கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 647 
 

மோகனரங்கம் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் ரகுநாதன். பாலக்கரை ஆஸ்பத்திரியில் இருந்தவாறே கீழ்ப்புறத்து ஜன்னல் வழியாக சூரிய உதயக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்தார். இரண்டு வாரங்களாக அவரைப் பொறுத்த மட்டில் பாலக்கரை ஆஸ்பத்திரியின் டிபி. வார்டுதான் அவருடைய உலகம். அவரைப் பிடிக்கத் தொடங்கியிருந்த அந்தப் பயங்கர வியாதியின் சின்னங்கள் தோற்றத்திலேயே நன்றாகப் புலப்பட்டன. சூம்பிப்போன தென்னங் குரும்பையைப் போன்ற அந்த முகமும் அதிலே ஆழ்ந்து குழிவிழுந்த கண்களும் கூரிய நீண்டமூக்கும் காண்பதற்கு விகாரமாகவும், குரூரமாகவும் காட்சியளித்தன. கல்லூரி நிர்வாகிகள் அவருடைய நிலைக்கு இரங்கிச் சம்பளத்தோடு இரண்டு மாத லீவு கொடுத்திருந்தார்கள். அதற்குள் அவர் மேல் அனுதாபம் கொண்டு அந்த நோய் அவரை விட்டுப் போனால் அவர் பிழைத்து வெளியுலகைக் காண முடியும்; திருச்சி மோகனரங்கம் கல்லூரிக்கும் ஓர் அருமையான பேராசிரியரை இழக்க வேண்டிய துர்ப்பாக்கியம் நேராது. ஆனால்… ஆதியையும் சரி அந்தத்தையும் சரி, நிர்ணயிக்க வேண்டியது எவனுடைய பொறுப்போ , அந்த அவன்’ கண்களல்லவா திறக்க வேண்டும்? பிராணாரம்பம், பிராணந்திகம், பிராணாவஸ்தை, இவைகளை எழுதாத எழுத்துக்களாலே எழுதி வைத்து, அதன் வழி இயக்குபவன் அவன்தானே? “ஸார்! ஜன்னலை மூடிவிடுங்கள் – அந்த வெய்யில் மேலே படக்கூடாது. அது இழைப்பையும் இருமலையும் கிளப்பி விட்டுவிடும் !” கூறிக்கொண்டே அந்த வார்டின் டாக்டர் உள்ளே நுழைந்தார்.

டாக்டர் பரிசோதனை முடிந்தது. “என்ன டாக்டர் ஸார், ஏதாவது நம்புவதற்கு இடமிருக்கிறதா?” வேதனையோடு இழைந்த சிரிப்பு ஒன்றை இதழ்கள் நடிக்க, இவ்வாறு கேட்டார் ரகுநாதன்.

“புரொபஸர் ஸார், உங்கள் விஷயத்தில் என் முயற்சியை எந்த அளவு வெற்றிக்கேற்பப் பயன்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்கிறேன். ஒன்று மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். மனத்தளர்ச்சியும் வீண் அவநம்பிக்கையும்தான் முக்கால்வாசி நோய்! நீங்கள் பேராசிரியர். நான் உங்களுக்கு அதிகம் சொல்வதற்கு என்ன இருக்கிறது? நம்பிக்கையின் அளவு உங்களிடம் எவ்வளவிற்கு அழுத்தமாக இருக்கிறதோ, அதைப் பொறுத்தே இருக்கிறது என் சிகிச்சையின் வெற்றியும்.”

“என்னவோ டாக்டர், எங்கள் காலேஜ் பையன்களின் அதிர்ஷ்டம் என்னைப் பொறுத்தே இருக்கிறது.”

“ஸார்! சொல்ல மறந்துவிட்டனே. மோகனரங்கம் காலேஜ் மாணவர்கள் இருபது இருபத்தைந்து பேர்கள் இருக்கும். நேற்று இங்கே உங்களைப் பார்க்க வந்திருந்தார்கள். இந்த நிலையில் நீங்கள் அவர்களைச் சந்தித்துப் பேசுவது என்று வந்தால், உங்கள் நிலை இன்னும் சீரியஸாக ஆகிவிடுமோ என்று எனக்குப் பயமாக இருந்தது…”

“என்னைச் சந்திக்காமல் போகச் சம்மதித்திருக்க மாட்டார்களே?”

“அதையேன் கேட்கிறீர்கள் ஸார்? காலேஜுகளில் படிக்கும் மாணவர்களைப் பற்றிய ஒரு பெரிய உண்மையையே நான் நேற்றுத்தான் தெரிந்து கொண்டேன். உங்கள் நிலையை நான் அவர்களிடம் உருக்கமாக விவரித்தபோது பெரும்பாலான பையன்கள் கண்ணீர் விட்டுவிட்டார்கள் ஸார்! ‘எப்படியாவது அவருக்கு உயிரைக் கொடுத்து எங்கள் படிப்பைக் காப்பாற்றுங்கள் டாக்டர்’ என்று உங்கள் பையன்கள் என்னை மன்றாடிக் கேட்டுக் கொண்ட போதுதான் காலேஜில் உங்களுக்கும் உங்கள் மாணவர்களுக்கும் உள்ள தொடர்பு எனக்குப் புரிந்தது ஸார்! உங்களை அவர்கள் கண்டிப்பாகச் சந்திக்காமல் போகமுடியாது என்று வற்புறுத்தினார்கள். நான் விவரம் சொன்ன பின்பே சந்திக்காமல் போவதற்குச் சம்மதித்தார்கள்.”

“அந்தச் செல்வாக்கில் எல்லாம் ஒன்றும் குறைவு இல்லை டாக்டர்!.”

“எதற்கும் பயப்பட வேண்டாம்! எல்லாம் நன்றாக முடியும் புரொபஸர் ஸார்! வரட்டுமா நான்?” கூறிவிட்டு நகர்ந்தார் டாக்டர். அவர் சென்றதும், வழக்கமாக வீட்டிலிருந்து ஓவலும் பழங்களும் கொண்டுவரும் தம் பையனை இன்னும் காணவில்லையே!’ என்ற கவலை பேராசிரியர் ரகுநாதனுக்கு ஏற்பட்டது.

சற்றைக்கெல்லாம் அவர் புதல்வன் மணி கையில் பிளாஸ்க், பழப்பை சகிதம் வார்டுக்குள் நுழைந்தான்.

“ஏண்டா மணி இவ்வளவு நாழி?”

“அம்மாவுக்கு உடம்பு சரியில்லே அப்பா! நான்தான் அடுப்பை மூட்டிப் பாலைக் காய்ச்சி ஓவல் கலந்து கொண்டு வந்தேன் அப்பா.”

‘இந்தச் சமயம் பார்த்துத்தானா அவள் வேறு படுத்துக்கொள்ள வேண்டும்? எல்லாம் தலையெழுத்து விதி.’

மணி சூடான ஓவலை பிளாஸ்கில் இருந்து கிளாஸில் ஊற்றி நீட்டினான். ரகுநாதன் வாயில் அடக்கிக் கொண்டிருந்த கோழையை ஜன்னல் வழியே துப்பி விட்டுக் கிளாஸைக் கையில் வாங்கினார்.

ஆஸ்பத்திரி நர்ஸ் கையில் ஒரு விஸிட்டிங்கார்டுடன் உள்ளே நுழைந்தாள். ஓவலைப் பருகிவிட்டுக் கிளாசைக் கீழே வைத்தார் ரகுநாதன் நர்ஸ் எதிரே விஸ்ட்டிங் கார்டுடன் நின்று கொண்டிருப்பதைக் கண்டார். கார்டை அவர் படுக்கைக்கு முன் இருந்த ஸ்டூலில் வைத்தாள் நர்ஸ். ரகுநாதன் அதை எடுத்துப் பார்த்தார்.

கே.எஸ்.நரசிம்மன், ஐ.ஏ.எஸ். திருச்சி கலெக்டர்…. ரகுநாதனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. நரசிம்மன் இவ்வளவு தூரம் தன்னை நினைவு வைத்துக் கொண்டு பார்க்க வருவான் என்று அவரால் நம்பவும் முடியவே இல்லை. எத்தனையோ வருஷங்களுக்கு முன் பிரஸிடென்சி காலேஜில் படித்த அந்தக் காலம் நினைவிற்கு வந்தது அவருக்கு. அதற்குப் பின்பு நரசிம்மனை அருமையான இரண்டொரு முறையே அவரால் சந்திக்க முடிந்தது. “இவர் வெளியிலே காத்துக் கொண்டிருக்கிறாரா நர்ஸ்?” விஸிட்டிங்கார்டைக் காட்டி நர்ஸிடம் கேட்டார் ரகுநாதன்.

“ஆமாம், ஸார். வரச்சொல்லவா?”

“வரச் சொல்லுங்கள்.”

நரசிம்மன் உள்ளே வரவும், “வா, வா, நரசிம்மா ! வா” என்றார் ரகுநாதன்.

“ஆமாம்! ரகு! போன வாரமே என்னை இந்த ஜில்லாவுக்கு மாற்றி விட்டார்கள். உன்னைப் பற்றி இன்றுதான் விசாரித்து அறிந்து கொள்ள நேர்ந்தது.”

நரசிம்மன் ஸ்டூலில் அமர்ந்து கொண்டு தான் கொண்டு வந்திருந்த ஆப்பிள் முதலிய பழங்களைப் பையிலிருந்து எடுத்து வைக்கலானார்.

“இதெல்லாம் எதற்கு அப்பா நரசு? நீ என்னை விசாரிக்க வந்ததே பெரிய காரியம்!”

“என்ன ரகு அப்படிச் சொல்லிவிட்டாய்? ஆயிரமிருக்கட்டும்! நோயாளிகளையும், குழந்தைகளையும் வெறுங் கையோடு போய்ப் பார்க்கலாமா?”

“டேய் மணி, இதோ, இந்த மாமா வந்திருக்கிறார், பார். எதிர்ப்புறம் இருக்கும் ஹோட்டலில் போய் காப்பி, டிபன் வாங்கிக் கொண்டு வா. நீ அப்புறம் வீட்டிற்குப் போகலாம்.”

“வேண்டாம் ரகு! பையனை எதற்காகக் கஷ்டப்படுத்துகிறாய்? வீட்டிலேயே டிபனை முடித்துக் கொண்டுதான் புறப்பட்டேன்.”

“பரவாயில்லை நரசு! நீ போய் வாங்கிக் கொண்டு வாடா மணி. சுருக்க வா.”

மணி கிளாஸை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

“ஐயோ ரகு! உன் கதி இப்படியா ஆக வேண்டும்? தமிழ்த்தொண்டு தமிழ்த்தொண்டு என்று இந்தப் பயங்கரமான நோய்க்கு இடங்கொடுத்து விட்டாயே? என்ன காலேஜ் புரொபஸர் வேலை வேண்டியிருக்கிறது? கத்திக் கத்தித் தொண்டை புண்ணாகும் வேலை! ஏதோ நீ நல்லபடியாகப் பிழைத்தெழுந்தால் இந்தச் சனியன் பிடித்த வேலையை விட்டு விடு. அப்புறம் என்ன செய்யலாமென்று நான் சொல்லுகிறேன், உனக்கு”.

“உன்னைப் போல் ஒரு கலெக்டராகவோ, ஜட்ஜாகவோ இருப்பவர்களுக்குப் பணமும் பவிஷம் அளவற்றுக் கிடைக்கலாம் நரசு. ஆனால் இந்தக் கல்லூரிப் பேராசிரியர் வேலையிலே எனக்குக் கிடைக்கும் ஆத்மதிருப்தி இருக்கிறதே, அது…” ரகுநாதன் கூறிக் குறையையும் முடிக்கவில்லை. நரசிம்மன் இடைமறித்தார்.

“ஆமாம்! பெரிய ஆத்மதிருப்தியைக் கண்டுவிட்டாய்! உன் ஆத்ம திருப்தியின் இலட்சணத்தைத்தான் நான் இதோ பார்க்கிறேனே! என்ன கோரம்! போன தடவை உன்னைப் பார்த்தபோது நீ எப்படி நன்றாக இருந்தாய் ரகு! இப்போது வெறும் தோல் மூடிய எலும்புக்கூடுதான் உன் தோற்றம். ஐயோ! இதையா நீ ஆத்மதிருப்தி என்கிறாய்? ‘ஆத்மஹத்தி’ என்று சொன்னாலாவது பொருந்தும் ரகு!” உணர்ச்சி மிகுதியால் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே நரசிம்மனுக்குக் கண்களில் நீர் துளித்துவிட்டது. குரல் நைந்து கரகரத்தது.

“நீ தவறாக எண்ணுகின்றாய் நரசு! எனக்கு வந்திருக்கும் இந்த நோய்க்குக் காலேஜும், வேலையும் காரணம் என்று மட்டும் சொல்லிவிடலாமா? நான் அப்படி நினைக்கவில்லை. இதோ பாரேன்! இரண்டு மாதச் சம்பளத்தோடு, காலேஜ் செலவிலே என்னை இங்கே சிகிச்சைக்கு அனுப்பியிருக்கிறார்கள். காலேஜின் நிர்வாகக் குழுவினரோ என்மேல் தேவதா விசுவாசம் வைத்திருக்கிறார்கள். பையன்களும் மற்றவர்களுமோ என்மேல் உயிரையே வைத்திருக்கிறார்கள். திருப்தியோடு வாழ்வதற்கு இந்த அன்பும் ஆதரவுமே போதுமானவை என்று எனக்குத் தோன்றுகிறது. நரசு, இதை நீ என் குறையாகவோ, பலஹீனமாகவோ, நினைத்துக் கொண்டாலும் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. வாழ்வின் ஜீவதத்துவம் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மேல் செலுத்தும், அன்பு, ஆதரவு, புகழ் இவைகளிலே இருப்பதைப் போல, செல்வத்திலோ, செல்வாக்கிலோ இருப்பதாக நான் கருதவில்லை. அன்று கல்லூரியில் படிக்கும் நாளிலிருந்தே இது என் மனத்தின் இலட்சியமாக அமைந்துவிட்டது, நரசு! நான் செய்ய இனி என்ன இருக்கிறது?”

“உன்னுடைய இந்த மனோபாவம் பாராட்டத்தக்கதாக இருக்கலாம் ரகு! ஆனால் ஒன்று மட்டும் நினைவு வைத்துக் கொள். செல்வத்துக்கும், செல்வாக்கிற்கும் ஆசைகொள்ளாமல், தொண்டுக்கும் தூய்மையான வாழ்விற்குமே ஜீவனை அர்ப்பணிக்கும் தியாகிகளை இந்தப் பொல்லாத உலகம் வெறும் ஏணியாகப் பயன்படுத்திக் கொண்டு, என்றாவது அது ஒடிந்தால் தூக்கி எறிந்துவிடுகிறது, ரகு ”

மணி காப்பி, டிபனுடன் வந்தான். “பேச்சு இருக்கட்டும் நரசு! நீ முதலில் டிபன் சாப்பிடு. பின்பு பேசுவோமே?” ரகுநாதன் நரசிம்மனை வேண்டிக் கொண்டார். ரகுநாதனின் வற்புறுத்தலை மீற முடியாமல் நரசிம்மன் சாப்பிடத் தொடங்கினார்.

“அப்பா! நான் போய்த்தான் அம்மாவுக்கு ஜவ்வரிசிக்கஞ்சி போட்டுத் தர வேண்டும்.” மணி சொன்னான்.

“ஏன் ரகு, வீட்டிலும் ஏதாவது உடம்பு சௌகரியம் இல்லாத நிலையோ? இதுவரை பேசிக் கொண்டிருந்தோமே நீ என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லையே!” நரசிம்மன் ரகுநாதனைக் கேட்டார்.

“ஆமாம் நரசு எனக்கே இப்போதுதான் தெரியும். இவன் சொன்னான் .” என்று நரசிம்மனுக்கு மறுமொழி கூறிவிட்டு, மணியின் பக்கம் திரும்பி, “மணி, நீ ஒன்று செய்யேன்? நேரே வீட்டுக்குப் போய் அம்மாவை ஒரு வண்டி வைத்து அழைத்துக் கொண்டு உறையூரில் தாத்தா வீட்டில் கொண்டு போய் விட்டுவிடேன். உடம்பு சௌகரியமில்லாமல் அவள் தனியே இங்கே கஷ்டப்பட வேண்டாம் பாரு. இங்கே என்னைக் கவனித்துக் கொள்ள நிறையப் பேர் இருக்கிறார்கள். அவளுக்கு’ சொஸ்தமாகி, இங்கே திரும்பலாம் என்ற நிலை ஏற்படும் வரை நீயும் கூடப் பள்ளிக்கூடத்திற்கு லீவு போட்டுவிட்டு உறையூரிலேயே அவளுடன் இருந்துவிடு. மாமா, தாத்தா எல்லோருக்கும் நடுவில் ஒரு வாரம் இருந்தால் அவள் தேறிவிடுவாள். போ… நீ அப்படிச் செய். அதுதான் இப்போதைக்கு நல்லது” என்று தம் பையனை நோக்கிக் கூறினார் ரகுநாதன். பையன் மணி ‘சரி’ என்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்துவிட்டுப் புறப்படத் தயாரானான்.

“கொஞ்சம் பொறு ரகு. உன் மனைவியின் பிறந்த வீடு உறையூரில் தானே இருக்கிறது? இப்போது உன் பையனை வீட்டுக்குச் சென்று உறையூருக்குத்தானே அழைத்துக்கொண்டு போகச் சொல்கிறாய்? வண்டியிலே அழைத்துக் கொண்டு போக வேண்டாம். இதோ! இங்கே வாசலில் என் கார் நிற்கிறது. டிரைவரிடம் உன் பையனைக் காட்டி, உனது வீடு சென்று அழைத்துக் கொண்டு போய் மணியையும் உன் மனைவியையும் உறையூரில் விட்டுவரச் சொல்கிறேன். சரிதானே?”

“உனக்கு மிகுந்த நன்றி நரசு!” ரகுநாதனின் குரல் தழுதழுத்தது. நரசிம்மன் மணியை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக் காம்பவுண்டுக்கு வெளியே கார் நிற்குமிடம் சென்றார்.

***

ரகுநாதன் டாக்டரை ஏமாற்றப் பார்த்தார். ஆனால், டாக்டரா விடுகின்றவர்! ரகுநாதனிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்குப் பெருமுயற்சி செய்தார் அவர்.

“புரொபஸர் ஸார், நீங்கள் என்னிடம் மறைக்கப் பார்க்கிறீர்கள். நேற்றைவிட இன்று உங்கள் உடல் நிலையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாறுதல் என்னைச் சிறிது பயங்கொள்ளச் செய்திருக்கிறது. உங்கள் உள்ளத்தை ஏதோ ஓர் புதிய கவலை அரித்து வாட்டத் தொடங்கியிருக்கிறது.”

ரகுநாதன் டாக்டருக்குப் பதிலே சொல்லவில்லை. “செல்வத்துக்கும் செல்வாக்கிற்கும் ஆசை கொள்ளாமல், தொண்டுக்கும் தூய்மையான வாழ்விற்குமே ஜீவனை அர்ப்பணிக்கும் தியாகிகளை இந்தப் பொல்லாத உலகம் வெறும் ஏணியாகப் பயன்படுத்திக் கொண்டு, என்றாவது அது ஒடிந்தால் தூக்கி எறிந்து விடுகிறது!” முதல் நாள் நரசிம்மன் கூறிவிட்டுச் சென்றிருந்த இச்சொற்கள், கூரிய ஆணிகளை அடித்தது போல் அவருடைய உள்ளத்தில் பதிந்து வேதனையைக் கிளப்பி விட்டிருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தில் ஏதோ ‘ஆத்ம திருப்தி?’, ‘அது இது’ என்றெல்லாம் கூறி, நரசிம்மனை மடக்கி அனுப்பிவிட்டார். என்றாலும் வருடத்திற்கு வருடம் உன்னிடத்தில் படித்துப் பட்டம் பெற்று வெளியேறுகின்ற மாணவர்களிலேயே எத்தனையோ பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என்று பரீட்சைகளை எழுதிப் பற்பல உயரிய உத்தியோகங்களை அடைந்த வண்ணம் இருக்க, நீ மட்டும் ஏணியைப் போலச் சார்த்தின இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறாயே? இது உண்மைதானே? ஆனால், நரசிம்மன் உன் போன்ற இலட்சியப் பைத்தியங்களை ஏணி?’ என்று கூறியதில் பிழை என்ன இருக்கிறது? பொருத்தமான உவமைதானே அது?’ என்று ரகுநாதனுடைய உள்ளம் அவரையே குத்திக் காட்டியது.

மேலும் கீழும் ஏறியும் இறங்கியும் போகின்றவர்கள் தவிர, ஏணி சார்த்தின இடத்திலேயேதானே இருக்கிறது? பள்ளிக்கூடத்து ஆசிரியரானால் என்ன? கல்லூரிப் பேராசிரியரானால் என்ன? அவர்கள் சமுதாயத்திற்கு ஒரு வகையில் ஏணியாகவே பயன்படுகிறார்கள் என்பது பூர்ணமான உண்மைதானே? ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்று அவர்களுக்கு இந்தச் சமூகம் கொடுத்திருக்கும் பாராட்டுப் பழமொழியும் கூடக் குதிரையைச் சவாரியில் ஈடுபடுத்தும் போது கண்ணை மறைத்து இடும் கண்ணுறை போல ஓர் பெரிய ஏமாற்று வேலைதான்!

‘சை! இது என்ன வேலை? இந்தப் பாழாய்ப்போன வியாதியிலிருந்து பிழைத்தெழுந்தால் முதல் காரியமாக இதை விட்டுத் தொலைக்க வேண்டும். எம்.ஏ. முதல் வகுப்பில் தேறியவனுக்கு வேறு வேலையா கிடைக்காமல் போய்விடப் போகிறது? இதயம் வறண்டு போகும்படி தொண்டைக்குழி புண்ணாகின்றவரை கத்திக் கத்தி உயிரை விட வேண்டிய இந்த ‘உத்தியோகம்’ நம்மை என்றைக்கு எப்படிக் கொன்று வைக்குமோ?… நித்ய கண்டம் பூர்ணாயுள் தான். சொல்லுவதற்கில்லை!

‘வாழ்ந்தால் நரசிம்மனைப்போல ஒரு கலெக்டராகவோ சர்க்காரில் பெரிய உத்தியோகஸ்தராகவோ வாழ வேண்டும். ஆத்மாவாவது, திருப்தியாவது? பையன்களும், காலேஜ் நிர்வாகிகளும் பிரியமாக இருந்தால், அதனால் நமக்கென்ன ஆயிற்று? வேலை என்னவோ , ‘ஏணியைப் போல மற்றவர்கள் மேலே ஏறிச் செல்வதற்குப் பயன்படும் வேலையே ஒழிய, தான் முன்னேற முடியாததுதானே. உண்மையில் நரசிம்மன் சொல்லிவிட்டுப் போனமாதிரி, ‘என் ஆத்ம திருப்தியா இது? ஆத்மஹத்திதானே?’ என் ஆத்மாவை தானாகவே ஏன் ஏமாற்றிக் கொள்ள வேண்டும்? ஆம்! கூடாது! கூடவே கூடாது? இங்கிருந்து பிழைத்து வெளியேறினால் முதல் வேலை காலேஜில் என் உத்தியோகத்தை ராஜிநாமா செய்வதுதான்.’ ரகுநாதன் ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டார். நரசிம்மனின் வார்த்தைகள் அவர் மனத்தில் உண்டாக்கியிருந்த கொந்தளிப்பு அவரை இந்த முடிவுக்கு வரச்செய்துவிட்டது.

‘எனக்கிருப்பது ஒரு பையனும் மனைவியும். நான் நாளைக்குச் செத்துவைத்தேன் என்றால், அவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதானே? வேறு சர்க்கார் உத்தியோகத்தில் இருந்துவிட்டுச் செத்தேன் என்றால், அவர்களுக்கு ஏதாவது உதவியாவது கிடைக்கும்!’

இந்த முடிவான தீர்மானம் உறுதியாவதற்குத் தூண்டுகோல் போல நரசிம்மன் அடிக்கடி அவரைச் சந்தித்துப் பேசி விட்டுப் போகும் பேச்சுகளும் பயன்பட்டன. ஒவ்வொரு தடவை வந்துவிட்டுப் போகும் போதும் அந்த ஏணி’ என்ற உபமானத்தைச் சொல்லாமல் நரசிம்மன் போவதில்லை. ரகுநாதனின் இதே உறுதியான மனமாற்றத்தினால், ‘வேறு உத்தியோகம் பார்ப்பதற்காகவாவது விரைவில் உடம்பு தேறி ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேற வேண்டும்’ என்ற நம்பிக்கையும் அவருக்கு உண்டாகிவிட்டிருந்தது. இதயத்தை அறுத்து வந்த கவலையும் ஓரளவு எதிர்காலத் தீர்மானம் எனும் அந்த நம்பிக்கையினால் போக்கப்பட்டுவிட்டது.

பதினைந்து, இருபது நாட்களுக்குப் பின்பு…..

டாக்டர், அன்று, ரகுநாதன் ஆஸ்பத்திரியில் பூர்ணகுணமடைந்து விட்டதனால் வீட்டிற்குப் போகலாமென்று அனுமதித்துவிட்டார். மாலை நான்கு மணிக்கு அவர் ஆஸ்பத்திரியை விட்டுக் கிளம்பலாம் என்று ஏற்பாடு. மனைவியும் பையன் மணியும் உறையூரில் அவருடைய வேட்டகத்திலேயே இருந்ததனால் ஆஸ்பத்திரியிலிருந்து நேரே உறையூருக்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்று அவர் கருதியிருந்தார். நரசிம்மன் மூன்றரை மணிக்கே ஆஸ்பத்திரிக்குத் தம்முடைய காருடன் வருவதாகச் சொல்லி அனுப்பியிருந்ததனால் காரை எதிர்பார்த்துக் காத்திருந்தார் ரகுநாதன். ஆஸ்பத்திரி வராந்தாவில் டாக்டரும் அவரும் நாற்காலியில் அமர்ந்து பேசியவாறே, நரசிம்மனின் காரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். மணி நான்கும் ஆகிவிட்டது. இன்னும் நரசிம்மனின் காரைக் காணவில்லையே?’ என்று நினைத்துக் கொண்டிருந்தார் ரகுநாதன்.

அதேசமயத்தில் ஆஸ்பத்திரி கேட்டிற்குள் நுழைந்தது ஒரு கார். டாக்டர், ரகுநாதன் இருவருமே எதிர்பாராத விதமாக மோகனரங்கம் கல்லூரி பிரின்ஸிபாலும், காரியதரிசியும் அந்தக் காரியிலிருந்து இறங்கினர். டாக்டரும் ரகுநாதனும் எழுந்து அவர்களை வரவேற்றனர். பரஸ்பரம் குசலப்பிரச்னம் எல்லாம் நடந்தன.

“ஸார் ! பையன்களும் ஆசிரியர்களும் சேர்ந்து உங்கள் உடல் சௌக்கியமுற்றதைப் பாராட்டும் நோக்கத்தோடு காலேஜில் ஒரு விழா ஏற்பாடு செய்திருக்கின்றோம்.” பிரின்ஸிபால் குழைந்த சொற்களால் வேண்டினார்.

“எனக்கு இப்போது உறையூருக்கு அவசரமாகப் போக வேண்டியிருக்கிறதே ஸார்! மேலும் இன்னொரு விஷயம்!… உங்களிடமும் காரியதரிசி அவர்களிடமும் இப்போதே சொல்லிவிடுகிறேனே! எனக்கு இனிமேல் காலேஜில் வேலை பார்க்கவே ஆசையில்லை ஸார்…. அங்கே வரவேண்டும் என்றாலே மனம் கசக்கின்ற மாதிரி தோன்றுகிறது ! தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீர்கள்!”

பிரின்ஸிபாலும் காரியதரிசியும் திடுக்கிட்டனர். ரகுநாதனின் மறுமொழி அவர்களைப் பிரமிக்கச் செய்தது.

“ஸார் ! கூட்டத்திற்குக் கலெக்டர் நரசிம்மன் தலைமை வகிக்க இசைந்துள்ளார். ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம். மற்ற விஷயங்களைப் பின்பு பேசிக் கொள்வோம். பையன்களும் நாங்களும் ஆர்வத்தோடு செய்திருக்கும் இந்த ஏற்பாட்டைத் தாங்கள் கட்டாயம் ஏற்றுக் கொண்டு வர வேண்டும்.”

“நரசிம்மனா?” ரகுநாதன் வியப்புடனே கேட்டார். “ஆமாம்! புதிதாக வந்திருக்கிறாரே கலெக்டர், அவர் உங்கள் நண்பர் என்று கேள்விப்பட்டு, ஏற்பாடு செய்தோம் ஸார்.”

வேண்டா வெறுப்பாக அவர்களுடனே புறப்பட்டார் ரகுநாதன் பிரின்ஸ்பாலின் வேண்டுகோளுக்கிணங்கி டாக்டரும் புறப்பட்டார்.

காலேஜ் வாசலில் காரை விட்டு இறங்கிய ரகுநாதன் திகைத்துப் போனார். திருச்சி நகரத்து இளைஞர் உலகமே அங்கே ஒன்று கூடியிருந்தது. அவரிடம் படித்த இளைஞர்கள், படிக்கின்ற மாணவர்கள் மட்டுமல்லாமல் வேறு கல்லூரி மாணவர்களும் அவரை வரவேற்கக் கூடியிருந்தனர். தன் கல்லூரிப் புரொபஸர்களோடு தானும் ஒருவனாகக் கலந்து கொண்டவன் போல நரசிம்மன் தன்னை வந்து வரவேற்றது ரகுநாதனுக்கு மிக்க ஆச்சரியத்தை அளித்தது.

விழா ஆரம்பித்தது. கலெக்டர் நரசிம்மன் பேசினார். “அன்பார்ந்த மாணவ இளைஞர்களே! பேராசிரியர்களே! நான் முகஸ்துதிக்காகக் கூறுகிறேன் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். கல்லூரியிலே பேராசிரியராக இருந்து போதிக்கும் பணியைப் போலப் புனிதமானது வேறு ஒன்றும் இல்லை. அந்தப் புனிதமான பெருந்திருப்பணியில் என் நண்பரும் உங்கள் தமிழ்ப் பேராசிரியருமான ரகுநாதன்…”

‘தூ!’ யாவரும் திரும்பிப் பார்த்தனர். பேராசிரியர் ரகுநாதன் தொண்டைக் கோழையைப் பக்கத்திலிருந்த குரோட்டன்ஸ் செடியின் தொட்டியில் காறி துப்பிக்கொண்டிருந்தார். அதற்குப் பின், கலெக்டர் நரசிம்மன் தன்னைப் பாராட்டிப் பேசிய எந்தப் புகழுரைகளும் ரகுநாதனுடைய செவிகளில் விழவேயில்லை. ‘கலெக்டராகவும் பெரிய பதவிக்காரர்களாகவும் இருப்பவர்கள், சமயத்திற்கு ஏற்றபடி மனத்தை மறைத்து எப்படி எப்படிப் பேசவும் நடிக்கவும் வேண்டியதாக இருக்கின்றது!’ ரகுநாதன் சிந்தனையில் ஆழ்ந்தார். உண்மை அவர் மனத்திற்குள்ளே மெல்ல மெல்ல மலர்ந்து கொண்டிருந்தது.

அன்றைய விழாவில் ரகுநாதனைப் பாராட்டி மேடைமேல் பேசாதவர்களே பாக்கி இல்லை எனலாம். மாணவர்கள் அவருக்கு மாலைமேல் மாலையாகச் சாற்றி மகிழ்ந்தனர். தமக்கு இருக்கும் செல்வாக்கின் சக்தி இவ்வளவு மகத்தானதா?’ என்று ரகுநாதனுக்கே வியப்பு ஏற்பட்டுவிட்டது.

எங்கும் அமைதி சூழ்ந்தது. பாராட்டு விழாவுக்கு மறுமொழியாக நன்றியுரை கூற எழுந்தார், ரகுநாதன். “பிறருக்கு ஏணியாக இருப்பதில் தான் மெய்யான இன்பம் இருக்கிறது போலும்! என் நண்பர், கலெக்டர் நரசிம்மன் அடிக்கடி என்னோடு பேசும்போதெல்லாம் ஆசிரியர் வாழ்வை ஏணியோடு ஒப்பிடுவது வழக்கம். ஆனால், என் அருமை நண்பராகிய அவரும் இன்று ஓர் உண்மையைப் பிரத்தியட்சமாகப் புரிந்து கொண்டிருப்பார். வாழ்க்கையில் தான் தனக்கே ஏணியாக இருப்பதில் தியாகமோ, இன்பமோ இல்லை. பிறருக்கு ஏணியாக இருப்பதிலேதான் அவை உள்ளன. அந்த அரும்பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருப்பதாகக் கலெக்டரவர்கள் உங்கள் முன் கூட்டத்திலாவது ஒப்புக் கொண்டாரே, அவருக்கும் உங்களுக்கும் என் நன்றி.”

இவ்வளவுதான் பேசினார், ரகுநாதன். அதில் ஒளி நிறைந்திருந்தது.

(1955)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *