(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நிறைமாத கர்ப்பமாக வந்த பல்லவனின் தயவில் நானும் என்னை செருகிக் கொண்டு, உள்ளே நகர்ந்தேன். கண்டக்டர் ‘டிக்கெட்டாய் கத்திக் கொண்டே விரைவாக முன்னேறியதும் நானும் அவரைத் தொடர்ந்து முன்னேறி ஓரிடத்தில் நிலை பெற்றேன்.
பல்லவனில் கண்களை அங்குமிங்குமாக துழாவவிட்டபோது, என்னையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த அவளைப் பார்த்ததும் என் உடம்பெல்லாம் ஏஸி பரவியது.
அவள் மாடர்ன் டிரஸ்ஸில் ‘சிக்’கென இருந்தது என்னை மேலும் மேலும் பரவசப்படுத்தியது. நான் அவளை ஓரக்கண்ணால் கவனித்தேன் அவள் என்னைப் பார்ப்பதை நிறுத்தவேயில்லை.
என்னையும் ஒருத்தி காதலிக்க ஆரம்பித்துவிட்டதைப் போல உணர்ந்தேன் ஆர்வம் அதிகமாய் மேலிட மேலும் முன்னேறி அவள் அருகில் சென்று நின்று கொண்டேன். பஸ்ஸில் மேலும் கூட்டம் அதிகமாகி புளிமூட்டையானது.
அவள் என்னைப் பார்ப்பதும், நான் அவனைப் பார்ப்பதுமாக ஒரு மாதிரியாக காதல் வளர்ந்தது. அவளே என்னருகில் வந்து என்னை உரசிக் கொண்டு நின்றாள் அந்தச் சமயத்தில் அதுவும் எனக்கு தேவையாயிருந்தது. அவளைக் காதலியாக என் மனம் நினைத்து லயித்தது,
நான் இறங்க வேண்டிய இடமான பாண்டி பஜாரை பல்லவன் நெருங்கிக் கொண்டிருந்தான். நான் அவசரமாக டிக்கெட்டை கையில் எடுத்துக் கொண்டு, நாளை மாலை ஆறுமணிக்கு மெரீனாவில் கண்ணகி சிலையருகே சந்திக்கவும் என எழுதி, அவள் கையில் அவசரமாகத் திணித்துவிட்டு இறங்கினேன்.
வீட்டிற்கு வந்து பாண்ட் பாக்கெட்டிற்குள் கை விட்ட போது தான் தெரிந்து கொண்டேன் அவள் என் சம்பளப் பணம் மூவாயிரத்து ஐந்நூறைக் களவாடியிருப்பதை! அவள் ‘கண்ணகி’ அல்ல என்பதை அப்போது தான் என்னால் உணரமுடிந்தது! இன்று முதல் நான் ஒழுக்கசீலனாக மாறிவிட்டேன். எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்