கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 9,310 
 
 

எழுதியவர்: பனபூல்.

அவனுக்கு ஒரு விசித்திரப் பெயர் – ரிபுநாஷ். அவனுடைய அண்ணன் பெயர் தமோநாஷ். ஆனால் காலத்தின் கோலம், அவர்களில் எவராலும் எதையும் நாசம் செய்ய முடியவில்லை; அவர்களேதான் நாசமானார்கள். தமோஷ்நாஷ் என்றால் இருளை அழித்தவன் என்று பொருள். ஆனால் ஒரு சிறுதுளி அளவு ஒளி கூட அவனது வாழ்வில் நுழையவில்லை. அவன் “அ, ஆ” கூடக் கற்காமல் முழு முட்டாளாயிருந்தான். அவர்கள் பிராமணப் பையன்கள் என்பதால் அவர்களுக்கு சமஸ்கிருதப் பெயர்கள் இடப்பட்டிருந்தன. அவர்களுடைய தகப்பனார் மோகநாஷ் தர்க்கதீர்த்தா ஒர திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர். எல்லாரம் அவரைச் சுருக்கமாக “மோகன் பண்டிதர்” என்று அழைத்தார்கள். இந்தக் காலத்தில் சமூகத்தில் சமஸ்கிருதப் பண்டிதர்களுக்கு முன்போல் மதிப்பு இல்லை. அவர் பரம ஏழை. புரோகிதம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தார். அவர் இறந்தபோது தமோ நாஷுக்கு ஆறு வயது, ரிபுநாஷுக்கு வயது மூன்று.

குழந்தைகளின் தாய் சமையல் வேலை செய்து வயிறு வளர்த்தாள். பதினாறு வயதிலேயே தமோயாஷ் பழுத்த விட்டான். ஒர போக்கிரிக் கூட்டத்துக்குத் தலைவனாகி விட்டான். அவன் பெயர் “தம்னா” ஆகிவிட்டது. அவன் ரவுடித்தனம் செய்து ஏதோ கொஞ்சம் சம்பாதித்தான். சம்பாதித்ததில் ஒரு பகுதியைத் தாயிடம் கொடுத்துவிட்டு மிச்சத்தைக் கொண்டு குஷாலாகக் காலங்கழித்தான். ஆனால் இது நீண்டகாலம் தொடரவில்லை. ஓரிடத்தில் ரவுடித்தனம் செய்யப்போய் கத்திக் குத்துப்பட்டு இறந்துபோனான். ஒரு நாள் அவனது சவம் சிறிது நேரம் நடை பாதையில் கிடந்தது. பிறகு போலீசார் சவப்பரிசோதனைக்காக அதைச் சவக்கிடங்குக்கு எடுத்துச் சென்றார்கள். மருத்துவர்கள் அந்த உடலைத் தாறுமாறாகக் கிழித்தார்கள். பிறகு சவம் தோட்டிகளின் கைக்கு வந்தது. தமோஷின் அம்மா சவத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவில்லை. சவத்தை எடுத்து வந்து, ஆட்களைக் கூட்டிப்போய் அதை எரிக்க அவளிடம் பணமில்லை. அவளுக்கு ஏற்கெனவே நான்கு பக்கங்களிலும் கடன், இன்னும் கடன்சுமையை அதிகமாக்கிக்கொள்ள இஷ்டமில்லை அவளுக்கு. தோட்டிகள் சவத்தின் எலும்புகளை எடுத்துக் கழுவி, “உடற்கூறு” கற்கும் மாணவர்களுக்கு அவற்றை விற்றுக் கொஞ்சம் காசு சம்பாதித்தார்கள். இதோடு தமோநாஷின் வரலாறு முடிந்து விட்டது.

தமோநாஷின் தாய் சாவித்திரி அதிகம் அழக்கூட இல்லை. அவளுடைய முகத்தில், கண்களில் நெருப்பு உள்ளூரக் கனன்றது. அது வார்த்தைகளில் வெளிப்படாத, பார்வைக்குப் புலப்படாத, ஆனால் தீவிரமான ஜுவாலை. சாவித்திரி சமையல் வேலை செய்த வீட்டுக்காரர், தமோநாஷின் மரணத்துக்குப் பிறகு அவளுடைய சம்பளத்தை இரண்டு ரூபாய் உயர்த்துவதாகச் சொன்னார். சாவித்திரி அதற்கு இணங்கவில்லை. “தேவையில்லை” என்று சுருக்கமாக மறுத்து விட்டாள்.

ரிபுநாஷ் தெருக்களில் சுற்றித் திரிந்தான். வீட்டில் இட மில்லாதவர்கள், தெருவில் சுற்றியவாறே காலங்கழிப்பவர்கள், ஏதாவதொரு கிளர்ச்சி, சண்டை, மோட்டார் விபத்து ஏற்பட்டால் அதைப் பார்க்கக் கூட்டங் கூடுபவர்கள், இவர்களே ரிபுநாஷின் தோழர்கள். அவர்கள் அவனை “ரிபுன்” என்ற அழைத்தார்கள்.

ஆனால் ரிபுன் தம்னாவைப் போல் பலசாலி அல்ல, நோஞ்சான். அவன் மார்க்கெட் வட்டாரத்தில் சுற்றிக் கொண் டிருப்பான்; மூட்டை தூக்கி ஏதோ சம்பாதித்தான்; பீடி பிடிக்கக் கற்றுக்கொண்டான். தினம் ஒர கட்டு பீடி வாங்கக் காசை எடுத்துக்கொண்டு மிச்சத்தைத் தாயிடம் கொடுப்பான்.

அவனுக்குப் பதினாறு பதினேழு வயதாயிருந்தபோது ஒரு விபத்து நிகழ்ந்தது. ஒருநாள் அவன் ஒரு கூடை கோசு தூக்கிக் கொண்டு வந்து ஒரு மோட்டாரின் பின்புறப் பெட்டியில் அவற்றை அடுக்கி வைக்கும்போது அவனக்குத் தொண்டை கமறியது. அவன் இருமத் தொடங்கினான். மோட்டார்க்காரர் அவனுக்குரிய முக்கால் ரூபாய்க் கூலியைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். ரின் நடைபாதையில் உட்கார்ந்துகொண்டு இருமத் தொடங்கினான். திடீரென்று இருமலுடன் ஒரு கட்டி இரத்தம் வெளிவந்தது. ரிபன் அதைச் சிறிது நெரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு வீடு திரும்பினான். சாவித்திரி பக்கத்து மருத்துவரிடம் ரிபுனைக் கூட்டிச்சென்றாள். அவர் அவனைப் பரிசோதித்து விட்டு, “இவனுக்குக் காசநோய் வந்திருக்கு. எனக்கு நீ பீஸ் ஒண்ணும் தரவேண்டாம், ஆனா மருந்து வாங்கிக் குடுக்கணும். ஊசி மருந்து போடணும். முட்டை, வெண்ணெய், மீன், மாமிசம், பழம் இந்த மாதிரி புஷ்டியான சாப்பாடு குடுக்கணும் ..” என்றார்.

சாவித்திரி பேசாமல் மருத்துவரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றாள். கண்ணுக்குப் புலப்படாமல் அவள் முகத்தில் கனன்று கொண்டிருந்த நெருப்பை அவர் உணர்ந்த கொண்டார் போலும். “ஒன்னாலே முடியலேன்னா பையனை ஆஸ்பத்திரி யிலே சேர்த்திடு. நான் ஒனக்கு ஒரு சீட்டு எழுதித் தரேன். நீ அதை எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போ” என்று அவர் சொன்னார்.

சாவித்திரி சீட்டை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக் கூட்டத்தில் ஒரு வாரம் முயன்று பார்த்தாள். ஒரு பலனுமில்லை. ஒரு நோயாளி அவளிடம், “இங்கேயும் பைசா இல்லாமே ஒண்ணும் நடக்காத. லஞ்சம் குடுக்கணும்” என்று சொன்னான்.

ரிபுன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படவில்லை, சாவித்திரியிடம் காசு ஏது? சிகிச்சையின்றியே காலங் கடத்தினான் ரிபுன். மறுபடியும் மூட்டை தூக்கவும் தொடங்கினான். ஒருநாள் அவ னுடைய கூட்டாளியொருவன் அவனிடம் சொன்னான், “எனக்கு ஒரு நல்ல யோசனை தோணுது. நீ எப்படியாவது அலிபூர் ஜெயில்ல ஆறுமாசம் இருந்தால் உன் வியாதி குணமாயிடும் ..”

“ஜெயில்லே இருந்தா வியாதி குணமாயிடுமா? என்ன சொல்றே நீ?” கூட்டாளியின் பேச்சை நம்பவே முடியவில்லை ரிபுனால்.

கூட்டாளி சொன்னான்,”ஹரு ஜெயிலுக்குப்போய் வியாதி குணமாகித் திரும்பி வந்திருக்கான். அவனுக்கும் காசநோய்தான் வந்திருந்தது. அங்கே நல்ல ஆஸ்பத்திரி இருக்கு. எலவசமா சிகிச்சை செய்யறாங்க. நீ ஜெயிலுக்கப் போயிடு!”

சில நாட்களுக்குப் பிறகு ரிபுன் ஒரு டிராமில் பிக்பாக்கெட் செய்யப்போய்க் கையுங்களவுமாகப் பிடிபட்டான். அங்கிருந்த வர்கள் அவனை நன்றாக அடித்துவிட்டுப் போலீசில் ஒப்படைத் தார்கள்.

நீதிமன்றத்தில் நீதிபதி அவனிடம் சொன்னார், “நீ உன் கட்சியை எடுத்துச் சொல்ல ஒரு வக்கீல் வச்சுக்கலாம். வக்கீல் வைக்க உனக்கு வசதியில்லேன்னா சர்க்காரே உனக்கு ஒரு வக்கீல்..”

ரிபுன் கைகூப்பிக்கொண்டு சொன்னான், “வேண்டாம் சாமி, எனக்கு வக்கீல் வேண்டாம். என்மேல் சுமத்தப்பட்ட குத்தம் உண்மைதான். நான் திருடறதுக்காகத்தான் அந்தப் பிரயாணியோட சட்டைப்பையில் கையைவிட்டேன்.”

“ஐம்பது ரூபாய் அபராதம், அதைச் செலுத்தாவிட்டால் ஒரு மாதம் ஜெயில்” என்று தீர்ப்பளித்தார் நீதிபதி. ரிபுன் கை கூப்பியவாறு வேண்டிக்கொண்டான், “ஐயா, என்னாலே அபராதம் செலுத்த முடியாது, ஆனா எனக்கு ஒரு மாச ஜெயில் தண்டனைக்குப் பதிலா ஆறு மாச தண்டனை கொடுங்க!

நீதிபதிக்கு ஆச்சரியமாகிவிட்டது. “ஏன் ஆறுமாச தண்டனை கேக்கிறே?” என்று அவர் வினவினார்.

“எனக்குக் காச நோய் வந்திருக்கு. அலிபூர் ஜெயில்லே காசத்துக்கு நல்ல சிகிச்சை செய்யறாங்களாம். ஆறுமாசத்திலே குணமாயிடுமாம். அதனாலதான்..”

ஆனால் நீதிபதி தன் தீர்ப்பை மாற்றவில்லை. ஜெயில் ஆஸ்பத்திரியில் ரிபுனின் நோய் குணமாகவில்லை. அவன் ஒரு மாதத்துக்குப் பிறகு இருமிக்கொண்டே சிறையிலிருந்து வெளியே வந்தான். அதற்குப்பின் ஒரு மாதந்தான் உயிருடனிருந்தான். அம்மாவின் காலடியிலேயே இரத்த வாந்தியெடுத்து உயிரை விட்டான், பாவம்!

திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தாள் சாவித்திரி. அவளுடைய கண்களிலிருந்து தீப்பொறிகள் பறந்தன.

ஆனால் ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடவில்லை அவள்.

இதற்கு இரண்டு மாதங்களுக்குப்பின் தேர்தல் வந்தது. சாவித்திரிபாலாவும் ஒரு வாக்காளர். மதிப்புக்குரிய ஒரு பெரிய மனிதர் அவளிடம் ஓட்டுக் கேட்க வந்தார். சாவித்திரி அவரைச் சுட்டெரிப்பதுபோல் உற்றுப் பார்த்துக் கேட்டாள், “ஒங்களுக்கு ஓட்டுப் போடணுமா? நீங்க எனக்கு என்ன ஒபகாரம் செஞ்சிருக் கீங்க? என் புருசன் ஒரு பண்டிதர். நீங்க பதவியிலே இருந்தபோது அவர் ஒரு சாதாரணப் பிச்சைக்காரன் மாதிரி செத்துப் போனார். என்னால என் பெரிய புள்ளெயப் படிக்க வைக்க முடியலே. அவன் ரவுடியாத் திரிஞ்சு கடைசியில் கத்திக் குத்துப்பட்டு செத்துப் போனான். சின்னப் பையன் காசநோயிலே செத்தான். அவனுக்கு சிகிச்சை செய்ய முடியலே. எங்கே போனாலும் லஞ்சம் கேக்கறாங்க.. ஒங்களுக்கு எதுக்கு ஓட்டுப் போடணும்? நான் யாருக்கும் ஓட்டுப் போடமாட்டேன்..!”

வேட்பாளர் பேசத் தொடங்கினார், “இதோ பாருங்க ஜனநாயகத்திலே..”

ஆனால் சாவித்திரி அவரைப் பேச்சை முடிக்க விடவில்லை அவள் உரத்த குரலில், “வெளியே போங்க!” என்று கத்தினாள்.

விரைவாக வீட்டைவிட்டு வெளியேறினார் வேட்பாளர்.

படாரென்று கதவைச் சாத்தினாள் சாவித்திரி..

பனஃபூல் (1899 – 1979)

உண்மைப் பெயர் பலாயி சாந்த் முகோபாத்தியாய். தொழில்- மருத்துவம். கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயின்று, பிறகு நீண்ட காலம் பாகல்பூரில் மருத்துவப் பணி புரிந்து விட்டுப் பின்னர் கல்கத்தாவில் வசிக்கத் தொட்ங்கினார். கவிதை, கதை, நாவல், நாடகம், கட்டுரை எழுதுவதில் நிபுணர். உள்ளடக்கத்தின் பிரகாசத்திலும், கட்டமைப்புத் திறனிலும் சிறந்த எண்ணற்ற சிறுகதைகள் எழுதியுள்ளார். கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சரத் நினைவுப் பரிசு(1952), ஆனந்தா பரிசு(1961), ரவீந்திரர் நினைவுப் பரிசு(1962) பெற்றவர். இவருடைய கதைகள்- நாவல்களின் பாத்திரங்களின் பல்வகைத் தன்மை வாசகரை ஈர்த்து வியப்பிலாழ்த்துகிறது. இவர் 1975 ஆம் ஆண்டில் ‘பத்ம பூஷண்’ விருது பெற்றார்.

– தேஷ், 1971.

– அனைத்திந்திய நூல் வரிசை, வங்கச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1997, தொகுப்பு: அருண்குமார் மகோபாத்யாய், வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

நன்றி: http://www.projectmadurai.org/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *