ஒரு மணிவிழாக் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 823 
 
 

வெள்ளிவிழா எழுத்தாளர் வேங்கடநாதனை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்திருக்கா விட்டாலும் அது ஒரு பெரிய குற்றமாகி விடாது அதென்ன எழுத்தாளர் வேங்கடநாதன் என்று மட்டும் போடாமல், வெள்ளி விழா எழுத்தாளர் என்று போட்டிருக்கிறீர்களே என்பதாக நீங்கள் கேட்க வரலாம். அதற்குச் சரியான காரணம் இருப்பதனால்தான் அப்படிப் போட்டிருக்கிறது.

வேங்கடநாதன் ஒரே ஒரு துறையில் மட்டும் திறமைசாலி அல்ல. அவர் பல்வேறு துறைகளில் திறமைகள் நிறைந்தவர். 1916ம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியராக இருந்திருக்கிறார். பின்பு பத்து ஆண்டுகள் ஒரு தினசரியில் செய்தி ஆசிரியர், அதன் பின் இருபது ஆண்டுகளாக ஒர் அயல்நாட்டுத் தூதரகத்தின் செய்திப் பிரிவில் பதவி வகித்தார். இறுதியில் ஒரு பத்து ஆண்டுகள் ஒரு டியூடோரியல் கல்லூரியில் பேராசிரியர். இப்படியாக அவரது வாழ்வு ஆசிரியர் பதவியில் தொடங்கி, ஆசிரியர் பதவியிலேயே வந்து செக்கு மாடு வட்டம் சுற்றினாற் போல நின்று விட்டது. குடும்ப வாழ்க்கையில் அவருக்கு ஒரு குறையுமில்லை. பதவிகளிலிருந்து ஒய்வு பெற்ற பின்பும் வீடு, வாசல், கார், டெலிபோன், பேங்கில் ரொக்கமாக ஓர் ஐம்பதினாயிரம் சேமிப்பு எல்லாம் இருந்தன. இருந்தும், அவரை இடைவிடாமல் வாட்டியது ஓர் நைப்பாசை. அதுதான் மணிவிழா ஆசை. ஏறக் குறைய எழுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் தம்முடைய மணிவிழாவை ஒருவரும் கொண்ட முன் வரவில்லையே என்பதுதான் அவருடைய பெருங்கவலையாக இருந்தது. தாம் வாழ்ந்த துறைகளில் எந்தத் துறை மணிவிழாவுக்குப் பொருத்தமானது என்று சிந்தித்தார். அயல் நாட்டுத் தூதரக அலுவலைத் தவிர்த்து, பத்திரிகை எழுத்து ஆசிரியர் தொழில்களில் பணியாற்றிய ஆண்டுகளைத் தொகுத்து மொத்தமாக ஒரு சேவைத் தகுதியைக் கற்பித்துக் கொண்டு – அந்தச் சேவைக்குப் பாராட்டு இல்லையே என்று கவலைப்பட்டார். மூன்று லட்ச ரூபாய்க்குச் சொத்துள்ள ‘முத்தமிழ்ச்சரடு’ ஆசிரியர் மூக்கையனார் – தமக்கு மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் கடனிருப்பதாக அறிக்கை விட்டு-மணிவிழா நிதி திரட்டிக் கொண்டதையும், பாவலர் பன்னீர்ச் செல்வம்-பசிக் கொடுமை தாளாமல் பஞ்சப் பாட்டாகப் பாடி நாற்பதாண்டு நிறைவதற்குள்ளேயே மணிவிழாக் கொண்டாடி (கொண்டு+ஆடி) ‘வறுமைக் கவிவாணர்’ என்ற பட்டத்தையும் – முப்பதினாயிரம் ரூபாய்ப் பொற்கிழியையும் பெற்றதையும் கண்டு கண்டு மனம் குமுறியவர் வேங்கடநாதன். இந்த மனக்குமுறல் தான் அவரை ஓரளவு மணிவிழாப் பித்துக் கொள்ளச் செய்திருந்தது.

அந்த வேளையாகப் பார்த்து இவரைத் தேடி வந்து சேர்ந்தான் அன்பரசன். அன்பரசன் நகரத்தின் பொது வாழ்வில் ஒரு பிரமுகன். பாராட்டு விழாவும், மணி விழாவும், பொன் விழாவும் நடத்தி அறிஞர் பெருமக்களின் ஆவலை நிறைவேற்றுவதே அவன் வாழ்வின் குறிக்கோள். அன்பரசன் ‘மணிவிழா அண்ட் பொன்னாடை பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் மானேஜிங் டைரக்டர்’ என்று கூடச் சிலர் இதைக் கேலியாகக் கூறுவதுண்டு. அதைப் பற்றியெல்லாம் நம் அன்பரசன் கவலைப்பட்டதே கிடையாது. பொது வாழ்வில் நாலு பேர் நாலுவிதமாகச் சொல்வார்கள். அதையெல்லாம் பெரிதுபடுத்தக் கூடாது என்று அவனுக்குத் தெரியும். ஒரு பெரிய மனிதரை அன்பரசன் தேடி வருகிறான் என்றாலே, அவருக்கு மணி விழாவோ, பொன் விழாவோ கொண்டாட வேண்டிய வயது வந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

“என்னண்ணா! இந்த நன்றி கெட்ட தமிழகத்தைப் பார்த்தீர்களா? எழுபதாண்டுகள் உழைத்து உழைத்துத் தேய்ந்த உங்களுக்கு உருப்படியாய் ஒரு பாராட்டுக் கூடச் செய்யாமல் விட்டு விட்டார்களே!” என்று வேங்கடநாதனிடம் வாயைக் கிளறினான் அன்பரசன் – இன்னாரிடம் இப்படி இப்படித்தான் பேச்சைத் தொடங்க வேண்டும் என்று அன்பரசனுக்கு அத்துப்படி…

“விட்டுத் தள்ளுங்க. இங்கே இப்படி மறப்பது சகஜம்” என்று அலுத்துக் கொண்டார் வேங்கடநாதன்.

“நீங்க விட்டு விடலாம், அண்ணா! ஆனா என்னைப் போலொத்தவங்க அப்படி விட்டுவிட முடியாது!”

“முடியாட்டா. என்னதான் செய்யனுங்கறீங்க?”

“இன்னும் ஒரு வாரத்திலே ஒரு கமிட்டி செட்-அப் பண்றேன்… பாருங்க…”

“பண்ணி…?”

“அதை இப்பவே சொல்வானேன்? போகப் போக நீங்களே தெரிஞ்சுக்குவீங்க.”

“ஆகா! உங்க நல்லெண்ணத்தை எப்படிப் பாராட்டுறது? கடவுள்தான் உங்களுக்கு நல்லது செய்யத் துணை நிக்கணும்.” என்று தம்மையும் மறந்து உருக்கமாகப் பேசினார் வேங்கடநாதன். முதலில் பிகு செய்வது போல் பேசத் தொடங்கியவர் கடைசியில் அன்பரசனிடம் வழிக்கு வந்து விட்டார். அதிகமாகப் பிகு செய்து கொண்டால் எங்கே அன்பரசன் விட்டுவிட்டுப் போய் விடுவானோ என்ற பயம் அவருக்கே வந்து விட்டது.

“அதிலே பாருங்க, மிஸ்டர் அன்பரசன்! இன்னிக்கி இந்த ஊரிலே டெய்லி பேப்பர்லே இருக்கற அத்தனை ஸீனியர் ஜெர்னலிஸ்டுகளும் ‘ஜெர்னலிஸம்’னா என்னங்கறதையே எங்கிட்டத்தான் படிச்சுக்கிட்டாங்க.” “எனக்குத் தெரியாதுங்களா? உங்க செர்வீஸ் என்ன? அனுபவம் என்ன? ‘வெடெரன்’ ஆச்சுங்களே..?” என்று துதி பாடினான் அன்பரசன். அவ்வளவுதான்! வேங்கடநாதன் சரியாக வலையில் விழத் தொடங்கினார்.

“ஆமாம்! கமிட்டி கூட்டறத்துக்கு, மணிவிழா வசூல் அலைச்சலுக்கு எல்லாம் முதல்லே கையிலேருந்து நிறையச் செலவழியுமே…?”

“செலவழியத்தான் செலவழியும்! பொதுக்காரியத்திலே இதெல்லாம் பார்த்தா முடியுமா? இந்த மாதிரி சமயங்களிலே நான் அறிஞ்ச மட்டிலே ஒரே ஒருத்தர் தான் ரொம்ப ‘ஜெண்டில்மனா’ நடந்துக் கிட்டார்.”

“யார் அது”

“நம்ம பரசூர் பண்ணப்பர் மணிவிழாக் கமிட்டியிலே நான் ஈடுபட்டிருந்தப்ப பண்ணப்பரே கமிட்டி மீட்டிங்குக்கு முதல் நாள் என்னைக் கூப்பிட்டனுப்பினார். போனேன். “இந்தா பார், அன்பரசன்! உன் கஷ்டம் எனக்குத் தெரியும். பிஸினஸ் லைக்கா இருப்போம். ஆரம்பகால அலைச்சல்களுக்காக ஒரு பைசாக் கூட நீ உன் கையிலிருந்து செலவழிக்கப்படாது. இந்தா, இதிலே ரூபாய் முந்நூறு இருக்கு, ‘ஆரம்பச் செலவுக்காக ஓர் அன்பர் நன்கொடை’ன்னு புக்கிலே வரவு வச்சுக்க”ன்னு ஒரு கவர்லே புத்தம் புதுசா மூணு நூறு ரூபாய் நோட்டை வச்சி எங்கிட்டே நீட்டினார்.”

“அப்பிடியா…? அப்ப ஒண்ணு செய்யுங்க…? நம்ப மணிவிழா ஆரம்பச் செலவுக் கூட அப்பிடியே செய்துடலாம். நானே ஒரு முந்நூறு தந்துடறேன்…” –

“அடடே… என்னங்க இது? நான் சும்மா, ஒரு இதுக்குச் சொல்ல வந்தா…? நீங்களே பணம் தர்ரேங்கிறீங்களே…பரவாயில்லிங்க… வேணாம்…”

“நோ நோ! நீங்க அப்படிச் சொல்லக் கூடாது. உங்ககையிலேருந்துசெலவழிச்சுக் கட்டுபடியாகுமா?”

“சரி! ரொம்ப வற்புறுத்தறீங்க… அப்புறம் உங்க இஷ்டம்.”

வேங்கடநாதன் உள்ளே போய் முந்நூறு ரூபாய் கொண்டு வந்து அன்பரசனிடம் கொடுத்தார். அன்பரசன் அதிகக் கூச்சத்தோடும், வெட்கத்தோடும் அதை வாங்கிக் கொண்டான்.

“ஒரு விஷயம். நீங்க நல்லா ஞாபகம் வச்சிக்கணும், மிஸ்டர் அன்பரசன்!”

“என்ன சார்?

“மணிவிழா வசூலுக்கு முன் எனக்கு – நிறையக் கடன் இருக்குங்கிற மாதிரி சொல்லறத்துக்கு மறந்துடாதீங்க… இல்லாட்டி வசூல் டல்லாயிடும். இதெல்லாம் நானே சொல்லிக் கொடுக்கறது நல்லா இருக்காது. உங்களுக்குத் தெரியாதது இல்லே. எல்லாம் நீங்களே பார்த்துச் செய்யுங்க”

“எனக்குத் தெரியாதுங்களா எல்லாம்? எத்தினி மணி விழாவுக்கு அலைஞ்சிருப்பேன்? எவ்வளவு ஆளுங்களைப் பார்த்திருப்பேன்…?”

“ஆமாமா… உங்களுக்குத் தெரியாததை நான் என்ன சொல்லி விடப் போறேன்?” . “அப்ப இப்பிடி வரட்டுங்களா? அடிக்கடி வந்து நிலைமையை ஐயாவுக்குத் தெரிவிக்கிறேன்.”

அன்பரசன் விடை பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தான். ஒரு வாரம் கழித்துப் பத்திரிகைகளில் எல்லாம் சிறியதாக ஏழாம் பக்கத்தில் ஆறாம் பத்தியில் அடியோரத்தில் ‘வேங்கடநாதன் மணிவிழா’வுக்குச் செயற்குழு அமைக்கப்பட்டு அன்பரசன் அதன் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி பிரசுரிக்கப் பட்டிருந்தது. அந்தச் செய்தியின் கட்டிங்குகளை வேங்கடநாதனுக்கு அனுப்பி வைத்தான் அன்பரசன்.

“பல இடங்களுக்கு மணிவிழா விஷயமாக அலைந்து கொண்டிருப்பதனால் நேரில் வர இயலாததற்கு மன்னிக்கவும்” என்று கூடவே ஒரு கடிதத்தில் அவரிடம் மன்னிப்புக் கேட்டிருந்தான் அவன். அதன் பின் இரண்டு மாதம் வரை ஒரு தகவலும் இல்லை. மூன்றாவது மாதம் முதல் வாரம் அன்பரசனிடமிருந்து வேங்கடநாதனுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அன்பரசன் எழுதியிருந்தான் :

“தவறாக நினைக்காமல் உடன் உதவ வேண்டுகிறேன். மணிவிழா வசூல்களுக்காக அலைந்து கொண்டிருக்கிறோம். சுமார் ஐம்பதினாயிரமாவது தேற்றி விட வேண்டும் என்று எங்களுடைய குழு விரும்புகிறது. ஆரம்பச் செலவுகளால் வசூல் தடைப்படக் கூடாது என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள். எனவே, வசூல் செலவுகளுக்காக மேலும் ஓர் இருநூறு ரூபாய் அனுப்புமாறு வேண்டுகிறேன். பின்னால் வசூலில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். சிரமத்துக்கு மன்னிக்கவும்.

இப்படிக்கு,
மு. அன்பரசன்
செயலாளர் – மணிவிழா”

இருநூறு ரூபாயை அனுப்பா விட்டால் ஐம்பதினாயிரம் ரூபாயை இழக்க நேரிட்டு விடுமோ என்ற அச்சத்தினால், உடனே இருநூறு ரூபாய்க்கு ஒரு ‘டிராப்ட்’ எடுத்து அன்பரசனுக்கு அனுப்பி வைத்தார் வேங்கடநாதன்.

வருடம் ஒன்று கடந்து விட்டது. அதற்குள் நாட்டில் பல மாறுதல்கள் – தேர்தல், மந்திரி சபை மாற்றம், விலைவாசிகள், மொழிப் பிரச்னை, மழையின்மையால் பஞ்சம், மழையினால் வேதனை, எல்லாம் வந்திருந்தன.

வேங்கடநாதன் மணிவிழாவின் குழு சுகமாக நித்திரை புரிந்து கொண்டிருந்தது. ஒரு செய்தியுமில்லை. வசூல் என்ன ஆயிற்று? எங்கெங்கே ஆயிற்று? இன்னும் எங்கெங்கே ஆக வேண்டும்? எப்போது மணி விழா நடைபெறும்? ஒரு விவரமும் தெரியவில்லை. நடுவில் ஒருமுறை வெள்ளி விழா எழுத்தாளர் வேங்கடநாதன் அன்பரசனுக்கு ‘நாசூக்காக’ ஒரு கடிதம் எழுதினார். –

“தங்களிடம் சில விஷயங்கள் பேச வேண்டியிருப்பதால் தயவு செய்து நாளை மாலை என் இல்லத்திற்கு வருமாறு உங்களை அன்போடு வேண்டுகிறேன்.

தங்களன்புள்ள,
வேங்கடநாதன்.”

அதற்கும் பதில் இல்லை. ஆனால் ஒரு வாரம் கழித்து அன்பரசனே போனில் பேசினான்.

“தப்பா நினைச்சுக்காதீங்க ஐயா! மதுரை வசூல் அவ்வளவு திருப்தியா இல்லே. மதுரையிலே பத்தாயிரம் டார்ஜெட். ஆனா, ஏழாயிரம்தான் முடிஞ்சுது. நாளைக்குத் கோயம்புத் தூர் புறப்படறோம். கோயம்புத் தூர்லே ஒரு பதினையாயிரம் எதிர்பார்க்கிறோம். அநேகமா முடியும்னு தோணறது. இன்னிக்கு ஸாட்டர்டே அதனாலே மத்தியானம் 12 மணியோட பாங்க் சரியாயிடும். நாங்களோ நாளைக் காலையிலே கோயம்புத்தூர்லே இருக்கணும். இன்னிக்கி ராத்திரி ரயில்லே புறப்படணும் பாங்க்லே பணம் எடுக்கற நேரம் தள்ளிப் போச்சு. தப்பா நினைக்காமே, ஒரு நூறு ரூபா கொடுத்தனுப்பிச்சிங்கன்னா கோயம்புத்தூர் வசூலுக்குக் குறித்த நாளையிலே போய் வந்துடலாம்! எல்லாம் பின்னாலே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்”

“முன்னாலேயே ஒரு தடவை இருநூறு, இன்னொரு தடவை முந்நூறுன்னு ஐநூறு வரை கொடுத்திருக்கேனே…? இப்ப வேறே?”

“அதெல்லாம் நீட்டா அக்கவுண்ட் எழுதி வச்சிருக்கேன். இப்ப நீங்க கொடுத்தனுப்பற ஹண்ட்ரடோட உங்க வசமிருந்து மொத்தம் ஸிக்ஸ் ஹண்ட்ரட் ஆகிறது. அதை நாங்க பின்னாலே ‘அட்ஜஸ்ட்’ பண்ணிடறோம்.”

“எங்கே கொடுத்தனுப்பணும், இப்ப?”

“என் வீட்டுக்கு அனுப்புங்க போதும்.”

வேங்கடநாதன் ஓர் ஆள் வசம் அன்பரசனின் வீட்டுக்கு நூறு ரூபாய் கொடுத்தனுப்பினார்.

மேலும் ஆறு மாதம் கடந்து விட்டது. வேங்கடநாதன் மணிவிழாக் குழு என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை. வேங்கடநாதனும் கேட்பதற்குக் கூச்சப்பட்டுக் கொண்டும், வேதனையோடும் சும்மா இருந்தார்.

கடைசியில் ஒருநாள் பொறுமையிழந்து கோபமாக அன்பரசனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

பம்பாய் – கல்கத்தா – டில்லி ஆகிய வடஇந்திய நகரங்களில் உள்ள தமிழன்பர்களிடம் வசூல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மறுமொழி வந்தது.

மேலும் ஒரு வருடம் ஓடி விட்டது. மணிவிழா நடைபெற்றுப் பணம் கைக்கு வந்து சேருவதற்குள் தாம் இறந்து போய் விடக் கூடாதே என்று வேங்கடநாதனே கவலையும், பயமும் கொள்ளத் தொடங்கி விட்டார். அன்பரசன் தட்டுப்படவே இல்லை. மதுரை வசூல், கோவை வசூல், பம்பாய், டில்லி, கல்கத்தா வசூல் எல்லாம் என்ன ஆயிற்று என்றும் தெரியவில்லை. வெள்ளி விழா எழுத்தாளர் வேங்கடநாதனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றியபடியே அவரே அன்பரசனைத் தேடிப் புறப்பட்டார்.

அன்பரசனின் வீட்டில் முன்புற அறையில் அமைதியாக ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. பத்துப் பன்னிரண்டு பேர் உட்கார்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். வாசலில் வேங்கடநாதனின் தலை தெரிந்ததும், உட்கார்ந்திருந் தவர்களில் ஒருவர் ஓடோடி வந்து அவரை எதிர் கொண்டார்.

“என்ன கூட்டம் உள்ளே?” என்று உடனே கோபத்தை அடக்கிக் கொண்டு அமைதியான குரலில் விசாரித்தார் வேங்கடநாதன்.

“அடடே! உங்களுக்குத் தெரியாதா, சார்? அடுத்த ஆண்டுடன் நம்முடைய தொண்டர் திலகம் அன்பரசனுக்கு அறுபது ஆண்டுகள் நிறைகின்றன. அவருடைய மணிவிழாவின் போது அறுபதினாயிரம் ரூபாய் பணமுடிப்பு அளிப்பதாக முடிவு செய்து பேசிக் கொண்டிருக்கிறோம். நீங்களும் வாங்க…”

“அப்படியா? அன்பரசனுக்கே மணி விழாவா?” என்று பதில் சொல்ல முடியாமல் தலை சுற்றி மயக்கமாக வந்தது வெள்ளிவிழா எழுத்தாளருக்கு. மூர்ச்சை போட்டு விழுந்து விடாமல் வீடு திரும்பினார் வேங்கடநாதன். வந்தவுடன் முதல் வேலையாகத் தமது கணக்குப் புத்தகத்தை எடுத்து அதில் கீழ்வருமாறு எழுதினார் :

அன்பரசன் மணிவிழாவுக்காக நம் வகையில் நன்கொடை ரூ. 600 (செலவுக் கணக்கு).

மறுபடி அன்பரசன் மணிவிழாக் கணக்கில் அட்ஜஸ்ட் செய்வதாக முன் பணம் கேட்டு எப்போதாவது தனக்கு போன் செய்து விடக் கூடாதே என்ற பயம் நீண்ட நாள் வரை வேங்கடநாதனை நடுங்கச் செய்து கொண்டிருந்தது.

– சுதேசமித்ரன், தீபாவளி மலர், 1967, நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *