ஓடும் பஸ்ஸில் ஒரு நாடகம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 15,711 
 
 

காலங்கார்த்தால ஃபோன் மணி அடித்து எழுப்பியது. எடுத்ததும், அம்மா தான்….விஷயம் பெரிசா ஒன்றும் இல்லை. ஆனால் அழைப்பில் அவசரம். இன்னைக்கு இங்கு ஸ்ரீவாரி கல்யாண உற்சவம் நடக்கப் போறது.. நீயும் எங்களோட கண்டிப்பா வந்து கலந்துககோ. இப்பவே சிதம்பரத்தில் இருந்து கிளம்பினால், சரியாயிருக்கும்…. வா….வந்து கல்யாணத்தைப் பார்த்துட்டுக் கூட நீ கிளம்பிக்கோ பரவாயில்லை. அம்மா ரொம்ப வற்புறுத்தி அழைத்த இடம் புதுச்சேரி.

எப்போ கல்யாணம்…? ன்னு கேட்டேன்.

அது சாயந்தரமாத்தான்…..ஆனாலும் நீ கார்த்தாலயே வந்துடு….. சரியா… வெச்சுடறேன் என்று அழைப்பைத் துண்டித்தாள்.

சரி, புதுச்சேரி, பக்கம் தானே, மிஞ்சிப் போனால் பஸ் பிரயாணம் ரெண்டு மணி நேரம் தான் ஆகும்… போயிட்டு வரலாம்…. இன்னைக்கு அதிக வெய்யில் கூட இல்லை.இங்கேர்ந்து பஸ் ஏறி உட்கார்ந்தாப் போதும்…. வழியெல்லாம் பசுமையைப் பார்த்துண்டே போகலாம்…நினைத்ததும் எனக்கிருந்த அத்தனை வீட்டு வேலைகளையும் மூட்டை கட்டி பரணில் ஏற்றிவிட்டு சொன்னதுபோல் பாண்டிச்சேரிக்கு கிளம்பி விட்டேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் சிதம்பரத்தில் இருந்து சொகுசாக பஸ் பிரயாணம்….வெயிலே இல்லாமல் இதமான காற்றோடு நினைத்தபடியே பிரயாணம் இனிமையாக இருந்தது. நான் அங்கு வந்து சேர்ந்ததில் அம்மாவுக்கும் சந்தோஷம். நல்லவேளை வந்தியே….! இந்தக் கல்யாணம் பார்த்தால் அவ்வளவு விசேஷம் என்று மகிழ்ந்தாள்.

இன்னைக்கு வானம் நிர்மலமா இருக்கே….அப்படியே பீச்சுக்கு போயிட்டு பிறகு கூட அங்கேர்ந்தே கிளம்பி ஸ்ரீவாரி திருக்கல்யாணத்துக்கு போகலாம்….என்று பீச்சுக்குச் சென்றோம். வழக்கம் போல கடல் அலைகளைத் தூது அனுப்பி எங்களைக் குளிர்ச்சியாய், குதூகலமாக குதித்து …குதித்து… வரவேற்றது …!

உட்கார இடம் இல்லாமல் அங்கும் கூட்டம் அலைமோத….காந்தி சிலை வரை காலாற நடக்கலாம் என்று சென்ற போது தான் தெரிகிறது..கடற்கரை அருகே கம்பீரமான மண்டபத்துடன் கருங்கல்லில் நின்ற காந்தி சிலை அழகு தான்..ஆனால் அவர் சிலைக்குக் கீழே சுற்றிலும் பார்த்தால் “இதென்ன காந்திக்கு குப்பையால் யாரோ அர்ச்சனை நடத்தியிருப்பது போல….குப்பையை எடுக்காமல் குமித்து வைத்திருக்கிறார்கள் ….சமயத்தில் குழந்தைகள் மறைவான பாத்ரூமாகக் கூட அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து,தங்கள் வேலையை முடித்துக் கொண்ட சுவடு தெரியும். அருகில் போக முடியாமல் நாற்றம் நம்மை விரட்டும்…பாவம் காந்தி….சிலையாய் நிற்கிறார் ஓட முடியாமல் ….இல்லையென்றால்….”என்னை விட்டால் போதும்னு”..அங்கிருந்து சுதந்திரமாக நடையைக் கட்டியிருப்பார். குப்பை பீச்சில் உப்பு சத்தியாகிரகமாவது செய்திருப்பார்.

அழகான ஊர் தான் புதுச்சேரி. ஆனால் என்ன, பெயரில் இருக்கும் அந்த அழகு ஊரிலும் இருக்க வேண்டாமா…? அது தான் நிறைய இடங்கள் சேரி மாதிரியே குப்பையும் கூளமும் திறந்த சாக்கடையுமாக…நாற்றம் அடித்துக் கொண்டு இருக்கே.

பஸ் ஜன்னல் வழியாகப் பார்க்கையில் புதுச்சேரி அழகாகத் தெரியும்.. மொத்தமே பத்து கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் இந்த ஊரில் இல்லாதது பாதாளச் சாக்கடை. அதி அத்தியாவசியமான ஒரு அடிப்படை வசதி தான் இது. இருந்தும் இந்தக் காலத்தில் போய் இன்னும் எங்கு பார்த்தாலும் திறந்தவெளிச் சாக்கடை போகும் பாதைகள், பஸ் ஸ்டாண்டின் பக்கத்தில் நடந்தாலும் உள்ளே போனாலும் மூக்கையும், வாயையும் அழுத்தி மூடிக் கொண்டு மூச்சு முட்டித் தான் பஸ்ஸில் ஏற வேண்டும். என்ன அநியாயம்… என்று மனம் பதறும்.

நடுநாயகமாக நிற்கும் நிலாவைத் தொடும் உயரத்துக்கு தூண் போல ஒரு விளக்கு கம்பம் …!.அதைச் சுற்றி கீழே கால் வைக்க முடியாது.. ஏன்…கண்ணால் கூடப் பார்க்க முடியாது..மனிதர்கள் கட்டணக் கழிப்பறையை தவிர்த்து விட்டு அந்த இடத்தையே இலவச கழிப்பறையாக்கி இருக்கும் அவலம். இதைக் கேட்க, தடுக்க, பாதுகாக்க…யாரும் இல்லையா? ம்ம்ம்ம்…மூச்சைப் பிடித்தபடி , மனதுக்குள் திட்டாமல் அந்த இடத்தைக் கடப்பவர்கள் யாரும் இருக்க முடியாது. இதெல்லாம் ஆரோக்கியக் கேடு என்று தெரியாதா என்ன…அரசாங்க முதல்வருக்கும், மற்ற மந்திரிகளுக்கும் ? அட கடவுளே… விடுதலை நாட்டில் சுதந்திரமா மலம் கழிப்பது சரியா … ?

அவரை நினைத்த மாத்திரத்தில்…சட்டென நினைவுக்கு வந்தது அவரது பன்முகம் தான்…பின்னே…..மனிதன் எந்தக் காலத்திலையும் மறந்து விடக் கூடாதுன்னு நினைப்பில்..ஊரின் ஆரம்பம் முதல் மறு எல்லை வரை அடிக்கு அடி பற்பல முகபாவத்தில், உடைகளில் ஆயிரத்தி நூற்றி எட்டு “பேனர்” வைக்கிறேன்னு யாரோ வேண்டிக் கொண்டது போல…. முதல்வரின் விஸ்வரூப “பேனர்கள்”அத்தனையும் வித விதமான அலங்காரத்திலும்.தசாவதாரத்திலும்….சிரித்தபடி நம்மை விழுங்க வரவேற்கும் அழகே தனி…! தமிழ்நாட்டு முதல்வர் எவரும் இவரிடம் தோற்றுப் போவார்கள்..இந்த பேனர் விஷயத்தில். இந்த பேனருக்குச் செலவு செய்த பணத்தைக் கொண்டு ஊருக்குள் பாதாளச் சாக்கடை அமைத்து வீட்டுக்கு வீடு வாசலில் ஓடும் சாக்கடையை மூடி மூக்குகள் திணறடிக்காமல் இருக்க வழி செய்யலாம், செய்தவருக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்கும்…. என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

புதுச்சேரியில் குப்பையும், சாக்கடையும் இரண்டு பூழைக் கண்கள் மாதிரி பளிச்சுன்னு நல்ல கண்களுக்குள் தெரியும். அடுத்தது தான் எல்லாருக்கும் தெரியுமே…”குடி குடியைக் கெடுக்கும்” என்று எழுதி வைத்து மது விற்கும் மதுபானக் கடைகள்….வரிசையாகப் போட்டி போட்டுக் கொண்டு. இரவானால் போதும்….இன்னும் கேட்கவே வேண்டாம்….வழி நெடுக மினு மினு வென்று சரவிளக்குகள், மினுக்கிக் கொண்டு ஆண்களின் இதயங்களைத் துரத்தித் துரத்திப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தன. …மயக்கும் மதுக்கடை விளம்பரங்கள்.! ஒரு தடவை மாட்டினால் அவ்ளோதான்….! தெரிந்தும் தீயில் விழும் விட்டில்களாக ஆண்கள். குடித்துக் குடித்து தங்கள் குடும்பத்தைக் சொன்னபடி கெடுக்க படையெடுத்துக் கொண்டிருப்பார்கள். கஷ்டப் பட்டு வியர்வை சிந்தி சேர்த்த பணத்தை “போதைக்குத்” தாரை வார்த்துக் கொண்டிருந்தன உழைக்கும் வர்க்கம்.

நடைபாதையில் பறப்பதாக நினைத்துக் கொண்டு கால்மாறி கால்மாறி நடந்து கொண்டிருந்தான் ஒருவன். பீச்சு அருகில் இருக்கும் கரும்பாறைகள் மேல் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படுத்துக் கிடந்தார்கள் சிலர். “இன்பம் இங்கே…இன்பம் இங்கே…”என்று சுற்று வட்டார கிராமங்களின் வேடந்தாங்கலாக வார இறுதியில் ‘பாண்டிச்சேரியே சரணம்’ என்று காந்தம் இழுத்த துருப்பிடித்த இரும்புத் துண்டுகளாக வந்து ஒட்டிக் கொண்டார்கள் பலர்.
ஆன்மீகத் தேடல்களுக்காக, இந்த ஊருக்குள் அடி எடுத்து வைத்தவர்கள் முதலில் இதை எல்லாம் பார்த்து சிறிது அதிர்ச்சி அடைவது நிச்சயம்.அதையும் மீறி இந்த ஆன்மீக அமைதியை இந்த ஆடம்பர மதுக்கடைகள் (பார்கள்) வேகமாக விழுங்கிக் கொண்டு வருவதும் இங்கு சாதாரணம்.

இரு வேறுலகம் இது வென்றால் இறைவன் என்பவன் எதற்காக? என்ற பாடல் வரிகள் மனதுக்குள் ஓடவைக்கும்…ஒரு பக்கம் அன்னை அரவிந்தர் ஆசிரமம்,, தியானம் செய்ய ஏதுவான கடற் பக்க கருங்கல் பாறைச் சுவர்கள்…கடலோர நடை மேடை…அழகழகான கோவில்கள், சித்தர் சமாதிகள்…மணக்குள விநாயகர் கோயில் , நமது பாரதியார் அனுபவித்து ரசித்து வாழ்ந்த பல இடங்கள் என்று ஆன்மீக பாதை நிறைத்திருக்க, கூடவே அனைத்துக் கலைகளும் பெருகி வர கம்பன் கவியரங்கம்..!

இன்னும் என்ன இல்லை என்பது போல பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்கள், வியாபார ஸ்தலங்கள், பிரம்மாண்டமான முதலைகள் நீந்தும் புதுச்சேரி ஒருபக்கம் களைகட்ட..!

மறுபக்கம் முழுதும்….சினிமாப் பட சீடீக்கள், மூன்றாந்தர புத்தகங்கள், மதுக் கடைகள், இன்னும் அங்கங்கே பார்கள் பல்லானப் பல்லான விஷயங்கள் பகிரங்கமாக என வழுக்கு மரங்களும்..கண்ணைக் கட்ட..!

உலகம் பூரா இதே தானே….இதில் என்ன இருக்கிறது? என்று நீங்கள் நினைத்தால்….! இருக்கலாம் இருந்தாலும் இந்தச் சின்ன ஊரில் அதிகம் கண்ணில் படுவதும்…அதிகம் கிராம மக்களில் குடும்பம் குப்புற விழுவதும் இந்த வழுக்கு மரத்தில் தானே..! உடலால் உழைக்கும் வர்க்கம் மனத்தால் உளுத்துப் போகலாமா?

கல்யாண உற்சவத்தில் பொது மக்களும் கூட்டத்தில் போலீசும் கலந்து கொண்டது போல பெரும் ஜனக்கடல், ஆயிரமாயிரம் தலைகள்…!ஒரு மாபெரும் மைதானத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்..நாங்கள் போகும் போதே இருட்ட ஆரபித்தது…தூரத்தில் நடக்கும் கல்யாண உற்சவத்தைப் பார்க்க அங்கங்கே மாபெரும் எல்.சி.டி இருந்தது வசதியாக இருந்தது..சரிம்மா…இந்தக் கூட்டத்தில் எந்தக் கல்யாணமும் பார்க்க முடியாது..பேசாமல் வந்த வழியே திரும்பலாம்…என்று ஒரு சேர முடிவு செய்து வீட்டுக்குத் திரும்பினோம்.

சரி…கல்யாணம் தான் பார்க்க முடியலை..இன்னைக்கு பஸ்சில் கூட்டம் இருக்காது மொத்தக் கூட்டமும் மைதானத்தில் பார்த்த திருப்தி.. நான் இப்போவே கிளம்பி சிதம்பரம் போறேன்….அப்போ நான் போயிட்டு வரேன்…கிளம்பட்டுமா? என்று எனது பையை எடுத்துக் கொண்டு கைபையை தோளில் போட்டுண்டு கிளம்பத் தயாராக, சொல்லிக் கொள்ள.

இப்பவே கிளம்பாட்டா என்ன? …நாளைக்கு கார்த்தால முதல் பஸ்ஸில் போனா ஆகாதா? அங்க போய் தூங்கறத இங்க படுத்துத் தூங்கீட்டு, கார்த்தால எழுந்ததும் சீக்கிரம் கிளம்பிக்கோயேன். பிடிவாதமா இப்போவே போகணும்னு சொல்றே..இந்த ஊர்ல ராத்திரி பஸ் பயணம் அவ்வளவு சரியில்லை..தனியா நீ போறது எங்களுக்கு நீ உன் வீட்டுக்கு போயி ஃபோன் செய்யற வரைக்கும் இங்க நாங்க பயந்துண்டு இருக்கணும்…உலகம் கெட்டுக் கிடக்கு….எங்க பார்த்தாலும் கலகம், களவு, விபத்து, குடிச் சண்டை, … வழிப்பறி..கொள்ளையும் ….கொலையுமா இருக்கு நமது புண்ணிய பூமியில் ! இரவோ, பகலோ கண்ணியமா பெண்கள் தெருவில் நடக்க முடியுமா .. ?

அம்மா…போகும்போது ஒரு நல்ல வார்த்தையா சொல்லி அனுப்பக் கூடாதோ..?..அதான் உலகம் கெட்டுக் கிடக்கற விஷயம் செய்தியா தினம் வருவது எனக்கே தெரியுமே. .நான் இப்போ கிளம்பினால் சரியா இருக்கும்.. நீங்க பயப்பட வேண்டாம்…போயிட்டு வரேன்..சொன்னவள்…கிடு கிடு வென அவசரமாக மாடிப் படிகள் இறங்கவும்….

சரி…பார்த்துப் போ…கவனமா இரு..போனதும் ஃபோன் பண்ணு…என்று பின்னாடியே வார்த்தைகள் என்னை விரட்டி எட்டி எட்டிப் பிடித்தது.

சரி…சரி…சரி…என்று வாசல் கேட்டைப் போட்டுவிட்டு…தெரு முனையில் ஆட்டோ கிடைக்கும், அது வரை நடக்க வேண்டும்…நினைத்த மாத்திரத்தில் அந்த வழியாக ஒரு ஆட்டோ செல்வதைப் பார்த்ததும் நிம்மதியானது மனது.
நல்ல சகுனம்..காலி ஆட்டோ…!என்று குதூகலித்து.

பஸ் ஸ்டாண்ட்..போகணும்….என்று சொல்லி ஏறி அமர்ந்ததும்…சவாரி வந்த சந்தோஷத்தில் ஆட்டோக்காரன்…..ஆட்டோவைக் கிளப்ப, உறுமிக் கொண்டு கிளம்பியது மூணு கால் தேசிங்குராஜா….!

பஸ் ஸ்டாண்டில் வழக்கம் போல நான் நினைத்ததை விட ஒரே கூட்டம்…ஒவ்வொரு பஸ்ஸும் பிரயாணிகள் பொங்கி வழிய பயமுறுத்திக் கொண்டு தான் கிளம்பியது….! அவனவன் கோணா மாணா கோவிந்தா என்று தான் பஸ்ஸை ஒட்டுவான்.இதில் தனியார் பஸ்களின் ஆரவாரம் வேறு…பஸ்ஸுக்குள்ளே அந்தந்த டிரைவரின் ரசனைக்கேத்தபடி பாடல்கள் வேறு கூட்ட நெருக்கடியில் கதறி அலறும்,காதைப் பிளக்கும். . வீதித் தூசி வேறு நாசியை அடைக்கும். கண், காது, வாய், மூக்கு என்று ஒரு சேர மூடிக் கொண்டு பஸ் பயணம் செய்ய வேண்டும் இந்தக் காலத்தில்.

சில பேருந்துகளில் குத்துச் சண்டை, டப்பாங்குத்துப் பாட்டு ஆட்டத்தோடு திரைப் படங்கள் வேறு… அட கடவுளே, கலை நுணுக்கம் இல்லாத இந்தப் படங்களைக் காசு கொடுத்துப் பார்க்கணுமா ? திடுக்கிடும் பட நிகழ்ச்சிகள் நடு மண்டையில் நச்சுன்னு சுத்தியல் வைத்து அடிக்காத குறையாக…வலிக்கும். பேருந்துகளில் பிரயாணிகளுக்குத் தூண்டில் இது தான். விழுந்தவர்கள் எல்லாம்….சேரும் இடம் வரை மாட்டிக் கொள்ள வேண்டியது தான்.

“கடலூர், சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பக்கோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி….” என்று கூட்டத்தைப் பார்த்து ஒருத்தன் கூவிக் கூவி அழைத்தால…!

இன்னொருத்தன் ஆக்ரோஷத்தோடு.. “கடலூர்….கடலூர்…கடலூர்….ஏறு…ஏறு…ஏறு…ன்னு மூச்சு முட்ட போட்டிக்கு கத்தினான் அடுத்த பேருந்தில்(அப்)பிராணிகளை ஏற அழைத்துக் கொண்டு.

அடுத்தடுத்து இதே இரைச்சல்….கூப்பாடு…! சினிமாப் பாட்டு…!

இந்தப் போட்டிக்கு நான் வரலைப்பா…ன்னு ஓரமா தேமேன்னு….எந்த அலங்காரமும், தூண்டிலும் போடாமல்…அழுது வடிந்து கொண்டு ஐ.எஸ்.ஐ. முத்திரை தகர டப்பா வண்டி…அதான் “நம்ம அரசு பேருந்து” தனியாக தவித்துக் கொண்டு…நிற்கும்…யாராவது ஏறுங்களேன் ….என்று கெஞ்சுவது போல….! அந்தப் பேருந்தின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருப்பவரைப் பார்த்தால்…இவருக்குக் கண்ணு தெரியுமாத் தெரியாதா? .ராத்திரி ஒழுங்காக் கொண்டு போயி வீட்டில் சேர்ப்பாரோ …இல்லாட்டா சாலையோரப் புளிய மரத்தில் பஸ்ஸுக்கும் பிரயாணிகளுக்கும் மோட்சம் கொடுப்பாரோ….! என்றெல்லாம் வேண்டாத கேள்விகள் மனசுக்குள் வந்து போகும்.

தனியார் பஸ்ஸில் ஏறினால் ஆட்டுமந்தைக் கூட்டத்தை ஏத்தறாப்பல பஸ் பிதுங்கி வழிந்ததும் தான் அவன் பஸ்ஸைக் கிளப்புவான். அது வரை அவனது இசை என்ற டப்பாங்குத்தில் இருந்து தப்பிக்க முடியாது. மீறி அமர்ந்தாலும்..பஸ்ஸை விட்டு இறங்கியதும் நம்ம தலையில் இடி இடிக்கும்.,.வலி துரத்தும்.

பஸ் பிரேக் டவுன் ஆகாமப் போனால் போதும், பாட்டும் கூத்தும் வேண்டாம்னு நினைச்சால் “அரசைத்” தேர்ந்தெடுத்து அமைதியாக ஏறிக் கண்ணை மூடிக்கலாம். ஊர் போய் சேரும் வரை “உயிரை அந்த பஸ்சுக்கு உயில்” எழுதி வெச்ச திருப்தியோட.

ஞாயிற்றுக் கிழமையானதால் எல்லா பஸ்ஸிலும் இங்கும் கூட்டம் தான். ஸ்ரீ வாரி கல்யாணமாவது…இன்னொன்னாவது….அதை விட சுவாரசிய விஷயம் பாண்டியில் இருக்கும் போது…அதான் “சண்டே மார்கெட்” மக்களை இழுக்கும் காந்தம்.
.
பஸ் ஏறி ஐந்தே நிமிடத்தில் ஆச்சரியமாக பஸ் உறுமிக் கொண்டு பலவித சத்தத்தில் தாளம் இசைத்துக் கொண்டே அங்கங்கே “கிரீச்…க்ரீச்….என்று மக்கர் செய்தபடியே பஸ் கிளம்ப ஆயத்தமாக “ஹாரன்” அடிக்க “ஏய்…டிரைவர் , பார்த்துப் போ…எங்கியாவது கரடு முரடு ரோட்ல ஓட்டினா நானும் ….சுக்கல் சுக்கலா உதிர்ந்திடுவேன்….ஜாக்கிரதை..பிறகு நீ தான் அத்தனை ஆளுங்க கிட்டயும் வெசவு திங்கணும்…..ராத்திரி வேளை ..” என்று சக்கரங்கள் எச்சரிக்கைக் குரல் கொடுத்தது போலிருந்தது டிரைவருக்கு.

“நா இந்த உத்தியோகத்திலேர்ந்து ஓய்வு எடுக்கக்குள்ள ஒரு வாட்டியாவது புதுப் பஸ் ஓட்டணும்…என் பொண்டாட்டி புள்ளங்க கூட கேலி பண்ணுதுங்க….நீ ஓட்டுற தகர டப்பிய நானே உருட்டிட்டு போயிருவேன்னு….நீ தான் அதுக்கு வளியைக் காமிக்கணும்னு” அங்கு மாட்டியிருந்த பெருமாள் சாமி படத்துக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு…பஸ் டிரைவர் கியரைப் போட வண்டி சீறிக் கொண்டு முன்னே பாய்ந்து சக்கரங்கள் உருண்டது.

ஓடும் பேருந்துச் சக்கரங்கள் பஸ் ஸ்டாண்டை உதறி விட்டு வெளியே ஊர்ந்தன.

ஜன்னல் வழியாகப் பார்க்கையில் அழகான ஊர் வழியெங்கிலும் ..மாய லோகம்…இன்ப லோகம்.
மின்னல் நகரமான பாண்டியை விட்டு தன் வயிற்றை டீசல் போட்டு நிரப்பிக் கொண்டு மயக்கத்தில் பஸ்ஸும் கிறங்கியபடி ஓட…”அறுபடை” மருத்துவ கல்லூரியைக் யைக் கடந்ததும்…ஒரு ஸ்டாப்பில் பஸ் இளைப்பாறி நிற்க…அங்கிருந்த டீக் கடையில் “எல்லாம் இன்பமயம்….என்று எம்.எல்.வசந்தகுமாரியின் குரல் ” பின்னணியாய் இசைக்க ஒரு இளவயது தம்பதிகள் மிகவும் கஷ்டப்பட்டு தடுமாறியபடி பஸ்ஸில் ஏற..அவன் ஏறும் முன்னே..அவன் அடித்த “சரக்கின் வாடை” பஸ்ஸுக்குள் ஏறி இடம் பார்த்தது.
நல்லவேளையாக நான் அமர்ந்திருந்த சீட்டில் அவர்களுக்கு இடம் இல்லை.

அவர்கள் ஏறியதும் பஸ் கிளம்பியது. கடைசி வரை ஒரு பார்வை பார்த்து விட்டு ஒரு பக்கத்து சைடு சீட்டில் இருவரும் உட்கார்ந்தார்கள். என்னால் அவர்களை நன்கு பார்க்கும் படியான தூரத்தில் இருந்ததால்…” என்ன மனிதர்கள் …இப்படி குடித்து விட்டு பஸ்ஸில் ஏறுவது? அந்தப் பெண் சொல்ல மாட்டாளா? என்று என்னை மீறி எழுந்த எண்ணம்…சற்று நிமிடத்தில் காணாமல் போனது.

அவனுக்கு வயது முப்பதுக்குள் இருக்கலாம்..அவளுக்கு இருபத்தி ஐந்து வயது இருக்கும்..இந்தத் தண்ணி வண்டியை பத்திரமாக தள்ளிக் கொண்டு வந்து பஸ்ஸில் ஏற்றி விட்ட பெருமை அவள் முகத்தில் வெளிச்சம் போட்டுக் காண்பித்தது.

இந்தா….சும்மாரு….என்று அடிக்கடி தடுமாறும் அவனது கைகளைத் தள்ளி விட்டு அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்…சீட்டில் இருந்து கணவன் விழுந்துவிடக் கூடாதே…என்று.

அவன் திமிறிக் கொண்டு தனது சட்டைப் பையில் இருந்த கைபேசியை எடுத்து…காதுக்குள் வைத்துக் கொண்டு…அதையும் தலை கீழாகத் தான் வைத்திருக்கணும் …பஸ்ஸின் குலுக்கலில் அவனது கை காதுக்கும் காலுக்கும் தாவ…அப்படியும் அவன் நா குழறியபடியே ஏதேதோ யாரிடமோ பேசிக் கொண்டே வந்தான்…நாராசமான வார்த்தைகள் தண்ணி பட்ட பாடாக..!

சில சமயங்களில் சத்தமாகப் பேசுவான்….யாரையோ திட்டுவான்….மனம் போன படியெல்லாம் பேசிக் கொண்டே, திடீரென சிரிப்பான்…கண்ணதாசன் குடிக்கிலியா….கமலகாசன் குடிக்கிலியா…ஏண்டி…உங்கப்பன்….அவன் என்ன உத்தம புருசனா…? அவன் குடிக்கேல……என்னமோ பேசுறா…என்னை என்னா நினைச்சே…என்று பேரு பேராக இழுத்துத் தனக்கு சமமாக போட்டுத் துவைத்து உளறிக் கொண்டிருந்தான்.
இதுவரை வெறும் பஸ்ஸின் சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்க, இவனது பேச்சு சிலருக்கு அருவருப்பாகவும், பலருக்கு சுவாரசியமாகவும் இருக்க…பொழுதைப் போக்க காதைத் தீட்டி கொண்டார்கள். என்னையும் சேர்த்துத் தான். இதென்ன கூத்து…! ஓடற பஸ்ஸில்….நாடகம் மாதிரி…! என்னுள் ஆச்சரியம்…இப்படியுமா ஒருத்தன்….பாவம் அவள்..!
இதுவரை வெறும் பஸ்சின் சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்க, இவனது பேச்சு சிலருக்கு அருவருப்பாகவும், பலருக்கு சுவாரசியமாகவும் இருக்க…பொழுதைப் போக்க காதைத் தீட்டி கொண்டார்கள். என்னையும் சேர்த்துத் தான்.இதென்ன கூத்து ஓடற பஸ்ஸில்….நாடகம் மாதிரி…! என்னுள் ஆச்சரியம்…இப்படியுமா ஒருத்தன்….பாவம் அவள்..!

கடைசியில்…இவளுக்கு வந்தது வினை என்பது போல…”இந்தா புள்ள….நீயும் பேசு…கேட்குறாரு….” என்று இவள் கையில் வலுக்கட்டாயமாக கைபேசியைத் திணிக்கவும்…

இது தான் சாக்கு என்று கைபேசியை வாங்கி நேராக காதில் வைத்துக் கொண்டவள்….” அண்ணே…..இவுக இப்ப ஒரே மப்புல இருக்காக, ஒரு நெலையில இல்ல…எல்லாம் மப்புல தான் பெனாத்துறாரு …நான் கூட்டியாந்துருவேன்…..” முகத்தில் பாதி புன்சிரிப்போடு பேசியவள்…நான் எம்புட்டோ சொன்னேன்…கேக்காம குடிச்சுப் போட்டு வந்து நிக்குது…நான் ஏன்னா செய்றது…? தல எளுத்து..என்று தான் ஆற்றாமையை வார்த்தையாக்கி சுய பச்சாதாபத்தை பிரகடனப் படுத்தினாள்.

நிஜமாகவே பாவமாக இருந்தது. பெண்களின் நிலை எல்லா இடத்திலும் ஏதோ ஒரு வகையில் நிம்மதி இன்மையால் அவதிப் பட்ட படி. நினைத்துக் கொண்டிருக்கும் போதே…

திடீரென….”என்னாளுய்யா நீ….இம்புட்டு நேரமா…நம்பரே போடாத பேசியிருக்கே…இதுல நா வேறப் பேசணுமா….? மூஞ்சப் பாரு…..நீ நெசமாலும் அண்ணாத்த கிட்ட பேசுக்கிருக்கன்னு நெனைச்சு நானுமில்ல இம்புட்டு நேரமா உளறிபுட்டேன்…”என்று வாய் விட்டே சொன்னவள், மெல்ல கைபேசியை தனது பர்சில் வைத்துக் கொண்டாள்…

ஏய்…. என் மொபைலக் தா புள்ள ….ஏய்…என்று திரும்பத் திரும்ப அவனது குரல்…நாராசமாக…!

இந்தா …விடு…என்கிட்டக் கெடக்கட்டும்….ஊடு வந்ததும் தாரேன்…இப்ப என்னான்றே நீ…! என்று எதிர்க்க.

ஏய்…ஃபோன் போடணும்….! தா புள்ள….! மறுபடியும்..

ஆமா…பெரிய கவுர்னரு..! ஒரு நிமிஷம் போன் இல்லாங்காட்டி டல்லாயிருவாரு …என்று சளைக்காமல் அவனது கையை இறுக்கிப் பிடிக்க..

அடியே…..தா….சொன்னக் கேளு..என்னண்ட வம்ப வளக்காத…உன் ..மூஞ்சி மொகரையப் பேத்துருவேன்…! இதே வடிவா இருந்தா இப்படியா செய்யும்….மாமோய்….நீ எவ கிட்ட வேணாப் பேசிக்கோங்கும்….உன்ன இட்டாந்ததுக்கு பதிலா அத்த இட்டாந்துருக்கோணம்…நீ மூதேவி…! அடத் தெரியாமப் போச்சே….ராணிப் பிள்ளைய வாடீன்னு ஒரு வார்த்தை….ஒர்ழே…வாழ்த்தை….கூழ்பிட்டால் நான் வாரேன்னு வந்து நிக்கும்….தெரிழியுமாடி…! என்னவோ நீ ஒழுத்தி தான் எனக்கு இழுக்கறதா நினச்சிகிழாதே…..நீ ஓடிப்போனா இன்னோழுத்தி உடனே ஓழி…. வழுவா….என்று உண்மைகளைக் கிளறிக் கொட்டி உளறி மூடத் தெரியாமல் மாட்டிக் கொண்டவன் அப்படியே சுதாரித்தபடி…

நீ பெரிய மேதாவி….மெத்தப் படிச்சவ…நீ…மூணாப்புல மூணு வாட்டி ஃபெயிலாம்ல….உங்கப்பாரு சொல்லிச்சு…! என்னிய நீ மூணாப்பு வரை படிச்சு பாசு பண்ணிப்புட்டேன்னு உங்காத்தாக் காரி எண்ணிய நம்ப வச்சு மோசம் பண்ணிபுட்டா. அந்த வெள்ளையம்மாளத் தான் கட்டப் போனேன்….ஜஸ்ட் மிஸ்ஸு… உன்கிட்ட மாட்டிகிட்டேன்…!

உங்காத்தாட்ட போயி கொண்டாடீ….அந்த மைனர் சங்கிலி….பத்து பவுனு போடுதேன்னு சொல்லி என்னிய ஏமாத்தி …சிறுக்கி….நீயும் சேர்ந்து இதான்னு…கொடுத்தியே ஒரு டூப்பிளிகேட்டு…..கவரிங்கு சங்கிலி….வட்டிக் கடையில கொண்டுட்டு போயி கொடுத்தா…..என்னிய ஒரு மாதிரி பார்க்கிறான் சேட்டு..! யார ஏமாத்த இங்க வந்துச்சு நீ..? ன்னு கேட்டான்…..அன்னிக்கே உன்ன வெட்டி விட்டுருப்பேன்… ஆனா ஒண்ணு….நீ இப்போ ஃபோனைத் தரலைன்னு வெச்சுக்கோ…..நான் பாட்டுக்கு எறங்கி போய்கினே இருப்பேன். எந்தச் சிறுக்கி எக்கேடு கேட்டா எனக்கென்னான்னு….நீ தெருவுல நின்னு கதரோணம் தனியா நிக்கணும்..தெரியுதா? ஃபோனக் கொடு….இப்பக் கொடுக்கப் போறியா இல்ல……என்று இழுத்தபடியே ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தமே இல்லாமல் உளறிக் கொண்டு கண்ணை உருட்டினான்.

சிவந்த விழிகள் அவனை கோரமாக காண்பித்தது.

அடுத்த சீட்டில் இருந்த குழந்தை இந்த சத்தத்தைக் கேட்டு பயந்து போய் ஒ வென அழ ஆரம்பித்தது….உடனே அந்தக் குழந்தையின் அம்மா…”அழாம பேசாமல் வா….முதல்ல வாய மூடு…இல்லாட்டி அந்த குடிகாரப் பூச்சாண்டி கிட்ட கொடுத்துடுவேன் தெரியுமா..?..” என்று அதட்ட…கப் சிப் என அடங்கி அமர்ந்தது குழந்தை.

இவனது கூச்சல் அத்தனை பேரின் முகத்தையும் திரும்ப வைத்தது. சுளிக்கவும் வைத்தது.

ஏம்பா கண்டக்டர்…..இவனையெல்லாம் ஏன் வண்டில ஏத்துறீங்க….மனுசனா இவன்….! நீ தானே சொல்லோணம்…வாயை மூடச் சொல்லி…நீயே வாயத் தெறக்காமல் வாறீங்களே…அதான் எண்ணு கேக்கறேன்…ஒரு பெரியவர் இந்த அநியாயத்தைக் கண்டித்து கோடியை உயர்த்த…

அதானே…..நாங்களும் பார்க்கறோம்….இவன் அளப்பறை அநியாயத்துக்கு இருக்கே….செவுத்துல நாலு சாத்து சாத்தி எறங்குடான்னு… சொல்லாமே….பொரம்போக்க…… இன்னும் வண்டில ஒட்கார வெச்சுக்கிட்டு…!

பொது மக்கள் சல சலத்தார்கள்.!

அவளும் நேரம் காலம் தெரியாமல் அவனிடம் “தரமாட்டேன்….அதான் ஊட்டாண்ட வந்து தாரங்கரன்னுல்ல…என்று அடம் பிடிக்க.

என்னண்ட வம்பு வளக்காத….. வர்ரியா…செருப்புப் பிஞ்சுரும்…..என்று அவளது தலை முடியைக் கொத்தோடு பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி வைக்க..

இந்தாப் பாரு…என் மேல கைய வெச்ச….மவனே….பஸ்சுன்னு கூட பாக்க மாட்டேன்…பேத்துருவேன் ..பேத்து…தலமுடிய விடுய்யா…முதல்ல….இப்ப இன்னாத்துக்கு என் படிப்ப இளுக்குற நீ? எங்கப்பன, என் ஆத்தாள இளுக்குற…. உனக்கு மப்பு ஏறினா….நான் தான் ஊறுகாயா…?…வா..வா…ஊட்டுக்கு…அங்கே இருக்குடி உனக்குக் கச்சேரி.! என்னமோ வடிவுங்கரே…ராணிங்கரே…கோணிங்கரே கூப்பிட்டுப் பாரு….ஒம்மூஞ்சில காரித்துப்பிட்டு போவா…நீ என்ன பயாஸ்கோப்பு காட்டுறேன்னு நானும் கூட இருந்து பார்க்கத் தானே போறேன்… .என்று இவளும் சளைக்காமல் உறுமினாள்.

அவள் கத்தக் கத்த…

அவனது பிடி இறுகுகிறது. பஸ்ஸின் டாப்பே எகிறிடும் போல ஒரே சத்தம்..

இவள் தனது கரங்களால் அவனது முகத்தை ஒரு குத்து விட…

அவன் கை தளருகிறது.

இதைப் பார்த்ததும் பஸ் கண்டக்டர் பொறுக்க முடியாமல்….” ஏய்…இங்க என்னா… நடக்குது..நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்….ரொம்ப ஓவரப் போகுது…இந்த சண்டியர் தனத்தை வண்டி எறங்கினதும் தெருவில வெச்சிக்க…” இது பஸ்ஸா இல்ல மீன் சந்தையா….. என்றதும்..

அவன் ஆவேசமாக…என்னாது சண்டியரா…? நீ யார்ரா..என்று கை ஓங்கிக் கொண்டு எழவும்…
யாருக்கோ பளார்… ன்னு ஓர் அறை விழுந்த சத்தம் கேட்டது.

பஸ்ஸில் பலரது தலைகளும் ஒருதிசை நோக்கித் திரும்பின. .

எதிர்பாராமல் விழுந்த அடியாலும், அவமானத்தாலும் கதி கலங்கிப் போன கண்டக்டர்…பழி வாங்கும் படலத்தோட…இப்ப இவன் வண்டிய விட்டு எறங்கினாத்தேன்… வண்டி மேல நவுரும்….டேய்….பாப்போம்டா.…நீயா…நானான்னு …என்று பெரிதாகக் கத்தியபடியே விசிலை எடுத்து ஆக்ரோஷத்தோடு ஊதுகிறார்.

நீண்ட விசில் சப்தம்..கேட்டதும் டிரைவர்…இத்த எதிர்பார்த்தேன்….என்று அதற்காகவே காத்திருந்தது போல பஸ்ஸை ஓரங்கட்டி நிறுத்தினார்.

இந்தாம்மா….அந்தாளக் கூட்டிட்டு வண்டிய விட்டு எறங்கு….கைய ஓங்குறான்….இன்னா நினைச்சான்…டேய்…எறங்குடா…டேய்…..யாருகிட்ட…..? என்கிட்டயா காற்றே…உன் உதாரை…..தோலை உரிச்சுப்புடுவேன்….நாக்கை துருத்து முடித்து ஆக்ரோஷமாக கண்டக்டர் அதட்டல் போட. இங்கு இப்போ பெரிய கலகம் நடக்கப் போவது புரிந்தது. பஸ் ஊர் போய் சேருமா? என்ற கவலை…மனதுக்குள்..எழுந்தது.

டிக்கட் பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறயா ? அதுவரை நான் எறங்க மாட்டேன். என்று இன்னும் திண்ணாக்கமாக ஒரு இருந்த இடத்தை விட்டு கொஞ்சம் கூட அசையாமல் அவன் பேச..!

கண்டக்டர் “தன்னுடைய தொங்கு பையில் கைவிட்டுத் துழாவ…” பெரிய டிக்கட்டு பணம்….எடுத்துட்டுப் போடா…! உன்ன இப்படியே போலீசுல கொண்டு போயி விட்டா…அங்க வந்து கேளுடா டிக்கட்டுப் பணத்த…..நல்லாத் தருவாய்ங்க…..லத்தில….! வந்த ஆத்திரத்தில் வாய்க்கு வந்ததெல்லாம் பேச….!
வெளியில் கும்மிருட்டு….இதர பிரயாணிகளுக்கு ஒரு பக்கம் ஆவல்…இனி என்ன நடக்கப் போகிறது என்று காண..அதே சமயம், அந்தப் பெண்ணைப் பார்த்தால் பரிதாபமா இருக்கு ! ..இத்தனை நேரம் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்த நாடகம் முடிவுக்கு வருகிறதே என்று வருத்தம் ஒரு பக்கம்.. பின்னே எந்த ஒரு இடைஞ்சலுக்கும் வருந்தாமல், மின்வெட்டு இல்லாமல், விளம்பரதாரர் இடைவேளை இல்லாமல் இப்படி எந்தச் சேனலில் நாடகம் பார்க்கக் கிடைக்கும்.?

அந்தப் பெண் நிலைமையைப் புரிந்து கொண்டு, ” ஐயா…கொஞ்சம் எனக்காக தயவு பண்ணுங்க…அத்த மன்னிச்சுருங்கய்யா….மப்புல குத்திருச்சு…நான் பார்த்துக்கறேன் ஐயா…வீட்டுக்கு போகணும்…உங்க தங்கச்சியா நினைச்சுக்கிருங்க….இந்த இருட்டுல என்னிய இந்தாளோட இப்படி எறக்கி விட்டுப் போட்டு போனா….நான் ஏன்னா செய்வேன்….வேணாம் சார்…என்று காலில் விழாத குறையாக கண்டக்டரை கெஞ்ச..

பஸ்ஸில் இருந்தவர்கள்….” போட்டும் போப்பா….வண்டிய எடுக்கச் சொல்லு..நீ அவன “தண்ணி” ன்னு தெரிஞ்சதும் அவனை வண்டியில்

ஏத்திருக்கவே கூடாது. இப்போ அந்தம்மா சொல்றாப்போல நடு வளில எங்கே போகும் பொட்டப் புள்ள…நீ அதுங்கிட்ட வாய் கொடுக்காமல் வண்டிய விடு. என்று வண்டியில் இருந்த “மொத்த ஓட்டும்” மொத்தமா அவளுக்கே போய் விழ…! வேறு வழியில்லாமல்…

மீண்டும் விசில் அடித்து போலாம்….ரைட்…….என்றார். காத்திருந்த டிரைவர் கியரைப் போட…வண்டி நொண்டியடித்தது.

இத்தனை நேரம் யாரும் வாயே திறக்கலை….ஏன்…அவனது துர்வாச வார்த்தைக்கு பயந்து ஒரு பக்கம்.ஒரு இரவு நேர தொலைக் காட்சி சீரியல் நேரடி ஒளிபரப்பைக் காணும் ஆர்வத்தில் கல்லெறிந்து அடக்காமல் பார்த்துக் கொண்டு..!
அந்தப் பெண்ணின் நிலையைக் கண்டு பச்சாதாபப் பட முடிந்ததைத் தவிரஎன்னாலும் ஏது உதவியும் செய்ய இயலவில்லை.

ஐம்பது பேரில் ஒருத்தியாக நானும் மாறிப் போய் அந்த துன்ப நாடகத்தைப் பார்க்கத் தொடர்ந்தேன்.

சிலர் பகிரங்கமாகச் சிரித்தனர். சிலர் மனசுக்குள்ளே சிரித்தனர். சிலர் சிரிப்பை அடக்கிக்கொண்டார்கள்…என்னைப் போல,
“ஐயோ பாவம்..! ஒரு பெண்ணின் நிலைமை…! இப்படிப்பட்ட மொடாக் குடியனுக்கு மனைவியாக வாழ்க்கைப் பட்டால் வாழ்க்கையை நகர்த்துவது என்பது எளிதான விஷயமா? அந்தப் பெண்ணுக்கு இறைவன் எத்தனை மனோ தைரியத்தைத் தந்திருக்கணும். எவ்வளவு வலிமையை தந்திருக்கணும். வாழ்க்கையே போராட்டம் தான் என்று ஆகிவிட்ட நிலையில் அவள் பஸ்ஸிலும் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அமைதியான வாழ்வு கிடைப்பது என்பது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்..” என்று எண்ணியபடியே ஜன்னல் வழியே பார்த்தேன். எங்கும் இருள் மயம், இருட்டைத் துழாவின கண்கள்.

பாதி நிலவு…! குளுமையான தென்றல்…இருட்டில் பொட்டல்காட்டின் வயக்காட்டு வாசனை..! இறைவன் மனிதனுக்கு எந்த நேரத்திலும் ரசிக்க ஏகப்பட்ட விஷயங்களை உருவாக்கித் தந்திருந்தாலும்….அவன் கண்ணில் அது எல்லாம் படுவதில்லையே..!

ச்சே….நானும்…அவர்களை வேடிக்கை பார்த்து என்னோட நேரத்தை வீணடித்துக் கொண்டு விட்டேன்….என் மன சிந்தனையை வேறு வழியில் ஓட்ட முயல..!

“வீல்…..வீல்…..ஆஆ……..வெனப் கூச்சல் ! தொடர்ச்சியாகக் அந்தப் பெண்ணின் வலி தாங்க முடியாத வேதனைக் குரல் கதறலாகக் பஸ் ஓடும் சத்தத்தையும் தாண்டி எதிர்பாராமல் அத்தனை பேரின் காதுக்குள்ளும் சைரனாக ஒலித்தது.

அவன் கணவன் என்ற உரிமையைக் கையில் எடுத்துக் கொண்டு அவளை மடித்துப் போட்டு அழுத்தி அவளது முதுகிலும் தலையிலும் அவளிடம் இருந்து பிடுங்கின அந்தப் ஃபோனை வைத்து அடி அடி என்று அடித்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டிருந்தான்.

யார் வீட்டுக் கதையோ? என்று பஸ் பிடிவாதமாக ஓடிக் கொண்டே இருந்தது.

“கரம்,சிரம்,புறம் நீட்டாதீர்கள் என்று பஸ்ஸில் எழுதி இருந்ததே..
‘குடி பஸ் பயணத்தையும் கெடுக்கும். குடித்திருந்தால் பஸ்ஸில் இடமில்லை” என்றும் எழுதி இருக்கலாமோ?

பஸ் கண்டக்டரோ.”இன்னொரு வாட்டி இந்தக் குடிகாரப் பயகிட்ட குத்து வாங்க முடியாது…..”இதெல்லாம் பாண்டி வண்டில சகஜமப்பா..எத்தனை டிராமாப் பார்த்திருப்போம்..” இதென்ன எனக்குப் புதுசா? அந்தப் பொண்ணோட அதிர்ஷ்டம்…இவிங்க சொன்னதால எறக்கி விடாம விட்டுப்புட்டேன். இப்படி எத்தன பேரை நடு வளில எறக்கி விட்டிருக்கேன்…சாவுக்கிராக்கி…வண்டிய நேரா காவல் நிலையத்துக்கு விட்டு….இவன அங்க வச்சு நல்லா நொங்கணும் ..என்ற படியே டிக்கெட் பணத்தைக் கணக்கு பண்ணிக் கொண்டிருந்தார்.

ஒரு மனிதனை மிருகமாக்கிய மது… ஒரு பெண்ணை மிதிக்கும் கால் கம்பளம் ஆக்கியது மது. அவனது மனைவி என்றும் பாராமல் மத்தளமாக்கி வெறியைத் தணித்துக் கொண்டது அவனது போதை.

செதம்பரம்….செதம்பரம்….எறங்கு….சீக்ரம்…சீக்ரம்…! என்ற கண்டக்டரின் குரல்..! என்னுள் ஒரு பரபரப்பு..நான் .இறங்க வேண்டும்….!

ஒரு வழியா நல்ல படியா கொண்டு வந்து சேர்த்தான்….நினைத்துக் கொண்டே….படியை விட்டு இறங்கினேன்.

பின்னாடியே அவர்களும்…தள்ளாடியபடியே இறங்கி நிற்க..

“டேய்….மொட்ட….நாம எப்படா…பஸ்ஸ விட்டு ஏறங்குவம்னு காத்துக்கிட்டு கிடந்தேன். ஊட்டுக்கு வா…உன்னத் துவச்சு நல்லா வெளுத்து கட்றேன். அம்புட்டு பேரு மத்தில எம்மான் தைரியம்….அடிக்கிற நீ…என்றவள் தன் கையில் இருந்த கனமாக பையால் அவன் முதுகில் சுளீர் சுளீர் என்று விளாசிக் கொண்டே நடக்கிறாள். அதீத போதையால் நடக்க முடியாதவன் கழுதையாக கால் பிறழ அவன் நடப்பது போலவும்….இப்போது சாட்டை என் கையில் என்பது போல அவளும்…இனிமேட்டுக் குடிப்பியா…? என்று கேட்டு முதுகில் ஓங்கிப் போட….”மாழ்தேன்…..மாழ்த்தேன்….அழுக்காதல்ல,,,,,வழுக்குது.”…என்று தடுமாறிக் கொண்டே போனான்..

தங்களின் அழகான இல்வாழ்க்கையை இந்த நிலைக்கு கொண்டு வந்து விடக் காரணமானது எது என்ற சிந்தனையே இல்லாமல்…அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்..

ஆட்டோவைப் பிடித்து நானும் என் கூட்டை நோக்கி…நகர்ந்து கொண்டிருந்தேன். பயணக் களைப்பு பஸ் நாடகக் களிப்பில் இதுவரை தெரியாமல் போனது. ஒரு பிரயாணத்தை…மறக்க முடியாததாக ஆக்கி வைத்து விட்டார்களே..

புதிய விடியலுக்காக இரவு காத்திருந்தது….மனிதனைப் போலவே…!

கீழ்வானம் சிவந்து ஆஹா வென்று மீண்டும் எழுந்தான் சூரியன். பகல் போய் இரவு எப்போது வரும் என்று தவங் கிடந்தன சில தள்ளாடிகள். மேல் வானம் சிவக்கவும், குடிகாரர் மதுக்கடை நோக்கி நடை வண்டியில் மீண்டும் படை எடுத்தனர் … !

வானொலிப் பெட்டியில் ”இன்பம் எங்கே….. இன்பம் எங்கே…… என்று தேடு…அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு…” என்று பாடல் ஒலித்து வசைபாடிகளுக்குத் திசை காட்டி அழைத்தது. அந்தப் பாட்டின் முதல் வரியை மட்டும் பிடித்துக் கொண்ட வாடிக்கைப் பேர்வழிகள்…..”நேற்றைய கூத்து போதையோடு போச்சு ” என்பது போல்…..” இதோ….வந்தோம், இதோ….வந்தோம்…….என்று வாசலில். .. ஆஜர் ஆகி..ஈசல் போல் குவியத் தொடங்கினர்.
நடு ராத்திரி நாடகங்கள் மீண்டும் …. !

– 03 செப்டம்பர், 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *