(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“இப்பொழுது நீங்கள் எழுதத் துவங்கலாம்…” திருஞானத்தின்குரல் கம்பீரமாய் ஆங்கிலத்தில் முழங்கியது. அக்கட்டளைக்காகவே காத்திருந்த மாணவர்கள் வினாக்களுக்கு விடை எழுதுவதில் மூழ்கினர். திருஞானம் ஒரு முறை வகுப்பறையைக் கண்ணோட்டமிட்டார். அனைவரும் “கருமமே கண்ணாயிருந்தனர்.”
அவர் கரும்பலகையருகே சென்று, “அடுத்தத் தேர்வு ஆங்கிலமொழி – முற்பகல் 11-40 மணிக்கு” என்று பெரிதாக எழுதினார். அவர் கையெழுத்துக் குண்டு குண்டாக முத்துச்சரம் கோர்த்தது போல் ஒரேயளவுடன் வரிசையாக அமைந்திருந்தது.
தமது பொறுப்பில் ஒரு பகுதி குறையின்றி நிறைவேறி விட்ட மகிழ்ச்சியுடன் வகுப்பின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
அன்று ஆறாம் வகுப்பு இறுதித் தேர்வு தொடக்கம். “பி. எஸ். எல். இ.” எனப்படும் அத்தேர்வு எல்லாப் பள்ளி களிலும் ஏககாலத்தில் அரசாங்கத்தால் நடத்தப்படும் தேர்வாகும். திருஞானம் அப்பள்ளிக்குரிய “மேற்பார்வையாளர்களில்” ஒருவராக நியமிக்கப்பட்டிருந்தார். இன்று போல் இன்னும் இரு தினங்களுக்கு அவர் அங்கு கடமையாற்ற வேண்டும்.
திருஞானம் தம்மிடம் பயிலும் மாணவர்களைப் பற்றி நினைவு கூர்ந்தார்.
“இந்நேரம் அவர்களும் கட்டுரை எழுதிக் கொண்டிருப்பார்கள். சரவணன் ஆங்கிலமொழியில் கட்டுரை எழுதுவதில் வல்லவன். அமுதாவும் பரவாயில்லை. ஏன் யாரும் ஆங்கில மொழியில் மோசம் என்று சொல்ல முடியாது- மாரியப்பனைத் தவிர…”
அவர் சிந்தனையில் பிசிறு விழுந்தது. மாரியப்பன் ஆங்கிலமொழியில் வெற்றி பெறுவானா? அவனுக்கு அப்பாடத்தில் திறமை போதாதே. அப்பாடத்தில் மட்டும் தானா? தமிழ்ப் பாடம் தவிர்த்த ஏனைய பாடங்களிலெல்லாம் சற்றுத் திறமை குறைவானவன்தான்; அவன் எல்லா பாடங்களிலும் வெற்றி பெறுவானா? மொத்தத்தில் முழுத் தேர்விலும் வெற்றி பெற வேண்டுமே! அவன் என்னிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவானா? நான் என் “சோதனையில்” வெற்றி பெறுவேனா?
திருஞானம் வகுப்பிற்குள் நுழைந்தார். ஆசிரியர் வந்தாச்சு..உஸ்!…” யாரோ ஒருவன் இரகசியமான குரலில் தன் தோழர்களை எச்சரிக்கைப் படுத்தினான். தகரக்கூரை யின் மீது மழைபெய்து ஓய்ந்தாற்போல் மாணவர்களின் இரைச்சல் தேய்ந்து மறைந்தது. திருஞானம் மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டார். வலிந்தி ஏற்படுத் திக் கொண்ட கடுமை முகத்தில் படர்ந்திருந்தது. தன் இரு கரங்களையும் பின்னுக்குக் கட்டியவண்ணம் வகுப்பறையை நோக்கினார். அனைவரும் எழுந்து நின்றனர்.
“வணக்கம் குழந்தைகளே!…”
“வணக்கம் ஆசிரியர்!”
“அமருங்கள்…”
அன்றைய பாடத்தை அவர் தொடங்குவதற்கு முன்பு, வழக்கம் போல் வீட்டுப் பாடங்கள் செய்த நோட்டுப் புத்தகங்களை எல்லாரும் வரிசையாக வந்து மேசை மேல் வைத்தனர். “சரவணன்.. ” திருஞானம் அயைதியாகக் கூப்பிட்டார்.
அப்பெயருக்குரிய மாணவன் ஆசிரியர் அழைப்பின் நோக்கத்தைப் புரிந்து கொண்டவனாய், எழுந்து சென்று மளமளவென்று மேசைமேல் அடுக்கி வைத்திருந்த புத்தகங் களை கணக்குப் பார்க்கத் தொடங்கினான். அவன்தான் வகுப்பில் சட்டாம்பிள்ளை.
“முப்பது நோட்டுப் புத்தகங்கள் உள்ளன. சார். சாந்தி இன்று வகுப்பிற்கு வரவில்லை.” பையன் பயபக்தியுடன் அன்றைய கணக்ககைக் கூறி முடித்தான்.
“அப்படி என்றால் வீட்டுப் பாடத்தைச் செய்து முடிக்காத இன்னொருவர் யார்?…” திருஞானம் வகுப்பை நோக்கிக் கேட்டார்.
பதில் இல்லை. எல்லோரும் வைத்த கண் வாங்காமல் ஆசிரியரையே பார்த்தனர். அப்பார்வையில் மருட்சி பளிச் சிட்டது. “எங்களுக்குத் தெரியும், ஆனால் சொல்லத் தயங்குகிறோம்” என்பது போலிருந்தது.
“நான் மறுபடியும் கேட்கிறேன். பாடம் செய்யாதது யார்? என்னிடம் தயங்க வேண்டியதில்லை. தாராளமாக ஒப்புக் கொள்ளலாம். தகுந்த காரணமிருந்தால் அதை நான் ஏற்றுக் கொள்வேன். இதன் பொருட்டு நேரம் வீணே கழிவதை நான் விரும்பவில்லை…”
அவரின் குரல் படிப்படியாகக் கடுமையடைந்து வருவதை மாணவர்கள் உணரத் தவறவில்லை. ஆனால் அவர் எதிர்பார்த்தபடி “அந்தநபர்” தானே முன்வந்து குறையை ஒப்புக் கொள்வதாயில்லை. அவருக்கு ஏமாற்றம்.
“எல்லோரும் எழுந்து நில்லுங்கள்…” என்று திருஞானம் கூறவும், நாற்காலிகளின் கால்கள் “உர்ர்ர்…புர்ர்ர்…” என்று தரையில் உரசி ஓயவும் சரியாக இருந்தது.
“சரவணன்…”
“ஏன் சார்?…”
“நோட்டுப் புத்தகங்களின் ஒவ்வொரு பெயரையும் உரக்கப்படி….” என்று அவனுக்கு உத்தரவு பிறப்பித்து விட்டு, “பெயர் வாசிக்கப்படுகிறவர் அமரலாம்…” என்று வகுப்பை நோக்கிக் கூறினார்.
“அன்பழகி, பாண்டியன், செம்பியன், லதா, திருச் செல்வம், தவமணி, லோசினி, அமுதா, அகிலன், அனுராதா, சைரா பீவி…” என்று எல்லா நோட்டுப் புத்தகங்களின் மேலுள்ள பெயர்களையும் படித்து முடித்துவிட்டு சரவணன் அவனிடத்தில் போய் அமர்ந்தான்.
எல்லாரும் அமர்ந்திருந்தனர். ஆனால் ஒருவன் மட்டும் நின்று கொண்டிருந்தான் மாரியப்பன்!…
திருஞானம் அவனருகில் சென்றார். அவனையே வெறித்துப் பார்த்தார். அவர் கண்கள் உமிழ்ந்த வெம்மையை மாரியப்பன் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. “உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்பது போல் அவன் நிமிர்ந்து நின்றான். வகுப்பிலேயே மாரியப்பன்தான் பெரிய உருவமுடையவன்.
“ஏன் முன்னமே சொல்லவில்லை…” திருஞானம் கேட்டார்.
பதிலில்லை.
“உன்னைத்தான் கேட்கிறேன் பதில் சொல்…” மௌனம்.
“பாடம் செய்தாயா, இல்லையா?…”
“…..”
“ஏன் செய்யவில்லை?…” வகுப்பறையே அதிர்ந்தது.
“செய்யத் தெரியல…” மாரியப்பன் சாதாரணமாய் பதில் சொன்னான்.
“தெரியாவிட்டால் என்னிடம் கேட்டிருக்க வேண்டும்…”
“இனிமேல் கேட்பேன்…” அதே அலட்சியம்.
அவன் கன்னங்கள் இரண்டையும் பழுக்க வைக்க வேண்டுமென்று திருஞானத்தின் கரங்கள் பரபரத்தன. ஆனால் அதைச் செய்ய அவர் விரும்பவில்லை. “வெளியே போ!…” அவன் பிடரியைப் பிடித்துத் தள்ளினார்.
மாரியப்பன் அவரைத் திரும்பிப் பார்த்து ஒரு முறை முறைத்தான். பின்பு தூசியைத் தட்டிவிடுவது போல் தன் தோள்களைத்தடவி, கரத்தை ஒருவகையாக நொடித்த படி வெளியேறினான். திருஞானம் தன் சுயநிலைக்குத் திரும்பி அன்றைய பாடத்தைத் துவங்குவதற்குச் சற்று நேரம் பிடித்தது.
மாணவர்கள் ஆங்கிலமொழித் தேர்விற்காக வகுப்பறையில் காத்திருந்தனர். திருஞானம் எல்லாருக்கும் தேர்வுத்தாள்களை விநியோகித்தார். பின்பு பக்கம் பக்கமாக மனதிற்குள் படித்துக் கொள்வதற்கு மாணவர்களுக்குப் போதிய அவகாசம் அளிக்கப்பட்டது. தேர்வு விதிகள் அனைத்தும் விவரிக்கப்பட்ட பின்னர் “குறிப்பிட்ட” நேரத்தில் அத்தேர்வும் தொடங்கியது. திருஞானம் மறுநாளுக்கான தேர்வையும் அது தொடங்கும் நேரத்தையும் முன் போலவே கரும்பலகையில் எழுதிவிட்டுத் தம் இருக்கையில் அமர்ந்தார்.
திருஞானம் ஒரு தமிழாசிரியர். ஆங்கிலத் தொடக்கப் பள்ளியொன்றில் தமிழை இரண்டாவது மொழியாகக் கற்பிப்பது அவரது பணி. கண்டிப்பானவர்-அதே போல் கற்பிப்பதிலும் வல்லவர். பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட தொழில் அனுபவம் அவருக்குண்டு.
மாரியப்பன் அவர் வகுப்பிற்கு வந்த சில நாட்களி லேயே அவனை எடை போட்டு விட்டார் திருஞானம். அவன உண்மையில் தேர்ச்சி பெற்று அவ்வகுப்பிற்கு வர வில்லை. கீழ்வகுப்பில் தோல்வி கண்டிருந்தாலும் வயதைக் கருதி மேலே “அனுப்பி வைக்கப்பட்டிருந்தான்”. அவன் மக்குப் பையனாயிருந்தது அவருக்குப் பிரச்சினையாயில்லை. அவனைப் போல் எத்தனையோ “கல்லுளி மங்கன்களை” அவர் சந்தித்திருக்கிறார். மாரியப்பன் பெரும் முரடனாயிருந் தான். அவனைக் கண்டு அப்பள்ளி மாணவர்களே அஞ்சினார் கள். விசாரித்ததில் ஒரு சமயம் உடற்பயிற்சி ஆசிரி யர் ஒருவர் கடுமையாகத் தண்டித்ததனால் வலி பொறுக்க முடியாத நிலையில் அவ்வாசிரியரை மூக்கில் குத்திவிட்டு ஓடி விட்டதாகவும் தெரிய வந்தது. எனவே சாதாரண அரட்டல் உருட்டல்கள் அவனளவில் பயனளிக்காது என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். நுணுக்கமான முறைகளைக் கையாண்டு அவனைப் புதிய முறையில் அணுக வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார்.
மாரியப்பனின் பின்னணியைத் தெரிந்து கொள்ள, ஒரு நாள் வகுப்புப் பதிவேட்டைத் திருப்பினார். அவன் “பேராக்” இல்லத்திலிருந்து வருவது தெரிய வந்தது. வீட்டுக்கடங்காத முரட்டுப் பிள்ளைகளுக்கான அவ்வில்லம், சமூக நல இலாகாவினால் நடத்தப்பட்டு வருவது அவருக்கும் தெரியும். அந்த “பேராக்” இல்லம் நல்ல வேளையாக அவர் கற்பிக்கும் பள்ளிக்குச் சற்றுத் தொலைவிலேயே அமைந்திருந்தது.
அன்று பள்ளி முடிந்ததும் நேராக அவ்வில்லத்திற்குச் சென்று, அதன் நிர்வாகியுடன் நீண்ட நேரம் உரையாடி, மாரியப்பன் குறித்த தகவல்களைத் திரட்டிக் கொண்ட பிறகுதான் வீடு திரும்பினார். அன்றிரவு தம் மனைவியிடம் “மாரியப்பன் கதையை” ஆதி முதல் கூறினார்.
“அவன் முரட்டுப் பையனாயிருப்பான் போலிருக்கு. கவனமாயிருங்கள். எக்கேடாவது கெட்டுப் போகிறான்; விட்டுத் தொலைக்க வேண்டியதுதானே? உங்களிடமும் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளப் போகிறான்…” என்று அவர் இல்லாள் எச்சரிக்கை செய்தார்.
“அப்படி சொல்லாதே கமலம். இதுவரை அவன் ஒரு வகுப்பில்கூட தேறியதில்லை. இப்படிப்பட்ட “பின் தங்கிய” மாணவர்களை முன்னேற்றிக் காட்டுவதில்தான் பெருமை இருக்கு. அவனை கடையேற்றுவதை நான் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டுள்ளேன். கெட்டிக்கார மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு நிபுணத்துவம் தேவையில்லை; அறிவாற்றல் போதும். நீ பார்த்துக் கொண்டே இரு. அவனை எப்படி வார்த்தெடுக்கிறேன் பார்.”
மாரியப்பனுக்காக அவர் பல இரவுகளைத் தியாகம் செய்தார். தூக்கத்தையும் மறந்து அவனைக் கையாளப் போகும் முறைகளைப் பற்றி அவர் சிந்திக்கத் தொடங்கினார். இறுதியில் சில தெளிவான வழிகள் புலப்பட்ட போதுதான் அவர் நிம்மதியடைந்தார். அவ்வழிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த அவர் தயங்கவில்லை.
அன்றைய தேர்வு முடிந்து எல்லா மாணவர்களும் வெளியேறிவிட்டார்கள். வகுப்பறை பரிதாபமாக வெறிச் சோடிக் கிடந்தது. திருஞானம் மாணவர்களின் விடைத்தாள் “புக்லெட்களை” சரியாக எண்ணிப் பார்த்து, பதி வெண்களின் வரிசைப்படி முறைப்படுத்தி அடுக்கினார். பிறகு தேர்வு மேற்பார்வையாளருக்குரிய தாளில் எல்லா விவரங்களையும் பதிந்து தேதியிட்டுக் கையெழுத்துப் போட்டுத் தலைமைத் தேர்வு அதிகாரியிடம் ஒப்படைத்து விட்டு வீடு நோக்கி நடை போட்டார்.
அந்தப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி விரைவில் நடைபெறுவதாயிருந்தது. ஆண்டுத் தொடக்கத்திலேயே விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடித்துவிடுவது அப்பள்ளியின் வழக்கம். பள்ளிக்கட்டிடத்தையும், திடலையும் அலங்கரிக்க வேண்டிய பொறுப்பு திருஞானத்திடம் ஒப் படைக்கப்பட்டது. வண்ணக்கொடிகளும் தோரணங்களும் அவரிடம் தரப்பட்டன. அவர் வகுப்பிற்குச் சென்று தமக்கு உதவி செய்ய சில மாணவர்கள் தேவைப்படுவதாகக் கூறினார். “நான், நீ” என்று முந்திக் கொண்டு மாணவர்கள் கரங்களை உயர்த்தினர். ஆனால்—
மாரியப்பன் வாளாவிருந்தான்.
“நீயும் வரலாமே. நீதான் பொருத்தமாக இருக்கும்…” என்று திருஞானம் மாரியப்பனையும் அழைத்தார்.
மாரியப்பனால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ஆசிரியர் தன்னையா பெயர் குறிப்பிட்டு அழைக்கிறார் என்று அசந்து போனான். பொதுவாக எல்லா ஆசிரியர்களும் அவனைத் தவிர்க்கவே முயற்சிப்பார்கள். திரூஞானம் தானாக அழைத்ததோடல்லாமல், நீதான் பொருத்தமாக இருக்கும் என்றது அவனை என்னவோ செய்தது. மறுமொழி பேசாமல் அவர் பின்னே எழுந்து சென்றான். உண்மையில் அன்று மாரியப்பன் சமத்துப் பிள்ளையாக வேலை செய்ததைக் கண்டு திருஞானம் மலைத்து போனார்.
இன்னொரு நாள்-
தமிழ் வகுப்பு முடிந்து மாணவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். திருத்துவதற்குரிய புத்தகங்கள் ஏராளமாக இருந்தன. சரவணன் எப்போதும் போல புத்தகங்களை எடுத்துச் செல்ல முன் நின்றான்.
“சரவணன், இன்று புத்தகங்கள் மிகுதியாக உள்ளன. மாரியப்பனையும் உதவிக்குச் சேர்த்துக் கொள்…” என்று கூறிவிட்டுச் சில புத்தகங்களைக் கையிலெடுத்துக் கொண்டு திருஞானம் ஆசிரியர்கள் ஓய்வு கொள்ளும் அறையை நோக்கிச் சென்றார். இவற்றை எல்லாம் தொலைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்த மாரியப்பனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அன்றிலிருந்து புத்தகங்களை எடுத்துச் செல்ல சரவணனோடு சேர்ந்து கொள்வது மாரியப்பன் வழக்கமாகி விட்டது.
மற்றொரு நாள்-
பள்ளி முடிந்து எல்லோரும் வீடு திரும்பிக் கொண் டிருந்தனர். மாரியப்பன் தனது வாகனத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான். திருஞானம் வீட்டிற்குக் கிளம்பினார். போகிற போக்கில், “மாரியப்பன், நீ காலையில் விரைவாகப் பள்ளிக்கு வரும் போதெல்லாம் முடிந்தால் வகுப்பறையைக் கொஞ்சம் சுத்தம் செய்து வை. துணைக்கு வேண்டுமானால் உன் நண்பர்களில் சிலரை அழைத்துக் கொள். வர வர வகுப்பறையில் கால் வைக்க முடியவில்லை…” என்று சொல்லி வைத்தார்.
மறுநாள் முதல் வகுப்பறையைப் பார்க்க வேண்டுமே! கரும்பலகை சுத்தம் செய்யப்பட்டு, மேசை நாற்காலிகள் தூசியடிக்கப்பட்டு, வரிசையாக ஒழுங்கு படுத்தப்பட்டு அவ்வறையில் தூய்மை கொலுவிருக்கத் தொடங்கியது. இத்தனையும் மாரியப்பன் செய்யவில்லை. மற்றவர்களை வைத்து அப்படி வேலை வாங்கி இருந்தான்.
பிரிதொரு நாள்-
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் மாரியப்பனின் பொறுப்புணர்ச்சியை மெச்சி, அவனையும் ஒரு சட்டாம்பிள்ளையாக நியமித்தார் திருஞானம். சரவணனும் மாரியப்பனும் கூட்டுச் சட்டாம்பிள்ளையானார்கள். அது தான் திருஞானம் போட்ட “கொக்கிகளில்” பெரும் கொக்கி!
சட்டாம் பிள்ளையான பிறகு படிப்பில் பின் தங்கிய நிலையில் இருப்பது மாரியப்பனுக்கு அவமானமாயிருந்தது. தன் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று, அவன் வாழ்க்கையில் முதல்முறையாக எண்ணினான். மாரியப்பனுக்கு நினைவுதெரிந்து அவனிடம் பிரியமாகப் பேசி அவனை ஒரு பொருட்டாக மதித்தது இதுவரை யாருமில்லை. அவன் தாய்கூட அப்படிக் கருதியதில்லை.
அவன் கைக்குழந்தையாக இருக்கும் போது அப்பன் மாரடைப்பு நோயால் மாண்டு போனான். தாய் வேறொரு வனைச் “சேர்த்துக்” கொண்டாள். வந்து சேர்ந்தவனுக்கு மனிதத் தன்மைகள் பற்றி “பாலர் பாடம்” நடத்த வேண்டும். அவன் ஒரு குண்டன். சிறையில் ஆறு மாதமும் வெளியில் ஆறு மாதமுமாகக் காலந் தள்ளுபவன். அவனுக் பிரியமானவை—
குடி, கூச்சல் -சச்சரவுகள்.
மாரியப்பன் முந்திய ஆளுக்குப் பிறந்தவன் என்பதால் குண்டனுக்கு மாரியப்பனைப் பார்க்கும் போதெல்லாம், அவன் தகப்பன் தனது தற்கால மனைவியோடு மகிழ்ந்திருந்த காட்சி மட்டுமே படமாகத் தோன்றும். அவன் குருதி சூடேறும். மாரியப்பனை உதைப்பான். கொச்சை வார்த்தைகளால் திட்டுவான். அவன் கத்துவது அந்த வட்டாரத்திற்கே கேட்கும்.
குண்டனிடம் பெற்ற தண்டனைகளின் அநியாயத்தை உணர்ந்த போது, மாரியப்பன் அவனை எதிர்க்கத் தொடங்கினான். பிஞ்சு வயதிலேயே பாறைக் கல்லாகி முரடனாகிப் போனான்.
மாரியப்பன் தொடர்ந்து வீட்டிலிருந்தால் அவன் செத்து மடிவது உறுதி என்பதைத் தெளிவாக உணர்ந்த அவன் தாய், மாரியப்பனை “பேராக்” இல்லத்தில் சேர்த்து விட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
மாரியப்பன் மாறத் தொடங்கினான். ஆசிரியருக்கு உதவுவதிலும், பள்ளியில் தேவையான சில பணிகளைச் செய் வதிலும் அவன்ஆர்வம் காட்டியதோடன்றி, பாடங்களிலும் கவனம் காட்டத் தொடங்கினான்.
அவன் வகுப்பாசிரியர் திரு. மைக்கல்இயோ ஒரு சமயம் திருஞானத்திடம், “நண்பரே! இந்த மாரியப்பன் இப்போ தெல்லாம் பரவாயில்லை தெரியுமா? மிகவும் நல்லவனாகி விட்டான். வர வர பெரிய மாற்றத்தை அவனிடம் காண்கிறேன். ஆங்கிலமொழியில் மட்டும் கொஞ்சம் மோசமாக இருக்கிறான். அதிலும் கவனம் காட்டத் தொடங்கினால், அவன் வெற்றியடைய வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன…” என்று கூறினார்.
மறுநாள் திரு.மைக்கல் இயோ கூறியதை அப்படியே மாரியப்பனிடம் கூறினார் திருஞானம்.
“பார்த்தாயா, நீ சிரத்தை எடுத்துப் படித்தால் வெற்றி நிச்சயம். நீ தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ தயங்காமல் கேள். உனக்கு உதவி செய்கிறேன்” என்று அவன் மனத்தில் படும் வண்ணம் எடுத்துக் கூறினார். மாரியப்பன் தயக்கத்துடன் தனக்கு ஆங்கில மொழியில் உதவி கிட்டினால் நன்றாக இருக்கும் என்று கூறினான்.
“மாரியப்பன், ஆங்கிலத்துக்கு “டியூசன்” ஏற்பாடு செய்தால் போவாயா?…
“காத்திருக்கேன் சார். போவது மட்டுமில்லே எப்பாடு பட்டாவது இறுதித் தேர்வில் வெற்றி பெறுவேங்க சார்…”
“உண்மையாகவா?…”
“உங்களிடம் பொய் பேசுவேனா?…”
“சரி. இன்றைக்குப் பள்ளி முடிந்து போகும் போது என்னை வந்து பார். உன் மேலதிகாரிக்குக் கடிதம் தருவேன். அடுத்த வாரத்திலிருந்து சனிக்கிழமை தோறும் என்வீட்டில் உனக்கு “டியூசன்” ஆங்கிலப் பாடம் மட்டுமில்லை. எல்லா பாடங்களும்…”
“ரொம்ப நன்றிங்க சார்…” அவன் கரம் கூப்பினான். திருஞானத்தின் முகத்தில் பெருமை மிளிர்ந்தது. அன்பான சில உரையாடல்கள்.
அறிவியல் முறையிலமைந்த அணுகு முறைகள். தலைமை ஏற்கும் வாய்ப்புகள்.
அவனது முன்னேற்றத்தில் உண்மையாக பங்கேற்றல் ஆகிய தம் திட்டங்கள், முரட்டு மாரியப்பனைத் தலைகீழாக மாற்றியிருப்பதைக் கண்டு மகிழ்ந்து போனார். பூரித்துப் போனார்.
அன்று வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஆறாம் வகுப்பின் தேர்வின் முடிவுகளைப் பள்ளிகளில் மாணவர்கள் மறுநாள் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவித்தனர். அக்டோபர் மாதக் கடைசியிலிருந்து காத்திருந்த மாணவர்களுக்கு டிசம்பர் மாத முதல் வாரத்தில் நல்ல செய்தி கிட்டியது.
திருஞானம் காலையிலேயே பள்ளிக்குச் சென்று விட்டார். அவர் பள்ளியை அடையும் போது பிள்ளைகள் முன்னமே குழுமியிருந்தனர். அறிவிப்புப் பலகையில் தேர்வின் முடிவுகள் இடம் பெற்றிருந்தன. அதைச் சுற்றி மாணவர்கள் மொய்த்து நின்றனர். கூட்டத்தில் மாரியப்பனும் நிற்பது தெரிந்தது.
வெற்றியடைந்த மாணவர்கள் அவரைக் கண்டதும் ஓடோடி வந்தனர். தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் ஓடி ஒளிந்தனர்; சிலர் கண் கலங்கினர்.
ஏறக்குறைய எல்லா மாணவர்களும் விடை கூறிச் சென்றுவிட்டனர். ஆனால் மாரியப்பன் வரவில்லை. அவன் தேர்வில் வெற்றி பெற்றிருந்தான். அன்று பள்ளியில் அதுவே பேச்சாயிருந்தது. காத்திருந்து பார்த்துவிட்டு திருஞானம் வீடு திரும்ப புறப்பட்டார். அப்போது பள்ளி உணவகத்திலிருந்து மாரியப்பன் வெளிப்பட்டான்.
“நீ இங்கேயா இவ்வளவு நேரமும் இருந்தாய்?…”
“ஆமாங்க சார். எல்லாரும் போகட்டுமே என்று காத்திருந்தேன்…”
“ஏன்?…”
“சார்…” அவன் முகம் சிவந்தது. அவனால் பேச முடியவில்லை. “உங்களை என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் சார்…” அவன் கண்கள் பனித்தன. அவர் பாதங்களை வணங்கினான்.
“நீ தொடர்ந்து நன்றாகப் படிக்கணும்; வாழ்க்கையில் உயரணும். அதுதான் எனக்கு வேண்டியது. கீப்இட்ஆப்…” என்று அவன் தோள்களில் தட்டிக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.
திருஞானத்திற்குப் பெருமை பிடிபடவில்லை. நடக்கும் போது தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார்; பேசிக் கொண்டார். உடனடியாகத் தன் இல்லாள் தன்முன் தோன்றி தன்னுடைய இப்போதைய மகிழ்வு ஒழுகும். தோற்றத்தைக் காணக் கூடாதா என்று ஏங்கினார்.
இது போன்று, கண நேரங்களில் தோன்றி மறையும் பெருமையும், மகிழ்ச்சியும், உற்சாகமும்தானே, “கற்பித்தல் தொழில்” தொடர்ந்து உயிர்வாழ காரணங்களாகின்றன.
– 1981, புதிய அலைகள், முதற் பதிப்பு: மார்ச் 1984, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.