ஓர் அதிசயம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 8, 2023
பார்வையிட்டோர்: 1,839 
 
 

(1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பொன்னும் மணியும் பூண்டவனிடம் ஆண்டவன் இல்லை; பட்டும் ஜரிகையும் தரித்தவனிடம் ஆண்டவன் இல்லை; காஷாயம் தரித்துக் கையில் ஜபமாலையுடன் கண் மூடியிருக்கும் கபோதிகளிடம் ஆண்டவன் இல்லை!-சேற்றில் இறங்கி மாட்டை ஓட்டி ஏர் பிடித்து இரைக்க இரைக்க உழும் ஏழையிடம்தான் ஆண்டவன் இருக்கிறான்; பட்டப் பகலில், பதைபதைக்கும் வெய்யிலில் ஒட்டிய வயிறுடன் பல்லைக் கடித்த வண்ணம் கல்லை உடைக்கும் பாட்டாளியிடம்தான் ஆண்டவன் இருக்கிறான்!” என்கிறார் ரவீந்திரர்.


ஒருவிதத்தில் இது உண்மையாகத்தான் இருக்கிறது. இன்று உலகத்தில் பிரபலமடைந்திருக்கும் பல பிரபலஸ்தர்களின் செல்வாக்கிற்கும் செல்வத்திற்கும் ஈடு இணையற்ற இன்பத்திற்கும் யார் மூல காரணம், எது ஜீவநாடி என்று சிறிது நேரம் கண்ணை மூடி, அகத்தை நோக்கி நிஜத்தைப் பார்ப்போமானால், அவன் ஏழை என்பதாய்த்தான் இருக்க முடியும்; அவனுடைய ஏதும் அறியாத சுபாவமும், வெள்ளை உள்ளமும், கள்ளங்கபட மற்ற சிந்தையும்தான் காரணமாயிருக்க முடியும்; எவனாயிருந்தாலும் அவன் சொன்னதை நம்பும் செய்வதைப் போற்றும் அந்தச் சிந்தனையில்லாத ஜீவன்களாய்த்தான் இருக்க முடியும்.

“உன்னைக் காப்பாற்றுகிறேன்!” என்று சொல்லிக் கொண்டு வரும் ஒவ்வொருவனும், உண்மையில் அவனால் தானே காப்பாற்றப்படுகிறான்? அப்படியிருக்கும்போது அவனிடம் ஏன் ஆண்டவன் இருக்க முடியாது? இல்லை, அவனே தான் ஏன் ஆண்டவனாயிருக்க முடியாது?

இப்படிப்பட்ட ஏழை மக்களின் மத்தியிலே, என்ன காரணத்தினாலோ ஊரோடு வாழும் பேறு பெருத அந்த ஊமை ஜனங்களின் சேரியிலே, வஞ்சகனான. இந்தப் பஞ்சையும் வசித்து வந்தேன்.

ஆம்; நானும் ஒருவிதத்தில் வஞ்சகன் தான்!- வயிற்றுப் பிழைப்புக்கு வேறொரு வழியும் காணாமல் என்னுடைய அரைகுறைப் படிப்பை ஆதாரமாக வைத்துக்கொண்டு, வெளி வேஷத்தைப் பலமாகப் போட்டுக் கொண்டு,நான் அந்தச் சேரியிலே ஒரு சிறு பள்ளிக் கூடத்தை ஆரம்பித்தேன்; ஆதரவும் கிடைத்தது.

அடியேன் வயிற்றுக் கவலையும் ஒருவாறு நீங்கியது.

நிலைமை இப்படியிருக்க, அந்தச் சேரிவாசிகள் என்னைப் பற்றி என்னவெல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்!

என்னுடைய வயிற்றுத் தொண்டை தேசத்தொண்டு என்றும், தெய்வத் தொண்டு என்றும் போற்றினார்கள்; மாதம் அரை மரக்கால் நெல்லுக்கு எழுத்தறிவித்த என்னை இறைவன் என்று புகழ்ந்தார்கள்; என்னுடைய வாழ்நாட்கள் ரொம்ப ரொம்ப அருமையானதென்றும், அந்த வாழ்நாட்களை யெல்லாம் நான் அவர்களுக்காகத் தியாகம் செய்து விடுகிறேனென்றும் சாதித்தார்கள்! அப்படியானால் அவர்களுடைய வாழ்நாட்கள் அருமை பெருமையற்றதா?

ஐயோ! உண்மையை அறியாமல் அவர்கள் என்னைப் புகழும்போதெல்லாம் என்னுடைய சுயநலம் என்னையே சுட்டெரிக்கிறதே!


ஒரு நாள் அந்தச் சேரியைச் சேர்ந்த வெள்ளை என்பவனிடம் நான் ஓர் அதிசயத்தைக் கண்டேன். அன்று என்னுடைய குடிசையில் வழக்கம்போல் பல பிள்ளைகள் உட்கார்ந்துகொண்டு, ‘அனா ஆவன்னா, இனா ஈயன்னா’ என்று சாய்ந்தாடியபடி இரைந்து படித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுடைய இரைச்சலையும் மீறி, “போணி பண்ணுங்கோ, சாமி!” என்ற குரல் வாசலிலிருந்து வந்தது.

“யாரடா, அது? வெள்ளையா?”

“ஆமாங்க; கறுப்பியும் கூட வந்திருக்கா!”

“ஓஹோ! இரண்டு பேருமாகக் கிளம்பிவிட்டீர்களா?” என்று கேட்டுக்கொண்டே, நான் வெளியே வந்தேன்.

“ஆமாம், சாமி! எப்பவும் நாங்க அப்படித்தான் கிளம்பறது!’ என்று சொல்லிக்கொண்டே, இருவரும் தங்கள் தலைமீதிருந்த கூடைகளை இறக்கிக் கீழே வைத்தார்கள்.

ஒரு கூடையில் கத்தரிக்காய்; இன்னொரு கூடையில் வெண்டைக்காய். நான் வெள்ளையிடம் ஓரணாவை எடுத்துக் கொடுத்தேன். கறுப்பி ‘வாத்தியாரய்யா’ என்பதற்காகத் தன் கை கொண்ட மட்டும் காயை வாரித் திண்ணையின்மேல் வைத்தாள்.

“ஏது வெள்ளை, இதெல்லாம்?”

“மவராசன் காளியப்பக் கவுண்டரு நிலத்திலே வாரத்துக்குப் பயிரு வச்சேனுங்க!”

“அப்படி யென்றால்?”

“அவருடைய நிலத்திலே நான் எதையாச்சும் பயிரிட வேண்டியது; விளைவிலே அவருக்குப் பாதி, எனக்குப் பாதி!”

“என்ன! அவருடைய மண்ணையும் உன்னுடைய உழைப்பையும் ஒரே மாதிரி மதிக்கும் அவரா மவராசன்?”

“இல்லையா, சாமி?”

“மண்ணும் மனிதனும் ஒன்றா? இதிலே உங்களுக்கு என்ன லாபம்?”

“இந்த ஒரு சாண் வயிற்றுக்குத் தினம் ஒருவேளை கஞ்சி கிடைக்கிறதுதான் லாபங்க!”

“இவ்வளவுதானா? – உம், இந்தக் காய்கறிகளெல்லாம் எவ்வளவு போகும்?”

“அஞ்சு, ஆறு போகுங்க!”

“என்னடா, இப்பொழுதுதான் காய் கறிக்கெல்லாம் நல்ல கிராக்கியாச்சே?”

“இருந்தா எங்களுக்கு என்ன, சாமி? இடத்தைத் தேடிப் போனா, ‘உங்கக் கொலமென்ன, கோத்திர மென்ன?’ ன்னு கேக்கறது நம்ம ஊரு வழக்கமாச்சுதுங்களே! அந்த மாதிரி, நாங்க அங்காடிக் கூடைக்காருதானுங்களே? அநியாய விலை கேட்பாங்களே! அப்படியும் கால் ஓயறவரை நடந்து, தொண்டைத்தண்ணி வத்தறவரை கத்திக் கொஞ்சம் பிகுவோடேயே நாங்க பேரம் பண்ணிப் பார்ப்போம்; பொழுது சாஞ்சிட்டா வந்த விலைக்குப் போட்டுட்டு வந்துடுவோம்!”

“ஆமாம், இந்தக் காய்களுக்காக நீங்கள் எத்தனை நாட்கள் உழைத்திருப்பீர்கள்?”

“ஏறக்குறைய மூணு மாசம், சாமி!”

“என்னடா, மூணு மாசம் உழைத்ததற்கா அஞ்சும் ஆறும் கூலி?”

“இல்லை சாமி! இன்னும் கொஞ்ச நாளைக்கு ஏறத்தாழக் கிடைச்சுக்கிட்டு இருக்குமில்லே? – இந்தத் தடவை பூச்சி வேறே எங்க பங்கிலே கொஞ்சம் புண்ணியம் கட்டிக்கிட்டுதுங்க!”

“ஆமாம்; அந்தப் பூச்சியோடே நீங்களும் கொஞ்சம் புண்ணியம் கட்டிக் கொண்டீர்களாக்கும்! காய்கள் பசும் பிஞ்சுகளாயிருக்கும்போது உங்களுடைய நாக்கில் ஜலம் ஊறியிருக்கும்; தினசரி கொஞ்சம் கொஞ்சமா அறுத்துச் சாப்பிட்டுவிட்டிருப்பீர்கள்! உங்களிடம் வாங்கும் என்னைப் போன்றவர்களுக்கெல்லாம் என்னதான் காசு கொடுத்தாலும் அவ்வளவு பசும் பிஞ்சுகளாகக் கிடைக்குமா?”

“ஐயோ! கவுண்டரு பார்த்தா சும்மாயிருக்க மாட்டாருங்களே?”

“ஏன்?”

“ரெண்டு பேருக்கும் பங்கு ஆச்சுதுங்களே?”

“இருந்தாலும் அவர் உன்னோடு உழைக்கிறாரா, என்ன? நீ தானே உழைக்கிறே? இரண்டு காயை அறுத்துத் தின்பதற்குக்கூடவா உனக்குச் சொந்தமில்லை?”

“அந்தச் சொந்தம் அவருக்குத்தானுங்க!”

“அப்படியானால் பங்கு போட்டுக்கொண்ட பிறகாவது இந்தக் காய்களை நீங்கள் ஒரு கை பார்த்திருப்பீர்கள், இல்லையா?”

“இல்லை, சாமி! எல்லாத்தையும் அப்படியே எடுத்துக்கிட்டுப் போய் வித்தாலும் இந்த மூணு மாசமா நாங்க அங்கங்கே வாங்கித் தின்ன கடனை அடைக்க முடியுமான்னு யோசனையா யிருக்குதுங்களே!”

“சரியாய்ப் போச்சு! நீங்கள் தினசரி என்னத்தைத் தான் தொட்டுக்கொண்டு சாப்பிடுகிறீர்கள்?”

“இதோ பாருங்க, சாமி! இந்தக் கையிலே கஞ்சி; அந்தக் கையிலே கொஞ்சம் புளியங்காய்த் தொகை யலுங்க!” என்றான் அவன்.

“இது என்ன அதிசயம்! உன்னுடைய உழைப்பை விட என்னுடைய காசுக்குத்தான் மதிப்பு அதிகம் போலிருக்கிறதே!” என்றேன் நான்.

“அதிலே என்ன சந்தேகம்,சாமி!” என்று சொல்லிய வண்ணம், அவர்கள் கூடைகளைத் தூக்கித் தங்கள் தலை மேல் வைத்துக்கொண்டு நடையைக் கட்டினர்.

ஒரு நிமிஷம் ஒன்றும் புரியாமல் நான் அவர்கள் சென்ற திக்கையே இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.மறு நிமிஷம், “அவர்கள் வீட்டில் புளியங்காய்த் தொகையல்; எங்கள் வீட்டில் கத்தரிக்காய்க் கறி, வெண்டைக்காய் சாம்பார்!” என்று முணுமுணுத்துக் கொண்டே உள்ளே சென்றேன்.

– முல்லைக் கொடியாள், மூன்றாம் பதிப்பு: 1952, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *