ஒரே ஒரு உதவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 10, 2024
பார்வையிட்டோர்: 386 
 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அறையில் அமைதி நிலவியதே ஆனாலும், எல்லோருடைய மனத்திலும் புயல் வீசிக்கொண்டிருந்தது. மணி நான்குதான் இருக்கும். ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டிருந்த ஹீட்டரும், எல்லோருடைய கையிலும் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டும் ஒரு கதகதப்பு சுகத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. இருந்தும், அந்த ப்ராஜக்ட் பிரதேசத்தின் மலையுச்சி குளிர் அறைக்குள் சற்றும் இல்லை என்று சொல்ல முடியாது. 

சாத்தப்பட்டிருக்கும் கண்ணாடி ஜன்னல் கதவை ஊடுருவி என் விழிகள் வெளியில் மேய்கின்றன. 

நீண்டு நிமிர்ந்து தலை உயர்த்தி நிற்கும் மரங்களின் உச்சியில் நிலவாய் காயும் இளம் வெயில்… 

தூரத்தில் மூடு பனியில் ஒரு பென்ஸில் ஸ்கெச்சாய் தெரியும் மின் நிலையம். அதன் பின்பக்கம் மிதக்கும் வெண்மேகங்களின் புகைப் புலனில் தெரியும் மலை உச்சியிலிருந்து பிரிந்து கீழிறங்கி வரும் பென்ஸ்டாக் குழாய்கள். 

கீழே பெரும் பாம்பாய் வளைந்து வளைந்து செல்லும் மலைப் பாதையின் ஓரங்களில் சிதறிக் கிடக்கும் ஸ்டாப் க்வார்ட்டேர்ஸ்… அவைகளை மீறித் தெரியும் பச்சைப் பசேலென்ற காடு… 

அங்கே நிலவிய மௌனத்தை ரவிதான் முதலில் கலைத்தான். 

‘ஆனாலும் பாவிப் பெண் இப்படி நடந்துட்டாளே… கல்யாணமாகி புதுக் குடித்தனம் செய்ய வரதன் அவளை இங்கே கூட்டிக்கிட்டு வந்து நாலு மாசம்கூட இருக்காதே…!’ 

‘அவளை மட்டும் எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? வரதன் இப்போ தன் பெண்டாட்டிகூட வசிக்கும் அந்த ஸி கிளாஸ் பேமிலி க்வார்ட்டேர்ஸின் பின் பக்கம் மணியும் ஹமீதும் இப்போதும் தங்கியிருக்கும் பேச்சுலர் க்வார்ட்டேர்ஸில் அவுங்க ரெண்டு பேர் கூடத்தானே, இந்த வரதனும் நாலு மாசம் முந்திவரை தங்கியிருந்தான். 

நேற்றுவரை கூடத் தங்கியிருந்த நண்பன் இன்று கல்யாணமாகி பெண்டாட்டியுடன் வந்தால், இப்படியா நட்புக்குத் துரோகம் செய்வது? நம்ம வீடுகளிலும் பெண்டாட்டி பிள்ளைங்க எல்லோரும் இருக்கிறாங்க – இந்த ஹமீது நாளைக்கு நம்ம வீட்டிலும் புகுந்து இப்படி விளையாட மாட்டான்னு என்ன நிச்சயம்?’ 

டேவிட் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினான். அவனைப் பின் தாங்கினான் நாராயணன். 

‘ஆமாம் சார்… நாம் பவர்ஹௌஸ், ரிஸர்வாயறுண்ணு டியூட்டி கான்ஷியஸோடு இருப்போமா, இல்லை நம்ம வீட்டுப் பெண்டுகளோடு லவ் மேக்கிங்கில் ஈடுபட்டுக் கிடப்போமோ? கல்யாணமாகாத ஒரு கட்டை இப்படி துணிஞ்சு ரோமியோ ஆகி, ராப்பகலா ரொமான்டிக்கா வலை வீசினா எந்தக் கற்பரசிதான் விழ மாட்டாள்? எதுக்கும் இந்த ஹமீது இனி வீட்டுக்கு வந்தால், கேட்டின் முன்னே வச்சே பேச வேண்டியதைப் பேசி அனுப்பி விடவேண்டியதுதான்…’ 

‘அப்படித் தும்மினா தெறித்து விடும் மூக்குண்ணா என்னைக்கும் ஆபத்துதான்…’ என்றான் ரவி. 

நான் இடைமறித்தேன். ‘அதெல்லாம் போகட்டும்… மணீ… இப்போ ஹமீதை நீ தனிமையில் விட்டுவிட்டா வந்திருக்கே?’ 

‘இல்லை சார்… எனக்குத் தெரியாதா? கையும் களவுமாய் பிடிபட்டு விட்டதால் இனி எதுக்கும் துணிஞ்சாலும் துணிஞ்சு விடுவான், அவன்கூட நம்ம பாஸ்கரனும் இருக்கிறான்.’ 

‘வரதன் க்வார்ட்டேர்ஸில்…?’ 

‘அவன் மனைவி சியாமளாகூட நம்ம டேவிட் சாரின் வொய்பும் இருக்காங்க சார்…’ 

‘அப்போ சரி பயமில்லை. ஆமா வரதனை இன்னும் காணல்லையே… நான் பவர் ஹௌஸுக்குப் போன் பண்ணி அரை மணி நேரம் இருக்காதா…?’ 

‘இருக்காது சார்… கூடிப் போனா பத்து நிமிஷம் இருக்கும்…’ 

நான் மீண்டும் பவர் ஹௌஸுக்கு டெலிபோன் பண்ணி விசாரித்தேன். 

‘வரதன் சார் இங்கிருந்து இறங்கி விட்டார் சார்…’ என்று ஆப்பரேட்டரிடமிருந்து பதில் வந்தது. 

அப்படியென்றால் அவன் இங்கே வந்து சேர இன்னும் பத்து நிமிஷமாகி விடும்… நான் அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்து விட்டு, ‘ஆமா… மணீ… ஹமீதை நீ குறுக்கு விசாரணை ஒண்ணும் செய்யலையா… ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கிட்டானாம்?’ என்று கேட்டேன். 

‘நான் விடுவேனா சார்… ஆனால், அவன் மிகவும் அழுத்தமானவன்… ஒண்ணும் விட்டுச் செல்லவில்லை. அவன் வாயைக் கிண்டிக் கிண்டி ஒருவாறு காரியத்தைப் புரிஞ்சுகிட்டேன். ஆனா இது வரதன் அறிய வேண்டாம் சார்…’ 

நான் உட்பட எல்லோரும் இப்போது மணியின் வாயையே பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவன் மிகவும் நிதானமாக சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து தீர்க்கமாய் இழுத்தவாறு ஏதோ சிந்தனையில் முழுகியவனாய், சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு எங்களையெல்லாம் சஸ்பென்ஸில் ஆழ்த்தி சிறிது நேரம் மௌனமாய் உட்கார்ந்திருந்தான். கடைசியில் வாய் திறந்தான். 

‘புதுசாய் குடித்தனம் செய்ய வந்தவங்க இல்லையா… கூட மாட உதவிக்காக ஊரிலிருந்து தன்னுடைய ஒரு சித்தியையும் கூட்டிக்கிட்டு வந்திருந்தான் வரதன். நடுத்தர பிராயம் வரும் அந்த அம்மா ஒரு விதவை. எப்படியோ அவங்களுக்கும் இந்த ஹமீதுக்கும் இடையில் ஒரு நெருக்கம் ஏற்பட்டது. ஒருநாள் மத்தியானம் ரெண்டாவது ஷிப்டு டியூட்டிக்கு வரதன் பவர் ஹௌஸுக்குப் போயிருந்த சமயம்… தூங்கிக் கிடந்த அவன் மனைவி யதேச்சையாகக் கொல்லைப் பக்கம் வந்தபோது… கலவிக் காட்சி! அவள் வந்ததையும் கண்டு நிற்பதையும் சித்தி அறியவில்லை. ஹமீது கண்டான். ஆனால், காணாததைப்போல் கர்மமே கண்ணாயிருந்தான்… பிறகு, வரதன் மனைவி கண்டதை ஹமீது சொல்லி அறிந்தபோது, அந்த அம்மா மிகவும் கலவரம் அடைந்தாள். விஷயம் வரதன் செவியில் போய்ச்சேர்ந்து விடுமோ என்று அவுங்க பயந்து பரிதவித்தாங்களாம். எனவேதான், அந்த ரகசியம், ரகசியமாய் வரதன் மனைவியிடமே பத்திரமாயிருக்கும் பொருட்டு, அன்று ராத்திரி பத்து மணிக்கு டியூட்டி முடிந்து வரதன் வீடு திரும்பும் முந்தியே, சித்தியும் வசதி செய்துகொடுக்க, ஹமீது வரதன் மனைவியை அவள் படுக்கை அறையில் சந்தித்தானாம்… நயத்தாலோ, பயத்தாலோ, இல்லை மத்தியானம் இவன் சாமர்த்தியத்தை நேரில் கண்ட மயக்கத்திலோ, என்ன இழவோ, இந்த விஷயத்தில் ஹமீதுகிட்டே ஒரு பிரத்தியேக சக்தியிருக்குதுண்ணு ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியாது. பாவி அவளைத் தன் வசப்படுத்தி விட்டான். அடுத்த நாள் சித்திக்காரி நல்லவளாகவே வரதனிடம் விடை பெற்றுக் கொண்டு ஊர் போய்ச் சேர்ந்தாள். ஆனால் அதன்பின்… வரதன் வீட்டை விட்டு பவர் ஹௌஸுக்கு செல்ல வேண்டியதுதான் தாமதம், ட்ராக்குலா முத்தம் தந்த பெண்ணைப்போல் வரதனின் மனைவி ஹமீதை மோப்பம் பிடிச்சவாறு காத்திருப்பாளாம். நீ இல்லாமே என்னால் உயிர் வாழ முடியாது என்று இவன் ஆண்மையில் அவள் அடைக்கலமாகிக் கிடந்தாளாம். 

வெளியில் ஜீப் வந்து நிற்கும் ஓசை… ‘வரதன் வந்து விட்டான் போலிருக்கு… நாம் ரொம்ப முன்னெச்சரிக்கையாக நடந்துக்கணும். அவன் திடீர் உணர்ச்சிக்கு ஆளாகி வெறித்தனமா ஏதாவது செய்துவிடாமல் இருக்க நாம் பார்த்துக்கணும்’ என்றேன் நான் குரலைத் தாழ்த்தி. 

சகஜமான சூழ்நிலை உருவாக்கப் பிரயத்தனப்பட்டவாறு எல்லோரும் உட்கார்ந்திருக்க, அறைக் கதவைத் திறந்துகொண்டு வரதன் பிரவேசித்தான். 

ஹமீதை விட பெர்ஸனாலிட்டியினாலும் சரி, ஆரோக்கியம், பதவி, இப்படி வேறு எதில் ஆனாலும் சரி இவன்தான் மேலானவன். பிறகு ஏன் இப்படி நேர்ந்துவிட்டது என்று என் மனம் கேள்விக் குறி 

எழுப்பிக்கொண்டிருக்க, அவனை நான், ‘வா… வரதா… வந்து உட்காரு’ என்று சுமூகமாய் வரவேற்றேன். 

‘என்ன எல்லோரும் கூடியிருக்கிறீங்க. இண்ணைக்கு என்ஜினியர்ஸ் அஸோஸியேஷனில் லோக்கல் யூனிட்டின் அவசர மீட்டிங் ஏதாவது உண்டா?’ என்று கேட்டவாறு அவன் என் முன் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தான். வழக்கம்போல் மிகவும் உற்சாகமாய் காணப்பட்டான் அவன். 

இவனை அனாவசியமாக மன அவஸ்தைக்கு ஆளாக்காமல் இருக்க, பீடிகை எதுவுமின்றிக் கூறி விடுவதுதான் சரி என்று எனக்குப் பட்டது. 

‘வரதா நம்ம ப்ராஜெக்டில் இன்று மத்தியானம் நடந்த ஒரு சம்பவத்தை அதை நேரில் கண்ட மணியே உங்கிட்டெ இப்பொ சொல்லுவான்…’ என்று விட்டு மணியைப் பார்த்தேன். 

எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்ற ஒரு தர்ம சங்கடத்தில் மணி உழன்று கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது. சற்று நேர மௌனத்திற்குப் பிறகு மணி மெல்ல ஆரம்பித்தான். 

‘இப்போ கொஞ்ச நாட்களாக ஹமீதிடம் ஒரு மாற்றம்… முன்னால்போல் அரட்டையடிக்க அவன் வருவதில்லை. கிளப்புக்கும் விளையாடவும் வருவதில்லை. கூடிய மட்டும் பவர் ஹௌஸில் என் ஷிப்டில் அவனும் வேலை பார்ப்பதில்லை. எப்போதும் என்னவோ தீவிர சிந்தனையில் முழுகியிருப்பான். நான் ஏதாவது வலிய பேச்சுக் கொடுத்தாலும் ஏதாவது சொல்லிச் சமாளித்துவிட்டு விலகிக்கொள்வான்.’ ‘ஏதாவது காதல் கீதல் விவகாரமோ?’ என்று கேட்டுவிட்டு எல்லோரையும் திரும்பிப் பார்த்துச் சிரித்தான் வரதன். 

‘ஏறக்குறைய அப்படித்தான்…’ என்ற மணியால் சிரிக்க முடியாததை நான் கவனித்தேன். 

‘அப்படியென்றால் கேட்க சுவாரஸ்யமான சங்கதிதான்… சொல்லு சீக்கிரமாச் சொல்லு…’ என்றான் மிகுந்த ஆவலுடன் வரதன். 

‘ஹமீதுக்கு என்ன நேர்ந்துவிட்டது என்று எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. எப்படியும், காரணத்தைக் கண்டுபிடித்து விடுவது என்று நான் உஷாரானேன்… சென்ற சில நாட்களாக அவன் அறியாமல் அவனை நான் ‘வாச்’ செய்து வந்தேன். ரெண்டு மூணு நாள் முந்தி ஒருநாள்… அன்று எனக்கு ராத்திரி ஷிப்டு, மத்தியானம் ரெண்டு மணி இருக்கும். நான் புஸ்தகம் எதையோ வாசித்துக்கொண்டு கட்டிலில் கிடக்கிறேன். இவன் காலை முதல் ஷிப்டு கழித்து வருகிறான். வந்ததும் உடைகளைக்கூட மாற்றாமல், வழக்கம்போல், பாத்ரூமில் நுழைந்து கதவைத் தாழிடுகிறான். என் செவிகள் கூர்மையாகின்றன. 

குழாயிலிருந்து முழு வேகத்துடன் பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் விழும் சத்தம் ஹோவென்று முழங்கிக் கேட்குது. சற்று நேரத்தில் அவன் வெளியே வருகிறான். ‘என்ன மணீ… என்ன படிக்கிறே?’ என்று கேட்டவாறு என் கையிலிருந்து புஸ்தகத்தை வாங்கிப் பார்த்து விட்டு ‘உம் இது உனக்குத்தான் லாயக்கு’ என்று புஸ்தகத்தைக் கட்டிலில் எறிந்து விட்டு, ‘நான் இப்போ வாறேன்’ என்றவாறு வெளியே இறங்கிச் செல்கிறான். அவன் சென்றதும் நான் பாத்ரூமுக்குள் சென்று பரிசோதனை செய்கிறேன். உனக்குத்தான் தெரியுமே, அந்த பாத்ரூமில் வீட்டின் பின்னால் வெளியே போக ஒரு வாசல் இருப்பது. மரத்தால் ஆன மிகவும் பழைய கதவு; அந்தக் கதவின் தாழ்ப்பாளைத் தொட்டாலே அது ‘கறு பிறு’ என்று எட்டு வீடு கேட்கக் கத்தும். அந்தத் தாழ்ப்பாள் விலக்கி வைக்கப்பட்டிருந்தது. 

‘ஓஹோ… அப்படியென்றால் இது கொல்லையில் பூத்த காதல் மலரா’ என்று உற்சாகமாய்க் கேட்டான் வரதன். 

‘ஆமா, நேற்றிரவு நானும் அவனும் பக்கத்தில் பக்கத்தில் கிடக்கும் கட்டில்களில் கிடந்தவாறு பேசிக் கொண்டேயிருந்தோம்… அப்படியே தூங்கி விட்டேன். நடு இரவில் நான் எழுந்து பார்த்தபோது, கட்டிலில் அவன் உருவம் இருளில் மங்கலாய்த் தெரிந்தது. இருந்தும் சந்தேகம் உறுத்தியதால் எழுந்து விளக்கைப் போட்டுப் பார்த்தபோது, தலையணையைப் போர்த்திக் கிடத்தியிருப்பது புலனாகியது. முன் வாசல் கதவு அடைத்துக் கிடந்தது. பாத்ரூம் சென்று பார்த்தபோது, கதவைச் சும்மா சாத்தப்பட்டிருப்பது தெரிகிறது. அந்த வாசல் வழி வெளியில் இறங்கி, அங்கெல்லாம் டார்ச் அடித்துப் பார்த்த போது ஹமீதின் சந்தடியே இல்லை. எறும்பு ஊர்வதுபோல் என் மனசுக்குள் ஒரு சந்தேகம்… இருந்தும், நான் வந்து என் படுக்கையில் படுத்தேன். காலையில் எழுந்தபோது, ஹமீத் அவன் கட்டிலில் குறட்டை விட்டவாறு தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.’ 

‘நீ ஒண்ணும் கேட்கலையா?’ 

‘இல்லை… நான் இதையெல்லாம் அறிந்ததாய் அப்போ பாவிக்கலை.’ ‘அப்புறம்?’ 

‘இன்று மத்தியானம்’ மணி நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தான். ‘என்னடா… க்ளைமாக்ஸில் வந்து மௌனமாயிட்டே… மேலே சொல்லு…’ என்று வரதன் அவசரப்படுத்தினான். 

‘இன்று மத்தியானம் நான் ஷிப்டு கழிந்து வரும்போது ஹமீது கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தான். நானும் படுத்தேன்… சற்று நேரத்தில் கண்ணயர்ந்து விட்டேன். கண் விழித்துப் பார்த்தபோது இவனைப் படுக்கையில் காணவில்லை. முன் கதவு தாழிடப்பட்டவாறு இருக்குது. பின் வாசல் வழி வெளியில் வந்தேன். அங்கே நின்று பார்த்தபோது நேற்றிரவு மனசில் தோன்றிய சந்தேகம் ஊர்ஜிதமானது. இந்த வாசல் வழியாக இவ்வளவு சீக்கிரத்தில் இவனுக்கு வேறெங்கும் போய் வந்த விட முடியாது. எதிரில் க்வார்ட்டேர்ஸின் அந்த அடைத்துக் கிடக்கும் கதவின் முன் போய் நின்று சத்தம் போட்டேன். சற்று நேரத்தில் ஒரே நிசப்தம். நான் மீண்டும் கத்தினேன்… அடைந்திருந்த கதவு திறந்தது. கசங்கிய உடைகளைச் சரி செய்தவாறு ஹமீது வியர்த்து விறுவிறுத்துப்போய் இறக்கி வந்தான்.’ 

‘என்ன… என் க்வார்ட்டேர்ஸிலிருந்தா?’ வரதனின் குரல் கிணற்றுக்குள்ளிருந்து வருவது போலிருந்தது. 

‘ஆமா.’ 

இப்போது அறைக்குள் இருள் வியாபித்து விட்டிருந்தது. வரதனின் முகத்தைக் காண முடியவில்லை. நாராயணன் எழுந்து லைட்டைப் போட ஸ்விட்ச் பக்கம் போனபோது, ‘ப்ளீஸ்… லைட்டைப் போட வேண்டாம்’ என்று வரதன் தடுத்தான். நாராயணன் திரும்ப வந்து உட்கார்ந்தான். 

வரதன் சிகரெட்டை தீர்க்கமாய் இழுத்தவாறு முணுமுணுத்தவாறு ஜன்னல் பக்கத்தில் போய் நின்றான். 

அவன் மனதில் நடக்கும் போராட்டத்தை என்னால் யூகிக்க முடிகிறது. அவனை அவன் சிந்தனையின் போக்கில் விடுவதுதான் உசிதம் என்று எனக்குத் தெரிகிறதே. ஆனாலும், அவனுக்கு இப்போது சற்று ஆறுதல் அளிக்க ஏதாவது பேச வேண்டும் போலிருந்தது எனக்கு. 

‘வரதா! இப்போ உனக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய நாங்க எல்லோரும் காத்திருக்கிறோம். நம்ம ப்ராஜக்டில் நம்ம கூட உள்ள ஒருவன் இப்படி துரோக மனப்பான்மையுடன் நடந்திருப்பதில் நாம் எல்லோருமே தலை குனியத்தான் வேண்டும். போகட்டும், எதுக்கும் நீ உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது செய்து விடக்கூடாது…’ 

அவன் அமைதியின்றி அறையில் குறுக்கும் நெடுக்குமாக உலவத் தொடங்கினான். இவனை இன்னும் என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று நான் ஆலோசித்துக் கொண்டிருந்தேன். 

‘வரதா… உன் தாம்பத்திய வாழ்க்கையின் மேல் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தச் சவாலை, நீ மிகுந்த மனோதிடத்துடன் எதிர்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னையை மனசாலும்கூட நீ வெறித்தனமாய் அணுகக் கூடாது. நம்ம எஸ்.இ. சொல்லித்தான் உன்னை இங்கே இப்போ கூப்பிட்டுக் கேட்கிறேன். உடனடியாக அவளை ஊருக்குக் கூட்டிக்கொண்டுபோய் விட்டுவிட்டு வருகிறாயா? இல்லை. அவள் வீட்டுக்காரங்களை இங்கே வரவழைக்கணுமா? நம்ம எஸ்.இ.யின் கார் வெளியே கிடக்குது. டிரைவரும் ரெடியாக நிக்கிறான்.’ 

வரதன் நின்றான். மணியிடம் கேட்டான். ‘மணி, அப்போ இந்த விஷயம் எல்லோருக்கும் தெரியுமா?’ 

‘நான் சத்தம் போட்டதையும், கையும் களவுமாக ஹமீதை உன் வீட்டிலிருந்து இறக்கிக்கொண்டு வந்ததையும் மொட்டை மாடியில் நின்றவாறு நம்ம எஸ்.யின் சம்சாரமும், நம்ம நாராயணன் சாரின் க்வார்ட்டேர்ஸ் கொல்லைப் புறத்தில் துணி துவைத்துக்கொண்டிருந்த அவுங்க வீட்டு வேலைக்காரியும் பார்த்ததை நான் கவனித்தேன்…’ நான் மீண்டும் சொன்னேன். 

‘எதுக்கும் வரதா, நீ மனசைத் தளர விட்டு விடாதே… தைரியமாய் நில்…’ 

என்னை இடைமறித்துக்கொண்டு அவன் பேசினான். ‘மணி… நீ சொல்வதைப் பார்த்தா இப்போ இந்த ப்ராஜக்ட் ஏரியா முழுதும் நியூஸ் பரவியிருக்கும் போலிருக்கே… சங்கதி ஆபத்தாச்சே…’ 

‘என்ன…?’ 

‘ஆமா… சியாமளாவுக்கு அப்பா அம்மா யாரும் இப்போ உயிருடன் இல்லை. இருப்பதெல்லாம் ஒரே அண்ணாதான். அவனுக்குத் தங்கச்சிண்ணா உயிர். அவன்தான் இவளை எனக்குக் கல்யாணம் பண்ணித் தந்தான். அவன் ஆள் மிலிட்டரி ரிட்டேர்ண்டு. எப்போதும் ரிவால்வரும் கையுமாக வேட்டையாடிக்கொண்டு நடப்பான்… மகா முன்கோபி. அதோடு முரடன்… இந்த விஷயம் நான் அறிந்தது போகட்டும்… அவன் அறிந்து விடக் கூடாதேண்ணுதான் நான் இப்போ பயப்படுகிறேன்… அவன் காதில் விழுந்து விட்டால் பிறகு ஒரேயடியாக அவளையும், ஹமீதையும் சுட்டுத்தள்ளி விடுவான்…’ 

‘அதுக்காக?’ 

‘சார்… நீங்க எஸ்.இ.யிடம் எனக்காகச் சொல்லி ஒரே ஒரு உதவி மட்டும் செய்துதந்தால் போதும்…’ 

‘என்ன வேணும் வரதா… சொல்லு!’ 

‘உடனடியாகவே ஹமீதை இங்கிருந்து டிரான்ஸ்பர் செய்து தூரத்தில் எங்காவது நியமிக்கச் சொல்ல வேண்டும். மற்றபடி, நீங்க எல்லோரும் இந்த விஷயத்தை இதோடு விட்டு விட வேண்டும். இனியும் அலட்டிக்கொண்டு மேலும் பிரசாரம் செய்துகொண்டிருக்காமல் இருந்தால் போதும். அவ்வளவுதான். 

– 20.05.1973 

– ஞானரதம் 11.1973.

– இரண்டாவது முகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2012, கிழக்கு பதிப்பகம், சென்னை.

நீல பத்மநாபன் (பிறப்பு: சூன் 24, 1938, கன்னியாக்குமரி மாவட்டம்), தமிழகத்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது விருது பெற்றுள்ள நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *