ட வயதொத்தவனோட பேசாத என்று அதட்டி வைச்சா எப்படி இருப்பான்?’

‘அப்ப? நீங்க சொல்றதைப் பார்த்தா..ஹோல்ல கிடந்து அதுகளைச் சும்மா கத்திட்டிருக்க விட்டிருக்கணும்றீங்களா? நல்ல கதை இது!’ என்றாள் தூங்கும் வேளை தவிர மற்ற நேரமெல்லாம் பிரம்புடன் அலையும் சுகைரா டீச்சர்.

‘ஓம் டீச்சர்! சீப் கெஸ்ட் வரும் வரைக்கும் பிள்ளைகளை பக்கத்தில நல்லாப் பேசிட்டிருக்க விட்டிருந்தா, ஒண்டரை அவர்ல கிட்டத்தட்ட பேசவேண்டியதையெல்லாம் பேசித் தீர்த்து ஆவலடங்கியிருந்திருப்பான். பிறகு பங்ஷன் ஸ்டார்ட்
ஆகினவுடனே ‘பேசாதடா!’ என்று அதட்டியிருந்தால் தன்னால அடங்கி அமைதியாகியிருப்பான்!’

சுகைராவின் முகத்தில் ஈயாடவில்லை.

‘அண்டைக்கு நாங்கள் என்ன செய்தோம்? இதை அப்பிடியே தலைகீழாகச் செய்தோம். அதுதான் அவனுகள் பிரம்போட அதுக்குள்ள நாங்க சுத்தித் திரியும் மட்டும் அடங்கியிருந்திட்டு டீச்சர்ஸ் மேடையேறினதும் அப்பிடிக் குமுறிட்டான்கள்’

‘அது மட்டுமில்ல, வளர்ந்த டீனேஜ் பிள்ளைகளையும் அதுகள்ற வயசு, இன்றைய வெளியுலக நிலைமைகள், குடும்பச் சூழ்நிலைகளையெல்லாம் அறிஞ்சுதான் நாங்க கட்டுப்படுத்த வேணும். சும்மா பிரம்பைத் தூக்கிட்டு எப்ப பார்த்தாலும் அதுகளைக் குறைசொல்லிட்டுத் திரிஞ்சாப் போதாது…’

‘அப்ப. அதுகளோட சேர்ந்து, ‘வொய் தீஸ்.. கொலைவெறி கொலைவெறிடீ!’ பாடிட்டுத் திரியச் சொல்றீங்க போல.’ என்று சுகைரா நெவில் மாஸ்டரை ஒரு முறை முறைக்க கலகலவெனச் சிரித்தாள், கிறிஸ்தவம் கற்பிக்கும் கலிஸ்டா டீச்சர்.

‘வை நொட்? நீங்க பாடாட்டியும் பரவாயில்ல… இப்படி ஒரு டேஸ்ட் அவனுகளுக்குள்ள இருக்கு என்று தெரிஞ்சுக் கொள்ளவாவது அந்த பாட்டைப் பத்தி அறியத்தான் வேணும்… அப்பதான் அவனுகளைப் பற்றி அறிஞ்சு ஈஸியா ஹேண்டில் பண்ணலாம்! ‘

‘நெவில் சேர், நீங்க சொல்றது சரிதான். இப்ப இருக்கிற பிள்ளைகள கொஞ்சம் அதுகள்ற போக்கில விட்டுத்தான் பிடிக்க வேணும். இன்னும் நம்ம டீச்சர்ஸ்ல சிலபேர் புதிய டீச்சிங் மெதட்ஸ்க்கு வராம அந்தக் காலத்துலய இருக்கிறாங்க தெரியுமா?’ என்றான் புதிதாக கல்வியியல் கல்லூரியிலிருந்து ஆசிரியர் நியமனம் பெற்ற ஸமீர்.

‘உண்மையாவா ஸமீர்?’

‘பிறகு என்ன? அண்டைக்கு டவுண்ல என்ட ரெண்டாம் வகுப்புப் படிக்கிற மகள்ற டீச்சரைச் சந்திச்சேன். கொஞ்சம் கேளுங்க நெவில் ஸேர், அவ என்னைப் பார்த்துட்டு கேட்டாவே ஒரு கேள்வி!
ஓ…ஹஹ்ஹா…ஹா!’

‘ அப்பிடி என்ன கேட்டா? உங்களுக்கு எப்பிடி இவ்வளவு அழகான பிள்ளையென்டா?’ மடக்கினாள் கலிஸ்டா.

‘ஹலோ..! இந்த நக்கல்தானே கூடாது! அவ கேட்டா ‘ஏன் ஒங்கட மகளை இடது கையால எழுதப் பழக்கியிருக்கிறீங்க’ என்று?’

‘நீங்க அதுக்கு என்ன சொன்னீங்க ஸமீர்?’

‘என்னத்தைச் சொல்றது? எடுயுக்கேஷன் சைக்கோலொஜி சரியாகத் தெரியாத டீச்சர்களும் இருக்கிறாங்களே என்று கவலைதான் வந்தது’

‘ஏன், அவவுக்கு மனித மூளையில உள்ள வலது இடது அரைக்கோளங்களைப் பத்தித் தெரியாதாமா? நீங்க உங்கட கொலிஜ் சைக்கோலொஜி நோட்ஸ்ல இருந்து லெக்சர் ஒண்டை அங்க எடுத்து விட்டிருக்கலாமே ஸமீர்?’ என்று சிரித்தாள் ஸரீனா.

‘அதாவது பரவாயில்ல.. டீச்சர்! இன்னொரு கேள்வியும் கேட்டா அவ! ‘ஏன் வலது கையாலதானே பிள்ளை சாப்பிடுது. அதுபோல எல்லாத்தையுமே வலது கைக்கே பழக்கியிருக்கலாமே’ என்று! அந்த டீச்சர் பத்து வருசமா ப்ரைமரிக்குப் படிப்பிக்கிறாவாம்’

‘அட! எந்த ஸ்கூல்ல..ஸமீர் இதெல்லாம்?’ ஆச்சரியமாய் கேட்டாள் கலிஸ்டா.

பதில் சொன்னான் ஸமீர்.

‘ஓ! அந்த ப்ளுசாறிகள்? அவங்கதானே மத்தவங்களுக்கெல்லாம் நொட்டை பிடிக்கிற ஆக்கள். அம்மா, அப்பா, அம்மம்மாக்கெல்லாம் இன்டர்வியூ வச்சு பிள்ளைகளைச் சேர்க்கிறவங்க. சுத்தியிருக்கிற ஏரியாவுல உள்ள கெட்டிக்காரப் பிள்ளைகளாப் போய் டவுண் ஸ்கூல்கள்ல போய் குவியுது. அதுகளுக்கே படிப்பிக்க இவ்வளவு பாடுபட்டா நாங்க எவ்வளவோ மேல் தெரியுமா?’

‘உங்களுக்குத் தெரியுமா? அங்க இரண்டாம் வகுப்புப் பிள்ளைக்கு இங்லீஷ் க்ளாஸ் ஒண்டு போட்டு அதில டிக்டேஷனுக்கு குடுத்திருக்கிற சொல் எது தெரியுமா? university! இது எப்படியிருக்கு?’

‘அது அந்தச் சின்னப் பிள்ளைக்கு விளங்குமா…? பொருந்துதா இல்லையா என்டதெல்லாம் பற்றி அவங்களுக்கு அக்கறையில்ல. அதுகள்ற உள்ளார்ந்த திறமைகளை படிப்படியா தூக்கிவிடாம பிஞ்சுகளை வெறும் மனனம் செய்கின்ற மெஷினுகளா மாத்திறதுதான் டீச்சர்கள்ற வேலையாகிட்டுது.’ என்றார் நெவில் மாஸ்டர்.

‘என்ன சேர் நீங்க சொல்றதைப் பார்த்தா என்னமோ தனியே டீச்சர்மார்தான் பிழை என்ற மாதிரி இருக்கே.. வெளிநாடுகள்ல இருக்கிற மாதிரி படிப்புகளைக் கொண்டு வாறாங்க..ஆனா அதுக்கேத்த மாதிரியான வசதிகள் எல்லா ஸ்கூல்லயும் இருக்கா என்ன?’

‘நீங்க சொல்றது சரி, கலிஸ்டா. இங்க உள்ள நம்ம கீழைத்தேய கலாசாரத்துக்கு ஏத்த மாதிரியான தொழில் கல்வியை இந்த அரசாங்கம் தெரிவு செய்யாம எங்கேயோ இருக்கிற இதைப்பத்தியெல்லாம் அறியாத சில எஜமானர்கள் சிபாரிசு செய்யுற ஸிஸ்டத்தைத்தான் இறக்குமதி செய்யுறாங்க.. அதற்கும் கூட அரைகுறை வசதிகளை ஏற்பாடுகளை மட்டும் வச்சுகிட்டு இங்க அறிமுகப்படுத்தி பழசும் இல்லாமல்போய் புதுசும் சரிவராமலாகி கடைசியில தோல்வியிலதான் முடியப்போகுது’

‘சே! நம்மட பிள்ளைகள்ற எதிர்காலத்தை நெனைச்சா பயமாயிருக்குடாப்பா?’

‘சரி, அதெல்லாம் பிறகு பயப்படலாம். முதல்ல இன்டவெல் முடிய பெல்லை அடிக்கச் சொல்லுங்கடாப்பா’ என்றபடி ஓய்வறையினுள்ளே நுழைந்த கடமை அதிபர் மரியம் டீச்சர், ‘நெவில் சேர், சுகைரா டீச்சர் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் கூட நின்று ஸரீனாவோட டீச்சரின் வகுப்பு செல்போன் விசயத்தைப் பாருங்க! ஒருவரையும் இடையில ஸ்கூல்லருந்து போக விடாதீங்க!’ என்று கேட்டார்.

இடைவேளை நிறைவு மணி ஒலித்து ஓய்ந்தது. ஆசிரியர்கள் அனைவரும் கலைந்து தத்தம் வகுப்புகளுக்குச் செல்லலானார்கள்.

***

‘பத்தாம் வகுப்புப் பிள்ளைகள் எல்லாரும் புத்தகங்களை எல்லாம் பேக்ல எடுத்து வைங்க பார்ப்போம்!’

‘ஏன் டீச்சர், இண்டைக்கு ஸ்கூல் நேரத்தோட விடப்போகுதா?’

‘இல்ல…ஆங்! உங்களளை மட்டும்தான் அனுப்பப் போறோம்!’

‘ஹைய்யா! டேய் சதீக், ஸ்கூல் விடப் போவுதுடா! போல் வச்சிருக்கியா?’

‘யேய்! சத்தம்! எல்லாரும் அவரவர்ர பேக்குகளைத் தோளில போடு.. வரிசையா ஸ்டாப்ஃ றூமுக்கு நட!’

அவர்கள் தங்களுக்குள்ளே கசமுசவென்று குழப்பமாய் பேசிக்கொண்டு வந்தார்கள்.

‘ நெவில் சேர், ஸ்டாப் றூமுக்குள்ள பிள்ளைகள் வந்ததும் எல்லாரையும் உள்ளெடுத்து பேக்குகளையெல்லாம் கழற்றி மேசைக்கு எடுங்க. ஆம்பளப் பிள்ளைகளை வேறயா பொம்பிளைப் புள்ளைகளை வேறயா தனித்தனி வரிசையா நிப்பாட்டி வைங்க.. சும்மா எதையோ காணல்ல என்று சொல்லி பேக்குகளைச் செக் பண்ணலாம்.’

மற்றவர்கள் தயாராக ஸரீனா மட்டும் சிறிது தயங்கினாள்.

‘மரியம் டீச்சர், நான் இப்பவும் உங்களுக்கிட்ட கேட்கிறேன். என்ட வகுப்புல அப்படியான பிள்ளைகள் யாரும் இல்ல. அதுகள் வளர்ந்த பிள்ளைகள். இப்பிடி செக் பண்றது வந்து அவ்வளவு… அவங்களுக்கிட்ட இருக்கிறது ஷுவர்தானா டீச்சர்?

‘ஐயோ! ஸரீனா! நீங்க இங்க வந்து கொஞ்ச காலந்தான் சரியா? நான் இஞ்ச பத்து வருசமா இருக்கிறேன் தெரியுமா? என்ட ஸேர்வீஸ் தெரியுமா ஒங்களுக்கு? நான் நிச்சயமாச் சொல்றேன். அது அதுகளுக்கிட்டதான் இருக்கு. சும்மா ஆத்திரத்தைக் கிளப்பாம நான் சொன்னதைச் செய்ங்க பார்ப்போம்!’

‘சரி டீச்சர், நீங்க சொன்னாச் சரிதான்’

‘ஸரீனா டீச்சர், என்ட கெஸ்ஸிங்படி அது அங்க உள்ள பொம்பிளைப் பிள்ளைகளுக்கிட்ட யாருக்கிட்டயோதான் இருக்கு. நானும் வேணும்டா வந்து நிக்கிறேன். நீங்க செக் பண்ண ரெடியாகிற நேரம் நான் பொம்பிளைப் பிள்ளைகளுக்குப் பின்னால நின்று நோட் பண்றேன்! எதுக்கும் நெவில் சேரை விட்டு பொடியன்களை நோட் பண்ணச் சொல்லுங்க. அதுகள்ற ரியாக்ஷன்லயே தெரிஞ்சுடும். இதை எப்படியும் புடிச்சாக வேணும். இப்பிடித்தான் தனபால் சேர் ஒருமுறை…’

‘அதெல்லாம் இருக்கட்டும்! இப்ப வாங்க நீங்க சொன்னதைச் செய்யலாம்’ என்றபடி வேகமாய் நகர்ந்தாள் ஸரீனா.

தன்னுடைய வகுப்புப் பிள்ளைகளை திருடர்களைப் போல நடாத்துகின்றோமே எனும் கோபம் அவளுக்கு.

ஆசிரியர் ஓய்வறையினுள்ளே கம்பி வலை அடித்திருந்த யன்னலோரமாக மாணவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டு குழப்பமாக நின்றிருந்தார்கள்.

ஸரீனாவுக்குக்குச் சொல்வதற்கே சங்கடமாகத்தானிருந்தது.

‘பிள்ளைகள் உங்கட பேக்கையெல்லாம் கழற்றி மேசையில வைங்க. இங்க ஒரு டீச்சர்ட சின்னப் பேர்ஸ் ஒண்டைக் காணேல்லயாம். மத்த வகுப்புகள்ல எல்லாம் பார்த்தாச்சு.. எனக்குத் தெரியும் நீங்க எடுத்திருக்க மாட்டீங்க…சும்மா எதுக்கும் உங்களோடதுகளையும் ஒருக்காப் பார்த்திடுவோமே என்ன?’

என்று ஒப்புக்குக் கேட்டாள் ஸரீனா டீச்சர்.

‘ஸரினா இங்க கொஞ்சம் வாங்க!’

மரியம் டீச்சர் ஸரீனாவைத் தனியாக அழைத்துச்சென்று, ‘பொம்பிளைப் பிள்ளைகள்ற பேக்லதான் இருக்கு விசயம்! நீங்க வீணா பொடியன்களில மெனக்கெட வேணாம்!’

‘எப்படி டீச்சர் அவ்வளவு நிச்சயமாச் சொல்றீங்க?’ என்று வாய்தவறிக் கேட்டுவிட்ட பின்புதான் ‘ஆண்டவனே! திரும்பவும் ஸேர்வீஸ்… தனபால் ஸேர்.. அது இது என்று மனுஷி ஆரம்பிச்சிடப்போகுதே’ என்று நாக்கைக் கடித்துக் கொண்டாள் ஸரீனா.

‘அதுவா? இப்ப நீங்க உள்ளே நின்று கதைச்சிட்டிருக்கும் போது அப்போது சொன்னபடி உங்க கேள்ஸுக்குப் பின்னால நிண்டு அதுகள் ரெண்டுக்கும் தெரியாம கதைச்சிட்டிருந்ததை கேட்டேன்.’

‘யாரு? என்ன கதைச்சுதுகள் டீச்சர்?’

‘ வேற யாரு? அந்த ஹஸானாவும் ஜெனிபரும்தான்! ‘அந்தா! நம்மட போன் மாட்டப் போகுதுடி பாரு’ என்று தங்களுக்குள்ளே கிசுகிசு என்று பேசிக் கொண்டிருந்ததை இந்தக் காதால கேட்டேன். அவளுகள்தான் ஸரீனா ஆக்கள். இந்த வயசுலயே போனும் ஆக்களும். ஆட்டக்காரிகள்!’

‘என்ன மரியம் டீச்சர், வளர்ந்த பிள்ளைகளை டீச்சர்ஸ் நாங்களே இப்பிடிச் சொல்லலாமா?’

‘சும்மா இருங்க ஸரீனா! உங்களுக்குத் தெரியாது. அதுகள் ரெண்டு பேருக்கும் சின்ன வகுப்பில இருந்தே பாடம் எடுத்திருக்கேன். பார்த்திட்டுத்தான் வாறேன். இப்ப வளர்ந்தது பார்க்கக் கொஞ்சம் வடிவா வந்ததும் அவளுகள் ரெண்டு பேருக்கும் திமிர்! எது படிப்பிச்சாலும் கேள்வி கேக்கிறதும் புதிசா ஏதும் சொல்றதும்… பெரிய கெட்டிக்காரிகளென்ற திமிர். இண்டைக்கு மாட்டட்டும்.’ என்று கழுத்து நாளமெல்லாம் புடைக்கக் கறுவிக் கொண்டே மீண்டும் ஆசிரியர் ஓய்வறைக்குள் வேகமாய் போனார் மரியம் டீச்சர்.

‘சரி.. சரி, பொடியன்கள் எல்லாரும் வகுப்புக்குத் திரும்பிப் போங்க!’ என்று கட்டளையிட்ட மரியம் பையன்கள் பேக்குகளை எடுக்க ஆரம்பித்ததும், ‘இல்ல..இல்ல! பேக்குகளை வச்சிட்டுப் போங்க.. பிறகு வந்து எடுக்கலாம்’ என்றார்.

ஆனால் பையன்கள் அதற்கு உடன்படவில்லை. பேக்குகளை எடுத்துச் செல்லாவிட்டால் தாங்களும் இங்கே இருக்கத்தான் வேண்டும் எனக்கூறி அடம்பிடித்தனர். இப்போது என்ன செய்வது என்று புரியவில்லை மரியம் டீச்சருக்கு.

‘இருங்கடா வாறேன்! உங்களுக்கும்..!’ அப்படியே விட்டுவிட்டு மீண்டும் ஸரீனாவிடம் வந்து, ‘ஸரீனா, இவனுகள் ஏன் பேக்கை விட்டுட்டுப் போக மாட்டேனென்றான்கள்…ஒருவேளை அந்த ஆட்டக்காரிகள் இவனுகளிட்டத்தான் போனைக் குடுத்து வச்சிருக்கிறாளுகளோ?’

‘……………’

‘சரி, பரவாயில்ல. அவனுகளும் இருக்கட்டும். நாம செக் பண்ணுவோம். எப்படியும் மாட்டத்தானே போறாங்க.’ என்று மரியம் டீச்சரே களத்தில் இறங்கி பேக்குகளைத் கிளறத் தொடங்கினார்.

அவவுக்கு உதவியாக வேறுவழியின்றி சுகைரா டீச்சரும் ஸரீனாவும் தேடலில் இறங்கினாள்.

மற்ற மாணவிகளின் பேக்குகளையெல்லாம் சும்மா சாட்டுக்குப் பார்த்து விட்டு ஹஸானாவினதும் ஜெனிபரினதும் புத்தகப்பைகளை மட்டும் ஒவ்வொரு புத்தகமாக வெளியே எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் மரியம்.

சுற்றியிருந்த அனைவரும் மரியம் டீச்சரின் முகத்தையும் கைகளையும் ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஹஸானாவின் பேக்கைத் துளாவிக் கொண்டிருந்த மரியம் டீச்சரின் முகம் சட்டெனப் பிரகாசித்தது.

‘ ஹ! அந்தச் சாமான் இங்க சைட் பேக்குல இருக்கு ஸரீனா டீச்சர்! எப்படி? நான் சொன்னேனில்ல! ‘ என்று ஹஸானாவின் பேக்கிலிருந்து கையை எடுக்காமலே கொக்கரித்தார் மரியம் டீச்சர். ஹஸானாவின் புத்தகப்பையின் சைட் பக்கற்றுகளில் ஒன்று செவ்வக வடிவில் புடைத்துத் துருத்திக் கொண்டிருந்ததை எல்லோருக்கும் தெரியுமாறு உயர்த்தி வேறு காட்டினார்.

‘ இந்தா, இங்கேயும் ஒண்ணு இருக்கு டீச்சர்’ என்றாள் சுகைரா. அவள் காட்டிய ஜெனிபரின் ஸ்கூல் பேக்கின் சைட் பக்கற் ஒன்று செல்போன் ஒன்றின் வடிவத்திலே புடைத்துத் தள்ளிக்கொண்டு தெரிந்தது.

‘அட! ரெண்டா? ஓகோ! ஆளுக்கு ஒண்ணு வேற வைச்சிருக்காங்களோ?’ என்று பல்லைக் கடித்தார், தனபால் அதிபரிடம் உளவியல் பயிற்சி பெற்ற மரியம் டீச்சர்.

எல்லோரும் நகத்தைக் கடித்துக் கொண்டு காத்திருந்தார்கள். அங்கு மயான அமைதி நிலவியது.

இரண்டு பேரின் பேக்குகளின் சைட் பக்கற்றுகளும் மேசையில் வைத்து ஒன்றாகத் திறக்கப்பட்டதும் மேசையில் ஓசையுடன் வந்து விழுந்தது, கலர் பேனைகளினால் வர்ணம் தீட்டிய செவ்வக வடிவான மரப்பலகையில் செய்த இரு விளையாட்டுக் கைத்தொலைபேசிகள்!

– *Published on ‘Mallikai’, the leading SriLankan Monthly magazine.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *