‘நான் எதற்காக எழுதுகின்றேன்?” மாபெரும் படைப்பாளி, ஆழ்ந்து படிக்கும் அறிவாளி, தர்க்கிப்பதில் சூரன் போன்ற அடைமொழிகள் பலவற்றால் விபரிக்கப் படும் ஓராத்மாவான எழுத்தாளன் உதயச்சந்திரன் ஒருமுறையல்ல பலமுறை தன்னைத் தானே கேட்டுக் கொள்ளும் கேள்விகளில் பிரதானமான கேள்வியான இவ்வினாவினை மீண்டுமொருமுறை தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். நான் எதற்காக எழுதுகின்றேன்?” “நான் எனக்காக எழுதுகின்றேனா? படிக்கும் வாசகர்களுக்காக எழுதுகின்றேனா? பெயர், புகழுக்காக எழுதுகின்றேனா?எதற்காக? என் எழுத்து இந்த மண்ணில் புரட்சிகரமான மாறுதல்களைக் கொண்டு வருமென்றதொரு கனவில் எழுதுகின்றேனா?எதற்காக?”
இருப்பின் அர்த்தம் தேடி ஒரு காலத்தில் அலைந்தவனை, இருப்பின் அர்த்தமற்ற தன்மையினை நன்கு விளங்கிவனாக ஒரு காலத்தில் தன்னைக் கருதியவனைக் காலம் எந்த இடத்துக்குக் கொண்டுவந்து நிறுத்தி விட்டுள்ளது? பிரபஞ்சத்தின் படைப்பில் அர்த்தமில்லையென்றால் அர்த்தமற்ற படைப்புகளிலொன்றான அவன் படைப்பதில் மட்டுமென்ன அர்த்தம் இருந்து விடப் போகின்றது? இருப்பின் அர்த்தம் தேடி அலைந்தவன் தன் இருப்பிற்கொரு அர்த்தம் பதிக்க வேண்டுமென்றொரு அவாவில் சொற்களைப் படைக்க ஆரம்பித்து விட்ட விந்தையினை எண்ணிச் சிரிப்பதா?
“எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்தக் கனவு..” எதிரில் அவனது சகதர்மிணி பத்மாவதி. கட்டறுத்து ஓட விழைந்தவனைக் கால்கட்டுப் போட்டு இழுத்து நிறுத்திய புண்ணியவதி. புடைத்து நிற்கும் வனப்புகளின் சொந்தக்காரி. ஆரம்பத்தில் நாடோடியாக அலைந்தவனைத் தன் பிடிக்குள் அகப்படுத்துவதில் வெற்றி கொண்ட ஜெயமோகினி. படைப்பாளிக்கு அப்பொழுது தான் பிரபல சஞ்சிகையொன்றின் ஆசிரியர் தீபாவளி மலருக்காக அவனது ஆக்கமொன்றினைக் கேட்டிருந்தது நினைவுக்கு வந்தது. புலம் பெயர்ந்த தமிழர்களால் வெளியிடப்படும் சஞ்சிகையொன்றின் ஆசிரியர் அவரை அழைத்துக் கெளரவிக்க முடிவு செய்தது பற்றி அறிவித்திருந்தது நினைவுக்கு வந்தது. அத்துடன் அது சம்பந்தமாக வெளியிடப்படவிருக்கும் மலரொன்றிற்கு ஆக்கம் கேட்டிருந்ததும் ஞாபகத்துக்கு வந்தது. மறைந்திருந்த ஞாபகங்களெல்லாம் ஒன்றின் பின் ஒன்றாக வெளிவர ஆரம்பிக்கவே ஆடிப்போய் விட்டான் எழுத்தாளன்.
‘என்ன நான் கேட்பது காதில் விழவில்லையா? விழாமல் அப்படியென்ன யோசனை?” மீண்டும் ஒருவிதக் கேலியுடன் வினா தொடுத்த பத்மாவதியை வாரியிழுத்து மார்புற அணைத்தான் உதயச்சந்திரன். அந்தக் கூடலின் தண்மையில் சிறிது நேரம் சிந்தையிழந்தான். “என் சிந்தையைக் கவர்ந்த சிறுக்கி உன்னை விட்டால் இங்கு வேறு யாரடி?” என்றான். அவனது அப்பதில் கேட்டு அவள் வதனம் நாணிச் சிவந்தது. “எழுத்தாளர்களுக்கெல்லாம் தலைவரல்லவா! பேசவா கற்றுக் கொடுக்க வேண்டும்?” என்றவளை மேலும் வாரியிழுத்தணைத்தான் படைப்பாளி. சிறிது நேரக் கூடலின் பின் பிற வேலைகள் ஞாபகம் வரவே பத்மாவதி “ஐயய்யோ! உங்களுடனிருந்தால் எல்லாமே மறந்து போய் விடுகிறது” என்று ஞாபகம் வந்தவளாக அகன்ற பின் மீண்டும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப் போனான் உதயசந்திரன்.
“எதை எழுதலாம்?” என்ற வினா இப்பொழுது “நான் ஏன் எழுதுகின்றேன்?” என்ற வினாவினை மாற்றீடு செய்தது. பல்வேறு கோணங்களில் சிந்தித்துப் பார்த்தான். ஒரு பிரபலமான மகோன்னதமான படைப்பாளியென்றிருப்பதில் பல அனுகூலங்களிருந்தன. எழுதும் எதையும் பிரசுரிப்பதற்கு, அதில் அர்த்தம் கண்டு விவாதிப்பதற்கொரு கூட்டமொன்று எப்பொழுதுமே இருக்கும்? உதயச்சந்திரன் இதழ்களில் அந்த நிலையிலும் சிறிதானதொரு புன்னகை கோடு கிழித்தது. ஆழ்ந்து படிப்பதும் பல சமயங்களில் கை கொடுத்து உதவிக்கு வர ஆர்வத்துடனிருக்கும். ஒரு முறை நிகழ்ந்த சம்பவமொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவனது படைப்பொன்றினை சபையில் சிலர் வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார்கள். எல்லோரும் அவனது பதிலையே ஆர்வத்துடன் எதிர்பார்த்து நின்றார்கள். நவீனத்துவம்/பின்நவீனத்தும், அமைப்பியல்/பின்னமைப்பியல் என்று ஆழ்ந்து கற்றதெல்லாம் அவனுக்கு அன்று தோள் கொடுக்க வந்து விட்டன. “ஒரு படைப்புப் படைக்கப் பட்டதுமே ஆசிரியன் இறந்து விடுகின்றான். பிரதியை வாசகர்கள் தத்தமது அறிவு, சூழல், இலக்கியங்களுடனான பரிச்சயம் போன்ற அடிப்படையில் புரிந்து கொள்கின்றார்கள். அவற்றில் தலையிட இறந்த ஆசிரியனால் முடியாது. ஏனெனில் அவன் தான் பிரதியைத் தந்து விட்டு இறந்து விட்டானே” அவனது பதிலில், அதிலிருந்த தர்க்கச் சிறப்பில் சபை சொக்கி விட்டது. அந்தச் சொக்கல் தான் அவனைப் பொறுத்த வரையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கும் அருமருந்து. அதனை அவன் நன்கு புரிந்தேயிருந்தான். ஆனால் அதே சமயம் அவன் எப்பொழுதுமே இவ்விதமே இருந்து விடுவதில்லை. தன் படைப்புகளைப் படைத்த பின்னும் அவை பற்றிய வாசகப் புரிதல்களுக்காக அவன் பலமாக வாதிப்பதுண்டு. அச்சமயங்களில் ஒரு பிரதியினைப் படிப்பதிலுள்ள வாசக சுதந்திரம் பற்றி அதிகமாக அவன் அலட்டிக் கொள்வதில்லை. ஒன்றினை உருவாக்கி விட்டுப் பின் அவற்றிற்கு அர்ததங்கள் காண்பதில் அவன் மகா வல்லமை பொருந்தியவன்.
“எதை எழுதலாம்” எழுத்தாளனின் சிந்தை அலை பாயத் தொடங்கியது. “அப்பா” பிஞ்சுக் குரலொன்று அவன் சிந்தனையைக் கலைத்தது. எதிரில் அவன் செல்லக் குஞ்சு குந்தவி நகத்தைக் கடித்தபடி நின்றிருந்தாள். குழந்தையைத் தூக்கி அணைத்தான் எழுத்தாளன்.” எத்தனை தரம் சொல்வதம்மா நகத்தைக் கடிக்கக் கூடாதென்று” என்று செல்லமாகக் கடிந்து கொண்டான். “நகக்கண்ணிலுள்ள கண்ணுக்குத் தென்படாத அழுக்குகள், கிருமிகள் எல்லாம் உள்ளே போய் வருத்தம் தருமம்மா. இனிமேல் குஞ்சு நகம் கடிக்கக் கூடாதாம்” என்று குழந்தையைக் கொஞ்சினான். சிறிது நேரத்தில் அவனுடன் கொஞ்சிக் கொண்டிருந்த குழந்தை அப்படியே தோளின் இதமான சூட்டில் தூங்கி விட்டது. ‘எதை எழுதலாம்’ என்று சிந்தையை உடைத்துக் கொண்டிருந்த எழுத்தாளனுக்கு நல்லதொரு தீர்வு தற்காலிகத் தீர்வு கிடைத்து விட்டது. குழந்தையைப் படுக்க வைத்து விட்டு எழுத்தாளன் உதயச் சந்திரன் தீபாவளி மலருக்கான அடுத்த சிறுகதையினை ‘நகம்’ என்னும் தலைப்பில் எழுத ஆரம்பித்தான். “ஏன் எழுதுகின்றேன்” என்று தேடிக் கொண்டிருந்தவனை இருப்பு எதையும் எழுதி மகோன்னதமான படைப்பாளி
யாக உருவாக்கிய விந்தையை என்னவென்பது?
நன்றி: பதிவுகள், திண்ணை