கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 25, 2013
பார்வையிட்டோர்: 7,533 
 
 

என் தந்தையின் வயதில் ஒரு மணமான பணக்கார ஆண் வைப்பாட்டி வைத்துக் கொள்வது சமூகத்தின் பார்வையில் ஒரு குற்றம். தவிர, எங்களின் மூதாதைரின் வீடு ஏதோ ஒரு உள்ளடங்கிய பழமைமிகு ஊரில் இருந்தது. அப்பாவோ தூரத்து பெருநகரில் வியாபாரம் செய்தார். என் அம்மா, என் சகோதரி யாவரும் அந்தக் கிராமத்தில் வாழ்ந்தோம். அப்பா தனியாக தன் அனைத்து வியாபார விஷயங்களையும் கவனித்துக் கொண்டார். வீட்டிலும் சமூகத்திலும் ஒரு பெண் அவருக்கு வேண்டியிருந்தது என்பது ஒன்றும் பெரிய குற்றமாகத் தெரியவில்லை. பல வருடங்களாக செல்வி.ஸியாவுடன் அப்பா வாழ்ந்து வந்தார் என்று என் அம்மா அறிந்திருந்தும் ஒன்றுமே கேட்டதில்லை. ஆனால், அப்பா அவ்வுறவைக் காதல் என்று பீற்றிக் கொண்டிருந்தால் ஒருவேளை அம்மா சகித்திருப்பாளோ என்னவோ.

எனக்கு நினைவிருக்கிறது, ஒரு குளிர்கால விடுமுறையில் கிராமத்தில் பனி பொழிந்தது. ஆலயங்களில் தெருக் கூத்துகளும் விழாக்களும் நடந்தேறின. புத்தாண்டை நாங்கள் அம்மாவுடன் கொண்டாடினோம். எங்களின் கோடை விடுமுறையில் என் சகோதரியும் நானும் நகரத்துக்குப் போனோம். முதலில் படகிலும், பிறகு புகை வண்டியிலும். அப்பா உயர்ரக விடுதியில் எங்களைத் தங்க வைத்தார். விளையாடவும் நிறைய இடமிருந்தது. விடுதியில் ஒவ்வொருவரும் மேலதிகாரி முதல் கீழ்நிலை ஊழியர் வரை எங்களைக் கவனித்துக் கொண்டார்கள். எதைக் கேட்டாலும் எப்போது கேட்டாலும் கிடைத்தது. எந்தப் பிரச்சனையும் வராது என்று அப்பாவுக்குத் தெரிந்திருந்தது. எங்களுக்குச் செலவிட அப்பாவிடம் நேரம் தான் இல்லை. செல்வி.ஸியா தான் வந்து எங்களை காரில் கூட்டிக் கொண்டு போய் தன் மாளிகையில் இரவு உணவு அளித்தார்.

எங்களிடம் கேட்க அவருக்கு நிறைய கேள்விகள் இருந்தன. எங்களின் உரையாடல் நல்ல படியாகப் போகும் போது, அவர் தன்னை ‘சின்னம்மா’ என்றழைக்கச் சொல்வார் எங்களிடம். அக்காவும் நானும் புன்னகைத்தபடி அவரைப் பார்த்திருந்தோம். அம்மா அவரை அப்படிக்
கூப்பிடக் கூடாது என்று எங்களிடம் சொன்னதில்லை. எங்களுக்கு தான் கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது. அவரின் மேலை நாகரீகமும், நளின மெய்ப்பாடும், சிநேக பாவமும், விருந்தோம்பலும் அவர் தொடர்பான ஒவ்வொன்றும் மிகவும் நாகரீகமாகவும் அழகாகவும் இருந்தது. எங்களுக்கு ஒரே ஒரு அம்மா தான். இரண்டாவது அம்மா கிடையாது. நானும் அக்காவும் அவருக்குப் பின்னால் அவரை ‘சமூகப் பூ’ என்றழைத்தோம். அப்படிச் சொல்வது நாகரீகமில்லை என்றுணர்ந்து உடனே நாங்கள் முகத்தைச் சுளிப்போம்.

செல்வி.ஸியா விஞ்ஞானக் கல்விக் கூடத்தின் பட்டதாரி என்று அக்கா சொன்னாள். முதல்நிலைப் பட்டதாரி என்று புரிந்து கொண்டேன். முதல்நிலையில் இருந்த மூன்று கல்விக் கூடங்களில் ஒன்று. ஏதோ ஒரு வட்டார அதிகாரி அங்கு படித்ததாக நான் கேட்டிருக்கிறேன்.

அந்தக் கல்விக் கூடம் ஜேஜியாங் மற்றும் ஜியங்ஸ¤ மாநிலங்களால் நடத்தப் படுகிறது. செல்வி.ஸியா நீச்சலிலும் டென்னிஸிலும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர். செல்வி.ஸியாவின் மீது எனக்கிருந்த மதிப்பு பன்படங்கு அதிகரித்தது. அவரின் இன்னொரு ‘பெயர்’ அந்த மதிப்பைக் குறைத்தது. வீதியின் மறுபுறம் இருக்கிறதே ‘வெள்ளை ரோஜா அழகு சலூன்’ எனும் ஒரு சிகையலங்காரக் கடை, அங்கே தன் செல்வி.ஸியா முதலாளியாக இருக்கிறார் என்று அக்கா சொன்னார். பெண் முதலாளிகளை நான் வெறுத்தேன். அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவரின் எந்த அசைவு பெண் முதலாளியுடையது எது நீச்சல் வீராங்கனையுடயது என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு முறையும் சரியான பதில் கிடைக்கவில்லை. எப்படியிருந்தால் தான் என்ன என்று அலுப்புடன் அக்கா சொன்னாள்.

வறுத்த வாத்து போன்ற சுவைமிகு உணவு வகைகளைச் சாப்பிட்டோம். அவர் வாங்கிக் கொடுத்த பாவாடைகளை அக்காவும் காற் சட்டைகளையும் காலணிகளையும் நானும் அணிந்தோம். அப்பாவுடைய காசு தானே எப்படியும். இருந்தாலும், செல்வி.ஸியா தான் கடைக்குக் கூட்டிப் போய் எங்களையே தேர்ந்தெடுக்கச் சொல்வார். தேர்ந்தெடுத்ததைத் தைக்கவும் கொடுப்பார். நாங்களே தனியாகப் போயிருந்தால், பலமுறை போட்டுப் பார்க்க தையற் கடையில் விட்டிருக்க மாட்டார்கள். தைத்தபிறகு அவர்களே விடுதிக்கு அனுப்பி வைத்தார்கள்.

நாங்கள் கடைக்குள் நுழைந்ததுமே, “இந்த மாதிரி தோல் காலணி உனக்குப் பிடிக்குமா?”, எனக் கேட்டனர். மிகவும் ஆச்சரியமாக இருக்கும். மகிழ்ச்சியுடன் நான், “எப்படித் தெரிஞ்சுகிட்டீங்க?”, என்று கேட்டேன். “இந்தக் காலணியில் நீ இராணுவ அதிகாரியைப் போல இருக்கிறாய்”, என்றார்கள். அதைக் கேட்டு நான் மகிழ்ந்தேன். அது அவர்களுக்கும் தெரியும். அந்தக் கடைக்காரருக்கு அக்காவின் எண்ணங்களும் தெரியும்.

ஆடலழகியினுடையதைப் போல மிக அழகான ஆடைகள் அக்காவுடையது. துணிகள் விதவிதமாகக் கிடைத்தன. நான் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று சில வேளைகளில் ஆதங்கப் பட்டேன் நான். அக்காவின் காலணிகள் ஆடல் அழகிகளுடையதைப் போல மென்மையாக இருக்கும். என்னுடையவை நடக்கும் போது டக்டக்கென்று ஒலிக்கும். வீதியில் நடக்கும் போது நிச்சயம் என்னுடையது தான் அதிக பேரின் கவனத்தை ஈர்த்தது.

எங்களின் விடுமுறை முடிவுக்கு வந்தது. அப்பா நிறைய விளையாட்டுப் பொருட்கள், மிட்டாய்கள், பென்ஸில்கள், ஏடுகள் எல்லாம் எங்களுக்கு வாங்கிக் கொடுத்தார். அம்மாவுக்கும் ஒரு பரிசுப் பொட்டலம். “உங்களுடன் நேரம் செலவிட என்னால் முடியாது போனது. மன்னித்துக் கொள்வீர்களா?”, என்றார் அப்பா. “மகிழ்ச்சியாக இருந்தீர்களா?”

“பரவாயில்லை”, என்றேன் நான்.

“அதென்ன ‘பரவாயில்லை’. அப்டின்னா?”

“ஏதோ சுமார்னு அர்த்தம்.”

“நல்லா இருந்ததுன்னு சொல்ல வேணாம்னு நினைக்கிறாய். இல்லையா?”

“இல்ல. மகிழ்ச்சியாக இருந்தது விடுமுறை”, என்றேன் நான்.

“ரொம்ப நல்லா இருந்தது”, என்று சொல்லி அக்கா எனக்கு உதவினாள்.

“அருமையான நாட்கள்”

அப்பா உட்கார்ந்து சுருட்டைப் பற்ற வைத்தார். “இதே கேள்வியை உங்களின் அம்மா கேட்டால் ‘மிக அருமையான விடுமுறை’னு சொல்லணும். என்ன சொல்றேன்னு புரியுதா?”

“புரியுதுப்பா”, என்று அக்கா பதிலளித்தாள். நானும் சம்மதத்துடன் தலையை ஆட்டினேன்.

அப்பா என்னைத் தன் நெஞ்சில் சேர்த்து அணைத்துக் கொண்டார். என்னை முத்தமிட்டு, “உனக்கு என் மீது கோபம் இருக்கில்லையா? அதான் எனக்கு உன்னப் பிடிச்சிருக்கு”, என்றார் கிசுகிசுப்பாக.

நாங்கள் கிராமத்துக்குத் திரும்பினோம். முதலில் புகை வண்டியிலும், பிறகு படகிலும் போனோம். அம்மா என்னென்ன கேட்பாள், நாம் என்ன பதில் சொல்ல வேண்டும் என்றெல்லாம் குறித்து வழியெல்லாம் ஏதேதோ பேசினோம். குதிரை பந்தயம், நாய் பந்தயம், சாப்ளின், ஹேய் ஜிங் மாமா, செல்வி.ஸியாவின் பங்களா, கண்ணாடி விளக்குகள், வெள்ளி மேசைகள், செல்வி.ஸியாவின் பாடல் மற்றும் பியானோ வாசிப்பு, அவரின் வைர நெக்லெஸ் என்றுப் பல்வேறு விஷயங்களையும் குறித்தும் பேசினோம். பெர்ஷியன் கம்பளம், இங்கிலாந்தின் சுவர் கடிகாரங்கள், பளிங்கு சிலை எல்லாவற்றைப் பற்றியும் பேச வேண்டும். அழகலங்காரக் கடை பற்றி? அம்மா வந்தாலும் விடுதியில் தங்குவாள். சிகையலங்காரக் கடைக்குப் போவாள்; “யார் முதலாளி?”, என்று மட்டும் கேட்க முடியாது. நான் அக்காவுடன் ஒத்துப் போனேன். விழுமியங்கள் மற்றும் அரசியல் குறித்து அறியாத இரண்டு குழந்தைகள் நாங்கள். ஆனால், நாங்கள் அம்மாவுக்கு விசுவாசமாக இருக்க நினைத்தோம். அதே நேரத்தில் அப்பாக்கும் துரோகம் இழைக்கக் கூடாது.

அந்த மாலையில் நாங்கள் வீட்டிற்குத் திரும்பிடும் போது அம்மா பரிசுப் பொட்டலத்தைத் திறந்தாள். உள்ளே இருந்தவற்றைப் பார்த்து அக்காவும் நானும் ஆச்சரியப் பட்டோம். அம்மாவும் தனக்கான ஆடைகளைப் போட்டுப் பார்க்க ஆர்வம் காட்டினாள். ஒரு சிறு யோசனை மனதில் மின்னியது: செல்வி.ஸியா தான் இதையெல்லாம் தேர்ந்தெடுத்து வாங்கியிருந்தாள். பார் எத்தனை அழகு சாதனங்கள்! ஒரு அழகியல் நிபுணருக்குத் தேவையான அளவு! “அம்மா, உன் முகத்தில் புள்ளிகள் இருக்கிறதா?”

அம்மா தன் கையைக் காட்டிச் சொன்னாள், “இதைப் பார். புறங்கையில் கரும் புள்ளிகள். சமீபம் வரை நான் கவனிக்கவில்லை.”

குழந்தைகளாக ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறை வரும் என்று நம்பினோம். ஒவ்வொரு வருடமும் அப்பா எங்களைக் கூட்டிக் கொள்வார் என்றும் ஒவ்வொரு வருடமும் அம்மா எங்களின் வருகைக்குக் காத்திருப்பாள் என்றும் நினைத்தோம். எல்லாமே குடும்பத்தின் சிவப்பு தேக்கு மேசையைப் போல என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் நினைத்திருந்தோம். மின்னலும் இடியும் தெளிந்த வானத்தைக் கிழித்திடும் என்றே நினைக்கவில்லை நாங்கள்.

ஆனால், அப்படித் தான் நடந்தது. திடீரென்று, பஸி•பிக் போருக்குப் பிறகு ஒரு வருடம் ஆனதும் அப்பா இறந்து போனார். குடும்பம் நொடிந்தது. பிறகு, போரின் போதெல்லாம் ஆங்காங்கே நாங்கள் μடிடும் போது, “சீக்கிரமே அவர் இறந்ததும் நல்லதுக்குத் தான். இப்படி அகதியாகச் சீரழிந்திட வேண்டாமே”, என்று அம்மா அடிக்கடி முணுமுணுத்தாள்.

அப்பாவின் மரணத்துக்குப் பிறகு, செல்வி.ஸியா எங்கள் கிராமத்துக்கு வந்திருந்தார். அவருக்கும் பூர்வீகம் அது தான். பெற்ரோர் வெகு காலத்துக்கு முன்னரே இறந்திருந்தார்கள். அவருக்கு மூன்று சகோதரர்கள் இருந்தனர். மூவருக்கும் சொத்துமில்லை வேலையுமில்லை. ஆனால், ஆடம்பரமாக உடுத்தி வந்தனர். கிராம மக்களுக்கு புதிராகவே இருந்தது. எப்படியும் அவர்களின் ஆடம்பரத்துக்குப் பின்னால் ஏதோ ஒரு குற்றச் செயல் இருக்க வேண்டும் எனக் கருதினர். செல்வி.ஸியாவின் முதல் பெயர் மிங்ஜூ. அதன் பொருள் பிரகாச முத்து. அவருக்கான பட்டப் பெயர் ‘ராத்திரி முத்து’. அவரின் வருகை கிராமத்தில் செய்தியானது. ராத்திரி முத்து உடைந்து போனது என்றும் இனிமேல் பிரகாசிக்காது என்றும் வதந்திகள் பரவின.

அப்பாவின் மரணம் ஏற்கனவே சோகத்தைக் கொணர்ந்திருந்தது. ஆனால், செல்வி. ஸியா வெளிநாட்டு நிறுவனத்தின் முதலாளியை விரோதித்துக் கொண்டு மேலும் துரதிருஷ்டத்தைத் தேடிக் கொண்டார். அதையெல்லாம் சகிக்க முடியாது கிராமத்துக்கு வர முடிவெடுத்திருந்தார். அனைத்து பெரிய பொருள்களையும் பியானோவையும் கொண்டு வந்திருந்ததைப் பார்த்ததுமே
நிரந்தரமாகவோ நீண்ட காலத்திற்கோ கிராமத்தில் வாழப் போகிறார் என்று தோன்றியது. மென்மையான அழகியாக இருந்த அவர் நகர வாழ்க்கையிலிருந்து கிராமத்துக்குத் திரும்பியதும் பெரும் வித்தியாசத்தை உணர்ந்தார். கிராமத்துக்கு கெட்ட பெயரைக் கொண்டு வந்ததாகவும் அதன் நற்பெயரைக் கெடுத்து விட்டதாகவும் கிராமத்தின் வயோதிகர்களால் ஏசப்பட்டார். ஸியா மிங்ஜூ எல்லோரையும் சந்திப்பதைத் தவிர்த்தார். புர்கா அணிந்த பெண்ணைப் போலத் தன்னை மறைத்துக் கொண்டு வாழ்ந்தார். எங்களுக்கு இதெல்லாம் தெரிய வரும் போது அம்மா மெல்லிய குரலில், “நல்லா வேணும்”, என்றாள்.

ஸியா மிங்ஜூவுக்கு புத்தி வந்து விட்டதாக அம்மா நம்பிடவில்லை; ஸியா மிங்ஜூவின் துரதிருஷ்டம் மற்றும் அவமானம் எல்லாமே அவள் தானே தேடிக் கொண்டவை என்று அம்மா நம்பினாள்.

பல நேரங்களில் ஸியா மிங்ஜூ யாரையாவது அனுப்பினார் எங்கள் வீட்டுக்கு. தன்னை எங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொள்ளும் படி அம்மாவிடம் கெஞ்சிட. எங்கள் அப்பாவின் மூலம் தனக்கு ஒரு மகள் இருப்பதாகவும் அந்தக் குழந்தையாவது எங்களின் குச்ம்பப் பெயரைத் தாங்கிட வேண்டும் என்றும் சொன்னார். இரண்டு வேண்டுதலையும் மறுத்த அம்மா கொஞ்சம் பொருளாதார உதவியை மட்டும் செய்தாள். ஒரு முறை ஸியா மிங்ஜூவின் தூதுவர் எதையோ சொல்லி அம்மாவின் கோபத்திற்கு ஆளானார். அம்மாவின் வார்த்தைகள் எல்லாமே கடுமையானவை; “எங்கள் வீட்டைக் கடந்து போக அவளுக்கு தைரியம் உண்டா பார்ப்போம். முதலில் முன்னங்கால் முன்னால் வந்தால் முன்னங்கால் உடையும். பின்னங்கால் வந்தால், பின்னங்கால் உடையும்.” எனக்கு நடுக்கமாக இருந்தது. இரக்கம் அற்றதாக மட்டுமில்லாது, ஸியா மிங்ஜூவை விலங்கினமாகவும் அல்லவோ ஆக்கியது.

தற்மசங்கடத்தில் விழுந்த தூதுவர் போனதுமே, அம்மா எனக்கும் அக்காவுக்கும் விளக்கினாள். “உங்கள் இருவருக்கும் அவள் மேல் இரக்கம் இருக்கிறது என்று தெரிகிறது. என் சொற்கள் ஆபாசமாகத் தெரிகிறதா? இப்போது நீங்கள் இருவரும் சிறியவர்கள். அவளும் அவளின் மகளும் இங்கு வந்தால், பின் விளைவுகள் என்னவென்று உங்களுக்குப் புரியாது. அவளுக்கு இளமை போய் விட்டது. ஆகவே, நம்முடன் ஒழுங்காக இருக்கலாம். அந்தப் பெண் குழந்தையும் உங்களுக்குத் தங்கையாகிடுவாள். சரி தான். ஆனால், அந்த மூன்று சகோதர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. மூன்று குண்டர்கள் உங்களின் மாமாக்களாக இங்கு வந்துபோக இருப்பதை நினைத்துப் பாருங்கள். நான் உயிரோடு இருக்கும் வரை அதெல்லாம் நடக்காது. நான் இறந்த பிறகு உங்கள் இருவரின் கதி? இன்று வந்த தூதுவர்
அந்த குண்டர்கள் அனுப்பியவர் என்றே நினைக்கிறேன். அதனால் தான் அவ்வார்த்தைகளைச் சொல்ல வேண்டியிருந்தது.”

எனக்கு வேண்டியிருந்த பதுகாப்பு, என் சுயநலம், அந்த மூன்று குண்டர்களின் அவப்பெயர் எல்லாமாகச் சேர்ந்து அம்மாவின் விளக்கத்துடன் என்னில் ஒரு கற்பனையை விரித்தது. மூன்று கோரப் பசியுடனான கழுகுகள் இரண்டு கோழிக் குஞ்சுகளின் மீது பாயுமுன்னர் தாய்க் கோழி தன் இறகுகளை விரித்துப் போராடியது. அம்மாவின் படித்த குடும்பப் பின்னணியை நினைவு படுத்திக் கொண்டே அம்மாவை மன்னித்தேன்.

போருக்குப் பின்னர் வீடற்ற அகதிகளானோம். கிராமத்தை எண்ணி ஏங்கினோம். கிராமத்துக்குப் பதுங்கிப் போய் கொஞ்ச நாள் வாழ்ந்து பார்ப்போம் என்ன தான் நடக்கிறதென்று என்றாள் அம்மா. வீடற்ற நிலையை விட வீட்டில் வாழ்வதற்கு எதையேனும் விலையாகக் கொடுக்கவும் அவள் தயாரானாள்.

கிராமம் ஜப்பானியர் வசம் வீழ்ந்து அமைதிப் படையின் கட்டுப்பாட்டில் இருந்தது. மெதுவாக இரவில் வந்து மாடி அறையில் பதுங்கினோம். ரகசியமாக வந்து பார்த்துப் பேசிப் போன ஒரு சில சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் தவிர யாருக்கும் தெரியாது. இரவு, சாத்திய கதவின்
பின்னால் மட்டுமே நானும் அக்காவும் சிறு μசை எழுப்பினோம். நகரத்தை விட வீட்டு வளாகம் இரவில் சுற்றித் திரிந்திட சுவாரஸியமானது என்று உணர்ந்தோம். தோட்டத்துக்குப் போனோம் சில வேளைகளில். நிலவொளியில் குளக்கரை மிகவும் அழகாக இருந்தது. அம்மாவையும் கூட்டிக் கொண்டு வர நினைத்தோம்.

வியர்த்த படி மாடிக்கு வந்து அம்மாவிடம் தோட்டத்தைப் பற்றி விளக்கிக் கூறி வியந்தோம். அம்மா அகலமாகச் சிரித்துக் கொண்டே, “ஏதோ மன்ன்னின் அரண்மனைத் தோட்டத்துக்குள் புகுந்து வந்தாற் போலத் தான் வியக்கிறீர்களே இருவரும். நாளை இரவு, நானும் வருகிறேன். கொஞ்சம் திராட்சை ரசமும் பலகாரமும் கொண்டு போனால், நிலாவை ரசித்த படி உண்ணலாம்”, என்றாள்.

நாங்கள் குளித்து முடித்து வந்து பார்த்தால் மேசையில் அம்மா டாங் கவிதைகளின் முழுத் தொகுப்பினை வைத்திருந்தாள். அம்மா நூலை எடுத்து தூ •பூ1வின் கவிதைகளில் ச்சியான்2 மற்றும் வூயான்3 வகைகளை வாசிக்கக் கற்றுக் கொடுத்தாள். புருவத்தை சுருக்கி மிகவும் பதிக்கப் பட்டவர்கள் போல பாவனை செய்தோம். அம்மாவுக்கு அப்போது தான் பிடிக்கும். அம்மா எங்களைப் பார்த்து விட்டு நூலை மூடினாள். ஒரு டப்பா நிறைய உள்ளூர் பலகாரங்களைக் கொடுத்தாள். டாங் கவிதைகளை விட அவற்றை எங்களால் மேலும் சிறப்பாக ரசிக்க முடிந்தது.

எங்களின் வீட்டு நிர்வாகி திரு. லூ மிகவும் அக்கறையுடன் சீக்கிரமே எழுந்து, தாமதமாகத் தூங்கி, வாயிற் கதவு மணி அடித்தால் மற்ற நான்கு வேலைக்காரர்களுடன் போய் வாசலில் யார் என்று பார்த்து எங்களைக் கவனித்துக் கொண்டார். வெளியிடங்களில் போய் நிலவரம் என்னவென்று அறியப் போகும் போது குறித்த நேரத்துக்குத் திரும்பி விடுவார். கொஞ்சம் நேரம் ஆனாலும், அம்மா கவலைப் படுவாள் என்று நினைத்து யாரையாவது அனுப்பித் தகவல் சொல்வார்.

கோடையின் இறுதியில் வீட்டுக்குள் ரகசியமாக வந்து இலையுதிர்காலத் தோட்டத்தின் அழகைப் பருகினோம். வருட முடிவில் குளிரும் பனியும் பல நாட்களுக்கு வாட்டியது. அக்காவுக்கு உடல் நலமில்லை. என்க்கும் பொழுது போகவில்லை. அப்போது துப்பாக்கி மற்றும் குண்டு சத்தங்கள் புத்தாண்டைப் போலக் கேட்டன. எனக்கு நோய் வரட்டுமென்று வேண்டிய படியே அக்காவுக்கு அருகில் படுத்திருந்தேன்.

அன்று மதியம், திரு லூ மாடியேறி வந்தார். என்னைக் கூப்பிட்டார். நான் அறையிலிருந்து வெளியே வந்தேன் கிடுகிடுவென்று. கீழிறங்கிய அவர் பின்னால் போனேன். ஸியா மிங்ஜூ இறந்து போனார்! எப்படி? என் முறைப்பைத் தவிர்த்த படி திரு.லூ பக்கவாட்டில் தலையசைத்தார். “உன் அம்மாவிடம் நான் சொல்வேன்.”

“இல்லை. விரிவாகச் சொல்லுங்கள். நான் அம்மாவுக்குச் சொல்வேன்.”

“நானே சொன்னால் தான் சரி வரும். தவிர, சில விஷயங்காள் அவரோடு பேச வேண்டும். நீ மாடிக்குப் போயேன். எழுந்து தேநீர் அருந்தும் வரை காத்திருப்போம். பிறகு நீ சன்னலுக்குப் பக்கத்தில் வா. நான் தோட்டத்துப் புதருக்கு அருகில் தான் நின்றிருப்பேன்.”

நான் மாடிக்குப் போனேன். அம்மா ஏற்கனவே எழுந்து முகம் கழுவிக் கொண்டிருந்தாள். வெளியே வந்ததும், நான் திரு. லூ பார்க்க வேண்டும் என்கிறார் என்று சொன்னேன். புத்தாண்டுக்கு வாங்க வேண்டியவற்றைப் பற்றி ஏதோ பேச வேண்டுமோ என்று தான் அம்மா
நினைத்தாள்.

“புத்தாண்டு கொண்டாடிட வேண்டியது தான்”, என்று முணுமுணுத்தாள்.

நான் சன்னலுக்கு அருகில் சென்றேன். தனியே பனியில் நின்றிருந்த திரு. லூவுக்குக் கையசைத்தேன். தோள்களில் பனி நுரை போல். சடங்குகளை விட்டுவிட்டு, சட்டென்று, “நேற்று ஏதோ பிரெஞ்சுப் பாட்டை பியானோவில் வாசித்தார் என்று ஸியா மிங்ஜூவை ஜப்பனியர்கள் கைதி செய்துள்ளனர். அவளை உளவாளி என்று சந்தேகித்திருக்கிறனர். மொழிபெயர்ப்பாளர் சொதப்பி விட்டார். ஆங்கிலத்தில் வேண்டுமென்றே கேட்டிருக்கிறார்கள். சரளமாக ஆங்கிலத்தில் பதில் சொல்லியிருக்கிறார் ஸியா மிங்ஜூ. அவரின் ஐரோப்பிய நாகரீகத் தோற்றமும் ஆங்கிலமும் இங்கிலாந்தின் அல்லது அமெரிக்காவின் உளவளி என்று ஜப்பானியருக்கு சந்தேகத்தைத் தோற்றுவித்திருக்கிறது. அவரைக் கொடுமைப் படுத்தியிருக்கிறார்கள். இரவில் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் சீனாவைக் கைப்பற்றிய ஜப்பானியர்களை கண்டபடி ஏசியிருக்கிறார் ஸியா மிங்ஜூ. ஒரு கையை முழுக்கவே வெட்டி விட்டான் படுபாவி. ஸியா சகோதரர்களைத் தேடினேன். அவர்கள் எல்லோருமே μடி விட்டார்கள். ஸியா மிங்ஜூவின் உடல் வெளியே வீசியெறியப் பட்டது. பனியில் கிடந்தது. நானே பார்த்தேன் பிரேதத்தை. இப்போது மதியம். இருட்டிய பிறகு வேண்டுமானால், .. ”

நானும் போகலாம். ஆனால், திரு. லூ அம்மா சொன்னால் தான் பிரேதத்தைக் கொணர போவார். அம்மா ஒத்துக் கொள்ளா விட்டால், முழந்தாளிட்டுக் கெஞ்சுவேன் அம்மாவிடம் நான் என்று நினைத்துக் கொண்டேன். வேண்டுமானால், அம்மாவை மிரட்டவும் செய்வேன்.

நேராக அம்மாவின் கண்களைப் பார்த்தேன். அம்மா என் பார்வையைத் தவிர்க்கவில்லை. அவள் முகத்தில் கண்ணீர் கோடிட்டிருந்தது. கெஞ்சிடவே தேவை இல்லை. நான் நினைத்ததே தவறு. எப்படி அம்மாவை மிரட்ட நினைத்தேன் நான்?

அம்மா அமைதியானாள். கைக்குட்டையை எடுத்துத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். “திரு. லூ பிரேதத்திற்கு ஒரு சவப்பெட்டி தயாராக வேண்டும். கொஞ்சம் தயார் செய்யுங்கள். அவளின் முழு உடலும் கிடைக்க வழி செய்திடுங்கள். சீக்கிரம் செயலாற்றிட வேண்டும். சவப்பெட்டி கிடைத்ததுமே, இருட்டக் காத்திருப்போம். உதவிக்கு ஆள் சேர்த்திடுங்கள். அவசரம் வேண்டாம். இன்னொரு அசம்பாவிதத்தைத் தாங்கிட முடியாது நம்மால்.”

திரு லூ எல்லாவற்றையும் கச்சிதமாகச் செய்திடுவார் என்று நான் அறிவேன். அவசரமாகச் செல்லவிருந்தவரைத் தடுத்து நிறுத்தினாள் அம்மா. அறைக்குள் போனாள். திரு. லூ தான் அனைத்து வரவு செலவுகளையும் பார்த்துக் கொள்வார் என்று அறிந்திருந்தேன். இருந்தும் அம்மா பணம் எடுப்பதற்குத் தான் போனாள் என்று நினைத்தேன்.

ஆனால், அம்மா வெளியே வந்தாள், சாம்பல் நிற மேலங்கியையும் அடர்நிறத் தொப்பியையும் எடுத்துக் கொண்டு.

“இதைக் கொண்டு சுற்றிடுங்கள் அவளை. இந்தத் தொப்பியில் அவளின் கூந்தலைத் திணித்து விடுங்கள். மெத்தையும் போர்வையும் கூட வாங்கி விடுங்கள். மற்றபடி, நமது வழக்கம் உங்களுக்குத் தெரியும். செய்து விடுங்கள். வீட்டுக்கு உள்ளே வைத்திடும் சடங்கு வேண்டாம். உடனே புதைத்து விடுங்கள், நமது மூதாதையரின் கல்லறைத் தோட்டத்தில். மட்டம் ஆக்கிட வேண்டாம். ஒரு கல்லறைக் கல் நட்டு விடுவோம் சீக்கிரமே.”

அக்காவுக்கு உடம்பு சரில்லை. ஆகவே, அவளிடம் இப்போது சொல்ல வேண்டாம் என்று அம்மா சொல்லி விட்டாள். “வெளியே போகும் போது பத்திரம். அவளின் கல்லறைக்குப் போனாலும்.”

செல்வி. ஸியா புதைக்கப் பட்ட பின்னர், எங்களின் தங்கையாகிட நினைத்த அந்தக் குட்டிப் பெண்ணைக் கூட்டிவர அம்மா திரு. லூவை அனுப்பினாள்.

சில நாட்களுக்குப் பிறகு, திரு.லூ திரும்பி வந்தார், “அச்சிறுமி விற்கப் பட்டு விட்டாள். எங்கிருக்கிறாள் என்று யாருக்கும் தெரியாது”, என்றபடி.

ஆங்கில மொழிபெயர்ப்பு: Toming Jun Liu
ஆசிரியர் குறிப்பு
மூஸின் என்பது தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சீனத்தின் பரவலாக அறியப்பெற்ற எழுத்தாளரின் புனைப்பெயர். தென்சீனத்தின் வூஜென் என்ற இடத்தில் மிகவும் பணக்கார குடும்பத்தில் பிறந்தார். இவரது பரம்பரை ஷாங்காயில் பெரும் வியபாரங்களைச் செய்து வந்தது. 1947 முதல் 1949 வரை ஷாங்காய் கலைக்கூடத்தில் பயின்று, 1982ல் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். சீனாவில் இருந்தபோது நிறைய எழுதியிருந்தார் என்றாலும் அவரின் ஆக்கங்கள் யாவும் கலாசாரப் புரட்சியின் போது பறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. 1982 முதல் 12 கவிதை, உரைநடை மற்றும் புதின நூல்கள் பிரசுரமாகின. சீனமொழி மற்றும் இலக்கியத்தின் பழமையையும் மேற்கின் புதுமையையும் உள்வாங்கி பல புதிய உத்திகளைச் சோதனை முயற்சிகளாகச் செய்து சீன வாசகர்களுக்கு அறிமுகம் செய்த பெருமை இவருக்கு உண்டு. ‘வேர்களைச் சுமக்கும் நாடோடிகள்’ மற்றும் ‘இவ்வாழ்வின் அவதாரங்கள்’ போன்ற இவரின் பிரயோகங்கள் மிகப் பிரசித்தம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *