ஓடிப்போன பிள்ளை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 11,325 
 
 

கொதித்து கொண்டிருந்த உலையில் அரிசியை களைந்து போட்ட குருவம்மா, விறகை உள்ளுக் கிழுத்து தணலை அதிகப்படுத் தினாள். ஒரு மண்சட்டியில் ஜிலேபி கொண்டை மீன் சுத்தமாக கழுவப்பட்டு, குழம்பில் கொதிப்பதற்கு காத்து இருந்தது.
மசாலா அரைத்து, மகனுக்கு பிடிக்குமென்று புளியை சற்று தூக்கலாக விட்டு, குழம்பை கரைத்தவள், நல்லெண்ணெயில் தாளித்து, குழம்பை அடுப்பில் ஏற்றினாள். மீனுடன் சேர்ந்து குழம்பு மணமாக கொதிக்க ஆரம்பித்தது.
ஓடிப்போன பிள்ளைஅந்த பழைய கால ஓட்டு வீட்டை, ஒருமுறை நோட்டமிட்டாள். வீட்டுக்கு சொந்தக்காரர், தன் வீட்டின் பக்கவாட்டு சுவற்றில் ஒரு சாய்ப்பு இறக்கி, அந்த சிறிய ஓட்டு வீட்டை கட்டியிருந்தார். குருவம்மா கல்யாணம் முடித்து, கணவனுடன் குடித்தனம் நடத்த ஆரம்பித்ததிலிருந்து, அந்த வீடு தான், அவளுக்கு அடைக்கலம்.
இதோ, இந்த வீட்டை பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. முப்பது வருடங்கள், அவள் வாழ்ந்த வீடு. சாமான்கள் ஒரு சாக்குபையில் கட்டப்பட்டு, தயார் நிலையில் இருந்தது. ஒரு பழைய காலத்து டிரங்க் பெட்டி; அதுதான், அவளது உடைமைகள்.
“ஆத்தா… உன் மகனை கோயம்பேடு மார்க்கெட்டில் பார்த்தேன். ஆளே அடையாளம் தெரியலை. அவன் தான் என்னை கண்டுக்கிட்டு வந்து, பேசினான். “ஏலே… இப்படி அப்பனையும், ஆத்தாவையும் தவிக்க விட்டுட்டு, வூட்டை விட்டு ஓடி வந்துட்டியே… ஒரு வருஷமா… இரண்டு வருஷமா… பத்து வருஷம். வூட்டு பக்கம் வந்து எட்டி பார்க்க கூட இல்லையே… நல்லா இருக்கியா?’ன்னு விசாரிச்சேன்.
“எங்கோ ஓட்டல்ல வேலை பார்த்து, இப்ப ஓரளவு வசதியா, சொந்தமா ஆட்டோ ஓட்டிட்டு இருக்கானாம். கல்யாணம் கட்டி, மூணு வயசிலே பொம்பளை புள்ளை இருக்காம். இருந்தாலும் கல் மனசுக்காரன் ஊர் பக்கம் வரவுமில்லை. கல்யாணம் முடிச்சதைகூட தெரிவிக்காம…
“அப்புறம் நானாகத் தான் சொன்னேன். அப்பாரு விபத்திலே இறந்து போனதையும், இப்ப நீ தனி ஆளாக கிடந்து தவிக்கிறதையும் சொன்னேன். எல்லாத்தையும் விவரமாக கேட்டவன்… “வர்ற ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு வாறேன். ஆத்தாவை தயாராக இருக்கச் சொல்லு… அவளை என்னோடு கூட்டியாந்து வச்சுக்கிறேன்…’னு சொன்னான். கிளம்பு ஆத்தா. கடைசி காலத்திலாவது, மகனோடு போயி சந்தோஷமா இரு…’
மேடத்தெரு கண்ணப்பன் வந்து சொன்ன செய்தியால், பூரித்து போனாள் குருவம்மா.
“என் மகன் வரப் போகிறான்; என்னை அழைத்து போகப் போகிறான்…’
***
மருதுவுக்கு மகன் மீது கொள்ளை பிரியம். தட்டுவண்டி ஓட்டி, கூலிக்காரனாக வேலை பார்த்தாலும், மகனை மட்டும், ராஜா வீட்டு பிள்ளை மாதிரி கவனித்துக் கொண்டான். அவன் கேட்பதையெல்லாம், முகம் கோணாமல் வாங்கி கொடுத்தான்.
மருதுவுக்கு படிப்பின் மீது தணியாத ஆர்வம். தான் படிக்கவில்லை என்பதாலோ என்னவோ, மகனை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டுமென்பது, அவன் கனவாக இருந்தது.
“கதிரு நீ எதையெல்லாம் விரும்புறியோ, அதை இந்த அப்பாரு எப்படியாவது வாங்கியாந்துடுவேன். நீ மட்டும் படிப்பில் கவனமாக இருந்து, நல்லா படிக்கணும்டா… நீயும் பெரிய, பெரிய ஆபிசரை போல அழகாக பேண்ட், சட்டை போட்டுக்கிட்டு, காரிலே வரணும். அதை அப்பாரு கண்குளிர பார்க்கணும்…’
கதிரும் பத்தாவது வரை, ஓரளவு கவனமாக தான் படித்தான். அதற்கு பின் சேர்க்கை சரியில்லாமல், அவன் கவனம் குறைய, விளையாட்டு போக்காக திரிய ஆரம்பிக்க. மருது அன்பாகவும், அதட்டலாகவும் எவ்வளவோ புத்திமதி சொல்லியும், அவன் காதில் வாங்கவில்லை. மருது மனம் வெறுத்து போனான்.
தன் மகனும் படிக்காமல், வாழ்க்கையை தொலைத்து விடுவானோ… தான் கனவு கண்டது போல், அவன் பெரிய ஆபிசராக வரப்போவதில்லையோ என்ற எண்ணம், அவனை அலைக்கழித்தது.
அன்று நண்பர்களுடன் காசு வைத்து, மூணு சீட்டு விளையாடுவதை பார்த்த பிறகு, மருதுவுக்கு கோபத்தை அடக்க முடியவில்லை. வீட்டிற்கு வந்தவன் காலில், அடுப்பில் எரிந்துக் கொண்டிருந்த விறகு கட்டையால் சூடு வைத்தான்.
“இங்கே பாரு… நீ படிக்காம தறிகெட்டு போறதை பார்த்துட்டு சும்மா இருப்பேன்னு நினைக்காதே… தொலைச்சுபுடுவேன். ஒழுங்கா படிக்கிற வழியை பாரு…’
கொஞ்சமும் கண் கலங்காமல், மருதுவையே முறைத்து பார்த்தவன், விடியற்காலையில், யாருக்கும் தெரியாமல் குருவம்மா பெட்டியில் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு ஓடியே போய்விட்டான்.
மருதுவும், குருவம்மாவும் தவித்து போய் விட்டனர்.
“என்னய்யா இது, படிப்பு படிப்புன்னு புள்ளையையே பறிகொடுக்க வச்சுட்டியே… என் புள்ளை எங்கே போனான்னு தெரியலையே…’ குருவம்மா அழுது புலம்பினாள்.
“என் புள்ளே பெரிய ஆபிசராக வரணும்னு, நான் நினைச்சது தப்பா… படிக்கிற புள்ளைங்களை பார்த்து, என் புள்ளையும் நல்லா படிக்கணும்னு ஆசைப் பட்டேனே அது தப்பா? இப்படி என்னை புரிஞ்சுகாம, பெத்தவங்களை தவிக்க விட்டுட்டு போயிட்டானே…’
மனதால் மிகவும் ஒடிந்து போனான் மருது. நடைபிணமாக இருவரும், வாழ்க்கையை நகர்த்தினர். வருடங்கள் ஓடி கொண்டிருக்க, கதிரு வரவே இல்லை. ஓடிப் போனவன், ஓடிப் போனவன் தான். மகனை நினைத்து நினைத்து, இருவரும் வாழ்க்கையின் சந்தோஷங்களை தொலைத்தது தான், மிச்சமாகி போனது.
போன வருடம் தட்டு வண்டியில் சாமான்களை ஏற்றி, மனதில் சோகத்தை சுமந்து கொண்டு வந்த மருதுவுக்கு, எதிரில் வந்த லாரி, எமனாகி போனது. நடுதெருவில் சிதைந்து போனான் மருது.
குருவம்மாள், தனியாகி போனாள். வீட்டு வேலை செய்து தான், வயிற்று பாட்டை பார்த்துக் கொண்டாள்.

***

“தம்பி உன் நிலைமை, எனக்கு புரியுது. நல்லா படிக்கிற புள்ளை. ப்ளஸ் டூவில் நல்ல மார்க் வாங்கியிருக்கே. காலேஜில் சேர்ந்து படிக்க, உனக்கு வசதி இல்லை. நானும் ஏதாவது சங்கங்கள் மூலமாக, உனக்கு உதவி தொகை வாங்கித் தர, முயற்சி பண்றேன். நீ திரும்ப அடுத்த வாரம், என்னை வந்து பாரு…’
அந்த பையன் விடைபெற்று செல்ல, அதுவரை அங்கு ஓரமாக நின்று கொண்டிருந்த குருவம்மாள், அவரிடம் வந்தாள்.
“வாத்தியாரய்யா… அம்மா சொன்னாங்களா. நான் வேலையை விட்டு நின்னுக்கிறேன். என் புள்ளை என்னை தேடி வர்றான். என்னையும், கூடவே அழைச்சுட்டு போறதா சொல்லி இருக்கான். பத்து வருஷம் கழிச்சு, என் புள்ளையோடு சேரப் போறேன்…’
“ரொம்ப சந்தோஷம் குருவம்மா. போய்ட்டு வா. வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டவ. இனியாவது, புள்ளை, மருமகளோட சந்தோஷமாக இரு…’
***
மகனை பார்த்து மகிழ்ந்து போனாள். வாட்டசாட்டமாக நிற்கும் மகனை, கண்குளிர பார்த்தாள். பேத்தியை வாரியணைத்து, முத்த மழை பொழிந்தாள். மருமகளை வாஞ்சையுடன், அணைத்துக் கொண்டாள்.
“”கதிரு… இப்படி அப்பனையும், ஆத்தாவையும் மனசிலிருந்து தூக்கியெறிஞ்சுட்டியே. உன்னை இழந்து நாங்க தவிச்ச தவிப்பு அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும். உங்கப்பாரு, புள்ளை இருந்தும் கொள்ளி போட யாரும் இல்லாம, போய் சேர்ந்தாரு. உன் நல்லதுக்கு ஆசைபட்டு தானே, உன்கிட்டே கொஞ்சம் கடுமையா நடந்துக்கிட்டாரு. எங்களை இப்படி தண்டிச்சுட்டியேப்பா.”
“”சரி ஆத்தா… பழசை பேசி என்ன ஆகப் போகுது. உன் கையால சாப்பிட்டு எத்தனை வருஷமாகுவது. முதல்ல சோத்தை போடு ஆத்தா.”
“”காலையிலே வெள்ளண கிளம்பணும். சாமானெல்லாம் கட்டி வச்சுட்டியா ஆத்தா.”
“”என்னப்பா பெரிய சாமான். அதோ அந்த மூட்டையும், பெட்டியும் தான்.”
“”அத்தே ஊருக்கு வாங்க. உங்களுக்கு வேணுங்கிறதை நான் வாங்கி தாரேன்.”
“”சந்தோஷம் தாயி. என் புள்ளே கல்யாணம் கட்டினதை, எங்கிட்டே சொல்லலியேன்னு வருத்தப்பட்டேன். நல்ல பொண்ணாகத் தான் கட்டியிருக்கான்.”
மருமகளை வாஞ்சையுடன் பார்த்தாள்.
***
இரவு படுக்கும்முன், குருவம்மாவின் அருகில் வந்து உட்கார்ந்தவன்,””உன்னையும், அப்பாரையும் வுட்டுட்டு போனது தப்பு தான் ஆத்தா. என்னமோ நமக்கு பிடிச்ச கெட்ட நேரம். அப்பாரு ஆசைபட்டபடி, நான் படிக்காம போயிட்டேன். இப்ப ஓரளவு சம்பாதிச்சு, வாழ்க்கையை ஓட்டறேன். ஆத்தா நாளை காலையில் கிளம்பணும். நீ உனக்கு தெரிஞ்சவங்க, பழகினவங்க கிட்டே சொல்லிட்டியா?” என்றான்.
“” ஒரு வாரமாக, என் மகன் வந்து கூட்டிகிட்டு போக போறான்னு சந்தோஷமாக எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டு தான் இருக்கேன்.”
“”ஆத்தா… அப்புறம் ஒரு விஷயம். அப்பாரு விபத்திலே செத்ததுக்கு நஷ்டஈடாக, இரண்டு லட்சம் கொடுத்தாங்களாமே. அதை எங்க வச்சிருக்கே… எடுத்துக்கிட்டியா?”
மகனை கூர்ந்து பார்த்தாள் குருவம்மா.
“”எந்த பணம், அப்பாரு உசுர வுட்டிச்சே அதுக்கு வந்த பணமா… அவரே போயிட்டாரு… பணத்தை வச்சு, நான் என்ன செய்ய போறேன்னு அதை நன்கொடையாக, ஆதரவற்ற இல்லத்துக்கு தூக்கி கொடுத்துட்டேன். தனி ஆளாக இருக்கிற எனக்கு, எதுக்குப்பா அவ்வளவு பணம்?”
“”என்ன ஆத்தா இது… பணம் ஒரு மனுஷனுக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? அதுக்கு தானே உழைக்கிறோம். சரி சரி போய் படு. காலையில் வெள்ளண கிளம்பணும்.”
***
மறுநாள் காலை பொழுது விடிந்தது.
“நல்லா துங்கிட்டோம் போலிருக்கே. கதிரு, சீக்கிரம் போகணும்னு சொன்னானே…’
அரக்க பரக்க எழுந்தாள். ஆனால், கதிரையோ, அவன் மனைவி, குழந்தை என யாரையும் காணவில்லை. அவள் கட்டி வைத்த மூட்டையும், பெட்டியும் மட்டும் ஓரத்தில் இருக்க, அவளுக்கு புரிந்தது…
திரும்பவும் அவன் மகன், அவளை விட்டுட்டு ஓடிவிட்டான். மனதின் சுமை, கண்களில் கண்ணீராக வெளிப்பட்டது. உண்மையான பாசத்தோடு, தாயை அழைத்து போக வரவில்லை; பணம் தான் அவனை வரவழைத்திருக்கிறது என்பது அவளுக்கு தெளிவாக புரிந்தது.
***
“”மகனோட ஊருக்கு போறதாக சொன்னியே… வந்திருக்கே…”
“”ஐயா, உங்ககிட்டே பணம் கொடுத்து பாங்கிலே போட்டது…”
“”நானே அதை எடுத்து, உன்கிட்டே தரணும்னு இருந்தேன். ஊருக்கு போற நீ எடுத்துட்டு போயி, மகன்கிட்டே கொடு. இன்னும் அரை மணியிலே கொண்டு வந்து தரேன்.”
“”ஐயா… ஒரு தம்பி மேற்படிப்பு படிக்க வசதியில்லைன்னு பண உதவி கேட்டு வந்துச்சே. அந்த புள்ளை படிக்கிறத்துக்கு அந்த பணத்தை எடுத்து கொடுங்க ஐயா…”
“”என்ன ஆத்தா சொல்றே? அந்த பணத்தை நாளைக்கு உன் மகன், உன்னை தேடி வந்தா கொடுக்கணும்னு சொல்லி, பத்திரப்படுத்தி வச்சிருந்தே…”
“”உண்மையான பிரியத்தோடும், பாசத்தோடும் என் புள்ளை ஒருநாள், இந்த ஆத்தாவை தேடி வருவான்னு, நம்பிக்கையை மனதில் சுமந்துக்கிட்டு, இத்தனை நாள் வாழ்ந்துட்டு இருந்தேன். என் நம்பிக்கை பொய்யாகி போச்சு ஐயா. அவனுக்கு நான் வச்ச பரிட்சையிலே, தோத்து போயிட்டான். திரும்பவும் இந்த வயசான ஆத்தாவை தவிக்க விட்டுட்டு, சொல்லாம, கொள்ளாம போயிட்டான் சாமி. பணத்தை கொடுத்து, பாசத்தை விலைக்கு வாங்க நான் தயாராயில்லை. படிப்பு, படிப்புன்னு உசிரை விட்ட என் புருஷனுக்காக வந்த பணம், படிக்கிற புள்ளைக்கு உதவட்டும். இந்த கை, காலு நல்லா இருக்கிற வரைக்கும், நான் உழைச்சு சாப்பிட்டுட்டு போறேன்,” சொன்னவள், எதுவுமே நடக்காதது போல், பத்து பாத்திரம் தேய்க்க, குழாயடியில் உட்கார்ந்தாள்!

– ஜூன் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *