ஒரு விபத்து – ஒரு விசாரணை

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 16,211 
 
 

அந்த டெம்போ டிராவலர் வேனில் இருந்த எல்லாரும் பதட்டமாக இருந்தனர். டிரைவரின் கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தன. டிரைவருக்குப் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த வாசுவின் முகம் வியர்த்திருந்தது. யாரும் எதுவும் பேசவில்லை.
பின்னால் உட்கார்ந்திருந்த வாசுவின் மனைவி, மவுனத்தைக் கலைத்தாள்.
ஒரு விபத்து - ஒரு விசாரணை“”ஏங்க… அந்த பையனோட அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க.”
வாசு திரும்பிப் பார்த்தான். “”இனிமேல் பதட்டப்பட்டு என்ன ஆகப் போகிறது? எதெல்லாம் ஆகக்கூடாதோ அதெல்லாம் ஆகிவிட்டது.
“”சரி விடு. ஆஸ்பத்திரிக்குத் தானே போறோம். அவர்களையும் கவனிக்கச் சொல்லுவோம். இப்ப வண்டிய நிறுத்தினா இன்னும் பிரச்னையாயிரும்.”
“”எனக்கு என்னமோ பயமா இருங்குங்க. வண்டியை நிறுத்திட்டு போலீசுக்குப் போன் பண்ணிருங்களேன். அவங்க வந்து என்ன பண்ணணும்ன்னு சொல்றாங்களோ, அதப் பண்ணிருவோம்.”
“”சும்மா புத்தி கெட்டதனமாப் பேசாத. இப்ப போன் பண்ணினா போலீஸ் வர வரைக்கும் நாம இங்கேயே காத்துக்கிட்டு இருக்கணும். அதுவரைக்கும் பையன் தாங்குவானா?”
வாசுவின் மனைவி ஒன்றும் பேசாமல், அழ ஆரம்பித்தாள்.
டிரைவர் பதட்டத்துடன் கத்தினான்.
“”போச்சு சார், எல்லாமே போச்சு. அங்க பாருங்க… டிராபிக் சார்ஜன்ட் நிக்கறாரு. போற வர்ற வண்டியெல்லாம், “செக்’ பண்ணிக்கிட்டு இருக்காரு. இந்தாளு இருக்கறதுலயே ரொம்ப மோசமானவரு. எக்குத்தப்பாக் காசு பிடுங்கிருவாரு. அதுமட்டுமில்ல, வண்டிய அரை மணி நேரம், ஒரு மணி நேரம் காக்க வச்சுட்டுத்தான் விடுவாரு. இப்ப என்ன சார் பண்றது?”
“”அந்தாளுக்குத் காசுதானே தேவை? அத மொதல்லயே கொடுத்துருவோம். இப்ப நாம உடனடியா ஆஸ்பத்திரிக்குப் போயாகணும். அதுக்கு என்ன செலவானாலும் பரவாயில்ல.”
அந்த வண்டி நிறுத்தப்பட்டதும், டிரைவர் வண்டியின் ஆர்.சி., லைசன்ஸ் எல்லாவற்றையும் கையில் எடுத்துக் கொண்டு அரக்க பரக்க ஓடினான்; கூடவே வாசுவும் இறங்கி ஓடினான்.
“”சார்… வண்டியோட ஆர்.சி., இன்சூரன்ஸ், லைசன்ஸ் எல்லாம் இதுல இருக்கு. முதல்ல எங்கள செக் பண்ணி அனுப்பிச்சிருங்க சார். ஆஸ்பத்திரிக்கு அவசரமா போகணும்.”
“”யோவ் நில்லுய்யா. நீ வரதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி வந்தவங்களே இன்னும் கிளம்பல. உனக்கு என்ன அவசரம்? அப்படி ஓரமாப் போய் நில்லு. இவங்கள பாத்ததும் உன்ன கூப்பிடறேன். அது சரி, வண்டில எவ்வளவு பேர ஏத்தியிருக்க?”
“”டெம்போ டிராவலர் சார். 12 பேர ஏத்தலாம். குழந்தைகளையும் சேத்து எட்டு பேர்தான் சார் இருக்காங்க.”
“”யோவ்… என்கிட்டயே ரூல்ஸ் பேசறியா? வண்டில பதினஞ்சு பேர் இருக்காங்கன்னு நான் சொல்றேன். ஓவர் லோட். அப்படிப் போய் நில்லு, போ.”
வாசு நெஞ்சம் படபடக்க ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தான்.
“”எக்ஸ்க்யூஸ் மீ சார். நான் தான் வண்டியோட ஓனர். வண்டிய இப்போ என் சொந்த யூசுக்குத்தான் எடுத்துக்கிட்டுப் போயிட்டு இருக்கேன். லா அண்ட் ஆர்டர் ஏ.சி., மிஸ்டர் மாரியப்பன் என்னோட பிரெண்டுதான் சார். இப்போ ஒரு அவசர வேலையா ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு இருக்கோம். எங்களப் போக விட்ருங்க. உங்களுக்கு எது வேணும்னாலும் இன்னும் அரை மணி நேரத்தில், டிரைவர இதே இடத்துல கொண்டு வந்து காட்டச் சொல்றேன்.”
“”யோவ்… இங்கிலிஷ்ல பேசிட்டா பயந்துருவமா? என்னை என்ன இளிச்சவாய்ப்பயன்னு நினச்சியா? இவரு அரை மணி நேரத்துல வருவாராம். நாங்க இங்க நடுரோட்ல காத்துக்கிட்டு இருக்கணுமாம். போலீஸ்காரங்க எல்லாம் சொங்கிப்பயன்னு நினச்சியா?”
வாசுவிற்கு புசுபுசுவென்று கோபம் வந்தது. வேறு சமயமாக இருந்திருந்தால், தன் மொபைல் போனில் வி.ஜ.பி.,க்களைக் கூப்பிட்டு, தன்னை எடுத்தெறிந்து பேசிய சார்ஜன்டை உண்டு இல்லை என்று பண்ணியிருப்பான். ஆனால், இன்று ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒரு உயிரைக் காப்பாத்த வேண்டிய பொறுப்பு இருந்ததால், பொறுமை காத்தான்.
“”சார்… ஒரு நிமிஷம்.” வாசுவைத் தனியே கூப்பிட்டான் டிரைவர்.
“”இந்தாள்கிட்ட தகராறு வச்சிக்காதீங்க. காலங்காத்தால தண்ணியப் போட்டுட்டு வந்திருக்கான் பாருங்க. இந்தாளோட சொந்தக்காரன் ஒருத்தன் ஆளும் கட்சில பெரிய ஆளு. இந்தாளுக்கு ஒரே வீக்னஸ் காசுதான். காசாலயே அடிங்க சார்.”
தான் வைத்திருந்த ஹேண்ட் பேக்கிலிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டான் வாசு.
“”சார்… இத வாங்கிக்கங்க. எங்கள உடனே போக விடுங்க ப்ளீஸ். நாங்க உடனே ஆஸ்பத்திரிக்குப் போயாகணும். கொஞ்சம் தயவு பண்ணுங்க.”
சார்ஜன்ட் தன் கண்களையே நம்ப முடியாமல் வாசுவின் கையில் இருந்த ஆயிரம் ரூபாயை பார்த்தார். முதலில் அதை வாங்கிக் கொள்ளக் கை நீட்டினார். திடீரென்று என்ன தோன்றியதோ தெரியவில்லை. நீட்டிய கைகளைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டார்.
“”என்னய்யா… என்ன முட்டாள்னே முடிவு பண்ணிட்டியா? நான் எதையும் பாக்கறதுக்கு முன்னாலயே ஆயிரம் ரூபாயை நீட்டற? அப்படீன்னா வண்டில ஏதோ விவகாரம் இருக்கு. இந்தாளப் பாரு, வண்டிக்கு ஆர்.சி., கிடையாது; ட்ரிப் ஷீட் கிடையாது. இவன் லைசன்ஸ் வேற காலாவதியாயிருச்சி. 150 ரூபா கொடுறான்னா அரை மணி நேரமா இழுத்துக்கிட்டு உக்கார்ந்திருக்கான். நீ எடுத்த உடனேயே ஆயிரம் ரூபாய நீட்டறியே? வா, வா… வண்டியப் பாப்போம். உள்ள கஞ்சா ஏதாவது வச்சிருக்கியா? வேற எதையாவது கடத்திறியா, சொல்லுய்யா உண்மைய?”
வாசுவும், டிரைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சார்ஜன்டிடம் கெஞ்சிக் கூத்தாடித் தனியே அழைத்துப் போய் விஷயத்தைக் கொட்டிவிட்டான் வாசு…
“”சார்… நடந்தத சொல்லிடறேன். இந்த வேன் என்னோடதுதான். இன்னிக்கு காலைல திருச்செந்தூர் போலாம்ன்னு குடும்பத்தோட கிளம்பினோம். வில்லாபுரம் பக்கத்துல வண்டி வரும் போது, ஒரு பையன் வந்து வண்டில விழுந்துட்டான். டிரைவர் நார்மல் ஸ்பீடுலதான் வந்தாரு. ஆனா, பையன் எதிர்பாராத விதமா குறுக்க ஓடிவந்துட்டான். டிரைவர் எவ்வளவோ கஷ்டப்பட்டு பிரேக் போட்டும் பையனுக்குத் தலைல பலமா அடிபட்டிருச்சி. நிறைய ரத்தம் வெளியேறிடுச்சி.
“”உடனே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போகலாம்ன்னு பையனை எடுத்து வண்டில போட்டுக்கிட்டு, பையனோட அம்மாவையும் கூட்டிக்கிட்டு வந்தபோதுதான் நீங்க, “செக்’ பண்றதுக்காக வண்டிய நிறுத்தினீங்க… பையனோட உயிரக் காப்பாத்தணுமேங்கற ஆதங்கத்துலதான் உங்களுக்கு நான் ஆயிரம் ரூபாய் கொடுக்க வந்தேன். எனக்கு இந்த ஆக்சிடெண்ட மறைக்கணும்கற எண்ணம் இல்ல சார். பையன ஆஸ்பத்திரில சேத்துட்டு அப்புறம் போலீசுக்கு இன்பார்ம் பண்ணலாம்ன்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்க மறிச்சிட்டீங்க. இப்பக்கூட சொல்றேன். எங்கள உடனே ஆஸ்பத்திரிக்குப் போக விடுங்க சார். பையன் உயிரக் காப்பாத்திரலாம். அதுக்கப்புறம் நீங்க என்ன சொல்றீங்களோ செய்யறேன். எவ்வளவு பணம் கேட்டாலும் தரேன் சார்.”
இப்போது அந்த சார்ஜன்ட் முகத்தில் ஒரு ஒளி தெரிந்தது.
“”ஓஹோ… ஆக்சிடெண்டா, அதான் ஆயிரம் ரூபாய எடுத்து நீட்டினியா நீ?” என்று எகத்தாளமாக ஆரம்பித்த சார்ஜன்ட், சட்டென்று குழைவாகக் குரலை மாற்றினார்.
“”இங்க பாருங்க… உங்களுக்கு யாரையோ, ஏ.சி.,யையோ, டி.சி.,யையோ தெரியும்ன்னு சொன்னீங்க. ஆனா, இது ட்ராபிக் கேஸ். நான்தான் இதப் பாக்கணும்; ரெக்கார்ட் எல்லாம் எழுதணும். நான் ரெக்கார்டுல ஏதாவது சொதப்பி விட்டுட்டா கேஸ் சிக்கலாயிரும். என்னை நல்லா கவனிச்சிக்கிட்டா உங்களுக்கு அதிகம் செலவில்லாம நான் பாத்துப்பேன். என்ன சொல்றீங்க?”
“”சார்… அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் சார். இப்போ எங்களப் போக விடுங்க. இல்லாட்டிப் பையனோட உயிருக்கே ஆபத்து. உங்கள கெஞ்சிக் கேட்டுக்கறேன்.”
“”யோவ்… இப்ப அந்த உயிருக்கு இரக்கப்பட்டா, அப்புறம் இன்வெஸ்டிகேஷன்ல என் உயிர எடுத்துருவாங்கையா. அந்தப் பையன் என்ன <உனக்கு சொந்தமா? செத்தா சாகட்டும்... எனக்கும் பேட்டல் ஆக்சிடெண்ட்ன்னு ஆச்சின்னா டீல் பண்ண சவுரியமா இருக்கும். நீ புலம்பாம இருய்யா. இப்ப கான்ஸ்டபிள் எல்லாம் வந்துருவாங்க. அவங்களக் கூட்டிக்கிட்டு நீ ஆஸ்பத்திரிக்கு போ.'' வாட்சைப் பார்த்தான் வாசு. இங்க வந்து நின்று அரைமணி நேரம் ஆகி விட்டது. யாரும் எதிர்பாராதவிதமாக அந்த சார்ஜன்ட் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான் வாசு. பக்கத்தில் நின்று கொண்டிருந்த மற்ற வண்டிக்காரர்கள் எல்லாம் அதிர்ந்து இந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தனர். ""சீ சீ... எழுந்திரியா, என்ன இது?'' ""சார்... பச்சப் புள்ள, வலில துடிச்சிக்கிட்டு இருக்கு சார். அம்மா மயக்கம் போட்டு விழுந்துருச்சி சார். பையனுக்கு ஏதாவது ஆச்சின்னா அந்தம்மா செத்தாலும் செத்துரும் சார். எங்கள ஆஸ்பத்திரிக்குப் போக விடுங்க சார். நீங்க வேணா வண்டியோட ஆர்.சி., இன்சூரன்ஸ் எல்லாத்தையும் வச்சிக்கங்க சார்'' ""நீ கால்ல விழுந்தாலும் சரி... கைல விழுந்தாலும் சரி. உன்ன நான் இப்ப போக விட மாட்டேன். கான்ஸ்டபிள் வந்தப்புறம் அவங்களோட ஆஸ்பத்திரிக்குப் போனால் போதும். பையன் செத்தா என்ன? நேர போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பிருவோம். எந்திரியா முதல்ல. வண்டி நம்பரு, உன் பேரு, உங்கப்பா பேரு, டிரைவர் பேரு, உன் அட்ரஸ் எல்லாத் தையும் சொல்லு.'' வாசு சொல்லச் சொல்ல சார்ஜன்ட் எழுதிக் கொண்டார். வேனுக்குள் இருந்த வாசுவின் மனைவி ஓடி வந்தாள். ""என்னங்க... இங்க வாங்களேன். பையனுக்கு மூச்சு நின்னுருச்சிங்க... உடம்புல துடிப்பே இல்லை.'' சார்ஜன்டின் சட்டையைப் பிடித்தான் வாசு. ""அநியாயமா பையனக் கொன்னுட்டியேய்யா, நீ நல்லாயிருப்பியா? இனிமே கோடி ரூபா கொடுத்தாலும் போன உசிரு திரும்பி வருமா? நீ காசு வாங்கறதுக்காக ஒரு பச்ச உசிரக் காவு கொடுத்திட்டியே... பாவி.'' சார்ஜென்டுக்குக் கோபம் வந்தது. வாசுவின் கன்னத்தில் பலமாக அறைந்தார். ""போலீஸ்காரன் மேலயே கை வச்சிட்டேல்ல? முதல்ல உன் மேல ஒரு கேஸ் புக் பண்ணி உள்ள போடறேன் பாரு.'' அதன் பின் சமாதானம் செய்யும் முகமாகக் குழைவாகப் பேசினார் அவர். ""ஆக்சிடெண்டுன்னா இதெல்லாம் சகஜம். நடக்க வேண்டியதப் பாப்பியா, செத்தவனுக்குப் பரிஞ்சிக்கிட்டு வரியே...'' சார்ஜன்ட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் வாசு. ""பையன் செத்துட்டான்ல, இனிமே கவலையில்ல. நீ ஆஸ்பத்திரி போறதுக்கு அவசரப் பட வேணாம். இங்கேயே இரு. அந்த ஆயிர ரூபாயக் கொடு, அத அட்வான்சா வச்சிக்கறேன். பாக்கி என்னங்கறத அப்பறம் பேசிப்போம்.'' அப்போது இரண்டு கான்ஸ்டபிள்கள் மெதுவாக சைக்கிளில் வந்து சார்ஜன்டுக்கு விரைப்பாக சல்யூட் வைத்தனர். ""யோவ்... இந்த ஆளு ஒரு சின்னப் பையன் மேல வண்டிய ஏத்திட்டான். பையனத் தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போகும் போது, நான் வழி மறிச்சி, "செக்' பண்ணேன். அப்போ மாட்டிக்கிட்டான். இப்போ பையனும் செத்துட்டான். பாடி வேனுக்குள்ளதான் இருக்கு. பையனோட அம்மாவோ, அப்பாவோ கூட இருக்காங்க. நீ இந்த வேன்லயே ஜி.எச்.,க்குப் போ. டெட் ஆன் அரைவல்ன்னு ரெகார்ட் பண்ணச் சொல்லு. அப்பறம் டாக்டர் செல்வராஜ் இருப்பாரு. அவர போஸ்ட மார்ட்டம் பண்ணச் சொல்லு. நான் வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு, டிபன் பண்ணிட்டு வந்துடறேன்.'' கான்ஸ்டபிள் நேராக வாசுவிடம் வந்தார். ""சார்... நீங்கதானா அந்தப் பார்ட்டி? இருநூறு ரூபாய் கொடுங்க செலவுக்கு. யாராப்பா டிரைவர்... வண்டிய எடு.'' ""அடிபட்ட பையனப் பாக்கறீங்களா?'' ""உயிரு போயிருச்சில்ல... இனிமே பாத்து என்ன ஆகப்போகுது? ஆஸ்பத்திரில எறக்கும் போது பாத்துக்கலாம்.'' வண்டி கிளம்பி கண் பார்வையை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தார் சார்ஜன்ட். காத்துக் கொண்டிருந்த மற்ற வண்டிக்காரர் களையெல்லாம் போகச் சொல்லிவிட்டு தன் புல்லட்டைக் கிளப்பினார். அப்போது ஒரு பையன் சைக்கிளில் படுவேகமாக வந்தான். அவனைப் பார்த்ததும் சார்ஜன்ட் வண்டியை நிறுத்தினார். ""நீ ஏண்டா இங்க வந்த?'' பையன் ரொம்ப வேகமாக சைக்கிளில் வந்திருப்பான் போல. கொஞ்ச நேரத்துக்குப் பேச்சே வரவில்லை. மூச்சுத்தான் வேக வேகமாக வந்தது. ""தம்பிய ஒரு வேன் அடிச்சிப் போட்ருச்சிப்பா. தம்பிய ஆஸ்பத்திரிக்கு அதே வேன்லய எடுத்துட்டுப் போயிருக்காங்க. அம்மாவும் கூடவே போயிருக்கு. உங்கள ஸ்டேஷன்ல தேடிட்டு, மாட்டுத்தாவணி அவுட்போஸ்ட்ல தேடிட்டு, அப்பறம் இங்க வரேன். நீங்க மொபைல் போனை வீட்டுலயே வச்சிட்டு வந்துட்டீங்கப்பா. அம்மா உங்ககிட்ட சொல்லி பெரிய ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லிச்சி.'' ""வண்டி நம்பரப் பாத்தியா?'' ""பாத்தேம்பா.'' பையன் சொன்ன நம்பரும், அவர் கடைசியாகக் குறித்து வைத்த நம்பரும் ஒன்றாக இருந்தது. - அக்டோபர் 2010

Print Friendly, PDF & Email

1 thought on “ஒரு விபத்து – ஒரு விசாரணை

  1. இது “ஒரு விபத்து ஒரு விசாரணை ” அல்ல .”விபரீத விசாரணை ;விதியின் விசாரணை “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *