ஒரு கிராமத்தின் புதுக் கதிர்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2021
பார்வையிட்டோர்: 2,452 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“வாப்போ…வ்”

“வாப்போ…வ்”

தூரத்தேயிருந்த சிறார்களின் பிஞ்சுக் குரல்கள் பின்னிப் பிணைந்து, எதிரே மலை போன்ற கற்பாறையில் மோதி எதிரொலித்தபோது புல் வெளியெனக் காட்சிதந்த புதுக் கதிர்களுக்கு அவன் உரமூட்டிக் கொண்டிருந்தான்.

“கிடைக்கிறதே கொஞ்ச நஞ்ச றீர். அதிலதானே கதிர்கள் உயிர் வாழனும். ஒரு துளி நீரையேனும் விரய மாக்கினா என்ன ஆகும்?”

போன வருடம் மண் கவ்வின ஞாபகம் உறுத்தியது. முந்தின வருடம் மட்டும் என்னத்த அள்ளிக் கட்டியது. அதுக்கு முந்தியும்…

“ஒரு பக்கம் இப்பிடி. மறுபக்கத்தால சத்துராதி மிருக ஜாதிகளோட…”

இம்முறை முஸ்லிமீன் மிக்க கவனமாகக் கதிர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டி ஆவன செய்து கொண்டிருந்த போதுதான் அவனது இரு மழலைச் செல்வங்களின் அந்தப் பிஞ்சுக் குரல்கள்–

அவன் செவிகளைச் சிலிர்க்க வைத்தது.

அவர்கள் தூரத்தே வரம்பின்மேல் நின்று கொண்டிருந்தார்கள்.

அவர்கள் ஏன் வருகிறார்கள்? மனம் குழம்பியது.

ஒரு வேளை – பொங்கி வரும் ஆவலை அவனால் இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை.

“என்ன புள்ளகள் எங்க வந்த ஆ?”

“பள்ளியால காய்தம் வந்து கெடக்கு ஒன்ன வரட்டாம்”

பட்டென்று பேச்சுக்குரல் ‘கட்’டாகி வீட்டது. செய் தியை அறிவித்த களிப்பில் மகனும் மகளும் குதூகலத்துடன் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

“நெனச்சன் அராபாப் போவான்கள் எழுதுவான்கள் என்று”

பள்ளிவாசல் நிர்வாக சபையினரால் ஒரு நிருபம் வந்திருக்கிறதென்றால் வேறு என்னவாக இருக்கும். ‘பள்னி வாசல் கடிதம்’ எல்லாருக்கும் புரிந்து போன ஒன்று.

ஒருவர் நிர்வாக சபையின் சட்ட திட்டங்களுக்கு மாறாக நடந்துள்ளான் என்பதுதானே அதன் உள்ளடக்கமாயிருக்கும்.

இனி அதுபற்றி விசாரணை செய்ய வேண்டும். தீர்ப்பு வழங்க வேண்டும். ‘பத்வா’ கொடுக்க வேண்டும்.

நிர்வாக சபையைப் புறக்கணித்தவர்கள் என்னென்ன தண்டனைகள் பெறுவார்கள் என்பது, கிராமியப் பிள்ளைகள் இரண்டாம் வாய்ப்பாடு ஒப்புவிப்பது போல் மனப்பாடம்.

ஊரிலிருந்து புறக்கணிக்கப்படுவார்கள், ஒதுக்கப்படுவார்கள். ஊர் ஜமாத்வராது.

மார்க்கக் கடமைகளுக்கு, அனுஷ்டானங்களுக்கு, ஊர் கதீப் சமூகமளிக்க மாட்டார். அந்தச் சந்தர்ப்பங்களில் அவர் அசல் வெளிநாட்டுப் பொம்மை. பிறகு ‘காவின்’ என்று ஒன்று எழுதுவதாய் இருந்தாலும், ‘மையத்’ என்று ஒன்று விழுந்துவிட்டாலும் பெரிய வில்லங்கம்.

‘பள்ளியால’ கடிதம் வரவும், விசாரணை நடத்தவும், தண்டனை வழங்கவும், அவன் முஸ்லீமீன் என்ன செய்து விட்டான்?

நேற்று முந்தநாள் நடந்த நிகழ்ச்சி அவன் கண்முன்னே விரிகிறது.

பொழுது புலர்ந்தபோது வந்த மாட்டுக்காலி, மழைத் துளிகள் கூடப் படாமல் வரண்டு போய்க் கிடக்கிற வெட்ட வெளியில் மேய்ச்சலுக்கு வந்திருக்கின்றன,

காய்ந்த சருகுகள், இலை குழைகள், வயல் வரம்புகள், எப்போதோ சூடடித்துப் போட்ட ஒன்றுக்கும் உதவாத வைக்கோல் சிதறல்கள், இவற்றைத் தவிர என்றோ வெட்டிப் போட்ட மரங்கள், குப்பை கூளங்கள்…

“மேய்ச்சலுக்கு என்ன கெடக்கு?”

குளத்திலிருந்து நீர்ப்பாசனம் பெறும் வயல்களில் மட் டும், நெற்பயிர்கள் ‘ஊசிப்பயிராகி’, ‘ஓரெலைப் பயிர கி’ விரிந்து இப்போது உப்பட்டிப் பருவத்தை — கத்தை கத் தையாக தொங்கப் போகும் புதுக்கதிர்களாக…

நாளெண்ணிக் கொண்டிருக்கின்றன. அவை புதுக் கதிர் களாகச் செழிக்கத்தான் எத்தனை எத்தனை தடைகளும் சோதனைகளும்.

முஸ்லீமீனுக்கு அந்தப் பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும் போது தான் எள்வளவு பெருமிதம்.

யானைக் கூட்டம் வந்து அட்டகாசம் செய்யும். பன்றிகள் வயிறு புடைக்கத் தின்று குழிபறிக்கும். கீச் கீச் என்று எத்தனை வகையான பறவைக் கூட்டங்கள்.

வேலி ஒழுங்காகப் போடப்பட்டிருந்தாலும் ஊரிலுள்ள மாடுகள் எல்லாம் நாக்கிலிருந்து நீர் சொட்டச் சொட்ட அவற்றையே சுற்றிச் சுற்றி, வேட்கை தணிவதில்லை. முட் கம்பி வேலியையும், வயற்காவலையும் மீறிப்போக தருணம் பார்த்துக் கொண்டுதானிருக்கும்.

“முஸ்லிமீன் என்னத்த ற ஸ்டி காய்தம் அனுப்பிக் கெடக்காம்?” என்ற ஆக்ரோஜமான கேள்விக் குரலால், சிந்தனையிலிருந்து விடுபட்ட முஸ்லிமீனைச் சூழ்ந்து கொண்டது இளம் கூட்டமொன்று.

அவனே இன்னும் அம்மடலின் உள்ளடக்கத்தை அறிந்து கொள்ளவில்லை.

“வூட்ட போங்க, முழுகிட்டு வார” என்றவாறு அவர் களை அனுப்பிவிட்டு, வானத்தைப்பார்த்து மாலை ஐந்தரை என்பதை ஊகித்துக் கொண்டவனாய், மண்வெட்டியைத் தோளில் சாய்த்துப் பிடித்து, மறுகையில் ஓமலையும், சேர்ட் டையும் எடுத்துக் கொண்டு சற்றுத் தொலைவில் நடந்து, மெல்லியதாக சலசலப்பே இன்றி, ஊர்ந்து செல்லும் ஆற்றில் இறங்கினான்.

“ஓரடி கூடத் தண்ணிய காணமே!”

“ஜயசிங்க, ஜயசிங்க…பனிட்டுவ பொட்டத் தெனவாத?”

அக்குறணையான் காணியில் வேலை செய்யும் ஜயசிங்க வின் வாளியைக் கொண்டு வந்து இரண்டை அள்ளி ஊற் றிக் கொண்டான். நீருடன் குறுமணலும் வரத் தொடங் கின. உடம்பில் உள்ள மண் புழுதியும் வியர்வையும் போனால் போதும். மறுஹா நாளக்கி பள்ளிக்கொடத்துக் கிணற்றில் நல்லாய் முழுகி ஜும் ஆவுக்கும் விசாரணைக்கும் போறதுதானே.

ஒமல், சேர்ட் இத்தியாதிகளுடன், ஈரச் சாரனிலிருந்து நீர் சொட்டச் சொட்ட நடந்து சென்றான்.

அவனுடைய எட்டு மாடுகளும் பசுவும் கன்றும் காத் திருந்தன. அவன் வந்ததும் வராததுமாய் ‘காள காள’ என்று அதட்டி பின்னால் வந்து கொண்டிருந்த மாட்டின் பிருஷ்ட பாகத்தில் ‘பளீர்’ என்று ‘கெவிட்டியால்’ மெல்ல அடி அடித்ததும் தான் சுறுசுறுப்பாக நடக்க ஆரம்பித்தன. அவன் ஆகப் பின்னால் வந்து கொண்டிருந்தான்,

“சே! மாடுகள் எவ்வளவு சோர்வாக நடக்கின்றன” ஆனால் அன்று இவை இப்படியா போயின.

அன்று இருள் வெளிச்சத்தை விழுங்கிக் கொண்டிருந்த நேரம். யதேச்சையாக முஸ்லிமீனின் பார்வை கால் நடை களின் தள்ளிய வயிறுகளில் குத்திட்டு நின்றதும் அவன் வெலவெலத்துப் போய்விட்டான். தன்னை அறியாமலேயே கூவினான்.

“என்னத்த இப்படி வயிறு முட்டத் திண்டதென்று இப்படி சந்தோஷமா நடக்கிறீங்க”

அவை என்றைக்கும் இல்லாமல் வயிறு நிறைந்து மகிழ்ச்சியாகத் துள்ளு நடை போடும்போது, அவனுக்கும் அதில் பங்குண்டு என்பதுபோல் களிப்பில் ஆழ்ந்து போனான்.

“இப்ப பெரிய ‘பலாய்’ ஒண்டு வரப்போகுது”

இரண்டு வருடங்களுக்கு முன் மாட்டையும் பசுவையும் பக்கத்துக் கிராமத்திலிருந்து வாங்கிக் கொண்டு வந்தான்.

ஆனால் இப்படி வயிறாற ஆனந்தமாக இருந்ததை அவன் பார்த்ததில்லை.

சிந்தனைச் சுமையோடு வந்தவன், கையோடு மாடுகளை பட்டியில் கட்டிவிட்டுத் திரும்புகையில், வீட்டு முன்றில் ‘லாந்தர்’ விளக்குகளுடன் கூட்டமாக, மஃறிப் பிந்திய இருட்டு. உணர்ச்சி வசப்பட்டு கசமுசத்துக் கொண்டிருந் தார்கள்.

“என்ன முஸ்லிமீன் ஊரு குழம்பிக் கிடக்கு”

“…”

“இவன்களுக்கு ஒழுங்கா நடத்தத் தெரியாட்டி சபையைக் கலச்சிப் போடட்டுமே”

“சினனச் சின்ன விசயங்களுகுச் சபைக் கூட்டுறதும், விசாரிக்கிறதும்”

“ரோசம் கெட்டவங்கள் மாண்டுடுவான்கள்” இப்படி யாக மனதில் உள்ள வெறுப்பைக் கொட்டித் தீர்த்தார்கள்.

“அவசரப்பட்டு ஆத்திரப்பட வேண்டியதில்லை. எங்கட ஞாயங்கள் விசாரணையில சொல்லுவம்”

முஸ்லிமீன் அப்படிக் கூறினாலும் அவர்கள் அதிருப்தியுடன் திரும்பினர்.

சித்தீக்கும் இரண்டொரு இளைஞர்களும் மிஞ்சி இருந்தனர்.

“சித்தீக் எப்ப வந்த..?”

“காலையிலதான், நீ வயலுக்குப் போயிருக்காய் எண்டு உண்ட மனுஷி சொன்னா. எப்படி ஊரவர் நல்ல முன்னேற் றம்: எங்கள இப்பதான் புரிஞ்சிருக்காங்க”

“ஓ இன்னும் காலம் கெடக்கு”

“அது சரி படிப்பு எந்த மட்டில?”

“முடிஞ்ச பருவத்திலதான், இன்னும் மூன்று மாதத் தால சட்டத்தரணி இறுதிச் சோதனை”

“அப்ப அடுத்த வருஷம் எங்கட ஊரும் புதுப் பொலிவைக் காணப்போகுது. ஓ, ரெண்டொரு வாத்தியாரைக் கண்ட ஊரு. ஒரு சட்டத்தரனியையும், ரெண்டு கலைப் பட்டதாரிகளையும், ஒரு விவசாயப் பட்டதாரியையும் இந்த அனுராதபுர மாவட்டத்துக்கே பெருமைதான்.

இரவு நெடு நேரம்வரை கருத்துக்களைப் பரிமாறிவிட்டுப் பிரிந்தனர். நாளை பள்ளிவாசலில் விசாரணைக்காகக் கூடுவார்கள்.

ஊரிலும் ஒரே பேச்சாய் இருந்தது. “பள்ளியில் ஒரு மோதல் நடக்குமாம்”

வழக்கமாக ‘ஜும்மாவுக்கு’ வராதவர்களும் பிரசன்னமாயிருந்தார்கள்.

“ஊரைத் திருத்துறீங்க, திருத்துறீங்க எண்டு நாச மாக்குறீங்க”

முஸ்லிமீனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.

“முறைப்பாட்டுக்காரர் மரைக்காருடைய வயலில் மாடுகளை விட்டு அருமந்த கதிர்களை அழிச்சிப்போட்டீங் களே. இப்ப இருக்கிற கஷ்ட காலத்துக்கு இது பெரிய நட்டம். இன்னொரு பக்கத்தால் மன்னிக்க முடியாத குற்றம்.

“ஆர்ட குற்றம்? நீங்க வேண்டுமெண்டு சுமத்தர பழி தான் குற்றம். புதுக் கதிர்களை அழிக்கிற நோக்கம் …அது எங்களுக்கு இல்ல”

ஒவ்வொருவரும் இப்படி ஒவ்வொன்றைக் கேட்க, கூட்டம், விசாரணை ஒழுங்கு இல்லாமல் குய்யோ முறை யோவென்று குழம்பியது.

மரைக்கார் படு கோபத்தில் கத்துகிறார். “நா இருபத் தஞ்சி வருஷமா வெள்ளாமை செய்யிறவன்”

“நீங்க அம்பது வருஷமா வெள்ளாமை செஞ்சாலும் எங்களுக்கு ஒண்டும் இல்ல. ஊர் மாடு வெள்ளாமை அழிச்சதெண்டு விசாரணை- அப்ப காட்டிலிருந்து யானை களும், பன்றிகளும், கரடிகளும் வந்து அழிச்சிட்டு போகுது. அதுக்கு என்ன ஞாயம்?” இப்படியாகத் திரண்டு வந்தவர் களிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

கிட்டத்தட்ட முழுக் கிராமமும் முஸ்லிமீனுக்குச் சார்பாக இருந்தது.

“இந்த ரஸ்டி போர்ட் நிருவாகம் அர்த்தம் இல்லாம இயங்குது. கலச்சிப்போடுங்க”

“தண்டம் தண்டமென்று அறவிடுகிற காசு எல்லாம் யாரிட்ட கணக்கு வழக்கு கெடக்கு?”

“ஒவ்வொருவரும் தங்கட தங்கட இஸ்டம்போல காசு சேக்கப் போற, இருந்தாப்போல ஒன்றைச் சாட்டாகக் கொண்டு ஆ.. ஆ எண்டு கத்தினா அதோட சரி. அதுக் கெல்லாம் கணக்கு வழக்கு விசாரணை ஒண்டும் இல்ல. அதுக்குப் பொறகு ஒரு புதுத் தனாதிகாரி”

“அசரா”கும் வரை சத்தங்கள் ஓயவில்லை.

“அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்”

பாங்கொலி மூலம் நிசப்தம் நிலவியது.

‘அசர்’ தொழுகைக்குப் பின், தலைவர், செயலாளர், பொருளாளர் போன்றோர் அசடு வழியப் போய்க்கொண்டிருந்தார்கள்.

“இப்ப எல்லாத்துக்கும் கணக்கு வழக்கு எண்டு நிக்கிறான்கள்”

சில நாட்களுக்குப் பின் வாசகசாலையில் சித்தீக், முஸ் லிமீன், றபாய்தீன் ஆகியோர் கிராமத்தின் குறைபாடு களைத் தொகுத்து, தேசிய சபை உறுப்பினருக்கு ஒரு மகஜர் தயாரித்துக் கொண்டிருந்தபோது-

“வாப்போய்…வாப்போய்” அதைத் தொடர்ந்து சாலிஹீனின் கூவல்.

“அந்தா உண்ட வயலெல்லாம் யார் யார்ரேயோ மாடு புகுந்தாம். ஜயசிங்கன் மட்டும் தனியத் திரத்திக் கொண்டிருக்கிற வாங்க எல்லாருமா போவம்”

சாலிஹினின் அந்தக் குரலில் ஒரு புதுவகையான உணர்ச்சி இழையோடுவதைக் கண்டார்கள், முஸ்லிமீனும், சித்தீக்கும்.

“அல்லாவே எண்ட வயலை மாடு திண்டு போட்டுதா” என்று அவன் அவறவில்லை. மாறாக அவனுடைய வதனத்தில் மகிழ்ச்சிதான் மலரத் தொடங்கியது.

ஜயசிங்கன் தனியே திரத்திக் கொண்டிருக்கிறான்.

ஒரு சிலர் கேள்விப்பட்டவுடனே போய்விட்டனர்.

மற்றும் சிலர் பதறியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்.

சாலிஹீனும் வேறு சிலரும் விசயத்தை வயல் உடையக்காரனுக்கு அறிவித்துவிட்டு விரைகிறார்கள்.

ஆனால் அந்த ‘உடையக்’ காரனும் அவனது சகாக்களும் எவ்விதப் பதட்டமும் இல்லாமல், ஒருவகைத் தெளிவுடன் இறுதியாகப் போகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் ‘வாப்போவ் .. வாப்போவ்..’ முஸ்லிமீனின சிறிசுகள்.

– மல்லிகை — ஜூலை 1981.

– இரவின் ராகங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு : ஜூலை 1987, மல்லிகைப்பந்தல், யாழ்ப்பாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *