ஒயிட்காலர் திருடர்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 8,938 
 

சுகந்தி எம்.பி.ஏ., ஹெச்.ஆர். முதல் வகுப்பில் தேறியவள். கடந்த இரண்டு வருடங்களாக சென்னையிலுள்ள ஒரு பிரபலமான மல்டி நேஷனல் ஐ.டி. நிறுவனத்தில் மற்றொரு ஏஜென்ஸி மூலமாக அவுட்சோர்சிங் செய்யப்பட்டு மிகக் குறைந்த சம்பளத்தில் ஹெச்.ஆர் டிப்பார்ட்மெண்ட்டில் வேலை செய்கிறாள்.

பெரிய பெரிய மல்டி நேஷனல் நிறுவனங்கள் தங்களுடைய பெரும் பாலான சப்போர்ட் துறை சேர்ந்த பதவிகளை குறைந்த சம்பளத்திற்கு அவுட் சோர்சிங் செய்து விடுவதை ஒரு யுக்தியாகவே கடை பிடிக்கின்றன. இதற்காகவே நிறைய இந்திய நிறுவனங்கள் பெரும் பணம் பெற்றுக் கொண்டு மல்டி நேஷனல் நிறுவனங்களுக்கு திறமையானவர்களை சப்ளை செய்யும் ஏஜென்சிகளாக இயங்குகின்றன. இது ஒரு விதத்தில் மிகப் பெரிய உழைப்புச் சுரண்டல்.

வேலைப்பளு அதிகம் உள்ள ஒரு நிரந்தர காலியிடத்துக்கு மிகக் குறைந்த சம்பளத்தில் அதுவும் ஏஜென்சிகள் மூலமாக திறமையான ஆட்களை அமர்த்திக்கொள்ளும் சாமர்த்திய உழைப்புச் சுரண்டல்கள் மிகச் சமீப காலங்களில் அதிகமாகிவிட்டன.

அதுவும் மல்டி நேஷனல் நிறுவனங்களில் இந்தச் சுரண்டல்கள் அதிகமாகி, குறிப்பாக அக்கவுண்ட்ஸ், அட்மினிஸ்ட்ரேஷன், ஹெச்.ஆர் போன்ற சப்போர்ட் துறைகளை முழுக்க முழுக்க அவுட் சோர்சிங்கில் விட்டு விடுகிறார்கள். இவர்கள் ஒயிட்காலர் திருடர்கள். இதை இந்திய லேபர் டிப்பார்ட்மெண்ட்டும் கண்டு கொள்வதில்லை.

அவுட்சோர்சிங் செய்துவிட்டால் சம்பளம் குறைவு, போனஸ் மற்றும் இதர வசதிகள் கிடையாது. பிடிக்காது போனால் கழட்டிவிட்டு வேறு ஒருவரை அதே அவுட்சோர்சிங் ஏஜென்ஸி மூலம் எடுத்துக் கொள்ளலாம்… போன்ற கள்ளத்தனமான செளகர்யங்கள் இதில் அதிகம்.

சுகந்திக்கு இது மிகப் பெரிய மனக்குறை. அதே வேலைக்கு ஐ.டி. நிறுவன ஊழியர் வாங்கும் சம்பளத்தைவிட தன் சம்பளம் மிகக் குறைவு என்பது தவிர, மாற்றான் தாய் மனப்பான்மையோடு தான் நடத்தப் படுவது அவளை மிகவும் நோகடித்தது. நேரில் பார்க்கும்போது இனிக்க, இனிக்க பேசுவார்கள். இவளிடம் நிறைய வேலை வாங்கிக் கொள்வார்கள். நிரந்தர வேலைப்பளு உள்ள ஒரு பதவிக்கு சுகந்தி அவுட் சோர்சிங் ஏஜென்ஸி மூலமாக எடுக்கப்பட்டதால் கொத்தடிமை போல நடத்தப் பட்டாள்.

மற்ற அனைவருக்கும் ஒன்றாம் தேதியே சம்பளம் வந்துவிட்டதாக வங்கியிலிருந்து குறுஞ்செய்தி வரும். சுகந்தி மட்டும் மாதா மாதம் பத்தாம்தேதிவரை காத்திருந்து பின் எட்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு சின்ன கட்டிடத்தின் பேஸ்மேன்டில் அமைந்திருக்கும் ஏஜென்ஸி ஆபீஸுக்கு நேரில் சென்று சம்பள செக் வாங்கிக் கொள்ள வேண்டும்.

நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு பொதுவான ஈ மெயில் சீ.ஈ.ஓ விடமிருந்து வரும். ஆனால் இவள் நிறுவன ஊழியர் அல்லாததால் அந்த மெயில் இவளுக்கு வராது. அனைவரும் சுகந்தியை தவிர்த்துவிட்டு பிக்னிக் போவார்கள், ஆப்சைட் போவார்கள். இவள் தனித்து விடப்படுவாள். அனைவருக்கும் போனஸ் வரும். இவளுக்கு ஒன்றும் கிடையாது. இம்மாதிரி ஏஜென்ஸி மூலமாக வேலை செய்யும் எவருக்குமே ஒரு நிரந்தர தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். அது சுகந்திக்கும் நிறைய இருந்தது.

இவ்வளவு இருப்பினும் சுகந்தியிடம், “நீ எங்கு வேலை செய்கிறாய்?” என்று எவராவது கேட்டால் இதே மல்டி நேஷனல் நிறுவனத்தின் பெயரைத்தான் பெருமையுடன் சொல்லி பீற்றிக் கொள்வாள். அவுட் சோர்சிங் பற்றி வாயே திறக்க மாட்டாள்.

கடந்த தீபாவளி முடிந்ததும் சென்னையில் தொடர்ந்து பெருமழை பெய்தது. சென்னை வெனிஸ் நகரமாக மாறி, தண்ணீரில் மிதந்தது. டிசம்பர் ஒன்பதாம் தேதி அடித்த கன மழையில் இவளது நிறுவனத்தினுள் தண்ணீர் புகுந்து விட்டது. அதனால் இரண்டு நாட்கள் விடுமுறை என ஈ மெயில் மூலமாக அறிவித்தார்கள். அது சுகந்திக்கும் போனில் சொல்லப்பட்டது. அந்த இரண்டு நாட்களைத் தொடர்ந்து சனி, ஞாயிறு வந்ததால் மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறையாகிவிட்டது.

ஐந்தாம் நாள் காலை வெள்ளத்தைக் கடந்து மிகவும் சிரமப்பட்டு சுகந்தி தன் அலுவலகத்தை அடைந்தாள். ஹெச்.ஆர் ஹெட் நளினியைத் தவிர வேறு யாருமே ஆபீஸ் வரவில்லை. லேப்டாப்பில் மூழ்கியிருந்த நளினி இவளைப் பார்த்து, “ஹாய் சுகந்தி எங்க இந்தப் பக்கம்?” என்றாள்.

“ஏன் இன்னிக்கு ஆபீஸ் கிடையாதா?”

“ஓ காட்…. எஸ் உனக்குத் தெரியாது இல்ல….நீ அவுட்சோர்ஸ்டு கேண்டிடேட். போன வெள்ளிக்கிழமையே எல்லாருக்கும் மெயில் அனுப்பிச்சு, மெயில் கிடைக்காதவங்களுக்கு மொபைல்ல சொல்லி ஆப்ஷன் குடுத்துட்டோமே”

“என்ன ஆப்ஷன்… எனக்கு புரியல நளினி…”

“அதாவது நம்முடைய ஹைதராபாத், பெங்களூர், பூனே ஏதாவது ஒரு ஆபீஸ்லர்ந்து அடுத்த இரண்டு மாசத்துக்கு ஒர்க் பண்ணலாம்னு ஆப்ஷன் குடுத்துட்டோம்…இன்னிலேர்ந்து ஏற்கனவே நிறைய பேர் ஒர்க் பண்ண ஆரம்பிச்சாச்சே..”

“அப்படியா…. அப்ப நான் ?”

“டு பீ வெரி ஓப்பன், உன்ன பத்தியே நாங்க நெனச்சுப் பார்க்கல சுகந்தி…நீ பேசாம உங்க ஏஜென்சியைப் போய்ப் பாரு…தே வில் டெல் யு.”

முட்டிக்கொண்டு வந்த அழுகையை அடக்கிக்கொண்டு, “எனக்கு நவம்பர் மாத சம்பளமே இன்னும் வரல நளினி” என்றாள்.

“அதான் சொன்னேனே… ஐ ஹாவ் டு சரண்டர் யு டு த ஏஜென்ஸி சுகந்தி, நீ உடனே அங்க போ… நிலைமை சரியாகி ஆறு மாசத்துக்கு அப்புறமா வா பார்க்கலாம்.”

மழை வெள்ளத்தில் மிகுந்த சிரமப்பட்டு ஒரு போட்டில் ஏறி சுகந்தி அந்த ஏஜென்சிக்கு சென்றாள். ஓ காட்… முதல் தளம் வரை நீரில் அந்தக் கட்டிடம் மூழ்கடிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த சுகந்திக்கு உடம்பும் மனசும் சோர்ந்து போயின.

மிகுந்த பதட்டத்துடன் மறுபடியும் ஆபீஸ் வந்து நளினியைப் பார்த்தாள்.

“நளினி, ப்ளீஸ் நீங்கதான என்னோட பிரின்சிபால் எம்ப்ளாயர்…எனக்கு என் சம்பளம் வேண்டும்…எனக்கு இப்ப சம்பளம் கொடுத்துட்டு அப்புறமா எஜென்சிகிட்ட அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.. ப்ளீஸ் ஹெல்ப் மீ..”

“சுகந்தி, ரூல்ஸ் பேசி டோன்ட் வேஸ்ட் மை டைம்…எனக்கு நிறைய வேலை இருக்கு யு மே கோ”

சுகந்தி மனசும் உடம்பும் தளர்ந்துபோய் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு வந்தாள்.

மறுநாள்….

சுகந்தி லேப்டாப்பை திறந்து வைத்து அதில் நோக்ரி, மான்ஸ்டரில் வேறு வேலை தேட புகுந்தாள். அப்போது அவள் மொபைல் அடிக்கப்பட நளினியின் பெயர் அதில் ஒளிர்ந்தது.

ஒருவேளை தனக்கு சம்பளம் தருவாளோ… அல்லது உடனே வேலைக்கு வரச் சொல்லுவாளோ..?

மிகுந்த ஆவலுடன், “குட்மார்னிங் நளினி” என்றாள்.

“ஏய், சுகந்தி… உன்கிட்ட நம்ம கம்பெனி லேப்டாப், டேட்டா கார்ட், ஹெட் போன் இருக்கிறது… அத உடனே சரண்டர் பண்ணிடு.”

“நீ என் ஏஜென்சிகிட்ட கேட்டு வாங்கிக்க நளினி..”

“ஹெச்.ஆர்ல இருந்துதான இதெல்லாம் உனக்கு இஷ்யூ பண்ணோம்… நீ திருப்பி தரலேன்னா போலீசுக்கு போக வேண்டியிருக்கும்..”

“தாராளமா போ… என் சித்தப்பாதான் போலீஸ் கமிஷனருக்கு பி.ஏ..”

மொபைலை துண்டித்தாள்.

அதுசரி… நிர்வாண உலகத்தில் சுகந்தி மட்டும் எதற்கு உடையணிய வேண்டும்?

Print Friendly, PDF & Email

1 thought on “ஒயிட்காலர் திருடர்கள்

  1. நானும் சுகந்தி மாதிரி ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் ஐந்து வருடங்கள் ஏமாந்தேன். என்னை ஒரு தெருநாய் மாதிரி நடத்தினார்கள். இந்தக்கதை படித்தபோது நான் அழுதேன், வேதனைப்பட்டேன். சுகந்திக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். .
    நிர்மலா சந்திரசேகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *