ஒன்றை கடன் வாங்கு!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 15,555 
 

ஓட்டு வளையத்தைத் தொட்டுக்கொண்டிருந்தால், கார் தானாகவே ஓடும் என நினைக்கும் வயது எனக்கு. எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். ஒரு ஐஸ்கிரீமுக்காக உலகத்தில் எதையும் செய்வேன். வட்ட வடிவமான கிளாஸ் ஒன்றில் ஐஸ்கிரீமை நிரப்பி, அதற்கு மேல் மென்சிவப்புப் பழம் ஒன்றை வைத்துத் தரும்போது, அலங்காரத்தோடு ருசியும் அபாரமாக இருக்கும். பொய்யும் அப்படித்தான். அதைச் சொல்லும்போது உண்மைத் துளி ஒன்றையும் கலந்துவிட வேண்டும். சிறந்த பொய், அப்படித்தான் உண்டாக்கப்படுகிறது. இந்த உண்மை, எனக்கு நான்கு வயதிலேயே தெரிந்துவிட்டது. ஒரு பொய் சொல்வதில் ஏற்படும் த்ரில்லும், வேடிக்கையும், விளையாட்டும், மகிழ்ச்சியும், எனக்கு வேறு எதிலுமே கிடைப்பது இல்லை.

எங்கள் வீட்டு விதிகள் குழப்பமானவை. வாய்க்கு ருசி இல்லாதது என ஒன்று இருந்தால், அது உடம்புக்கு நல்லது. வேப்பெண்ணெய் நல்லது, பாவக்காய் நல்லது, வல்லாரைக் கீரை மிகவும் நல்லது. ஆனால், இவற்றை வாயில் வைக்க முடியாது. ஐஸ்கிரீம் நல்ல ருசியாக இருக்கும். சாக்லேட் சுவையானது. சீனிமுறுக்கைச் சாப்பிட்டால், நிறுத்தவே முடியாது. ஆனால், இவற்றுக்கு எல்லாம் தடை.

வீட்டிலே செய்யும் சீனிமுறுக்கு, உயரத்திலே டின்னிலே அடைத்துப் பாதுகாக்கப்படும். இருப்பினும், எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும். நான் களவாடிச் சாப்பிடும் வேகத்தை பார்த்து தம்பி சொல்வான் ‘மெதுவாகச் சாப்பிடு. இந்த ஸ்பீடில் சாப்பிட்டால், முறுக்கு மூளைக்குள் போய்விடும்.’ பிடிபட்டால் கைவசம் என்னிடம் பொய் இருக்கிறது.

பொய்களை சோடிப்பதில் ஒரு முறை உண்டு. பள்ளிக்கூட வகுப்பு வாத்தியாரிடமும் நிறையப் பொய்கள் சொல்வேன். பெரிய திட்டம் எல்லாம் போடுவது கிடையாது. அவர் ஏதாவது கேட்டு, நான் வாய் திறந்ததும் பொய்யாகவே வரும். இயற்கையாக அது நடந்தது. மிக அரிதாகப் பிடிபட்டு, அடி விழுந்ததும் உண்டு. ஆனால், பிடிபடாத சமயங்களில் அது கொடுக்கும் த்ரில்லும், வேடிக்கையும், மகிழ்ச்சியும் தொடர்ந்து பொய் பேசத் தூண்டியது.

‘ஏன்டா வீட்டுப்பாடம் செய்யலை?’ என்பார் வாத்தியார்.

‘ஆடு சாப்பிட்டுவிட்டது’ என்றதும் நம்பிவிடுவார்.

வீட்டில், ‘ஏன் இவ்வளவு பிந்தி வாறாய்? உன் தம்பி அப்போதே வந்துவிட்டானே!’ என அம்மா கேட்பார்.

’12 மணி பூஜையின்போது பத்மநாப குருக்கள் மயங்கி விழுந்துவிட்டார்’ – நான் சொன்னதில் ’12 மணி’ என்பது மட்டும்தான் உண்மை.

என் வாழ்க்கையில் முக்கியமான பல விடயங்கள் என் ஒன்பது வயதில்தான் நடந்தன. ஒருநாள் காலை, வயிற்றுவலியால் அம்மா துடித்தார். அப்பா இடி முழக்கக் குரலில் என்னைக் கூப்பிட்டார். அவ்வப்போது அவர் கத்தும்போது எதிரொலிகூடக் கேட்பது உண்டு. ‘ஓடு… ஓடு… மருத்துவச்சி வீட்டுக்குப் போய், அவளைக் கையோடு கூட்டி வா’ எனக் கட்டளையிட்டார். பள்ளி உடை, வீட்டு உடை, வெளி உடை, இரவு உடை எல்லாமே எனக்கு ஒன்றுதான் என்பதால், அப்படியே புறப்பட்டேன். வீட்டில் இருக்கும்போதுதான், நான் சோம்பேறி; வெளியே புறப்பட்டால், ஓட்டம்தான்.

போகும் வழி எல்லாம் புளியமரங்கள் இரண்டு பக்கங்களும் காய்த்து நின்றன. கைக்கு எட்டிய புளியங்காய்களைப் பறித்துச் சாப்பிட்டேன். கறையான் புற்றுகள் வேலி ஓரத்தில் என்னிலும் பார்க்க உயரமாக வளர்ந்துகிடந்தன. முந்தாநாள், பாம்பு ஒன்று வெளியே வந்ததைப் பார்த்திருந்தேன். வேகமாக அந்த இடத்தைக் கடந்த நான், சட்டென நிற்கவேண்டி நேர்ந்தது. சொறிநாய் ஒன்று நிலத்தை முகர்ந்தபடி நின்றது. அந்த வீதி, அதற்குச் சொந்தமானது. பல தடவை என்னைத் துரத்தியிருக்கிறது. மேல் கண்களால் என்னைப் பார்த்து ‘உர்…’ரென்றது. ஓடினால் நிச்சயம் துரத்தும். உயரமான கிழவர் ஒருவர் தன் கையில் கோழி ஒன்றை தலைகீழாகத் தொங்கவிட்டபடி, அந்தப் பக்கம் வந்தார். நான் அவருடைய மற்றொரு கையைப் பிடித்துக்கொண்டு நடந்தேன். நாய், பகையை மறந்து தன்னை நக்கியபடி போய்ப் படுத்தது.

கிழவர் என்னைக் குனிந்து பார்த்தார். கழுத்தை முறித்து பின்னுக்கு வளைத்து ஒரு விமானத்தைப் பார்ப்பதுபோல நான் அவரைப் பார்த்தேன். வெகுதூரத்தில் தெரிந்தார். அவர் உதடுகள் அசைந்து நிறுத்திய பிறகுதான் வார்த்தைகள் என்னிடம் வந்தன.

”உனக்கு என்ன வயசு?” என்றார்.

வழக்கமாக எல்லோரும் பெயரைத்தான் கேட்பார்கள். நான் ”பன்னிரண்டு” எனச் சொன்னேன். அவர் அதிசயப்படாததால் நம்பிவிட்டார் என்றே நினைக்கிறேன்.

”உங்களுக்கு என்ன வயது?” என்றேன்.

”என்னிடம் மூன்று வேட்டிகள் இருக்கின்றன. ஒரு சட்டை, இரண்டு சால்வைகள். ஓர் உத்தரீயம். ஒரு மாடு, நான்கு ஆடுகள், ஒரு சோடி செருப்பு, ஒரு குடை. இவைதான் கணக்கு. யாராவது திருடினால், உடனே எனக்குத் தெரிந்துவிடும். வயதைக் கணக்கு வைப்பது இல்லை. அதை யார் திருடப்போகிறார்கள்?” – கைதட்டலுக்கு நிறுத்துவதுபோல பேச்சை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார். இப்படி ஏமாற்றிவிட்டாரே! இனிமேல் நானும் என் வயதைச் சொல்லக் கூடாது.

”நீ யாருடைய மகன்?”

”வினாசித் தம்பி” என்றேன். அந்தப் பெயர்தான் உதட்டிலே அந்தக் கணம் உதித்தது.

”வினாசித் தம்பியா… அப்படி யாரும் இங்கே இல்லையே?” – அவர் குரல் சன்னமாக ஒலித்தது.

ஒன்றை கடன் வாங்கு

நான் 100 அடி தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் ரயில் கேட் மூடி இருந்தது. ரயிலில் நான் பயணம் செய்தது கிடையாது. பறவை பறப்பதிலும் பார்க்க வேகமாக அது ஓடும் எனக் கேள்விப்பட்டிருந்தேன். ஓர் ஊர்வலத்தைப் பார்ப்பதுபோல எந்தக் காலநிலையிலும் எந்த நேரத்திலும் ரயில்வண்டியைப் பார்த்துக்கொண்டே நிற்கலாம். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ரயிலைப் பார்ப்பதற்காக சனங்கள் கூடி நின்றனர். ‘கூ…’ என்ற சத்தம் கேட்டது. தூரத்து வளைவில் புகை எழும்பி ஆகாயத்துக்குப் போனது. ஒவ்வொரு பெட்டியும் நகர்ந்து முன்னேயும் பின்னேயும் அசைய, ரயில் பெரும் ஒலி எழுப்பியபடி ஸ்டேஷனுக்குள் நுழைந்தது. பாதி ரயில் வெளியே தள்ளிக்கொண்டு நிற்க, ஒரே ஒருவர் மட்டும் உமலில் பெரிய மீனைக் கட்டிக்கொண்டு கீழே இறங்கினார். ஒருவரும் ஏறவில்லை. ஒரு ஆளுக்காகவும், மீனுக்காகவும், உமலுக்காகவும் அந்தப் பிரமாண்டமான ரயில், சின்னக் கிராமத்து ஸ்டேஷனில் நின்றுவிட்டு மறுபடியும் புறப்பட்டது. ரயில் மணம் போய் மீன் மணம் சூழ்ந்தது.

ஸ்டேஷனை ஒட்டிய கடையில், உடைந்த வாக்கில் மீசைவைத்த ஓர் இளைஞன் அமர்ந்திருந்தான். அவன் தலைக்கு மேலே ஒரு பலகையில் ‘இங்கே துப்பக் கூடாது’ என எழுதி இருந்தது. அவனுக்கு 30 வயது இருக்கலாம். வெள்ளை நீளக்கை ஷேர்ட், வெள்ளை வேட்டி. ஷேர்ட்டின் காலரில் பச்சை கைலேஞ்சி. முதுகில் யாரோ கத்தியை நீட்டியதுபோல நேராக உட்கார்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தான். அவனைச் சுற்றி நின்றவர்கள் கொஞ்சம் குனிந்து மரியாதையாக அவனிடம் பேசினர். அவன் உட்கார்ந்திருந்த விதம் ஓர் அரசனின் தோரணையாகவே இருந்தது. அவன்தான் சண்டியன் சண்முகம் என்பது நினைவுக்கு வந்தது. தேநீர் குடித்து முடிந்ததும், கடை முதலாளி கீழே இறங்கிவந்து கிளாஸை எடுத்துப்போனார்.

சிகரெட் என்றான். த்ரி ரோஸஸ் சிகரெட் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார். எரிந்துகொண்டிருந்த நீளக் கயிற்றில் அதைப் பற்றவைத்து இழுத்தான். அவன் இழுத்த விதமும், புகையை ஊதிய விதமும் ஸ்டைலாக இருந்தன. என் பக்கத்தில் மாயமாகத் தோன்றிய வீரசிங்கம் முழங்கையால் மெள்ள இடித்தான். என்னுடன் படிப்பவன், எப்படி அங்கே வந்தான் எனத் தெரியாது.

”மூன்று கொலை செய்தவன். இன்று ஒன்று விழும் பார்” என்றான் ரகசியக் குரலில்.

”எப்படித் தெரியும்?”

”அதற்குத்தான் ஏதோ திட்டம் போடுகிறார்கள்” என்றான்.

சண்டியனின் இடது கை மடிக்காமல் நீளமாகத் தொங்கியது. அதற்குள்தான் வாள் இருக்கும். திடீரென சண்டியன் எழுந்து நடக்க, அவனுடைய இரண்டு எடுபிடிகளும் பின்னால் போனார்கள். அவர்களில் ஒருவன் சொன்னான், ”இந்த ஊரின் சனக்கணக்கு ஒன்று குறையப்போகுது”. மற்றவன் சிரித்தான். அவர்கள் போனபோது அசைந்த காற்று என்னையும் தொட்டது. நான் கூசிக்கொண்டு நின்றேன்.

வீரசிங்கம், சைக்கிள் வாடகைக்கு எடுக்க வந்திருந்தான். என்னிலும் இரண்டு வயது கூடியவன். வாய்க்குள் எதையோ வைத்திருப்பதுபோல முகம். நல்ல ஓட்டக்காரன். நெஞ்சில் நாடா தொட்ட பிறகும் ஓட்டத்தை நிறுத்த மாட்டான். ஆனால், அவனால் சைக்கிள் ஓட்ட முடியாது. கடைக்காரர் அவனுக்குப் பழக்கம் என்பதால், வாடகைக்குத் தருவார்.

வீரசிங்கம், சைக்கிளை சாய்வாகப் பிடித்துக்கொண்டு ஸீட்டுக்கு மேலே உட்காராமல் பாருக்குக் கீழே காலை நுழைத்து பெடலை மிதித்து ஓட்டினான். பிரேக் இல்லாத சைக்கிள் அது. குதிக்காலால்தான் நிறுத்த வேண்டும். அப்படியே வட்டம்போட்டு என்னிடம் வந்தான்.

கையினால் என் முகத்தைப் பிடித்துத் திருப்பி, ”நீயும் ஓட்டிப்பார். ஸீட்டில் இருந்து ஓட்டாததால், வாடகை பாதிதான். காசு தர வேண்டாம்” என்றான்.

சைக்கிள் சின்னதாக வேண்டும்; அல்லது நான் கொஞ்சம் வளர வேண்டும். ”இந்த சைக்கிள் சரியில்லை; எனக்குப் புது சைக்கிள் கொழும்பில் இருந்து வருகிறது” என்றேன்.

வீரசிங்கம் நம்பிவிட்டான்.

புதுமாப்பிள்ளையும் பொம்பளையும் மணம் முடித்து கோயிலுக்குப் போனார்கள். ஒரு கூட்டம் அவர்கள் பின்னே போனது. அன்று காலைதான் கல்யாணம் நடந்திருக்க வேண்டும். பொம்பளையின் தலை, நெஞ்சோடு ஒட்டி குனிந்து இருந்தது. தலையிலே கழுத்திலே கையிலே சூடியிருந்த நகைகள் எல்லாம் வெயிலில் பளிச்சிட்டன. தாலி, கழுத்தில் வட்டமாகக் கிடந்தது. பின்னலில்கூட நீளமாக ஒரு நகை பூட்டப்பட்டு இருந்தது.

கோயிலிலே அவர்களுக்காக விசேட பூஜை ஒன்று நடந்தது. கோயில் மணியை ஒருவன் மணிக்கூட்டுச் சுவரில் பாதி தூரம் ஏறி, பின்னர் கீழே விழுந்து அடித்தான். புதுத் தம்பதிகளுக்குச் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. அதை விநியோகித்தவர் என்னைப் பார்த்து, ”பசிக்கிறதா?” என்றார்.

பசியைக் கண்டுபிடித்தவன் நான். அது அவருக்குத் தெரியாது. சதுரமான ஐந்து சதக் குற்றியைத் துணியிலே சுருட்டி என் மணிக்கட்டில் கோயிலுக்கு நேர்ந்து கட்டியிருந்தார்கள். வாத்தியாரிடம் பிரம்படி வாங்க நீட்டுவதுபோல, நான் அந்தக் கையை நீட்டினேன். உள்ளங்கையில் ஒரு துளி பொங்கல் விழுந்தது. கையைப் பார்த்தேன். அதிலே போதிய இடம் மீதி இருந்தது.

திடீரெனப் பசித்தது. அத்தனை நேரமும் பசி ஞாபகம் வரவில்லை. ஒரு பயம் பிடித்தது. நேரம் பிந்திப்போனால் தம்பி என் பங்கு சாப்பாட்டை சாப்பிட்டுவிடுவான். ஒருநாள் நான் போனபோது, என்னுடைய நீலப் பூ போட்ட கோப்பையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அவனுடையது சிவப்புப் பூ போட்ட தட்டு.

‘என்னுடைய பிளேட்டில் நீ ஏன் சாப்பிடுகிறாய்?’ என அவன் மேல் பாய்ந்தேன். சாப்பிட்டு முடித்த அவனுடைய சிவப்பு எச்சில் கோப்பை, பக்கத்திலேயே கிடந்தது. நான் சாப்பாட்டுக்கு வரப் பிந்தியதால், அவன் என்னுடைய உணவையும் சாப்பிட்டுவிட்டான். ‘ஏன்டா என்னுடையதைச் சாப்பிட்டாய்?’ என்றதற்கு, மகாபுத்திசாலியான அவன் சொன்னான், ‘உன்னுடைய சாப்பாடா? அதுல உன்ரை பேர் எழுதி இருக்கா?’. இதைக் கேட்டதும் நான் திகைத்துப்போய் நின்றேன். ‘சாப்பாட்டுக்காக மனிதன் காத்திருக்கலாம். ஆனால், மனிதனுக்காகச் சாப்பாடு காத்திருக்கக் கூடாது.’

கோயிலை ஒட்டிய வீதியில் வெயில் ஏறி மணல் மின்னியது. கடுதாசி ஓரங்கள் எரிவதுபோல ஆகாயம் எரிந்துகொண்டு வந்தது. மரங்களே இல்லாத தெரு வெகுதூரம் நீண்டுபோய்க் கிடந்தது. வேலி பக்கமாகக் கால்களின் ஓரத்தால் மெதுவாக நடந்தேன். என்னுடைய நிழல் வர வர சிறுத்துப்போய் என் கால்களுக்குள் சிக்கியது. தூரத்தே கறுப்பு மாடு ஒன்று அசைந்து வந்தது. பின்னர் பார்த்தால், ஒரு மனிதன் கறுப்பாக ஒன்றைச் சுமந்துகொண்டிருந்தான். இன்னும் கொஞ்சம் அருகில் வந்ததும், அது கணக்குப் படிப்பிக்கும் லலிதா டீச்சர் எனத் தெரிந்தது. காலிலே செருப்பு; கையிலே கறுப்பு குடை. இயற்கைக் காட்சிகளை ரசிப்பதுபோல மெதுவாக வந்துகொண்டிருந்தார். மஞ்சள் கரை வைத்த சேலை சுழன்று சுழன்று அவர் காலை அடித்தது. அவரை எனக்குப் பிடிக்கும். கண் மருத்துவருடைய பலகையில் மேலே பெரிய எழுத்துக்களும் கீழே சிறிய எழுத்துக்களுமாக இருப்பதுபோல, அவர் கரும்பலகையில் மேலே பெரிய எழுத்தில் எழுதத் தொடங்கி கீழே வர வர சிறிய எழுத்தில் முடிப்பார்.

கறுப்பு-வெள்ளைப் படத்துக்கு வர்ணம் தீட்டி கலர் படமாக்குவதுபோல டீச்சர் கறுப்பு முகத்தில் பவுடர் அப்பி ஒப்பனை செய்திருந்தார்.

”நாலில் இருந்து ஐந்தைக் கழிக்க என்ன செய்ய வேண்டும்?”

”தெரியாது டீச்சர்.”

”நாலில் ஐந்து போகுமோ?”

”போகாது.”

”உன்னிடம் இல்லாவிட்டால், பக்கத்தில் ஒன்றைக் கடன் வாங்கு” என்றார்.

எனக்கு ஒரே குழப்பம். அப்பாவைத் தேடி கடன்காரர் வருவார்கள். கணக்குப் பாடத்தில் கடன் வாங்கச் சொல்லித்தருகிறாரே!

டீச்சர் கண்களைச் சுருக்கி ”நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்றார்.

ஒருமுறை யாரோ செத்துவிட்டார் என பள்ளிக்கூடக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டார்கள். பள்ளிக்கூடம் விடுமுறை என்றால், எங்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆனால், டீச்சர் அழுததை அன்று பார்த்தேன். ”என்ன?” என்றார் மறுபடியும்.

”கணக்குப் புத்தகம் இரவல் வாங்க வந்தனான்.”

”யாரிடம்?” என்றதும் எடை சமமான இரண்டு பொய்கள் சட்டென எனது மூளையில் தோன்றின. ஒன்றைச் சொன்னேன்.

”சரி… சரி. இந்த வெயிலைத் தாங்க மாட்டாய். வீட்டுக்கு ஓடு” என என்னைத் துரத்திவிட்டு குடையைச் சரித்துப் பிடித்துக்கொண்டு அவசரமின்றி நடந்தார்.

புளியமரத்தடியில் என்னை இடித்துக்கொண்டு இரண்டு பெண்கள் முன்னேறினார்கள். ”இந்த உலகத்தில் அதிகபட்ச அற்புதம் ஓர் உயிரில் இருந்து இன்னோர் உயிர் பிரிந்து இரண்டாகும் அந்தத் தருணம்தான்” என்றார் ஒருவர். ”உலகம் தோன்றிய நாளில் இருந்து நடப்பதால், அதை அற்புதமாக ஒருவருமே நினைப்பது இல்லை. ஊர் சனத்தொகை ஒன்றுகூடும் என்றே எண்ணுகிறார்கள்” என்றார் மற்றவர். சண்டியன் சண்முகத்தின் எடுபிடி ஊர் சனத்தொகை ஒன்று குறையும் எனச் சொன்னது நினைவுக்கு வந்தது. அப்பாவுடன் இரண்டு பேர் மரத்தின் கீழ் நின்று பேசினார்கள். அப்பாவின் குரலில் சிரிப்பு இருந்தது. வீட்டின் உள்ளே குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது. மருத்துவச்சி ஒரு பேசினில் தண்ணீர் கொண்டுவந்து வெளியே ஊற்றினார்.

அப்பா ”எங்கேடா இவ்வளவு நேரம்?” என்றார்.

படுத்திருந்த வீட்டு நாய் விறுக்கென எழும்பி ஓடியது. சம்பவங்கள் பின்னிருந்து முன்னால் திரையில் தோன்றின. இரண்டு பெண்கள், டீச்சர், கோயில், புதுமணத் தம்பதிகள், வீரசிங்கம், சண்டியன் சண்முகம், ரயில், கிழவர், நாய், புளியங்காய். அப்பா பதிலை எதிர்பார்த்து நின்றார். கொஞ்சம் காற்றை இழுத்து சுவாசப்பையை நிரப்பினேன். போன தடவை அப்பா அடித்தபோது அவருடைய கைரேகை கன்னத்தில் பதிந்தது நினைவுக்கு வந்தது. என் வாயில் நிமிடத்தில் பல பொய்கள் உண்டாகும். அன்று மூளையில் ஒன்றுமே இல்லை. ‘உன்னிடம் இல்லாவிட்டால் ஒன்றைக் கடன் வாங்கு.’ அதைத்தான் செய்ய வேண்டும்!

– ஜனவரி 2015

Print Friendly, PDF & Email

0 thoughts on “ஒன்றை கடன் வாங்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *