இந்த உலகில் எதுவுமே நிரந்தரமானதல்ல. பிறக்கும் மனிதர்கள் எல்லோரும் இறந்துதான் ஆக வேண்டும். மரணங்கள் இயல்பாகவும் ஏற்படலாம். யாரும் எதிர்பாராத நேரத்தில் சடுதியாகவும் ஏற்படலாம். இதில் மிகப்பெரிய துன்பம் என்னவென்றால் நாம் மனதில் ஆழமாக அன்பு செலுத்துபவர்களை மரணம் எதிர்பார்க்காத நேரத்தில் கணப்பொழுதில் பறித்துக் கொள்வதுதான்.
அப்படி ஒரு சம்பவம்தான் திவ்யாவின் அண்ணன் ஜீவாவின் அன்பு மனைவி ஆனந்திக்கு நடந்தது. ஒரு பாவமும் அறியாத அவளை பாதையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த கார் சாரதி அடித்துப் போட்டு விட்டு சென்று விட்டான். இதைக் கேள்விப்பட்டதும் உடனேயே தன் அண்ணனின் வீட்டுக்கு விரைந்தாள் திவ்யா.
அங்கே ஜீவா அவன் வீட்டில் துன்பமே உருவாகி இடிந்து போய் அமர்ந்திருந்தான். ஜீவாவுக்கு விவாகமாகி சில வருடங்களேயாகியிருந்தன.
அவர்கள் ஆனந்தியின் வேண்டுகோளின் பிரகாரம் குழந்தை பெற்றுக் கொள்வதையும் பின் போட்டிருந்தார்கள். இனி அவள் திரும்பி வரப்போவதில்லை. ஜீவா அவன் கரங்களில் ஒரு ஊதாக் கலர் கவுனை ஏந்தியவாறு அதனையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான்.
திவ்யா அவன் அருகில் சென்று அவன் தோள் மீது கை வைத்தாள். அவளை சோகம் ததும்பும் கண்களுடன் திரும்பிப் பார்த்த ஜீவா “பார்த்தியா திவ்யா, ஆனந்தி எவ்வளவு பிடிவாதக்காரியென்று. இந்த கவுனை அவள் அணிவதற்கு ஆசை ஆசையாக நான் வாங்கி வந்து கொடுத்தேன். ஆனால் அவள் இதனை ஒருபோதும் அணியவேயில்லை.
ஒவ்வொரு முறையும் இதனை அணிய அவள் கையிலெடுக்கும் போதெல்லாம் இதனை வேறொரு விசேட வைபவத்திற்குத்தான் இதனை அணிய வேண்டுமென மீண்டும் பெட்டியில் வைத்து விடுவாள். ஆனால் இப்போது அந்த விசேட வைபவம் என்ன தெரியுமா? அவளது மரண வைபவம். அவளது இறந்த உடலுக்கு இதனை அணிந்துதான் நான் அழகு பார்க்க வேண்டுமா?” அவன் அந்த கவுணை அணைத்துக்கொண்டு குமுறியழுதான்.
அவனுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் திவ்யாவின் மனம் மிகக்கலங்கிப் போய் விட்டது. ஜீவாவின் வீட்டில் ஆனந்தியின் மரணத்துடன் கழிந்த அந்த ஐந்து நாட்கள் திவ்யாவின் வாழ்நாளில் அதன்பின் மறக்க முடியாத நாட்களாகின.
ஆனந்தியின் கவுனை கையில் ஏந்தியவாறு ஜீவா கண் கலங்கி சொன்ன அந்த வார்த்தைகள் அவள் காதுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தன.
”வாழ்க்கையில் பிறகு செய்யலாம் என்று எந்தக் காரியத்தையும் பின் போடாதீர்கள். பிறகு அதற்குரிய நேரம் வராமலேயே போய்விடும். நாம் வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக வாழுங்கள். நாம் தள்ளிப்போடும் அந்த சந்தோஷமான நிமிடங்கள் மற்றுமொரு முறை கிடைக்காமலேயே போய்விடும்”
அதன் பின் திவ்யாவின் வாழ்வின் முக்கிய தருணங்களில் எல்லாம் இந்த வார்த்தைகள் அவள் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன. அவை அவள் வாழ்வை மிகவும் அர்த்தமுள்ளதாய் மாற்றியமைக்க உதவிய தாரக மந்திரங்களாக இருந்தன.
திவ்யா அதன் பிறகு வாழ்வில் செய்ய வேண்டிய எந்தக் காரியத்தையும் ஒத்தி வைத்ததே கிடையாது. அவள் தான் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் சிந்தித்துப் பார்த்தாள். என்னென்ன விடயங்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் காணப்படுகின்றன என்று யோசித்தாள். அவை தொடர்பான பட்டியல் ஒன்றையும் தயாரித்தாள்.
அவள் செய்த முதல் வேலை பல வருடங்களாக பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும் தனது உத்தியோக உயர்வுக்கான தடை தாண்டும் பரீட்சையை அவ்வருடத்தில் பூர்த்தி செய்தாள். இதன் காரணமாக அவளுக்கு பல வருடங்களாக கிடைக்காமல் இருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வையும் பெற்றுக் கொண்டாள். ஒரு தொகை சம்பள அரியசும் கிடைத்தது. அடுத்த கட்டமாக பல வருடங்கள் பூர்த்தி செய்யாமல் பின்போடப்பட்டு வந்த எம்.ஏ. முதுமாணி இறுதி பரீட்சையையும் பூர்த்தி செய்தாள். அதனாலும் அவளுக்கு சம்பள உயர்வு கிடைத்தது.
அவள் இப்போதெல்லாம் தனது அன்றாட வாழ்க்கையில் ”இன்னொரு நாள் பார்க்கலாம் பிறிதொரு நாள் வைத்துக்கொள்ளலாம்” போன்ற சொற் பிரயோகங்களை எல்லாம் நீக்கி விட்டாள். மனிதனின் வாழ்நாள் மிகக் குறுகியதாக அவளுக்குத்தோன்றியது. இந்தக் குறுகிய கால வாழ்வில் எல்லாவற்றையும் அந்தந்தக் காலத்தில் முடித்து விடுவதே நல்லது என நினைத்தாள். எதையும் பார்க்க வேண்டுமானால் கேட்க வேண்டுமானால் செய்ய வேண்டுமானால் இப்போதே பார்த்து விட வேண்டும், கேட்டு விட வேண்டும், செய்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டாள்.
அவளுக்கு விரும்பிய சைனீஸ் உணவை சாப்பிட வேண்டும் போல் தோன்றினால் அதனை இன்றே செய்துவிட வேண்டும் போல் தோன்றியது. அவள் செய்து விட்டதாக நினைத்த சில பழைய தவறுகளுக்கு இன்றே தனது நண்பர்களை அழைத்து மன்னிப்புக் கேட்டுவிட வேண்டுமென்றும் கருதினாள்.
வாழ்க்கையில் சில முக்கியமான விடயங்களைத்தான் இன்னமும் செய்யாதிருப்பது தொடர்பில் அவள் மனது வருத்தப்பட்டது. தன் பிள்ளைகள் மற்றும் கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களைப் பற்றி அவள் இவ்வளவு காலம் அக்கறை செலுத்தாமல் இருந்தாள். இப்போது இவற்றைத்தவிர முக்கியமான வேலை வேறு என்ன இருக்கிறது என்பது அவள் மனதுக்குத் தெட்டத் தெளிவாக விளங்கியது. கூடிய அளவு தனது உத்தியோகத்துடனான வேலைகளை அலுவலகத்துடனே முடித்துக் கொண்டாள். தன் நேரத்தை அதிகமாக பிள்ளைகளுடனும் கணவருடனும் மகிழ்ச்சியாக சிரித்துப் பேசிக்களிப்பதில் செலவழித்தாள். நம் வாழ்வில் சிறப்பான நேரங்களில் மாத்திரம்தான் நாம் மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை பொய்யாக்கி ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சிகரமான கணங்களாக ஆக்கிக்கொண்டாள்.