“வா ரேவதி. சார் யார் தெரியுமா?” தன் அருகில் அமர்ந்து கொண்டிருந்த டிப் டாப்பான ஆசாமியை தன் கையால் சமிக்ஜை செய்தபடி கேட்டதலமயாசிரியை சுந்தரி சொன்னார். “யஸ்வஸ்ரீ மெட்ரிகு லேஷன் ஸ்கூல் கரஸ்பாண்டென்ட்! “
வந்திருப்பது யார் என்று தெரிந்ததும் ஆடிப் போனாள் ரேவதி. அவர் எதற்காக இங்கு வந்திருக்கார் என்பது புரிந்து போக பயத்தில் உடம்பு வேர்த்து விட்டது.
“ரேவதி மேடம், நீங்கள் ஆறாம் வகுப்பு ஏ பிரிவின் வகுப்பாசிரியையாகவும் இருக்கிறீர்கள். இல்லையா ?”
கரஸ்பாண்டென்ட் கேள்விக்கு “ஆ..மா..ம் சார்!” என்று மென்று விழுங்கினாள்.
“எவ்வளவு நாளா வேலை பார்க்குறீர்கள்?”
“ரெண்டு வாரமா?”
“ரெண்டு வாரத்துக்குள் இவ்வளவு கெடுபிடி உங்களுக்கு வந்தது ஆச்சரியமாயிருக்கு!”
“சார் மன்னிக்கணும். நீங்கள் கேட்பது எனக்கு விளங்கவில்லை!” கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள் ரேவதி.
தலைமையாசிரியர் குறுக்கிட்டுச் சொன்னார். “ரேவதி, உன் வகுப்பு மாணவன் ரவிக்கு தண்டனை கொடுத்திருக்கிறாயே, அது விஷயமாகத்தான் சார் பேசுகிறார்.”
“சார், கெடுபிடி ஒன்றும் கிடையாது. விஷயம் என்னன்னா அந்த ரவி வீட்டுப் பாடம் எழுதறதில்ல. கேட்டால், ‘நான்தான் பரிட்சையில எல்லா பாடங்களிலும் நல்ல மார்க் வாங்கி பாஸ் செய்றேனே.. அப்புறம் வீட்டுப் பாடம் எழுதச் சொல்லி ஏன் என்னை டார்ச்சர் பண்றீங்க?’ அப்படின்னு என்னைப் பார்த்து கேட்குறான். ஆசிரியைப் பார்த்து ஒரு மாணவன் இப்படிக் கேட்கலாமா சார்? அதனால் வகுப்பு முடியறவரை அவனை பெஞ்ச் மேல ஏறி நிற்கச் சொன்னேன். வகுப்பாசிரியைங்குற பொறுப்புல நான் கண்டிச்சது தவறா சார்?”
தலைமையாசிரியருக்கு வேர்த்துக் கொட்டியது. ரேவதி செய்தது சரியென்றாலும் இவ்வளவு தைரியமாக அதை வெளிப் படையாக கூறியிருக்க வேண்டாம் என்ற எண்ணம் தோன்றியது.
யோசனையில் ஆழ்ந்திருக்கும் கரஸ்பாண்டென்ட் முகத்தை சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்த தலைமையாசிரியைக்கு அவரின் ரியாக்ஷ்ன் எப்படி இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது .
கரஸ்பாண்டென்ட் அடுத்ததாக பேசும் முன் தலைமையாசிரியை முந்திக் கொண்டார்.
“ரேவதி, ரவி இன்னாருடைய மகன்னு தெரியுமா?”
“ஆரம்பத்தில் தெரியாது மேம். ஆனால் ரவிக்கு பனிஷ்மென்ட் கொடுத்ததுக்கப்புறம் கார்த்திக் என்கிற மாணவன் ரவி இன்னார் மகன் என்றும் அதனால் கொஞ்சம் கவனமாக இருக்கும்படியும் சொன்னான்.”
“சாருடைய மகன்தான் அந்த ரவின்னு தெரிந்த பிறகு நீ கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்க வேண்டும். ஒரு ஆசிரியைக்கு கெடுபிடி, கண்டிப்பு இதெல்லாம் அவசியம்தான். அதற்கு ஆள் தராதரம் இருக்கு. அந்த வகையில் நீ செயல் பட்டிருக்க வேண்டும். ஆனால் அதாரிட்டியைக் கையில் எடுத்துக்கிட்டிருக்கே. அதன்படி
நடந்துக்கிட்டிருக்கே. சரி, இப்போ சார் வந்திருக்கார். என்ன பதில் சொல்லப் போறே?”
குற்றவாளி கூண்டில் தன்னை நிற்க வைத்து தலைமையாசிரியை சுந்தரி பேசுவது போல் நினைத்தாள் ரேவதி. ஒரு மாணவனைக் கண்டிக்க ஆசிரியைக்கு உரிமை இல்லை என்பதுபோல் இருக்கிறது இவரின் பேச்சு! வீட்டுப் பாடம் எழுதாமல் இருப்பது ஒழுக்கம் தவறுவதாகும். அதற்கு அப்படி தவறு செய்த மாணவனை கண்டிப்பது குற்றம் என்றால், மேலும் மேலும் தவறுகள் செய்வான். அவனைப் பார்த்து மற்ற மாணவர்கள் கெட்டுப் போவர். அதற்கு இடம் கொடுக்காமல் தான் நடந்து கொண்டது தவறு என்றால் அது தன்னைப் பொறுத்தவரை சரிதான் என எண்ணினாள்.
முதன் முதலாக பள்ளியில் சேரும் சமயம், தந்தையிடம் ரேவதிஆசிபெறும்போது தந்தை சொன்ன அறிவுரை நியாபகம் வந்தது.
“ரேவதி, நீ விரும்பி ஏத்துக்கிட்ட டீச்சர் உத்யோகம் மிகவும் புனிதமானது. பலவித மாணவர்களை மேனேஜ் பண்ணவேண்டியிருக்கும். சிலர் ஒழுங்காக நடந்து கொள்வர். ஒரு சிலர் திமிர் பிடித்தவர்களாக இருப்பர். தெனாவுட்டா நடந்து கொள்வர். அவர்கள் தவறு செய்தால் நீ பனிஷ்மென்ட் கொடுக்கத் தயங்காதே. எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நேர்மையாகவும் நாணயமாகவும் நடந்து கொள்வதிலிருந்து பின் வாங்காதே.”
தன் தந்தை சொன்ன அறிவுரை எவ்வளவு தீர்க்கமானது என்பதை நினைக்கும் பொழுது புல்லரிப்பு ஏற்பட்டது ரேவதிக்கு.
வருவது வரட்டும் என்று மனதில் உறுதி ஏற்பட தலைமையாசிரியை மற்றும் கரஸ்பாண்டண்டையும் மாறி மாறி பார்த்தவள், பிறகு வாய் திறந்தாள்.
“சார், மன்னிக்கணும். என்னைப் பொறுத்த மட்டில் மாணவர்கள் கட்டுப்பாட்டுடணும், ஒழுக்கத்துடணும் இருக்கணும்னு எதிர்பார்க்கிறேன். அவர்கள் ஒழுக்கம் தவறும்போது நான் கண்டிப்பாக இருப்பேன். அதனால் ஒழுக்கம் தவறிய ரவியை கண்டித்து பனிஷ்மென்ட் கொடுத்ததில் தவறு எதுவும் இல்லைங்குறது என் அபிப்ராயம்!”
திட்ட வட்டமாக பயமின்றி ரேவதி சொன்ன பதிலைக் கேட்டு தலைமையாசிரியருக்குத் தூக்கி வாரிப் போட்டது. ரவியின் தந்தையிடமே இப்படிப் பேச அவளுக்கு ஏற்பட்ட துணிவு, அசட்டு தைரியம் கண்டு அச்சம் கலந்த மலைப்பும் வந்தது. கூடவே ரேவதி மீது என்ன நடவடிக்கை எடுக்கச் சொல்லப் போகிறாரோ என்ற திகிலும் ஏற்பட்டது.
“சரிம்மா, நீங்கள் போகலாம்.” கரஸ்பாண்டென்ட் மொட்டையாக இப்படிச் சொன்னதும் ரேவதிக்கு புஸ்ஸென்றானது. அங்கிருந்து அகன்றாள். ஆனாலும் தலைமையாசிரியையிடம், தன் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கச் சொல்லுவார் கரஸ்பாண்டென்ட் என நினைத்தாள். ஆனால் பயப்படவில்லை. எதற்கும் அவளின் துணிவுதான் காரணம்!
தலைமையாசிரியைக்கும் ஒன்றும் புரியவில்லை. ரேவதியை கரஸ்பாண்டெண்ட் வாய் வார்த்தைகளால் திட்டாமல் அல்லது எச்சரிக்கையும் செய்யாமல் இருந்தது புரியாத புதிராக இருந்தது.
ஆனாலும் புலி பதுங்குவது பாய்வதற்கு என்று கரஸ்பாண்டென்ட்டின் மேலோட்டமான நடவடிக்கையைக் கண்டு பயந்தார் தலைமையாசிரியை.
அன்று மாலை வீட்டுக்குப் புறப்படும் முன்னால் வழக்கம்போல் தலைமையாசிரியையிடம் சொல்லிக் கொண்டு போக அவர் அறைக்குள் நுழைந்தாள் ரேவதி .
“எக்ஸ்யூஸ் மி மேடம்!”
ரேவதி குரல் கேட்டு தலை நிமிர்ந்தவர், “வா ரேவதி!” என்றார் புன்னகையுடன்.
“நான் புறப்படுறேன்…” என்றவள், தயங்கித் தயங்கி, “மேடம், நாளைக்கு நான் ஸ்கூல் வரலாமா, வேண்டாமா?” மனதில் குறு குறுத்த கேள்வியைக் கேட்க, தலைமையாசிரியையின் புன்னகை புன்சிரிப்பாக மாறியது.
“என்ன கேள்வி இது ரேவதி! தாராளமாக வரலாம்.” குறு குறுப்புடன் பார்த்தவாறு, புன்சிரிப்பு குறையாமல் சொன்னார் சுந்தரி.
‘அப்படி என்றால் தன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையா? ‘ ரேவதி மனதில் குழப்பம்.
அவள் மனதில் இருப்பதை அறிந்து கொண்டதுபோல் தலைமையாசிரியை பேசினார்.
“ரேவதி, காலையில் நடந்ததை வெச்சு நீ பேசறே…கரஸ்பாண்டெண்ட் உன்னை வகுப்புக்குப் போகச் சொல்லிவிட்டு என்ன பேசினார் தெரியுமா?”
நெஞ்சு படபடக்க சுந்தரி வாயிலிருந்து அடுத்து வரவிருக்கும் வார்த்தைகளைக் கேட்க தயாரானாள் ரேவதி.
“நீ செய்த காரியத்துக்கு உனக்கொரு தண்டனை கொடுக்கச் சொன்னார்.”
திடுக்கிட்ட ரேவதி, “மேடம், என்ன சொல்றீங்க?” தவிப்புடன் கேட்டாள்.
“யெஸ், இன்னார் பையன்னு தெரிந்தும் நீ கொஞ்சம் கூட பயமில்லாமல் பனிஷ்மென்ட் கொடுத்தது; அதை தைரியமாக கரஸ்பாண்டென்ட்டிடமே சொன்னது இதையெல்லாம் கண்டு உனக்குள் இருக்கும் நேர்மையயும், துணிச்சல் மிக்க தைரியத்தையும் பாராட்டியிருக்கார். இதுதான் அந்தத் தண்டனை!”
தொடர்ந்து “ரேவதி, உண்மையில் கரஸ்பாண்டெண்ட் ஒரு ஜெம்! மனசாட்சி உள்ளவர். அதனால் ஒழுக்கம் கெட்டு நடந்ததால் தன் மகனுக்கு கிடைத்த தண்டனை சரிதான் என சமாதானம் அடைந்தவர்…கடைசியாக உன்னை மாதிரி எல்லா டீச்சர்ஸூம் செயல்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் வைத்துவிட்டுச் சென்றார்,
என்றால் பார்த்துக்கோயேன்!” என்று முடிக்க,
கேட்ட ரேவதிக்கு நெஞ்சில் அடித்துக் கொண்டிருந்த புயல் ஓய்ந்துபோய் பெருத்த ஆயாசத்தைக் கொடுத்தது.