(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கூட்டம் நடைபெறுவதற்கான ஆயத்த வேலைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. கெளரவ செய் லாளர் இருநாட்களுக்கு முன்பாகவே அங்கத்தவர்கள் எல்லோருக்கும் தொலைபேசி மூலம் அறிவித்தல் கொடுத்துவிட்டார். அங்கத்தவர்கள் எல்லோரும் கூட்டத்தில் தவறாது பங்குபற்றுவது வழமை. ஞாயிற்றுக் கிழமையில் கூட்டத்தை நடத்துவது எல்லோருக்கும் வசதி…
சங்கத் தலைவர் ஆனந்தன் ஞாயிறுகாலை ஒன்பது மணிக்கே புறப்பட்டுவிட்டார். இடையில் வாங்க வேண்டிய பொருட்களையும் வாங்கிக்கொண்டு பத்து மணி பத்து நிமிடமளவில் கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆஜராகிவிட்டார்.
எதிர்பாராத பிரச்சினை ஒன்று வந்துவிட்டதால் கொஞ்சநேரம் தாமதமாக வருவதாகச் செயலாளர் தொலைபேசியில் சொன்னார்.
‘இந்த ஆளைப் பாருங்க…… எல்லாரையும் நேரத்தோட வாங்க எண்டுபோட்டு தான் பிந்தி வாறாராம்……..’ தலைவர் புறுபுறுத்துக்கொண்டார்.
சங்க அமைப்பாளர் குலரத்தினா வீட்டில் தான் கூட்டம் வழமையாக நடைபெறும். மற்றவர்களின் வீட்டில் சங்கக் கூட்டத்தை நடாத்துவது பிரச்சினைகளை உருவாக்கி விடும்.கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெறு வதுண்டு… இப்படியான விவாதங்களை தமது வீடுகளில் நடத்துவதற்கு அவர்களின் ‘இல்லத்தரசிகள்’ இடங் கொடுக்கமாட்டார்கள் தானே…..!
அமைப்பாளர் குலரத்தினா பிரமச்சாரியெனச் சொல்லிக் கொள்பவர். தனியாகவே வசிப்பவர். சகோதர இனத்தைச் சேர்ந்தவராகினும் அற்புதமான இதயமுள் ளவர். இரண்டு அறை. பெரிய ஹோல்.. குசினி பிரச்சினை இல்லாத இடம்…….
ஹோலில் நீண்ட மேசை. சுற்றிவர எட்டுக் கதிரைகள்… பக்கத்தில் மூன்று பேர் அமரக்கூடிய ‘கனப்பே’ தலைவர் கொண்டுவந்த பொதியைக் குலரத்தினாவிடம் கொடுத்தார். அவர் அதிலுள்ள பொருட்களை எடுத்து மேசையில் வைத்தார்.
பொருளாளர் போல்ராஜாவும் வந்துவிட்டார். அவர் கொண்டு வந்த ‘கொர்பியர் வைன்’ போத்தல் ஒன்றினைக் குலரத்தினாவிடம் கொடுத்தார். அவர் ஒருவிதமான புன்சிரிப்புடன் அதனை வாங்கிச் சென்று குசினி மேசைக்குக் கீழே வைத்தார். பொருளாளர் பெயரளவில் தான்… .. அவரது பங்களிப்பு அவ்வளவுதான். அவரது நிலமை அப்படி… கேட்டால் என்றும்போல் ‘வறுமை வாய்ப்பாட்டை’ வாசிக்கத் தொடங்கிவிடுவார். ஆனால் பிரச்சினையில்லாத மனுஷன். கூட்டத்தில் அதிகம் பேசமாட்டார். சிலவேளை உச்சக்கட்டங்களில் ‘நேயர் விருப்பம்’போல் சில கேள்விகள் கேட்பார்.
செயலாளர் வருவதற்குக் கொஞ்சம் சுணங்குமாதலால் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு அமைப்பாளர் தலைவரிடம் கூறினார். ‘குதிரைக் கடைக்குப்’ போயிருந்த விஜயபாலா உட்படச்சில அங்கத்தவர்களும் வந்துவிட்டனர்.
இது என்ன சங்கக் கூட்டம் என நினைக்கிறீர்கள்…?
இலங்கையில் ஐந்தாம் வகுப்புவரையுள்ள சிறிய ஆரம்ப பாடசாலைகளுக்கே புலம்பெயர்ந்த நாடுகளில் பழைய மாணவர் சங்கங்கள் வைத்திருக்கிறார்கள். நிர்வாகசபைக் கூட்டமென நடத்துகிறார்கள். ‘ஒன்றுகூடல்’ என விளம்பரம் கொடுக்கிறார்கள். பல போட்டிகள் நடக்கு மென அறிவிக்கிறார்கள். அந்தப் பாடசாலைகளில் ஐந்தாம் வகுப்போ அல்லது அதற்குக் கீழ் படித்தவர்களோ நிர்வாகிகளாக செயற்படுகிறார்கள். ஓடி ஓடிப் பல விதத்திலும் உழைத்துச் சீட்டுப் பிடித்துச் சேமித்து வைத்தி ருக்கும் பணத்தை, இலங்கைப் பெறுமதியில் பெருக்கிப் பார்த்தால், அவர்களை அறியாமலே ஒரு பிரமிப்பு. அகங்காரம், நெஞ்சு நிமிர்தல் ஏற்பட்டுவிடுகிறது….. என்ன செய்வது…..
‘ஒன்றுகூடல்’ விழாக்கள் பல நடாத்தி, ‘கோட் சூட்’ போட்டு படங்கள் பலவும் எடுத்து பத்திரிகைகள் பலவற்றுக்கும் அனுப்பி விடுகிறார்கள். பத்திரிகையில் வெளிவந்த ‘செய்திகள், படங்கள்’ பலவற்றையும் பெரிய அளவில் ‘போட்டோ கொப்பி’ செய்து ‘பிரேம்’ போட்டு வீட்டு வாசல் பக்கமாக மாட்டி வைத்துக் கொள்கிறார்கள்.
இந்த ‘மனிதாபிமானிகள் சங்கம்’ வித்தியாசமான ஒரு அமைப்பு. மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை அவர்களது கூட்டம் நடக்கும். குறிப்பிட்ட ஒரு சில விடயங்கள் என்றில்லாமல் சர்வதேச சகல சமாச்சாரங்களும் அங்கு அலசி ஆராயப்படும். விவாதிக்கப்படும். காரசாரமாகக் கருத்துக்கள் தெரிவிக்கப்படும். சின்னத்தனமான விடயங்கள் அங்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. கூட்ட முடிவில் எல்லோரும் கசப்புணர்வு இல்லாத நண்பர்களாகவே கலைவார்கள். மீண்டும் அடுத்த மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை வழமைபோல…
தலைவர் ஆனந்தன் கொண்டுவந்திருந்த ‘ஜொனிவாக்கர்’ விஸ்கிப் போத்தலையும், குளிர்சாதனப் பெட்டியிலிருந்த ‘பெரியர்’ சோடாவையும் எடுத்து மேசையில் வைத்துக் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு குலரத்தினா கூறினார்.
இந்தச் சங்கத்தில் இன மத வேறுபாடுகள் எதுவும் கிடையாது. நட்புணர்வே பெரிதாக மதிக்கப்படுகிறது. ஆனாலும் சிலவேளைகளில் உச்ச நிலைகளில் அங்கத்தவர் ஒரு சிலர் இன ரீதியாகக் குறிப்பிடும் வார்த்தைகள் சில வற்றை தம்மை அறியாமலே உதிர்ந்து விடுவதுமுண்டு. அவ்வேளைகளில் தலைவரோ அல்லது செயலாளரோ குறுக்கிட்டு அத்தகைய வார்த்தைகளை வாபஸ் பெற வைத்துவிடுவர்.
சுத்தமாகக் கழுவிய ‘கிளாசுகள்’ சிலவும் மேசையில் வைக்கப்பட்டன. தலைவர் அவற்றை ஒருமுறை உற்றுப் பார்த்தார்.
‘நல்லாக் கழுவினது தான்…’ எனப் பிரெஞ்சு மொழியில் குலரத்தினா சொன்னார். தலைவர் சொண்டுக்குள் சிரித்துக் கொண்டார்.
தலைவர் ‘விஸ்கி’யை திறந்து ஒவ்வொரு கிளாசிலும் சம அளவாக ஊற்றினார்.
ஒவ்வொருவரும் கிளாசுகளை எடுத்துக் கொண்டனர் ‘சிங்சிங்… உங்கள் ஆரோக்கியத்திற்காக…’ என்று கிளாசு களை உயர்த்திப் பிடித்து ஒன்றோடு ஒன்று முட்டிவிட்டு முதலாவது இழுவையை ஆசையோடு ஆரம்பித்தனர்.
தலைவர் ஒரு போத்தல் ‘ஜெனிவாக்கர்’ விஸ்கியும், நான்கு கிலோ எலும்புடன் கூடிய மாட்டிறைச்சியையும் கொண்டு வந்திருந்தார். அவர் புகைக்கும் ‘டுனில்’ சிகரெட் பெட்டியும் கைவசம்…
குலரத்தினாவுக்கு மாட்டிறைச்சிக் கறிதான் விருப்பம். மற்றையோரும் அப்படியே… ஆட்டிறைச்சி சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை. கோழி இறைச்சி அலுத்துப் போன ஒன்று..
எல்லோருக்கும் எண்ணெய், கொழுப்பு ஒத்துக் கொள்ளாது… உடல்நிலை அப்படி…
“மச்சாங்… ஆனந்… நீங்… இறைச்சிக் கறியை வையுங்க… நாங்… பருப்புக் கறியும் சம்பலும் போடுறது… சோறு போட்டாச்சு… சரிங் தானே… ”
தலைவர் ஆனந்தன் இறைச்சியை சிறுசிறு துண்டுகளாக வெட்டத்தொடங்கினார். ஏற்கனவே சிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருந்தாலும் எலும்புகளில் கூட சிறு கொழுப்புப் படிவோ, சவ்வோ இல்லாமல் ஆறுதலாக இறைச்சியைத் துப்புரவாக வெட்டி முடித்தார்.
முதலாவது ‘ரவுண்டு’ முடியும் தறுவாயில் செயலாளர் உலகநாதன் வந்துசேர்ந்தார்.
“மன்னிக்க வேணும்… திடீரென ஆட்கள் வீட்ட வந்திற் றினம். ஒரு மாதிரி அவையை அனுப்பிப்போட்டு காரை எடுத்துக் கொண்டு வந்திற்றன். பிள்ளையள் ஒரு மாதிரிப் பாத்தினம்… தெரியும்தானே… புத்தகப் பிரச்சினை… சந்திக்கு சந்தி ‘மூண்டெழுத்து’ நிக்கிறாங்கள்… எல்லாம் இந்த ‘அடையாரால’ வாற பிரச்சினை.. ம்….. கூட்டம் தொடங்கீற்றீங்களே… எங்க.. அரைப் போத்தல் பாஞ்சிற்றுது போல
ஆனந்தன் ஒரு கிளாசை உலகநாதனுக்குப் பக்கத்தில் எடுத்து வைத்தார். அதில் அளவாக விஸ்கியையும் சோடா வையும் ஊற்றி ஒரே மூச்சில் இழுத்தார் உலகநாதன்.
இறைச்சிக்குள் கொஞ்சம் சூரியகாந்தி எண்ணெய் விட்டு, கணக்காக உப்பைத் தூவி, வெங்காயம், யாழ்ப்பாண ஸ்பெஷல் மிளகாய்த்தூள், கறுவாப்பட்டை சிறு துண்டு, பெருஞ்சீரகம், கருவேப்பிலை, மற்றும் வாசனைப் பொருட்களும் அளவாகப் போட்டு நன்றாகப் புரட்டி உருட்டிக் கொஞ்ச நேரம் ஊறவைத்தார் ஆனந்தன்.
பருப்புக் கறிக்கு மிளகு மற்றும் மாசுக் கருவாட்டுத்தூள் என்பனவும் சேர்த்துச் சுவையாக வைத்தார் குலரத்தினா. அத்துடன், ‘பைக்கற்றில்’ உள்ள தேங்காய்ப்பூவை எடுத்து அதற்குள் சீனக் கடையில் வாங்கிய ‘மிளகாய், உப்பு. என்பன அரைத்த கலவை, மாசுக் கருவாட்டுத்தூள், தக்காளிப் பழம், சின்ன வெங்காயம் எல்லாம் சேர்த்து சம்பல் போட்டு முடித்தார்.
ஒரு போத்தல் முடிந்து உலகநாதன் கொண்டுவந்த போத்தலும் திறக்கப்பட்டுவிட்டது. விஜயபாலாவுக்கு கொஞ்சம் உஷ்ணமாகவிருந்தது. “தலைவரே… இறைச்சிக் கறி தானாக வேகும்… நீங்க இஞ்ச வாங்க… இந்த ஈராக் பிரச்சினையைப் பற்றி என்ன சொல்லுறீங்க… அமெரிக்கன் செய்யிறது சரியா… சொல்லுங்க…” எனச் சிங்களம் கலந்த பிரெஞ்சில் கேட்டார்.
இறைச்சி வேகும் சட்டியைத் திறந்து கரண்டியால் ஒரு பிரட்டல் செய்துவிட்டு தக்காளிப் பழமும் வெட்டிப் போட்டுவிட்டு வந்து மேசைக்கருகிலிருந்து தனது ‘டுனில்’ சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு தலைவர் பேசத் தொடங்கினார்.
“உலகத்தின்ர பொலிஸ்காரன் தானெண்டு நினைச்சுக் கொண்டு தொடந்து அநியாயம் பண்ணிறான் அமெரிக்கன். ஜப்பானில அணுக் குண்டைப் போட்டு லட்சக்கணக்கான சனத்தை எரிச்சான். அங்க இண்டைக் குப் பிறக்கிற பிள்ளையள் கூட ஊனமாகப் பிறக்குதாம்… வியட்னாமில் எல்லா அநியாயமும் செய்து, எத்தனையோ வருஷங்களுக்குப் புல் பூண்டே முளைக்காத அளவுக்கு எரிகுண்டுகளைக் கூடப் போட்டுப் பாத்தான்… கடைசியில என்ன நடந்தது… தங்கட ஆக்கள லட்சக் கணக்கில பறி குடுத்திற்று நல்லா அடிவாங்கி முகத்தில கரி பூசிக்கொண்டு தப்பினோம் பிழைச்சோமெண்டு ஓடினான். இண்டைக்கும் அங்க காணாமப் போன தங்கட ஆக்களைத் தேடி வியட்னாமுக்கு காவடி எடுக்கீனம்… அதுக்குள்ள விழுந்தனான்.. மீசையில மண் புரளயில்லை… எண்ட மாதிரி … தங்கட வீரத்தைக் காட்ட “ரம்போ… கிம்போ..”எண்ட மாதிரிச் சினிமாப் படங்கள் எடுத்து உலகத்து அப்பாவிச் சனங்களுக்கு விளையாட்டுக் காட்டுறாங்கள். எல்லா நாடுகளிலயும் அவங்களால தானே.. பிரச்சினை… … ஈராக்கில இவங்களுக்கு என்ன வேலை… சதாம் உசேன் சர்வாதிகாரியெண்டா அதை அந்த நாட்டு மக்களோ… பக்கத்து அரபு நாட்டு மக்களோ பாத்துக் கொள்ளட்டும்…… இல்லை… இவங்கட கையுக்க மடங்குற ஐக்கிய நாடுகள் சபை பாக்கட்டுமன். ஏன் இவன் படை கொண்டு போனவன்… பெரிய பாறைகள், கொங்கிறிற் தளங்கள உடைத்து ஆழத்துக்குப் பாயும் புதிய குண்டுகளப் பரிசோதிக்கவும், வேற புதிய ஏவுகணை களைப் பரிசோதிக்கத் தானே ஆப்கானிஸ்தானுக்குள்ள போனவன். அதால அங்கயிருந்த தலிபான் ஆட்கள் சரியெண்டு சொல்லேல்ல… ..
ஆப்கானிஸ்தானிலயிருந்து ரஷ்யப் படையளைக் கலைக்கப் பின்லேடனுக்கு வெள்ளை மாளிகையில் விருந்து கொடுத்து ஆயுதங்களும் குடுத்தது இவை தானே… ஏன் ஈரான், ஈராக் சண்டையில சதாம் உசேனுக்கும் அள்ளிக் குடுத்தவை தானே… பிறகு தங்கட ஆட்டத்துக்கு, சுரண்டலுக்கு சதாம் உசேன் இடம் குடுக்கேல்ல எண்ட எண்டாலும் உடன பிரச்சினை கிளப்பியிருக்கீனம்.. சதாம் சுத்தமான ஈராக்கிய ஆமிக்காரன்தான்…. சரண டையேல்லைத் தானே… ‘இவங்கள் தான் கொள்ளைக் காறங்கள்… ஆக்கிரமிப்புக்காறங்கள்…’ எண்டு சொல்லி யிருக்கிறான்… பாத்தியளே… ஈராக் அவங்களுக்கொரு வியட்னாமாகத் தான் முடியும் பாருங்கோ……”
தலைவர் ஆனந்தனின் நீண்ட சொற்பொழிவை எல்லோரும் தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக் கொண்டிருந்தனர். “என்ன விளங்கி எல்லோரும் தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறீங்க… எனக்குத் தான் தமிழ் அப்படியே விளங்காட்டிலும், விஷயம் விளங்கிச்சு… .. ஆனாச் சிலருக்கு……” எனச் சிறு புன்னகையுடன் கூறினார் குலரத்தினா… தலைவர் ஆனந்தனும் புன்னகைத்துக் கொண்டார்.
இறைச்சிக் கறியை ஓடிப்போய்ப் பார்த்த ஆனந்தன்… “நல்ல காலம் இன்னும் கொஞ்ச நேரம் எண்டா அடிப் பிடிச்சிருக்கும்…” என்று சொல்லிக்கொண்டு அதனை இறக்கி வைத்தார்.
ஒரு கோப்பையில் இறைச்சிக் கறி கொஞ்சம் போட்டு மேசையில் கொண்டுவந்து வைத்தார் குலரத்தினா… உஷ்ணம் கூடி ஹோலுக்குள் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்த விஜயபாலா முள்ளுக்கரண்டியால் சில இறைச்சித் துண்டுகளை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். தலைவரும் கறியை ருசித்துவிட்டுச் சிகரெட் புகையை வளையங்களாகத் தள்ளிக்கொண்டிருந்தார்.
எப்போதும் சோம்பல் முறித்துக்கொண்டிருக்கும் போல்ராஜா கிளாசுடன் போய் ‘கனப்பே’யில் இருந்து கொண்டார். அவருக்கு இந்தக் கதைகள் என்னவோ செய்தது…. “ஒரு பாட்டுப் பாடுங்கோவன்…” என்றார்.
உலகநாதனுக்கும் பாட்டுப்பாட ஆசையாத்தான் இருந்தது.
“மச்சாங்……எங்கட நாட்டில எப்ப பிரச்சினை தீரும்…. எங்கட நாட்டுச் சனங்கள் எல்லாம் எப்ப சண்டை, பிரச்சினை இல்லாம வாழுற காலம் வரும்…. என்ன வளமான நாட்டை பதவி .. தங்கட இலாபங்களுக்காக சுடுகாடா மாத்துறாங்கள்…. மாறி.. மாறி பதவிக்கு வாற எல்லோரும் ஒண்டைத்தான் செய்யுறாங்கள்… நாட்டைப் பற்றி சிந்திக்கிறவங்கள் குறைஞ்சுகொண்டு போகுது…. எல்லாத்துக்கும் பின்னணியில தலைவர் சொன்ன மாதிரி உலகப் பொலிஸ்காரனும் அவங்கட உறவுக்காரங்களும் தான் காரணம் என்ன…” என இழுத்தார் குலரத்தினா.
தலைவருக்கோ இன்னும் ஒரு விளக்கம் கொடுக்க வாய் உன்னியது…. அதற்குள் போல்ராஜா உரத்துச் சொன்னார்…”பொலிக்ரிக்ஸ் வேணாம்… பாட்டுப் பாடுங்கோ….’
இதுதான் தருணமென உலகநாதன் எழுந்தார்…. “யாருக்காக இது யாருக்காக … ” எனக் கிளாசையும் கையில் ஏந்திக்கொண்டு சிவாஜி கணேசனையே விஞ்சி விட்ட நினைப்பில் பாடிக் கொண்டே நடிக்கத் தொடங்கினார். பின்னர் “பாவாடை தாவணியில் பார்த்த உருவமா… என உருக்கமாகப் பாடினார். சும்மா சொல்லக் கூடாது நன்றாகத்தான் பாடினார். அவர் வாழ்க்கையோடு இணைந்த பாடலாய் இருக்கலாம்… அப்படி உருக்கம்… தலைவரும்…”ஆஹா……’ என ஒத்தூதத் தொடங்கி விட்டார். போல்ராஜாவும் மெல்லிய குரலில் ‘கனப்பேயி’யில் இருந்தவாறே இணைந்து பாடி சுருதிகூட்டினார்.
இரண்டாவது போத்தல் முடிவதற்குள், கூட்டத்தில் எப்போதாவது சில வேளைகளில் வந்து நுழையும் இந்திரனும் அவருடன் வேலைசெய்யும் காந்தனும் வந்து சேர்ந்தனர். இந்திரன் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்வார். ஒப்பந்த அடிப்படையில், கட்டிட நிர்மாண நிறுவனமொன்றில் மேசனாக வேலை செய்கின்றார். அவருக்கு உதவியாகக் காந்தன்…….
இருவருக்கும் ஊற்றிக் கொடுத்ததோடு இரண்டாவது போத்தலும் முடிந்துவிட்டது. அடுத்த போத்தல் வாங்கு வதானால் தொலைதூரம் போகவேண்டும். ஞாயிற்றுக் கிழமையல்லவா…..! நேரம் இரண்டரை மணியைத் தாண்டி விட்டது. இந்திரனும் காந்தனும் மூன்று மணிக்கு மேல் வேலைக்குப் போகவேண்டு மென்று சொன்னதால் அவர்களுக்குச் சாப்பாட்டைப் போட்டுக் கொடுத்தார் குலரத்தினா……. சாப்பாட்டை மிகவேகமாகக் கொட்டிக் கொண்டு அவர்கள் புறப்பட்டு விட்டனர்… அவர்கள் அப்படித்தான் … சிலவேளைகளில் வருவர்… தமது காரியத்தைப் பார்த்துக்கொண்டு போய் விடுவர். பிரச்சினை இல்லை…….
கட்டிலுக்குக் கீழிருந்த பெட்டியிலிருந்து ‘போதோ வைன்’ போத்தல் ஒன்றை எடுத்துவந்து மேசையில் வைத்தார் குலரத்தினா. அவரிடம் எப்பொழுதும் ‘ஒரு பெட்டி வைன்’ அதாவது ஆறு போத்தல் இருப்பில் இருக்கும். விஸ்கி ஓடி முடிய வைன் வந்து இறங்குவது வழமை……. மூன்றாவது போத்தல் வைன் ஓடிக் கொண்டிருந்தது…
“இவன் தவேந்திரன் குடும்பமா லண்டனோட போய் சேந்திற்றான்….. என்ன நோக்கமோ……” என இழுத்தார் உலகநாதன்… “அவன் எங்கதான் ஒரு இடத்தில் இருந் திருக்கிறான்… பிரான்சிலேயே நான்றிய ஆறு இடத்தில வீடு மாறி இருந்திருக்கிறான்… எங்க போய்த்தான் என்ன…. சும்மா… பிள்ளையளின்ர படிப்பையும் குழப்பிக் கொண்டு……” தலைவர் கூறி முடிக்கு முன்பு அமைப் பாளர் சாப்பாட்டுக்குக் குரல் கொடுத்தார்.
சோறு, கறிகள், சம்பல், களுத்துறையிலிருந்து வந்த ‘அச்சாறு’ எனப் பல மேசைக்கு வந்தன… அவரவர் விரும்பியபடி போட்டுச் சாப்பிட்டனர். குலரத்தினா ஒரே தடவையில் நிறையப் போட்டுச் சாப்பிடுவது வழக்கம். இரண்டாவது தடவை போட்டுச் சாப்பிடமாட்டார். தலைவர் சாப்பாட்டுப் பிரியர்.. எந்த நிலையிலும் இரண்டு தடவை போட்டு ‘வெட்டுவார். உலகநாதரும் அப்படியே… ரசித்துச் சாப்பிடுவார். விஜயபாலா கொஞ்சச் சோறு, அதேயளவுக்கு கறியும் போட்டு வேகமாக ‘வெட்டிவிட்டு’ எதையோ பறிகொடுத்து விட்டுத் தேடுவது போன்ற யோசனையில் சிகரெட்டும் கையுமாக ஆழ்ந்துவிடுவார். போல்ராஜா ஒருமுறை போட்டுக்கொண்டதோடு நீண்டநேரமாகப் போராட்டம் நடத்திக்கொள்வார். அவருக்கு ‘உசார்’ கூடினால் உணவு இறங்குவது கஷ்டம்….
ஒருவாறாக எல்லோரும் சாப்பிட்டு முடித்து விட்டனர்… ‘யாராவது ஒரு பிரச்சினையைக் கிளப்ப, தலைவர் அதற்கு விளக்கங் கொடுக்கத் தொடங்க….இனி கூட்டத்தைத் தொடர முடியாத நிலை… ஒத்தி வைப்போம்… நான் ‘வேலைக்குப் போகிறேன்’… தலைவர் விரும்பினால் இந்தக் கட்டிலில் ஓய்வெடுக்கலாம்…சரி தானே…’ என்று கூறியவாறு குலரத்தினா ஒரு கட்டிலில் தனது வேலையை… நித்திரையை அணைத்துக் கொண் டார். உலகநாதன் ‘கனப்பேய்’யில் ஆழ்ந்த உறக்கத்தில்… அடுத்த அறையில் விஜயபாலாவும் போல்ராஜாவும் அப்படியே…
மாலை ஏழு மணிக்குப் பின் எல்லோரும் எழுந்து கொண்டனர். எல்லோரும் தேநீர் குடித்தனர். குலரத்தினா காரில் யாவரையும் ஏற்றி, அவரவர் வீடு நோக்கிக் கூட்டிச் சென்றார்.
இப்படியாக “மனிதாபிமானிகள் சங்க” மாதாந்தக் கூட்டம், ஏனைய பல ‘பழைய மாணவர் சங்கங்களின்’ நிர்வாகசபைக் கூட்டங்கள் போல் இல்லாமல் அமைதியாக, சந்தோசமாக, ‘வழக்குகளுக்குப் போகும்’ பிரச்சினை இல்லாமல் இனிதே நடந்து முடிந்தது.
– இளங்கோவன் கதைகள், முதற் பதிப்பு: வைகாசி 2006, உமா பதிப்பகம், கொழும்பு.