ஒவ்வொரு பெட்டியிலும் ரயில் இருக்கிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 6, 2023
பார்வையிட்டோர்: 2,470 
 
 

வினைகளின் வழியே எதிர் வினை நிகழ்கிறது போலவே எதிர்வினைகள் வழியே வினைகளும் நிகழ்கின்றன.

என்னவோ தைரியம். இன்னதென்று சொல்ல இயலாத மூர்க்கம். இன்பா தன்னை இசைத்துக் கொண்டே அமர்ந்திருக்கையில் தான்… இலை மேல் நகரும் தென்றலைப் போல அவள். நிற்பது போல நடக்கவும் தெரிந்திருக்கிறாள். எந்த ஒரு கணத்திலோ அவள்… அவனை ஒரு முறை கண்டாள் என்று தான் தோன்றியது. தோற்ற மயக்கம் தான் எனினும் அது தோன்றிய மயக்கம் எனவும் கொள்ளலாம்.

கண்களின் வார்த்தைகளை சிறு புன்னகை வழியே செய்து விடும் மாயம்… இருக்கும் தான் போல. இன்பா பார்த்துக் கொண்டடேயிருந்தான். ஒரு கணம்… ஒரே கணம் மனதுக்குள் எதுவோ மின்னல். ஏனோ அருவி. இசையாய் ஒரு பறவை.

முதல் சுற்றுக்கு அழைத்தார்கள். கண்டதும் ஆச்சரியம் தான்… எதிரே அமர்ந்திருந்த இண்டெர்வியூவர்க்கு.

தாகூர் தாடி… பாரதி மீசை… சுருட்டி விட்ட சத்யா கமல் அரைக்கை சட்டை…பெல்ட் போடாத டக் இன்.. கையில் வளையம் தான் மிஸ்ஸிங். பார்த்ததுமே யார்ரா இவன் என்று திரும்பி பார்க்க வைக்கும் ஸ்மார்ட்னெஸ். நம்பலாம்…2000 திலேயே 2010 கண்கள்.

“எம் பி ஏல என்ன படிச்ச…?” என்றார்…எதிரே அமர்ந்திருந்தவர்.

இன்பா… யோசித்தான். கண்களை மூளைக்குள் ஒரு சுற்று சுற்றி கண்டெடுத்தான். சொற்கள் இப்படி வந்தன. “எம் பி ஏல…… எம்…. பி ஏ தான்…”

நியாயமாக கோபம் வந்திருக்க வேண்டும். அவர் முதல் ரவுண்ட் ஓகே… நெக்ஸ்ட் ரவுண்ட் நாளை மறுநாள் என்றார்.

ஒன்றும் புரியாமல்… புன்னகைத்தான். புன்னகைக்கவும் மறந்திருந்த சூழல்… நெற்றி சுருக்கி புருவம் தூக்க வைத்தது.

விளையாட்டு போக்கில் தான் இன்பாவின் முதன் வேலை. அங்கு தான் விஜயகுமாரியை கண்டது. கண்டதும் காதல் தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறை பிறந்து இறக்க காதல் தான் சரியான கடிகாரத்தை வைத்திருக்கிறது.

நாட்கள் நகர… வேலையிலும் வேர் பிடித்தான். காதலிலும் விருட்சம் வளர்த்தான். விஜயகுமாரிக்கு முன் அவன் வாழ்வில் வந்த பெண்கள் ஒரு பட்டியல் உண்டு. ஆனாலும்… அவன் பதட்டப்படாமல் நின்று தன்னை யோசித்தது விஜயகுமாரியிடம் தான்.

தொட்டியில் இரண்டு மீன்கள் ஒன்றாக நீந்தும். நீந்திக் கொண்டே இருக்கும். சட்டென இடது புறமோ வலது புறமோ ஒரு சேர… ஒரே நேரத்தில் கணம் பிசகாமல் திரும்பும். வானத்தில் பறவை கூட்டமும் அப்படித்தான். எங்கோ சென்று கொண்டிருக்கும். எதற்கோ படக்கென ஒன்றாக திரும்பும். ஏதோ சூத்திரம் கண்டடைந்தது போல.

அப்படி என்றால்… ஒன்றுக்கொன்று இடையில் இருக்கும் தொடர்பு ஆதியில் இருந்து அதுவாகவே வளர்ந்திருக்கிறது. உயிர்களிடத்தில் ஆதி தொட்டு… இருக்கும் ஒன்றுக்கொன்றான தொடர்பு… ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தாவும் செய்தி…. ஒன்று இன்னொன்றாவது… என்று தோன்றிய எதுவும் அழிவதில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

இன்பா விஜயகுமாரி காதல் கதையில் கூட இந்த தொடர்பியல் மிக நுட்பமாக வேலை செய்திருக்கிறது. இவர்கள் இணைய ஒரு இருபதாண்டு கால வாழ்க்கை மிக தெளிவாக ஒன்றிலிருந்து ஒன்றுக்கு நகர்ந்திருக்கிறது.

அது நடக்க வேண்டும் என்றால் இது நடந்திருக்க வேண்டும். இது நடந்திருக்க வேண்டும் என்றால் அது நடக்க இருக்க வேண்டும். நடந்து கொண்டிருப்பது எல்லாமே நடந்து கொண்டிருப்பது தானா என்றால் நடந்து முடிந்ததாகவும் இருக்கலாம். நடக்க இருப்பவையாகவும் இருக்கலாம். முக்காலத்திலும் இருப்பதால் தான் மூச்சு விட முடிகிறது.

அந்த நாள் அப்படி ஒன்றும்… மறந்து விட முடியாதது.

அன்று இன்பாவுக்கு முதுகலை பட்டத்துக்கான வைவா. தயாராகிக் கொண்டிருந்தான். தொலைபேசிக்கு அழைப்பு. யாரோ ஒருவன் உளறுகிறான் என்று தெரிய வருகிறது. தொலைபேசியை வாங்கி காதுக்கு கொடுக்க… “இன்பாண்னா… நான் பாண்டி…. சந்தன பாண்டி… மேகமலைல இருந்துண்ணா…!” என்றான்.

சந்தன பாண்டி யாரு…. ஒரு கணம் உள்ளே நினைவு பட்டியல் ஸ்க்ரோலிங் ஆனது.

சந்தியா தேவியின் அண்ணன்…. அவன் எடுத்துக் கொடுத்தான்.

அட.. என அக்கணமே இன்பாவின் நெற்றி சுருக்கம் அகன்றது. பழக்கப்பட்ட புன்னகையை தொலைபேசி சுருட்டிக் கொண்டது.

விஷயம் இது தான்… வீட்டில் சண்டையிட்டுக் கொண்டு வந்து விட்டான். பேருந்து நிறுத்தத்தில் நிற்கிறான். போய் அழைத்து வர வேண்டும்.

இன்னைக்கு வைவா வேற…… இவன் இப்பிடி சொல்றான்.. உள்ளே பத்து சிந்தனைகள் ஓடினாலும்… சந்தியா தேவி ஒரு கணம் கண்களுக்குள் வந்து நிறைந்து போனாள்.

அலைந்து திரிந்து அலேக்காய் சந்தன பாண்டியை அள்ளிக் கொண்டு வந்து வீட்டில் விட்டான்.

“சாப்ட்டு வீட்ல இரு.. சாயந்திரம் வந்து பேசிக்கலாம்” என்று வைவாக்கு வேகம் எடுத்தான் இன்பா. சந்தியா தேவி தான் இன்பாவின் தொலைபேசி நம்பரை அண்ணன் சந்தன பாண்டிக்கு கொடுத்திருக்கிறாள்.

வாழ்வின் தீராத ஓட்டத்தில் கை மாறிக் கொண்டே இருக்கும் தொடர்பு… ஒரு நீண்ட வளைவு. இருத்தலின் மேல் கொண்ட நம்புதலின் மேல் தான் மெல்ல நடக்கிறது எறும்பின் கால்கள்.

மாலை நேரம் மலர்வனத்தில் நகர்வதாக பட்டது நகர வீதி.

“எந்த கோவிந்த்டா….?”

“அட சபரிமலைக்கு வருஷாவருசம் மாலை போடுவாரே..”

அப்போதும் யாரென்று தெரியவில்லை.

“ம்ம்ம்… கொஞ்சம் கருப்பா இருப்பாரே…”

“ஊர்ல பாதி பேர் கருப்பாதான்டா இருக்கான்…”

கொஞ்சம் குட்டையா இருப்பாரே… என்ற சந்தன பாண்டியை கண்கள் குறுக பார்த்தான் இன்பா.

தலைக்குள் ஒரு பக்கமிருந்து மறுபக்கத்திற்கு மளமளவென ஏறி ஏறி சறுக்கிக் கொண்டிருந்தன நினைவுகள்.

“யாரை சொல்றான்…? சரி பார்க்கத்தானே போகிறோம்…!” என்று அவன் கொடுத்த முகவரியில் மூச்சு முட்ட முசுமுசுத்தான் இன்பா.

“இங்க தான் இருந்தாங்க.. இப்ப இல்ல..” என்ற வீட்டுக்காரியை பார்க்க ஏனோ பிடிக்கவே இல்லை. நைட்டியில் இருந்து எழும்பும் கிச்சன் வாசம்.. ஒரு வகை நெடியை சுழற்றியது.

எப்படி எப்படியோ பேசி… இப்போது இருக்கும் ஏரியாவை கண்டுபிடித்து அங்கொருவர் மூலமாக வீட்டுக் கதவை தட்டுகையில்… இரவு ஊரலைந்து ரெஸ்ட் எடுக்கும் ஸ்கூட்டியைப் போல கழுத்தை சாய்த்து நின்றிருந்தது.

சற்று நேரத்தை நிறுத்தி வைத்து விட்டு பூமியின் கோடிக்கணக்கான ஜன்னல்களில் இருந்து ஒன்றை திறந்து கொண்டு வந்தவன் போல படக்கென்று வெளியே வந்தவன் கூர்ந்து கண்ட நொடிகளில் அதே குக்குறு சிரிப்போடு… “இன்பா….!!!!” என்று கட்டிக் கொண்டான்.

“ஹே…. நம்ம சிவா…!”என்று வாய் முனங்க…ஆர தழுவிக் கொண்டார்கள்… பால்ய நண்பர்கள். இருவரையும் பேச்சின்றி பார்த்தான் சந்தன பாண்டி.

“என்ன சந்தன பாண்டி… வீட்டுல எதோ சண்டையாமா…. வா வா பாத்துக்கலாம்..” என்றவனை…” கோவிந்ண்ணா……!” என்ற சந்தான பாண்டி… எதிலிருந்து எதை ஆரம்பிப்பது என்று தெரியாமல் கண்களில் கவிழ்ந்து கவிழ்ந்து எழுந்தான்.

“சிவராம கோவிந்துன்னு சொல்லிருக்கலாம்ல… ஆனாலும்… கிட்டதட்ட 10 வருஷம் கேப் எங்களுக்குள்ள.. உன்னால தான் பாத்துக்க முடிஞ்சது.. தேங்க்ஸ் பாண்டி” என்றான் இன்பா…அவன் தோளை ஆதுர்யமாய் அசைத்து.

பேச்சில் சந்தன பாண்டியை விட்டு விட்டு.. “நீ என்ன பண்ணிட்டுருக்க இன்பா…?” என்றான் சிவா.

“டிகிரி முடிஞ்சது. வேலைக்கு தான்… அலைச்சல்…” என்றான். அது வருத்தம் மாதிரியும் இல்லை. ஒரு விருப்பம் மாதிரியும் இல்லை. அது ஒரு வழக்கம் போல.

தம்மை ஆழமாய் இழுத்துக் கொண்டே யோசித்த சிவா… “நாளைக்கு lgk கம்பெனிக்கு ரெஸ்யூமோட வா…சொல்றேன்” என்றான்.

சிறு கணம் அவனையே பார்த்த இன்பா…”அதென்ன நாளைக்கு… இந்தா…இன்னைக்கே வெச்சிருக்கேன்…” என்று வண்டியில் இருந்து ரெஸ்யூமை எடுத்து நீட்டினான். வேலை தேடுபவன் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று எப்படியோ இன்பாவுக்கு தெரிந்திருக்கிறது. சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டான் சிவா.

ரெசியூமை சிவா எப்போது கொடுத்தான் என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் lgk கம்பனியில் இருந்து இன்பாவுக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்பு…வந்திருந்தது.

எங்கோ படபடக்கும் பட்டாம்பூச்சி அசைவில் எங்கோ நடக்க போகும் ஒரு பூகம்பத்தின் அதிர்வு முன் கூட்டியே எச்சரிக்கை செய்யப்படுகிறது என்று கேயாஸ் தியரியை தசாவதாரம் படத்தில் கமல் சொன்ன பிறகு தான் நமக்கு தெரிகிறது. ஆனாலும்… முப்பது வருடங்களுக்கு முன்பு… ஏன் இன்னைக்கு இத்தனை காக்கா வாசல்ல வந்து வந்து கத்துது என்று பெரியம்மா புலம்பிய அன்று தான்… அதே நேரம் தான் குன்னூரில் தாத்தா மீது பஸ் ஏறியது.

லலிதாக்காவுக்கு முதுகுல ஒரு ஆப்ரேஷன். இங்க தான் ஆஸ்பத்திரில அட்மிட். போய் என்ன ஏதுன்னு பார்த்துட்டு வா என்ற சொல்…ஆஸ்பத்திரியில் அலைந்து திரிந்து லலிதாக்காவை கண்டடைகையிலும் காதோரம் குறுகுறுத்து கொண்டே இருந்தது.

“சின்ன வயசுல வீட்டுக்கு முன்னால வந்துட்ட காட்டுமாடு ஒன்னு லைட்டா தட்டிட்டு போய்டுச்சு தம்பி.. அப்ப ஒன்னும் பண்ணல.. இப்ப…. ஆப்ரேஷன் வரை வந்திருச்சு…” என்று சொன்ன லலிதாக்காவை தாண்டி கண்கள் கணுக்காலுக்கு கீழே வெள்ளை பூசிய நினைப்போடு பின்னால் மேய்ந்தது.

“யார் இது… எங்கயோ பாத்திருக்கனே…?” அவன் யோசிக்க யோசிக்க அந்த கண்களும் அவனை நோக்கியே மெல்ல மெல்ல மலர்ந்தபடியே வந்தது.

“இது தான் இன்பாவா… இவுங்கள நான் பாத்திருக்கன்…. நீங்க டான்ஸெல்லாம் ஆடுவீங்க தான…..” அவள் பாட்டுக்கு டியூன் போட்டது போல பேசிக் கொண்டிருந்தாள். இன்பா கண்களில் என்னவோ ஆச்சரியம். எதனின் தொடர்ச்சியோ. நினைவு சங்கிலிகளின் சப்தமற்ற ஓசையை உள்ளே மலை உச்சி அருவியாய் கொட்டுவது போல ஓர் உள்ளுணர்வு. மனதுள் திக் திக் திக்கென்ற திகட்டல் மொழி. எப்படி இப்படி எல்லாம் நடக்கிறது என்று நடந்தவைகளை அப்படி அப்படியே இப்படி யோசித்துக் கொண்டிருந்தான்.

“நம்ம சொந்தகார பொண்ணு தான் இன்பா.. துணைக்கு கூட்டிட்டு வந்திருக்கேன்” என்ற லலிதாக்காவை பார்க்க பார்க்க ஏனோ பரவசம். இந்த தொடர்பின் தொடர்பு பற்றிய சிலாகிப்பு அவனுள் ஒரு வித நடுக்கத்தை உண்டு பண்ணியது.

தினம் தினம் ஆஸ்பத்திரி போக… வர… என சந்தியா தேவியோடு நெருக்கமாக பழக வேண்டி இருந்தது. வார்த்தைக்கு வார்த்தை இன்பா இன்பா என்பது நன்றாக இருந்தது. இன்பாவுக்கு அவள் மீது அன்பும் கரிசனமும் வேக வேகமாய் கூடியது. இன்னும் நான்கு நாட்கள் ஆஸ்பத்திரியில் லலிதாக்கா இருக்காதா… வேண்டுமென்றால் இன்னொரு ஆப்ரேஷன் கூட செய்யலாமே என்று கூட தோன்றியது. ஆஸ்பத்திரி வராண்டா மரங்களின் நிழலும்..அவை உதிர்க்கும் பூக்களும்… ஒரு இலை உதிர் காலத்தை அங்கே நிர்ணயிப்பதாக நம்பினான்.

ஊர் திரும்புகையில்… உள்ளம் தளுதளுத்தது. ஒவ்வொரு மதிய உணவையும்… மரத்தடியே லலிதாக்காவோடு இருவரும் சேர்ந்து உண்டதெல்லாம்… உள்ளே ரச வாசத்தையும்… ஆஸ்பத்திரி வாசத்தையும்… மலர செய்து கொண்டே இருந்தது.

“போயிட்டு….. பேசு..” என்று வீட்டு தொலைபேசி எண்ணை கொடுத்தான்…இன்பா.

தொலைந்து போகாத தூரத்து புன்னகையை கிட்டத்தில் கொடுத்த சந்தியாதேவி…மஞ்சள் பூக்களில் மினுமினுக்கும் புன்னகையை போலானவள். வாய் நிறைந்த சிரிப்பில் சிங்கப்பல் இரண்டு சித்திரம் வரைய… தொலைபேசி எண்ணை பத்திரமாக பர்சில் வைத்துக் கொண்டாள்… கண்கள் துளிர்க்க.

ஏதோ ஒரு கணம் கண்ணாடியில் வேகமாய் பதிந்து விட்டு மறைந்து கொள்ளுதல் தினமும் தான் நடக்கிறது. நம் கண்களுக்கும் மூளைக்கும் இடையே வாழ்வின் ஜன்னல்கள் திறந்தோ அடைபட்டோ ஒரு மாயத்தை நிகழ்த்திக் கொண்டே இருப்பதை… பெரும்பாலும் நாம் கண்டு கொள்வதில்லை. அது ஒரு தொடர்ச்சியின் நீட்சியாய்… ஒரு சங்கிலித் தொடரின் நுட்பமாய்… இலை விழும் சத்தத்தோடு சதா இயங்கிக் கொண்டே இருக்கிறது.

கரகாட்டம்… மேள தாளம் என அந்த பொங்கல்…. கூட தீபாவளியையும் சேர்த்துக் கொண்டு போல.

” சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே….மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே…” கரகாட்டக்காரி வயிற்றில் காலத்தை நெளித்துக் கொண்டிருந்தாள்.
மத்தளம் பத்தல பத்தல என்று இறங்கி ஏறிக் கொண்டிருந்தது.

இன்பா நீண்ட நெடு வருடங்களுக்கு பின் ஊருக்கு வந்திருக்கிறான். ஊரே வந்திருக்கிறது போல ஒரு மிடுக்கு பாவனை அவனுக்கு.

சீரியல் பல்புகளோடு சுற்றிலும் மினுமினுக்கும் சுந்தர வடிவம். முன்னிரவு குளிரும்….முந்திக் கொண்டு நிற்கும் பெண் கன்னங்களும் கண்களில் சூடாக காபி வார்த்துக் கொண்டிருந்தன.

ஆடுவோர் தாண்டியும் எதிர் வரிசையில் முன்னால் நின்றிருந்த ஒரு கருணை தேவதையின் மேல் பார்வை பளிச்சிட… கருப்பில் ஜுவாலை எரியும் என்று நம்பிய தருணம் அது. சிங்கப்பற்கள் சிரிக்க.. நொடிகளை பூக்க செய்யும் பூச்செடி போல… பொசுக் பொசுக்கென்று திரும்பி திரும்பி அசைந்து கொண்டிருந்தாள்.

“யார்ரா இந்த புள்ள…. புதுசா இருக்கே….!” என்றான். வார்த்தைகளில் நாயனம். அதன் பின்னான மௌனத்தில் மத்தளம்.

கூட இருந்த சிவா…. இந்த மாதிரி இந்த மாதிரி என்று… எத்தனை விளக்கியும் யாரென்று தெரியவில்லை. பேர் சொல்லியும் அடையாளம் மனதுக்குள் அகல கால் வைக்க வில்லை. நுனிப்புல் மேயும் சிந்தனையில் யாரென்று தெரியாத அவள்… பேரழகு சுமந்து இவ்விரவை… இசை வழியே நகரும் கொண்டாட்டத்தை அழகு படுத்திக் கொண்டிருந்தாள். சில போது சில முகங்கள் எதற்கென்று தெரியாமலே நம்மை இன்புற செய்யும். மனதுக்குள் ரெக்கை பூட்டும். கண்களில் சொற்கள் கூட்டும். அநியாத்துக்கு சந்தோஷம் அவனுக்கு. அங்கிருப்போரெல்லாம் பஞ்சுமிட்டாய் சுமந்து கொண்டு நடப்பது போல… இருபது வயது வைரமுத்துவின் பார்வை வேறு.

“என்னடா காணாதத கண்ட மாதிரி இப்டி வழியற…?” என்றான் சிவா.

“அப்படித்தான் வெச்சுக்கோயேன். எப்பவாவது இப்படி வழியனும் சிவா.. கெத்தாவே இருக்கறதுல… அதுவும் பொண்ணுங்ககிட்ட நான்லாம்… வேறன்னு காட்டிக்கறதுல நதிங். அவுங்ககிட்ட கொஞ்சம் சிறுவனாகி போவதில் ஸ்ரீதர் படத்து ரவிச்சந்திரன் மாதிரி ஒரு துறுதுறு வந்துரும். இப்போ அப்டி தான் இருக்கு…”

“அனுபுவம் புது…..ம்மை… இவள்ள்…. இடம் கண்டேன்… ” நவரச நாயகனின் உடல்மொழியில் டியூனையே மாற்றினான். எதிரே நின்றிருந்தவளின் தூரங்கள் குறைந்தது போல… வலது கண்ணை படக்கென அடித்துக் கொண்டதில் இடது கண்ணில் சிறு புன்னகை.

பெயர் கூட தெரியாத அந்த பெண்…. சந்தியா தேவி என்று பின்னாளில் தெரிய போகிறது என்று அப்போது சத்தியமாய் அவனுக்கு தெரியாது.

தற்செயல்களின் வழியே தான் பிரபஞ்சம் இயங்குகிறது. ஆனால் அதற்கு முன்னும் பின்னுமாக காரணிகள் தாகத்தோடு வேலை செய்கின்றன. அதை உற்று நோக்கும் வித்தை அறிந்தவனுக்கு உலகம் வியப்பை மேலும் மேலும் தந்து கொண்டே இருக்கிறது.

செருப்பையும் தாண்டி சருக்கென்று ஏறியது… ஆணி என்று நொண்டிக் கொண்டே நகர்ந்து நகர்ந்து அருகே நின்ற மரத்தை பற்றிய படி …. காலை தூக்கி… கழுத்தை இறக்கி பார்க்கையில் தான் தெரிந்தது. ஆணி குத்தியதை விட…. அதை பார்க்கையில்… பயங்கரமாய் இருந்தது வலி. சாலையில் ஒரு மனதும் இல்லை. எல்லாம் மனிதர்கள். வந்தும் சென்றும் அவரவருக்கு அவரவர் காலம் தான் எப்போதும். நொண்டிய உடலை நிதானமாக நிறுத்தி ஆணியை மெல்ல வெளியே இழுத்தான்.

சத்தமில்லாமல் கூட வந்த ரத்தம் ஆறாம் வகுப்பு படிக்கும் இன்பாவை அவனுயர கைகள் கொண்டு கழுத்தை நெரித்தது. மிரண்டு நடுங்க… ஆனாலும் கர்சீப் எடுத்து கட்டு போட்டான். பிறகு அரசாங்க ஆஸ்பத்திரி சென்று ஊசி போட்டு கட்டு போட்டு… சரி விஷயம் அது இல்லை.

அது குறித்து செங்கப்பள்ளியில் இருக்கும் மாமாவுக்கு கடிதம் எழுதினான்…இன்பா.

பிறகு தான் தெரிந்தது. இன்பாவை பார்த்து விட்டு வருவதாக வீட்டில் சொல்லி… வெளியேறிய மாமா அதன் பிறகு பத்து நாட்கள் தலைமறைவு. விசாரித்ததில் அவர் கல்யாணம் செய்து கொண்டார் என்று தெரிய வந்தது. பெண் வேறு யாருமில்லை. லலிதாக்கா.

இது நடக்க தான் அதுவெல்லாம் நடந்திருக்கிறது.

lgk கம்பனிக்கு வேலைக்கு செல்லவில்லை என்றால் விஜயகுமாரியை பார்த்திருக்க முடியாது.

சிவாவை தேடி போகாமலிருந்திருந்தால் lgk கம்பெனிக்கு ரெஸ்யூம் கொடுத்திருக்க முடியாது.

சந்தன பாண்டி இன்பாவை தேடி வராதிருந்தால் சிவாவை பார்த்திருக்க முடியாது.

சந்தியா தேவியிடம் தொலைபேசி என்னை கொடுத்திருக்காவிட்டால் சந்தன பாண்டி அவனைத் தேடி வந்திருக்க மாட்டான்.

லலிதாக்கவுக்கு முதுகில் பிரச்சனை இல்லை என்றால்… கூட சந்தியா தேவியை கூட்டி கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்திருக்காது.

ஏற்கனவே பார்த்த சந்தியா தேவியை மீண்டும் ஆஸ்பத்திரியில் சந்திக்கும் வாய்ப்பு இன்பாவுக்கு கிடைத்திருக்காது.

அத்தனைக்கும் காரணமாக இருந்த லலிதாக்கா தன் மாமாவை திருமணம் செய்ய தன் காலில் ஏறிய ஆணி ஒரு காரணம் என்றால் தகும்.

இந்த கதையின் இன்னொரு மிக முக்கியமான வளைவு ஒன்றிருக்கிறது. லலிதாக்காவை முட்டுவதற்கு முன் சில நொடி அந்த மாடு முட்டுவதற்கு முன்னேறியது வாசலில் தவழ்ந்து கொண்டிருந்த ஒன்றரை வயது இன்பாவை நோக்கித்தான். விபரீதம் உணர்ந்த பெரியாம்மாவின் கைகள் நொடியில் இன்பாவை இழுத்து… தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் ஓட… வீட்டின் பின்புறம் இருந்து நொண்டியடித்து விளையாடிக் கொண்டு வந்த சிறுமி லலிதாக்கா மாட்டின் தலையில் மாட்டிக் கொண்டது.

ஒவ்வொரு பெட்டியிலும் ரயில் இருக்கிறது. வாழ்வின் தூரங்கள் சிக்கு புக்கு சத்தத்தோடு ஒரு வினோத தொடரி தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *