முழு நிலவு பத்திரிகை ஆசிரியர் எழுத்து வேந்தன் தமிழ் எழுத்துலகில் மிகவும் புகழ் பெற்ற கதாசிரியர்களில் ஒருவர். அவர் எழுதிய பல நாவல்கள் திரைப் படங்களாக வந்து, வெள்ளி விழா கொண்டாடியுள்ளன! அதனால் அவர் தன் நாவல் ஒன்றுக்கு பத்து லட்சம் டிமாண்ட் செய்து வாங்கி விடுவார்.
அவர் சொந்தமாக முழு நிலவு என்ற பெயரில் ஒரு பத்திரிகையும் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் என்ற இடத்தில் அவர் பெயர் போடுவதாலேயே அந்தப் பத்திரிகையை நிறைய தமிழ் வாசகர்கள் வாங்கி ஆதரித்து வந்தார்கள்.
முழு நிலவு பத்திரிகை அலுவலகத்தில், அன்று காலை நேரத்தில் ஆசிரியரின் அறைக்குள் உதவி ஆசிரியர் சுந்தரம் நுழைந்து தயங்கித் தயங்கி நின்றார்!
“என்ன சுந்தரம். என்னவோ சொல்ல வந்தீங்க!…இப்ப எதற்குத் தயங்கறீங்க?…”
“ நம்ம பத்திரிகையிலே சுமார் பத்து வருஷமா சிறுகதை எழுதி வருகிற மோகனரங்கன் என்ற எழுத்தாளர் நேற்று ஆபிஸுக்கு வந்திருந்தார்! அவர் எழுதிய ஒரு தொடர்கதை கூட நம் பத்திரிகையில் போட்டிருக்கிறோம்!…”
“ஆமா!..நினைவு இருக்கு! .நானும் பார்த்திருக்கிறேன்…அவர் நல்லாத் தானே எழுதறார்….அவருக்கு என்ன?…”
“அவருக்கு வயசாயிட்டது!…உடம்புக்கு வேறு சரியில்லையாம்!…வேற வருமானமும் இல்லையாம்!……. நம் பத்திரிகையிலிருந்து ஒரு இரண்டாயிரம் சன்மானம் எதிர் பார்க்கிறார்…நேற்று ஆபிஸுக்கு வந்து என் கிட்டப் பேசினார்….. உங்களிடம் சொல்லி என்னை சிபாரிசு செய்யச் சொன்னார்……..”
ஆசிரியர் பெரிய நகைச்சுவையைக் கேட்டது போல் கட கடவென்று சிரித்தார்.
“ என்ன சுந்தரம்!…அந்த ஆளுக்குத் தான் வயசாச்சு…. அறிவில்லேனா!…அதைச் சொல்வதற்கு காலையில் வேலையைக் கெடுத்திட்டு நீங்களும் என் கிட்டே வந்திட்டீங்க!.”.
“அவர் கதை வரும் பத்திரிகையின் ஒரு பிரதி கூட நாம் அனுப்புவதில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டார்! நீங்க எந்த விளம்பரமாவது இலவசமா போடுவீங்களா என்று கூடக் கேட்டாருங்க!..”
“சுத்த அதிகப் பிரசங்கியா இருப்பார் போலிருக்கு! இவர் பெரிய பெர்னாட்ஷா!…இனிமே அவர் கதைகளை எல்லாம் இனி நம்ம பத்திரிகைகளில் போட வேண்டாம்!…
தமிழ் நாட்டில் பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்கள் எல்லாம் சன்மானம் எதிர் பார்க்கிறது ரொம்பத் தப்பு சுந்தரம்! இந்தக் காலத்திலே வீட்டுகொருவர் வேலை இல்லாம பேஸ் புக்கை நோண்டிக் கொண்டிருக்கிறாங்க! இப்ப அவங்க எல்லாம் தான் தமிழ் எழுத்தாளர்கள்! இப்ப அவங்க எழுதி பத்திரிகையில் அவர்கள் பெயர் வந்தா அது தான் அவங்களோட சன்மானம்!
அந்தக் காலத்திலே எழுத்தாளர்கள் என்று சொன்னா ஒரு நூறு பேர் தான் இருப்பாங்க!
ஆனால் இந்த ‘பேஸ்புக்’ வந்ததிலிருந்து எல்லோரும் எழுத்தாளர்கள் தான்! ‘பேஸ்புக்’கில் நாலு வரி தப்புத் தப்பா அடிச்சு பழகிட்டா அடுத்து உடனே புகழ் பெற்ற தமிழ் பத்திரிகைகளுக்கு கூட எதையாவது எழுதி அனுப்பிடறாங்க! இந்தக் காலத்திலே தானும் ஒரு கண்ணதாசன் என்று நினைத்துக் கொண்டு கவிதை என்று பேஸ் புக்கில் தினசரி பத்து கவிதைகள் எழுதுபவர்கள் இன்று குறைந்தது ஒரு லட்சம் பேர் நம் தமிழ் நாட்டில் இருக்கிறாங்க! பேஸ் புக்கில் எதையாவது தப்புத் தப்பா இருபது வரி எழுதி விட்டு தங்களையும் கதாசிரியர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இன்று தமிழ் நாட்டில் இருபதாயிரம் பேராவது இன்று இருக்கிறாங்க!…
இனி நாம கூட பத்திரிகை நடத்த விளம்பரத்தை மட்டும் நம்பி பிரயோசனம் இல்லே! இந்த ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களையும் நாமும் கூட பயன் படுத்திக் கொள்ளலாம்!
“நீங்க சொல்றது எனக்குப் புரியலே சார்!…”
“ இப்ப பதிப்பகங்கள் எல்லாம் எப்படி நூல் வெளியிடறாங்க தெரியுமா?…. தன் எழுத்தை புத்தகமாக பார்க்க நிறையப் பேர் ஆசைப் படறாங்க!… அவர்களிடம் எல்லாம் 15,000, 20,000 என்று முதலில் பணம் வாங்கிக் கொண்டு, 150 பிரதிகள் அச்சிட்டு அவர்களுக்கு ஒரு 100 பிரதிகள் கொடுத்து விட்டு பத்து பத்திரிகைகளுக்கு விமர்சனத்திற்கு இரண்டு இரண்டு புத்தகங்களை அனுப்பி வைத்து விடுவாங்க! மற்றபடி அந்த புத்தகங்கள் விற்பனைக்கே வராது! ஒரு புத்தகம் போட்டா எழுத்தாளர்களிடம் வாங்கும் பணத்தில் ஒரு ஐயாயிரமாவது மிச்சமாகும்.. வருஷத்திற்கு எப்படியும் ஐம்பது, நூறு புத்தகங்கள் போட்டு விடறாங்க!..இப்ப அவங்களுக்கு அதில் தான் இப்ப நல்ல காசு…அந்தப் புத்தகங்கள் எல்லாம் அதோடு சரி!
நாமும் இனி விளம்பரத்தை மட்டுமே நம்பி இந்த தொழிலை நடத்த முடியாது! நாம் கூட இந்த எழுத்தாளர்களைப் பயன் படுத்தி, ஒரு திட்டம் போட்டு, லாபகரமா இந்த தொழிலை நடத்தலாமா என்று யோசிக்கிறேன்!
“ என்ன சார்!…அப்படி ஒரு திட்டம்?..”
“ எல்லோரும் முகவரியோட போன் நெம்பரையும் தருகிறாங்க!..நாம அவர்களை கூப்பிட்டு உங்க கதையை பத்திரிகையில் போடலாமென்று இருக்கிறோம்! பத்திரிகையில் நிதி நிலமை சரியில்லை நீங்க ஒரு ஆயிரம் ரூபாய் அனுப்பி வையுங்க…நிதி உதவி செய்பவர்கள் கதைகளுக்கு முன்னுரிமை தருவோம் என்று சொல்லிப் பாருங்க!…தினசரி குறைந்தது இருபது முப்பது பேராவது எம். ஓ. அல்லது செக் அனுப்பி வைப்பாங்க! …… அவங்க அனுப்புகிற கதைகளில் வல்லினம்…….மெல்லினம்….சந்தி தகராறு இருக்கும்…அதை சரி செய்து ஒரு கதை மாதிரி செய்து நாம போட்டாப் போச்சு!……”
“ என்ன சார்!…இப்படி சொல்றீங்க?…
“சுந்தரம்!…..இந்த உலகத்திலே இலவசமா கிடைக்கிறது அட்வைஸ் ஒண்ணு தான் அந்தக் காலத்தில் சொல்லுவாங்க! ….ஆனா இன்று பார்த்தா நாம கேட்காமலேயே பத்திரிகை ஆபிஸூக்கு வந்து குவியற இந்த கதைகள் தான் அதை விட ஏராளம்!..அந்தக் காலம் மாதிரி இல்லே!….இப்ப எழுதற எழுத்தாளர்களின் லட்சியமே அவர்கள் பெயரை பத்திரிகையில் பார்க்க வேண்டும் என்பது தான்! …. முடிந்தா அதை நாம பயன் படுத்த யோசிங்க!
சுந்தரம்! இன்னொரு முக்கியமான விஷயம்!… நம்ப பத்திரிகையில் வருகிற சினிமாச் செய்திகள் போதாது!…இன்னும் இரண்டு நிருபர்களையும் அந்தப் பீல்டுக்கு அனுப்புங்க! நயன்தாரா…தமன்னா கீர்த்தி சுரேஷ் பற்றி மட்டும் செய்திகள் மட்டும் போட்டால் போதாது… இன்று புது முகங்கள் பலர் முன்னுக்கு வந்திட்டிருங்காங்க… அவங்களைப் பற்றியும் செய்தியோட நல்ல கவர்ச்சிப் படங்களையும் போட்டு வாசகர்களை அசத்துங்க!….. வேற வேலை இல்லாதவங்க இங்கே வந்து சொல்லற விஷயத்திற்கெல்லாம் நேரத்தைப் செலவிடாதீங்க!…”
“சரிங்க…சார்!…இன்னொரு விஷயம் மறந்து போச்சு! ‘போடா! …போக்கத்தவனே!’ என்று ஒரு படம்…திரைக்கு வந்து இரண்டு வாரம் ஆச்சு! சக்கை போடு போடுகிறது!…நல்ல வசூல்!…அதைப்பற்றி ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ் அப்’பில் வரும் செய்திகளையெல்லாம் நீங்க பார்ப்பது இல்லையா?…”
“ எனக்கு எங்கே அப்பா அதற்கெல்லாம் நேரம் இருக்கு? அப்படி அதில் என்ன விஷேசம் இருக்கு?…..”
“சார்!… நீங்க நாலு வருஷத்திற்கு முன்பு ‘மனோரஞ்சிதம்’ பத்திரிகையில் எழுதிய ‘சிலுக்கு சிந்தாமணி!’ என்ற தொடர்கதையின் அப்பட்டமான காப்பி தான் அந்த சினிமாக் கதை என்று ஆள் ஆளுக்கு ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ் அப்’பில் எழுதிக் கொண்டிருக்கிறாங்க!…”
“ ஐய்யோ!… நான் பார்க்கவே இல்லையே!..இது என்ன அநியாயமா இருக்கு?.. ஒரு கதை எழுதுவது என்றால் சும்மாவா? எப்படி ஒரு பெண் கருவை பத்து மாசம் சுமந்து, உயிர் போகும் பிரசவ வலியைத் தாங்கிக் கொண்டு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறளோ….அது போல் தான் ஒரு எழுத்தாளன் தன் மூளையில் ஒரு கருத்தை நீண்ட நாட்கள் சுமந்து, அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக உயிர் கொடுத்து, ஒரு நாவலாக வளர்த்து, மூளையைக் கசக்கித் தன் பேனா மூலம் வெளி கொண்டு வருகிறான்…அதை இவங்க ஓசியிலேயே அனுபவிக்க பார்க்கிறாங்க!…வர வர நாடு ரொம்பத் தான் கெட்டுப் போச்சு!..நம்ம வக்கீல் கனக ராஜூவுக்கு உடனே ஒரு போன் போட்டு அந்த கம்பெனி முதலாளிக்கு நம்ம கதையை வைத்து இந்த படம் எடுத்திருக்கிறீங்க… அதனால் கதைக்கு நஷ்ட ஈடாக 25 லட்சம் கேட்டு ஒரு நோட்டிஸ் விடச் சொல்லுங்க!…”
என்று ஆவேசப் பட்டார் ஆசிரியர்.
உதவி ஆசிரியரும் வக்கீலுக்குப் போன் செய்ய உடனே விரைந்தார்!
– காமதேனு இதழ்(11-8-2019)