அவருக்கு பீமரதசாந்தி. அதான் சார் ஒருவருக்கு எழுபதாவது வயது தொடக்கம் செய்யும் சாந்தி.. பீமனுக்கும் அவன் ஏறிவரும் ரதத்திற்கும் இந்த பூஜைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. பீமரதன் என்பது ருத்ர சிவனுடைய அம்சங்களில் ஒன்றைக் குறிப்பது. அந்த ருத்ரனை வழிபடுவதும் பிரார்த்திப்பதும் மனிதர்களைத் துன்பங்களிலிருந்து காப்பாற்றுமாம். ஐதீகம் அப்படி. மனிதனுக்கு ஏற்படும் இடர்களின் வகைமூன்று. ஒன்று தானே ஏற்படுத்திக்கொள்வது, இரண்டு இயற்கை கொடுப்பது, மூன்று தெய்வக்குற்றத்தால் ஏற்படும் விளைவு என்பன.
ஆக பீமரத சாந்தியில் ஒரு பதினொரு பித்தளைக் கலசங்களில் புனித நீர் நிரப்பி வைத்துச் சிவனுக்குப் பூஜை செய்தார்கள்.
சதுரவடிவமாய் இருந்த சிமெண்ட் தொட்டி ஒன்றை நான்கு செங்கல்களுக்கு மேலாக வைத்துப் புரோகிதர்கள் நீண்ட நேரம் ஹோமம் செய்தார்கள். தமிழில் அச்சடிக்கப்பட்ட சமஸ்கிருத மந்திரங்களை அவர்களுக்குத் தெரிந்தவரை சரியாகப்படித்தார்கள். யாரேனும் குறுக்கே பாய்ந்து அவர்களைக் கேள்வி ஏதும் கேட்டுவிடவா போகிறார்கள். அதுதான் என்றும் இல்லையே..
நிகழ்ச்சிக்கு வந்திருந்த நெருங்கிய பந்துக்கள் அவரைச் சுற்றிலும் அமர்ந்திருந்தார்கள். அவர் மேடையில் பஞ்சக்கச்சம் கட்டி அமர்ந்திருந்தார். அவர் தரைமீது மணைபோட்டு அமர்ந்திருக்க அவர் மனைவி நாற்காலியில் அமர்ந்திருந்தாள். பெண்களுக்கு வயது ஐம்பது ஆயிற்றோ என்னவோ கால் மூட்டு வலி ’இதோ உன்னைவிட்டேனா பார்’ என்று வந்து தொற்றிக்கொள்கிறது. தரையில் அமர்வதும் சம்மணமிடுவதும் மூச் எங்கே அவர்கள் நினைத்துப்பார்ப்பது.
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிற்று என்றால் அஸ்தியில் ஜுரம் காணும் சென்னைப் புறநகர் வீட்டு வாழ்க்கை. நூறாண்டுகளாய்ப் பெய்யாத பேய்மழை அல்லவா அன்று சென்னையில் கொட்டியது. மனித உயிர்கள் ஐநூறு வெள்ளத்தில் கொள்ளைபோயிற்று. வீதிகள் ஆறுகளாயின. படகுகள் மனிதர்களைச்சுமந்து சென்றன. ஆகாயத்தில் ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து வட்டமிட்டன.கோடி கோடியாய் பொருள்கள் நாசமாயின. அந்த 2015ல் யாரோ ஏரியின் ஷட்டரை சரியாகத் திறந்தார்களோத் தவறாகத்திறந்தார்களோ தரைதள வாசிகளின் வீட்டு ஜாமான்கள் மொத்தமாய் வெள்ளத்தில் அடித்து கொண்டுபோனது.
தரை தளத்தில் மட்டும்தான் வீடு என்று சொல்லும்படிக்கு அவருக்கு சிறிய அளவில் ஒரு வாழ்விடம் இருந்தது. அதுவும் சென்னைப்புறநகர்பகுதியில். இனி இது சரிப்பட்டுவராது. கனத்த மழைக்காலம் வந்தால் தரைதள வீடு ஓன்றுக்கும் உதவாது. ஆக முதல் தளத்தில் ஒரு இருப்பிடம் கட்டிக்கொண்டார். கடனோ உடனோ போட்டுத்தான் அந்தக் காரியம் ஆனது.
கீழ்வீட்டை சொற்ப வாடகைக்கு ஆட்டோ ஓட்டுபவனுக்கோ சுண்ணாம்பு அடிப்பவனுக்கோ இல்லை ஊறுகாய் வியாபாரம் செய்பவனுக்கோ வாடகைக்கு விட்டிருந்தார். முதல்தளத்தில் அவர் ஜாகை. இரண்டாம் தளத்தில் ஒரு சிறிய ரூம் போட்டார். எதாவது படித்துக்கொண்டே இருப்பது அவர் பழக்கம். ரிடையர் ஆனபிறகு அது மட்டுமேதான் அவர் திருப்பணி.. சில சமயங்களில் அவரும் கவிதை கதை என்று எழுதி எழுதிப்பார்ப்பார். சில பிரசுரமாகும். பல தோற்றும் போகும். பிரசுரமானதையெல்லாம் ஒன்றாய்ச்சேர்த்துத் தெரிந்த பதிப்பாளர்களிடம் கொண்டுபோவார். சில பள பள என்று புத்தகங்களாயின. ஒன்றிரெண்டு நூல்கள் அவருக்குப் பரிசு பெற்றுத்தந்தன. இந்த இரண்டாம் தளத்தில் அவர் போட்ட நூலக அறையில் சென்னைப்புத்தகக்காட்சியில் வாங்கிய புத்தகங்களும் ஷெல்ஃபில் அடுக்கப்பட்டுக்கிடந்தன. பெற்ற ( வாங்கிய இல்லை) பரிசுகளும் சான்றிதழ்களும் அங்கே கொலுவிருந்தன.
பீமரத சாந்தி எங்கே வைத்துக்கொள்வது. கீழ்தளமோ ஊறுகாய் விற்பவனிடம் வாடகைக்கு விட்டாயிற்று. பெரிதாக வாடகை வருவாய் எல்லாம் இல்லை. வீட்டைக் கூட்டிப்பெருக்கி வைத்துகொண்டால் போதும். அதுவே ஒரு பெரிய ஒத்தாசை. அப்படித்தான் நினைத்துக்கொள்வார். தான் குடித்தனம் நடத்தும் முதல் தளத்தில் மணைபோட்டு இருவர் உட்கார்வதற்கெல்லாம் இடம் ஏது. ஹோமங்கள் எங்கே செய்வது. வீடென்றால் டைனிங் டேபிள் ஃபிரிட்ஜ் வாஷிங் மெஷின் துவைக்கக் காத்திருக்கும் பழந்துணிகள் திணிக்கப்பட்ட உயரவாட்டு மூடி போட்ட பிளாஸ்டிக் கூடை இருக்கவே இருக்கிறது. இரும்புக்கட்டில் ஒன்று வீட்டின் தரையைப் பாதிக்குமேல் அடைத்துக்கொள்கிறது. ஆக இரண்டாம் தளத்தில்தான் அவர் நேசிக்கும் புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கும் ஷெல்ஃப்கள் சிலதுக்கு மத்தியில் அந்த ஹோமகுண்டம் ஏற்பாடானது. அவரால் அது வேண்டாம் என்று சொல்லத்தான் முடியுமா? வாடகைக்குக் கல்யாண மண்டபம் பார்த்து நிகழ்ச்சியை நடத்திவிடலாம் என்று திட்டம் இருந்ததுதான். அவர் வசிக்கும் பகுதி அருகே இருக்கும் பத்மாவதி, விஜய கிருஷ்ணா, விஜய ரமணி என்று வரிசையாய் இருந்த கல்யாண மண்டபங்கள் இந்த மாதம் முழுவதும் புக் ஆகிவிட்டன.
இந்த மாதமோ மார்கழி. ஜனங்கள் செய்யும் கல்யாணங்கள் ஏதும் இல்லை. ராதாகல்யாணம் சீதா கல்யாணம் என்று கடவுளர்களின் கல்யாணம் இவை இவை மட்டுமே . கோவில்களில் மடங்களில் அவை நிகழ்ந்து கொண்டிருந்தன.. திருப்பூர் ஜவுளி விற்பனையாளர், ஹோம்நீட்ஸ் சாமான்கள் போணி செய்வோர், எதுவும் எடு கொடுப்பா ரூபாய் நூறு என்று ஷாப் சாமான்களை விற்பனை செய்யும் ஆட்கள், உள்ளூர் கல்யாண மண்டபங்களை தங்கள் பிடியில் வளைத்துப்போட்டு விட்டார்கள். ஆகத்தான் சொந்த வீட்டிலேயே வைபவத்தை அவர் வைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. விழாவும் சுருங்கித்தான்போனது.
நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அவர் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களை பெற்ற பரிசுகளைப்ப்பார்த்து ஏதும் கேட்பார்கள் என அவர் கள்ளமாய் நினைத்ததுண்டு. வெளியில் இதையெல்லாம் சொல்லி ஒன்றும் ஆகாது. அவரும் மனிதர்தானே. எல்லா புத்தகங்களையும் தூசு தட்டித் துடைத்து துடைத்து வைத்தார்.
சாந்தி ஹோமங்கள் நடந்தன மந்திரபுஷ்பம் ருத்ரம் சமுகம் ஸ்ரீசூக்தம் புருஷ சூக்தம் துர்கா சூக்தம் எனப்படித்தார்கள். பாட்டரி பொறுத்தப்பட்ட பாக்கெட் மின்விசிறியை எடுத்து வந்த ஒரு புரோகிதர் அக்னியை அடிக்கடி கொழுந்து விட்டெறியச் செய்தார். இங்கு விசிறிமட்டைக்கெல்லாம் அவசியமே இல்லை. ஆயுள் பெருக மிருத்யஞ்சனை வணங்கி மந்திரம் சொன்னார்கள். சூரியன் தொடங்கி ராகு கேது ஒன்று பாக்கி இல்லை நட்சத்திரங்கள் இருபத்தேழையும் பாடிப்பாடி அழைத்தார்கள் வணங்கினார்கள். எல்லாம் அறிந்த பெரியோனுக்கு வடமொழியில் தப்பும் தவறுமாய் புரோகிதர்கள் மந்திரம் சொன்னாலும் திருப்தியாய் இருக்குமாம்.
அர்த்தம் இன்னது என்று தெரியாமல் வடமொழி மந்திரம் சொல்லும் ஒரு பார்ப்பனன் மந்திரம் சொல்வதை விட்டு விட்டுக் கத்தியை எடுத்துக்கொண்டு சிரைக்கப்போகலாம் என்பார் மாகவிபாரதி. ஆகத்தான் அவாளுக்கு அந்த பாரதிமேல் தீராக்கோபம் என்றும் கேள்வி. கோபம் ரோசம் எல்லாம் பார்த்தால் வயிறு நிரம்புமா என்ன?
வடமொழியைக்கூட பிற சாதியினர் படிப்பது கூடாது என்பது ஒருகாலத்து நியதியாய் இருந்ததாம். அவாள் செய்யும் பித்தலாட்டம் பிறர் யாருக்கும் தெரியாமல் இருக்கவேண்டுமே அதற்காகவும் இருக்கலாமோ..
யார் வீட்டிலிருந்தோ இரவல் வாங்கிவந்த பித்தளை சல்லடையைவைத்து அவருக்கும் அவர் துணவிக்கும் குடமும் சொம்புமாய் புனித நீர் ஊற்றினார்கள். உற்றார் உறவினர்கள் போட்டி போட்டுக்கொண்டு சொம்பைத்தூக்கிக்கொண்டு வரிசையாய் நின்றார்கள். போட்டோக்கள் வீடியோக்கள் தமது பணியை விடாமல் நிகழ்த்தின. மந்திரங்கள் முழங்கின. கை மைக் வந்துவிட்ட பின்னால் இந்தப் புரோகிதர்களுக்குத் தான் எவ்வளவோ ஜபர்தஸ்து, சவுகரியம்.
தசதானங்கள், தம்பதி பூஜை, மங்கல்யதாரணம் என மொழிப்பணம் ஓதிவிடுதல் வரை தொடர்ந்து நிகழ்ச்சி போய்க்கொண்டே இருந்தது. வயதில் பெரியவர்கள் நான்கு பேர் பீமரதசாந்தி செய்துகொண்ட தம்பதியர்க்கு ஆசி சொன்னார்கள். பிறருக்கோ அத்தம்பதியினர் ஆசிர்வாதம் செய்தார்கள். நெற்றியில் விபூதியும் குங்குமம் வைத்து விட்டார்கள்.
புரோகிதருக்கு ரொக்கமாய் பேசிய தட்சிணை கொடுத்தாயிற்று. பணம் எவ்வளவு என்று மட்டும் கேட்காதீர்கள். மணி ட்ரான்ஸ்ஃபர், செக்காய் கொடுப்பது, கூகுள்பே, பேடிஎம், எதுவும் கூடாது. கேஷாக மட்டும்தான் தர வேண்டும் இது கட்டாயம் கூட.
இரண்டு ஏடிஎம் கார்டு வைத்துக்கொண்டு இரண்டு நாள் அலைந்து பச்சையும் சிவப்புமாய் நோட்டுக்கள் கேஷாக எடுத்து வந்து அந்தப்புரோகிதர் தட்சிணைக்குத் தயாராய் வைத்திருந்தார் அவர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த யாரும் அவரை அடுக்கியிருந்த புத்தகங்கள் பற்றிக்கேட்கவே இல்லை. லட்சம் லட்சமாய் சம்பளம் வாங்கும் ஆட்களும் நிகழ்ச்சிக்கு வந்தார்கள்தான். அவர் பெற்றிட்ட பரிசு, விருது பற்றி யாரும் மருந்துக்கும் விசாரிக்கவும் இல்லை.
மெத்தப்படித்தவர்கள். ராங்கும் மெடலும் வாங்கியவர்கள்தான். அவருக்கு அவர்களைத்தெரியாமல் என்ன. வெளிநாட்டில் வேலை செய்வோரும் டாலர் டாலராய் ஊதியம் வாங்கிக் கொள்பவர்களும் வந்தவர்களில் இருக்கவே செய்தார்கள்.
செய்தபாவத்தை எல்லாம் இறக்கி விட நல்லெண்ணெய் நிரப்பிய இரும்புச் சட்டியில் அவரும் அவர் துணைவியாரும் முகம் பார்த்தனர்.
‘ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்தா போல எண்ணெய பார்க்கணும்’ புரோகிதர் தம்பதியர்க்குக் கட்டளை தந்தார்.
ஐநூறு ரூபாயும், இரும்பு வாணாவும் அவர் குடும்பம் பண்ணிய பாவங்கள் மொத்தமும் இறங்கிய அந்த நல்லெண்ணையும் சனீஸ்வரப்ப்ரீதி என்று சொல்லி தானம் வாங்கிக்கொண்டார் ஒரு தலை நரைத்தமுதியவர். அவரே பீமரத சாந்தி செய்துகொண்ட பெரியவரிடம் வந்து
‘சார் ரைட்டர் போல. நா உங்களோடது சிலதுகள் படிச்சுமிருக்கேன் ரொம்ப சந்தோஷம்’ என்றார்.
‘எண்ண சட்டிய தானம் வாங்கிண்டவா திரும்பி பாக்காம உடனே எடத்த காலி பண்ணிடணும். கிரகஸ்தாள்ட்ட எல்லாம் பேசிண்டும் ஈஷிண்டும் இருக்கப்படாது’ புரோகிதர் சத்தமாய்ச்சொன்னார். முதியவர் கட கட என அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
’ஏதோ ஒருத்தர் இருக்கார்.போறுமே’ அவர் சொல்லிகொண்டார். மனம் நிறைவாகியது அவருக்கு.