தலைப்பே வினோதமாய் இருக்கிறதா? நாம்தானே பேசுவோம். தொலைபேசியே பேசுமா? எனக்கும் ஆச்சர்யம்.
ஒரு முக்கிய நண்பர். எழுத்தாளர். அவருக்கு ஒரு சிறுகதைப் போட்டியில் பரிசு என்று முடிவகள் பார்த்ததும் நானே பரிசு வாங்கிய உற்சாகம். அழைத்துப் பாராட்டுவோமே என்று ரிசீவரைத் தொட… “ஹலோ..” தூக்கிவாரிப் போட்டது. சுற்றுமுற்றும் பார்த்தேன். வேறு யாரும் இல்லை. மறுபடி ரிசீவரைத் தொட.. “ஹலோ.. என்ன பதில் சொல்ல மாட்டியா” அடக் கடவுளே.. இந்த வீட்டுக்குக் குடி வரும் போதே விசாரிக்காமல் வந்து விட்டேனே.. யாராவது அகால மரணம் அடைந்த வீடா? ஆவி பேசுகிறதா? ரிசீவர் நான் தொடாமலே ஆடியது.
” என்ன.. தொலைபேசியே பேசுகிறதே என்ற பிரமிப்பா..”
“ஆமா”
“ஹ¥ம்.. எனக்கு மட்டும் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்காதா.. எத்தனை பேர் என் மூலமாய் பேசுகிறார்கள்.. யாராவது என்னோடு பேசியிருக்கிறார்களா?”
இது என்ன குழப்பம்டா சாமி. எனக்கு வியர்த்து விட்டது.
“நண்பரைப் பாராட்டணுமா? அதற்கு முன்னால் ஒரு சின்ன கேள்வி.. இதே போட்டிக்கு நீ எழுதினாயா?”
“இல்லை”
“பரிசு வாங்கிய நண்பர் உனக்கு என் மூலமாகவும் கடிதம் மூலமாகவும் எத்தனை தடவை சொன்னார்? நீயும் எழுது.. போட்டியில் கலந்து கொள் என்று”
வாஸ்தவம் தான். நான் தான் சோம்பேறித்தனமாய் இருந்து விட்டேன். “முயற்சிகள் இல்லாத மனிதன் ஜடம் என்று உனக்குத் தெரியும்தானே”
“தெரியும்”
“கடவுள் ஒவ்வொருவருக்கும் திறமையைத் தந்திருக்கிறார். உழைப்பின் மூலம் சிகரம் தொட வேண்டிய மனிதன் சோம்பிக் கிடந்தால் அது இறைவனுக்குச் செய்யும் அபச்சாரம்தானே.. நன்றாக யோசித்துப் பார். ஏதோ ஒரு காரணத்தினால் என் மூச்சு நின்று போனால் எப்படித் தவிக்கிறாய்? மறுபடி என் சத்தம் ஒலிக்கும் வரை உன்னிடம் அமைதி இல்லை. ஆனால் நீயோ எப்போதும் ஏதோ ஒரு காரணம் காட்டி நீ செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறுகிறாய்.. சொல். இது சரிதானா?”
என்னை யாரோ அறைந்த மாதிரி இருந்தது.
எதிர் முனையில் நண்பரின் குரல் கேட்டது.
“என்ன.. டயல் செய்து விட்டு பேசாமல் இருக்கிறீர்கள்.. உடம்பு சரியில்லையா?”
“வாழ்த்துக்கள்.. பரிசு வாங்கியதற்கு”
“நீங்கள் வாங்கவில்லையே..” என்றார் வருத்தமாய்.
“அடுத்த முறை நிச்சயமாய்”
பேசிவிட்டு ரிசீவரை வைத்தபோது ஒயர் என் கையில் மாட்டிக் கொண்டது.. தொலைபேசி என் முடிவிற்குக் கை குலுக்கியது போல!
– மே 2007