ஓநாய்கள் கவனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 24, 2023
பார்வையிட்டோர்: 1,421 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாசலை நெருங்குவதற்கு ஏழு எட்டு அடிகள் இருக்கும் போதே, காலணிகளை ஒதுக்குப் புறமாகக் சுழற்றி விட்டு, உள் ளத்தைப் புனிதமாக்கி, ஒன்றுபட்ட மனத்தோடு ஆச்சிரமத்தை நோக்கி அடி எடுத்து வைத்த என்பவித்திரத்திலேயே நான் மிதந்து செல்கிறேன். அந்த நிலையில், என்கூட எனக்குப் பக்கத்தில் வந்து கொண்டிருந்த நண்பர்கள், என்னைப் பொறுத்த வரையில் அங்கில்லை.

உள்ளே நுழைகிறேன்.

“வாருங்கள்” என்று வரவேற்கும் ஒரு குரல் என் காதுப் பறைகளை மெதுவாய்ச் சீண்டுகிறது.

யாழ்ப்பாணத்திலே சர்வ மதத்தினரும் தலைவணங்கும் ஆத்மீகமாய், அந்த ஆத்மீகத்திலே தன் பூர்வாசிரமத்தையே மறந்து விட்டுத் துல்லியமான ஓர் ஒளியாய் விளகிய ‘பிள்ளையார் சுவாமி’யின் ஆச்சிரமத்துள் நான் நிற்கிறேன்.

நடுவிலே புகைந்து கொண்டிருந்த ஊதுபத்திக் கற்றையின் நறுமணத்தையும், புதிதாகச் சாணத்தால் மெழுகிடப்பட்டிருந்த தளத்தின் வாசனையையும் பிய்த்துக் கொண்டு, என் மூக்கில் ஆத்மீகம் பரிமளித்தது. கண்கள், அந்த ஆத்மீகத்தின் மூலத்தைத் தேடி, நான்கு ஓரங்களையும் இரண்டு முறை சுற்றி வந்து அதைக் காணாத ஏக்கத்தில் அங்கிருந்தோர் மேல்படிந்தன.

தெருவோரத்தில், ஒழுங்கையிலே நெடுஞ்சாணையாய்க் கிடந்து கால்களைத் தொட்டுக் கண்களில் வைத்துக் கொள்கிற பக்தர்களுக்கு, அவரவர் பக்குவத்துக்குத் தக்கபடி, ஆத்மீகத் தையோ – லௌகீகத்தையோ, ஆசியாக – வசையாக வழங்கி நின்ற ஆவல் இப்பொழுது கரைந்து கொண்டிருந்தது.

அரையிலே வரிந்து கட்டியிருந்த சால்வைகளோடு பல பெரிய மனிதர்கள் ஒரு புறமாக ஏதேதோ மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நானும், என்னோடு வந்த நண்பர்களும், அங்கு முன்னரே வந்து கூடியிருந்த, எங்களுக்குத் தெரிந்த சிலரோடு ஒரு பக்கத்தில் அமர்ந்து கொண்டோம்.

எதிர்பார்ப்பு, அந்த ஆச்சிரமத்தின் புனிதமான சூழலிலே, நிமிஷங்களின் கழிவிலே பெருமலையாய்க் கனத்தது.

அரையிலிருந்த சால்வைவை அவிழ்த்து, மறுபடியும் இறுக வரிந்து கட்டிக் கொண்டே எழுந்து நின்ற ஒரு பெரிய மனிதர், ஒரு கல்லூரியில் அதிபராயிருந்து இளைப்பாறியவர், சுவாமிகள் இருக்கிற மான்தோல் ஆசனத்தைப் பார்த்து வணக்கஞ் செலுத்தி விட்டு ஆரம்பித்தார்.

“சுவாமிகளின் ஆசீர்வாதத்தோடு நாம் தொடங்கப் போகிற புனிதமான சேவைக்குரிய இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தேவார பாராயணத்தோடு தொடங்குவோம்.”

எனக்குப் பக்கத்திலிருந்து ஒருவரை அதிபர் பார்க்க, அவர் எழுந்து நின்று, “திருச்சிற்றம்பலம்” என்று தேவார பாராயணத் தைத் தொடங்குகிறார். எல்லோரும், என்னோடு வந்த ஒரு கத்தோ லிக்க நண்பர் உட்பட, எழுந்து நிற்கிறோம்.

இறுதியில், “எல்லா உயிர்க்கும் இறைவா போற்றி” என்று அங்கு நிலவிய புனிதத்தையே புனிதமாக்கி அமர்ந்தோம்.

நின்று கொண்டேயிருந்த அதிபர் மறுபடியும் தொடங்கினார்.

“சுவாமிகள் ஆசீர்வாதத்தோடு இந்தப் பெரிய கைங்கரி யத்தை, புனிதமான இத்தொண்டை ஆரம்பிக்கிற இந்தச் சந்தர்ப் பத்திலே, சுவாமிகள் இங்கு பிரத்தியஷமாக இல்லாவிட்டாலும் கூட, அவரது ஆசியும் கருணையும் எங்கள் மேல் கவிந்து, எம்மை வழி நடத்தி, வெற்றிதரும் என்பதில் எனக்கும், இங்குள்ள நண்பர் களுக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. ‘எங்கும் பிரகாச மாய்’ இருக்கும் எங்கள் நடமாடுந் தெய்வத்தின் ‘அலகிலா விளைாட்’டுக்களில் இதுவும் ஒன்று.”

தன்னை மீறி வந்த புன்னகையில் திளைத்து, தன்னையே ஒரு கணம் மறந்து நின்ற அதிபர், புன்னகையைக் கலைக்காமலே தொடர்ந்தார்:

“எங்களை இங்கு கூட்டிய திருவருளின் நோக்கம் பற்றி எல்லோரும் அறிவீர்கள். அந்த நோக்கமே நமக்கெல்லாம் இடப் பட்ட பணியுமாகும். இந்தப் பணி, சுவாமிகளின் கருத்தாக எழுந்ததே எங்கள் பெரும்பேறாகும்.

“யாழ்ப்பாணத்திலேயுள்ள சாராயத் தவறணைகளை எல் லாம் பொதுசன வாக்கெடுப்பின் மூலம் ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே எமக்குக் காட்டப்பட்டிருக்கும் நோக்காகும். இதற்குரிய பணி, இங்கு கூடியிருக்கிற, பொறுக்கி எடுக்கப்பட்ட எங்களைச் சார்ந்திருக்கிறது.”

அதிபர் கூறிய – நாங்கள் அங்கு வந்து கூடிய – நோக்கம் பற்றி எனக்கு முன்னரே தெரியும். இளமை வீறு தூண்ட, தேர்ந் தெடுக்க ஒரு துறை தெரியாத குருட்டுப் போக்கில், மக்களிடையே புகுந்து ‘தொண்டு’ செய்ய வேண்டும் என்று உள்ளே துடிக்கிற துடிப்போடு ஆசிரியனாகச் சேர்ந்து விட்ட அந்நிய நாட்கள். எங்கள் கல்லூரித் தலைவர் என்னையும், இன்னும் மூன்று ஆசிரி யர்களையும் ‘பொறுக்கி’ எடுக்கும் போதே, எம்முன்னால் வைக் கப்படப் போகிற இந்தப் பணி பற்றிச் சொல்லியிருந்தார். ஆனா லும், இதனை இந்த இளைப்பாறிய அதிபரின் பக்குவமிகுந்த குரலில் கேட்டபோது, உடலிலே ஒரு சிலிர்ப்பு; உள்ளத்திலே ஒரு பரவசம்; சூக்குமத்திலே (சுவாமிகளுக்குத் தெரிந்துவிடக் கூடாதே!) எனக்கே பிடிபடாத ஒரு பெருமை.

இப்பெருமையுள் மூழ்கி நான் வெளிப்படுகையில் பேச் சொலி கேட்கிறது:

“திருநெல்வேலி, சாவகச்சேரி, சங்கானை போன்ற இடங் களிலெல்லாம் உள்ள தவறணைகளே முதலில் எமது இலக்குக்கு உரியவை… அதிலும் முதன் முதலில் திருநெல்வேலியே நமது மதுவிலக்குப் போர்க்களமாகும். ஒல்லாந்தருக்கு மாட்டுக்கறி கொடுக்க மறுத்துத் தாய்நாடு சென்று பேரும் புகழும் (ஒ, பேரும் புகழும்!) ஈட்டிய ஞானப்பிரகாசரது தாயகமான இக்கிராமமே எமது முதற்களமாவது மிகப் பொருத்தமானதும் உற்சாகந் தருவது மாகும்.”

-சபையிலே, தம்மை மறந்த நிலையில் கைதட்டி, ஆச்சிர மத்தின் புனிதத்துக்குக் களங்கமாய் விடுமோ என்ற அச்சத்தில், இடையில் நிறுத்திவிட்ட சிலரின் அவலம் ஒரு கணம் தேங்குகிறது.

“இங்குள்ள எல்லோரும் இந்தத் தவறணை ஒழிப்பு – மது ஒழிப்புப் போராட்டத்தில் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். ஆனாலும் கிராமத்துக்குக் கிராமம் – இடத்துக்கிடம் செயலாளராக அந்த அந்த இடத்துக்குரியவரை நியமித்தல் பொருத்தமாகும் என எண்ணுகிறேன்.

“முதற் களமான திருநெல்வேலிக்கு, அவ்விடத்தைச் சேர்ந்த திருவாளர் செயலாளராக இருந்தால் மிக நல்லது என்பது என் அபிப்பிராயம்”

எல்லாக் கண்களும் என்மேல் படிகின்றன. அந்தரத்தில் பறப்பது போன்ற உணர்ச்சியில் நான் மிதந்து மீள்கிறேன்.

“அவரே பொருத்தமானவர்” என்று பல குரல்கள் ஆசிகளாக வந்து என்மேல் குவிகின்றன.

“எமது இப்போராட்டத்துக்குத் தூய்மையான உள்ளமும் சேவா உணர்ச்சியுமுள்ள இளைஞர்களே முன்னணியில் நிற்க வேண்டும். இது எவ்வளவு முக்கியமோ, அது போலவே எமக்கு நிதியும் முக்கியமானது. பிரசாரத்துக்கு, வாக்கெடுப்பின் போது போக்குவரத்துக்கு, தொண்டர்களின் உணவுக்கு என்று நாம் எதிர்பாராத விதத்தில் எத்தனையோ செலவுகள் முன் வந்து நிற்கும்.

“ஆனால் அது பற்றி நாங்கள் யோசிக்கவே வேண்டிய தில்லை. காரணம் இதோ இருக்கிற திருவாளர் முத்துத்தம்பி அவர்களே நிதி சேர்க்கிற சிரம்மத்தை எங்களுக்கு வைக்காமல், முழுச்செலவையும் தாமே ஏற்றுக் கொள்ள முன் வந்திருக்கிறார். முதலில் சுவாமிகளின் ஆசீர்வாதத்தோடு இன்று அவர் தரப் போகிற தொகை…”

முத்துத்தம்பியரை அதிபர் திரும்பிப் பார்க்கிறார்.

அடக்கமே உருவாக, அரையில் கட்டிய தும்பைப்பூப் பரமாஸ் சால்வை அவிழ்ந்து விழுகிற நிலையில், நெற்றியில் துலங்கும் சந்தனப் பொட்டோடு முத்துத்தம்பியார் எழுந்து சட் டைப் பைக்குள் கைவிட்டு ஒரு ‘செக்’கை எடுத்து கீழே தயாராக இருந்த வெற்றிலை பாக்குப் பழத்தின் மேல் வைத்து, பவித்திரமாக நீட்டுகிறார்.

மான் தோலுக்கு வணக்கஞ் செலுத்தி, அதிபர் அதனை வாங்கிக் கொள்கிறார்.

எதிர்பார்ப்பு, மௌனத்தில் புடைத்து நிற்கிறது.

அதிபர் ‘செக்’கைப் பார்த்து விட்டு, “ஓ, இரண்டாயிரம்! இரண்டாயிரம் ரூபா!” என்றார்.

சொற்கள் எங்களுள்ளே மின்சாரமாய் இறங்க, உடல் புல்லரித்தது.

அதிபரின் சொற்கள் உணர்ச்சியில் குழைந்து மறுபடியும் வெளிவந்தன.

“திருவாளர் முத்துத்தம்பியை இங்கு பலரும் அறிவார்கள். ஆனாலும் அவரை அறியாதவர்களுக்காக, அவரை அறிமுகப் படுத்தவேண்டியது கடமை. இந்தப் பெரியவள்ளல், இந்தத் தொகையையும் தந்து, இன்னும் தருவதாக வாக்களித்திருக்கிறார், தனக்குத் தானே குழி தோண்டுவது போல. ஏனென்றால் இவர் தான் இந்தக் குடாநாட்டிலுள்ள சகல தவறணைகளையும் குத்த கைக்கு எடுத்திருக்கிறவர். காந்தியத்தின் மேலுள்ள தீவிரமான பற்றினால், தனக்குத் தானே குழி தோண்டுகிறவர் போல”

தலைவர் முடிக்கவில்லை. உணர்ச்சிப் பெருக்கில் எல் லோரும் “முத்துத்தம்பியர் வாழ்க!” என்று கோஷமிட்டார்கள்.

எல்லோரையும் கையெடுத்துக் கும்பிட்ட முத்துத்தம்பியரின் கண்களில் கண்ணீர் துளித்திருந்தது.

காந்தி என்ற மகாசக்தியின் பிடியில் என்னை இழந்து ஆறு ஆண்டுகளுக்கு முன் அந்தப் பேரொளி உலகை அந்தகாரத்தில் விட்டுச் சென்றபோது, யாழ்ப்பாணக் குடா நாடு முழுவதுமே யுகயுகாந்தரங்களாய்த் திரண்டு குவிந்த துக்கத்தின் உருவெடுத்து, பண்ணைக் கடலோடு சங்கமமாகச் செல்கிற சனசமுத்திரமாய்ப் பிரவகித்துச் சென்ற போது, அதில் ஒரு பரமாணுவாய், ‘உடுத்தக் கதராடை இல்லையே’ என்ற இல்லாமையின் அரிப்போடு சென்ற நான் இன்று கதராடை பூண்டு பிரசாரத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

உண்மை, அஹிம்ஸை என்பவற்றில் என்னைத் தோய்த்து காந்தீயத்தை எனது முழுமையான உயிர்ப்பாக்க எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை என் உயிரே இறுகப் பற்றிக் கொண்டி ருந்தது. சிந்தனை, செயல், மூச்சு எல்லாவற்றிலுமே காந்தீயம் தோய்ந்து கிடந்தது.

இதற்குப் பின்னணியாய் அமைந்து, என்னை இந்தத் துறையிலே உந்திவிட்ட இன்னும் ஒரு சம்பவமும், பம்பரமாய் நாங்கள் செய்த பிரசாரத்தின் மத்தியிலே, நான் எனது கதராடை யைப் பார்த்துக் கொள்ளுகிற சந்தர்ப்பங்களிலே அடிக்கடி என் மனத்திரையில் படங்காட்டும்.

ஆறுவருடங்களுக்கு முன், காந்தி என்ற காந்தி அணைந்த போது, பண்ணையை நோக்கிச் சென்ற சனசமுத்திரத்தில் என் னோடு மணியும் வந்து கொண்டிருந்தான். எங்களுக்கு முன்னால், “வைஷ்ணவ ஜன தோவை” இசைக்கும் இசையாகி, பெண்களின் கூட்டமொன்று இசையாகி, பெண்களின் கூட்டமொன்று வீதியின் ஒரு நீளத்தில் வழிந்துகொண்டிருந்தது.

ஊதுபத்தி, சாம்பிராணி என்பவற்றிலிருந்து கிளம்பிய வெண் புகை, அப்பெண்கள் அணிந்திருந்த வெள்ளைவெளேரென்ற உடைகளிலிருந்து பிறந்து, வானவெளியில் வியாபித்து நிற்கிற மகாத்மாவுக்கு அஞ்சலி செலுத்துவது போல மேலே பரவிற்று.

அந்தக் கூட்டத்தில் ஒருத்தி, நடை தளர்ந்து, வீதியின் ஓரத்தில், சாக்கடையின் விளிம்பிலே காலை வைத்தவள், “ஐயோ” என்று நான் கதற முன்னரே, சாக்கடையுள் குதித்துவிட்ட மணியின் தோளிலே விழுந்து துவண்டு கிடந்தாள்.

பின்னால் தங்கி, இரண்டு பெண்களோடு மணியும் நானுமாக அப்பெண்ணுக்கு முதலுதவி செய்த காரணத்தால், அடுத்த ஆண் டில் மணியையும் அந்தப் பெண் மாலாவையும் மணப் பந்தலில், “கஸ்தூரிபாயும் காந்தியும் போல் வாழ்க!” என்று வாழ்த்துகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

கல்யாணமான ஆறுமாதத்தில், உடற் பயிற்சி ஆசிரியராக இருந்த மணி, அதை உதறி விட்டு ‘நேவி’யிலே சேர்ந்துவிட்டான். மூன்று மாதத்துக் கொருமுறை யாழ்ப்பாணம் வந்து போவான்.

ஒரு முறை அவன் வந்திருந்த போது அவனைத் தேடிப் போயிருந்தேன்.

உள்ளே ஏதோ கலவரம்.

“இதென்னடா உன் கோலம்?” – மணியின் தகப்பனாரின் ஏக்கத்தில் குழைந்த கேள்வி.

“யூ, மை டியர் பப்பா, யூ மைன்ட் யுவபிஷினெஸ்”. தடுமாறுகிற வார்த்தைகளைத் தொடர்ந்து ஒரு பேய்ச் சிரிப்பு.

தொங்கிய முகத்தோடு மணியின் தகப்பனார் வெளியேறு கிறார். நான் வாசலில் நின்றதைக் காண அவர் கண்களில் நின்ற கண்ணீர்ப்படலம்.

நான் அறையினுள் எட்டிப் பார்க்கிறேன்.

நிலத்தில் வாந்தித்துவிட்ட சகதியின் மேல் அலங்கோலமாக முகட்டைப் பார்த்துக் கொண்டு, மணி கிடக்கிறான். ஒரு மூலையில் நின்று கட்டை விரலை வாயுள் திணித்துக் கடித்து அழுகையை அடக்கிக் குமுறிக் கொண்டு மாலா நிற்கிறாள். அவளது நிலையும் சாராய நெடியும் என்னை வெளியே தள்ளுகின்றன.

“ஐயோ, காந்தி!” என்று ஓலமிடுகிற என் இதயத்தைப் பொத்திக் கொண்டு வெளியேறினேன்.

இந்த நினைவில் பிறந்த உத்வேகத்தில், என் கிராமத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் மட்டுமல்ல, இலங்கை முழுவதும் – உலகம் முழுவதும் உள்ள தவறணைகளை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற ஒரு நினைவு என்னுள் மகாமேருவாய் வளர்ந்து நின்றது.

ஓ மாலா, உனக்கும் உன் போன்ற பெண்களுக்கும் வாழ வழி வகுக்கிறேன், பார்!

நண்பர்களும், சுவாமிகள் வீட்டிலே கூடிக் கதைத்த பெரிய வர்களும், நானுமாகத் திருநெல்வேலியில் மூலை முடுக்கெல்லாம் சென்று பிரசாரஞ் செய்தோம். ‘மது விலக்கு’, ‘தவறணை ஒழிப்புப் பிரசாரத்தில் என் கதர் வேஷ்டியும் சட்டையும் கசங் குவது தெரியாமல் உழைத்தேன்.

காந்தி மாஸ்ரர்! – சிறுவர்கள் எனக்கிட்ட செல்லப் பெயர்.

மாலை வேளைகளில், சாராயத்தால் – மதுவால் மறை முகமாக நைந்துபோன நோஞ்சான் சிறுவர்களோடு பிரசாரப் பவனி வரும் போது, காந்தியைப் பற்றி – மதுவைப் பற்றி ‘காந்தி மாஸ்ர’ ரிடம் கதைகள் கேட்பதில் அவர்களுக்கிருந்த உற்சாகத்தில், அந்தியில் விட்டுப் பிரியும் போது தம்மையும் மறந்து, ‘காந்தி மாஸ்ரருக்கு ஜே!’ என அவர்கள் கூவுவதைக் கேட்டு எனக்கு மயிர்க்கூச் செறியும்.

பொதுசன வாக்கெடுப்புத் தினம் வந்து சேர்ந்தது.

அதிகாலையிலிருந்து ஊரிலுள்ள ஆண்களையெல்லாம் கார் களில் இழுத்து வந்து, இதற்கென அமைத்திருந்த பந்தலுள் இருத் தினோம். முத்துத்தம்பியருடைய ‘ஹில்மன்’ காரும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது.

பந்தலில் சிற்றுண்டிகள், சோடா, மோர், இளநீர் என்பன வழங்கும் சிறுவர்கள் சுறுசுறுப்பாக ஓடியாடினார்கள். முத்துத் தம்பியரின் காரில் தொண்டர்களுக்கு மத்தியான உணவு பொட்டலங்களாக வந்திறங்கியது.

நான் எனது வாக்கைப் போடச் சென்றேன்.

“ஏன் மாஸ்ரர், வராதவர்களின் வோட்டைப் போட யாரை யாவது அனுப்புங்கோ. இஞ்சை நாங்க ‘செக்’ பண்ண மாட்டம். அனுப்புங்கோ ” என்று தேர்தல் அதிகாரியே என் காதுகள் சொன்னார்.

“மாறாட்டம் செய்யலாமா?”

‘காந்தி மகான் அதை ஒப்புவாரா?’

‘சத்தியத்துக்கு இது விரோதமில்லையா?’

‘மகாத்மா தம் வாழ் நாள் முழுவதும் விளைவின் பலாபலனை நோக்காது, அதை நாடும் வழியின் தூய்மையைத்தானே வலியுறுத்தினார்’

ஓ, மாலா!

என் மனத்துள் நிகழ்ந்த இப்போராட்டம் நான் பந்தலுக்குத் திரும்பிய பிறகும் நின்று விடவில்லை . நண்பன் ஒருவனிடம் இது பற்றி மனமில்லாமலே பிரஸ்தாபித்தேன்.

“முடிவு நல்லதாயிருந்தா, நாங்க கள்ள வோட் போடுற தாலை யாருக்கு நட்டம்? இதிலே என்ன பிழையிருக்கும்?” என்று, லிஸ்டைப் பார்த்து ஏதோ ஒரு எண்ணையும் பெயரையும் எடுத்துக் கொண்டு அவர் வாக்குச் சாவடிக்கு ஓடினார்.

வெற்றிப் பெருமிதத்துடன் அவர் திரும்பி வந்த போது, முத்துத்தம்பியரும் பந்தலினுள் நுழைந்து கொண்டிருந்தார்.

நண்பனிடம் விஷயத்தை அறிந்ததும் அவர் புன்னகைத்தார்.

“அப்பிடிச் செய்யிறதிலை தப்பில்லை. முடியுமானவரை செய்யுங்கோ இது பற்றிக் கதைக்கத்தான் நான் இப்ப வந்தது”

அங்கு நின்றவர்கள் எல்லாரும் வேறு வேறு பெயர்களில் சென்று (மகாத்மாவே, மன்னித்துக் கொள்ளுங்கள்) வாக்குப் போட்டு விட்டு வந்து, மறுபடியும் போனார்கள். மறுபடியும்.

நேரம் முடிந்து விட்டது. எண்ணல்.

நான் உள்ளே போனேன். புன்னகையோடு அதிகாரி எனக்கு ஆசனந் தந்தார். உள்ளே முத்துத்தம்பியர் வந்த போது, அதிகாரி எழுந்து நின்று வரவேற்றார்.

எண்ணல் ஆரம்பித்துவிட்டது.

வெளியே, “மது அரக்கன் ஒழிக!”, “மகாத்மா காந்திக்கு ஜே!” “காந்தி மாஸ்ரர் வாழ்க!” கோஷங்கள் ஒலித்துக் கொண் டிருந்தன.

எண்ணி முடிந்ததும் அதிகாரி எழுந்து, மகிழ்ச்சியோடு என் கையைப் பற்றிக் குலுக்கினார்:

“தேவையானதை விட மேலதிகமாக நானூறு வோட் கிடைச்சு உங்களுக்கு வெற்றி, மாஸ்ரர், வெற்றி!”

வெற்றியும் முத்துத்தம்பியரும் சூழ்ந்துவர வெளியே வருகிறேன். அவர் “வெற்றி” என்று கூவுகிறார்.

எல்லோரும் எங்களை மொய்த்துக் கொள்கிறார்கள். பல பெரியவர்கள் என்னோடு கை குலுக்கி முதுகில் தட்டுகிறார்கள். இரண்டு மாலைகள் என் கழுத்தில் வந்து விழுகின்றன.

ஓ, மாலா! வழி பிறக்கிறது. அன்றிரவு, நித்திரையின்றிப் புரண்டு கொண்டிருந்த என் காதுகளில் “ஜே” கோஷமே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

வெற்றியின் வெறியில் இரண்டு நாட்கள் கழிந்து விட்டதே தெரியவில்லை .

மூன்றாம் நாளிரவு பதினொரு மணிக்கு மேல் ஒரு நண்பன் ஓடிவருகிறான்.

“மாஸ்ரர், உடனடியா ஒருக்கா வந்திட்டுப் போங்கோ!” என்ன அவசரமோ, ஏதோ!

கையிலிருந்த “சத்திய சோதனை”யை வைத்துவிட்டு அவனோடு ஓடிய நான் வீதியில் ஏறியதும், “என்னவிஷயம்?” என்று கேட்டு வைத்தேன்.

“வாருங்கோ வந்து பாருங்கோ!”

“என்னடா, அப்படிப் பெரிய விஷயம்?”

சந்தியிலிருந்த வைக்கோல் கடையின் முன்னால் இருட்டில் நிற்கிற ஒரு காரை அவன் சுட்டிக் காட்டினான். அதிலிருந்து ஏதோ பொருள்களை இறக்கி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

“பார்த்தீர்களா?”

“என்ன விஷயம்”

“சாக்குச் சாக்காய் சாராயம்”

என் தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போலிருந் தது. கிட்டச் சென்று பார்க்கிறேன்.

அந்த ‘ஹில்மன்’ கார்!

“தவறணையில் கிடைக்கிற லாபத்திலும் இப்படி விற்பனையில் கிடைக்கிற லாபம் இரண்டு மடங்கு” என்ற நண்பன் என்னை வீட்டை நோக்கி இழுக்கிறான்.

எதிர்த்திசையிலிருந்து கனவேகமாக வந்த கார் ஒன்று எறிந்த ஒரு கண ஒளியில் கூர்ந்து கவனிக்கிறேன். ‘ஹில்மன்’ காரின் உள்ளே, தும்பைப்பூப் பரமாஸ் சால்வையால் முகத்தைத் துடைக்கிற பாவனையில் தன்னை மறைக்க முயல்கிறார். திருவாளர் முத்துத்தம்பி!

என்னுள்ளம் ஊளையிடுகிறது. இன்னும் ஓயவில்லை.

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *