(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு தெரு.
ஒதுக்குப்புறமான தெரு அல்ல. போக்குவரத்து அதிகமாக உள்ள முக்கியமான வீதிகளில் ஒன்றுதான் அது.
நாகரிக யுகத்தின் ஜீவத் துடிப்பான வேகம் அந்தத் தெருவிலும் மனித நடமாட்டமாகவும், சைக்கிள்களின் ஓட்டமாகவும், கார் வகையராக்களின் துரித இயக்கமாகவும் பரிணமித்துக்கொண்டு தானிருந்தது.
தெருவின் ஒரு இடத்தில் ஒரு நாய் செத்துக் கிடந்தது.
அது கிடந்த இடம் தெருவின் மத்தியுமல்ல; ஒரு ஓரமும் அல்ல. அந்த நாய் நடு வீதியில் காரிலோ வண்டியிலோ அடிப்பட்டு, வேதனையோடு நகர்ந்து நகாந்து தெரு ஓரத்தை அடைய முயற்சித்து, அம் முயற்சியிலேயே உயிரை விட்டிருக்க வேண்டும். தெரு நடுவில் அழுத்தமாகப் படிந்திருந்த ரத்தச் சிதறலும், நெடுகிலும் கறையாய் ஓடிக்கிடந்த சுவடும் அப்படித்தான் எடுத்துக் காட்டின.
நாய் எப்படி அடிப்பட்டது; எவ்வளவு வேதனை அனுபவித்தது; எப்பொழுது செத்தது என்பது எதுவும் யாருக்கும் தெரியாது. அது செத்துக்கிடந்தது. அது எல்லோர் பார்வையிலும் பட்டது. எவர் மனசிலாவது உறுத்தியதா?- தெரியாது!
கார்களில் போகிற பெரிய மனிதர்கள் பார்வையில் எல்லாம் பட்டாலும் எதுவும் படாத மாதிரித்தான். அவர்களில் பலர் காரில் ஏறி உட்கார்ந்ததும் தான் சுமக்கிற தனது கூட்டுக்குள்ளேயே ஒடுங்கிவிடும் நத்தை மாதிரி தம்மில் தாமே முடங்கிவிடுவார்கள். பிறகு இறங்க வேண்டிய இடம் வந்ததும் தான் உயிர்ப்பு காட்டுவார்கள். அவர்களுக்குப் புற உலக விஷயங்களில் சிரத்தை எதுவும் இருக்க முடியாது.
தாமே இயங்கும் வேக வாகனங்களில் சவாரி போகிறவர்கள் சாதாரண விஷயங்களைக் கவனிக்க முடியுமா என்ன? தலை போகிற வேகத்திலே பறக்கிற அவர்களே ஏதாவது விபத்தில் மாட்டிக் கொண்டால்தான் “ஓகோ, இதுதான் பூலோகமா!” என்ற உணர்ச்சி பிறக்கும் அவர்களுக்கு.
“ஓ, மறந்துவிட்டேனே! வேறொரு சந்தர்ப்பத்திலும் உணர்வு பிறக்கும்தான். மினுக்கும் அலங்காரத்தோடு அல்லது உறுத்தும் அலங்கோலத்துடன் நவயுக ஜூலியட் அசைந்து நடந்து செல்வதையோ, பஸ் ஸ்டாப்பில் நிற்பதையோ காணும் போதுதான்.
கேவலம் ஒரு நாய் – அதிலும், அடிபட்டுச் செத்த நாய் – பெரும்பாலோர் கண்களை உறுத்தாததில் அதிசயம் எதுவும் இல்லைதான்.
கார்கள் ஓடிக் கொண்டிருந்தன.
“சால மிகுத்துப் பெய்த” மனிதச் சுமையைத் தாங்கியவாறு பஸ்கள் போய் வந்து கொண்டுதான் இருந்தன. சைக்கிள்கள், ரிக்ஷாக்கள், வகையரா வகையரா- எதற்கும் குறைவு இல்லை அந்த வீதியிலே.
நடந்து போகிறவர்கள்?.
அவர்கள் இல்லாமலா தெரு என்று ஒன்று இருக்க முடியும்? போனார்கள்; வந்தார்கள். பலப்பல பண்பினர் அவர்கள்…..
“இதென்னய்யா?”
“என்னமோ செத்துக் கிடக்குது!”
“நாய் ஓய்!”
“காரிலே அடிபட்டிருக்கும். நாய் பெருத்தாப்பிலே என்பது சும்மா தானா? ஏகப்பட்ட நாய்கள்! அதிலே ஒரு நாய் செத்தால் என்ன கெட்டுவிடப் போகிறது?
ஒரே ஒரு மனிதன் போனார்கள்: அவர்கள். நாய் உடல் அப்படியேதான் கிடந்தது..
வெயில் ஏறிக்கொண்டிருந்தது. ஈக்கள் மொய்த்தன. சிறுவர்கள் வேடிக்கையாகப் பார்த்துவிட்டுப் போனார்கள். பெரியவர்கள் பார்த்தார்கள்; பாராமலும் போனார்கள்.
காற்றடித்தது மழை பெய்தது. இரவு வந்தது; போனது….பொழுது விடிந்தது. சூரியன் சுடும் வெயில் வீசினான்….
அந்த நாய் உடல் அங்கேயே தான் கிடந்தது. நடந்து போனவர்கள் மூஞ்சியைச் சுளித்தார்கள். சிலர் மூக்கைப் பிடித்துக் கொண்டார்கள்.
“சே, தரித்திரம்! தரித்திரம்!”
“நகரம் வரவர மோசமாகி வருகிறது. ஒரு தெரு கூட சுத்தமாக இல்லை “.
“அதிலும் மழை பெய்துவிட்டால் கேட்கவே வேண்டாம். தெரு, பூராவும் ஆபாச மேடுதான்”.
இப்படி இருவர் பேசிக்கொண்டு போனார்கள்.
“நகரசபை தன் கடமையைச் சரிவரச் செய்வதில்லை . பாருமேன் தெருவிலே இப்படியா கிடப்பது?”
“அப்புறம் அழகு நகரம் எப்படித்தான் அமையுமோ?”
“தெருக்களை தினம் சுத்தம் செய்வது இல்லை. அழகுபடுத்த பூங்காக்கள் அமைக்கிறார்களாம்!”
இது ஒரு சம்பாஷணை.
அவர்களும் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் போனார்கள். தினந்தோறும் அப்படிப் போகத் தயங்கவும் மாட்டார்கள்.
அந்த நாய் அழுகிக் கிடந்தது அதே இடத்தில்.
ஒருவர் பார்த்தார், “அசுத்தமே வியாதிக்குக் காரணம்” என்ற போர்டு ஒன்றையும் பார்த்தார். ஏதோ எண்ணம் ஏற்படவே, முகத்திலே சிரிப்பு படர்ந்தது. அவர் வேகமாக முன்னேறினார். ஆபீசுக்குப் போனதும், ஆபீஸ் மேஜையிலிருந்த தாளை எடுத்து, ஆபீஸ் பேனாவினால், ஆபீஸ் மையை உபயோகித்து, “ஆசிரியருக்குக் கடிதம்” எழுதினார். அதை பிரபல ஆங்கில தினசரிக்கு அனுப்பி வைத்தார். அந்த “லெட்டர் டு தி எடிட்டரில், நகர வீதியின் அசுத்தம், அதனால் விளையக்கூடிய நோய் முதலியனபற்றிச் சூடாக எழுதியிருந்தார்.
அதைத் தபாலில் சேர்த்ததும், தன் கடமையைச் செய்த திருப்தி ஏற்பட்டுவிட்டது அவருக்கு.
அந்த நாய் அதே இடத்தில் தான் கிடந்தது. “சமூக சேவை” செய்யும் மாது சிரோமணிகள் இருவர் அவ்வழியாகப் போக நேர்ந்தது. அவர்கள் கூடை மாதிரியும், சட்டி மாதிரியும் இருந்த “வேனிட்டிபேக்” கைத் திறந்து எதையோ எடுத்து மூக்கருகில், பிடித்தபடி வேக நடைநடந்தார்கள். வாசனை படிந்த கைக்குட்டையால் வீசிக் கொண்டார்கள். “ரொம்ப டர்ட்டியாப் போச்சு!” என்று முனங்கினாள் ஒருத்தி.
“சுகாதார வாரத்துக்கு ஓடியாடி உழைத்த அம்மையார் அவள். “தெய்வத் தன்மை போன்றது சுத்தம் சுத்தம் என்பதே தனி அழகுதான்” என்றெல்லாம் உபதேசித்தவள் அவள். இன்னும் உபதேசிக்காமலா இருப்பாள்?
அவள் போனாள். அந்த நாய் உடல் அங்குதான் கிடந்தது.
பக்தி செய்வதைப் பிழைப்பாகக் கொண்டுவிட்ட இரண்டு உத்தமர்கள் நடந்தார்கள். மண்ணுலகத்து மோசமான வாடை அவர்கள் புலன்களைத் தாக்கியது. சிந்தனையைக் கிளறியது.
“நகரம் என்பது நரகத்தின் மறு உரு” என்றார் ஒருவர்.
மற்றவர் ஆமோதித்தார். அதனால்தான் இராமலிங்கர் சொன்னார் – தேட்டிலே மிகுந்த சென்னையிலிருந்தால் என்னுளம் சிறு குறும் என்று நாட்டிடை நல்லதோர் நகர்ப்புறம் நண்ணினேன்…”
“இந்த மனம் இருக்கிறதே, அதைக் குரங்கு என்றார்கள். பேய் என்றார்கள். நான் நினைக்கிறேன் – அதைக் கழுகு என்று கூடச் சொல்லலாம். “கழுகு அசுத்தங்களையும் ஆபாசங்களையும் உணர்ந்தறிந்து நாடுவது போலவே, மனமும் பறந்து பாய்ந்து அவற்றைச் சுற்றி வட்டமிட்டு உழல்கிறது. பிணத்தின் மீது அதற்கு மோகம்”
“ஆமாம் ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான்… அதைச் சுடுகாட்டுக் காக்கை என்றும் சொல்லலாம்….காக்கை உகக்கும் பிணம் – என்று ஒரு பாட்டு இருப்பதாக ஞாபகம்!”
அவ்விரண்டு பேரும் சொற்களைக் குத்தி இழுத்துக் குதறியபடி போனார்கள்.
நாய் நாறிக்கொண்டு கிடந்தது அதே இடத்தில்…..
அவரவர் வேலை அவர் அவர்களுக்கு அவரவர் கவலைகள் எவ்வளவோ!
வெயிலும், காற்றும், தூசியும், ஈயும் தம் தம் வேலையை ஒழுங்காகச் செய்து கொண்டுதான் இருந்தன….
அவ்வழியே ஒருவன் வந்தான்…. நின்றான்… அங்குமிங்கும் பார்த்தான்.
சற்று தள்ளி ஒரு பள்ளம் தென்பட்டது. அவன் கையில் மண் வெட்டியும் இருந்தது.
அவன் அந்த உடலை எடுத்துக் குழியில் சேர்த்தான். மண்ணைக் அள்ளிப் போட்டான். நன்கு மூடினான். தன் வழியே போனான். அப்படி ஒரு வேலை செய்வதற்காக நியமிக்கப்பட்டவன் இல்லை அவன். அவன் செய்த வேலைக்குக் கூலி கிடைக்காது என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரியும். இருந்தாலும், நாறிக்கிடந்த நாய் உடல் அவன் பார்வையில் பட்டதும், ஏதாவது செய்தாக வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.
– வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002, பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, சென்னை.