ஓய்வு என்பது ஆரம்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 5,434 
 
 

ராமபத்ரன் ஒரு கம்பெனியின் அதிகாரியாக இருந்தார். கம்பெனி கணக்கு விசயம் தன்கணக்கு விசயம், ஆகியவற்றிற்கு வங்கிக்கு செல்லும் போதெல்லாம் வாங்கசார் என்று அன்புடன் அழைத்து உரிமையோடு பழகும் நாராயணன், கடந்த ஒரு வருடங்களாக கண்டுகொள்வதே இல்லை.இதற்கும் முன்னர் போல் கம்பெனி விசயமாக போவதில்லை, தன்னுடைய சேமிப்பு கணக்கு விசயமாகத்தான் போகிறார்.

அப்படி போகும் போது நாராயணனை பார்த்தாலும் சின்ன சிரிப்புடன் சரி அவர் பாட்டுக்கு வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். ராமபத்ரன் எப்பொழுதும் மரியாதையை எதிர்பார்ப்பவர் இல்லை என்றாலும், இதுவரை நட்புடன் பேசி பழகியவர் கண்டு கொள்ளாமல் இருப்பது மன வேதனையை கொடுத்தது.

சரி அவருக்கு ஆயிரம் வேலை இருக்கும், நம்மை எல்லாம் கண்டு கொள்ள நேரம் கிடைக்காது என்று ஆரம்பகாலத்தில் நினைத்துக் கொண்டார். போகப் போக அவருடைய கண்டு கொள்ளாத மனப்பான்மையை பார்த்தவர் எதனால் இப்படி ஆகிவிட்டார் என்று யோசித்து கடைசியில் கண்டு பிடித்துவிட்டார். முன்னெல்லாம் அவரை நட்புடன் அழைத்து பேசியதற்கு காரணம் அவர் உத்தியோகத்தில் இருந்தது. பெரிய அதிகாரியின் நட்பு தேவை என்று மரியாதை காண்பித்திருக்கிறார். போன வருடம் தான் ஓய்வு பெற்றுவிட்டாரே. இனி இவர் நட்பு எதற்கு என்று நினைத்திருக்கலாம்.

ராமபத்ரனுக்கு சிரிப்பு வந்தது. மனிதனுக்கு நட்பு கூட பதவி பார்த்துத்தான் வருகிறது. அவர் அந்த வங்கியில் சேமித்திருந்த பணம் எள்ளளவும்கூட குறையாமல் இப்பொழுதும் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார். என்ன மாதம் பெரிய தொகை போட்டுக் கொண்டிருந்தவர் இப்பொழுது போட முடிவதில்லை, அவ்வளவுதான். அப்படி இருந்தும் நட்பைவிட பதவி என்பதுதான் உலகின் மரியாதையாக இருக்கிறது.

ராமபத்ரன் பெரிய அதிகாரியாக இருக்குபோதே தனியாக ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்தான். பணியில் இருக்கும் போது ஆரம்பித்தால் நன்றாக இருக்காது என்பது தெரிந்து ஓய்வுபெறுவதற்காக காத்திருந்தார்.

ஓய்வு பெற்று ஒரு வருடமும் கடந்துவிட்டது. இதற்கு காரணம், ஓய்வு பெற்றவுடன் தொடங்கி இருந்தால் பணியில் இருக்கும் போதே பார்க்கவேண்டியவர்களை பார்த்து சரிகட்டி இருப்பார். கம்பெனி பணத்தைகூட எடுத்திருக்கலாம் என்று பேசிவிடுவார்களோ என்ற பயத்தில்தான் இந்த ஒருவருடம் காத்திருந்தார். இனி புதிய தொழில் தொடங்க வேலைகளை ஆரம்பிக்க வேண்டியதுதான் என்று முடிவெடுத்தார்.

ஆரம்பகாலத்தில் வாங்கி போட்டிருந்த இடத்திலேயே, தனது சிறிய அளவில் தனது மனைவி பெயரில் தொழிற்சாலையை தொடங்கினார். அப்பொழுதுதான் இந்த வங்கிக்கு வந்து தனது சேமிப்புக்களை எடுத்தார். அப்பொழுதுகூட நாராயணன் அவரை கண்டு கொள்ளவில்லை, இனி என்ன ஓய்வு பெற்றுவிட்டார். செலவுக்கு பணத்தை எடுக்கிறார் என்றுதான் நினைத்தார்.

ராமபத்ரன் அரசாங்க சலூகையில் தரும் கடன் தொகைக்கு விண்ணப்பித்தார், அதற்கு முன் தனது தொழிற்சாலைகளை விரிவுபடுத்த தனது சேமிப்புபணத்தையே முதலீடாக்கினார்.

அவர் பணியில் இருக்கும் போது கணக்கு வைத்திருந்த வங்கியின் கிளை ஒன்று இவர் தொழில் தொடங்கும் இடத்திலேயே இருந்ததால் இவரால் அந்த சேமிப்பு எண்ணை இந்த வங்கிக்கு மாற்றி, தொழில் தொடங்க கடனுக்கு விண்ணப்பித்திருந்தார். எதிர்பார்த்த கடனும் ஆறுமாதங்களில் அவர் கைக்கு கிடைத்தது. அதற்கு முன்னரே தனது சேமிப்பையே போட்டிருந்ததால் வட்டி என்ற பெரும் தொல்லை அவருக்கு தொந்தரவை தரவில்லை.

இப்பொழுது முழு மூச்சாய் தனது தொழிற்சாலையின் தயாரிப்பு வேலைகளை ஆரம்பித்து விட்டார். தரமான தயாரிப்புக்களை தகுதியான ஆட்களை வைத்து தயாரித்தார். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்து விளம்பரமும் கொடுத்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக அவர் ஆரம்பித்த தொழில் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இப்பொழுது இவர் வங்கியில் கடனையும் திருப்பி கட்ட ஆரம்பித்துவிட்டார். சேமிப்பையும் அதிகப்படுத்தினார்.

பாங்கியில் பணி புரிந்துகொண்டிருந்த நாராயணனுக்கு பதவி உயர்வு வந்தது. மானேஜராக அவரை வேறொரு கிளைக்கு மாற்றிவிட்டார்கள். அந்த கிளையை பற்றி தலைமை அலுவலகததில் விசாரித்து பார்த்தார். அந்த கிளை “இண்டஸ்ட்ரியல் ஏரியாவில்” இருப்பதால் தொழிற்சாலைகளின் கணக்கு வழக்குகள் நிறைய இருக்கிறது என்று சொன்னார்கள். அது மட்டுமல்ல நான்கைந்து கம்பெனிகள் நமது வங்கியில் நல்ல முதலீட்டையும் செய்து கடனும் பெற்று அதற்கான வட்டியும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள், அதில் முதலாவதாக “பவித்ரா இண்டஸ்ட்ரீஸ்” என்று சொன்னார்கள்.

நாராயணன் மானேஜராய் பதவி ஏற்றபின் அங்குள்ள வங்கி ஊழியர்கள் பவித்ரா இண்டஸ்ட்ரீஸ் பற்றி பெருமையாக சொன்னார்கள். நாராயணனுக்கு அந்த கம்பெனியின் எம்.டியை பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஒருநாள் அவர் அறைக்குள் வங்கிஊழியர் ஒருவர் வந்து சார் பவித்ராஇண்டஸ்ட்ரீஸ் எம்.டி.வந்திருக்காரு, உங்களை பாக்கணும்னு வெயிட் பண்ணறாரு என்று சொல்ல நாராயணன் அடடா நானே அவரை பாக்கணும்னு நினைச்சுகிட்டு இருக்கேன் சொல்லிவிட்டு அவரை வரவேற்க வெளியே வந்தவருக்கு அதிர்ச்சியாக இருந்தது “ராமபத்ரன்” நின்று கொண்டிருந்தார். ராமபத்ரனுக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *