ஒரு வழிப் பயணம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 26, 2021
பார்வையிட்டோர்: 3,086 
 
 

மத்தியானம் புறப்படும் வண்டியைப் பிடிக்கத் தங்கச்சி வீட்டி லிருந்து இறங்கும் போது மணி முள் ஒன்றை விலக்கி விட்டிருந்தது. வீடு நங்கநல்லூரின் உட்சுழிவுகள் ஒன்றினுள். எஸ்.பி.காலனி பஸ் ஸ்டாண்ட் வந்தால் ஆட்டோகிடைக்கும். அதற்கு ஐந்து நிமிடங்கள் நடை. ஆட்டோ கிடைத்தால் ஐந்து நிமிடங்களில் பழவந்தாங்கல். அல்லது 18சி கிடைத் தால் பத்து நிமிடங்கள். பத்து நிமிடங்கள் மின்சார வண்டிக்குக் காத்து நின்றாலும் பார்க் ஸ்டேஷனில் இறங்க ஒன்று ஐம்பத்தைந்து ஆகிவிடும். ஓட்டமும் நடையுமாகப் போனால் இரண்டு மணிக்கு சென்ட்ரல். மேலும் பத்து நிமிடங்கள் மீதமிருக்கும். வெள்ளம்.

ஒரு ஆசுவாசம் இருந்தாலும் இத்தனை கணக்குகளில் ஒன்று தெற்றிப் போனாலும் வண்டி போய்விடும். சற்று நிதானமாகச் சேரும் விதத்தில் கிளம்பியிருக்கலாம். பன்னிரண்டரைக்குப் புறப்படுவதாகத் தான் தீர்மானம். மத்தியானம் சாப்பிடாமல் புறப்படக்கூடாது என்று சொல்லிவிட்டாள். காலையில் தின்ற முருங்கைக் கீரை அடை நல்லெண் ணெயில் நன்றாக முறுகியிருந்தது. இன்னும் செமித்திருக்கவில்லை என்றாலும் இரண்டு வாய் சாப்பிடாமல் கிளம்பி விட முடியவில்லை.

சாமான்கள் அதிகமில்லை . சிறிய தோர் சூட்கேஸ். ஏர்-பேக் பூரா பம்பாயில் நியாய விலையில் கிடைக்காத அரும் பெருட்கள். ஒரு பிளாஸ்டிக் பையில் ராத்திரிக்கு தயிர்சாதம். மறுநாள் காலைக்கு இட்லி, மத்தியானத்துக்குப் புளித் தண்ணி தாளித்த சோறு. காலியான பிராந்தி பாட்டில் தண்ணீர் பிடிக்க.

வண்டி நேரத்தில் சென்று சேர்ந்தால் மறுநாள் இரவு எட்டு முப்பத்தைந்துக்குப் பம்பாய் தாதர் போகும். ஏற்கனவே ஒரு மாதம் முன்பு பதிவு செய்யப்பட்ட டிக்கெட். இரவு பத்து மணி அளவில் வருவான் என வீட்டில் எதிர்பார்த்திருப்பார்கள்.

ஒன்று இருபத்தைந்துக்கு ஒரு மின்சார வண்டி வந்தது. கூட்ட மில்லை. கூட்டம் இருந்தாலும் விட்டுவிட முடியாது. பெரிய தடங்கல் ஏதும் இல்லாவிட்டால் ஒன்று ஐம்பத்தைந்துக்கு பார்க்கில் இறங்கி விடலாம். எதிர்காற்று இதமாக இருந்தது.

ஓடிப்புடைத்து ஸ்டேஷனுக்குள் நுழையும்போது, பெரிய கடிகாரம் 2.05 காட்டியது. சென்னை – பம்பாய் ஜனதா எக்ஸ்பிரஸ் ஆறாவது பிளாட்பாரம் என்றது பெரிய பலகை, பிளாட்பாரம் காலியாக இருந்தது காணத் திகைப்பாக இருந்தது. வண்டி இல்லை. பயணிகளும் இல்லை. நேரத்துக்கு முந்தி வண்டி போயிருக்க நியாயமில்லை. வேறு பிளாட் பாரத்தில் வண்டியை மாற்றிப் போட்டிருக்கலாம். இனி தேடிப்பிடிக்கும் அவசரத்தில் வண்டி போய்விடக்கூடாது. ஆனால் வண்டி வேறு எந்த பிளாட்பாரத்திலும் இல்லை.

ஒருவேளை பம்பாயில் இருந்து வரும் வண்டி தாமதமாக வர, இது புறப்படச் சில மணி நேரம் தாமதமாகத் திட்டமிடப்பட்டிருக்கலாம். இது ஒன்றும் இந்திய ரயில்வேயில் புதிய சங்கதி அல்ல.

கறுத்த கோட்டுக்காரரைக் கேட்டபோது, அந்த வண்டி நிரந்தரமாக ரத்தாகி இரண்டு நாட்கள் ஆகிவிட்டன என்றார்.

”பேப்பர்லே எல்லாம் போட்டிருந்தோமே! பார்க்கவில்லையா?”

“பேப்பர் பார்ப்பதுண்டுதான். அவ்வளவு நுணுக்கமாகப் பார்க்க வில்லை. தப்புத்தான். வேறு மார்க்கமென்ன சார்?”

“முப்பத்து மூன்றாம் நம்பர்கவுண்ட்டருக்குப் போங்கள். மொத்தப் பணமும் திருப்பித் தந்துவிடுவார்கள்.”

”அதுக்கில்லே சார்… இன்னைக்கு எப்படியும் போயாகணும்… நாளைக் களிச்சு வேலைக்குப் போகணும்…”

‘பம்பாய் மெயிலில் முயற்சி பண்ணுங்க – ஒரு கோச் கூடுதலாகப் போடுவார்கள். முப்பத்தாறாம் நம்பர் கவுண்ட்ட ரில் பதிவு செய்து கொள்ளுங்கள்…”

சாமான்களையும் தூக்கிக்கொண்டு முப்பத்தாறாம் நம்பர் கவுண்ட்டர் தேடி நடக்கும்போதே யோசனை. ஒரு வண்டியில் பம்பாய்க் குப் போகப் பதிவு செய்த அனைத்துப் பயணிகளையும் எப்படி எழுபத் திரண்டு பெர்த்துகள் கொண்ட ஒரே பெட்டியில் அடைப்பார்கள்?

நிறையப் பேர் முன்னதாகவே தகவல் தெரிந்து முன்பதிவை ரத்து செய்திருக்கலாம். இப்போது ஐயப்பன்மார் பேய் போல் அலையும் சபரிமலை சீசனும் கிறிஸ்துமஸ் விடுதலையும் பொங்கல் விடுமுறையும் முடிந்த பிந்திய தை மாதப் பகுதி. எனவே அவ்வளவு நெருக்கடி இருக்கக் காரணம் இல்லை. விபரம் உடையவர்கள் சென்னை – தாதரில் போவார் கள் காலையில், பெரும்பாலும் அதில் இடம் கிடைக்காதவர்களும் திருநெல்வேலிக்கும் தெற்கில் இருப்பவர்களும் தான் பம்பாய் ஜனதா பிடிப்பார்கள். முன்தினம் மாலையில் நெல்லை எக்ஸ்பிரஸ் பிடித்து காலையில் எழும்பூரில் இறங்கி, சென்ட்ரலுக்கு வந்து, பிளாட் ஃபாரத்தில் காத்திருந்தது, இந்த வண்டியைப்பிடிப்பார்கள். அவர்களுக்கு மேலும் ஒரு நாளைக்குத் தேவையான இட்டிலியும், புளித் தண்ணி தாளித்த சோறும் கட்ட வேண்டியதிருக்கும்.

ஓய்வாகக் குளித்து, துவர்த்து உலர்த்தி, பிளாட்ஃபாரத்திலேயே மதியச் சாப்பாடு முடித்து, சாவகாசமாக வண்டியேறுவார்கள். அவர் களுக்கு வண்டி ரத்தான சேதி தெரியாமல் இருந்தால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. பெரும்பாலும் நெத்திலிக் கருவாடு, கடலை மிட்டாய், பனங்கிழங்கு, கருப்பட்டி எனப் பல்பொருள் கொண்ட அட்டைப் பெட்டிகள் நிறைய இருக்கும் அவர்களிடம். அவற்றையும் சுமந்து கொண்டு மாறி மாறி இருக்கைக்கு அலைவது என்பது எளிதான காரியமும் அல்ல.

முப்பத்தாறாம் நம்பர் கவுண்ட்டரில் ஒருவரும் இல்லை. எல் லோரும் வேலையை முடித்துவிட்டுப் போயிருப்பார்கள் போல. குனிந்து பார்த்தபோது உள்ளே இருந்தவர் நிமிர்ந்து பார்த்தார்.

”எல்லாம் ஃபுல்லாயிட்டே சார்…வெயிட்டிங் லிஸ்டிலே வேணும்ணா போட்டுத் தாறேன்…”

இரண்டு கண்ணும் இல்லாதவன் ஐயா, பாடு பட்டுப் பிழைக்க முடியாதவன் ஐயா என்ற பாணியில் –

‘நீங்க அப்படிச் சொல்லீரப்பிடாது… எப்படியும் போய்த் தீரணும்… கொஞ்சம் சகாயம் செய்யுங்கோ !” என்று இரந்து இருபது ரூபாய் நோட்டையும் நீட்டினான்.

உள்ளே இருந்தவர் இருபது ருபாய்க்கான உழைப்பைச் செய்து புத்தகத்தை மாறி மாறிப் புரட்டினார்.

“நீங்க சரியா ஆறு மணிக்கு வாங்கோ… சீட்டிங்காவது போட்டுத் தாறேன்…”

“எப்பிடியும் ஹெல்ப் செய்யுங்க சார்… ஆறு மணிக்கு வாறேன்…” “சரி… பார்க்க ட்டும்…”

மணி இரண்டு இருபது ஆகியிருந்தது. இனி ஆறு மணிவரை வேறு வேலை இல்லை. வண்டி இரவு பத்து இருபதுக்குத்தான். இந்த ஆறுமணி வேலை இல்லாவிட்டால் நங்கநல்லூர் வரை போய்த் திரும்பலாம். அது வெறும் அலைச்சல். மேலும் வழியனுப்பி, வந்த பின் திரும்புவது என்பது சுடுகாட்டுப் பிணம் திரும்புவது போல, மத்தியான சினிமாவுக் கான நேரம் தாண்டிக்கொண்டிருந்தது.

எதற்கும் சாமன்களைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டாம் என்று க்ளோக் ரூமில் பெட்டியையும் ஏர்பேக்கையும் ஒப்படைத்தான்.

பிளாஸ்டிக் பை திறந்த மேனிக்கு இருப்பதால் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்றார்கள். சரி, அந்த வரைக்கும் கனம் தொலைந்தால் போதும் என்று பிளாஸ்டிக் பையைத் தூக்கிக்கொண்டு பிளாட்பாரத்தை விட்டு வெளியே வந்தான்.

வீட்டுக்குத் தந்தி அடிக்க வேண்டும். நாளை இரவு பத்து மணிக்குள் எதிர்பார்ப்பார்கள். ஆபீசில் இருந்து திரும்பும்போது ஒரு நாள் மின் தடங்கல் காரணமாய் வண்டி இரண்டரை மணி நேரம் தாமதமாகி, பத்து மணிக்கு வீடு திரும்பியபோது, பையன் அழ ஆரம்பித்திருந்தான். ஒரு வேளை ஆக்சிடென்ட் ஆகி அப்பன் இறந்திருப்பான் என்ற பயத்தில்… அப்படி ஆகவும் கூடும்தான்.

பம்பாய் மெயில் நாளை மறுநாள் காலை நாலரை மணிக்குத்தான் போகும். தாதர் ஸ்டேஷனில் இறங்கி, பஸ் பிடித்து, நியூ பாம்பே போகும் போது பன்றிகள் மேயப் புறப்பட்டிருக்கும். ‘ரயில் ரத்தாகி விட்டது. மெயிலில் புறப்படுவேன்’ என்றொரு அவசரத் தந்தி, சில சமயம் தந்தி தன்னுடன் ரயிலிலேயே வரும். தனக்குப் பிறகுள்ள ரயிலும் வரும்.

மெயிலில் பெர்த் கிடைக்காவிட்டால் என்ன செய்வது? இரண்டு இரவுகள் உட்கார்ந்து போவது மிகவும் சிரமம். இருக்கையாவது கிடைத்தால் சரி. இல்லாவிட்டால் ஜெனரல் கோச்சில் பயணம் செய்ய நேரிட்டு விடும்.

நெடுந்தொலைவு போகும் விரைவு வண்டிகளில் நெரிசல் மிகுந்த நாட்களில் ஜெனரல் கோச்சில் பயணம் செய்வதென்பது எளிதான காரியம் அல்ல. உலக மகா யுத்தத்து நாட்களை நினைவு படுத்திவிடும்.

ஒரு மே மாதத்து முதல் வாரம். சனிக்கிழமை வேறு. தங்கையின் கல்யாணம் திடீரெனத் தீர்மானமாகி அவசரமாகப் புறப்பட வேண்டிய நிர்ப்பந்தம். புத்தூர் ராகவேந்திரராவ் தெரிந்தவர் மூலம் அறுபது ரூபாய்க்கு ஒரு சீட் பிடித்துக் கொடுத்தான், எழுபத்து ஒன்பதாம் ஆண்டில்.

பூனா வரும்போது மூத்திரம் பெய்ய எழமுடியாமல் ஆகிவிட்டது. சாப்பிட்டுவிட்டுக் கையை ஜன்னல் வழியாகக் கழுவ நேரிட்டது. சாய்ந்து உறங்கலாம் என்றால் பூனாவில் ஒரு மந்தை இறங்கி, புது மந்தை ஏறியது. ஒவ்வொரு அரை அல்லது முக்கால் மணி நேர இடைவெளியில் இதே கதை. சாமான்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வலது தோளில் அவ்வப்போது ஒரு பிருஷ்டம் சுமக்க வேண்டும். கால் நீட்டி உட்கார முடியாது. ஜன்னலோர ஒற்றை இருக்கையில் கூட ஒண்டுக் குடித்தனம் உட்கார்ந்துவிடும்.

அப்படியெல்லாம் ஆகிவிடாது. இருபது ரூபாய் கண்டிப்பாக அதன் வேலையைச் செய்யும். ஊழல் செய்பவர் கூட ஒரு அடிப்படையான தரும இருசில் சுழலவே செய்கிறார். வாழ்க்கை தினமும் சில்லறை அயோக்கியத்தனங்கள் செய்யப் கற்பித்துக் கொண்டே இருக்கிறது.

இன்னும் மூன்று மணி நேரத்தை என்ன செய்வதென்று தெரிய வில்லை. தங்கச்சி வீட்டில் ஃபோன் செய்து தகவல் சொன்னான். நண்பர் ஒருவர் மாம்பலத்தில் இருந்தார். சனிக்கிழமை அவருக்கு விடுமுறை தான். முந்திய நாளும் சந்தித்துப் பேசி இருந்தான். சில மணி நேரங்களை உற்சாகமாகக் கழிக்கலாம் என்று அவருக்கு ஃபோன் செய்தான். அவர் ‘அப்படியா’ என்பதற்கு மேல் ஆர்வம் காட்டவில்லை.

மெரீனாவுக்குப் போய்த் தூரத்தில் உட்காரப் பிடிக்கும். இந்த நடு வெயிலில் மணல் சுடும். நிழல் கூடத் தேடித்தான் பிடிக்கவேண்டும்.

திடீரென எம்.ஜி.ஆர் சமாதி நினைவுக்கு வந்தது. இறந்து ஆறு மாதங்கள் ஆகி இருக்கலாம். இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்றும் கல்லறைக்குள் அவர் விடும் மூச்சுக்காற்று கடலலையோடு கலந்து வெளியே கேட்கிறது என்றும் அவர் கைக்கடிகாரம் இன்னும் டிக்டிக் அடிக்கிறது என்றும் பதினெட்டு கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து சுரங்கம் தோண்டிக்கல்லறையை ரகசியமாக அடைந்து கடிகாரத் தைக் கழற்றப் போகிறார்கள் என்றும் பத்திரிகைகள் பலவும் ‘இன்வெஸ் டிகேட்டிவ் ஜர்னலிஸம்’ செய்துகொண்டிருந்ததைப் படித்தது ஞாபகம் வந்தது.

சும்மா சென்ட்ரல் ஸ்டேஷனை மட்டும் வேடிக்கை பார்ப்பதற்குக் கல்லறையைப் பார்த்து வரலாம் என்று புறப்பட்டான். பிளாஸ்டிக் பை ஒரு அநாவசியமான தொந்தரவு. தூர எறியவும் மனதில்லை . நெடுந் தொலைவுப் பயணத்துக்குத் தண்ணீர் பாட்டில் இல்லாவிட்டால் சிரமம். மேலும் மூன்று வேளைச் சாப்பாட்டுக்கு ரயிலில் முப்பது ரூபாய் ஆகிவிடும்.

அவனைப் போல நிறையப்பேர் சமாதியைச் சுற்றி வந்தனர். மூங்கில் கழிகளால் நிரை அமைத்திருந்தனர். இரண்டு கால்களும் இளம் பிள்ளை வாதத்தால் சூம்பிப்போன ஒரு நாற்பது வயதுக்காரர் பொரிக்கும் மணலில் தவழ்ந்து சுற்றினார். அவர் கண்கள் ஈரம் படிந்திருந்தன.

சரியாக ஐந்தே முக்காலுக்கு ஸ்டேஷன் கவுண்டரை அடைந்த போதும் கவுண்ட்டரில் கூட்டமில்லை. ஒரு பெர்த் ரிசர்வ் ஆகிவிட்டி ருந்தது – பெரிய உல்லாசமான நிலை.

மேற்கொண்டும் நான்கு மணி நேரம் போக்க வேண்டும். மறுபடியும் வேண்டுமானால் மெரீனா போய்வரலாம். அல்லது பக்கமாய் இருக்கும் தியேட்டராய் பார்த்து ஒரு தமிழ் சினிமாவுக்குப் போகலாம்.

ஏனோ தெரியவில்லை , சமீபகாலமாய் தமிழ் சினிமாதியேட்டருக் குள் நுழைவது என்பது தகாத காரியம் செய்வது போன்ற கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. காமிராக்கள் கிராமத்தின் அழகைக் காட்டிக் கொண்டே இருக்கையில் ஒலிபெருக்கிகள் நரகலை உமிழ்ந்து கொண்டி ருந்தன. மெல்லுணர்வு செத்தவன், சாகக்கொடுக்க நினைப்பவன் சென்று சேரும் இடம். பம்பாயில் செம்பூருக்குப் பக்கத்தில் கோவன்டி என்றொரு ஸ்டேஷன். அதைத் தொட்டவாறு ஒரு சினிமா தியேட்டர். நல்ல தியேட்டர்தான். ஆனால் சனி, ஞாயிறு காலைக் காட்சிகள் இந்தியனின் பாலுறவு வறட்சியைப் பறைசாற்றுவது போல இருக்கும். பெரும்பாலும் மலையாளிகள் மற்ற மொழிக்காரர்களுக்காக நல்லெண்ணத்துடன் படுத்துப் புணரும் சினிமாக்கள். வால் போஸ்டரில் வண்ணங்களில் பிரா கொக்கியை அவிழ்த்துக்கொண்டு நெளிந்து நிற்கும் பெரிய தனக்காரிகள்,

ஒரு முறை போக நேரிட்டது. போகும்போதும் வரும்போதும் யாரும் தன்னைக் கவனிக்கிறார்களா என்ற கலவரக் கண்களுடன்… தியேட்டரினுள் முக்கால் வாசிப் பேர் அழுக்குப் பூணூல் உ.பி. பையாக் கள். பீகார் முஸ்லீம்கள், பருவம் தப்பிய தென்னிந்தியப் பிராமணர்கள், சேலம், திருநெல்வேலி மறத் தமிழர்கள். மருந்துக்கூட ஒரு பெண் முகம் இல்லை. போஸ்டரில் ‘அடல்ட்ஸ் ஒன்லி’க்குப் பதிலாக மூத்திரப் புரை களில் போடுவது போல, ‘ஆண்கள் மாத்திரம்’ என்றுகூடப் போடலாம். தெரு நாய்கள் பூட்டுப் போட்டுக்கொண்டு நடுத் தெருவில் இழுபறியாய் நிற்பது இப்போது யாருக்கும் கூச்சம் ஏற்படுத்துவது இல்லை.

முன்னிரவில் புறப்படும் வண்டிகள் ஒவ்வொன்றாய் தயாராகிக் கொண்டிருந்தன. கடைசி வண்டிதான் பம்பாய் மெயில் போலும். அல்லது அதற்குப் பின்பும் ஒரு வண்டி இருக்கலாம். எட்டு மணி சுமாருக்குச் சாப்பிட்டுக் கை கழுவினான்.

ஒரு பொட்டலம் காலியான எடைக் குறைவு, வாராந்தரி ஒன்று வாங்கிக் கொஞ்ச நேரம் புரட்டினான். அதிலும் தமிழ் சினிமாவின் மூத்திரப்புரை வாடை காரமாக மூக்கில் தாக்கியது.

ஒன்பது மணிக்கு க்ளோக் ரூமில் கிடந்த சாமான்களை எடுத்து வந்தான். பம்பாய் மெயில் பிடித்து நிறுத்தும் பிளாட்ஃபாரம் அறிந்து, எஸ்-4 உத்தேசமாக வரும் இடம் அனுமானித்து, ஃபேன் கீழ் கிடந்த சிமெண்ட் பெஞ்ச் பார்த்து ஓய்வாக உட்கார்ந்தான்.

வண்டி சாவகாசமாக வந்தது. பெயர்ப் பலகையில் ஒட்டப்பட்ட தாளில் பெயரும் இருந்தது. வண்டியினுள் ஏறி, தண்ணீர் பாட்டிலை இருக்கையின் அடியில் வைத்து, சோற்றுப் பொட்டலப் பையைக் கொக்கியில் தொங்கப் போட்டு, ஏர்பேக்கைக் கீழே தள்ளினான். பெட்டியைத் திறந்து லுங்கியை உடுத்திக்கொண்டு பேன்ட்டை மடித்தான். சட்டையைக் கழற்றி மடித்தான். கை வைத்த பனியன்தான். பரவாயில்லை. துண்டை கழுத்தில் கண்டமாலையாகப் போட்டான். கனமில்லாத பெட்ஷீட்டையும் காற்றுத் தலையணையையும் எடுத்து இருக்கையில் போட்டான். பாட்டிலை எடுத்து ஒரு வாய்த் தண்ணீர் குடித்தான்.

அலுப்பாக இருந்தது. மேலே ஏறிப் படுத்தால் தூங்கி விடலாம். பரிசோதகர் வரும்போது எழுப்புவார். காற்றில்லை. புழுக்கமாக இருந்தது. படுத்தாலும் தூக்கம் வராது. ஜன்னலோரம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். வண்டியினுள் பயணிகள் அடைபடத் துவங்கினார்கள். அவன் இருந்த பிரிப்பில் ஜன்னலோர ஒற்றை இருக்கையில் இரண்டு மாணவர். அவன் பக்கத்து இருக்கைகளுக்கான ஐவர் ஒரே குடும்பமாக இருக்க வேண்டும். பெயர்களைப் பார்த்தால் அப்படித்தான் தெரிந்தது.

வண்டி புறப்பட இன்னும் முப்பது நிமிடங்கள் இருந்தன. சற்றுக் கலவரமான ஓசை கேட்டது. தலைவிரி கோலமாக ஒரு பெண்மணி சென்னையை எரிப்பவள் போல அலறிக்கொண்டு ஓடினாள்.

“யய்யா … எஞ் சாமி… எம் பெட்டி போச்சே… அறுவது பவுன் உருப்பிடி அம்புட்டும் போச்சே… அறுவது பவுன் உருப்பிடி அம்புட்டும் போச்சே… அவருக்கு நான் என்ன சமானஞ் சொல்லுவேன்… யய்யா… நான் எங்கினேண்ணு போய்த் தேடுவேன்…” அழுதுகொண்டு ஒரு பன்னி ரண்டு வயதுச் சிறுவனும் பத்து வயதுச் சிறுவனும் பின்னாலேயே ஓடினார்கள்.

வண்டியை விட்டு இறங்கி பிளாட்ஃபாரத்தில் நின்றான். ஓடிய பெண்மறுபடி திரும்பி வந்தாள், நெஞ்சில் அறைந்துகொண்டு. சாதாரண சமயத்தில் பார்க்கச் சகிக்கும்படி இருப்பாள். திருநெல்வேலி கிறிஸ்துவச்சி போலத் தோன்றியது.

காலையில் வந்து இறங்கி இரவு வரை ஆண்துணையின்றிச்சாமான் களையும் பையன்களையும் பாதுகாத்து வந்திருப்பாள். வண்டி வந்து நின்ற அவசரத்தில் ஒரு பெட்டி பறிபோய்விட்டது போலும்.

பெரிய பையனை முதுகில் போட்டு அறைந்தாள். யாரோ ஒரு பெண்மணி ஓடிப்போய் பிடித்தாள்.

இரண்டு ரயில்வே காவல் தலைகள் தெரிந்தன. இனிமேல் புகார் சமர்ப்பணச் சடங்குகள் இருக்கும்.

அறுபது பவுனை இந்தப் பெண் பிள்ளை மொத்தமாக இனி எந்த நாள் காண்பாளோ?

“கம்ப்ளெயின்ட் குடுத்தாச்சில்லாம்மா… இனி கடவுளை நம்பீட்டு ஊருக்குப் போய்ச் சேரு… பிள்ளையளைப் போட்டு அடிக்காத என்ன?”

இனி முப்பத்தோரு மணி நேர ரயில் பயணம்.

தாராவிக்கோகோலிவாடாவுக்கோ கோவன்டிக்கோபோக வேண்டு மானால் தாதரில் இறங்க வேண்டும். ஸ்டேஷனில் கண்டிப்பாய் வந்து காத்திருக்கும் கணவனைச் சந்திக்கும் தைரியத்தைச் சேகரிக்க இந்தக் கால அளவு போதுமோ என்னவோ.

– சுபமங்களா, ஏப்ரல் – 1993

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *