ஒரு நாள் இன்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 24, 2023
பார்வையிட்டோர்: 1,756 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செங்கதிர்கள் இருளின் வயிற்றைப் பிளந்தெறிந்ததால் அடி வானம் தேய்ந்து செந்நிறமாக காட்சி தந்தது.

மணி ஆறரை!

கந்தசாமி புரண்டு படுத்தான். அவன் கொஞ்சம் முன்னதாகவே எழுந்து விடுவதால் அவனுடைய வீட்டில் ஏதாவது புதுமையாக நடந்து விடப் போகிறதா? தலையைத் தூக்கி ஒரு நோட்டம் விட்டான். அடுப்புப் புகைந்து கொண்டிருந்தது; கோப்பியாகும்.

தங்கம் வாசற்படியில் உட்கார்ந்து தங்களது மூன்றாவது ‘படைப்பை’ மடியில் வைத்து தலைவாரிக் கொண்டிருந்தாள். கழுதை கெட்ட கேட்டுக்கு குஞ்சம் ஒன்றுதான் குறைச்சல்.

கந்தசாமி வலது பக்கமாகத் திரும்பிப் படுத்தான். கன்னம் ‘சில்’லென்று இருந்தது. தலையணை ஈரம்! ஆமாம். இனி அவன் வடிப்பதற்குக் கண்ணீரே இல்லை; எல்லாவற்றையும் வடித்து விட்டான். சாட்சி, நனைந்து போன அந்த தலையணை. இனி அவன் வணங்குவதற்குத் தெய்வமே இல்லை. எல்லாத் தெய்வங் களையும் வணங்கிவிட்டான். சான்று நைந்து போன அவனுடைய உள்ளம். இனி அவன் சிந்தித்துப் பார்க்க ஒரு வழியுமே இல்லை. எல்லா வழிகளிலும் சிந்தனையைச் செலுத்திப் பார்த்து விட்டான் ஆதாரம், தனது சிந்தனா சக்தியைப் பற்றி அவனுக்கு இருந்த நல்லெண்ணம்.

அவனுடைய ஐந்தாவது சிருஷ்டி தவழ்ந்து வந்து அவனு டைய கால் கட்டைவிரலைக் கடித்து, முளைத்து வரும் பல்லின் பலத்தைக் காட்டியது. கந்தசாமி குழந்தையைத் தூக்கித் தனது பக்கத்தில் படுக்க வைத்தான். பாயின் முரட்டுப்புல் குழந்தையின் முதுகுப் புண்ணை உராஞ்சியதால் அது வீறிட்டுக் கத்தியது. குழந்தையைத் தூக்கி தன் நெஞ்சியில் உட்கார வைத்துவிட்டுச் சிந்தித்தான். நல்லவேளை சிந்திப்பதற்கு பணம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாமல் இருந்ததே.

குழந்தையின் உடம்பு எல்லாம் கிரந்திப் புண். பிறந்த ஊராக இருந்தால் அளவெட்டிப் பரியாரியார் இருக்கவே இருக்கிறார். இங்கு கொழும்பில்? ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக அவனுக்கு நேரமில்லை. நேரமிருந்தாலும் மருந்துக்கும் பத்தியத்திற்கும் சத்துள்ள உணவிற்கும் மற்றது இல்லை – பணம்!

”வேலைக்குப் போகவில்லையா? மணி ஏழாகிவிட்டது” என்று சொல்லிக் கொண்டு வந்த தங்கம் கோப்பியை அவன் அருகில் வைத்தாள்.

“போக வேண்டியதுதான்” என்று எழுந்த கந்தசாமி அவ ளைப் பார்த்து சிரித்தான். அவன் சிரித்தது உள்ளம் பொங்கிய களிப்பினால் அல்ல – வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டதாம் இனி அழுதென்ன சிரித்தென்ன என்ற நினைவினால். அந்தச் சிரிப்பு அவனையும் அவளையும் ஏமாற்றிவிட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்டது.

கந்தசாமி காலைக்கடன்களை முடித்து கொண்டு வந்து வெற்றி முரசு கொட்டும் மூன்றாவது வாரமாக அந்த காற்சட் டையை அணிந்துக்கொண்டான்.

‘விரைவில் இன்னொரு காற்சட்டை தைத்துக் கொள்ள வேண்டும்’ என்று வழக்கம்போல அன்றும் எண்ணிக் கொண் டான். அந்த எண்ணத்தை அடித்துப் புரட்டி விழுத்தி விட்டு பாய்ந்தது ஒரு பெருமூச்சு.

வேலைக்கு போகிறவாராச்சே என்று சதம்சதமாகப் பொறுக்கி தங்கம் வாங்கி வைத்திருந்த மூன்று தோசைகளையும் பிள்ளை பரிவாரத்திற்கு பகிர்ந்தளித்து விட்டுப் பிதாவாகப் புறப்பட்டான் கந்தசாமி.

தாழ்வாரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த யுத்த காலத்தில் பலத்த பந்தோபஸ்துடன் ஈழத்திருநாட்டிற்கு வந்து சேர்ந்த வாகனத்தை – சைக்கிளை வெளியே இழுத்து அதன் முதுகை – ஆசனத்தை தட்டிக்கொடுத்தான். காற்சட்டைக் கால்களை காலோடு சேர்த்து சுற்றி ஒரு ‘கிளிப்’பைக் கொழுவி விட்டான்; காற்சட்டை சைக்கி ளில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பது ஊர் அறிந்த காரணம். அவன் மட்டிலும் தெரிந்த சில பல காரணங்களும் இருக்கலாம்.

தங்கம் வாசலில் வந்து நின்றாள்.

கந்தசாமிக்கு விஷயம் விளங்கி விட்டது

‘கணவன்மார்களே! நீங்கள் வெளியே புறப்படும் சமயமாக வாசலில் குறுக்கே வந்து நின்று உங்கள் மனைவியர் ஒரு புன்ன கையை வலுக்கட்டாயமாக உங்கள் பால் விட்டெறிந்தால் அடுத்து வர இருக்கும் ஒரு பேராபத்திற்கு முகம் கொடுக்கத் தயாராகுங்கள். அவர்களைத் தொட்டுத் தாலிகட்டிய அந்தப் பழைய கணக்கைக் கூட்டிப்பார்த்து ஆறுதலடையுங்கள். மிஞ்சிமிஞ்சிப் போனாலும் அவர்களுடைய கோரிக்கை ஒரு புடைவையாகவோ ஒரு புன் னகையாகவோ தான் இருக்கும். ‘ஆகட்டும்’ என்று சொல்லி வைத்தால் போதும். வாக்கைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. கண்ணீர்க் குண்டுகளுக்குப் பயந்து உங்கள் பலவீ னத்தை வெளிப்படுத்தாமல் தைரியமாக நடந்து விட்டால் உங்கள் வர்க்கத்தினரின் மானத்தைக் காத்த பெருமையைப் பெறுவீர்கள்.

“தங்கம் ……!” கந்தசாமி சிரமப்பட்டு ஒரு சிரிப்பை இழுத்து வந்து தன் முகத்தில் மேயவிட்டான். எங்கள் நிலை தான் உனக் குத் தெரியுமே. கடன்காரர்களால் பகல் நேரத்தில் வீட்டுக்குவரவே முடியவில்லை. பொறுத்ததோடு இன்னும் ஒரு மாதம், பொறுத்துக் கொண்டால், நீ கேட்ட சேலையை வாங்கி விடலாம்.”

தங்கத்தின் முகத்தில் எவ்விதமான உணர்ச்சியின் பிரதி பலிப்பும் தெரியவில்லை. பெண்ணல்லவா?

“அதுவும் போக” கந்தசாமியே தொடர்ந்தான். “மற்றவர்கள், வசதியுள்ளவர்கள் ஆடம்பரமாகத் தான் வாழ்வார்கள். அதைப் பார்த்து நாமும் ஆசைப்பட்டால் முடியுமா? பிள்ளைகளுக்கே உருப்படியான சட்டை எதுவும் இல்லை. உன்னை இந்தக் கோலத்தில் காண்பதில் எனக்கு மட்டும் திருப்தியா என்ன? என்னவோ கெட்டகாலம் சேலையை அடுத்த மாதம் வாங்கிக் கொள்ளலாம் ‘ம்’ என்று சொல்லு, நான் நிம்மதியாக வேலைக்கு போய் வரலாம்” கந்தசாமி நிறுத்தினாான்.

“உங்களுக்கு எப்பொழுதுதான் இந்தப் பஞ்சப்பாட்டு தொலையப் போகிறதோ தெரியாது. வருஷம் பன்னிரண்டு மாதம் உங்களுக்குத்தான் கொள்ளையும் கோதாரியும். இனிமேல் உங் களை ஒன்றும் கேட்காமல் தெருவால் போகிறவன் வருகிறவனை சேலைவாங்கித் தரச்சொல்லிக் கேட்கட்டுமா?”

“நீயுமா தங்கம்?” என்றான் ‘சீஷர்’ பாணியில். அவனுடைய முகத்தில் பரிதாபம் இடம் பிடிக்க அகத்தில் வேதனை குடிபுகுந்தது.

“நீயுமா? நிலைமை தெரிந்த நீயுமா என்னை வதைக்கிறாய்?” என்றவன் தன் கண்களில் ஜென்மன் பெறும் முத்துக்களை மனைவி கவனித்து விடக் கூடாது என்று சைக்கிளில் ஏறி வேகமாக மிதித்தான்.

‘அவளும் தான் எத்தனை காலத்திற்கு பொறுப்பாள்? என்னுடைய தங்கம் தங்கமானவள்.’

கந்தசாமியை – கந்தசாமியையா – தாங்கமுடியாமல் அந்தப் பழைய சைக்கிள் நெழிந்தது. பின் சில்லு ஒன்பதாவது கம்பியை யும் முறித்து பின்னரும் சாமகீதம் பணிவுடன் பாடலுற்றது. கந்தசாமி திருவுளம் இரங்கி சைக்கிளை விட்டு இறங்கி அதைத் தள்ளிக் கொண்டு நடந்தான்.

கந்தசாமிக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த ஒருவன் தனது காற்சட்டைப்பையில் கையை விட்டு கைகுட்டையை வெளியே எடுத்தான். அதோடு ஒரு மடித்த காகிதமும் சேர்ந்து வந்து தெருவில் விழுந்தது.

“ஐயா…!” என்று குரல் கொடுத்தபடி கந்தசாமி அதை எடுத்து விரிந்தான். அது ஒரு நூறு ரூபா நோட்டு. அதற்கிடையில் உரியவன் தெரு மூலையில் திரும்பிவிடவே கந்தசாமி நோட்டை ஆகாய வெளியில் பிடித்துப் பார்த்தான். சந்தேகமில்லை. இது ஒரு கள்ள நோட்டு!

நேர்மை வேணடா மென்றது வறுமை வேண்டு மென்றது உள்ளத்தில் ஒரு மின்னல்!

‘…வருஷம் பன்னிரண்டு மாதமும் உங்களுக்குத்தான் கொள்ளையும் கோதாரியும் … வருஷம் பன்னிரண்டு மாதமும் உங்களுக்குத்தான் கொள்ளையும் கோதாரியும் …….. வருஷம் பன்……..

கந்தசாமி நடந்தான் எதிரே ஒரு பொலீஸ்காரன் வந்தான் கந்தசாமியை ஏதோ ஒன்று எச்சரிக்கை செய்தது. அந்தக் கள்ள நோட்டை எட்டாக மடித்து சட்டைப்பை அடியில் போட்டுக் கொண்டு குனிந்தபடி நடந்தான். பொலிஸ்காரன் போய்விட்டான்.

கந்தசாமி மேலும் நடந்தான். எதிரே அவனுக்கு கடன் கொடுத்த ஒருவன் வந்தான். கந்தசாமி பயந்துபோய் சைக்கிளைத் தெருவோரத்தில் நிறுத்தி விட்டு ஒரு சந்தில் நுழைந்து மறைந்து கொண்டான்.

பொலீஸ்காரனைக் கண்டு கள்ள நோட்டை மறைத்த கந்தசாமி கடன்காரனைக் கண்டு தன்னையே மறைத்துக்கொண்டான். ஏன் கந்தசாமியும் இந்த சமூதாயத்தில் ஒரு ‘கள்ள நோட்டு’த் தானா? அவனைப் போன்றோர் மனிதரோடு மனிதராக வெளிப்படையாக வாழ முடியாதா?

இங்கு கந்தசாமியைப் பற்றியும் ஒரு வார்த்தை குறிப்பிட வேண்டும். அவன் நடுத்தர வகுப்பில் வந்து விடிந்தவன் – ஒரு குமாஸ்தா!

வழக்கம் போல அலுவலகத்தில் ஒரு கட்டுப்பணத்தையும் அதற்குரிய பத்திரங்களையும் ஒப்புக்கொண்டான் கந்தசாமி. அந்தப் பதினாராயிரம் ரூபாவையும் வங்கியில் கொண்டு போய் கட்டிவிட்டு வர வேண்டும். அவனுடைய உள்ளத்தில் மெல்லிய கீறல் விழுந்து துடித்தது. அவனுக்குச்ச் சிந்திக்க நேரமில்லை. மனைவியிடமும் மற்றவர்களிடமும் மதிப்பாக வாழவேண்டு மென்றால் பொய்யும் புரட்டும் செய்யத்தான் வேண்டுமென்று எண்ணியதோடு துணியவும் செய்தான்.

அந்தக் கள்ளநோட்டை எடுத்து அதில் அடையாளமாக ஒரு சிலுவைக் குறியைப் போட்டு அதை நோட்டுக் கட்டுக்கு நடுவில் திணித்தான். ஒரு நல்ல நோட்டை எடுத்துத் தான் வைத்துக் கொண்டு நடந்தான்.

ஐயோ. அந்த அரை மணி நேரமாக அவனுடைய மனம் துடித்த துடிப்பு! ஏதாவது விபரீதமாக நடந்துவிட்டால் நாளைக்கு தங்கத்தின் கதி….? பிள்ளைகளின் நிலை….? ‘தங்கத்தின் மீது ஆணை! இனிமேல் இந்த வேலையை நான் செய்யவே மாட் டேன்’ என்று எண்ணியவனாய் வங்கிப் படிகளில் இறங்கினான் – கையில் நல்ல நோட்டுடன்!

அந்த ஒரு நாள் ஆவது அவனுடைய குடும்பத்தை இன்ப மாக இருக்க வைப்போம் என்ற நினைவு போலும், கடைதெருவில் இறங்கினான் கந்தசாமி.

எல்லோருக்கும் வரிசையாக உடுப்பு வாங்கினான். நல்ல உணவுப் பொருட்களை தேடி வாங்கினான். தங்கத்திற்கு ஒரு ‘கிலிட்’ சங்கிலி, தனக்கொரு ஜப்பான் பேனா, மூத்ததுக்கொரு ரிபன், இளையதிற்கு ஒரு கிலுகிலுப்பை – இன்னும் எத்தனையோ கடைக்காரனுக்கு ஒன்றேகால் ரூபா கடன் வேறு வைத்து விட்டுத் திரும்பினான் கந்தசாமி.

அன்றிரவு கந்தசாமி சாவதானமாக இருந்து கூப்பன் கடைக்கு எவ்வளவு காய்கறிக் கடைக்கு எவ்வளவு என்று எதிர் வரும் சம்பளப் பணத்திற்கு பங்கீட்டுக் கணக்கு போட்டுக் கொண் டிருந்தான். அன்றைக்கு குளித்து முழுகி வயிறார உண்டதால் பிள்ளைகள் எல்லோரும் உறங்கி விட்டனர்.

தங்கம் வெற்றிலை மடித்து கந்தசாமியின் வாயில் வைத்து விட்டுச் சிரித்தாள். பலநாட்களுக்குப் பிறகு அவளுடைய விழிகள் அவனை –

“ஏன் சிரிக்கிறாய்?” என்று அவளுடைய கன்னத்தைக் கிள்ளப் போனான் கந்தசாமி.

“ஆமாம் இன்றைக்கு இவ்வளவு பணம் ஏது?” என்று தங்கம் கேட்டாள்.

கந்தசாமி அவளிடம் பொய் சொல்லவில்லை உண்மையை யும் சொல்லவில்லை சிரித்து மழுப்பினான். பேச்சை வேறு துறைக்கு மாற்றினான்.

‘இன்றைக்கு நீ மிகவும் அழகாக இருக்கிறாய்” என்று கொஞ்சினான்.

“போங்க……!” என்று அவள் கடைக்கண்ணால் அவனை நோக்கினாள். அவன் அவளை இழுத்து தன் மடியில் படுக்க வைத்தான் அவள் நெளிந்தாள்.

விடிந்தது.

கந்தசாமி படுக்கையை விட்டு எழவில்லை ; எழ முடிய வில்லை. அவனுக்கு நல்ல காய்ச்சல் முதல் நாள் வெயிலில் அலைந்ததன் விளைவு.

தங்கம் குடிநீர் போட்டுக் கொடுத்தாள். அதைக் குடித்து விட்டு, வீடு தேடி வந்த கடன்காரனின் வசைகளை வாங்கிக் கொண்டு கிடந்தான்.

மூன்றாம் நாள் காலை அவனுடைய வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து அவன் வேலை பார்த்த கடை முத லாளியே இறங்கி வந்தார்.

“எப்படியப்பா கந்தசாமி சுகம்?”

“இப்போ பரவாயில்லை சார்” என்று பயபக்தியுடன் பதில் தந்தான் கந்தசாமி.

“அவசரப்படாமல் நன்றாகச் சுகம் வந்ததும் வேலைக்கு வா. இது இந்த மாதச் சம்பளம். உனக்கு நெருக்கடியாக இருக்கு மென்று இருபத்தைந்து ரூபா மேலதிகமாக வைத்திருக்கிறேன். அதை அடுத்த மாதச் சம்பளத்தில் பிடித்துக் கொள்ளலாம்” என்று சொல்லி ஒரு உறையை தங்கத்திடம் கொடுத்தார்.

முதலாளி போய் விட்டார்.

கந்தசாமி உறையை வாங்கி ஆவலோடு பிரித்து உள்ளே இருந்த ஒரே ஒரு நோட்டை வெளியே எடுத்தான். அதன்… வலது பக்கம் மேல் மூலையில் …… ஒரு சிலுவை அடையாளம் இருந்தது.

ஒரு நூறு ரூபா நோட்டு !

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *